'தராகி' என அழைக்கப்பட்டுவந்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தர்மரத்னம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு (28.04.2014) 09 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இக் காலத்தில் இலங்கை, இந்தியாவில் 'அரசியல்' செய்துவரும் அநேகர் இவரை மறந்திருக்கக் கூடும்.
1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி, மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்னம் சிவராம், 1980 களின் பின்னர் ப்ளொட், EPLF போன்ற இயக்கங்களுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். 'தராகி', 'எஸ்.ஆர்' ஆகிய பெயர்களில் அச்சு மற்றும் இணையத்தில் எழுதி வந்த இவர், பிரபல அரசியல் விமர்சகராகவும், பத்தி எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர்.
2005 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி, இலங்கை, பம்பலபிடிய பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்து, வேனில் வந்த குழுவினரால் கடத்தப்பட்ட இவரது சடலத்தை மறுதினம் இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் கண்டெடுத்தனர். பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்துக் கடத்தி, பாராளுமன்றத்துக்கருகிலேயே வைத்து சுட்டுக் கொலை செய்து, சடலத்தை விட்டுச் செல்வார்களாயின் கடத்தல்காரர்கள் மற்றும் கொலைகாரர்கள் எவ்வளவு பலமும், அதிகாரமுமுடையவர்களாக இருந்திருக்கக் கூடும்?! இலங்கையின் அதி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து இவ்வாறான குற்றச் செயல்களை யாரால் செய்யவியலும்?!
ஒன்பது வருடங்கள் கடந்தும் இன்னும் உயர் அதிகாரிகளாலும், பாதுகாப்புப் பிரிவாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரகசியக் கேமராக்கள் பதிக்கப்பட்டுள்ள, இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நடந்த இப் பாதகச் செயலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஏன் இன்னும் முடியவில்லை? எனில் குற்றவாளிகள் யார்? தராகி என அழைக்கப்பட்ட தர்மரத்னம் சிவராமைப் படுகொலை செய்தவர்கள் யார்?
இலங்கையில் நேர்மையான ஊடகவியலாளர்களாகவும், அரசியல் விமர்சகர்களாகவும் இருப்போர் பலருக்கும் இந்த முடிவுதான் இறுதியாகக் கிட்டும் போலும். சிவராமைப் போலவே, இலங்கை ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்களான காரணத்தால் கொலைசெய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுக் காட்டமுடியும். இதில் இன மத பேதமில்லை. கொலைசெய்யப்படவும், கடத்தப்படவும், காணாமல் போகச் செய்யப்படவும், கண்மூடித்தனமாகத் தாக்கப்படவும், நாடுகடத்தப்படவும் அவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் நேர்மையான ஊடகவியலாளர்களாக இருப்பதுதான்.
எவர்க்கும் இன்னும் நீதி கிட்டவில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, காணாமல் போயுள்ள ப்ரகீத் எக்னெலிகொட போன்ற பலருக்கும் கூட இன்னும் நீதி கிட்டவில்லை. எனில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நீதியை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லை.
படுகொலைகளுக்கும், குற்றச் செயல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக பல சாட்சியங்கள் இருந்தபோதிலும், குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க முடியாத ஒரு நிலைப்பாடு பல வருடங்களாக இலங்கையில் இருப்பதானது, குற்றவாளிகளை ஏவிவிடும் அதிகாரம் படைத்தவர்கள் குறித்து வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் யார்? அவர்கள்தான் இலங்கையை வழி நடத்துபவர்களா? இலங்கைக்கான 'சிறந்த எதிர்கால'த்தை உருவாக்கித் தரப் போகிறவர்கள் அவர்கள்தானா?
சிவராம், நீங்கள் இப்பொழுது இல்லை. நீங்கள் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் கூட 'இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக உள்ள' (பால்ய வயதினர் உள்ளடங்கலாக) பலரும் கைது செய்யப்பட்டும், தண்டனை வழங்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் அதிகாரம் படைத்தவர்களது பார்வையில் 'நீதி' வழங்கப்பட்டு வருகிறது. கேட்பார் எவருமில்லை.
செல்வந்தர்கள் இன்னுமின்னும் செல்வந்தர்களாகவே ஆகிக் கொண்டிருக்க, ஏழைகள் தம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து இழந்து இன்னும் வறுமைக்குள்ளேயே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரங்கள், சௌபாக்கியங்கள் என எதுவும் வேண்டாமெனத் துறந்து சென்ற புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் புத்த பிக்குகள் சிலர் அதிகாரத்தையும், ஆயுதங்களையும் கையிலேந்தியவாறு வெறி பிடித்த விலங்குகளைப் போல நாவில் எச்சில் வடிய நடமாடித் திரிகின்றனர். கண்டவர்களையும் தாக்குகின்றனர்.
இலங்கையின் முன்னேற்றம் பற்றியும் உங்களிடம் கூற வேண்டும். இலங்கை எனும் தேசம் இப்பொழுது அழகாகவும், தூய்மையாகவும் உள்ளது. பகிரங்கமாகத் திரிந்த யாசகர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இப்பொழுது அதிநவீன வசதிகள் எல்லாம் இலங்கையில் பாவனையில் உள்ளன. அதிவேகப் பாதைகள், நட்சத்திர ஹோட்டல்கள் எனப் பலதும், பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. விலைவாசிகளும், வரிகளும் அதிகரித்துள்ளன. அவை மாத்திரமன்றி, நாம் ஒவ்வொருவரும் உலகின் பல நாடுகளுக்கும் பல மில்லியன் டொலர்கள் கடனாளிகளாக உள்ளோம். இவை நாட்டின் முன்னேற்றங்கள் எனில், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு?
அது மட்டும் அன்று போலவே இன்றும் கேள்விக்குறியாகவேயுள்ளது சிவராம் !
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
28.04.2014
நன்றி
#இனியொரு இதழ்
No comments:
Post a Comment