Tuesday, September 18, 2007
பயணிகள் கவனத்திற்கு !
நாமெல்லோரும் பயணிகளே.ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு விதத்தில் நமது பயணத்தை நாம் மேற்கொண்டே இருக்கின்றோம்.
கார், வேன்,மோட்டார் பைக், சைக்கிள் போன்ற சொந்த வாகனங்களிலாகட்டும், பஸ்,இரயில்,விமானம், கப்பல் போன்ற பொது வாகனங்களிலாகட்டும்,பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.ஒவ்வொரு மனிதனதும் இறுதிப்பயணமானது கல்லறையில் முடியும் வரை அவனது பயணங்கள் முடிவதேயில்லை.
நம்மில் அநேகமானோர் பஸ், இரயில் போன்ற பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.இடையிடையே பஸ்,இரயில் வண்டிகளில் வெடித்த வெடிகுண்டுகளால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறி போன செய்திகளையும்,அங்கவீனமான,அநாதையான உயிர்களின் கதைகளையும் கேட்டுக் கவலைப்படுகிறோம்.உலகெங்கும் அன்றாடம் நடக்கும் இச் சங்கதிகள்,எமது நாட்டிலும் எந்த இடத்திலும்,எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.இது போன்ற விபத்துகளிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாமனைவரும் இருக்கிறோம்.
எனவே,இவ்வாறான அனர்த்தங்களை எம்மால் முடிந்தளவு எப்படித் தடுக்கலாம் எனப் பார்ப்போமா?
* பஸ் நிறுத்துமிடத்திலோ,இரயில் நிறுத்துமிடத்திலோ ஏறுபவர்கள் முதலில் தமக்கான இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டுமல்லாது, அவ் இருக்கைக்குக் கீழே அல்லது மேலே ஏதாவது தமதல்லாத அந்நியப் பொருட்கள் தென்படுகின்றதா எனக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
* அப்படி ஏதாவது சந்தேகப்படும் விதமாக தென்பட்டால் உடனடியாக சாரதி,கண்டக்டருக்கு தெரிவிப்பதுடன்,மற்றவர்கள் அதனைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நீங்கள் இருப்பது இரயில் வண்டியெனில் உடனடியாக அந்த இரயில் நிலையப் பொறுப்பதிகாரியிடமோ,அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகளிடமோ தெரியப்படுத்தலாம்.
* அல்லது உடனடியாக அவசரகாலத் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிப்பதன் மூலமும் பாரிய விபத்துக்களையும் உயிர் அனர்த்தங்களையும் தவிர்க்கலாம்.
வாகனம் சென்று கொண்டிருக்கும் பொழுது நடுவழியில் ஏறுபவர்கள் கூட்டத்தில் இதைக் கவனிக்க இடம் இருக்காது.அலுவலக நேரங்களில் கீழே குனியக்கூட இடம் இல்லை.
எனவே, முதலில் ஏறுபவர்களும்,இறுதியாக இறங்குபவர்களும் இதற்காக ஒரு நிமிடம் செலவழித்துக் கவனித்தால் பெரிய அனர்த்தங்களை இல்லாமல் செய்யலாம்.
அத்துடன் கூட்டம் இல்லாத நேரத்திலும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் இருபத்து நான்கு மணி நேரமும் செல்லும் ஒவ்வொரு பஸ்ஸையும் , அனைத்து இரயில்களையும் காவல்துறையினரால் மட்டுமே கவனிக்க இயலாது என்பதையும்,நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment