Wednesday, May 25, 2011

பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்

நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவரது கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர்கள் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல.

இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியை தண்ணீரில் மிதந்துசெல்ல விட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணி வரை அங்கு கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள்.

பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவமொன்றை அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்பொழுதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும் வண்ணம் அக் கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக் கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களையே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.

எந்தவொரு நற்பண்புள்ள சமூகத்தினாலும் மிகக் கேவலமாகக் கருதப்படக் கூடிய இச் செய்கை நடைபெற்றிருப்பது எங்கோ தொலைதூரக் கிராமமொன்றிலல்ல. இலங்கையின் இராணுவத் துறையால் எப்பொழுதுமே கண்காணிப்புக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித் துறையில். இந்தச் செய்கையில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களென உறுதியாகச் சொல்வதற்கான சாட்சியங்கள் இல்லாமலிருப்பதற்கு வாய்ப்பில்லை. அது ஏனெனில், இராணுவத்தின் பாதுகாப்பு அல்லது அறிதலற்று வேறொரு குழுவுக்கு இரவில் ஆயுதங்களைப் பாவிப்பதற்கோ, நள்ளிரவில் இது போன்ற காரியங்களைச் செய்வதற்கோ இயலுமென எண்ணுதல் மிகவும் கடினம்.

எவரால் செய்யப்பட்டிருப்பினும், இலங்கையின் பெரும்பான்மையான அத்தோடு ஆட்சியாளர்களின் மதமான பௌத்த மதத்துக்கு மட்டுமல்லாது, ஒழுங்குமுறையாக மதங்கள் உருவாவதற்கு முன்பிருந்த எந்தவொரு மானிட நம்பிக்கைகளுக்கும் கூட இந்த ஈனச் செயலானது பொருத்தமானதல்ல. இறந்தவர்களை கௌரவிப்பதென்பது மானிட சமூகத்தினைப் போலவே தொன்மையானதொரு பண்பாடு. துட்டகைமுனு மன்னனுடன் கடுமையாகப் போரிட்டு இறந்து போன அரசன் எல்லாளனது கல்லறையானது, கௌரவிக்கப்பட வேண்டுமென துட்டகைமுனு மன்னனினாலேயே இடப்பட்ட கட்டளையை பெருமிதத்தோடு ஞாபகப்படுத்துமொரு சமூகத்தில் இப்பொழுது யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்களின் பிற்பாடு, இந்த மோசமான ஈனச் செயல் நடைபெற்றிருக்கிறது. எந்த நிலைமையின் கீழும், எந்த வர்க்கத்தினராலும் கூட இம் மாதிரியான பழிவாங்கும் செய்கையொன்று, சிங்கள மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதென்று எண்ணுவது கடினம்.

பிரபாகரனின் அரசியலோடு ஒன்றுபடுபவர்களைப் போலவே அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறார்கள். அது எவ்வாறாயினும் இம் மாதிரியான மனிதத் தன்மையற்ற நடவடிக்கையின் மூலமாக புலப்படுவது முழுத் தமிழ்ச் சமூகத்தையே அவமதிப்புக்கு உட்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட பலம் மிக்கவொரு சக்தி இலங்கையில் செயற்பாட்டிலிருக்கிறதென்பதுதான். இந்த நடவடிக்கையால் தமிழ்ச் சமூகத்துக்கு சொல்லப்படும் செய்தி என்ன? அதாவது இலங்கையில்  தமிழ் மக்கள் எனப்படுபவர்கள், தங்களிடையே மரணித்தவர்களை கௌரவிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் என்பதுதானே? இந்த அறுவெறுப்பூட்டும் கேவலமான செய்கை, அரசியல் ரீதியாக தமிழ் இளைஞர்களினுள்ளே எவ்வளவு இயலாமையையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்?

இந்தச் சம்பவமானது தங்களது தன்மானத்தைக் குறிவைத்த அவமதிப்பொன்றென தமிழ்ச் சமூகத்தில் வாசிக்கும், எழுதும், சிந்திக்கும் மக்களினது, அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், சிந்தனையைத் தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனிதத் தன்மையற்ற செயலினால் சிங்கள அரசு குறித்து, தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அவநம்பிக்கையானது இன்னும் இன்னும் அதிகரிக்காமல் இருக்குமா? எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குறித்த எந்தவொரு பேச்சும் எங்கள் சிங்கள சமூகத்தில் எழவில்லை. அதற்குக் காரணம் பெரும்பான்மையான ஊடகங்கள் வெளிப்படுத்தும் பெரும்பான்மைச் சிந்தனை மற்றும் சுய பாதுகாப்பு.

பாராளுமன்ற அமைச்சரும் தொலைக்காட்சி நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலியின் கன்னம் வெடிக்குமளவுக்கு அவரது கணவரால் அவர் தாக்கப்பட்ட செய்தியானது, இலங்கையின் பெரும்பான்மை ஊடகங்களால், எவ்வளவு காலத்துக்கு மீண்டும் மீண்டும் சுவையூட்டப்பட்டு பதிவுசெய்யப்பட்டது? (ஆனால் அந்தச் சம்பவமானது பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை.) எத்தனை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும்? வைத்தியசாலையிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்று தொடர்ச்சியாகப் பதிவுசெய்ய அனேக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் காட்டிய ஆர்வம்தான் என்னே!

எனினும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையொன்றாக, யாழ்ப்பாணத்தில் தாயொருவரின் சடலம் எரியூட்டப்பட்டதன் பிற்பாடு அந்தச் அஸ்தியின் மீது சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டதன் மூலம் செய்யப்பட்ட அவமதிப்பை பதிவு செய்ய எந்த ஊடகம் முன்வந்தது? இந்த இரண்டு சம்பவங்களுக்கிடையிலும் நீண்ட கால முக்கியத்துவம் எமது சமூகத்துக்கு இருப்பது எந்தச் சம்பவத்தில் என்பதில் வாதிடுவதற்கு ஏதுமில்லை.

மக்களது அமைதிக்கு இடையூறு நேரும் வண்ணம் செய்தி பதிவு செய்வதில் ஈடுபட வேண்டாமென ஜனாதிபதியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா வரை ஊடகங்களுக்கு அறிவுருத்துகிறார்கள். எச்சரிக்கிறார்கள். இனத்துவேசத்தைக் கிளப்புகிறார்களென அரசியல் கட்சிகள் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். என்றபோதிலும் இந்த நாய் உடல்களின் அரசியலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் உதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு முக்கியஸ்தரும் வாய் திறக்கவில்லை. இனத் துவேஷம் மற்றும் மக்களிடையே ஒற்றுமையின்மை ஏற்படுவதுவும், பரவுவதும் இவ்வாறான நடவடிக்கைகளால்தான் என்பதனைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பது யாரால்?

இந்த அவமதிப்பை ஏதோவொரு சம்பவம் என எண்ணி மறந்துவிட முடியுமென எவரும் எண்ணுவதற்கோ, வாதிடுவதற்கோ இடமிருக்கிறது. எனினும் அவ்வாறு முடியாதிருப்பது, இதுவரையில் இது ஒரேயொரு சம்பவம் மாத்திரமல்ல என்பதனாலேயே. யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு கேள்விப்பட்ட, புனர்நிர்மாணம், மீள்குடியமர்த்தல் போன்ற எண்ணங்கள் சமூக அரசியல் நடவடிக்கையொன்றாக உருவாவதற்குப் பதிலாக இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் ஆட்சியொன்றின் கீழ் இரண்டாம் தரப்புக் குடிமக்களாக வைத்திருப்பதே.

தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.

ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே.

- சுனந்த தேஸப்ரிய
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# காலச்சுவடு இதழ் 137, மே 2011
# இனியொரு
# திண்ணை

Monday, May 16, 2011

யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்

    சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை 'முதன்மையானது என்றால் என்ன?' என புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் 'எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்' என்றாராம். இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவதுதான். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்துகொள்ளாதோர் இருந்தனரெனின், அவர்கள் தீவிர இனவாதிகளும் தற்சார்புவாதிகளும் மட்டும்தான். பண்டாரநாயக்க, கூட்டமைப்பு முறையில் அதிகாரத்தைப் பிரித்துக் கொள்வது பற்றிப் பிரேரித்ததிலிருந்து, மஹிந்த ராஜபக்ஷ நவீன யுத்தத்தின் மூலம் கலகக்காரர்களைக் கூட்டாகப் படுகொலை செய்தது வரையில் நோயையும், நோய்க் காரணியையும் இல்லாதொழிப்பதற்காக, பலவிதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டோம்.

    பிரிவினைவாதிகளான LTTE யினர் இருக்கும்போது, ஆட்சியதிகாரங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதனூடாக வடக்கு ,கிழக்கின் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக் கொடுத்தால் நாடு பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும் என்பதுதான் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தின் பிரபல்யமான கோட்பாடாகக் காணப்பட்டது. அதனால், அரசியல் தீர்வொன்றை அளிப்பதற்காக விடுதலைப் புலிகளை அழிப்பது பிரதான நிபந்தனையாக அடையாளம் காணப்பட்டது. மிக மோசமான அழிவுகளுடன் கூடிய நான்காம் ஈழ யுத்தமானது, அந்தச் சிந்தனையின் பெறுபேறாகத்தான் உண்டானது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லை. அதாவது நோய் அறிகுறியானது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

    விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து இப்பொழுது ஒன்றரை வருட காலமாகிறது. யுத்தத்தை வென்றெடுப்பதற்காக அனைத்து ஊடகங்களையும் உபயோகித்து நாடு முழுவதும் கட்டியெழுப்பிய சிங்கள பௌத்த வகுப்புவாத மக்களின் கருத்துக்களையும் ஆவேசத்தையும் பயன்படுத்தியது, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்கு மட்டுமல்ல. அந்த வகுப்புவாத கிளர்ச்சிகளையே பயன்படுத்தி 'தேசத்தின் மீட்பர்' என்ற விம்பமொன்றை கட்டியெழுப்பியதனூடாக, 2010 ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் முடிந்தது. அதற்கு அடுத்தபடியாக, அவரது அரசியல் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்தை ஏற்படுத்திக் கொண்டதுவும் அந்த மக்கள் ஆணையின் தயவினால்தான். அதற்குப் பிறகு 18 ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்து கால வரையரையற்ற, முழுமையான ஏகாதிபத்திய ஜனாதிபதிப் பதவியை கட்டியெழுப்பிக் கொள்வது வரைக்கும் பயன்படு்த்திக் கொண்டது இந்த 'தேசத்தின் மீட்பர்' என்ற விம்பத்தைத்தான். இறுதியில் என்ன நடந்திருக்கிறது?  வகுப்புவாத திசைப்படுத்தலின் வழியே நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கொடுத்த ஆணையானது, மஹிந்த ராஜபக்ஷவின் பதவியை முடிவற்றதும் காலவரையற்றதுமாக ஆக்கிக் கொள்வதற்காக மட்டும் பாவித்துக் கொள்வதுதான். நோய் அப்படியே இருக்கிறது.

    விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பிற்பாடு ஒன்றரை வருடங்கள் கடந்தும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாங்கள் முன்வைத்திருக்கக் கூடிய ஒரு  அடிச்சுவடாவது உள்ளதா?

    இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்காக, வெளிநாட்டு அரசுகளிடமிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கும் உணவு மற்றும் கூரைத் தகடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தவாறு, அகதி முகாம்களிலிருந்து அவர்களை வெளியேற்றி மந்த கதியோடும், நிறைய குறைகளோடும் நடைபெறும் மீள்குடியமர்த்தல் மாத்திரம் நடைபெறுகிறது. அந்த நிகழ்வுகள் நடைபெறுவது கூட  முற்றுமுழுதாக சிங்கள பெளத்த ஆதிபத்தியமானது தமிழ்மக்களின் பூர்விக நிலங்களின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட நிலையில்தான்.

    யுத்தம் நடந்த பிரதேசங்களின் முழுமையாக கட்டுப்பாடு இன்னும் இராணுவத்தின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. பொது ஆட்சியமைப்பு நிகழ்வதாகத் தென்பட்ட போதும், அது இராணுவ அதிகாரிகளின் தீர்ப்புகளுக்கும் திட்டங்களுக்கும் கீழேதான். தமிழ் மக்கள் நிலையான இராணுவ முகாம்களிருக்கும் எல்லைக்குள்தான் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள். மாற்றமாக இருப்பது என்னவெனில், முன்பு சில மீற்றர்கள் இடைவெளியில் பாதை நெடுக தரித்து நின்று, தமிழர் வீடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பது மட்டுமே.

    இதற்கு முன்பும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல தமிழ்ப் பெயர்களைக் கொண்ட வீதிகள், கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வீதிகள் தோறும் பரந்திருக்கும் இராணுவத்தினரால் நடாத்தப்படும் மக்களுக்கான விடுதிகள் முன்னேற்றமடைந்து, இராணுவ முகாமைத்துவத்துடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. வடக்கு, கிழக்கு பிரதேங்களில் அதிகளவு இடங்கள் குடியிருப்பதற்காகவும், முதலீடுசெய்வதற்காகவும் கொள்வனவாளர்களிடம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அருகம்பை, பாசிக்குடா போன்ற கடற்கரையோரப் பிரதேசங்கள் மிகப் பெரிய ஹோட்டல்களுக்காக இப்பொழுதே ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்தவுடனேயே இவை வலுவானதும் அத்தியாவசியமானதுமான பொருளாதார முன்னேற்றமொன்றின் காட்சியென தர்க்கிக்க முடியுமெனினும், அம் முன்னேற்றத்தின் பலனை அனுபவிப்பது பொதுமக்களைக் கொன்று குவித்த யுத்தமொன்றில் தமது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இழந்து இடம்பெயர்ந்திருக்கும் அப் பிரதேசத்து தமிழ் மக்களல்ல என்பது வெளிப்படையானது. குறைந்த பட்சம் யாழ்ப்பாண நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும், கட்டுப்பாடுகளற்று தெற்கிலிருந்து வருகை தரும் சுற்றுலா வியாபாரிகள் கூட அம் மக்களது பார்வைக்குத் தென்படுவது தங்களது பூர்விக நிலத்தை அரசின் உதவியோடு வந்து கைப்பற்றிக் கொண்டிருக்கும் வெளியூர் வாசிகள் எனத்தானே?

    இவை எவை குறித்தும் இப்பொழுது வெளிப்படையான விமர்சனமோ எதிர்ப்போ தமிழ் மக்களிடமிருந்து எழாது என்பது உண்மை. எனினும், இச் செயலானது விடுதலைப் புலிகளின் அழிவுமிக்க ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றியமைக்காக அரசுக்கு காட்டும் எல்லையற்ற நன்றிக் கடனெனத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது சிறந்ததாகும். தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்திருப்பது அவர்களுக்குச் செய்த பெரும் உபகாரமென்று அர்த்தம் கற்பித்தபடி நிம்மதியடையும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு, அது அவ்வாறில்லையெனச் சிந்திப்பதற்குத் தூண்டக் கூடிய எண்ணத் திரட்டுக்களை 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு' வின் முன்பாக அளித்த சாட்சியங்களினூடாக மக்கள் தெரிவித்தனர் .

