Tuesday, June 7, 2011

கட்டுநாயக்க - கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை

    அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். இச் சந்தர்ப்பத்தில் நம்மால் அக் குழுவை மீறி அவளுக்கு உதவ முடியாவிடில், உடனே யாரை அழைக்கத் தோன்றும்? காவல்துறையைத் தானே?! காவல்துறையே இப் பாதகத்தைச் செய்தால்? அதுவும் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில்? கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலயத்தில் அதுதான் நடந்தது.

    ஒன்றல்ல. இதுபோல பல சம்பவங்கள். காவல்துறையிடம் அடிவாங்கி பாதி உயிராகப் பிழைத்திருக்கும் யுவதியான மல்லிகா சொல்வதைக் கேளுங்கள்.

    'பொலிஸ் உள்ளுக்கு வந்தது. நான் தோழிகளுடன் ஓடிப் போய் படிக்கட்டொன்றின் கீழ் ஒளித்துக் கொண்டேன். அங்கே வந்த பொலிஸ் ஒருவர் எங்களை வெளியே இழுத்தெடுத்து முழந்தாளிடச் சொன்னார். பிறகு பெண் பொலிஸாரை அழைத்து எங்களுக்கு அடிக்கும்படி சொன்னார். கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்வரை அவர்கள் எங்களை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஓட முற்பட்ட பெண்பிள்ளையொருத்தியின் பாவாடையும், மேற்சட்டையும் கிழிக்கப்பட்டது. எவரியவத்தை சந்தையிலிருந்த ஒருவரின் சாரனையும், FDK ஃபெக்டரியின் துணித் துண்டொன்றையும் கொண்டு உடலை மறைத்தபடிதான் நாம் பொலிஸுக்குச் சென்றோம். அவ்வாறு எங்களைக் கொண்டு செல்கையில், எவரிவத்தை சந்தைக்கு வந்திருந்தவர்களும், ஆட்டோக்காரர்களும் பொலிஸார் மீது கல் எறிந்தார்கள். அவ்வாறு அவர்கள் கல்லால் எறிந்ததற்காக, பொலிஸார் எமக்கு மீண்டும் மீண்டும் அங்கு வைத்தே அடித்தார்கள். பொலிஸினுள்ளே பெண்பிள்ளைகள் இருபத்தைந்து பேரளவில் இருந்தோம். ஆண்கள் நூற்றைம்பது பேரளவில் இருந்தார்கள். பொலிஸ் நிலையத்தினுள் வைத்து எங்களைக் கூட்டுக்குள் தள்ள முன்பு திரும்பவும் அடித்தார்கள். ஒரு கூட்டுக்குள் நூற்றுக்கும் அதிகமானவர்களைத் தள்ளிப் பூட்டினார்கள். நெருங்கி நெருங்கி நின்றுகொண்டே இருந்தோம். டொய்லட் வாளியிலிருந்த தண்ணீரில் கைக்குட்டையை நனைத்து அதனை காயங்களில் ஒற்றிய படி இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தோம். திரும்ப எங்களை வெளியே எடுத்து அடித்தார்கள். காயமாகி இரத்தம் வடிந்துகொண்டிருந்தவர்களை வேறாக்கி, தண்ணீரால் முழுமையாக நனைத்தார்கள். பிறகு எங்களை பொலிஸ் பஸ்ஸில் ஏற்றி நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பினும், அதற்காக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றால் ரிமாண்ட் செய்வதாக அச்சுறுத்தப்பட்டதால் எல்லோரும் போல ஊருக்குப் போய் ஏதாவது வைத்தியரிடம் காட்டிக் கொள்ளலாம் என ஆஸ்பத்திரியிலிருந்து வந்தோம்.'

    மிகவும் கீழ்த்தரமாகவும், மோசமாகவும் இவர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் என்ன? திருடர்களா, கொலைகாரர்களா அல்லது பாரதூரமான குற்றங்களைச் செய்த தண்டனைக்குரியவர்களா இவர்கள்? ஊழியர்களாக, அடிமைகளாக, முதலாளித்துவத்துக்கு அடிபணிந்தபடி, காலந்தோறும் கஷ்டப்பட்டு, இலங்கை நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்திற்காக இரவு பகல் பாராது உழைத்துப் பாடுபட்ட இம் மக்கள் செய்த குற்றம்தானென்ன?

