Tuesday, January 8, 2008

2008-ல் கணினி பாதுகாப்பு விவகாரங்கள்


2008-ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். வைரஸ் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளையும், நெட்வொர்க்குகளையும் பாதுகாக்க 2008-ல் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சைமன்டெக் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

2008-ல் நிலவக்கூடிய பாதுகாப்பு போக்குகள் குறித்து சைமன்டெக் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலில் இருப்பது "தேர்தல் பிரச்சாரங்கள்". அரசியல்வாதிகள் இணையதளத்தை பிரச்சார எந்திரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்பதால், அதனால் ஏற்படும் கணினி பாதுகாப்பு விவகாரமும் முக்கியம் என்று சைமன்டெக் கூறுகிறது. அதாவது இதன் மூலம் ஆன்லைன் நன்கொடைக்கான பிரச்சாரங்கள், தவறான தகவல்கள் பரவுவது, மோசடி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.

இரண்டாவதாக தொழில் முறையில் வைரஸ்களை பரப்புதல், மற்றும் கணினி தொடர்பான மோசடிகளில் இறங்கும் "பாட்" (BOT) கும்பலின் வளர்ச்சியை சைமன்டெக் குறிப்பிடுகிறது. வைரஸ் பரவிய ஒரு கணினியை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மர்மமான வேலைகளில் இறங்க அவர்களுக்கு `பாட்' கும்பல் உதவலாம்.

உதாரணமாக `பாட்' கும்பல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணினிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக விளம்பரம் செய்தார்களேயானால், இதனை பயன்படுத்திக் கொள்ள `பாட்' கும்பலுக்கு பணம் செலுத்தி மோசடிகளில் இறங்கலாம்.

மேலும் முக்கியமாக பயனாளர் அல்லது வாசகர் உருவாக்கும் இடுகைகளை (User Generated Content) வெளியிடும் ஒரு இணையதளம் மென்பொருள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்று சைமன்டெக் எச்சரித்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட இணையதளம் உயர் தொழில்நுட்ப வைரஸ் ஸ்கேனிங் முறையை வைத்திருந்தாலும் அதனை ஏமாற்றி உள்ளே நுழைய முடியும் என்று அது கூறுகிறது.

இந்த பட்டியலில் செல்பேசி மூலம் பயன்படுத்தும் பயன்பாடுகள், தொல்லை மற்றும் மோசடி மின்னஞ்சல்களின் பெருக்கம் ஆகியவை இறுதியாக இடம்பெற்றுள்ளன.

ஆனால் செல்பேசி பாதுகாப்பு குறித்து சைமன்டெக் அதிக முன்னுரிமை அளிக்கவில்லை. ஏனெனில், செல்பேசிகள் தற்போது சிக்கல் நிறைந்த ஒரு தொழில்நுட்பமாக மாறி வருகிறது. செல்பேசி வங்கி நடவடிக்கைகள் மற்றும் பிற நிதி தொடர்பான நடவடிக்கைகள் அதில் மேற்கொள்ளும்போது மட்டுமே ஹேக்கர்கள் அதில் மோசடி செய்யமுடியும்.

அதேபோல் மோசடி மின்னஞ்சல் அல்லது தொல்லை மின்னஞ்சல்களை க்ளிக் செய்ய வைக்க புதிய உத்திகளை பயன்படுத்தலாம். உதாரணமாக எம்பி.3 அல்லது ஃபிளாஷ் கோப்புகள் சேர்க்கப்படலாம்.

இணையதளத்தில் மேலும் மேலும் அதிக விஷயங்கள் சேர்க்கப்பட சேர்க்கப்பட பாதுகாப்பு விஷயங்கள் மேலும் சிக்கலாகவே போய் முடியும் என்று சைமன்டெக் எச்சரிக்கை செய்துள்ளது.

No comments: