Tuesday, August 9, 2016

வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை

வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.

இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, 'நாம் நோயாளிகள்', 'நாம் பலவீனமானவர்கள்' என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

முதல் முயற்சியாக, நீர்கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஷாலிகா மற்றும் மருத்துவத் தாதிகளுடன் இணைந்து, அங்குள்ள டெங்கு நோயாளர் பிரிவில், ஒரு சிறு வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ தாதிகளை அணுகுவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.

இதற்கு நீங்களும் உதவுவதை வரவேற்கிறேன். உதவ விரும்பும் அனைவரும் தங்களிடம் மேலதிகமாக இருக்கும் அல்லது அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் புத்தகங்களை அனுப்பி வைத்து உதவலாம். ஒரு புத்தகமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. சிறுவர் நூல்கள், சிறுகதை, கவிதை, நாவல்கள், தன்னம்பிக்கை தொகுப்புகள் என எந்த நல்ல தொகுப்பாக இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும், அனுப்பலாம்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தாம் வெளியிட்டுள்ள தொகுப்புக்களில் ஒன்றை அனுப்பி வைத்தால் கூட பேருதவியாக இருக்கும். புதியதே வேண்டுமென்றில்லை. இன்னும் வாசிக்கக் கூடிய நிலைமையில் இருக்கும் எந்தத் தொகுப்பாக இருந்தாலும் சரி.

புத்தகங்களை அனுப்ப விரும்புபவர்கள் கீழுள்ள முகவரிக்கு, பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வையுங்கள்.

To:
Nurse In charge,
DHDU,
District General hospital,
Negombo,

Srilanka

நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

6 comments:

அண்ணா கண்ணன் said...

நூலகத்திற்குச் செல்ல நேரமில்லாதவர்கள் மிகப் பலர்; ஆனால், வேலை, வேலை என ஓடி, ஏதாவது நோய், நொடி வந்த பிறகு மருத்துவமனைக்கு வருவோர் பலர். அங்கு உள்நோயாளியாகச் சேர்ந்ததும் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். அப்போது புத்தகங்கள் படிக்கலாம். எனவே அரசும் தனியாரும் நிருவகிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் தனித் தனி நூலகங்களை அமைக்கலாம்; அவரவர் வீட்டுக்கே நூலை எடுத்து வந்து தருவது போல், நடக்க முடியாதவர்களுக்காக, அவரவர் படுக்கைக்கே கொண்டு வந்தும் தரலாம். எழுத்தறிவு இன்மையினாலோ, பார்வைக் குறைபாட்டினாலோ, மின் தடையினாலோ படிக்க முடியாதவர்களுக்காக மின்கலனில் இயங்கும் ஒலி நூல்களை வழங்கலாம். குழந்தைகள்மருத்துவமனையாக இருந்தால், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவை அமைக்கலாம்; குழந்தைகளைக் கவனிக்கப் பெரியவர்கள் உடன் இருப்பார்கள் என்பதால், பெரியவர்களுக்கான நூல்களையும் வைக்கலாம். உடலைத் தேற்றும் மருந்து ஒரு புறம்; அறிவுக்கு விருந்து இன்னொரு புறம்.

எளிதில் தூக்கத்தை வரவழைக்கும் சில நூல்களைத் தேந்தெடுத்து, தூக்கம் வராமல் அவதிப்படும் நோயாளிகளுக்கு வழங்கலாம்; இதன் மூலம், தூக்க மாத்திரை, தூக்க ஊசி போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைக்கலாம். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற அடிப்படையில் நகைச்சுவை நூல்களைப் படிக்கச் சொல்லி, மருத்துவச் செலவை வெகுவாகக் குறைக்கலாம். வாழ்வை வெறுத்துத் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை நூல்களை அளிக்கலாம். மன அழுத்தம், படபடப்பு, மன நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நோயைக் குறைக்கும் வகையில் சில நூல்களை வழங்கலாம்; நூலைக் கிழிக்கவோ, உடைக்கவோ முடியாதவண்ணம், பிரத்யேகமான மின்னூல்களாக அவை இருத்தல் நலம்; சில நூல்கள், தலைவலியைத் தரக்கூடும் என்பதால், அனுபவத்தின் அடிப்படையில் அத்தகைய நூல்களைத் தனிமைப்படுத்தலாம்; இவற்றையும் நோயாளிகளின் சகிப்புத்தன்மையைச் சோதிக்கச் சில நேரங்களில் பயன்படுத்தலாம். நோயாளிகளைப் பார்க்க, ஆரஞ்சுப் பழம், ஆர்லிக்ஸ் ஆகியவற்றோடு வரும் அன்பர்களை இனி புத்தகங்களோடு வரச் சொல்லலாம். ஆனால், அவற்றை அந்த நேரத்தில் படிக்கலாமா என்பதை மருத்துவரோ, இதர நிபுணர்களோ படித்துப் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும்; அல்லது, அவர்கள் ஒப்புதல் அளிக்கும் புத்தகங்களாகப் பார்த்து, வாங்கி வர வேண்டும். இதன் மூலம் மருத்துவப் புரட்சியும் அறிவுப் புரட்சியும் ஒரே நேரத்தில் நிகழும் சாத்தியக்கூறுகள் உண்டு. (அகமொழி 67)


ரிஷானின் வேண்டுகோளை நானும் வழிமொழிகிறேன்.

Anonymous said...

Shall we send from chennai ?

அண்ணா கண்ணன் said...

ரிஷான், என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அனுப்பும் செலவை என்னால் ஏற்க இயலாது. மும்பையிலும் சென்னையிலும் நண்பர்கள் யாரும் இதனைத் திரட்டி அனுப்புவதாக இருந்தால், அவர்களிடம் சேர்ப்பிக்க முயல்வேன்.

M.Rishan Shareef said...

இந்தியாவிலுள்ள புத்தகங்களை எடுத்து வருவது குறித்து கலந்தாலோசித்துவிட்டு சொல்கிறேன்.
உங்களது அகமொழி மிகவும் அருமையானது நண்பர் அண்ணா கண்ணன்.
மனமார்ந்த நன்றியும் அன்பும் நண்பர்களே.

ஹேமா (HVL) said...

நல்ல செயல், வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

மனமார்ந்த நன்றியும், அன்பும் ஹேமா !