இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.
மக்கள் எழுச்சி போராட்டம் தொடங்கியதன் பிறகு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன்முதலாக பாராளுமன்றம் கூடியதும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் மக்கள் ஒன்று கூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு வேளையில் பாராளுமன்றத்தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. சாகும்தருவாயிலுள்ள நாயின் உடலிலிருந்து உண்ணிகள் மெதுவாக அகன்று விடுவதைப் போல, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை முடியப் போவதை அறிந்து கொண்ட கூட்டணிக் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சில தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாம் வசிக்கும் இடங்களின் பிரதான நகரங்களில் பொதுமக்கள் இரவும், பகலும் வெயிலிலும், மழையிலும் ஒன்று திரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கெதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
என்னதான் அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைத்தளங்களைத் தடை செய்திருந்தும் அனைத்து சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, அன்று பிறந்த குழந்தைகளைக் கூட கைகளில் ஏந்தியவாறு இரவும், பகலுமாக தெருவிலிறங்கி கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எந்த அரசியல் கட்சியையோ, அமைப்பையோ, இனத்தையோ, சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக் கொள்வதற்காக தெருக்களில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரமாண்டமானதும், ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.
உண்மையில், உயிர் வாழ்வதற்காக மக்கள் படும் சிரமங்கள்தான் பொதுமக்களை இவ்வாறு ஒன்றுகூடச் செய்திருக்கின்றன. அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள அனுபவிக்க வேண்டியிருக்கும் இன்னல்கள்தான் அரசாங்கத்துக்கு எதிராக அவர்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றன. அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களினதும், நெருங்கிய உறவினர்களினதும், நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடிரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய் விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் கொள்ளையடித்த மக்கள் சொத்துக்களையும் களவாக எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது. இதற்காகவா கோடிக் கணக்கான மக்கள் தெருவிலிறங்கிப் போறாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
ஆகவே மக்கள் ஒன்றாகத் திரண்டு ஜனாதிபதியினதும், பிரதமரினதும், அமைச்சர்களினதும் வீடுகளையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், அவர்களுக்கு சார்பான அதிகாரிகளும் இன்று பயந்து போயிருக்கிறார்கள். எந்தளவுக்கென்றால், மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து பதவி விலகியுள்ள ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, சசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் தாம் பதவிகள் எவற்றையும் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியும் உடனடியாக அவசர கால சட்டத்தை நீக்கியிருக்கிறார்.
தற்போதைய ஜனாதிபதியையும், பிரதமரையும், அவர்களது அடிவருடிகளான அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முற்றுமுழுதாக பதவிகளிலிருந்து அகற்றி விட்டு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் உட்பட அனைத்து பிரதான அமைச்சுகளிலும், துறைகளிலும் அறிவும், நிபுணத்துவமும் கொண்ட தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பதவியில் அமர்த்தத்தான் மக்கள் இவ்வளவு தூரம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, பொதுச்சொத்துக்களை தமது ஊழல்களுக்குப் பயன்படுத்தி, மோசடி செய்து முறையற்ற விதத்தில் செல்வத்தைக் குவித்து, நாட்டைக் கடனுக்குள்ளாக்கிக் கறுப்புப் பணத்தை சம்பாதித்து இலங்கையை வறுமைக் கோட்டுக்குள் தள்ளியிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்கி அவர்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய பிறகுதான் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எழுச்சியின் தற்போதைய இலக்காக இருக்கிறது.
இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த ‘மக்கள் எழுச்சி’ போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டம் ஆகும். காவல்துறையாலும், இராணுவத்தாலும் எவ்வேளையிலும் கைது செய்யப்படக்கூடுமான, சித்திரவதை செய்யப்படக்கூடுமான ஒரு சூழ்நிலையில் பொதுமக்கள் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தெருவிலிறங்கியும், வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடியைத் தொங்க விட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் இன்று தெருக்கள் முழுதும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமானது, இன்னும் பெருக்கெடுத்து வழிந்தோடி ஊழல் பெருச்சாளிகளை விரைவில் இல்லாதொழிக்கும் என்று நம்பலாம். அந்த வெள்ளத்தில் அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டுப் போய் நாடே தூய்மையாகி விடும். இந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜனநாயகமும், ஊடக சுதந்திரமும், மனித உரிமைகளும் பேணப்படக்கூடிய நாடு உருவாகும். தமது உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியமுள்ள மக்கள் உருவாகுவார்கள். இந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படா விட்டாலும், வருங்காலத்தில் அது நிச்சயமாக நடக்கும். இன்று போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும் சந்ததிகள் அன்று அவ்வாறான உரிமைகளையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.
ஜனநாயகத்திற்காக பொதுமக்கள் ஒன்று திரண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆனது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும், ஊழல்களும், சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தைப் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும்.
________________________________________________________________________________

.jpg)
No comments:
Post a Comment