Monday, February 3, 2014

வெள்ளை வேன் கொண்டு சென்ற, ப்ரியாவின் எதிர்பார்ப்பு

            அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். 'தாய்' எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் அந் நேரம் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டிருந்தனர். அதிலிருந்துதான் துயரம் ஆரம்பித்தது.

            தலைக்கு மேலால் கஃபீர் பறக்கையில், ஷெல் குண்டுகள் பொழிகையில், கர்ப்பிணியான ப்ரியாவைக் காப்பாற்ற உதயகுமார் எடுக்காத முயற்சிகள் இல்லை. ப்ரியாவும் எல்லா இடர்களையும் சிரமத்தோடு பொறுத்துக் கொண்டார். தனது கணவருக்காக, வயிற்றிலிருக்கும் குழந்தை இவ்வுலகுக்கு வரவே வேண்டும். குழந்தை, இவ்வுலகைக் காண வேண்டுமாயின், அதன் தாய் உயிர் வாழ வேண்டும். எப்படியாவது கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக அவர் வளர்ந்துவரும் வயிற்றோடு, வீங்கிய கால்களையும் மிகச் சிரமத்தோடு பராமரித்தார். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு முறை அவர் தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணினார். எனினும், குழந்தையையும், தன் மீது மிகுந்த பாசம் செலுத்தும் கணவரையும் எண்ணி எல்லாத் துயரங்களையும் அவர் மிகுந்த கஷ்டத்தோடு பொறுத்துக் கொண்டார். இளம் விஞ்ஞானப் பாட ஆசிரியர், நிழலைப் போல எப்பொழுதும் மனைவியின் அருகிலேயே இருந்தார். எல்லா அசௌகரியங்களையும் பொறுமையாகச் சகித்தபடி ப்ரியாவுக்கு ஊன்றுகோலாக அவரது கணவரே இருந்தார். தனது கதையை இனி ப்ரியாவே சொல்கிறார்.

            "எனது கணவரின் பெயர் பூபாலசிங்கம் உதயகுமார். நானும், அவர் இன்னும் முகம் பார்த்திராத இக் குழந்தையும்தான் அவரது வாழ்க்கையாக இருந்தோம். அடுத்ததாக அவரது உலகமாக இருந்தது அவரது பாடசாலை. அவர் ஒரு விஞ்ஞானப் பாட ஆசிரியர். மாங்குளம், ஓலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் கற்பித்தார். 1998 லிருந்து 2003 வரை பகுதிநேர ஆசிரியராக வேலை செய்தார். 2003 மே மாதத்தில் அதே பாடசாலையில் நிரந்தர ஆசிரியராக வேலை நியமனம் கிடைத்தது. அவர் பத்து வருடங்கள் அரச பாடசாலைப் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் கற்பித்தார். பிறக்கவிருந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி எப்படியாவது விஞ்ஞானப் பாட ஆசிரியையாக்க வேண்டுமென்றே அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு வீட்டையும், பாடசாலையையும் விட்டால் வேறொரு வாழ்க்கை இருக்கவில்லை. பிள்ளைகளிடம் நிறைய அன்பு வைத்திருந்தார். எனினும் அவருக்கு அவரது குழந்தையைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை."

            இதயத்தில் முட்டிமோதிக் கொண்டிருக்கும் துயரமானது இரு விழிகளிலிருந்தும் துளிகளாக வழிந்ததால், 29 வயதான அத் தாயின் வார்த்தைகள் தடுமாறின. அவர் குழந்தையை அணைத்தபடி விம்முகையில் குழந்தை மதுஷிகா தனது அம்மம்மாவை அழைத்து 'அடிங்க...அடிங்க' என்று சொன்னது. தனது அம்மாவை அழ வைத்து, அப்பாவைக் கொண்டு சென்றவர்களுக்கு அடிக்கும்படி குழந்தை சொன்னது. சிறிது நேரத்தில் கவலையை உள்ளடக்கிக் கொண்ட ப்ரியா தனது கதையின் மீதியைச் சொல்லத் தொடங்கினார்.  

            "யுத்தத்தின் காரணமாக எங்களால் மாங்குளத்தில் இருக்க முடியாமல் போனது. நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். கிளிநொச்சியிலும் இருக்க முடியாமல் போனபோது விஸ்வமடுவுக்குப் போனோம். விஸ்வமடுவில் மூன்று நாட்களே இருக்க முடிந்தது. அதன்பிறகு ஸ்கந்தபுரத்தில் இரண்டு மாதங்கள் இருந்தோம். நாம் இருந்த இடங்களின் மீது ஆட்டிலெறிகளும் ஷெல்லும் தொடர்ந்தும் விழுந்தமையால் நாங்கள் தேவபுரத்துக்குச் சென்றோம். அங்கு எட்டு நாட்களே இருக்க முடிந்தது. பிறகு இறப்பாலைக்குச் சென்றோம். அங்கும் எட்டு நாட்கள். மரணத்திலிருந்து தப்ப வேண்டியிருந்ததனால் நாங்கள் விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரில் பைத்தியக்காரர்கள் போல ஒவ்வொரு இடமாக ஓடினோம். குழந்தையொன்றையும் வயிற்றில் சுமந்தபடி ஒவ்வோரிடமாக ஓடுவது எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. உதய் நிழல் போல என்னுடனேயே இருந்தார். குழந்தையும், அவரும் இல்லையென்றால், நான் செத்திருந்தால் கூட ஓர் அடியாவது அங்கிருந்து நகர்ந்திருக்க மாட்டேன். கணவருக்காகவும், குழந்தைக்காகவும் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதனால்தான் நான் அங்கிருந்தும் நகர்ந்தேன். இறப்பாலையிலிருந்து பொக்கனைக்குச் சென்றோம். பொக்கனையில் ஒன்றரை நாட்கள் இருக்க முடிந்தது. அதன் பிறகு எங்களை இராணுவம் பிடித்துக் கொண்டது. அங்கிருந்து ராமநாதபுரம் IDP முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கும் எனது கணவர் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தார். நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்.

            'பயப்பட வேண்டாம். இனி எங்களுக்குப் பிரச்சினை இருக்காது' என்று கணவர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். முகாமில் வைத்து எனக்கு பிரசவ வலி எடுத்ததால், என்னை செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். கணவர் இராணுவ முகாமுக்குச் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு வருகையில் என்னை வவுனியாவுக்கு மாற்றியிருந்தார்கள். வவுனியாவுக்கு வரும்போது மாலையாகி விட்டதனால் கணவரால் அன்று என்னைப் பார்க்க முடியவில்லை. பிறகு அவர் கரப்பன்காட்டிலுள்ள அவரது உறவினர் ஒருவரது வீட்டில் அன்றிரவு தங்கிவிட்டு காலையிலேயே என்னைப் பார்க்க வவுனியா வைத்தியசாலைக்கு வந்தார். 'எனது கைகளாலேயே சமைத்து எடுத்துக் கொண்டு, பகலைக்கு உன்னைப் பார்க்க வருவேன்' என்று என்னிடம் சொல்லிவிட்டு அவர் உறவினர் வீட்டுக்குச் சென்றார். அதுதான் நான் எனது கணவரைக் கண்ட இறுதித் தினம். அது 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி. பகல், அவர் வரும்வரை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எனினும் அவர் வரவில்லை. பகல் என்னைப் பார்க்க வந்த அம்மாவிடம் நான், கணவர் எங்கே எனக் கேட்டேன். எனினும் அம்மாவுக்கு அப்பொழுது அவரைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. பிறகு தேடிப் பார்த்தபோது, கரப்பன்காட்டு உறவினர் வீட்டிலிருந்து அவர் என்னைப் பார்க்க வர வெளியே வரும்போது இரண்டு பேர் வந்து அவரைப் பிடித்துக் கொண்டு சென்றதாகக் கேள்விப்பட்டோம். 'விசாரித்து விட்டு அனுப்புகிறோம்' என்று சொல்லியே அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கொஞ்ச தூரம் நடக்க வைத்துக் கூட்டிச் சென்று, பிறகு வெள்ளை வேனொன்றுக்குள் தள்ளிக் கொண்டு சென்றதை சனங்கள் கண்டிருக்கிறார்கள். இப்பொழுது மகளுக்கு இரண்டு வயது. அவள் இன்னும் தனது தந்தையைக் கண்டதில்லை. யுத்தம் முடிந்திருந்ததனால் இனியாவது எங்களால் நிம்மதியாக இருக்க முடியுமென நாங்கள் எண்ணியிருந்தோம். எனது கணவர் எந்தக் குற்றமும் செய்தவரல்ல. அவர் முகாமில் கூட பிள்ளைகளுக்கு கற்பித்தபடியே இருந்தார். என்னைப் பார்த்து விட்டு முகாமுக்குத்தான் கணவர் செல்வார். ஏதாவது விசாரிக்க வேண்டியிருந்திருந்தால் கூட ஏன் அங்கு வைத்து விசாரிக்க முடியாமல் போனது? ஏன் எங்களது வாழ்க்கையை இப்படி பலி வாங்குகிறார்கள்? என்னுடைய வயதான பெற்றோருக்கு, என்னையும் குழந்தையையும் பராமரிக்க எப்படி முடியும்?"

            ப்ரியா அழுது புலம்பியபடி எம்மிடம் கேட்கும் எந்தக் கேள்விக்கும் இக் கணத்தில் எம்மிடம் எந்தப் பதிலுமில்லை. நாம் அறியாத போதும், இந்த வெள்ளை வேன்காரர்கள் யாரென்பது இராணுவத்தினருக்கோ காவல்துறையினருக்கோ ஒரு இரகசியமாக இருக்காது. அந்த இரகசியத்தை அறிந்த காவல்துறை மற்றும் இராணுவம் குறித்து பொறுப்புக் கூற வேண்டியது அரசாங்கமே. யுத்தத்தின் பிறகு இவ்வாறு காணாமல் போயுள்ள உதயகுமார் உட்பட அனைத்து மனிதர்களையும் கண்டுபிடிப்பதுவும், குறைந்த பட்சம் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதற்கான பதிலையாவது கூற வேண்டியதுவும் அரசாங்கமே. அடுத்ததாக, இங்கு காணாமல் போயிருக்கும் பூபாலசிங்கம் உதயகுமார் ஒரு சாதாரண மனிதனல்ல. அரச பாடசாலையொன்றின் ஆசிரியர். அதனால் இந்த ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்க முன்னிற்க வேண்டியது கல்விப் பொறுப்பதிகாரிகளின் கடமை.

            குறைந்தபட்சம் உதயகுமாரின் உதவியற்றுப் போன குடும்பத்துக்கு ஒரு ஆதாரம் வேண்டும். உதயகுமார் உயிரோடு இல்லாதபட்சத்தில் அதற்காக ஓர் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் அல்லவா? அது அவ்வாறில்லையெனில், இன்று வெதுவெதுப்பாகப் பெருக்கெடுத்தோடும் இந்தக் கண்ணீர், நாளை எல்லாவற்றையும் பொசுக்கிச் சாம்பலாக்கும் எரிமலை கங்கையாக மாறக் கூடும்.

- ப்ரியந்த லியனகே
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி 
# இனியொரு

No comments: