வாழ்க்கை, மிகுந்த ஒரு அலுப்பைத் தந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்தபடி இருக்கிறது. ஒரே பாதையில், சாளரங்களூடாக எந்த விசித்திரமும் அற்று ஒரே காற்று முகத்திலறைய மிக வேகமான பயணம். எல்லா நிறுத்தங்களிலும் ஏதாவதொரு சுவாரஸ்யத்தைத் தேடுகிறது மனது. சுவாரஸ்யங்களற்ற வெளி, அலுப்பை மேலும் அகலமாக்கியபடி பரந்து கிடக்கிறது.
உடுத்திருக்கும் ஆடையில் ஏதாவதொரு குறை சொல்ல, சிறு கீறல் குருதிக் கசிவுக்குக் கூட உடல் பதறி ஒத்தடம் கொடுக்க, சாப்பிட்டாயா? கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன? என உண்மையான ஆதரவுடன் கேட்கவென ஓர் அன்பான நெருங்கிய துணையைத் தேடுகிறது யாருமற்ற இவ்வெளியில் பாழ்பட்டுக்கிடக்கும் இம்மனது.
காட்சிகளோடும் வர்ணத் திரையை எவ்வளவு நேரம்தான் அலுப்பில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க இயலும் ? அரிதாரம் பூசிய மனிதர்களை யாராரோ ஆட்டுவித்தபடி இருக்க முகங்களில் உணர்ச்சிகளை வலிந்து ஒட்டுவித்தபடி அசைந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஒலி அலைவரிசைகள் மட்டும் என்னவாம்? இதயத்திற்கு நெருக்கமான தாய்மொழிப்பாடல்களைக் கேட்கவிரும்பி காதுகளை அதன் திசையில் திருப்பினால் ஆங்கிலக்கலப்பின்றிய வரிகளையும், தெளிவான உச்சரிப்பையும் வேண்டிச் சோர்கிறது மனது.
தனிமையின் கோரக்கரங்கள் மிகக் கொடியவை. கூர்நகங்களை அவை தம் விரல்களில் பொறுத்திவைத்திருக்கின்றன. அடர்ந்த இருளில் நித்திரையின்றித் தவிக்கும் பொழுதுகளில் அவை இரத்தம் கசியக் கசியக் கீறுகின்றன. தூக்கமின்மை ஒரு பிசாசின் உருவம் பொதித்து வந்து தம் விரல்களை, கூர்நகங்களைக் காட்டி அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதன் அகலத்திறந்த வாய்க்குள் பழைய கசடு நினைவுகளின் துணுக்குகள் இன்னும் எஞ்சியிருக்கிறது.
தனக்கு மட்டுமேயான உணவைத் தானே அரைகுறையாகச் சமைத்து, பகிர்ந்து கொள்ள யாருமற்ற இடத்தில் விழுங்கிச் செரிப்பது துக்ககரமான நிகழ்வன்றி வேறென்ன ? அந்தி நேர வானின் சிவப்பை, கடலின் மீது குதித்துப்பாயுமொரு மீனின் துள்ளலை, ஆதரவாய் வளர்த்த செடியின் முதல் மஞ்சள் மொட்டைக் கைநீட்டிக் காட்ட அருகினில் யாருமற்ற பொழுதின் வெறுமையை என்னவென்று சொல்ல?
சிகை திருத்துபவன் ஒன்றிரண்டு இளநரையைக் கண்டு ஆதூரமாக விசாரித்தால் கூட அதில் சுயநலம் இருக்குமோ என ஆராய்ந்து பார்க்கிறது மனது. செருப்புத் தைப்பவன் கரங்கள் ஊசியை சவர்க்காரத்தில் தோய்த்து இலாவகமாக இறப்பர், தோலுக்குள் செலுத்தி இழுப்பதைப் போல வாழ்க்கையும் தனிமையும் மனதின் முனைகளை வலிக்க வலிக்க இழுத்தபடியிருக்கிறது.
வலுத்த காற்றடிக்கும் போது அந்தரத்தில் ஆடும் சிறு பஞ்சுத் துணுக்குக்கும், ஒரு பாரிய பட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது ? இரண்டுமே காற்றின் வழி மிதந்தபடி இருக்கின்றன. தூரத்தே நோக்கும்போது இரண்டும் சிறுத்தேதான் தெரிகின்றன. என்ன ஒரு வித்தியாசம், பஞ்சு சுயமாய் மேலெழுந்து, தன்பாட்டில் பறக்கிறது. பட்டத்துக்கு மட்டும் அதன் திசையைத் தீர்மானிக்கவென ஒரு கரமும், எல்லையை விட்டு நீங்காதிருக்க நூலொன்றும் தேவையாக இருக்கிறது. இதேதானே ஒரு மாநகரப் பெரும்பணி வெள்ளத்தில் மூழ்கிய ஒரு தனித்த மானிடனுக்கும் ஒரு சிறைக்கைதிக்கும் உள்ள வித்தியாசம் ? பூசைகளுக்காகவே வளர்க்கப்படும் கோயில் பூக்களுக்கும், தானாகப் பூத்துதிரும் காட்டுப்பூக்களுக்கும் உள்ள வேறுபாடு?
கடலலைகளுக்கும் , அதன் சிறு நுரைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கப்போகிறது ? காற்றின் கரங்களோடு அள்ளிச் சுமந்துவந்ததை முற்றிலும் சம்பந்தமற்ற மணல்பரப்பில் விட்டுச் சென்று, வெடித்துச்சிதற வைப்பதை சமுத்திரப்பெருவெளி அறிந்தேதான் செய்கிறதா ? அவ்வாறெனின் அந்நியநாடுகளில் துயருரும் அத்தனை எளிய நெஞ்சங்களும் தம்மைக் காற்றின் கரங்களோடு சுமந்துவந்த விமானத்தைத் தானே சாடவேண்டும் ?
அப்படி எதையும், எவரிடமும் சாடக்கூட முடியாத வெறுமையும், தனிமையும், மன உளைச்சல்களும் பலரைத் தன்னையே கொன்றுவிட ஒரு நினைப்பை உந்திவிடுகின்றன. வாழ்க்கையின் அத்தனை அழகியலையும், சுவாரஸ்யங்களையும், பழஞ்சேலையால் போர்த்தி அரவணைத்துக் கொண்ட தாய்மை மிகுந்த அன்பினையும் கனவுகளையும் இழந்துவிட்டதான எண்ணம் மிகைத்தபொழுதில் தான் தற்கொலைகள் சாத்தியப்படுகின்றனவாக இருக்கும்.
காலம் காலமாக வரண்ட நிலங்கள் எப்பொழுதும் கொடியவை. யுகங்களாகத் தாகித்ததை எப்பொழுதேனும் தீர்க்கவெனப் பெய்யும் மழைத்துளிகளை கிஞ்சித்தும் வெட்கமேயற்று முழுதாக உறிஞ்சிக் குடித்துவிடுகின்றன. பின்னரான தாகத்துக்குத் தண்ணீர் தேடித் திரும்பவும் காலம்காலமாகக் காத்துக் கிடக்கும் பூமியை ஒத்தது இந்தப் பாழ்மனது. அன்பினை எவரேனும் வார்த்துவிட்டு நகரும்போது ஆசையாசையாய் முழுக்கக் குடித்துவிட்டுத் திரும்பவும் அன்பிற்காகக் காத்துக்கிடக்கிறது.