    அவர்கள் செய்தது ஒன்றே. அது, முதன்முறையாக தமது உரிமைக்காக குரல் எழுப்பியது, அதிகாரத்தைக் கேள்வி கேட்டது, அதற்காகப் போராடத் துணிந்தது. ஒரு ஏகாதிபத்திய அரசாங்கத்தில் இது தண்டனைக்குரிய குற்றம்தானே?

    இலங்கை அரசாங்கமானது, தொழிற்சாலை ஊழியர்களுக்காக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டது. ஒரு தொழிற்சாலை ஊழியரின் சம்பளப் பணத்திலிருந்து மாதாமாதம் 2% ஓய்வூதியத் திட்டத்துக்காக அரசால் எடுத்துக் கொள்ளப்படும். அந்த ஊழியருக்கு 55 வயது பூர்த்தியானதும், அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து ஓய்வூதியத்தை அவர் மாதாமாதம் பெற்றுக் கொள்ளலாம். இத் திட்டத்தில் தற்பொழுது 55 வயதுக்குக் கீழே உள்ள அனைத்து ஊழியர்களும் இணைந்து கொள்வது கட்டாயமானது. இதுவே அரசாங்கத்தின் உத்தரவாக இருந்தது. இதனை தொழிற்சாலை ஊழியர்களிடத்தில் கொண்டு செல்வதற்காக, கடந்த மே மாதம், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்கு வந்து ஒரு ஆடைத் தொழிற்சாலையிலிருந்து ஐவர் வீதம் 90 தொழிற்சாலைகளிலிருந்து ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, ஒன்றிணைத்து ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினார்.  ஓய்வூதியத் திட்டம் குறித்து அமைச்சரும் வந்திருந்த பிரமுகர்களும் விளக்கமளித்த போது, ஆடைத் தொழிற்சாலைப் பிள்ளைகள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அமைச்சரால் பதிலளிக்க முடியாமல் போனது. அப்படி என்ன கேட்டார்கள் அவர்கள்?

    'ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்கென வரும் பெண் பிள்ளைகள் 20 - 23 வயதாகும்போது வேலையில் சேர்ந்து, கூடியது பத்து வருடம்தான் வேலை செய்வார்கள். தமது திருமணத்துக்காக நகையும், பணமும் சேர்க்கவே அவர்கள் வேலைக்கு வருகிறார்கள். திருமணம் முடித்ததும் விலகிவிடுவார்கள். அப்படி விலகும்போது, ஓய்வூதியத்திற்காக அவர்களிடமிருந்து மாதாமாதம் அரசாங்கம் எடுத்துக் கொண்ட 2% பணத்துக்கும் என்ன நடக்கும்?'

    'அமைச்சரே, பட்டதாரிப் பெண்கள் நாங்கள், அரசாங்கத்தினால் வேலையொன்றைப் பெற்றுத் தர முடியாததன் காரணத்தால் ஆடைத் தொழிற்சாலை வேலைக்கு வந்திருக்கிறோம். நீங்கள் இந்த ஓய்வூதியத் திட்டம் குறித்து ஒரு பத்திரிகைக்கு ஒன்றைச் சொல்கிறீர்கள். இன்னொரு பத்திரிகைக்கு இன்னுமொன்றைச் சொல்கிறீர்கள். மின் ஊடகங்களுக்கு வேறொன்றைச் சொல்கிறீர்கள். இவற்றில் உண்மையான உங்கள் கருத்து எது?'

    அப் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சராலோ, வந்திருந்த பிரமுகர்களாலோ பதிலளிக்க முடியாமல் போனது. கலந்துரையாடலின் பிற்பாடு, 'இந்த ஓய்வூதியத் திட்டம் எமக்கு வேண்டாம்' என்பதே தொழிற்சாலை ஊழியர்களது ஏகோபித்த முடிவாக இருந்தது. ஆனால் தமது ஓய்வூதியத் திட்டத்தை அந்த ஊழியர்கள் மேல் வலியத் திணிப்பதற்கு அரசு காத்திருந்தது. தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு வழியற்ற ஊழியர்கள் வரிசையாகத் தெருவிலிறங்கி அமைதியான ஊர்வலமொன்றை முன்னெடுக்க முற்பட்டனர். அவர்களைத் தடுப்பதற்காக கிட்டத்தட்ட 300 காவல்துறையினர் ஒன்றாகத் திரண்டனர். நிகழ்வின் கோரம் இதன்பிறகுதான் ஆரம்பித்தது.

    ஊர்வலத்தைத் தடுப்பதற்காக, ஊர்வலத்தில் முன்வரிசையில் நின்ற பெண்ணொருவரின் ஆடையானது காவல்துறையினரால் கழற்றப்பட்டது. அத்தோடு தமது கைகளிலிருந்த லத்திக் கம்புகளால் கூட்டத்தைத் தாக்கத் தொடங்கியது காவல்துறை. கண்ணீர்க் குண்டுகளை அக் கூட்டத்தின் மீது பிரயோகித்ததோடு, இறப்பர் குண்டுகளைத் துப்பாக்கிகளிலிட்டு கூட்டத்தை நோக்கி சுடவும் தொடங்கியது. இனி ஊர்வலம் அடங்கிவிடும் என எண்ணியிருந்த காவல்துறைக்கு அதன் பிறகுதான் தலைவலி ஆரம்பித்தது. நடந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த ஊழியர்கள் கற்களைக் கொண்டு காவல்துறையைத் தாக்கத் தொடங்கினர். 

    அத்தோடு வீதியோரத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதியின் பாரிய உருவப்படத்தின் மீது இரு இளைஞர்கள் ஏறி நின்று அதனைத் துண்டு துண்டாகக் கிழித்தமையை அதிர்ச்சி மேலுறப் பார்த்திருந்தது  காவல்துறை. இதனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வழமையாக தாம் சிறிது முறைத்துப் பார்த்தாலே அமைதியாக அடங்கிவிடும் பொதுமக்கள், இன்று தமக்கே கல்லெறிவதை உயர் காவல்துறை அதிகாரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிஜக் குண்டுகள் அடைக்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கிச் சுடுகிறார். கூட்டத்திலிருந்த 22 வயது இளைஞன் ரொஷேன் ஷானகவுடன் எட்டுப் பேர் படுகாயமடைகின்றனர். நிஜத் துப்பாக்கித் தாக்குதலில் கலவரமுற்ற ஊழியர்கள், தமது தொழிற்சாலைகளுக்குள் ஓடுகின்றனர். அதன் பிறகுதான் நான் முதல் வரிகளில் சொன்ன அநீதங்கள் நடந்திருக்கின்றன.

    இலங்கையில் சர்வசாதாரணமாக நடைபெற்றிருக்கும் ஒரு பாரிய வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் இவை. எந்த நீதமான அரசாங்கத்தினாலும் நியாயப்படுத்த முடியாத செயல்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான காவல்துறையால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஊழியர் போராட்டத்தை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அது நடந்து கொண்ட முறையே இங்கு கேள்விக் குறியாகியிருக்கிறது. ஊழியர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாது, அவர்கள் பணி புரிந்த தொழிற்சாலைகளுக்குள் பலவந்தமாகப் புகுந்து, ஊழியர்களது முந்நூறுக்கும் அதிகமான சைக்கிள்களை எரித்ததோடு, அங்கிருந்த இயந்திரங்கள், கணினிகள், வாகனங்கள்  போன்றவற்றையும் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். காவல்துறையினரது தாக்குதல்களில் பாரதூரமாகக் காயமடைந்த முந்நூறுக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர் எனினும் நிஜத் துப்பாக்கிக் குண்டால் காயமுற்றிருந்த இளைஞன் ரொஷேன் ஷானக, வைத்தியசாலையில் சடலமாகக் கிடத்தப்பட்டிருந்தார்.

    இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயம் இருக்கிறது. தாக்குதலுக்குள்ளான சில ஆடைத் தொழிற்சாலைகள், வெளிநாடுகளுக்குச் சொந்தமானவை. உலக அளவில் தற்பொழுது நெருக்கடியிலிருக்கும் இலங்கைக்கு, தனது வருமானத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வேண்டி அந்நியச் செலாவணியும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அத்தியாவசியம். அவ்வாறிருக்க இவ்வாறான சம்பவங்களின் மூலம் நிகழ்வது, இங்கிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமது பங்களிப்பை கைவிட்டு விட்டுச் செல்வதன்றி வேறேது? இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதங்கள் குறித்தான குற்றச்சாட்டுக்களின் மூலம், இலங்கையானது உலகத்தின் அனைத்து நாடுகளினதும் கவனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று. அதன் மீது நிகழும் இவ்வாறான சம்பவங்கள் மென்மேலும் அதன் நாமத்தைச் சிதைப்பதையே செய்யும். அத்தோடு அதன் பலத்தையும் சிதைக்கும். யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள அரசாங்கத்தின் மீது, இம் மாதிரியான சம்பவங்கள் மென்மேலும் அவமானத்தையே போர்த்தும்.

    இவற்றையெல்லாம் குறித்து சிந்தித்த அரசாங்கமானது அச்சமுற்றது. அது அச்சமுற இன்னுமொரு காரணம் இருக்கிறது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமை புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் இலங்கையின் வெவ்வேறு கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் வாக்குகள் இக் கட்சியை ஆட்சியில் அமர்த்த உதவியது. எனவே இக்கட்டான இந் நேரத்தில் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் அடுத்த தேர்தலின் போது  அவ் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். எனவே அரசாங்கமானது நடந்த செயல்களின் பேரில் தம் மீது குற்றமில்லையெனக் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது.

    பாடுபட்டு உழைக்கும் மக்களது ஊதியத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிப் பெற்று, தமது பொருளாதாரத் திட்டங்களுக்குச் செலவிடத்  திட்டமிட்டிருந்தது தொழில் உறவுகள் அமைச்சர் மாத்திரமல்ல. ஜனாதிபதியுடன் சேர்ந்த முழு அரசாங்கமுமேதான். எனவே, கொல்லப்பட்ட ஊழியரது மரணத்திற்கும் நிராயுதபாணி ஊழியர்களைத் தாக்கி, அவர்களை அங்கவீனமானவர்களாகவும் நோயாளிகளாகவும் ஆக்கியதற்காகவும் முழு அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டியிருக்கிறது.

     எவ்வாறாயினும் ஊழியர்கள், தமது மாதாந்த சம்பளத்தை அதிகரிக்கச் செய்யும்படி கோரியபோது கண்டுகொள்ளாமல் விட்ட அரசாங்கமானது, ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மாத்திரம் அவர்கள் மேல் வலியத் திணிக்க முற்படுவதானது, ஊழியர்களிடத்திலே ஒரு ஐயத்தையேனும் உண்டாக்காது என எண்ணியிருந்த அரசாங்கமானது, ஊழியர்கள் கிளர்ந்தெழுந்த இப் போராட்டத்தின் மூலம் பாரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. அத்தோடு, இலங்கை அரசாங்கமானது, இந்த ஓய்வூதியத் திட்டம் சார்பாகக் குதித்த களத்தில் பலத்த தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பது தெளிவானது.

    சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், ஜனாதிபதியின் உருவப்படத்தைப் பகிரங்கமாகக் கிழித்ததோடு, அமைச்சையும், காவல்துறையையும் எதிர்த்து நின்றது அரச பலத்தை அதிரச் செய்திருக்கிறது. தனது பலத்தை நிரூபிப்பதன் மூலம் எல்லா வெற்றிகளையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியுமென எண்ணியிருந்த அரசாங்கத்தின் எண்ணத்தில் பாரிய அடி விழுந்திருக்கிறது. இவ்வாறாக, ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, அரசாங்கத்துக்கு எப்பொழுதுமே நினைவிலிருக்கும்படி ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இப் பாடமானது, இலங்கையினதும் ஊழியர்களினதும் வரலாற்றில் அழிக்கப்பட முடியாதவொரு குறிப்பாகப் பதியப்பட்டாயிற்று. இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள, போரிடுவதைத் தவிர வேறு வழியில்லையென பொதுமக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# உயிர்மை 
# எங்கள் தேசம், இதழ் 199 - ஜூன் 15, 2011
# வீரகேசரி (கனடா இதழ்), 11.06.2011
# பெண்ணியம்
# ஊடறு

31 comments:

Jawid Raiz said...

பல்வேறு ஊடகங்களும் பலபக்கங்களுக்கு சார்ந்திருந்து பலவிதமான, நம்பமுடியாத கதைகளை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையான தகவலை வெளிக்கொண்டுவந்ததட்கு Hats off Rishan.

மொக்கை பதிவுகளுக்கு மட்டுமல்ல வலைப்பூக்கள், சுதந்திர ஊடகமாகவும் பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்திருக்குறீர்கள்.

Again Hats off நண்பா

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்று தீரும் இந்த வலிகள் ?..

துணிவா எழுதியுள்ளீர்கள் .ரிஷான்

MohanKumar Subramaniam said...

உங்கள் துணிவான கட்டுரைக்கு மிக்க நன்றி.

தினேஷ்குமார் said...

காலம் மாறி... கவலைகள் தீருமோ...

Shan Nalliah / GANDHIYIST said...

GOD HELP ALL COMMON INNOCENT PEOPLE FROM BRUTALITY,IDIOTISM,ARROGANCE,INHUMAN ACTS...!!! PRAY THE ALMIGHTY GOD TO STOP GREEDY,CRUEL DICTATORS OF THIS WORLD VERY SOON!

Ravee said...

இதை போன்ற பிரச்சனைகளை தகுந்த ஆதாரங்களுடன் உலக மனித உரிமை சங்கத்துக்கும் தொழிலாளர் நல அமைப்பின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முடியுமா ரிஷான் ....

கொண்டு போனால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது என்ற கவலையும் வருகிறது.

JOTHIG ஜோதிஜி said...

இது போன்று உள்ளே நடக்கும் அவலங்களை தொடர்ந்து எழுதுங்க.

Gowripriya said...

:(((

தேவஅபிரா said...

துணிவா எழுதியுள்ளீர்கள் .ரிஷான்

Riyaz Shihabdeen said...

அஸ்ஸலாமு அழைக்கும், சகோ ஷேய்க் ரிஷான், உங்கள் துணிவுக்கும், தைரியத்திற்கும் பாராட்டுகள்.ஊடகத்துறையில் உங்கள் வளர்ச்சிக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வேந்தன் அரசு said...

//பாடுபட்டு உழைக்கும் மக்களது ஊதியத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிப்
பெற்று, தமது பொருளாதாரத் திட்டங்களுக்குச் செலவிடத் திட்டமிட்டிருந்தது
தொழில் உறவுகள் அமைச்சர் மாத்திரமல்ல. ஜனாதிபதியுடன் சேர்ந்த முழு
அரசாங்கமுமேதான். எனவே, கொல்லப்பட்ட ஊழியரது மரணத்திற்கும் நிராயுதபாணி
ஊழியர்களைத் தாக்கி, அவர்களை அங்கவீனமானவர்களாகவும் நோயாளிகளாகவும்
ஆக்கியதற்காகவும் முழு அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டியிருக்கிறது.//


கூறுவாங்களா? நாம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

அன்புரசிகன் said...

தனக்கு வந்தால் தான் தெரியும். தடிமனும் தலையிடியும்...
ரவி... நீங்கள் காமடி பண்ணலயே... இவற்றிலும் பார்க்க மோசமான விடையங்களையே சீனா மற்றும் இந்தியா உதவியுடன் ஐநாவில் தள்ளுபடி செய்த இலங்கையால் இவற்றை வெகு இலகுவாக கையாள முடியும்.

த.நிவாஸ் said...

மனிதர்களிடம்தான் மனிதஉரிமை கோரமுடியும் மிருகங்களிடம் எப்படி?

நாஞ்சில் த.க.ஜெய் said...

இங்கே நடக்கும் அரசில் கூத்தை காண சகிக்க முடியவில்லை ..அங்கே நிகழும் துக்கத்தை கண்டு மனம் வெதும்ப முடிகிறதே தவிர வேறொன்றும் செய்ய முடிவதில்லை...

அமரன் said...

இவர்களை அடைக்கக் கூடிய சொல் உலகின் எந்த மொழொயிலும் இல்லை.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின், குறிப்பாக யுவதிகளின் நிலைமை கவலைக்கிடமானது. கங்காணி உள்ளிட்ட அனைத்து *மேல்* பதவியாளர்களின் வக்கிரத்துக்கு இரையாகியும், இரையாகாமல் அதற்கு நிகரான நரகத்தை அனுபவித்துக் கொண்டும் பத்துப் பதினைஞ்சு வருஷங்கள் தம் திருமணத்துக்காக இவர்கள் படும்பாடு கல்லையும் கரைக்கும்.

அவர்களையே இப்படிச் செய்த இவர்களை எதைக்கொண்டு அடிப்பது.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜாவித் ராயிஸ்,

//பல்வேறு ஊடகங்களும் பலபக்கங்களுக்கு சார்ந்திருந்து பலவிதமான, நம்பமுடியாத கதைகளை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையான தகவலை வெளிக்கொண்டுவந்ததட்கு Hats off Rishan.

மொக்கை பதிவுகளுக்கு மட்டுமல்ல வலைப்பூக்கள், சுதந்திர ஊடகமாகவும் பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்திருக்குறீர்கள்.

Again Hats off நண்பா//

நாட்டில் அனைத்து அரச ஊடகங்களும் உண்மையை மறைத்து, அரசுக்கு வேண்டிய விதத்திலேயே இந்த நிகழ்வைப் பிரசுரித்திருந்தன. உண்மை நிகழ்வு முற்றிலும் வேறாக இருந்தது.

வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி நண்பா !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சாந்தி அக்கா,

//என்று தீரும் இந்த வலிகள் ?..

துணிவா எழுதியுள்ளீர்கள் .ரிஷான்//

ஒரு நேர்மையான ஆட்சி அமையும்பொழுதே இவ் வலிகள் தீரும் சாத்தியங்கள் இருக்கின்றன. அது எப்பொழுது நிகழும் எனத்தான் தெரியவில்லை. :-(

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மோகன்குமார் சுப்ரமணியம்,

//உங்கள் துணிவான கட்டுரைக்கு மிக்க நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தினேஷ்குமார்,

//காலம் மாறி... கவலைகள் தீருமோ...//

மாற்றுவோம்..மாறலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷான் நல்லையா,

//GOD HELP ALL COMMON INNOCENT PEOPLE FROM BRUTALITY,IDIOTISM,ARROGANCE,INHUMAN ACTS...!!! PRAY THE ALMIGHTY GOD TO STOP GREEDY,CRUEL DICTATORS OF THIS WORLD VERY SOON!//

நிச்சயமாக.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் இரவீந்திரன்,

//இதை போன்ற பிரச்சனைகளை தகுந்த ஆதாரங்களுடன் உலக மனித உரிமை சங்கத்துக்கும் தொழிலாளர் நல அமைப்பின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முடியுமா ரிஷான் ....

கொண்டு போனால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது என்ற கவலையும் வருகிறது. //

ம்ம் :-(

கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜோதிஜி,

//இது போன்று உள்ளே நடக்கும் அவலங்களை தொடர்ந்து எழுதுங்க.//

நிச்சயமாக, உங்கள் அனைவரதும் ஆதரவைக் கொண்டு !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கௌரிப்ரியா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தேவஅபிரா,

//துணிவா எழுதியுள்ளீர்கள் .ரிஷான்//

:-)
உண்மையை எழுதியிருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ரியாஸ் ஷிஹாப்தீன்,

//அஸ்ஸலாமு அழைக்கும், சகோ ஷேய்க் ரிஷான், உங்கள் துணிவுக்கும், தைரியத்திற்கும் பாராட்டுகள்.ஊடகத்துறையில் உங்கள் வளர்ச்சிக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

வ அலைக்கும் ஸலாம் நண்பரே.
உங்கள் பிரார்த்தனைகளில் என்றும் என்னை வைத்திருக்க வேண்டுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வேந்தன் அரசு,

//

/பாடுபட்டு உழைக்கும் மக்களது ஊதியத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிப்
பெற்று, தமது பொருளாதாரத் திட்டங்களுக்குச் செலவிடத் திட்டமிட்டிருந்தது
தொழில் உறவுகள் அமைச்சர் மாத்திரமல்ல. ஜனாதிபதியுடன் சேர்ந்த முழு
அரசாங்கமுமேதான். எனவே, கொல்லப்பட்ட ஊழியரது மரணத்திற்கும் நிராயுதபாணி
ஊழியர்களைத் தாக்கி, அவர்களை அங்கவீனமானவர்களாகவும் நோயாளிகளாகவும்
ஆக்கியதற்காகவும் முழு அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டியிருக்கிறது.//


கூறுவாங்களா? நாம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்
//

கூற வைப்போம். :-)
கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அன்புரசிகன்,

//தனக்கு வந்தால் தான் தெரியும். தடிமனும் தலையிடியும்...
ரவி... நீங்கள் காமடி பண்ணலயே... இவற்றிலும் பார்க்க மோசமான விடையங்களையே சீனா மற்றும் இந்தியா உதவியுடன் ஐநாவில் தள்ளுபடி செய்த இலங்கையால் இவற்றை வெகு இலகுவாக கையாள முடியும்.//

மிகவும் கசப்பான உண்மை இது.
இலங்கைக்கு பல இடங்களிலிருந்து கிடைக்கும் உதவிகளே அதன் தொடர்ந்த மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகவும் அமைந்துள்ளன.

கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அன்புரசிகன்,

//தனக்கு வந்தால் தான் தெரியும். தடிமனும் தலையிடியும்...
ரவி... நீங்கள் காமடி பண்ணலயே... இவற்றிலும் பார்க்க மோசமான விடையங்களையே சீனா மற்றும் இந்தியா உதவியுடன் ஐநாவில் தள்ளுபடி செய்த இலங்கையால் இவற்றை வெகு இலகுவாக கையாள முடியும்.//

மிகவும் கசப்பான உண்மை இது.
இலங்கைக்கு பல இடங்களிலிருந்து கிடைக்கும் உதவிகளே அதன் தொடர்ந்த மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகவும் அமைந்துள்ளன.

கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் த.நிவாஸ்,

//மனிதர்களிடம்தான் மனிதஉரிமை கோரமுடியும் மிருகங்களிடம் எப்படி?//

மிருகங்களிடம் கூட நல்ல பண்புகள் இருக்கின்றன. தனது இனத்தையே அது இப்படித் தாக்காது. ஆறறிவுள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி? :-(

கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜெய்,

//இங்கே நடக்கும் அரசில் கூத்தை காண சகிக்க முடியவில்லை ..அங்கே நிகழும் துக்கத்தை கண்டு மனம் வெதும்ப முடிகிறதே தவிர வேறொன்றும் செய்ய முடிவதில்லை...//

:-((
கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அமரன்,

//இவர்களை அடைக்கக் கூடிய சொல் உலகின் எந்த மொழொயிலும் இல்லை.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின், குறிப்பாக யுவதிகளின் நிலைமை கவலைக்கிடமானது. கங்காணி உள்ளிட்ட அனைத்து *மேல்* பதவியாளர்களின் வக்கிரத்துக்கு இரையாகியும், இரையாகாமல் அதற்கு நிகரான நரகத்தை அனுபவித்துக் கொண்டும் பத்துப் பதினைஞ்சு வருஷங்கள் தம் திருமணத்துக்காக இவர்கள் படும்பாடு கல்லையும் கரைக்கும்.

அவர்களையே இப்படிச் செய்த இவர்களை எதைக்கொண்டு அடிப்பது.//

நீங்கள் சொல்வது சரிதான். படித்து விட்டு, வறுமையின் காரணமாக இது போன்ற கொத்தடிமைத் தொழிலுக்குள் தள்ளப்படுவது பரிதாபம். அவர்களது ஒவ்வொரு எதிர்பார்ப்பும் விடுதலையை நோக்கியே இருக்கும். தற்பொழுது வேலை பறிபோன நிலைமையில் இருக்கும் இவர்களது நிலைமை மிகப் பரிதாபமானது.

கருத்துக்கு நன்றி நண்பரே !