Friday, October 15, 2010

கண்ணியம் காக்கப்பட வேண்டிய பள்ளிவாயில்கள்

    நீங்கள் ஒரு அரசனின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் வீட்டிலிருந்த அமைப்பிலேயே சென்று விடுவீர்களா? அந்த அரசனின் மனம் கவரும் வண்ணம்  தூய்மையாக, இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து, மணம் பூசிச் செல்வீர்கள். அங்கு சென்று அரசனின் வருகைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்த அரண்மனையில் தடுக்கப்பட்டுள்ள அரட்டையை, கூட இருப்பவர்களோடும் கைத்தொலைபேசியிலும் சத்தமாக நிகழ்த்திக் கொண்டிருப்பீர்களா? அரண்மனைப் பாவனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை உங்கள் தேவைக்காக, நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்துவீர்களா? எதையும் செய்யமாட்டீர்கள். ஏனெனில், அரண்மனைக்குள் தடுக்கப்பட்டிருக்கும் இவை போன்றவற்றையெல்லாம் செய்தால் கிடைக்கும் அரசனின் கோபத்துக்கும் தண்டனைக்கும் பயந்து, மிகவும் அமைதியாகவும், அரசன் உங்களைக் காண்கையில் உங்களை அவன் நல்லவிதமாக எண்ணவேண்டுமெனவும் கண்ணியமாக நடந்துகொள்வீர்கள் அல்லவா?

    ஆனால், தற்காலத்தில் சர்வ வல்லமை மிக்க முழுப் பிரபஞ்சத்துக்கும் அரசனான, எல்லாப் புகழுக்குமுரிய எமது இறைவனான அல்லாஹ் தஆலாவின் மாளிகைக்கு அழைக்கப்படும் போது செல்லும் நாம், இறைவன் மீது எந்தவித அச்சமுமற்றவர்களாகவே அங்கு கால் பதிக்கிறோம். வுழூ செய்வதற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை நமது தேவை முடிந்தும் வீணடிப்பதோடு, தண்ணீர்க் குழாய்களையும் இஷ்டத்துக்குத் திறந்து வுழூச் செய்துவிட்டு அவற்றை ஒழுங்காக மூடாமலே சென்று விடுகிறோம். இகாமத் சொல்லப்படக் காத்திருக்கும் நேரம் வரை அம் மாளிகைக்குள் வீணான அரட்டையிலும், சிரிப்பிலுமே நேரத்தைக் கடத்துகிறோம். எமக்கு விரும்பிய விதத்தில் மின்சாரக் குமிழ்களை, மின்விசிறிகளை இயக்கிக் கொள்கிறோம். பின்னர் அவற்றை அணைக்க மறந்து அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகிறோம். இன்னும் தொழுகைக்காகக் கூட வராத சிலர், தமது அவசரத் தேவைக்காக கழிப்பறையை மட்டும் நாடி பள்ளிவாயிலுக்கு வந்து செல்வதைக் கண்டும் காணாதவர்களாக இருந்தும் விடுகிறோம். பிரயாணத்தினிடையில் அவ்வாறு வந்துசெல்லும் வெளியூராட்களை விட்டு விடலாம். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் பள்ளிவாயிலை நாடி வரும் உள்ளூர் ஆட்களைத் தொழுகைக்காகத் தூண்டுவதுவும் நமது கடமையல்லவா?

    அண்மைக்காலங்களில் நிக்காஹ் பதிவுகள், இஃப்தார் நிகழ்வுகள் போன்றன பள்ளிவாயில்களில்தான் அனேகம் நடைபெறுகின்றன. மிகவும் நல்ல, நன்மையான விடயம் இது. ஆனால், இவ் வைபவங்கள் முடிந்த பின்னர் பார்த்தால், உணவுப் பரிமாற்றத்தின் போது எல்லோருக்கும் பகிரப்பட்ட சிற்றுண்டி மீதிகள், பேரீத்தம்பழ விதைகள், குடிபானத் துளிகள் போன்றன பள்ளிவாயிலின் தரையெங்கிலும் மற்றும் நில விரிப்பிலும் சிதறி இருக்கும். பள்ளிவாயில் சுத்திகரிப்பாளர் வந்து துப்புரவு செய்யும் வரைக்கும் பாதங்களில் ஒட்டியபடி எல்லா இடங்களுக்கும் பரவி, அவை ஈக்கள், பூச்சிகள் மொய்த்தபடியும் வாடையடித்தபடியும் அப்படியே கிடக்கும். நமது வீட்டிலென்றால் இப்படி அலட்சியமாக விட்டுவைப்போமா? உடனே அதைச் சுத்தம் செய்துவிட மாட்டோமா? ஆனால் பள்ளிவாசல் எனும்போது மட்டும் நமக்கு ஒரு அலட்சியமும் சோம்பலும் வந்துவிடுகிறது. நிகழ்வு முடிந்ததுமே சாப்பிட்டோம், குடித்தோமென அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். ஒவ்வொருவரும் தமது உணவின் மீதிகளை, வாழைப்பழத் தோல்களை, பேரீச்சம்பழ விதைகளைத் தாமே அகற்றிவிட்டால், அதற்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைக் கூடைகளிலிட்டுவிட்டால், நமது இறைவனின் இல்லம் ஒரு சில நிமிடங்களிலேயே சுத்தமாகிவிடுமல்லவா? உணவு நிகழ்வுகளை பள்ளிவாயில்களில் ஏற்பாடு செய்பவர்களும் கூட, அந் நிகழ்வின் பின்னர் பள்ளிவாயிலை உடனே சுத்தம் செய்யும் நடவடிக்கை குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

