சம்பவம் ஒன்று
காலம் - நவம்பர், 2009.
இடம் - இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய.
கடற்கரையோரமாக அமைந்திருக்கும் புகையிரத நிலையம். அதனருகே அமர்ந்திருந்த பாலவர்ணன் சிவகுமார் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், இரயிலுக்கு சிறு கற்களால் எறிகிறார். காவல்துறை வாகனத்திலிருந்து இதனைக் கண்ட நான்கு காவல்துறையினர்கள் உடனே வெளியே குதிக்கின்றனர். அந்த இளைஞனை விரட்டியடித்து, கடலுக்குள் தள்ளி, தொடர்ந்தும் விரட்டிச் சென்று, அந்த இளைஞன் கை கூப்பி மன்றாடிக் கேட்டும் அடித்து, நீருக்குள் மூழ்கச் செய்கின்றனர். மூழ்கியவர், சடலமாக மிதக்கிறார்.
சம்பவம் இரண்டு
காலம் - ஜனவரி, 2010
இடம் - இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், ஆம்பூர்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்துத் தப்பியோடுகிறது. வீதியில் விழுந்து, இரத்தச் சகதியில் துடிதுடிக்கும் அவரை வேடிக்கை பார்க்கின்றனர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் மற்றும் சக காவல்துறையும் சில பொதுமக்களும். தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கையேந்துபவர் உயிர்ப் போராட்டத்தில் துடிக்கப் பார்த்திருக்கின்றனர் எல்லோரும். இருபது நிமிடங்கள் கழித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக வெளியிலிறக்கப்படுகிறார்.
இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு தேசங்களில் நிகழ்ந்தவை எனினும், இரண்டுக்கும் பொதுவானதாக பல விடயங்கள் இருக்கின்றன. இரண்டு மரணங்களையும் நேரில் கண்டவர்கள், அவர்களைக் காப்பாற்றத் துணியவே இல்லை. ஒரு திரைக்காட்சியை வேடிக்கை பார்ப்பதைப் போல, வெறுமனே பார்த்திருக்கின்றனரே ஒழிய எவரும் அவர்களைக் காப்பாற்றவென முன்வரவில்லை. முதல் சம்பவத்தில் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரைப் பகிரங்கமாகக் கொலை செய்கிறது. அடுத்ததில் மரணப் போராட்டத்தில் ஒருவர் தவிக்க சுகாதாரத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் ஆம்புலன்ஸ்க்கு அறிவித்ததோடு தன் கடமை சரி என்பதுபோல பார்த்திருக்கின்றனர். காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், யாருமறியாத சாதாரண பொதுமகனின் கதி?
தேர்தல் சமயம், ஒவ்வொரு பொதுமகனிடமும் வாக்குக் கேட்கச் செல்கையில் மட்டும் நான்காக மடியும் அமைச்சர்கள், வென்ற பிறகு அதே பொதுமகனின் துயரமான வேளையில் குனியக் கூட மாட்டேனென்பது, காயப்பட்டவருக்கு தண்ணீரை எட்ட நின்று ஊற்றியதைக் காணும்போது தெளிவாகிறது. ஏதேனும் செய்யப் போய், காவல்துறை விசாரணைகளில் சிக்கிக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம் பொதுமக்களை, உதவத் தடுப்பது இயற்கைதான். ஆனால்,அமைச்சர்களுக்குமா அந்த அச்சம் தோன்றும்? அதுவும் சாட்சிகளாக அவ்வளவு பேர் பார்த்திருக்க?
இக் கால கட்டத்தில், கைத்தொலைபேசி கேமராக்கள் வைத்திருப்பவர்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள். பெருநகரங்களில் தெருவில் செல்லும் நூறு பேரில் எண்பது அல்லது அதற்கும் அதிகமான நபர்களிடம் இக் கேமராக்கள் இருக்கின்றன. ஏதேனுமொரு அசம்பாவிதமான நிகழ்வுகளின் போது உடனடியாகக் காட்சிப்படுத்தவும், செய்தியாக்கவும் அவற்றால் முடிகிறது.
இதே ஆண்டு, இதே ஜனவரியில், இந்தியா, அஸாம் மாநிலத்தில் ஒரு கடையில் ஆடைகள் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இராணுவத்தினரை அவள், செங்கற்களால் விரட்டி விரட்டி அடிக்கிறாள். அடி வாங்கிய அவர்கள் தங்கள் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடுகிறார்கள். வழமை போலவே பொதுமக்கள் வேடிக்கை பார்க்க,இதை ஒரு கைத் தொலைபேசி கேமரா பதிவு செய்கிறது. தொலைக்காட்சி செய்திச் சேவைக்குக் கொடுக்கப்படுகிறது. உலகம் முழுக்க அச் செயல் காட்சிப்படுத்தப்படுகிறது. தவறு செய்த அந்த இராணுவத்தினருக்கான தண்டனையும், அப் பெண்ணுக்கான பாதுகாப்பும் இதனால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. இதைப் போலத்தான் சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலின் போதும், அதன் காட்சிப் பதிவுகள் பெரும் சாட்சிகளாக அமைந்தன.
கேமராக்களால் கோரமான இக் காட்சிகள் பதிவு பண்ணப்பட்டிருப்பதால், பார்ப்பவர்கள் அனைவருக்கும் அதன் வலியை உணரமுடிகிறது. பதிவு பண்ணப்படாதவை இன்னும் எத்தனையிருக்கும்? மனிதநேயம் என்பது உலகிலின்று அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. சாலை விபத்துக்களில், இன்னும் பல மரணப்போராட்டங்களில் துடித்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றத் துணியாமல் வேடிக்கை பார்க்கும் எத்தனையோ செய்திகளை, கதைகளைக் கேட்டு பரிதாபத்தோடு அத் தருணத்தைக் கடந்துபோகிறவர்களாக நாம் இருக்கிறோம்.
காவல்துறை விசாரணைகள், வழக்குகள், அலைச்சல்கள் பற்றி அக் கணத்தில் எதுவும் சுயநலமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளின் போது முன்னின்று உதவக் கூடியவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்களை விடவும், பாமரர்களை உதவுவதில் முன்னிற்பவர்களாகவும், இளகிய மனமுடையவர்களாகவும் காண முடிகிறது.
பொதுவாக எனது சமூகத்தில் நாய்களை யாரும் கையால் தொட மாட்டார்கள். எனது தெருவிலிருந்த ஒரு மூதாட்டியை எனக்குத் தெரியும். ஒரு விடிகாலையில் தெருவோரமாக விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியை அவர் தூக்கிவந்து மருந்திட்டார். போய்ப் பார்த்துக் கேட்டேன்.
'நாயைக் கையால புடிச்சிருக்கீங்களே ஆச்சி?'
'கையைக் கழுவிக்கலாம். வாழ வேண்டிய உசுரு..அதோட உசுரு போனாத் திரும்பக் கொடுக்க முடியுமா புள்ள?'
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்மை
# திண்ணை
# புகலி
20 comments:
கையை கழுவிக்கலாம்! என்னே ஒரு ஆழமான வார்த்தை மனிதம் உள்ளவர்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் . தேவையான பதிவு தொடர்க ....
கையை கழுவிக்கலாம்! என்னே ஒரு ஆழமான வார்த்தை மனிதம் உள்ளவர்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் . தேவையான பதிவு தொடர்க ....
மிக அவசியமான பதிவு.
அத்துடன் சுவாரஸ்மாக நிகழ்வுகளை இணைத்துள்ளீர்கள்.
வணக்கம் தோழர்,
தாங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை,
நன்றி
பகலவன்
பூக்களைப் பறிக்காதீர்கள்;
மரங்களை வெட்டாதீர்கள்;
புற்கள் மீது நடக்காதீர்கள் ;
விலங்குகளை வதைக்காதீர்....என்றெல்லாம் குரல் கொடுக்க மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு மானுட உயிரை வன் கொடுமை செய்யாதீர் என்று குரல் கொடுக்க மனிதர்கள் இல்லையா??
முதல் குரல் கொடுக்க நான் தயார்..!
அன்புடன்
சுவாதி
திரையில் மட்டும் தான் 'கதா நாயகர்கள் இருப்பார்களோ?!!!....
