Sunday, April 12, 2009

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்

கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்

பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி - நவீன விருட்சம் காலாண்டிதழ்

12 comments:

Muruganandan M.K. said...

வார்தைகளை அழகாகப் பின்னியிருக்கிறீர்கள். இத்தகைய சாகசக்காரி(காரர்) களால்தானே எமது வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது

ஆ.சுதா said...

கவிதை புனைவு அருமை, சொற்களை அழகாக் கோர்த்திருக்கின்றீர்கள், பிடித்திருந்தது.
ஆனால் நீங்கள் சொல்லும் சாகசகாரிகள் மிகுதியல்ல என்று என்னுகின்றேன்.

இப்னு ஹம்துன் said...

உண்மையில் உங்கள் எழுத்தும் சாகசம் செய்கிறது, வாசகரை மயக்கி :-)

சாந்தி said...

//பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்//

மனித மனங்கள் நம்பிக்கைகளால் குதறப்படும் கொடுமை என்றும் தொடர்கதைதான்.......

சாந்தி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள்//

சாகசம் தங்கிய வரிகள் ரிஷான்! :)

கவிதைக்கான படமும் அருமை!

Sakthy said...

ஏன் இந்த கொலை வெறி ரிஷான் ..?:(

//
ஆ.முத்துராமலிங்கம் said...

ஆனால் நீங்கள் சொல்லும் சாகசகாரிகள் மிகுதியல்ல என்று எண்ணுகின்றேன் ..........//
ம்ம்ம்ம் .....

ஒரு பெண் ஏமாற்றி போனதாய் நான் இது வரையிலும் (என்னை சுற்றி ) காணவில்லை ரிஷான் ..அதனாலேன்னமோ கொஞ்சம் நெருடுகிறது எனக்கு ..
ஆனால் உங்கள் வார்த்தைகளின் ஜாலம் பிரமிப்பு ஊட்டுகிறது ..
வாழ்த்துக்கள் தோழரே ..

M.Rishan Shareef said...

அன்பின் டொக்டர் எம்.கே.முருகானந்தன்,

//வார்தைகளை அழகாகப் பின்னியிருக்கிறீர்கள். இத்தகைய சாகசக்காரி(காரர்) களால்தானே எமது வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது//

மிகச் சரி. அரசியல் கவிதைதான். ஆணாகச் சாடினால் புரிந்துகொள்வார்களென, சாகசக்காரியாக்கினேன். வாழ்வைச் சிதைக்கும் சாகசக்கார உலகில் ஆணென்ன? பெண்ணென்ன? அகப்பட்டவர்கள் எல்லோரும் பொம்மைகள்தான் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர் !

M.Rishan Shareef said...

அன்பின் ஆ.முத்துராமலிங்கம்,

//கவிதை புனைவு அருமை, சொற்களை அழகாக் கோர்த்திருக்கின்றீர்கள், பிடித்திருந்தது.
ஆனால் நீங்கள் சொல்லும் சாகசகாரிகள் மிகுதியல்ல என்று என்னுகின்றேன்.//

மிகுதியானவர்களும் இருக்கிறார்கள் நண்பரே..ஆனால் தம்மை சாகசக்காரர்கள் எனக் காட்டிக் கொள்ளாமல் அப்பாவி முகத்தைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,

//உண்மையில் உங்கள் எழுத்தும் சாகசம் செய்கிறது, வாசகரை மயக்கி :-)//

:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

////பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்//

மனித மனங்கள் நம்பிக்கைகளால் குதறப்படும் கொடுமை என்றும் தொடர்கதைதான்.......

சாந்தி//

மிகச் சரி சகோதரி. அனேகமானோர் குதறிவிட்டு ஏதுமறியாதோர் விலகிச் சென்று இன்னொருவரைக் குதறவெனத் தருணம் பார்த்திருக்கிறார்கள் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//ஏன் இந்த கொலை வெறி ரிஷான் ..?:(

//
ஆ.முத்துராமலிங்கம் said...

ஆனால் நீங்கள் சொல்லும் சாகசகாரிகள் மிகுதியல்ல என்று எண்ணுகின்றேன் ..........//
ம்ம்ம்ம் .....

ஒரு பெண் ஏமாற்றி போனதாய் நான் இது வரையிலும் (என்னை சுற்றி ) காணவில்லை ரிஷான் ..அதனாலேன்னமோ கொஞ்சம் நெருடுகிறது எனக்கு ..
ஆனால் உங்கள் வார்த்தைகளின் ஜாலம் பிரமிப்பு ஊட்டுகிறது ..
வாழ்த்துக்கள் தோழரே ..//

ஆணையோ, பெண்ணையோ சாடவில்லை. அரசியல் கவிதையாகப் பாருங்கள்..:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் கேயாரெஸ் ..........,

////உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள்//

சாகசம் தங்கிய வரிகள் ரிஷான்! :)

கவிதைக்கான படமும் அருமை!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ! :)