Monday, October 1, 2007

கொஞ்சம் சிந்திப்போமா சகோதரிகளே...?



சமீபத்தில் நண்பரொருவர் புதிதாக ஆரம்பித்த (Fancy Store)கடைக்குச் சென்றிருந்தேன்.நண்பர் சில சாமான்களை அடுக்கிக் கொண்டிருக்க,நானும் உதவலாமே என்ற எண்ணத்தில் சாமான்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.அவை முகப்பூச்சு அழகுக் க்றீம்கள்.
சில க்றீம்கள் அடங்கியிருக்கும் பெட்டிகளின் பின்பக்கத்தைப் பார்க்க,சின்ன எழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி கண்ணில் பட்டது.
"Not tested on animals" (விலங்குகளின் மேல் இச்சாதனம் உபயோகிக்கப் படவில்லை).
வேறு சில நிறுவனங்களின் க்றீமில் அவ்வரி காணப்படவில்லை.அன்று முழுவதும் அவ்வரியே என் மனதில் வந்து போக,அது என்ன "Not tested on animals" என ஆராய்ச்சி செய்ய களத்தில் குதித்தேன்.இதற்காக எனக்கு இணையத்தளங்கள் பெரிதும் உதவின.
எவ்வளவு கொடூரமான உண்மைகள்...?
மனிதர்களது முகப்பூச்சுக்காக என்னென்ன கொடுமைகளை ஒன்றும் அறியா விலங்குகள் அனுபவிக்க
நேரிடுகின்றன?அந்த வேதனைகளை நீங்களும் சற்றுப் படித்துப் பாருங்கள்.

விலங்குகளின் மீது திணிக்கப்படும் அமிலக் கொடுமைகள் :

மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் பலவித அழகுசாதனங்களிலும் அமிலப் பொருட்கள் கலந்துள்ளன என்று தெரியும்.ஆனால் ஒவ்வொரு அழகுப்பொருளிலும் 50,000 இலிருந்து 60,000 வரை அமிலக்கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன தெரியுமா...?
ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த அபாயகரமான அமிலக்கூட்டுக் கலவைகள் ஆயிரமாயிரம் முயல்கள்,குரங்குகள்,எலிகள்,அணில்கள்,பன்றிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் பரிசோதிக்கப்படுகின்றன.பரிசோதனைகளின் போது அவற்றின் கண்கள் குருடாக்கப் படுகின்றன.உறுப்புக்களை எரித்து,அரித்து விடும் அமிலங்கள் வாய்க்குள் ஊற்றப்படுகின்றன.

கொடூரமான சில பரிசோதனைகள் :

அழகு சாதனங்களின் முடிசூடா மன்னியான உதட்டுச் சாயம் எல்.டி 50 முறையில் அதாவது Lethal dose என்ற முறையில் 1927ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த லிதல்டோஸ் முறையில்,ஆசனிக் என்ற தீங்கு விளைவிக்கும் அமிலத்தை முயல் போன்ற பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் விலங்குகளின் வாயில் ஒரு குழாயை நுழைத்து அதில் ஊற்றி பரிசோதனை செய்யப்படுகின்றது.இதனால்,அவ்விலங்குகளின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து விடுகின்றன.அல்லது வாழ்நாள் முழுவதும் பக்கவாத நோய் தாக்கி அவதிப்பட்டு இறந்து விடுகின்றன.
நாம் தலைக்குத் தேய்த்து தலைமுடியை பளபளவென்று வைத்துக்கொள்ள உதவும் ஷாம்புக்கள்,கண்களை அழகுபடுத்தும் மஸ்கராக்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?இந்த வகை பரிசோதனைகளை குருட்டுப்பரிசோதனைகள் என்கிறார்கள்.
இதில் கருணை,இரக்கம்,அன்பு சிறிதளவேனும் இன்றி விலங்குகளின் கண் இமைகளை கத்தரித்து எடுத்து விடுகிறார்கள்.பின் கண்களைப் பெரிதாக்குவதற்காக,அவைகள் கண்களை மூடாமல் இருக்க அவற்றின் கண்மேல் பகுதியை கிளிப் போட்டு நெற்றிப் பகுதியோடு இணைத்து விடுகிறார்கள்.தலையைத் திருப்பாமல் இருக்க சுவரோடு ஒரு உலோக பெல்ட் போட்டு விடுகிறார்கள்.
அதன் பின் ஆரம்பிக்கும் கொடுமைகள்.விதவிதமான அமிலக்கலவைகள் கண்களில் ஊற்றும் போது கதறித் துடிக்கும் இம் மிருகங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் இரத்தத்தை பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அழகுசாதனங்களில் அவற்றை உபயோகப்படுத்துவதால் மனிதர்களுக்குத் தீங்கு விளையுமா,விளையாதா எனக்கண்டுபிடிக்கப் படுகின்றன.ஆனால் அவ்விலங்குகளோ மருத்துவ உதவி ஏதுமின்றி,இரத்தம் கக்கி மடிகின்றன.

இதற்கான தீர்வு என்ன ?

PETA (People for Ethnic Treatment of Animals) போன்ற விலங்குகளின் பாதுகாவலர்களின் எதிர்ப்புக்குரலால் சிந்திக்கத் தொடங்கியவர்களின் சட்டம் ஒன்று அமுல்படுத்தப் பட்டிருக்கின்றது.அதாவது எல்லா அழகு சாதனங்களிலும் ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்.
"இச்சாதனம் விலங்குகளின் மேல் பரிசோதிக்கப்பட்டதல்ல"
எனவே சகோதரிகளே !அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மேக்-அப் பொருட்கள் வாங்கும் முன் அந்தப் பொருளில் "விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவும்.இல்லையென்றால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள் வாங்கவும்.இதனால் அவற்றை உபயோகிக்கும் போது பரிதாபமாக வலியினால் கதறும் விலங்குகளின் குரல் உங்களை உலுக்காதல்லவா..?!

8 comments:

Anonymous said...

very heart throbbing article..
in which we should all think about it..

ச.மனோகர் said...

மிக நல்ல பதிவு...ஆனால் முகப்பூச்சு அழகு கிரீம்களை ஆண்களும் பயன் படுத்தத் தொடங்கிவிட்டனர்.எனவே தலைப்பை ஆண்,பெண் இருவருக்கும் பொருந்துமாறு வைக்கலாம் என்பது என் கருத்து.

இந்த பதிவை என் blog-ல் உங்கள் பெயரோடு மறுபதிவு செய்து கொள்ளலாமா?

பத்மா said...

நல்ல கருத்து இயற்கை தான் அழகு என்ற சிந்தனை மனதில் ஊன்ற வேண்டும்.இதில் மீடியா பங்கு நிறைய.மன அழகே அழகு.

M.Rishan Shareef said...

ஆமாம்.அதற்காகத்தான் இந்தக்கட்டுரை சத்யா.மிக நன்றி.

M.Rishan Shareef said...

நிச்சயமாக நண்பர் பாபு மனோகர்.மறுபதிவு செய்து கொள்ளுங்கள்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் லிப்ஸ்டிக்,மஸ்காரா போன்றவற்றை பெண்கள் மட்டுமே உபயோகிக்கின்றனர்.அதனாலேயே அத் தலைப்பை இட்டேன்.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே...!

M.Rishan Shareef said...

மிகச் சரி திருமதி.பத்மா.அந்தக் கருத்து எல்லோரிடமும் மிக ஆழமாக வேரூன்ற வேண்டும்.
வருகைக்கு நன்றி...!

Anonymous said...

கொடூரமாக இருக்கே...
நாங்க எப்பவும் இயற்கையான பொருட்களை (ஆயுர்வேதம்]தான் உபயோகிப்பது...நிம்மதியாக இருக்கு என்னால் ஒரு முயல் கஸ்டபடாம இருக்கேன்னு

M.Rishan Shareef said...

வாங்க தூயா..!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)