Tuesday, April 7, 2009

எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நான் மற்றும் விகடன்

2009, மார்ச் மாத குமுதம் தீராநதியில் எனது மதிப்பிற்குரிய நண்பரும் எழுத்தாளருமான திரு.அ.முத்துலிங்கம் என்னைக் குறித்து தனது சிறப்புக்கட்டுரையில் எழுதியிருப்பதாக நண்பரும் பதிவருமான செல்வேந்திரன் எனது கவிதைக்கான பின்னூட்டமொன்றில் முதன்முதலில் அறியத்தந்தார். இன்ப அதிர்ச்சி என்பார்களே. அதனை அன்று உணர்ந்தேன். நன்றி செல்வேந்திரன் !

திரு.அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தமானவை. அறை முழுதும் என்னுடன் இருக்கும் தனிமை தரும் சோர்வை, மிகக் கொடியதாக நான் உணரும் தருணங்களில் இவரது எழுத்துக்களைத்தான் துணைக்கெடுத்துக் கொள்வேன். அற்புதமாக, காயங்களுக்கு மயிலிறகுத் தடவலையொத்த, இலாவகமான வரிகளில் கண்கள் அலுப்பின்றி மேய்ந்துகொண்டே இருக்கும். என் வாழ்வினைக் கோர்த்திருக்கும் சம்பவங்களோடு இவரது கதைகள் நிகழும் களம், அதன் கதாபாத்திரங்கள், அதன் சூழல்..இப்படி ஏதேனுமொன்றாவது ஒத்துப் போகும். அல்லது அவற்றுடன் பொருத்திப் பார்த்துக் கதை மானிடராக என்னை உணரும்படி செய்யும்.

கதை சொல்லிகள் எப்பொழுதும் மனதுக்கு நெருக்கமாகி விடுகின்றார்கள். நமது தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள் இன்றும் நம் மனதிற்கு  நெருக்கமாக இருப்பதற்கு அல்லது இருப்பதாகத் தோன்றுவதற்கு எம் சிறுவயதில் அவர்கள் நமக்குச் சொன்ன கதைகள்தான் காரணமாக இருக்கலாம். இவ்வளவு வளர்ந்தும் இன்னும் எல்லோரிடமும் கதைகள் கேட்கும் ஆவல் மனதின் மூலைகளில் அணையாத தணலினைப் போல சாம்பல் மூடி மௌனமாய்க் கிடக்கிறது. கதையொன்றின் சிறு காற்றுப் பட்டால் போதும். தீச் சிரிப்பைக் காட்டியபடி எழுந்து கதையினை விழுங்கிக் கொள்ளத்தொடங்கும். இப்படியாக பல நிகழ்வுகளை எனக்குள் விழுங்கிக்கொள்ளவென்றும் என் பசியாற்றிக் கொள்ளவென்றும் ஒருவரது தலைதடவி இயல்பாக, அன்பாகச் சொல்லும் வரிகளில் அமைந்த இவரது 'அங்கே இப்ப என்ன நேரம்? ' தொகுப்பு பல தடவை என்னை மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தது. அது போலவே 'அக்கா', வம்சவிருத்தி', 'மகாராஜாவின் இரயில் வண்டி' ,' திகடசக்கரம்' மற்றும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். இவையெல்லாம் என்னில் எழுதும் ஆர்வத்தையும் நானாகக் கதை சொல்லிப் பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டின. திரு.அ.முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றி !

புகழ்பெற்ற எழுத்தாளரொருவரது பத்தியில் பெயர் குறிப்பிடப்படுவது சாதாரணமான ஒன்றல்ல என்பதனை அன்று நான் அறிந்துகொண்டேன். நண்பர்கள், பதிவர்கள் மற்றும் நான் அறியாதவர்களெல்லோரும் கூட தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கும் அந் நிகழ்வினைப் பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டார்கள். முதலில் தீராநதியில் எனக்கு அக்கட்டுரையைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மிகைத்திருந்தது. நான் வசிக்கும் கத்தாரில் தீராநதி கிடைப்பதில்லை. எனது சொற்களில் வழிந்த ஆர்வம் கண்ட நண்பர்கள் மீறான் அன்வர், கார்த்திக் ஆகியோர் உடனே அப்பக்கங்களை கணினியிலேற்றி எனக்கு அனுப்பியிருந்தார்கள். நன்றி நண்பர்களே !

அந் நிகழ்வு பற்றி விரிவாகக் கேட்ட எல்லோருடனும் அதனைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை எனக்குத் தராதவண்ணம் கடந்த மாதம் இணைய இணைப்பு சிக்கலாகி விட்டிருந்தது. அதனால் கேட்ட எல்லோருக்குமாக அந் நிகழ்வை இங்கேயே எழுதிவிடுகிறேன்.

அது 2005 ம் வருடம். கொழும்பில் தங்கியிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எமது வகுப்பு வியாழக்கிழமை மட்டும் பாதிநாள் நடக்கும். வகுப்பு முடிந்ததும் மொறட்டுவை, கடுபெத்த நகர் சந்திக்கு வந்து கொழும்பு நோக்கிவரும் பஸ் எடுத்துப் பயணித்து இடையில் உள்ள வெள்ளவத்தையில் இறங்குவேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தது.

வெள்ளவத்தையில் இறங்க மிக முக்கியமான காரணமொன்று இருந்தது. அங்கு எனது அபிமான பழைய புத்தகக் கடையொன்றுள்ளது. இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளவத்தையில் குண்டு வெடித்ததாகப் பத்திரிகையில் புகைப்படம் பார்த்தபோது அதன் மூலையில் இக் கடையையும் கண்டதாக ஞாபகம். ரொக்ஸி சினிமா தியேட்டருக்கும் ஆர்பிகோ ஷோரூமுக்குமிடையில் இக்கடை அமைந்திருந்ததென நினைக்கிறேன். வெற்றிலை சாப்பிட்டு உதடெல்லாம் சிவந்த ஒரு அண்ணா (வயது 40 இருக்கும் ) உரிமையாளராக அதில் இருந்தார். சற்றுப்பெரிய கடைதான்.ஆங்கிலம், சிங்களம், தமிழென பல கிடைப்பதற்கரிய பழைய புத்தகங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்டு அங்கு நிறைந்திருந்தன.

சிறுவயதிலிருந்தே புத்தகங்களும், அதன் வாசனையும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மதியம் ஒரு மணிக்கு அந்தப் புத்தகக் கடைக்குப் போனால் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிவர எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும். ஒவ்வொரு கிழமையும் இப்படியாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக உருட்டிப் பிரட்டிப் புத்தங்களை அள்ளுவதால் அந்த அண்ணாவுக்கும் நான் நல்ல அறிமுகம் ஆகிவிட்டேன். இடையிடையே என்னைக் கடையில் விட்டுவிட்டு சாப்பிடவும், தேனீர் குடிக்கவும், வெற்றிலை வாங்கவுமென அவர் வெளியே போய்விடுவார்.

நான் வாசித்திராத பழைய மல்லிகை, மூன்றாவது மனிதன், யாத்ரா, ஆனந்தவிகடன் இதழ்கள், அம்மா, சகோதரிக்கு அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்கள், Readers digest, இன்னும் நல்ல பழைய தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் என எப்படியும் கிழமைக்கு 20,25 புத்தகங்கள் வாங்கிவிடுவேன். புது ஆனந்த விகடன் ஐம்பது ரூபாய் என்றால் இரு வாரங்களுக்கு முந்தி வந்த விகடன் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும். அந்த அண்ணா எனக்காகவென்றே எப்படியும் சமீபத்திய இதழ்களை எடுத்துவைத்திருப்பார்.

இப்படியாக ஒருநாள் ஏறத்தாழ 4 மணித்தியாலங்கள் தேடி , பொக்கிஷங்களெனக் கண்ட, சொல்லிவைத்து நீண்ட காலத் தேடலின் பின் கிடைத்த (கல்கியின் படைப்புகள், ஆயிரத்தொரு இரவு கதைகள், பழைய ஆனந்தவிகடன், மங்கையர் மலர்கள், Readers digest, இன்னும் சில ) புத்தகங்களை பெரியதொரு கறுப்புப் பையில் கஷ்டப்பட்டு அடுக்கி நிரப்பி எடுத்து, கடையை விட்டு வெளியே வர மாலை 5 மணிக்கும் மேலாகிவிட்டது. நடந்து தூக்கிவருகையில் நிலத்தில் இழுபடுமளவுக்கு பெரிய பை. அவ்வளவு கனம்.

இப்பொழுது வெள்ளவத்தையிலிருந்து எனது அறையிருந்த மருதானை எனும் இடத்துக்குப் போக வேண்டும். உட்கார்ந்து போகலாமெனக் காத்திருந்து சனம் குறைந்துவந்த 100 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி அமர்ந்து நீண்ட நாள் வேண்டுதலின் பின்னர் கிடைத்த குழந்தையைத் தாய் மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்துவது போல பையையும் அணைத்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன்.

காலி முகத்திடலெனத் தமிழில் அழைக்கப்படும் Galle face எனும் கடற்கரைப் பிரதேசம் தாண்டும்போது கொழும்பு நோக்கி வரும் எல்லா பஸ்களையும் படையினர் சோதனையிடுவது தெரிந்தது. ஏதோ ஓர் திடீர் சோதனை. நீண்ட துவக்குகளை நீட்டிவந்தவர்கள் நான் வந்த பஸ்ஸையும் நிறுத்தி எல்லோரிடமும் அடையாள அட்டையைக் கேட்டுவாங்கிச் சோதனையிட்டார்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டை இருந்தும் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனப் பலரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தார்கள். நிறுத்தப்பட்டவர்கள் ஒருவித உதறலுடனும் பதற்றத்துடனும் அச்சத்துடனிருப்பதைக் கண்டேன். எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்.

பரிசோதித்துக் கொண்டிருந்தவர்கள் எனதும் அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் என்னை நிறுத்தி எனது கையிலிருந்த, பையின் வாய்ப் பகுதியால் தன்னொரு மூலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தார்கள். தமிழ் மொழியிலான புத்தகங்கள் அவர்கள் தோண்டத் தோண்ட அப் பையிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அவர்களுக்குச் சந்தேகம் முளைத்திற்று.

என்னைப் பார்த்தார்கள். ஏதோ ஒரு விசித்திரத்தைத் தேடுவது போல என் முகத்தை உற்றுப்பார்த்தார்கள். புத்தகப்பையைப் பார்த்தார்கள்..அடையாள அட்டையை மீண்டும் மீண்டும் வாங்கிப் பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். இப்படியே நிமிடங்கள் கரைந்தன.

அடுத்தது விசாரணை. எனக்குச் சிங்கள மொழி தெரியும்.

எங்கிருந்து வருகிறாய்? கொழும்பில் என்ன செய்கிறாய்? உனக்கெதற்கு இவ்வளவு புத்தகங்கள் ? அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் ? எங்கே வாங்கினாய்? யாருடன் நீ தங்கியிருக்கிறாய்? யாருக்காக இந்தப் புத்தகங்கள் ? இந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன? இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறாய் ?

ஒரு குறிப்பிட்ட மொழியினைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வாசிப்பதற்கெனக் காவிச் செல்லப்பட்ட புத்தகங்கள் பொறுமையைச் சோதிக்கும் படியாக இப்படிப் பல கேள்விகளை அன்று கண்டன. பல்கலைக்கழ்கத்திலிருந்து வருவதாகவும், இவற்றையெல்லாம் வாசிக்க மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், பல்கலைக்கழக அடையாள அட்டை காட்டிப் பலமுறை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவர்களது சந்தேகம் மட்டும் தீரவில்லை என்பது அவர்களது முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

என்னை நிறுத்திவைப்பதா? அனுப்பிவிடுவதா? புத்தகங்களையும் என்னையும் என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் நன்றாக இருட்டிவிட்டது. அழகான சமுத்திரவெளி சூரியனைத் தின்றுவிட்டிருந்தது.

வீணாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம், வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் எனப் பல இருந்த நாட்களவை. எதுவும் செய்ய முடியாமல் எனது புத்தகங்களைத் திரும்பத் தரவும் முடியாமல் அந்தப் படைவீரர்கள் தானாக வலையில் சிக்கிய அபூர்வமான விலங்கொன்றை மீண்டும் வனாந்தரத்தில் விட்டுவிடுவது எப்படியென்பதைப் போலத் தவித்தார்கள். தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னுமொரு உயரதிகாரிக்குத் தகவலனுப்பி அவரை வரவழைத்தார்கள். அதே கேள்விகளை அவரும் கேட்டார். ஏதேனும் ஆயுதங்களை அல்லது புத்தகங்களை நான் ஒளித்துவைத்திருக்கிறேனா என என் உடல் முழுதும் தடவிப்பார்த்தார். எனது கைபேசியை வாங்கி அதிலுள்ளவற்றைச் சோதனையிட்டார்.

இப்பொழுது சோதனையிடப்பட்டு சந்தேகங்களில் சிக்காத பயணிகள் பஸ்ஸினுள் அமர்ந்து எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வெக்கையான காலநிலை கிளப்பிய வியர்வையாலோ, பசியாலோ உள்ளிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்த இருளோடு அலைந்தன. பஸ் சாரதியும், கண்டக்டரும் பஸ் வாயிலருகில் நின்றவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

அதிகாரிகளது அடுத்த கேள்விகள் கண்டக்டரை அழைத்து அவரை நோக்கி ஏவப்பட்டன. நான் எங்கிருந்து ஏறினேன்? என்னை அவருக்கு முன்பே தெரியுமா? போன்ற இன்னும் பல கேள்விகள். அவன் சொன்ன பதில்களும் எனது பதில்களும் ஒன்றுக்கொன்று சரியாகிப் போனதில் சிறு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஐ.டி. கார்ட் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்கள்.

"மகே பொத் டிக - எனது புத்தகங்கள்?" எனக் கேட்டபடி நான் அங்கேயே நின்றிருந்தேன். எனது புத்தகப்பை அவர்களது காவலரணில் ஒரு அமைதியான செல்லப்பிராணியைப் போல அல்லது இரை விழுங்கிய மலைப்பாம்பினைப் போல மூலையில் கிடந்தது.

"அவற்றை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்."

 "ஐயோ அவங்க சொல்றப்பவே வாங்க..புத்தகங்கள பிறகு பார்த்துக்கொள்ளலாம்.."-  கண்டக்டர் எனது கைப்பிடித்து இழுத்தபடி கெஞ்சிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இறுதியில் பொக்கிஷங்களென அதிக நாட்கள் பட்டியலிட்டுக் காத்திருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய எல்லாப் புத்தகங்களும் அக் கடற்கரைத் தடுப்புச்சாவடியோடு என்னிடமிருந்து விடைபெற்றன. இப்படியாக அந்த அதிகாரிகளுக்கு பல விதப் பதற்றங்களை ஏற்படுத்திய ஆனந்த விகடன்களும், ஆயிரத்தொரு இரவுகளும், அக் கறுப்புப்பையை நிரப்பிய மற்ற புத்தகங்களும்  இன்று வரை எனக்கு வந்துசேரவில்லை. கடலின் ஆழத்துக்குள் அழிந்தோ, எரிந்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பற்றியெரிந்தோ அல்லது தாண்டி வந்திருக்கும் ஆயிரத்தொரு இரவுகளுக்கும் மேற்பட்ட இரவுகளில் தினமொரு கதையெனப் பேசியபடி அதிகாரக் கட்டிடங்களின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கின்றனவோ...

தெரியவில்லை !

42 comments:

மீறான் அன்வர் said...

இந்த கதய அன்னிக்கே கேக்கலாம்னு இருந்தாலும் கேட்டு உனக்கு சங்கடத்த கொடுக்க வேணாம்னு வுட்டுட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி ரிஷான் மனசுல மூலையில உதிர்த்திட்டிருந்த கேள்விக்கு பதில் கெடச்சிடுச்சி :)

இன்னும் நெரய்ய படிச்சி நெரய்ய எழுது மக்கா வாழ்த்துக்கள் !

PPattian : புபட்டியன் said...

அந்த கடை ஒரு சைவ உணவகத்துக்கு பக்கத்தில் இருப்பதாக ஞாபகம். நானும் அவ்வப்போது அங்கு நுழைந்து மேய்ந்திருக்கிறேன்..

உங்கள் புத்தகங்கள் போன கதை சோகம்.. ஆனாலும், உங்களை அந்த அளவிலாவது விட்டர்களே..

//எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்//

என்ன ஒரு பொருள் நிறைந்த வரி... கண்டிப்பாக.. கண்டிப்பாக.

இப்னு ஹம்துன் said...

اسسلام عليكم ரிஷான்,

மீறான் அன்வர் சொன்ன அதே காரணத்தால் தான் நானும் கிளறிக் கேட்கவில்லை, இப்போது தெரிந்துகொண்டேன்.

மதுமிதா said...

சிர‌ம‌மான‌ த‌ருண‌ங்களை பொறுமையுடன் க‌ட‌க்க‌வேண்டி இருக்கிற‌து.