    அன்றாடம் வெளியே தென்படாதபோதும் அவர்கள் தங்கள் உரிமை குறித்து எந்தளவு விழிப்போடு இருக்கிறார்கள் என்பதை சிங்கள ஊடகங்களில் திட்டமிடப்பட்டே பிரசுரிக்காமல் தவிர்க்கும் அவர்களது சாட்சிகளிலிருந்து புலனாகிறது. தங்களது குடும்பத்து உறுப்பினர்களை பலவந்தமாக விடுதலைப்புலிப் படைக்குச் சேர்த்துக் கொண்டது, மனித கேடயமாகத் தங்களைப் பாவித்துக் கொண்டது போன்றவை குறித்து விடுதலைப் புலிகளுக்கெதிராக முறைப்பாடு செய்வதோடு, இந்த ஆட்சியில் இராணுவத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அவர்கள் வெளிப்படுத்தும் குற்றச்சாட்டுகளும் எதிர்ப்பும் பலம் மிக்கவை. அவை இதுவரை வெளிவராத யுத்தத்தின் இன்னொரு முகத்தைக் காட்டிக் கொடுக்கின்றன.

    தங்களது பிள்ளைகளை, கணவர்களை மற்றும் உறவினர்களை இராணுவத்திடம் ஒப்படைத்தும் , அவர்களுக்கு என்ன நடந்ததென இன்னும் தெரியவில்லை என்பது அவர்களது பாரதூரமானதொரு குற்றச்சாட்டு. இடைக்கிடையே கடத்தப்பட்டு, பிறகு காணாமல் போனவர்கள் குறித்த குற்றச்சாட்டினை விடவும் இராணுவத்திடம் ஒப்படைத்த பிறகு காணாமல் போவது குறித்த குற்றச்சாட்டு பாரதூரமானது. அவர்களது இன்னுமொரு குற்றச்சாட்டு என்னவெனில் தடைசெய்யப்பட்டிருக்கும் திரள்குண்டுகள் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் இராணுவத்தால் தமக்கு எதிராக பாவிக்கப்பட்டது குறித்ததாகும். அவ்வாறே, தங்களை இலக்கு வைத்து ஷெல் வீச்சுக்களை நடத்தியதாகவும் அதனால் தினமொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள். தாங்கள் மீள் குடியேற்றத்துக்காகச் சென்றபோது, தங்கள் வீடுகளிலிருந்த கூரை ஓடுகள் இராணுவக் காவல்நிலையங்களின் கூரைகளிலிருந்ததாக அவர்கள் சொல்கின்றனர்.

    யுத்தம் குறித்து அரசு சொல்லும் புள்ளிவிபரங்களையும் வரைபடங்களையும் மட்டும் ஒப்பிக்கும் அநேக ஊடகங்களுக்கு, உண்மையிலேயே யுத்தம் எவ்வளவு பயங்கரமானதென மீண்டும் சிந்தித்துப் பார்க்க அச் சாட்சிகளினால் வாய்ப்பொன்று பெற்றுத் தரப்படுகிறது. அதுவும் அவர்கள் எந்தவிதப் பாதுகாப்புமற்ற முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பிரதேசமொன்றில் சாதாரண மக்களாக வசித்துக் கொண்டுதான் இவற்றைச் சொல்கிறார்கள். சாட்சி கூறியதன் பிற்பாடு அரசின் இராணுவம் அல்லது வேறு அதிகாரங்களிடமிருந்து வரக் கூடிய இன்னல்களுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. அமைச்சர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இச் சாட்சிகளுக்கு தக்க பாதுகாப்பைப் பெற்றுத் தரும்படி பாராளுமன்றத்தில் கேட்டு நின்றது இதனால்தான். உரிய பாதுகாப்பை வழங்கினால், இதை விடவும் பல விடயங்கள் அவர்களிடமிருந்து வெளிப்படக் கூடும்.

