
இச் சித்திரவதைகள், தமது இருப்பிடங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் சக மனிதர்களாலும் கூட சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதோடு அரசியல் ரீதியாகவும், அதிகார வர்க்கத்தாலும் கூட மனிதனைத் துன்புறுத்தல் எனும் இம் மனித உரிமை மீறலானது, எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படாதவண்ணம் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுதும் இது பொருந்தும். ஆதி காலத்திலும், சாம்ராஜ்யங்களின் ஆட்சியின் போதும், தற்கால உலக அரசியலிலும் தமது ஆட்சிக்கு எதிராக இருப்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அடக்கி வைப்பதற்காகவும் சித்திரவதை பிரயோகிப்பட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தால் கைது செய்யப்படுபவர்களையும் யுத்தக் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அனேக சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த அதிகார வர்க்கங்கள் இச் சட்டங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதை அண்மைய காலங்களில் பெருமளவில் காணக் கிடைக்கிறது.

இதில் அபாயமானது என்னவெனில், 'சந்தேக நபர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சித்திரவதையைப் பாவிப்பது நியாயமானதே' என்ற கருத்தை பொதுமக்களிடம் பரப்புவதன் மூலம் சித்திரவதையை சட்டபூர்வமாக்குவது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் சித்திரவதையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு இப் பயங்கர எண்ணக் கரு வளர்ச்சியடைந்திருக்கிறது. 2002 ஏப்ரல் மாதத்தில் அல்கைதா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபூ சுபைதா கைது செய்யப்பட்ட பிற்பாடு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி மேற்கு ஊடகங்களில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டன. நாளை இந் நிலைமை எமது நாடுகளிலும் வரலாம். இது இன்னும் முன்னேற்றமடையுமானால் எதிர்காலத்தில் சித்திரவதையும் சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாறிவிடும். இதனை நாம் தடுக்க வேண்டும்.

மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. இலங்கையில் கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.

ஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், இலங்கையில் ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் இலங்கையில் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.

நான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம், பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் இலங்கையிலிருந்து சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, இலங்கையிலுள்ள மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்மை
# திண்ணை
# இனியொரு