    நம்மைக் கடந்துபோன இந்த வருட ரமழானின், இறுதிப் பத்து நாட்களின் பின்னிரவுகளில் அனேகமான பள்ளிவாயில்களில் நடக்கும் ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்துகொள்ளவே வேண்டும். ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதுவும், கியாமுல்லைல் தொழுகையும் பெரும் நன்மையைத் தேடித் தரும் விடயம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமழான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.
(ஸஹீஹ் புகாரி - 2010)

    இவ்வாறு இஃதிகாப் இருந்தும், கியாமுல்லைல் தொழுதும் நன்மையைத் தேடிக் கொள்வதற்காக முன்வந்து ஊர் இளைஞர்கள் ரமழானின் இரவுகளில் பள்ளிவாயில்களில் ஒன்றுகூடுவது எவ்வளவு நல்ல விடயம்? ஆனால் இஃதிகாப் இருப்பதற்காகப் பள்ளிவாயிலுக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிக் கொண்டு வரும் இளைஞர்களில் பலர், பள்ளிவாயில்களை படுத்திருப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுத்திருந்ததையும் கடந்த ரமழானில் காண முடிந்தது. கியாமுல்லைல் தொழுகை நடந்து கொண்டிருக்கும்வேளை உறங்காது வெறுமனே படுத்திருக்கும் சில இளைஞர்கள் சத்தமாகச் சிரித்துக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும் தமது கைத்தொலைபேசிகளில் விளையாடிக் கொண்டிருப்பதையும், இன்னும் சில இளைஞர்கள் பள்ளிவாயிலுக்குள்ளேயே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்று, தொழுகைக்காக வந்திருந்த பெரியவர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிக்காட்டினர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி - 1423)

    நன்மை தேடுவதற்காகப் பள்ளிவாயில்களில் ஒன்று கூடும் நமது இளைஞர்கள் பலர், ஏன் தமது பொன்னான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்து, தொழுதுகொண்டிருக்கும்  மற்றவர்களுக்கும் இடையூறாக இருந்து, பெரியவர்களின் சாபங்களை அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமாக வாங்கிச் செல்கின்றனர்?

    அடுத்ததாக நிக்காஹ், இஃப்தார் போன்ற நிகழ்வுகளின் போதும், தொழுகை இடைவேளைகளிலும் ஒன்று சேரும் நமது மக்கள் எழுப்பும் இரைச்சலை கண் மூடிக் கேட்டுப் பாருங்கள். ஒரு சந்தையிலோ, ஒரு பேரூந்திலோ இருப்பதைப் போல நம்மை அந்த இரைச்சல் உணரச் செய்யும். பள்ளிவாயில் நிர்வாக சபைக் கூட்டங்களின் போதும், விசாரணைக் கூட்டங்களின் போதும் இன்னும் பல ஒன்றுகூடல்களின் போதும் பள்ளிவாயில் இறைவனின் இல்லம் என்பதை மறந்து அங்கு ஒருவரையொருவர் சத்தமாக ஏசிக் கொள்வதுவும், அடித்துக் கொள்வதுவும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

    இங்கு அந்நிய மதத்தவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைக் கொஞ்சம் பார்ப்போம். ஒரு விகாரைக்கோ, கோயிலுக்கோ அவர்கள் செல்லும்போது வெண்ணிற ஆடைகளை அல்லது இருப்பதிலேயே தூய்மையான, ஒழுங்கான ஆடைகளைத்தான் அணிந்து செல்கிறார்கள். அவர்களது அப் புனித இடத்தின் எல்லைக்குள் பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் அவர்கள், வீண் அரட்டையிலோ, அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதை நாம் கண்டதில்லை. தனது ஆலயமொன்றைப் பேரூந்தில் கடந்து செல்லும்போதும் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பல சக மதத்தவர்களை நான் கண்டிருக்கிறேன். எமது பள்ளிவாயில்களை அவர்கள் நடந்து, கடந்து செல்ல நேரிட்டால் கூட,  கண்ணியமாகவும் அமைதியாகவும் அவ்விடத்தைக் கடந்து செல்கின்றனர்.

    சக மதத்தவர்கள் அவர்களது ஆலயங்களுக்கும் எமது பள்ளிவாயில்களுக்கும் வழங்கும் கௌரவத்தை, நாம் நமது பள்ளிவாயில்களுக்கு வழங்குகிறோமா? இஸ்லாமியனான ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹ் தஆலாவின் இறை இல்லத்திற்குரிய கண்ணியத்தை உணர்ந்து, அதற்கு மதிப்பளித்தால் மட்டுமே பள்ளிவாயிலுக்குரிய அமைதியையும் ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேண முடியும். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# அல்ஹசனாத் மாத இதழ், ஒக்டோபர் 2010
Post a Comment