வனமொன்றுக்குள் தன் பாட்டில் அழகாக வளர்ந்திருந்த விருட்சமொன்றைத் தரித்து வீழ்த்தி அதன் உயிரகற்றி இலைகளகற்றிச் சருகுகளகற்றிச் சாயமிட்டுப் பொலிவாக்கிக் கூடத்தில் வைத்திருந்து பின் குப்பைமேட்டுக்கு வீசியெறிவது போல அல்லது பறத்தல் இயலுமான சிறு பட்சியின் சூழல் பிரித்து, இறக்கைகள் தரித்து, கூண்டுக்குள் வைத்துக் கொஞ்சச் சொல்வது போலத்தானே இந்த புலம்பெயர் அந்நியநாட்டு வாழ்க்கை ?
இருப்பிடத்தின், பணியிடத்தின் நாற்திசைகளிலும் மனது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அலைந்தபடியே இருக்கும். அன்பாய்த் தலை கலைக்க, தோள்தடவ, புன்னகைத்து நேசம் சொல்ல, நெற்றியின் உச்சியில் முத்தமிட்டு நகர என எவரொருவராவது வருவதின் நிகழ்தகவுகள் பூச்சியமாக இருப்பினும் எல்லாவற்றையும் எதிர்பார்த்த மனது அலைந்தபடியே இருக்கும்.
இப்பொழுதில் புத்தகங்களும், சில வலைத்தள எழுத்துக்களும் நேரத்தை விழுங்குவதில் பெரும்பங்கு வகித்திடினும் ஏதேனும் ஒரு அனுபவத்தை, ஒரு சிறு மகிழ்வை மனதில் மீளெழுதிச் செல்கின்றன. இறுதிக்காலம் வரையில் எழுத்தின் வரிகளில் பாதங்களை நட்டுவித்தபடி பயணத்தைத் தொடர விரும்பும் என் சுமையைத் தாங்கிட எத்தனை காலத்துக்கு எழுத்துக்கும் இயலுமோ தெரியவில்லை. வாழ்வின் பாரத்தைத் தவிர்க்கப் பணம் கேட்டுத்தகவல் வரும் பொழுது கவிதைகளையா கொடுத்துக் களைப்பாற்ற முடியும் ?
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - 'புகலி' இணைய இதழ்
13 comments:
உணர்ச்சிகரமான வரிகள் ரிஷான். நன்மையே நடக்க நினைப்போம்.
என்னப்பா ஆச்சு?
ஏன் தளர் மனநிலை?
மீள்க, நமக்கான நாள்களைச் சமைக்க!
கடைசி வாக்கியம் சத்தியமானதுதான். அதே சமயம் அந்த எழுத்துப் பயணம் தரும் ‘சிறு மகிழ்வே’ எஞ்சிய வாழ்வை அலுப்பின்றித் தொடர்ந்திட உந்துதலாகவும், களைத்த மனது இளைப்பாற உதவும் அன்னை மடியாக இருப்பதையும் மறுக்க இயலாதுதானே.
தனக்கு மட்டுமேயான உணவைத் தானே அரைகுறையாகச் சமைத்து, பகிர்ந்து கொள்ள யாருமற்ற இடத்தில் விழுங்கிச் செரிப்பது துக்ககரமான நிகழ்வன்றி வேறென்ன ? அந்தி நேர வானின் சிவப்பை, கடலின் மீது குதித்துப்பாயுமொரு மீனின் துள்ளலை, ஆதரவாய் வளர்த்த செடியின் முதல் மஞ்சள் மொட்டைக் கைநீட்டிக் காட்ட அருகினில் யாருமற்ற பொழுதின் வெறுமையை என்னவென்று சொல்ல?
தனிமையின் துயர் உணர்த்தும் வரிகள் .வழி நெடுக வேதனையை வடித்திருக்கிறீர்கள். (தனிமை விரைவில் நீங்க என் வாழ்த்துகள் )
//வாழ்வின் பாரத்தைத் தவிர்க்கப் பணம் கேட்டுத்தகவல் வரும் பொழுது கவிதைகளையா கொடுத்துக் களைப்பாற்ற முடியும் ?//
வார்த்தைகளுக்குள் அடுத்தவரி பேசாமல் கட்டப்பட்டுள்ளது நினைவுகள்.
பாழ்மனக் குறிப்புகள் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் தடையங்களை விட்டுச் சென்றுள்ளது.
பாராட்டுக்கள்.
சாந்தி
என்னவாயிற்று உங்களுக்கு. நலம் பெறுக.
அன்பின் விக்னேஷ்வரன்,
//உணர்ச்சிகரமான வரிகள் ரிஷான். நன்மையே நடக்க நினைப்போம்.//
:)
நிச்சயமாக நண்பா !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
அன்பின் இப்னுஹம்துன்,
//என்னப்பா ஆச்சு?
ஏன் தளர் மனநிலை?
மீள்க, நமக்கான நாள்களைச் சமைக்க!//
எல்லோரும் தாண்டிவரும் தனிமையின் ஒரு பதிவு. அவ்வளவே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ராமலக்ஷ்மி,
//கடைசி வாக்கியம் சத்தியமானதுதான். அதே சமயம் அந்த எழுத்துப் பயணம் தரும் ‘சிறு மகிழ்வே’ எஞ்சிய வாழ்வை அலுப்பின்றித் தொடர்ந்திட உந்துதலாகவும், களைத்த மனது இளைப்பாற உதவும் அன்னை மடியாக இருப்பதையும் மறுக்க இயலாதுதானே.//
மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். தனித்து விடப்படுபவனுக்கு ஏதேனும் ஒரு கலைவடிவம் அவனது தனிமைக்குத் தீர்வெனத் தேவைப்படுகிறது. எனக்கு எழுத்து. :)
எழுத்தும் இல்லையெனில் இவ்வாறான மனச்சுமைகளை எதன் மேல் ஏற்றியனுப்புவது? அது ஒன்றுதான் சுயநலமின்றி, வஞ்சகமின்றித் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது விழும்போதும்..எழும்போதும் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் பூங்குழலி,
//தனக்கு மட்டுமேயான உணவைத் தானே அரைகுறையாகச் சமைத்து, பகிர்ந்து கொள்ள யாருமற்ற இடத்தில் விழுங்கிச் செரிப்பது துக்ககரமான நிகழ்வன்றி வேறென்ன ? அந்தி நேர வானின் சிவப்பை, கடலின் மீது குதித்துப்பாயுமொரு மீனின் துள்ளலை, ஆதரவாய் வளர்த்த செடியின் முதல் மஞ்சள் மொட்டைக் கைநீட்டிக் காட்ட அருகினில் யாருமற்ற பொழுதின் வெறுமையை என்னவென்று சொல்ல?
தனிமையின் துயர் உணர்த்தும் வரிகள் .வழி நெடுக வேதனையை வடித்திருக்கிறீர்கள். (தனிமை விரைவில் நீங்க என் வாழ்த்துகள் )//
உங்கள் வாழ்த்துக்கள் நிறைவேறட்டும்..!
(நான் வீட்டுக்குப் போவதைச் சொல்கிறேன் :) )
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் சக்தி,
//:-(//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !
அன்பின் சாந்தி,
////வாழ்வின் பாரத்தைத் தவிர்க்கப் பணம் கேட்டுத்தகவல் வரும் பொழுது கவிதைகளையா கொடுத்துக் களைப்பாற்ற முடியும் ?//
வார்த்தைகளுக்குள் அடுத்தவரி பேசாமல் கட்டப்பட்டுள்ளது நினைவுகள்.
பாழ்மனக் குறிப்புகள் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் தடையங்களை விட்டுச் சென்றுள்ளது.
பாராட்டுக்கள். //
:)
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் டொக்டர் எம்.முருகானந்தன்,
//என்னவாயிற்று உங்களுக்கு. நலம் பெறுக. //
ஒரு மாறுதலுக்காக எனது டயறிக் குறிப்புக்களை இங்கெழுதிப் பார்த்தேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர் !
Post a Comment