Wednesday, February 20, 2008

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?


பொதுவாகவே நாம் ஏதாவதொன்றைத் திட்டமிடும் போது,அத் திட்டம் நிறைவேறும் நாளொன்று,நேரமொன்று இருக்கும்.
உதாரணமாக நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதவேண்டுமெனத் திட்டமிட்டுப் படிப்பீர்களாயின் பரீட்சையோடு அத்திட்டமிடல் நிறைவேறிவிடும்.ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்களெனில் அப்பயணம் நிறைவேறிய பின்னர் அத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு விடும்.
அது போல திருமணம் செய்ய,வீடு கட்ட,வாகனம் வாங்க,மேற்படிப்பு படிக்க என எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தானே செய்கிறோம்.
ஆகவே நமது வாழ்க்கையானது இதுபோன்ற சின்னச் சின்ன,பெரிய திட்டங்கள்,இலக்குகள் கொண்டே அடுக்கடுக்காகக் கட்டப்படுகிறது எனச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் தானே..?அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமான திட்டங்கள்,இலக்குகள் வித்தியாசப்பட்ட போதும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒத்த இலக்கு,இலட்சியம் என்பது 'வாழ்க்கையை வெற்றி கொள்வது' .நாமனைவரும் அதனை நோக்கியே கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இலக்குகளை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம்மனைவருக்கும் வாழ்க்கையை வென்றெடுக்கவேண்டுமென்பதே இலட்சியமாக இருப்பினும் வென்றெடுக்கும் நாளெது? அதற்கான நேரமெது ? என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.உண்மைதானே ?
வாழ்க்கையை வெற்றிகொள்ளவேண்டுமென நாம் பலவிதங்களில் முயற்சிக்கிறோம்.போராடுகிறோம்.ஆனால் எமதான வாழ்க்கையை எப்பொழுது வென்றெடுக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு எம்மிடம் பதிலிருப்பதில்லை அல்லது பதிலளிக்க முடிவதில்லை.
இதுவரை நீங்கள் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்து அல்லது எதிர்காலத்தில் பயணிக்க எண்ணியிருக்கும் திசையை நோக்கிச் சொல்லுங்கள்.உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?
நாம் இறக்கும்வரைக்கும் இலட்சியங்களிலான,சிக்கலான வலைகளால் நம்மை நாமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு சிக்கலாய் விடுவித்துக்கொண்டு,இலட்சியங்களை ஈடேற்றிக்கொண்டு வருகையில் நாம் இறந்துவிடுவோமென வைத்துக்கொள்வோம்.நாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா? இதற்கான பதிலைச் சொல்லப்போவது யார்?நாமா?நாம்தான் மரணித்துவிட்டோமே..?
நம் இறப்பின் பிற்பாடு நம்மைச் சூழ இருப்பவர்கள்தான் நாம் வாழ்க்கையை வென்றோமா ? அல்லது தோற்றோமா? எனச் சொல்லப்போகிறார்கள்.நம் இறப்பின் பின்னர் அவர்களது பாராட்டுக்களால் அல்லது வசைபாடல்களால் நமக்கு என்ன பயன்?
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலன்கள் பற்றி நாம் வாழும்போதே உணர்ந்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.நாம் வாழ்க்கையை வென்றோமா என்ற கேள்விக்கான பதில் பயனளிப்பது நமக்கேயன்றி பிறர்க்கல்ல.எப்படி நமக்கு மற்றவர்கள் வாழ்க்கையை வென்றார்களா இல்லையா என்பதற்கான விடை தேவையாக இல்லையோ அதுபோலவே அவர்களுக்கும் நமது வாழ்க்கை பற்றிய கேள்விக்கான விடை தேவையற்றதாக இருக்கும்.(சிலர் நமக்குத் தோல்வி ஏற்படும்வரை,நாம் தவறிழைக்கும் வரை சிரிக்கப் பார்த்துக்கொண்டிருப்பர் என முணுமுணுப்பீர்கள் இக்கணத்தில்.உண்மைதான்.அது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாமே ! )
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாட்களுக்குள் தான் தனது வாழ்க்கையை வெற்றிகொள்ள வேண்டியிருக்கிறது.அந்த நாள் எப்பொழுது? எந்தப் பராயத்தில் ?
*பால்யத்தில் ?
*இளமைக்காலத்தில் ?
*நடுத்தர வயதில் ?
*வயோதிபத்தில் ?

நம்மில் அனேகம்பேர் தமது வாழ்க்கையை வெல்வதற்காக அவர்களது சிறுவயதில் ஆரம்பித்த போராட்டம் அவர்களது முதுமை வரை தொடர்ந்து செல்கையில் தாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா,இல்லையா எனத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமிருக்காது.அவர்கள் அறியாமலேயே முதுமை வந்துவிடும்.ஒரு கட்டத்தில் வயதாகிவிட்டது எனச் சோர்ந்துவிடுவார்கள்.இளமைக் காலத்தை வீணாக்கிவிட்டோமே என வருந்துவார்கள்.
ஆகவே 'வாழ்க்கையை வெற்றி கொள்வது என்றால் என்ன?' என்பதற்கான விடையை உங்களை நீங்களே கேட்டுப்பார்த்து அதற்கான விடையைத் தெரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கையை வென்றெடுக்கும் நாளெது பற்றிய கேள்வி எழாது.
உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்,ஒவ்வொரு பகுதியிலும் நம்மால் செய்யப்பட வேண்டிய அத்தனை செயல்களையும்,எதிர்பார்ப்புக்களையும் திட்டமிட்டு நிறைவேற்றுவதுதான் வெற்றியின் முதல்படி.ஆகவேதான் வெற்றியின் ஏனைய படிகள் நமது வாழ்க்கையின் நாட்களையும்,நேரங்களையும் சார்ந்து இருக்கின்றன.எனவே வெற்றி நமக்கான காலங்களில்,வருடங்களில்,மாதங்களில்,வாரங்களில்,நாட்களில்,மணித்தியாலங்களில்,நிமிடங்களில்,வினாடிகளில் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே.
இப்பொழுது இப்படிப் பார்ப்போம்.நாங்கள் சுவாசித்துக்கொண்டிருக்கும்,நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியை,இந்த நிமிடத்தை மிகவும் நிம்மதியான முறையில்,பயனுள்ள வழியில் செலவழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.நமது ஒவ்வொரு வினாடிகளும் வீணடிக்கப்படாமல்,பயனுள்ள வகையில் நாம் அன்றைய தினம் போட்டுவைத்திருக்கும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும்.இப்படிப் பயனுள்ள விநாடிகள் கொண்டு உருவாக்கப்படும் நிமிடங்கள்,மணித்தியாலங்கள்,நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள்,காலங்கள் உங்களது வெற்றியை நீங்கள் வாழும்போதே கூறுபவைதானே.
வேறுவகையில் சொல்வதானால் நீங்கள் வாழ்க்கையை வெற்றிகொள்ளும் நாள் இன்று தான்.வெற்றியை நோக்கி நகரும் வினாடி இதுதான்.இந்தக்கணம் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.இதனை நீங்கள் வீணாகப் பயனற்ற முறையில் கழிப்பீர்களானால் நீங்கள் தோல்வியை நோக்கி பாதங்களை எடுத்துவைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம்.இந்த நிமிடத்தை நீங்கள் விரோதம்,கோபம்,பொறாமை,வஞ்சகம்,சுயநலம் கொண்டு பூரணப்படுத்துவீர்களாயின் வாழ்க்கையில் தோற்றவர்கள் பட்டியலுக்கு நம்மை நாமே விண்ணப்பிப்பவர்கள் ஆகிறோம் அல்லவா?
பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைவது,உயர்ந்த தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வது,நல்லதொரு குடும்ப வாழ்க்கையைக் கொண்டுசெல்வது,வசதியாக,நிம்மதியாக வாழ்வது என அவரவர்க்கு வெவ்வேறான இலட்சியங்கள் இருக்கும்.அவற்றை நோக்கிச் செல்லும்போது பலவிதமான தடங்கல்கள்,தடைகள் வரத்தான் செய்யும்.அவை பொருளாதார ரீதியாகவோ,பிறராலோ,பிறகாரணங்களாலோ இருக்கலாமே தவிர நமது சோம்பேறித் தனத்தால் இருக்கக்கூடாது.வெற்றி மனப்பான்மையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பவர் எவரோ அவரே வாழ்க்கையை வென்றவராகிறார்.
அந்த வகையில் நாம் எந்த வயதில் இருந்தாலும்,எத் தொழிலைச் செய்தாலும் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெற்றிமனப்பாங்கோடு கழிப்போமாயின் அதுவே வெற்றிகரமான வாழ்க்கை.
வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்காலத்தின் ஏதோ ஒருநாள் வரும்வரை பார்த்திருக்கவேண்டாம்.இன்று செய்ய வேண்டியவற்றை தன்னம்பிக்கையுடனும்,முழுமையாகவும்,மகிழ்வோடும் செய்யுங்கள்.இந்தக் கணத்தை வெற்றியின் நேரமாகக் கொண்டு செயல்படுங்கள்.அப்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கையை நீங்கள் வென்றவர் ஆகிறீர்கள்.
இப்பொழுது சொல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

20 comments:

Anonymous said...

wow... nice motivating article...

M.Rishan Shareef said...

வாங்க சத்யா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..! :)

kannan said...

Hi,

Live today is a powerful message,hats off!
But in my opinion,weather you overcome life remains in the legacy you leave behind.That remains in the service you do to this mankind and the humanity.
Keep up your good work!

Regs,
kannan
http://www.kannanviswagandhi.com
http://www.growing-self.blogspot.com

M.Rishan Shareef said...

திரு.கண்ணன்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே..!

தமிழ் said...

