Saturday, January 9, 2010

இந்தப் பதிவர் இப்போது இல்லை

என் இனிய ரிஷான்..
காற்றில் படபடக்கும்..
வெற்று காகிதங்களின்..
படபடப்பின்னும்
காதில் கேட்கலையோ...?

கைவிரல்
ரேகைகளை..
காதலித்து...
தினம்..தினம்..
முத்த தொய்வில்
மனம் குளிரும்...
உன் எழுதுகோல்
ஆங்கோர் ஓரமாய்
உன் தொடுதலுக்கு ஏங்குவது
தெரியலையா..?

மெல்லிய நூல் நுனி பற்றி..
நீ உயரப்பறக்கவிடும்..
வால் படபடக்கும்
பட்டத்தை
அண்ணாந்து அதிசயிக்க..
குழும வீதிகளில்
குழுமியிருக்கும்
அனேகரில்
அடியேனும் ஒருவன்...!

எம் பிரார்த்தனைகளில்
வலுக்கூடும்
சிறகுகள் சிலுப்பி..
சீக்கிரமாய்..எழுந்து வா..
என் தமிழ் தோழா...
நாம் கட்டவேண்டியிருக்கிறது
ஒரு தமிழ்கூடு..!


    இக் கவிதையை எழுதிய இவர் ஒரு வலைப்பதிவராகத்தான் முதலில் எனக்கு அறிமுகமானார். வாழ்க்கை, ஒரு பயணத்தை ஒத்தது. அதுவரையில் ஒருவரோடு ஒருவர் உரையாடி, அளவளாவி, சிரித்து மகிழ்ந்து, அழுது, கண்ணீரைப் பரிமாறிக் கலந்திருப்பவர்கள் அவரவர் இறங்குமிடம் வருகையில்,  இறங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறங்கிச் செல்பவரை நோக்கி நாம் பிரிதலின் துயரத்தோடு கையசைத்து வழியனுப்ப வேண்டியிருக்கிறது. எமக்கான இறங்குமிடம் எதுவென்றே அறியாமல் அது வரும்வரையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    அதுபோல  பிரவாகமெனப் பெருக்கெடுத்த ஒரு நதி, ஓர் நாளில் மிகவும் அந்தகாரமான சூழலொன்றை என் இருப்புக்குள் தள்ளிவிட்டுக் காணாமல் போய்விட்டிருக்கிறது. உபவாச நாட்களின் இறுதிப்பகுதியில், எல்லாச் சுய புலன்களையும் அடக்கியாளும் வல்லமையை ஓரளவு பெற்றிருந்தும், அவரை இழந்த செய்தியறிந்த பிறகு, தானாக வழியத் தொடங்கிய கண்ணீரை கட்டுப்படுத்தத் தெரிந்திருக்கவில்லை.

    மிகுந்த தன்னம்பிக்கையளிக்கும் உரையாடல்கள் அவருடையனவாக இருந்தன. ஒவ்வொரு உரையாடலிலும் உரிமையோடு அறிவுறுத்தும் அன்புக்குரியவராக அவர் இருந்தார். இருவருமே நேரில் பார்த்துக்கொண்டதில்லை. இணையம் மூலமான பரிச்சயம் மாத்திரமே எனினும், நேரில் கடந்துசெல்பவர்களை விடவும் பாசத்துக்குரியவராக அவர் இருந்திருக்கிறார். எழுத்து, திரைப்பட இயக்கம், நூல் வெளியீடு ஆகியன நாற்பத்து மூன்று வயதுக்குள் அவருக்கு வசப்பட்டிருந்தன. அவர் வெங்கட் தாயுமானவன்.

    இறப்பு, மீளச் சுருட்ட முடியாத ஒரு மாயப் போர்வையை ஒத்தது. அது சம்பந்தப்பட்டவரை தன் பரப்பால் எளிதாக மூடிக் கொள்கிறது. அது போர்த்திய யாரையும் மீளவும் எழுப்பிவிடவும் முடியாது. உள்ளே என்ன இருக்கிறதென்று பார்த்துவரவும் முடியாது.

    'இலங்கைக்கு எப்பொழுது செல்வாய்? நான் உன்னைப் பார்க்க வருவேன் ரிஷான்'
   
    'இலங்கை முழுதும் உன்னுடன் சுற்றிப் பார்க்க வேண்டும். விரைவில் இது நடக்கும்'

    எமது ஒவ்வொரு உரையாடலின் போதும் தவறாமல் அவர் சொல்லும் வார்த்தைகள் இவை. நான் இலங்கை வந்துவிட்டேன். வீடேகி விட்டேன். என்னுடன் இலங்கை முழுதும் சுற்றிப்பார்க்கும் ஆவல் கொண்ட எனது அன்பு நண்பரைத்தான் காணவில்லை.

    இணையம் மூலமாக தின நலம் விசாரிப்புக்களோடு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களில், கைத் தொலைபேசிக் குறுந்தகவல்களும் அவரது அன்பைச் சொல்லின. இதை எழுதும் இக் கணத்தில் எனது வார்த்தைகளை மதித்து, என் சார்பாக அவரை நேரில் சென்று சந்தித்து, பல உதவிகளைச் செய்த பதிவுலக நண்பர்கள் அப்துல்லாஹ்வையும், ஷேக் தாவூத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

    வாழ்வு குறித்தான பல நம்பிக்கையூட்டும் பாடல்கள் அவர் வசமிருந்தன. எல்லாப் பாடல்களினதும் இசைப்பிண்ணனியாக அவரது தன்னம்பிக்கை இருந்தது. ஒரு பெரும் நீர்வீழ்ச்சி போல சுற்றிவர இருக்கும் எல்லாச் சோலைகளுக்கும் ஈரச் சாறல் தெளித்து, செழிப்பாக முளைக்கச் செய்யும்படி வீழ்ந்து, நதியாக ஓடி, பெரும்பரப்பொன்றுக்குள் கலந்துவிட்டிருக்கிறது ஒரு நல்ல ஆன்மா.

    இன்னும் எத்தனையோ சாதனைகளை எட்டிப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலையும் நம்பிக்கையையும் அவர் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கரையானைப் போல அழித்துச் சிதைத்தது புற்று. திரும்பும் பரப்பெங்கும் எட்டி வைக்கும் எனது ஒவ்வொரு நடையிலும் அவரும் அருகிலிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுபோலவே எழுதித் தீராத சொற்களைக் கொண்டு அவரைப் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. எழுதத்தான் தெரியவில்லை எனக்கு.

தூறல் மழைக்காலம்


குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்

மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
Post a Comment