உண்மையான உணர்வுகளின் பகிர்தல்.

தொடர்ந்து எழுதுங்கள் ரிஷான். வாழ்த்துகள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

புத்தகங்களுடனான உங்கள் காதல் மகிழ வைக்கும் அதே நேரம் அதனால் பட்ட துன்பத்தை அறியும் போது இந்த நாடு என்றாவது திருந்துமா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று இதைத்தான் கூறுவதோ?
உங்களுக்கே இந்தக் கதியானால்
எம் நிலை!!
ஆனாலும் உங்கள் ஆர்வம் கண்டு
பிரமிப்பே!!

ரௌத்ரன் said...

வாழ்த்துக்கள் ரிஷான்....உங்கள் அனுபவம் கதிகலங்க அடிக்கிறது...

ஜெயக்குமார் said...

இலங்கை என்ற மயானதேசத்தில் இப்போது இருக்கும் நிலைமைக்கு சற்று முன்னர் வெளியே வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் இலங்கைத் தேசம் மனிதத் தன்மையை அடைந்துவிட்டால் அதுவே பெரிய விஷயம். தமிழ் புத்தகங்களைப் படிப்பது எவ்வளவு பெரிய தவறு இன்று இலங்கையில்..

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா எல்லோரும் இனைந்து தமிழினம் என்ற ஒன்றை அடியோடு ஒழித்து விட்டார்கள் இன்றைய தேதியில்...

அகமது சுபைர் said...

ரிஷான்,

மனத்தின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் சோகத்தை வெளிக்கொண்டுவரும் காரணியாக எழுத்து உனக்கு வாய்த்திருக்கிறது.

வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

தீராநதி சிறப்புக் கட்டுரையில் இடம் பெற்றது மகிழ்வுக்குரியதான அதே சமயத்தில் மனம் வலிக்கும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிறைய வாசித்து நிறைய படைப்புகளைத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்.இனியவன் said...

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ரிஷான்.
திரு.அ.முத்துலிங்கம் எனக்கும் முகவும் பிடித்த எழுத்தாளர்.

நீங்கள் குறிப்பிட்ட புத்தகக்கடை இப்போதும் இருக்கிறது.

கார்த்திக் said...

என்னத்த சொல்லுரது இப்படியெல்லாமா பயப்படுரது.இந்தநெலம சீக்கிரம் மாறவேணும் மாறும்.

குசும்பன் said...

அருமை ரிஷான் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்!

சென்ஷி said...

:((

சொல்லுவதற்கான வார்த்தைகளை மாத்திரம் கொடுத்துக்கொண்டிருத்தலில் சோகங்கள் தீர்வதில்லை. எனினும் உங்களின் பாரங்கள் என்றேனும் குறையும் என்ற நம்பிக்கை கொள்வோம்.

//எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்//

வலிக்கின்றது. சத்தியமான உண்மை

கே.ரவிஷங்கர் said...

சோகமான தருணங்கள்.புத்தகங்களை இழப்பது நண்பர்களை இழப்பது போல்.

அமுதா said...

/*//எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்//
உண்மை.
வலிக்கும் அனுபவம்.

கவிநயா said...

அதிர்ச்சி தரும் அனுபவத்தை உங்களுக்கே உரித்தான பாணியில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் கட்டுரையில் இடம் பெற்றதற்கும் வாழ்த்துகள் ரிஷு.

அறிவன்#11802717200764379909 said...

பதட்டம் நிறைந்த நிகழ்வை ஒரு பார்வையாளனின் லாகவத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்..

பண்பட்ட விவரணை...

வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

ரிஷான்

உங்களின் நனவிடையை முழுதும் வாசித்தேன், கனத்தது.

முத்துலிங்கம் அவர்கள் உங்களைச் சிலாகித்தது பெருமையாக இருக்கு.

உமாஷக்தி said...

ரிஷு அருமையான பதிவு. மனதை கனக்கச் செய்துவிட்டது. விரும்பி வாங்கிய புத்தகங்களை இழப்பது துயர், ஆனால் உன்னை அனுப்பிவிட்டது மகிழ்ச்சியே. உன் புதுப் புத்த்கங்கள் யாவும் பத்திரமாய் என்னிடம் உள்ளது இந்த வாரம் நிச்சயம் அனுப்பிவைக்கிறேன். என் வேலைகளுக்கு இடையே நான் இதை செய்யாமல் இருப்பது மிகவும் குற்றவுண்ர்வுக்கு உள்ளாக்குகிறது. உன் அன்பும் பொறுமையும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையவைக்கிறது. உன்னை இதுவரை நான் சந்தித்ததில்லை, ஆனால் வார்த்தைகள் மூலம் நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த சகோதர பாசம் என்றும் நீடித்திருக்க வேண்டுகிறேன்.