    பாதைகள் சீரமைப்பதாலோ, பேருந்து நிலையங்களைக் கட்டுவதாலோ, வடக்கிலிருந்து தெற்குக்கு நூற்றுக்கணக்கான பேரூந்துகளை ஓடவிடுவதாலோ, மிக விசாலமான ஹோட்டல்களையும் வங்கிகளையும் கட்டியெழுப்புவதாலோ தங்களது உரிமை குறித்த விழிப்புணர்வுகளை மழுங்கடிப்பதற்கு அவர்கள் இடங்கொடுக்கமாட்டார்கள் என்பது இந்த வரையறுக்கப்பட்ட வாக்குமூலங்கள் மூலமாகத் தெரிகிறது. தங்களுக்கு வரலாற்று ரீதியாக நடந்த அசாதாரணங்கள் பற்றிய விழிப்பு நிலை இன்னும் அவர்களிடம் இருக்கின்றது. யுத்தத்தை வென்றெடுத்த பிறகு தற்பொழுது அபிவிருத்தியெனச் சொல்லிக் கொள்வதால் மாத்திரம் இலங்கையில் பெரியதொரு ஆச்சரியம் நிகழ்ந்துவிடப்போவதில்லை. யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும் என்பதைப் போல, இவ் விசாலமான அபிவிருத்தித் திட்டங்களின் கமிஷன் பணம் எவ்வளவு, தனி மனித ஆதாயம் எவ்வளவு ஆகியன வெளிவரவும் இன்னும் காலம் எடுக்கக் கூடும்.

    எனினும் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை என்னவெனில் பௌதிக அபிவிருத்திக்குச் சமமாக மனித உரிமைகளிலும் முன்னேற்றம் இருக்கவேண்டும் என்பதுதான்.  அந் நிலைமைக்கு முதலாவது நிபந்தனையானது, நாம் மறந்துபோயும், கைவிட்டுமிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகும். அதனை வேண்டுமென்றே புறக்கணிப்பதானது, அபிவிருத்தியினூடாகக் கைப்பற்றிக் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பவற்றை இன்னுமொரு மோதலொன்றின் இரையாக்கி, அழிந்து செல்வதற்கு இடமளிப்பதே.

K.W. ஜனரஞ்சன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 134 பெப்ரவரி, 2011
# இனியொரு
# உயிர்மை
# திண்ணை
# ஊடறு
# மற்றும் சில இணையத் தளங்கள் 

Friday, May 6, 2011

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

        மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை  நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.
.

        மன்னாரிலிருந்து பூநகரி நோக்கிச் செல்லும் பாதையில் முன்னேறிச் செல்லும்போது யுத்தத்தினால் உண்டான கஷ்டங்கள், துயரங்கள் விரக்தி என்பன கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் தோன்றுவதற்கும் உணர்வதற்கும் தலைப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யுத்தகாலத்தில் கட்டப்பட்ட உறுதியான மண் மதில்களைத் தாண்டிச் சென்று நெற்களஞ்சியப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தேன். இந்தக் கட்டுரையை பயண ஆரம்பத்தில் அனுபவித்த துயர்மிக்க அனுபவமொன்றினைக் கொண்டு ஆரம்பிக்க நினைக்கிறேன். அந் நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிவிட்டு திரும்ப வீடு நோக்கி, மரம் செடி கொடியேதுமற்ற மணல் வீதியின் நெடுகே தகிக்கும் கடுமையான வெயிலில் வெந்து வெந்து, சுமார் பதினெட்டு கிலோமீற்றர்கள் நடந்தே சென்று கொண்டிருந்த நான்கு சிறுமிகளை அன்று நான் சந்தித்தேன். அவர்கள் பரீட்சைக்காக வந்திருந்ததுவும் அவ்வாறேதான்.