சுவா,
உங்களோடு சேர்ந்து நானும்!
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா"...
என் நண்பர் ஒருவரின் கவிதை..
உண்மை வெகு தொலைவில்
என்றும் இருந்தது இல்லை
நம் கண் எதிரிலும், மனதிலும் இருக்கும்
உண்மையை யாரும் காப்பாற்றவும் தேவை இல்லை
அதற்கு சாட்சியும் தேவை இல்லை
மனிதர்களால் அதை பாதுகாக்க முடியாதபோது
தானே வெளிப்படும் அது இயற்கையாக
முடிந்தவரை போராடுவோம்
நம்மால் இயன்றவரை..
ரிஷான் , மன நோயாளிகள் காவல்துறையிலும், சுகாதாராத்துறையிலும் , எல்லா இடங்களிலுமே உண்டு..
அதிக பண , பதவி , மண் , பெண், ஆசை கொண்டவரெல்லாருமே மன நோயாளிகள்தான் ஒருவகையில்..
இதன் முக்கிய காரணம் ஊடகமே..
நம்முள் 3 வகையான குணம் இருக்கின்றது..தெய்வீகமும், சாத்தானும் கலந்தே..
நம்முள் தேங்கி கிடக்கும் மிருக, அழுக்கான குணங்களுக்கு இத்தகைய ஊடகங்கள் தீனி போட்டு வளர்க்கின்றன..
அதிகாலை.காம் படித்து பாருங்கள்.. ஒன்பதாரா நடிகைக்கு நோய், குஷ்புவின் மாத்திரை பற்றி கணவருக்கு தெரியுமா? என்பது போன்ற செய்திகள்..
ஏன் ?. இதை படித்து சுகம் காணும் மக்கள் நம்மில் இருக்கின்றோம்..
பத்திரிக்கைக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.. ஒரு நிமிடம் நினைத்து பார்ப்பார்களா அந்த நடிகையும் மனுஷிதான் என?..
அடுத்து ஈழப்பிரச்னையை எடுத்துக்கொண்டால் , ஈழத்தின் மீது நிஜமான அக்கறை கொண்டவர் பலர்.. இருக்கலாம்.. ஆனால் இதை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொண்டு எல்லா தமிழர்களையும் கேவலமாக பேசி சுகம் காணும் கூட்டம் ஒரு புறம்..
ஆகையால் நல்லவையும் , தீமையும் கலந்தே இருக்கும்..முடிந்தவரை நன்மைகளை முன்னிறுத்திடுவோம்.
நம் பணி நன்மை செய்வதே என கலங்காது தொடருவோம்..
நல்ல கட்டுரை..
nall karuthukkal
நல்லதொரு பகிர்வு, ரொம்ப கழ்டமா இருக்கு
அன்பின் பொற்கோ,
//கையை கழுவிக்கலாம்! என்னே ஒரு ஆழமான வார்த்தை மனிதம் உள்ளவர்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் . தேவையான பதிவு தொடர்க ....//
உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
அன்பின் Dr.எம்.கே.முருகானந்தன்,
//மிக அவசியமான பதிவு.
அத்துடன் சுவாரஸ்மாக நிகழ்வுகளை இணைத்துள்ளீர்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர் !
அன்பின் பகலவன்,
//வணக்கம் தோழர்,
தாங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை,
நன்றி
பகலவன்//
கருத்துக்கு நன்றி நண்பரே !
அன்பின் சுவாதி அக்கா,
//பூக்களைப் பறிக்காதீர்கள்;
மரங்களை வெட்டாதீர்கள்;
புற்கள் மீது நடக்காதீர்கள் ;
விலங்குகளை வதைக்காதீர்....என்றெல்லாம் குரல் கொடுக்க மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு மானுட உயிரை வன் கொடுமை செய்யாதீர் என்று குரல் கொடுக்க மனிதர்கள் இல்லையா??
முதல் குரல் கொடுக்க நான் தயார்..!//
குரல்கொடுக்கலாம் தான் அக்கா..ஆனால் அதன் பிறகு சாதாரணமாகப் பேசக் கூட நாவிருக்காது..அல்லது உயிரிருக்காது. அத்தகைய அசாதாரண சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. :(
கருத்துக்கு நன்றி அக்கா !
அன்பின் விஜி,
//திரையில் மட்டும் தான் 'கதா நாயகர்கள் இருப்பார்களோ?!!!....
சுவா,
உங்களோடு சேர்ந்து நானும்!
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா"...//
நிச்சயமாக இன்றைய காலகட்டத்தில் திரையில் மட்டுமே கதாநாயகர்கள் தைரியமாக உலாவருகின்றனர் தோழி. அவர்களங்கு யாரோ எழுதிக் கொடுப்பதை, உச்சரிப்பதைக் கூட பொன்மொழிகளாக நம்பிப் பின் தொடரும் ஒரு மந்தைக் கூட்டம்.
கருத்துக்கு நன்றி தோழி !
அன்பின் பிரகாஷ் சுகுமாரன்,
//என் நண்பர் ஒருவரின் கவிதை..
உண்மை வெகு தொலைவில்
என்றும் இருந்தது இல்லை
நம் கண் எதிரிலும், மனதிலும் இருக்கும்
உண்மையை யாரும் காப்பாற்றவும் தேவை இல்லை
அதற்கு சாட்சியும் தேவை இல்லை
மனிதர்களால் அதை பாதுகாக்க முடியாதபோது
தானே வெளிப்படும் அது இயற்கையாக
முடிந்தவரை போராடுவோம்
நம்மால் இயன்றவரை..//
நிதர்சனமான கவிதை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
அன்பின் சாந்தி அக்கா,
//ரிஷான் , மன நோயாளிகள் காவல்துறையிலும், சுகாதாராத்துறையிலும் , எல்லா இடங்களிலுமே உண்டு..
அதிக பண , பதவி , மண் , பெண், ஆசை கொண்டவரெல்லாருமே மன நோயாளிகள்தான் ஒருவகையில்..
இதன் முக்கிய காரணம் ஊடகமே..
நம்முள் 3 வகையான குணம் இருக்கின்றது..தெய்வீகமும், சாத்தானும் கலந்தே..
நம்முள் தேங்கி கிடக்கும் மிருக, அழுக்கான குணங்களுக்கு இத்தகைய ஊடகங்கள் தீனி போட்டு வளர்க்கின்றன..
அதிகாலை.காம் படித்து பாருங்கள்.. ஒன்பதாரா நடிகைக்கு நோய், குஷ்புவின் மாத்திரை பற்றி கணவருக்கு தெரியுமா? என்பது போன்ற செய்திகள்..
ஏன் ?. இதை படித்து சுகம் காணும் மக்கள் நம்மில் இருக்கின்றோம்..
பத்திரிக்கைக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.. ஒரு நிமிடம் நினைத்து பார்ப்பார்களா அந்த நடிகையும் மனுஷிதான் என?..
அடுத்து ஈழப்பிரச்னையை எடுத்துக்கொண்டால் , ஈழத்தின் மீது நிஜமான அக்கறை கொண்டவர் பலர்.. இருக்கலாம்.. ஆனால் இதை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொண்டு எல்லா தமிழர்களையும் கேவலமாக பேசி சுகம் காணும் கூட்டம் ஒரு புறம்..
ஆகையால் நல்லவையும் , தீமையும் கலந்தே இருக்கும்..முடிந்தவரை நன்மைகளை முன்னிறுத்திடுவோம்.
நம் பணி நன்மை செய்வதே என கலங்காது தொடருவோம்..
நல்ல கட்டுரை..//
அருமையான கருத்து.
அநேகமான ஊடகங்கள் தங்கள் வக்கிரங்களை பிரபலங்களைப் பற்றிய வதந்திகளைக் கிளப்பி தீர்த்துக் கொள்கின்றன.
கருத்துக்கு நன்றி அக்கா !
அன்பின் Sash,
//nall karuthukkal//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சகோதரி ஜெலீலா,
//நல்லதொரு பகிர்வு, ரொம்ப கஷ்டமா இருக்கு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
ungalai pondra nalla ullangal errukkum varai "Manita neyam vaalum".
Post a Comment