உமாஷக்தி said...

அமு எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர். ப்ரியமான நண்பர். அவரைப் பற்றி சிறிய கட்டுரையில் சொல்லிவிட முடியாது..தனிப் புத்தகம் வேண்டும் ரிஷூ..நாம் இருவரும் அதைச் செய்யலாம். சரியா?

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மீறான் அன்வர்,

//இந்த கதய அன்னிக்கே கேக்கலாம்னு இருந்தாலும் கேட்டு உனக்கு சங்கடத்த கொடுக்க வேணாம்னு வுட்டுட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி ரிஷான் மனசுல மூலையில உதிர்த்திட்டிருந்த கேள்விக்கு பதில் கெடச்சிடுச்சி :)//

அன்றே கேட்டிருக்கலாம். நண்பர்களின் கேள்விகள் சங்கடத்தைத் தராது நண்பா :)

//இன்னும் நெரய்ய படிச்சி நெரய்ய எழுது மக்கா வாழ்த்துக்கள் !//

இன்ஷா அல்லாஹ்..!

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் புபட்டியன்,

//அந்த கடை ஒரு சைவ உணவகத்துக்கு பக்கத்தில் இருப்பதாக ஞாபகம். நானும் அவ்வப்போது அங்கு நுழைந்து மேய்ந்திருக்கிறேன்..

உங்கள் புத்தகங்கள் போன கதை சோகம்.. ஆனாலும், உங்களை அந்த அளவிலாவது விட்டர்களே..//

மிகவும் மகிழ்வுக்குரிய தகவலை எடுத்து வந்திருக்கிறீர்கள் நண்பரே. அப் புத்தகசாலை பல பொக்கிஷங்களைக் கொண்டிருக்கின்றன. நீங்களும் அங்கு போய்வருவதை அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

நீங்கள் சொல்வது சரிதான்..எனது அடையாள அட்டையும் பிறப்பிடமும் அவர்களது சந்தேகத்தின் அளவைக்குறைத்தன என்று சொல்லலாம். இதுவே தமிழ் இனத்தைச் சார்ந்த ஒருவர் எனில் அவரது நிலை கவலைக்கிடம் தான் :(

//எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்//

என்ன ஒரு பொருள் நிறைந்த வரி... கண்டிப்பாக.. கண்டிப்பாக.//

வருகைக்கும் கருத்துக்கும் நல்ல தகவலுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் இப்னு ஹம்துன்,

//ரிஷான்,

மீறான் அன்வர் சொன்ன அதே காரணத்தால் தான் நானும் கிளறிக் கேட்கவில்லை, இப்போது தெரிந்துகொண்டேன்.//

:)
இது போல இன்னும் சொல்லப்படாத சங்கதிகள் பல உள்ளன. பிறகு பகிர்ந்துகொள்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மதுமிதா,

//சிர‌ம‌மான‌ த‌ருண‌ங்களை பொறுமையுடன் க‌ட‌க்க‌வேண்டி இருக்கிற‌து.

உண்மையான உணர்வுகளின் பகிர்தல்.

தொடர்ந்து எழுதுங்கள் ரிஷான். வாழ்த்துகள்.//

பல வேலைகளுக்கு மத்தியிலும் இப்பதிவுக்கான உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் டொக்டர் எம்.கே.முருகானந்தம்,

//புத்தகங்களுடனான உங்கள் காதல் மகிழ வைக்கும் அதே நேரம் அதனால் பட்ட துன்பத்தை அறியும் போது இந்த நாடு என்றாவது திருந்துமா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.//

உங்கள் கேள்வி மிக நியாயமானதும் யதார்த்தமானதும்தான். பலவிதங்களில் யோசிக்கவேண்டியிருக்கிறது. எனினும் யாரிடமும் தக்க பதிலில்லை என்பதே நிதர்சனம் . :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர் !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் யோகன்,

//அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று இதைத்தான் கூறுவதோ?
உங்களுக்கே இந்தக் கதியானால்
எம் நிலை!!
ஆனாலும் உங்கள் ஆர்வம் கண்டு
பிரமிப்பே!!//

மிக நீண்ட நாளைக்குப் பின்னர் உங்கள் வருகை மிகவும் மகிழ்வைத் தருகிறது. எனது முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தவர் நீங்கள். உங்கள் வருகையையும், உங்கள் பதிவுகளையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ரௌத்ரன்,

//வாழ்த்துக்கள் ரிஷான்....உங்கள் அனுபவம் கதிகலங்க அடிக்கிறது...//

இது எனக்கு மட்டும் நேர்ந்ததில்லை. இன்னும் எழுதப்படாத பல உறங்கிக்கிடக்கின்றன :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜெயக்குமார்,

//இலங்கை என்ற மயானதேசத்தில் இப்போது இருக்கும் நிலைமைக்கு சற்று முன்னர் வெளியே வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் இலங்கைத் தேசம் மனிதத் தன்மையை அடைந்துவிட்டால் அதுவே பெரிய விஷயம். தமிழ் புத்தகங்களைப் படிப்பது எவ்வளவு பெரிய தவறு இன்று இலங்கையில்..

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா எல்லோரும் இனைந்து தமிழினம் என்ற ஒன்றை அடியோடு ஒழித்து விட்டார்கள் இன்றைய தேதியில்...//

யாழ் நூலகம் பல புதையல்களைத் தன்னகத்தே கொண்டு ஆசியாவிலேயே தொன்மையான, மிகச்சிறந்த நூலகமாக விளங்கியது என அறிந்திருக்கின்றேன். சில மன வக்கிரங்கள் ஒன்றாகச் சேர்ந்து அதனை முழுமையாக எரித்துவிட்டது. உங்கள் வரிகள் அச் சம்பவத்தை, அநீதத்தை மீண்டும் நினைவுறுத்தி விட்டன. நீங்கள் சொல்வது மிகச் சரி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அஹமத் சுபைர்,

//ரிஷான்,

மனத்தின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் சோகத்தை வெளிக்கொண்டுவரும் காரணியாக எழுத்து உனக்கு வாய்த்திருக்கிறது.

வாழ்த்துகள்.//

மனதின் பாரங்களைத் தாங்கிச் சுமக்கவென எழுத்துமில்லையெனில் ஏதும் ஆகியிருக்குமெனக்கு :(

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//தீராநதி சிறப்புக் கட்டுரையில் இடம் பெற்றது மகிழ்வுக்குரியதான அதே சமயத்தில் மனம் வலிக்கும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிறைய வாசித்து நிறைய படைப்புகளைத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நீங்கள் வலைப்பதிவுக்கு வந்த நாளிலிருந்து எனது எல்லாப் பதிவுகளுக்கும் அன்பான வாழ்த்துக்களோடு வருகிறீர்கள். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
தொடர்ந்தும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் என்.இனியவன்,

//இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ரிஷான்.
திரு.அ.முத்துலிங்கம் எனக்கும் முகவும் பிடித்த எழுத்தாளர்.

நீங்கள் குறிப்பிட்ட புத்தகக்கடை இப்போதும் இருக்கிறது.//

நீங்களும் இலங்கையைச் சேர்ந்தவரா? அறியக்கிடைத்ததிலும் உங்கள் முதல் வருகையிலும் மகிழ்ச்சி. திரு.அ.முத்துலிங்கம் எனதும் விருப்புக்குரிய எழுத்தாளர். என்னாலும் எழுத முடியுமென்ற ஊக்கம் தருபவர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கார்த்திக்,

//என்னத்த சொல்லுரது இப்படியெல்லாமா பயப்படுரது.இந்தநெலம சீக்கிரம் மாறவேணும் மாறும்//

காவல்(?)படையினருக்கு தமிழ் பேசும் மக்களை, திலகமிட்ட மாந்தரைக் கண்டால் இதை விடவும் அச்சமுண்டு. சக மனிதராகப் பார்க்காமல் சந்தேகக் கண்களால் பார்க்க அந்த அச்சமும் ஒரு காரணம் அவர்களுக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் குசும்பன்,

//அருமை ரிஷான் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்!//

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சென்ஷி,

//:((

சொல்லுவதற்கான வார்த்தைகளை மாத்திரம் கொடுத்துக்கொண்டிருத்தலில் சோகங்கள் தீர்வதில்லை. எனினும் உங்களின் பாரங்கள் என்றேனும் குறையும் என்ற நம்பிக்கை கொள்வோம்.//

உங்கள் ஆறுதலான வார்த்தை மனதுக்கு மிகவும் இதமளிக்கிறது.

//எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்//

வலிக்கின்றது. சத்தியமான உண்மை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கே.ரவிஷங்கர்,

//சோகமான தருணங்கள்.புத்தகங்களை இழப்பது நண்பர்களை இழப்பது போல்.//

மிகச் சரி..உற்ற நண்பர்களை இழப்பது போலப் பெருந்துயர் தரக் கூடியது நேசிக்கும் புத்தகங்களை இழப்பதுவும். உயிரற்றவைதான் எனினும் பல உயிர்கள் பற்றிய கதைகளை உயிர்களுடன் பேசுவன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அமுதா,

///*//எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்//
உண்மை.
வலிக்கும் அனுபவம்.//

ஆமாம். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கவிநயா,

//அதிர்ச்சி தரும் அனுபவத்தை உங்களுக்கே உரித்தான பாணியில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் கட்டுரையில் இடம் பெற்றதற்கும் வாழ்த்துகள் ரிஷு.//

இந்தியப்பயணம் எப்படியிருக்கிறது? உங்கள் கருத்தினைப் பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
இந்தியச் சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அறிவன்,

//பதட்டம் நிறைந்த நிகழ்வை ஒரு பார்வையாளனின் லாகவத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்..

பண்பட்ட விவரணை...

வாழ்த்துக்கள்.//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கானா பிரபா,

//ரிஷான்

உங்களின் நனவிடையை முழுதும் வாசித்தேன், கனத்தது.

முத்துலிங்கம் அவர்கள் உங்களைச் சிலாகித்தது பெருமையாக இருக்கு.//

நலம் தானே? நீண்ட நாட்கள் உங்களுடன் கதைக்க முடியவில்லை. விரைவில் கதைக்கிறேன். 'அம்ருதா'வில் உங்கள் கட்டுரை வெளியாகியிருப்பதை அறிந்தேன். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் உமாஷக்தி,

//ரிஷு அருமையான பதிவு. மனதை கனக்கச் செய்துவிட்டது. விரும்பி வாங்கிய புத்தகங்களை இழப்பது துயர், ஆனால் உன்னை அனுப்பிவிட்டது மகிழ்ச்சியே. உன் புதுப் புத்த்கங்கள் யாவும் பத்திரமாய் என்னிடம் உள்ளது இந்த வாரம் நிச்சயம் அனுப்பிவைக்கிறேன். என் வேலைகளுக்கு இடையே நான் இதை செய்யாமல் இருப்பது மிகவும் குற்றவுண்ர்வுக்கு உள்ளாக்குகிறது. உன் அன்பும் பொறுமையும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையவைக்கிறது. உன்னை இதுவரை நான் சந்தித்ததில்லை, ஆனால் வார்த்தைகள் மூலம் நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த சகோதர பாசம் என்றும் நீடித்திருக்க வேண்டுகிறேன்.//

எனது பிரார்த்தனையும் இதுவேதான் தோழி. எனது புத்தகங்களுக்கு நேர்ந்த கதி இதுதான். :)
நீங்கள் அனுப்புபவற்றைப் பொக்கிஷமாகப் பேணிக் காக்கவேண்டுமென உறுதிமொழி எடுத்தாயிற்று. :)

//அமு எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர். ப்ரியமான நண்பர். அவரைப் பற்றி சிறிய கட்டுரையில் சொல்லிவிட முடியாது..தனிப் புத்தகம் வேண்டும் ரிஷூ..நாம் இருவரும் அதைச் செய்யலாம். சரியா?//

நிச்சயமாக. அவரது எழுத்துக்கள் குறித்து சில வரிகளில் எழுதிவிட முடியாதுதான். நாம் நிச்சயம் செய்யலாம் தோழி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

ஜெ.பி ஜோசபின் பாபா said...

Dear Rishaf
உங்கள் ப்திவுகளின் நான் மிகவும் ஆழ்ந்து போன பதிவு. ஒரு வித அதிர்ச்சி என்னை பற்றி கொண்டது. பிராபகரன் போன்ற தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கபடுகின்றனர்.கொடுமையிலும் கொடுமை!என்ன சொல்வதென்று தெரியவில்லை.