        நான் அறிந்திராத பிரதேசமொன்றில், தெரியாத மொழி பேசும், முன்னெப்போதும் அறிந்திராத மக்களுடன் கழித்த முதல் நாளிலேயே வேறொரு நாடொன்றில் இருப்பதைப் போன்ற உணர்வை உணர்ந்தேன். எனினும் இரண்டு நாட்கள் கழிந்த பிற்பாடு அப் பிரதேச மக்களுடன் நெருக்கமாகிவிட என்னால் முடிந்தது. அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவுண்டேன். அவர்களது அன்றாட வேலைகளில் ஒத்தாசை புரிந்தேன். சிறு குழந்தைகளுடன் விளையாடினேன். அவர்களுக்கு சிற்சில விடயங்களைக் கற்றுக் கொடுத்தேன். அதற்கிடையில் அவர்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ள முயற்சித்தேன்.

        யுத்தத்தினால் உடைந்து சிதிலமாகிப் போன வீடுகள், கட்டடங்கள், போக்குவரத்துப் பாதைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அடிப்படை வசதிகளை சிரமப்பட்டாவது பெற்றுக்கொள்ளும் வசதி அவர்களுக்கில்லை.  மின்சாரம் எப்படிப் போனாலும், சுத்தமான குடிநீர், பயணங்களுக்காக பேரூந்தொன்று கூட அங்கில்லை. ஐநூறு ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாய் மாத்திரமே கொடுத்துச் செல்லும் பலம் வாய்ந்த குழுவொன்று அப் பிரதேசத்தில் சஞ்சரிப்பதை நானே கண்டிருக்கிறேன். விவசாயத்துக்கேற்ற வயல்நிலங்கள் காணுமிடங்களிலெல்லாம் இருந்தபோதிலும், அவை பாழடைந்து போயிருக்கின்றன. விவசாயம் செய்யப்படும் ஒன்றிரண்டு வயல்களுக்கும் உதவியாக டிரக்டர் வண்டியொன்றேனும் வழங்கியிருப்பது அரச சார்பற்ற நிறுவனங்கள்தான். பாடசாலைகள், வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் சிக்கல் என்னவெனில், அவற்றைச் செய்வது அரசாங்கத்தினாலா அல்லது வேறு அமைப்புக்களாலா என்பதுதான். தேசப்பற்று மிக்கவர்களெனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும்  கிளர்ச்சிக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமொன்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் பேயாட்டம் ஆடி, சாகும்வரை எனக் கூறிக் கொண்டு உண்ணாவிரதமிருந்து அரச சார்பற்ற அமைப்புக்களை  நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனத் துடிக்கும் ஜோக்கர் வங்ச (இது விமல் வீரவங்சவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்)அறிந்திராத, எனக்குத் தெரிந்த விடயமொன்றுண்டு. அது வடக்கு, கிழக்கு மக்களது முன்னேற்றத்திற்காக ஏதேனும் செய்யப்படுவது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பலவித அரச சார்பற்ற நிறுவனங்களாலேயே அன்றி அரசாங்கத்தினாலல்ல என்பதுதான் அது. அரசைச் சார்ந்தவர்கள் செய்வது அடிக்கல் நாட்டுவதுவும், வேறு அமைப்பொன்று செய்த ஏதேனுமொன்றை திறந்துவைப்பதுவும்தான். இல்லாவிடில், முன்பு சொன்ன அமைப்புக்களுக்கு ஏதும் செய்யவிடாமல் தடுப்பதுவும்தான்.

        இங்கு வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதொரு விடயத்தை நான் கண்டேன். அதாவது வளர்ச்சி இருப்பது நீங்கள் போகும் வரும் பிரதான வீதிகளில் மட்டும்தான். அனேகமான பகுதிகளில் மக்களது வாழ்க்கை முன்புபோலவேதான். இல்லாதது குண்டுகளின் ஓசை மட்டுமே. காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக? இன்னுமின்னும் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது எதற்காக?

       
இங்கு விதவைகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு அனேகக் குழந்தைகளும் உள்ளன. இங்கு ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருக்கின்றனர். ஆண்களில் சிலர் இறந்துபோய் விட்டனர். சிலரை இரண்டாண்டு காலமாக இராணுவம் கைது செய்து வைத்திருக்கிறது. சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் இங்குள்ள பெண்களுடன் இணைந்து பெரியதொரு குடும்பமான பின்பு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இப் பிரதேசத்தில் ஆண்களின் எண்ணிக்கைக் குறைபாடு காரணமாக குடும்பங்களின் அனைத்துப் பொறுப்புக்களும் பெண்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன.

        இம் மக்களுக்கு தெற்கில் நடப்பதென்ன என்பது குறித்து எதுவும் தெரியாது. இவர்களுக்கு ராஜபக்ஷவோ, விக்கிரமசிங்கவோ, பொன்சேகாவோ, சம்பந்தனோ வீரனோ துரோகியோ அல்ல. இவர்களைப் பொருத்தவரையில் இவர்கள் எல்லோருமே சம்பிரதாயபூர்வமான பொய்காரர்கள். அரசாங்கம் குறித்த நிலைப்பாடும் அதுவேதான். எனினும் இவர்களது பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்வது அரச சார்பற்ற அமைப்புக்கள்தான் என்பதனால் இவர்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களைக் குறித்து ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.

        தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் மக்களுக்கு வடக்கு மக்கள் கண்காட்சிப் பொருட்களாக மாறியுள்ளனர். உடைந்து சிதைந்துபோன பெருவீதிகள், வீடுகள் மற்றும் கட்டடங்களைப் பார்த்தபடி தெற்கு மக்கள் பொழுதைப் போக்குகிறார்கள். சொற்ப அளவினரைத் தவிர அனேகம் பேர் எண்ணியிருப்பது யுத்தம் முடிவுற்றதன் பின்னர் எல்லாம் முடிவுற்று விட்டது எனத்தான். ஆனால் உண்மை அதுவா? இல்லை. சுனாமி வருவதற்கு முன்னர் முழுச் சூழலுமே அமைதியானது பற்றி இன்னும் எங்களுக்கு நினைவில்லை. நீண்ட அமைதி என்பது பெரும் அழிவு அண்மையில் என்பதுதான். நாட்டில் எல்லோராலுமே சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் கதைக்க முடியுமாகும்போது இந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென எண்ணும் சிலரும் இருக்கிறார்கள். அவ்வாறானது அபத்தம் அன்றி வேறு இல்லை. உடனடித்தேவையாக இருப்பது தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நியாயமானதொரு தீர்வை விரைவில் பெற்றுக் கொடுப்பதே.

        விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தத்தில் தோல்வி கண்டிருக்கிறது. அத் தோல்வி அனைத்து தமிழ் மக்களினதும் தோல்வியென்ற எண்ணக் கருத்தொன்று உருவாக்கப்பட்டு அது மக்களிடையே ஆழப் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் தோல்வி மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள். தமிழ் மக்களின் உள்ளங்களுக்குள் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பொன்றையோ நம்பிக்கையொன்றையோ உருவாக்க இன்றுவரைக்கும் முடியவில்லை. இதனால் பெரும் சிக்கலொன்று இருப்பது குறித்து பொறுப்பானவர்களுக்கு புரியாமலிருப்பதும் ஏனோ?

        யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் முளைக்க மாட்டாதென யாரால் கூறவியலும்? இதைப் பற்றிச் சிந்தித்தபடி பதினெட்டாம் திகதி நெற்களஞ்சியப் பிரதேசங்களிலிருந்து மீண்டும் திரும்பி வந்தேன்.

- சானக ரூபசிங்க
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை


நன்றி
# இனியொரு