அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும்
கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள்.
பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும்
குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக்
கொண்டே இருக்கின்றன. பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக
அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும்
இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் கண்டு பயந்த காரணத்தினாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள்
இன்னும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது அவற்றில் ஏதோ விடயம் இருக்கின்றதென்றே
எண்ணத் தோன்றுகிறது. இதனை வதந்தி என்று சொல்லி முழுவதுமாக அப்புறப்படுத்தி விடவும்
முடியாது. ஒரு சிறு வதந்தியானது, இலங்கையிலுள்ள சிறுபான்மை இன
மக்கள் செறிந்து வாழும் பகுதியெங்கிலும் ஒரே நேரத்தில் ஒரே அச்சத்தை ஏற்படுத்தி விட
வாய்ப்பில்லை அல்லவா?
அண்மையில்
இடம்பெற்ற பொத்துவில் கலவரத்தின் பின்னணியிலும் இதுவே இருந்தது. தற்போதைய கிழக்கு மற்றும்
மலையகப் பிரதேசங்களின் அமைதியற்ற சூழலுக்கும் இதுவே காரணமாகியிருக்கிறது. அத்தோடு மர்ம
மனிதர்கள் ஒளிந்திருந்த பாழடைந்த வீட்டுக்குள்ளிருந்து காவல்துறை சீருடைகள், ஹெல்மட்டுக்கள், இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனில் இவ் வதந்தியின்
பின்னணியில் நாம் இன்னும் அறிந்து கொள்ளாத ஏதோ ஒரு சக்தியும், செய்தியும் இருக்கத்தானே செய்கிறது? அது என்னவென்று கண்டுபிடிக்க
இந்த வதந்தியை ஆராயத்தானே வேண்டும்?
இவற்றை
ஆராய்ந்து சொல்லும் என முழுவதுமாக இனி அரசை நம்பிப் பயனில்லை. அது தொடர்ந்து மக்களை
ஏமாற்றுவதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எனினும் இதற்காக சட்டத்தை தமது கையில் எடுத்துக்
கொள்வதானது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். அத்தோடு
அகப்படும் ஒருவரைப் பிடித்து, ஊர்மக்கள்
நூறு பேர் சேர்ந்து தாக்குவது என்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதால்தான் காவல்துறையிடம்
கொண்டு போய் ஒப்படைக்கின்றனர். ஒப்படைக்கப்படும் நபர்களை விடுதலை செய்துவிட்டு,
சந்தேக நபர்களைக் கொண்டு வந்தவர்களைத் தாக்கும் நடவடிக்கையை காவல்துறை
இலகுவாகச் செய்து வருகிறது. இதுவரைக்கும் இவ்வாறான சந்தேக நபர்கள் 40 பேரளவில் ஒவ்வொரு ஊர் பொதுமக்களிடமும் அகப்பட்டிருக்கிறார்கள். அவர்களில்
அனேகமானோர் காவல்படையைச் சேர்ந்தவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாவற்றையும்
வைத்துப் பார்க்கும்போதும், அரசாங்கமானது
இவையெல்லாவற்றையும் வதந்தி எனச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கும் போதும், மறைவாக ஏதோ உள்ளே இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அது என்ன என்பதற்கான
தேடல்தான் எத்தரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை. காரணம்,
அவ்வாறு ஆரம்பிக்கப்படுவதன் முதல் எதிரி அரசாங்கமாக இருப்பதுதான். எனவே
ஒட்டுமொத்தமாக மக்களின் சந்தேகமானது அரசாங்கத்தின் மீதே எழுந்திருக்கிறது என்பது வெளிப்படையானது.
அரசாங்கத்தின்
மீதான இது போன்ற நியாயமான சந்தேகங்கள் எழக் காரணங்களும் இல்லாமல் இல்லை. ஊர்மக்கள்
இரவுகளில் விழித்திருந்து பிடித்துக் கொடுத்த சந்தேக நபர்களை காவல்துறையானது எந்த நடவடிக்கையும்
எடுக்காது, விடுதலை செய்திருக்கிறது. சாதாரண
ஒரு முறைப்பாட்டுக்கே சந்தேக நபர்களை அடித்து உதைத்து விசாரிக்கும் இலங்கைக் காவல்துறையானது,
ஒரு ஊரே சேர்ந்து கொடுத்த முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் சந்தேக நபர்களை
விடுவித்ததெனில், பொதுமக்களுக்கு சந்தேகம் யார் மேல் எழும்?
அதுவும் எல்லா ஊர்களிலும் இதே நடைமுறை எனும்போது இவ்வாறான சந்தேகம் எழுவது
நியாயம்தானே?
இந்த மர்ம
மனிதர்கள் குறித்து பலவிதமான எண்ணக் கருக்கள் மக்கள் மத்தியில் உள்ளன. அவற்றில் பிரதானமாகவும்
நியாயமானதாகவும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு எண்ணக் கருவை முதலில் பார்ப்போம்.
யுத்த காலத்தில்
களத்துக்கு அனுப்ப வேண்டி, இலங்கை
இராணுவத்துக்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். அதற்காக கிராமங்கள் தோறும், உடனடியாகவும் அவசரமாகவும் இளைஞர்களைத் திரட்டி எடுத்தனர். அவசர காலத்தில் இவ்வாறு
சேர்த்துக் கொள்ளப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பெரிதாக கல்வியறிவு இருக்க வேண்டிய தேவை
இருக்கவில்லை. சம்பளமும் அதிகம். கிராமங்களில் அந் நேரம் இராணுவத்தினர் மிகவும் கௌரவத்துக்குரியவர்களாகக்
கருதப்பட்டனர். எனவே வேலையற்ற கிராமத்து இளைஞர்கள் அனேகம்பேர் உடனடியாக இராணுவத்தில்
இணைந்தனர். அக் கிராமத்து இளைஞர்களிடம் இராணுவத்துக்குத் தேவையற்றதும் குழப்பங்களை
ஏற்படுத்தக் கூடியதுமான 'மனிதாபிமானம்' நிறைந்திருந்தது. அவர்களை மூளைச் சலவை செய்யாமல் களத்துக்கு அனுப்பினால் எதிராளியைக்
கொல்லத் தயங்குவர் என்பதை உணர்ந்த இராணுவம், அவர்களை மூளைச் சலவை
செய்தது. போர்ப் பிரதேச மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனநிலையை அவர்களுக்குள்
தோற்றுவித்தது.
மூளைச்
சலவை செய்யப்பட்ட இளைஞர்களால் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
யுத்தம் நிறைவுற்றது. பல ஆண்டுகளாக நீடித்த போரில் அரசாங்கம் வென்று மார்தட்டிக் கொண்டது.
இராணுவத்தினர் கொண்டாடப்பட்டனர். காலங்கள் சென்றன. இராணுவத்தில் தேவைக்கும் அதிகமாக
இராணுவ வீரர்கள் செறிந்திருந்தனர். பிரதான வீதிகளிலிருந்த இராணுவக் காவலரண்களும் அகற்றப்பட்டதன்
பின்னர், அவர்களுக்குச் செய்யவென எந்த வேலையும்
இல்லை. அவர்களை மக்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காய்கறிகள், தேங்காய்களை விற்கவும், வீதிச் செப்பனிடல் பணிகளிலும்,
மைதானத் திருத்த வேலைகளிலும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம்.
இந் நிலையில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் தப்பிச் சென்றனர். அரசாங்கம் அதைப் பெரிதாகக்
கவனத்தில் கொள்ளவில்லை. வெறுமனே சம்பளம் கொடுத்து வைத்திருப்பதை விடவும் தப்பிச் சென்றது
நல்லதென அரசாங்கம் கருதியிருக்கக் கூடும்.
தப்பிச்
சென்றவர்களுக்கு பகிரங்கமாக வேறு தொழில் தேட முடியாது. அரசாங்கம் வழங்கிய ஆயிரக்கணக்கான
ரூபாய்களைக் கொண்டு, செழிப்பானதொரு
வாழ்க்கைக்குப் பழகியிருந்த அவர்களுக்கு வீட்டின் தற்போதைய வறுமை நிலை பெரும் சங்கடத்தை
ஏற்படுத்தியிருக்கும். எனவே அவர்களால் செய்ய முடியுமான இலகுவான வேலையாக திருட்டையும்,
பணத்துக்காக எதையும் செய்வதையும் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்?
அதுவும் மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்களிடம் மனிதாபிமானமும் இருக்காது.
அவ்வாறானவர்கள்தான் இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரவு
நேரங்களில் உலவுகின்றனர் என மக்கள் கருதுகின்றனர்.
அத்தோடு
இன்னுமொரு எண்ணம், படித்தவர்கள்
மத்தியில் உலவுகிறது. யுத்தம் நிறைவுற்றதற்குப் பிறகு அவசர காலச் சட்டத்தை விலக்கக்
கோரி பல மனுக்கள் அரசை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அச் சட்டத்தை நீக்கினால் பல நஷ்டங்களைச்
சந்திக்க நேருமென்ற அச்சம் அரசாங்கத்திடம் உள்ளது. எனவே ஊர்கள் தோறும் ஒரு பதற்ற நிலையை
ஏற்படுத்தினால் அச் சட்டத்தை நீக்க வேண்டிய தேவையிருக்காது என அரசாங்கம் எண்ணியிருக்கலாம்
எனவும் பலர் கருதுகின்றனர்.
அதே போல
அண்மைக்காலமாக அரசுக்குப் பல நெருக்கடிகள் பொதுமக்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியுள்ளன.
கட்டுநாயக்கவில் அரசாங்கத்தை எதிர்த்து நின்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டம், சேனல் 4 கிளப்பிய
சிக்கல்கள், கலப்படப் பெற்றோல் இறக்குமதியால் எழுந்த பிரச்சினைகள்,
தற்போதைய கலப்பட சீமெந்தால் எழுந்துள்ள பிரச்சினைகள், விலைவாசி அதிகரிப்பால் எழுந்துள்ள கொந்தளிப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை நிலை எனப் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ள
நிலையில் தற்போது அரசாங்கம் உள்ளது. இப் பிரச்சினைகளின் உண்மை நிலையை அறியவென மக்கள்
கிளம்பினால், தற்போதைய ஆட்சிக்கு அது பங்கம் விளைவிக்கும். எனவே
இவற்றின் மீதுள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டியும், இவ்வாறான மர்ம நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதுவும் அரசியலில்
ஈடுபாடு கொண்ட பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
'எல்லாள மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு மன்னனுக்குச் சொந்தமான போர்வாளைக்
கண்டுபிடித்துத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசனின் ஆட்சி நீடிக்கும்' என்ற ஆதி நம்பிக்கைக்கிணங்கி, ஜனாதிபதி ஒவ்வொரு ஊருக்கும்
இராணுவத்தினரை இரவில் அனுப்பி அவ் வாளைத் தேடுகிறார் என்பது பாமர மக்களின் கருத்து.
எவ்வாறாயினும் எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள்
என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது. அவ்வாறில்லையெனில் அதனை
நிரூபிக்க வேண்டியதுவும், சம்பந்தப்பட்ட மர்ம மனிதர்கள் யாரெனக்
கண்டுபிடிப்பதுவும் அரசின் அத்தியாவசியமான கடமையாக உள்ளது. அதைத் தவிர்த்துவிட்டு மக்களின்
தோழனாக இருக்கவேண்டிய அரசாங்கமானது, குற்றவாளிகளின் தோழனாக மாறிவிடுமெனில்
பயமும், பதற்றமும் சூழ்ந்த வாழ்வின் பின்னணியே நாட்டு மக்களுக்கு
வசப்படும்.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
# உயிர்மை
# திண்ணை
7 comments:
Nice work..... Keep it up....
Jaffnavilum ippothu ivvaarana sampavankal idampera aarampithullana. Sorry for mobile comment. Virivana pinnooddankalodu pinnar varukiren
இது உண்மையிலேயே அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்தான். அரசாங்கம் தன் கையாலேயே தனக்கு ஆப்பு வைக்கிறது என்பது மட்டும் உறுதி.
கிரீஸ் மனிதன் பற்றிய என் பதிவு
http://faaique.blogspot.com/2011/08/sri-lankan-super-hero.html
தெளிவான பதிவு.
இப்போது இதில் தாக்கப்பட்டவர்களை, "மனநோயாளிகள், தன்னைத் தானே தாக்கியிருக்கிறார்கள்" என்று வைத்திய அறிக்கைகள் சொல்கிறதாம்...இதையும் வாசித்துப் பாருங்களேன், என்னுடைய பதிவு:http://nilalpookkal.blogspot.com/2011/08/grease-men.html
They never listen...never learn...never change...never do justice and prosperity...!!!
ஆம் இது அவசரகால சட்டஹ்தை நீட்டிக்கவும், மக்களை அரசு பற்றி சிந்திக்க
விடாமலும் செய்வதற்கான ஒரு ஏற்பாடாகவே எனக்கு தோணுது.
Post a Comment