அருமையான கருத்து

Anonymous said...

assalamu alaikum சகோதரர்!
அழகு தமிழில் நல்ல கருத்துடைய ஒரு பதிவு.. வாழ்த்துக்கள்.
நானும் சில நேரங்களில் இப்படி நினைத்ததுண்டு. பள்ளியில் தேர்வுக்கு மிகத்தீவிரமாக படித்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது கல்லூரியில் 'campus placement' நடப்பதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும்போதோ, அடுத்த நொடி நாம் மரணித்து விட்டால் இந்த முயற்சி எல்லாம் வீண் தானே என்று என்ன தோன்றும்... :) சிறு வயதில், நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலருடைய கனவாக உள்ளது. அந்த கனவு நினைவான பின், அடுத்து என்ன என்று தெரியாமல், பலர் விழித்துக்கொண்டிருக்கிறோம்..

ஒரே முறை, நாமெல்லாம் இறந்தவுடன் மீண்டும் ஏக இறைவனால் உயிர்பிக்கப்படுவோம், நம் செயல்களுக்காக நாம் அவனிடம் பதில் கூற வேண்டும், அதை பொறுத்து நமக்கு சொர்கமோ நரகமோ வழங்கப்படும் என்ற என்னத்தை மனதில் ஆழமாக பதித்துக்கொண்டால், இதெற்கெல்லாம் விடை கிடைத்து விடும், நாமும், நாளை என்ன என்பதை பற்றி யோசித்து இந்த நேரத்தை வீணாக்காமல், நம்முடைய ஒவ்வொரு செயலின் மீதும் கவனம் கொண்டு, சிறப்பாக வாழலாம் .. :)

M.Rishan Shareef said...

அன்பின் திகழ்மிளிர்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... :)

M.Rishan Shareef said...

வ அலைக்கும் சலாம் சகோதரி.

//ஒரே முறை, நாமெல்லாம் இறந்தவுடன் மீண்டும் ஏக இறைவனால் உயிர்பிக்கப்படுவோம், நம் செயல்களுக்காக நாம் அவனிடம் பதில் கூற வேண்டும், அதை பொறுத்து நமக்கு சொர்கமோ நரகமோ வழங்கப்படும் என்ற என்னத்தை மனதில் ஆழமாக பதித்துக்கொண்டால், இதெற்கெல்லாம் விடை கிடைத்து விடும், நாமும், நாளை என்ன என்பதை பற்றி யோசித்து இந்த நேரத்தை வீணாக்காமல், நம்முடைய ஒவ்வொரு செயலின் மீதும் கவனம் கொண்டு, சிறப்பாக வாழலாம் .. :)//

உண்மையான கருத்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.. :)

இறக்குவானை நிர்ஷன் said...

தரமான பதிவு ரிஷான். வசனத் தொடர்ச்சி சிறப்பாக இருக்கிறது.

M.Rishan Shareef said...

வாங்க நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

லேகா said...

உங்கள் பதிவில் கவிதைகளும்,கட்டுரைகளும்,புகைப்படங்களும் அழகுற அமைந்ததோடு என்னை மிக கவர்ந்தது நேர்த்தியான ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தின் அமைப்பு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

லேகா said...

உங்கள் பதிவில் கவிதைகளும்,கட்டுரைகளும்,புகைப்படங்களும் அழகுற அமைந்ததோடு என்னை மிக கவர்ந்தது நேர்த்தியான ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தின் அமைப்பு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

லேகா said...

உங்கள் பதிவில் கவிதைகளும்,கட்டுரைகளும்,புகைப்படங்களும் அழகுற அமைந்ததோடு என்னை மிக கவர்ந்தது நேர்த்தியான ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தின் அமைப்பு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

M.Rishan Shareef said...

அன்பின் லேகா,

//உங்கள் பதிவில் கவிதைகளும்,கட்டுரைகளும்,புகைப்படங்களும் அழகுற அமைந்ததோடு என்னை மிக கவர்ந்தது நேர்த்தியான ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தின் அமைப்பு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

இப்னு ஹம்துன் said...

அற்புதமான கட்டுரை ரிஷான். இன்றுதான் படித்தேன்.

உங்கள் மீதான என் ஆச்சர்யம் உயர்ந்துகொண்டே போகிறது.

வாழ்க! வளர்க!!

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,

//அற்புதமான கட்டுரை ரிஷான். இன்றுதான் படித்தேன்.

உங்கள் மீதான என் ஆச்சர்யம் உயர்ந்துகொண்டே போகிறது.

வாழ்க! வளர்க!!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

ராமலக்ஷ்மி said...

//"உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?"//

இன்று இன்று. கட்டுரையில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் வெகு நன்று. வாழ்த்துக்களும் நன்றியும்!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

////"உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?"//

இன்று இன்று. கட்டுரையில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் வெகு நன்று. வாழ்த்துக்களும் நன்றியும்!//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Hisham Mohamed - هشام said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

sundarms74 said...

ur words are marvellous.but these are the reflections i heard with sadhguru of isha yoga. have u heard about it.please spend some time for isha yoga and i think you can realise what i mean