Monday, November 5, 2007

வறுமையில் வாடும் சுல்தானும்,செல்வத்தில் திளைக்கும் வறியதேசத்து மக்களும்...!

உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது.
பெரும் பணக்காரர் என்றால் பெரிய மாளிகைக்குச் சொந்தக்காரராக இருப்பார்.ஆடம்பர வாகனங்கள் வைத்திருப்பார்.விலை உயர்ந்த பொருட்களைக் குவித்து வைத்திருப்பார் என்பது தெரியும்.ஆனால் அதையும் தாண்டி படு ஆடம்பரக்காரராகத் திகழ்கிறார் புருனை சுல்தான் ஹாஜி ஹஸன் அல் போல்கியா.
61 வயதாகும் சுல்தானுக்கும்,அவரது தம்பியான இளவரசர் ஜெfப்ரிக்கும் இடையே சொத்துத்தகராறு ஏற்பட்டு அது நீதிமன்றத்துக்குப் போக,வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் தற்போதைய உலக பணக்காரர்களும் யோசிக்க முடியாதது என்றால் மிகையாகாது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் "பாராட்டி" மனம் குளிர நனைத்து அனுப்புவது சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பணக்காரரின் செலவு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு 5- 6 மாளிகைகள், 2- 3 தோட்டங்கள், ஒரு அதி ஆடம்பர கார் ஓரிரு கப்பல் அல்லது விமானம் இவ்வளவே...

ஆனால் புருனே சுல்தான் ஹாஜி ஹஸன் அல் போல்கியா இதனையெல்லாம் விஞ்சிவிட்டார். செலவு செய்வதில் பணக்காரர்களையே பொறாமைப்பட வைத்துவிட்டார் என்றால் மிகையாகாது.*சுல்தான் தனது பேட்மின்டன் பயிற்சியாளருக்கு 1.26 மில்லியன் பவுண்டுகளை சம்பளமாக கொடுத்துள்ளார். தனது அக்குபங்க்சர் மற்றும் உடல் மசாஜிற்கு 1.25 மில்லியன் பவுண்டுகள்.

அரிய பறவைகளை விலைக்கு வாங்குவதை பொழுதுபோக்காக கொண்ட சுல்தான் அதனை பாதுகாத்து பராமரித்து வரும் காவலர்களுக்கு மட்டும் 50,000 பவுண்டுகள் செலவு செய்துள்ளார்.

அவருடைய பொது உறவுகளை கவனித்து வரும் குழுவிற்கு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள், வீட்டு நிர்வாகத்தை கவனித்து வரும் பணியாளர்கள் இருவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள்.

நாட்டின் கஜானாவிலிருந்து கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் சுல்தானின் ஆடம்பர செலவுகளுக்காக அவரது சொந்த கணக்கில் சென்றுள்ள அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

இவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை மட்டும் 5000. 115 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு தனி போயிங் விமானமும் உள்ளதாம்.

1788 ஆடம்பர அறைகள் கொண்ட மிகப்பெரிய மாளிகை தவிர, இவரது குடும்பத்தினர்கள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் பாரீஸ் நகரங்களில் பல மாளிகளைகளை வைத்திருக்கின்றனராம்.

புருனேயை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த இவருக்கும், இவரது சகோதரருக்குமான குடும்ப சொத்து வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்களுக்கான தொகை மட்டும் 200 மில்லியன் பவுண்டுகளாம்.

1984ஆம் ஆண்டு புருனே விடுதலை அடைவதற்கு முன் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இன்னமும் லண்டனில் உள்ள பிரவி கவுன்சில்தான் அதற்கு உச்ச நீதிமன்றம்.

புருனே சுல்தானின் சொத்து மற்றும் செலவு விவரம்:

1. 1788 அறையுடன் மாளிகை, 6- நட்சத்திர விடுதி, ஒரு கேளிக்கை பூங்கா, 5000 கார்கள் மற்றும் விமானங்களை நிறுத்த மிகப்பெரிய ஆடம்பரக் கொட்டகை.

2. உடம்பைத் தேய்த்து விடும் மசாஜ் அழகிகள் மற்றும் அக்குபங்க்ச்சர் மருத்துவர்களுக்காக 1.25 மில்லியன் பவுண்டுகள்.

3. வீட்டு பரமரிப்பு பணியாளர்களுக்கு 13.9 மில்லியன் பவுண்டுகள்.

4. 1.26 மில்லியன் பவுண்டுகள் பேட்மின்டன் பயிற்சிக்கு.

5. பி.ஆர் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் 5.86 மில்லியன் பவுண்டுகள்.

6. தனது அரிய பறவைகளை பராமரித்து பாதுகாக்கும் காவலருக்கு 48,859 பவுண்டுகள்.


LUXURY CARS
531 Mercedes
367 Ferraris
362 Bentleys
185 BMWs
177 Jaguars
160 Porsches
130 Rolls-Royces
20 Lamborghinis OTHER TRANSPORT
Two Boeings, including a 747-400 jumbo jet, one Airbus, six smaller planes, two helicopters

சரி...சில விநாடிகள் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள்.இனி சற்றுச் சிந்திப்போமா?
ஒரு சுகபோக நாடு இவ்வளவு செல்வத்தில் திளைக்கும்போது உலகில் எத்தனையோ வறியதேசத்து மக்கள் ஒவ்வொரு கணமும் பட்டினியாலும்,போஷாக்குக் குறைவாலும்,சமூக விழிப்புணர்வு இன்மையினாலும்,வன்முறைகளாலும் இறந்து கொண்டிருப்பதை இவர் கேள்விப்படுவதேயில்லையா?இவர் நினைத்தால் இருக்கும் பணத்தை வைத்து அனைத்து வறிய மக்களுக்கும் உதவமுடியுமே?
அண்மையில் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இந்தியரான வைத்தியக் கலாநிதி திரு.முரளி கிருஷ்ணனிடம் உரையாடிக்கொண்டிருந்த போது உலகின் பல வறியநாடுகளுக்கு கடமை நிமித்தம் சென்றபோது நிறையதேசங்களில் மக்கள் ஒருவேளை உணவோடும்,ஒரே ஒரு ஆடையுடனும் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலும்,நோய்களின் மத்தியிலும் வாழ்ந்து வருவதைக் கண்ணுற்றதாகக் கூறினார்.
சுல்தான் தனது பொழுதுபோக்குக்காக கூண்டிலடைத்து வளர்த்துவரும் பறவைகளுக்கும் அவற்றைப் பராமரிப்பவர்களுக்கும் ஆண்டொன்றுக்கு செலவளிக்கும் பணத்தை மட்டுமாவது இவ்வாறான வறியமக்களுக்குப் பகிர்ந்தளிப்பின் அவர்களும் பசி நீங்கித் துயரற்று வாழ்வார்களே...!

யாராவது இதனை சுல்தானுக்கு எடுத்துச் சொல்(வீர்)வார்களா?

No comments: