Wednesday, September 2, 2009

புலம்பெயர் பறவைகளை இனி...


        கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும். பகல் முழுதும் அனல் சுமந்தலைந்த காற்று, இரவாகுகையில் நிலவிடம் போய்க் குளிர்ச்சியை வாங்கிவருகிறது. இதமான ஒரு தாலாட்டினைப் போல உடல் தடவித் தடவி வீசிப் போகிறது.

        அப்படியான ஒரு நிலையில்தான் மொட்டைமாடி உறக்கம் வாய்த்தது. மொட்டைமாடிகள் அகலமான தொட்டில்கள். ஆட மாட்டாது. அசைய மாட்டாது. எனினும் மனதில் நிம்மதி நிறைந்திருப்பவர்களுக்கு அதன் பரப்பெங்கும் ஆழமான உறக்கத்தை ஏந்திவருகிறது. அறைக்குள் விடிகாலைவரை சிறு வெளிச்சமும் தன்னை அண்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவர்களுக்கு மொட்டை மாடி உறக்கம் சரிப்பட்டுவராது என நினைக்கிறேன்.

        இங்கெல்லாம் விடிகாலை நான்கு மணிக்கே உலகின் முதல் கீற்று கண்தடவிப் பார்க்கிறது. பிறகு மரண வீட்டுக்குத் தொலைவிலிருந்து வரும் உறவுகள் போல, சிறிது சிறிதாகக் கீற்றுக்கள் சேர்ந்துவருகின்றன. அத்தோடு காற்றை விழுங்கிய வெயிலைப் பின்னாலேயே கூட்டிவருகின்றன.

        கோடை காலக் காலை வெயில் சுளீரென அடிக்கும். அதன் மறைமுகக் கரங்களால் 'உறங்கியது போதும்.விழித்துக்கொள்' என உடல் தட்டித் தட்டி எழுப்பும். புருவங்கள் சுருக்கி, சிறிதாய் விழி திறந்துபார்க்க வானம் மிக அழகான நீல நிறத்தைத் தன் மேல் பூசிக் குளித்து, வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். மொட்டை மாடிக்கருகில் மரங்களிருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். இளங்காலையில் சிறு குருவிகள், பட்சிகள் அவற்றில் வந்தமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும். கிளியின் ஓசையை 'கீ கீ' என்பது போல, பூனையின் ஓசையை 'மியாவ்' என்பது போல சில பட்சிகளின் ஓசையை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. அதன் ஒலியை உள்வாங்கும்போது இரசிக்கத் தெரிகிறது. ஆனால் தமிழின் எந்த எழுத்துக்களால் அதனைச் சுட்டி விளிப்பது எனத் தெரியவில்லை.

        பறவைகள் மனிதரை விடவும் அறிவார்ந்தவை என எண்ணுகிறேன். சில மனிதனின் மொழியை அப்படியே உள்வாங்கி மீளப் பேசுகின்றன. அதற்காக அவை எழுதி வைத்துக் கொள்வதில்லை. ஆய்வுகள் செய்வதில்லை. ஆனாலும் பேசுகின்றன. மனிதனால் இவ்வளவு வளர்ந்தும், இவ்வளவு கற்றும் பறவைகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என அதன் மொழியைக் கிரகிக்க முடியவில்லை. கற்றுக் கொள்ள முடியவில்லை.

        பறவைகளுக்கும் எனக்குமான உறவுகள் சிறுவயதிலிருந்தே வாய்த்தது. எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த வயலில் கோவணம் கட்டி வயலுழும் விவசாயியுடனும், ஏர் சுமக்கும் எருமை மாடுகளுடனும் சேர்ந்து சேற்றில் கால்கள் முழங்கால்வரை புதையப் புதைய அலைந்திருக்கிறேன். நாற்று முளைத்து பிடுங்கி நடும் காலங்களில் நானும் என் சிறுவிரல்களால் நாற்று, நாற்றாய்ப் பிரித்து சேற்றில் ஊன்றியிருக்கிறேன். அவ்வேளை காலுக்குக் கீழால் நண்டுகள் குறுகுறுக்கும். எனினும் கடித்து வைத்ததில்லை. வயல் அறுவடைக் காலங்களில் கூலிப் பெண்கள் வெட்டித் தரும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கொண்டு சேர்த்து அடுக்கியிருக்கிறேன். உடலெல்லாம் அரிக்கும். எனினும் அதிலோர் ஆனந்தம் இருக்கிறது. பின்னர் அக் கட்டுக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கச் செய்வார்கள். எல்லாம் முடிந்த பின் நிலத்தில் கிடக்கும் நெல்லை மட்டும் கூட்டியெடுப்பார்கள். வைக்கோல் தனியாகக் குவியும்.

        அறுவடைக் காலங்களில் சில சமயம் வெட்டப்பட்ட கதிர் நாற்றுக்களுக்குள் சின்னஞ்சிறு குருவிக் கூடுகளிருப்பதைக் கண்டிருக்கிறேன். வயற்குருவி, நெல்லுக்குருவி அல்லது மழைக்குருவியின் கூடாக இருக்கலாம். அதற்குள் சில சமயம் முட்டைகளும், குஞ்சுகளும் கூட இருந்திருக்கின்றன. வண்ண வண்ண முட்டைகளை மூலையொன்றில் ஒன்றாகச் சேர்த்துவைத்திருக்கிறேன். குஞ்சுகளை தாய்ப்பறவை வந்து எடுத்துப் போகட்டுமென அப்படியே கூட்டுக்குள் விட்டு வைத்திருக்கிறேன். மொட்டையாகிப் போன வயலில் தாய்க் குருவிகள் வந்து இரைந்து இரைந்து தன் கூட்டினைத் தேடும். தாய்க் குருவிகளைக் கண்டதும் எனது கைக்குள் கூட்டினை வைத்து வான் நோக்கி ஏந்தி நிற்பேன். அவை ஒரு போதும் அருகினில் வந்து குஞ்சுகளை எடுத்துப் போனதில்லை.

        எங்கள் வீட்டுவேலியில் அடர்ந்து போய்க் குட்டையாகி பூக்காத, காய்க்காத எலுமிச்சை மரமொன்று இருந்தது. அதன் உட்புறத்தில் ஒரு முறை கொண்டைக் குருவிகள் கூடுகட்டி விட்டன. குருவிகள் அருகிலாச் சமயம் ரகசியமாக எட்டிப் பார்ப்பேன். நான் பார்த்திருக்க முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவையெல்லாம் பறக்கப் பழகியபின்பு கூடு வெறுமையாகிப் போகும். கூடும் இற்றுப் போய்விடும். பிறகோர் நாள் சோடிக் குருவிகள் மீண்டும் பறந்துவரும். புதிதாய்க் கூடு கட்டும். முட்டையிடும். குஞ்சு பொறிக்கும். எல்லாம் பறக்கப் பழகிய பின்பு கூடு இற்றுப் போகும். இப்படியாக ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகையில் காய்க்காத குட்டை எலுமிச்சை மரம் முட்டைகளைப் பூவாகப் பூப்பது போலவும், குஞ்சுகளைக் காயாக்கிப் பார்ப்பது போலவும் தன்னை மலடென்று காட்டிக் கொள்ளாமல் மகிழ்வோடு காற்றில் அசைந்தாடும்.

        எல்லாம் நல்லபடியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓர் நாள் ஒரு திருட்டுப் பூனை அம் மரத்தின் கிளைகளுக்கிடையில் ஒளிந்திருந்த சிறு கூட்டைத் தன் பேய்நகங்களால் பிய்த்தெறிந்து குஞ்சுகளை ருசி பார்த்து விட்டது. சோடிப் பறவை வந்து குஞ்சுகளைத் தேடிக் கீச்சிட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அவை மரத்திடம் இது குறித்து நியாயம் கேட்பது போலத் தோன்றியது. 'நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாயென்றுதானே உன்னிடம் விட்டுப் போனோம்' எனச் சண்டை பிடிப்பது போலிருந்தது. அதன் பிறகு எக்காலத்திலும் அக்குருவிகள் அம்மரத்தில் கூடு கட்டவென வரவில்லை. பின்னர் எந்தக் குருவிகளும் வரவில்லை. பின்னர் மரம் குற்றவுணர்வால் இற்றுப் போகத் தொடங்கியது.

        என் வீட்டில் சிறு குழந்தைகள் நடமாடத் தொடங்கிய நேரம், வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் முறுக்குத் துண்டுகள், பிஸ்கட் துகள்கள் சிதறிக் கிடக்கும். இளங்காலையிலேயே சாம்பல் குருவிகளும், மைனாக்களும் வந்து அவற்றை இரையெனக் கொத்திக் கொண்டிருக்கும். இம் மைனாக்கள் வருவதை வீட்டுச் சிறுவர்கள் மிக நன்றாக அவதானித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவதானம் நம்மை விடவும் கூர்மை வாய்ந்தது. மைனாக்களுக்கு முதலில் திண்ணையில் உணவிட்டு, பிறகு தலைவாசலில் உணவிட்டு, பிறகு சிறிது சிறிதாக வீட்டுக்குள்ளேயே வந்துபோகப் பழக்கியிருந்தார்கள். அவை வெகு இயல்பாக உள்ளே வந்து உணவுண்டு சென்றன. அவை வந்து அச்சமேதுமின்றி திருப்தியோடு உண்டு செல்வது வீட்டிலிருந்த எல்லோருக்குமே மிக ஆனந்தமாக இருந்தது. பிறகு வந்த அடைமழை நாட்களில் மைனாக்கள் வரவில்லை. பெய்த மழையில் அவை தங்கள் பழகிய தடங்களை மறந்து போயிற்று. மழை அழித்துப் போயிற்று.

        அதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது. அது போல இல்லை அதன் பெட்டைக் கோழி. மிகச் சாதுவானது. காலையில் கூட்டினைத் திறந்துவிட்டதும் எங்கோவெல்லாம் போய் மேயும். சரியாகப் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையில் வீட்டுக்கு வந்து முற்றத்தில் கிடந்த அதன் கூட்டுக்குள் ஏறி முட்டையிட்டுச் செல்லும். அதன் முட்டைகளைச் சேர்த்து வைத்து நாங்கள் ஒரு முறை அதனை அடைகாக்க வைத்து பன்னிரெண்டு குஞ்சுகளைப் பெற்றோம். கைக்கடக்கமான கோழிக் குஞ்சுகள் மிக அழகானவை. அவையும் பார்த்திருக்க வளர்ந்தன.

        எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றன என எண்ணி மகிழ்ந்த நாட்களில்தான் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. சில காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அனாதைப் பிணங்கள் போல உடலில் காயங்களோடு முற்றத்தில் இரத்தம் வடியச் செத்துக் கிடந்தன. பிறகுதான் இரவுகளில் திருடனைப் போல வரும் கீரிப் பிள்ளைகள் வேட்டையைக் காட்டுவது புரிந்தது. நாம் ஆசையாகப் பார்த்து இரசித்து வளரும் உயிர் கண்ணெதிரே செத்துக் கிடப்பதை காணச் சகிக்கமுடிவதில்லை ஒரு போதும். மிகுந்த கவலையடையச் செய்யும் கணம் அது. பிறகு எஞ்சியிருந்த எல்லாக் கோழிகளையும் அதன் குடும்பத்தோடு விற்றுவிட்டோம்.

        அதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முற்றத்தில் கோழிக்கூடு பாழடைந்து போய் வெறுமையாகச் சில மாதங்கள் அப்படியே கிடந்தன. நான் அதைப் புதுப்பித்தேன். கீரிப்பிள்ளைகள் வந்துபோன ஓட்டைகளை அடைத்தேன். நெளிந்திருந்த வலைக்கம்பிகளைச் சீரமைத்தேன். உயிர்கள் வாழ்ந்துபோன பரப்பு வெறுமையாகக் கிடக்கக் கூடாதென நான் வீட்டில் சொல்லி, கழுத்தில் சிவப்பு மாலையிட்ட பச்சைக் கிளியொன்றை கடையில் வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். அது பேசப் பழக்கும் பருவம் தாண்டிய கிளி. கூட்டுக்குள் தவறியேனும் விரலொன்றை இட்டால் கொத்திவிடும் முரட்டுக்கிளி. கொய்யாவும், பச்சை மிளகாயும், பழங்களும், பிசைந்த சோறும், பிஸ்கட்டும் இட்டுவளர்த்து வந்தோம். அதன் கூட்டுக்குள் எப்பொழுதும் பழங்களும் உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கும்.

        இதுபோல கோடை நாளொன்றின் மாலைவேளையொன்றில் அந்தக் கிளிக் கூட்டிற்கு வெளியே அடைக்கப்பட்ட வலைக்கம்பிகளில் தொங்கியபடி இன்னுமொரு கிளியைக் கண்டோம். கூட்டுக்குள்ளிருந்த கிளி தன் உணவைக் கொத்தியெடுத்து, வெளியிலிருந்த கிளிக்குத் தன் சொண்டுகளால் ஊட்டிக் கொண்டிருந்தது. இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கூட்டின் கதவை இலேசாகத் திறந்துவைத்து தூரத்திலிருந்து பார்த்திருந்தேன். பல நிமிடங்கள் கழிந்தபின்னர் வெளியிலிருந்த கிளி தானறியாமலே உணவின் மேல் ஈர்க்கப்பட்டு, அல்லது மற்றக் கிளியின் மேல் ஈர்க்கப்பட்டு கதவு வழியாகக் கூட்டுக்குள் வந்துவிட்டது. கதவை அடைத்து விட்டேன்.

        அவை இரண்டும் கூட்டுக்குள் இடைவிடாது காதல் செய்தன. இரண்டுமாகச் சேர்ந்து உணவிடும்போது,  தண்ணீர் வைக்கும் போது என் கைகளைக் கொத்திக் காயப்படுத்தின. இனி வளர்க்கச் சரிப்பட்டு வராது என உணர்ந்த நாளில் கூட்டினைத் திறந்து கிளிகளைப் பறக்கவிட்டேன். சடசடத்துப் பறந்த கிளிகள் அருகிலிருந்த மாமரத்தில் போய் நின்றன. பிறகு எங்கோ தொலைவு நோக்கிப் பறந்தன. எப்பொழுதாவது சில கிளிகள் மாம்பழம் கொத்த வருகையில் அவற்றுக்குள் அவையிரண்டையும் கண்களால் தேடுவேன்.

        பிறகு அதே கூட்டுக்குள் லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன். கிளிவகைதான் எனினும் சிறியவை. பல வர்ணங்களைக் கொண்டவை. விடிகாலையில் எழுந்ததுமே வாய் ஓயாத மனிதர்களைப் போலச் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருப்பவை. மிக அழகானவை. இரு சோடிகள் வாங்கிவந்து கூட்டினுள் இட்டேன். ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே பிரிந்து அவை காதல் செய்தன. கொஞ்சிக் கொண்டன. பருகவென வைக்கும் நீரில் குளித்துக் கொண்டன. பட்சிகளை விற்றவரின் ஆலோசனைப் படி கூட்டுக்குள் செதுக்கித் துளையிட்டு மூடிய தேங்காய் மட்டைகள் இரண்டைத் தொங்கவிட்டேன். அவை முட்டைகளிட்டன. அடை காத்தன. குஞ்சுகள் பொறித்து அவையும் வளர்ந்து பெரிதாகின. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஆண் பட்சிக்கோ, பெண் பட்சிக்கோ சோடி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சோடியில்லையென்றால் அத் தனிப் பட்சி மற்ற எல்லாப் பட்சிகளோடும் மிக மூர்க்கமாக, இரத்தம் கசியச் சண்டையிடும். கொத்திக் கொள்ளும்.

        அதனால் கூட்டுக்குள் தனிப்பட்சி உருவாகினால் உடனே அதனை வேறு தனிக்கூட்டுக்கு மாற்றி அதை மட்டும் விற்றுவிடுவேன்.  இப்படியாகக் குருவிகள் பார்த்திருக்கப் பெருகிற்று. உணவிட்டுச் சமாளிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக தேங்காய் மட்டைகளைத் தொங்கவிடக் கூட்டுக்குள் இடமற்றுப் போயிற்று. அதைவிடவும் முக்கியமாக, விடிகாலையில் எல்லாமாக எழுப்பும் சத்தத்தில் வீட்டில் எல்லோரினதும் உறக்கம் போயிற்று. பிறகு அவற்றை அக் கூட்டோடே விற்றுவிட்டோம். இப்பொழுது முற்றத்தில் எந்தக் கூடுகளும் இல்லை. வளர்ப்புப் பட்சிகளும் இல்லை.

        இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள். நாம் நேசித்துப் பாதுகாக்கும் எதுவும் நம்மை விட்டுப் பிரிந்துபோனால் எளிதில் மறந்துவிடுவதற்கில்லை. பறவைகள் வானில் பறக்கையில் தங்கள் தடங்களை விட்டுப் போவதில்லை. மனிதக் கண்ணுக்குப் புலப்படா வான்வெளிப் பாதைகளை அவை தம் விழிகளில், பறக்கப் பயன்படும் சிறகுகளில் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கின்றன.  சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.

        பட்சிகளுக்கே இப்படியென்றால் ஆதி முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனிடமும் வாழ்வு குறித்தான எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும்? சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான்? அவனது வசிப்பிடங்களில் பிற ஏதேனுமொரு காரணியால் அவனது அமைதிக்குப் பங்கம் வரும்வரையில் நான் மேற்சொன்ன லவ்பேர்ட்ஸ் பறவைகள் போல ஒன்றாகச் சோடியாகக் கலந்து மகிழ்வாகப் பேசி மகிழ்ந்து, சிரித்து... ஒவ்வொரு மனிதனும் தன் கணங்களை மகிழ்வோடு நகர்த்தியிருப்பான்.

        அது போன்ற மனிதர்கள்தான் இன்று முள்வேலி திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு  நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். எனக்கே நான் நேசித்த பட்சிகள் குறித்தான நாட்கள் இன்னும் மறக்கவில்லை. நினைக்கும் கணந்தோறும் அவை வண்ணச் சிறகுகளை அசைத்தபடியும் அதன் மொழிகளை உதிர்த்தபடியும் மனம் முழுதும் பறந்துகொண்டே இருக்கின்றன. தனக்கான மண்ணில் அழகாகக் கூடுகட்டி வாழ்ந்து, ஆயுதங்களின் அறுவடை நாளில் தம் கூட்டினைக் குடும்பத்தைத் தொலைத்துத் தனித்துப் போன அப்பாவி வயற்குருவிகளாய் இன்று அடுத்தவேளை உணவை, நீரை அந்நியரிடம் எதிர்பார்த்தபடி பசியோடும், உடல் வருத்தங்களோடும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் எத்தனை பட்சிகள் இருக்கும்? பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் ? அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்? எல்லாம் பொசுங்கிப் போயிற்றா ?

        நான் ஒற்றைக்கிளிக்கு உணவிட்டுக் காட்டி, தந்திரமாக மற்றக் கிளியையும் பிடித்ததைப் போல, பத்து ஏக்கர் நிலத்துக்குள், பல இலட்சம் மக்கள் சேர்க்கப்பட்டு, இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முள்வேலி எல்லைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். கோழியின் குஞ்சுகளைக் கீரிப் பிள்ளைகள் இழுத்துச் சென்று, இரத்தம் வடிய வடியக் கொன்று தின்றதைப் போல இளைஞர்கள், யுவதிகள் ஏதும் செய்யவியலாக் கதறல்களுக்கு மத்தியில் எந்தத் திசைக்கென்றறியாது, என்ன நோக்கங்களுக்கென்றறியாது இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்வு குறித்தான உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் அப்படியே அழிந்து போக சடலங்களாகிப் போகிறார்கள். முள்வேலிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களின் வாழும் உரிமையை, இருப்பின் அசைவுகளை அதைத் தாண்டிய ஆயுதக் கரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.

        நம் உடலில் சாதாரண ஒரு சிறு கீறலுக்கே எவ்வளவு துடித்துப் போகிறோம்? சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம்? அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும் ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்? எவ்வளவு துயரத்தை அது எடுத்துவரும்?

        அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.

        இன்னும் முந்தைய வலிகளின்போது வடுக்கள் சுமந்து, உயிர் வாழவென அகன்றுபோய் வேற்று தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையெல்லாம் மீளவும் தம் தேசத்துக்கு அழைத்துக் கொள்ளப்போவதாகக் காற்றோடு வரும் செய்திகள் சொல்கின்றன. இருப்பவர்களுக்கே இடமற்று, உணவற்று, நீரற்றுப் போனநிலையில், இருப்பவர்களுக்கே வாழும் உரிமைகளற்ற நிலையில், எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால்,  உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள்.  உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

        கொல்லும்போது வெறுமனே பார்த்திருந்தது போல, கொல்லப்படவும் மனிதர்களை அனுப்பி அவர்களது கண்ணீரால், இரத்தத்தால், உயிர்களால் உங்களுக்கான சாபங்களை நிரப்பிக்கொள்ளவேண்டாம்.
இறுதியாக எனது பழைய கவிதையொன்று !

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்

காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

* மீஸான் கட்டை - கல்லறை அடையாளம் / நடுகல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


# நன்றி - யுகமாயினி இதழ் - ஜூலை, 2009

# நன்றி - புகலி இணைய இதழ்
# நன்றி - திண்ணை இணைய இதழ்

20 comments:

கிளியனூர் இஸ்மத் said...

its good poet... walthukkal

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கிளியனூர் இஸ்மத்,

//its good poet... walthukkal//

உங்கள் முதல்வருகையும், கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அகதிகளாய் வாழ்தல் கொடுமை. அதைவிட கொடுமை சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்வது. சிங்கள பேரினவாதத்தால் அப்பாவி தமிழ் மக்கள் திறந்த வெளி சிறையான முள்வேலி கம்பிகளுக்குள் (எந்த ஒரு பாதுகாப்பையும் தங்கியிருக்கும் மக்களுக்கு கொடுக்காத இவ்விடத்தின் பெயர் பாதுகாப்பு வளையமாம்) வாழ்வது மிகுந்த ஒரு துயரை தான் மனிதம் போற்றும் எவருக்குமே தரும். தமிழ்ப் பேரினவாத அமைப்பான விடுதலைப் புலிகளால் அகதிகளாக்கப்பட்டு இன்று வரை புத்தளத்தில் அகதிக் கொட்டகையில் பரிதாப வாழ்வு வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது அந்த துயரின் வலியை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இப்படிப்பட்ட அப்பாவிகளின் துயர்கள் நீங்கும் நாள் எந்நாளோ?

சிங்கள பேரினவாதமும் சரி அதற்கு எந்த வகையிலும் குறையாத விடுதலைப் புலிகளின் தமிழ்ப் பேரினவாதமும் சரி அப்பாவி மக்களை படுகுழியில் தான் தள்ளியிருக்கின்றன. பாசிசம் எந்த வகையில் வந்தாலும் புறக்கணிப்போம்.அது நம்மை பாதிக்கவில்லையாயினும் சரியே.

நடராஜன் கல்பட்டு said...

அன்பு ரிஷான் ஷரீஃப் அவர்களே,

பறவைகளில் ஆரம்பித்து தமிழின மக்கள் இலங்கையில் படும் அவதிகளை வெகு உருக்கமாக எழுதி கண்களில் கண்ண்ணிர் வரவழித்து விடீர்கள். அம்மக்கள் கௌரவத்துடன் வாழ இனி என்னதான் வழி? உலக நாடுகள்
ஒன்று சேர்ந்து குறுக்கிட்டால் உண்டு வழி. ஓன்று சேருமா?

அஹமத் சுபைர் said...

// அதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது.//


நாங்கள் வசித்த ஊரில் சேவல் சண்டை நடக்கும். கால்களில் வேல் போன்ற ஒன்றை கட்டி சேவல்களை சண்டைக்கு விடுவார்கள். நாங்கள் திண்டுக்கல் போன்ற பெரு நகர சந்தைகளில் நல்ல ஜாதிச்சேவல்குஞ்சு வாங்கி வந்து வீட்டிலே வளர்த்து பிறகு விற்றுவிடுவோம்.

100 ரூபாய்க்கு சேவல் குஞ்சு வாங்கி 1000 ரூபாய்க்கு கூட விற்றிருக்கிறோம்.. (1996 வாக்கில்)

என் தம்பி ஒருவன் நடக்கக்கூடிய வயது வருகையில் ஒரு சேவல் வளர்த்தோம். அவனின் உயரம் இருக்கும்.. அதன் மீதேறி விளையாடுவான். துணி ஒன்றும் போடாமல் சேவல் மீதேறி சவாரி செய்வான்..
காலை தொழுகைக்கு கூவி எழுப்பும் சேவலுடன் தானும் எழுந்துகொள்வான்.

எழுந்தவுடன் தன் மழலை மொழியில் அம்மாவையும் எழுப்பி “மா, கோயிக்கு தண்ணி கொடு”ன்னு அவன் சொல்லும்போது வாரியணைத்து முத்தமிடத்தோணும்,

அம்மா வேறு வேலையில் இருந்தால், இவனே சேவலுக்கு தண்ணீர் வைத்து இரை ஏதாவது கொடுப்பான்.

அந்த சேவலுக்கும் இவன் மேல் ரொம்பப்பிரியம். நம் கையில் முறுக்கு, காராசேவ் முதலானவை வைத்திருந்தால் எட்டிப்பறிக்கும் சேவல் அது.

ஒரு நாள் அவனுக்கு உடம்புக்கு முடியாமல் போகையில் மருத்துவத்துக்கு பணமில்லாமல் அந்த சேவலை விற்றுவிட்டோம்.

அவன் உடம்பு தேறி வந்ததும் கேட்ட முதல் கேள்வி, “மா, கோயி எங்கம்மா”..

இன்னைக்கு வரைக்கும் அவன்கிட்ட சொல்லவே இல்லை, சேவல் சண்டையில 6 சேவலை கொன்னுட்டு, காயத்துல செத்துப்போச்சுடான்னு..

இந்த ஞாபகங்களை கிளறியது உன் பதிவு..

ஞாபகங்களின் ஓடைகள் வற்றிப்போனாலும் அதன் சுவடுகளில் ஈரம் இருக்கிறது.. பிற்காலத்தில் ஊற்றெடுத்துக் கொள்ளலாம்.

சாந்தி said...

மிக வேதனையோடு எழுத்துக்கள்...உள்வாங்கினோம் ரிஷான்...


// எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால், உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள். உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.//
சரியே.. அவர்கள் திருப்பி அனுப்ப கூடாதுதான்...

பூங்குழலி said...

//அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.//

மனதை பிழிந்து முள் சாட்டையால் அடித்தது போலே இருக்கிறது ரிஷான் .....
எவரையும் திரும்ப அனுப்பக் கூடாது என்ற உங்கள் எண்ணம் சரியே ...என்னவென்று எதற்கென்று திருப்பி அனுப்ப ....(இந்த எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் நீங்கள் அன்புடனில் முதலில் இட்ட கவிதை என்று நினைக்கிறேன் )

முஹம்மத் இஸ்மாயில் புஹாரி said...

நெஞ்சை உலுக்கும் எழுத்துக்கள்......

வருத்தமாய் இருக்கிறது...

தமிழன் வேணு said...

உரைநடையில் எழுதுகிறபோதும் கவிதையின் மூலாம் பூசியிருப்பது போல வார்த்தைகளில் ஒரு மெல்லிய ஜொலிப்பு தென்படுகிறது. மொட்டைமாடியில் உறங்கி விழித்து வானம் பார்த்தபடி நினைவுகளைப் பின்னோக்கி ஓட விடுகிற இயல்பான செயலில், பல காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்கிறபோது, சற்றே விக்கித்துப்போகிறது மனம். கவிதை படிக்கிறபோது வெறுமையும் வேதனையும் வந்து ஆட்கொள்ளுகிறது.

விஜி said...

நட்பின் ரிஷானுக்கு,
ஒவ்வொரு பத்திக்குமான என் உணர்வுகளைக்கொட்டிவிடத்தான் தீர்மானித்திருந்தேன். உங்கள் எழுத்தின் கனம் என்னைச் சிதற வைத்துவிட்டது. "கிளிகள்" வளர்ப்பதில் அம்மா உடன்பட்டதில்லை. அவைகளின் 'சுதந்திரம் பறிக்காதே என்பார். பெரும்பாலும் நாயைக்கூட நாங்கள் கட்டி வைத்ததில்லை. 'சுதந்திரம் என்பது எத்தனை இனிமையானது என்பதை சிறகு விரித்துப்பறக்கும் அந்த பறவைகள் மட்டுமே அறியுமோ?

மனிதன் ஏதாவது ஒருவிதத்தில் ஒன்றுக்கு அடிமையாகித்தான் கிடக்கின்றான் அவன் விரும்பியோ விரும்பாமலோ..
தனிமனித சுதந்திரத்தை அனுபவிப்போர் வெகுசிலரே..
பறவைகளோடு தொடங்கி அதன் சிறகுகள் எப்படி சின்னாபின்னாமாய் சிறைக்குள் அகப்படுகிறது என்பதை எங்களின் இன்றைய நீரோட்டத்தோடு பொருத்தி கண்களில் நீர் கசிய வைத்துவிட்டீர்கள் ரிஷான்.
பெரிய பதிவு ஆறுதலாகப்படிக்க வேண்டும் என்றிருந்தேன். பெரிய பாதிப்பையே உண்டு பண்ணிவிட்டன உங்கள் எழுத்துக்கள். கைதேர்ந்த எழுத்தாளர்களின் நேர்த்தியான எழுத்தை உங்கள் படைப்பில் காண்கின்றேன். மிக விரைவில் அந்ததளத்தில் நீங்கள் பயணிக்கப்போகின்றீர்கள் என்பது புரிகின்றது.
ஆழமான எங்கள் உணர்வுகளை உங்கள் எழுத்தாற்றல் மூலம் கிளறி பழைய இன்ப நினைவுகளோடு புலம்பெயர்ந்து வாழும் எங்கள் அவலங்களையும் கோடிட்டு காட்டி மறக்கமுடியாத ஒரு பதிவை மனசில் பதிந்துவிட்டீர்கள் ரிஷான்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை ரிஷான்,
கனக்கும் மனத்தோடும் கண்ணீர் விழிகளோடும்.................தங்களின் படைப்பில் இது ஒரு மைல்கல்"

ஆயிஷா said...

றிஷான் உங்க பதிவுகள் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும். இதுவும் நல்ல ரசனையோடு தந்துள்ளீர்கள்.

//சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.//

நல்ல கருத்து. உள்வாங்கிக் கொண்டேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷேக் தாவூத்,

மிகவும் காத்திரமான விடயத்தினைக் கொண்டு, உங்கள் கருத்தினைச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் வரவேற்கத்தக்க கருத்து.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பர் நடராஜன்,

//அன்பு ரிஷான் ஷரீஃப் அவர்களே,

பறவைகளில் ஆரம்பித்து தமிழின மக்கள் இலங்கையில் படும் அவதிகளை வெகு உருக்கமாக எழுதி கண்களில் கண்ண்ணிர் வரவழித்து விடீர்கள். அம்மக்கள் கௌரவத்துடன் வாழ இனி என்னதான் வழி? உலக நாடுகள்
ஒன்று சேர்ந்து குறுக்கிட்டால் உண்டு வழி. ஓன்று சேருமா? //ஒன்று சேர்ந்து உயிர் மிஞ்சியிருப்பவர்களுக்காவது, நிம்மதியாக வாழ வழி காட்ட வேண்டுமென்பதே எனது ஆதங்கமும். ஆனால், பெரிதும் நம்பியிருந்த, ஒரே இனம்,மொழி பேசும் இந்திய நாடே கைவிட்ட பிறகு, பிற நாடுகள் உதவிக்கு ஓடி வருமென எதிர்பார்ப்பதற்குமில்லை. :(

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சுபைர்,


//நாங்கள் வசித்த ஊரில் சேவல் சண்டை நடக்கும். கால்களில் வேல் போன்ற ஒன்றை கட்டி சேவல்களை சண்டைக்கு விடுவார்கள். நாங்கள் திண்டுக்கல் போன்ற பெரு நகர சந்தைகளில் நல்ல ஜாதிச்சேவல்குஞ்சு வாங்கி வந்து வீட்டிலே வளர்த்து பிறகு விற்றுவிடுவோம்.

100 ரூபாய்க்கு சேவல் குஞ்சு வாங்கி 1000 ரூபாய்க்கு கூட விற்றிருக்கிறோம்.. (1996 வாக்கில்) //


சண்டைக்கோழி வளர்ப்புப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையொன்றிலும் வாசித்தேன். வெகு சுவாரஸ்யமான விளையாட்டு. 'பூனைக்கு விளையாட்டு..எலிக்குச் சீவன் போகிறது' என்பதைப் போல. :)


//என் தம்பி ஒருவன் நடக்கக்கூடிய வயது வருகையில் ஒரு சேவல் வளர்த்தோம். அவனின் உயரம் இருக்கும்.. அதன் மீதேறி விளையாடுவான். துணி ஒன்றும் போடாமல் சேவல் மீதேறி சவாரி செய்வான்..
காலை தொழுகைக்கு கூவி எழுப்பும் சேவலுடன் தானும் எழுந்துகொள்வான்.

எழுந்தவுடன் தன் மழலை மொழியில் அம்மாவையும் எழுப்பி “மா, கோயிக்கு தண்ணி கொடு”ன்னு அவன் சொல்லும்போது வாரியணைத்து முத்தமிடத்தோணும்,


அம்மா வேறு வேலையில் இருந்தால், இவனே சேவலுக்கு தண்ணீர் வைத்து இரை ஏதாவது கொடுப்பான். //


நீங்கள் குழந்தையை வளர்த்திருக்கிறீர்கள். அக் குழந்தை சேவலை வளர்த்திருக்கிறது.


//அந்த சேவலுக்கும் இவன் மேல் ரொம்பப்பிரியம். நம் கையில் முறுக்கு, காராசேவ் முதலானவை வைத்திருந்தால் எட்டிப்பறிக்கும் சேவல் அது.

ஒரு நாள் அவனுக்கு உடம்புக்கு முடியாமல் போகையில் மருத்துவத்துக்கு பணமில்லாமல் அந்த சேவலை விற்றுவிட்டோம்.

அவன் உடம்பு தேறி வந்ததும் கேட்ட முதல் கேள்வி, “மா, கோயி எங்கம்மா”..

இன்னைக்கு வரைக்கும் அவன்கிட்ட சொல்லவே இல்லை, சேவல் சண்டையில 6 சேவலை கொன்னுட்டு, காயத்துல செத்துப்போச்சுடான்னு.. //


:((
வீரச் சேவல்தான். தம்பியிடம் இனியும் சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் வளர்ந்திருப்பார். அத்தோடு, பால்ய வயதில் நடந்தது அவருக்கு நினைவுமிருக்காது.

சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள் சுபைர். ஏன் நீங்கள் ஒரு பதிவாக எழுதக் கூடாது? உங்களிடம் நிறைய விஷயமிருக்கிறது.


//இந்த ஞாபகங்களை கிளறியது உன் பதிவு..

ஞாபகங்களின் ஓடைகள் வற்றிப்போனாலும் அதன் சுவடுகளில் ஈரம் இருக்கிறது.. பிற்காலத்தில் ஊற்றெடுத்துக் கொள்ளலாம்.//


:))
நன்றி நண்பா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சாந்தி அக்கா,

//மிக வேதனையோடு எழுத்துக்கள்...உள்வாங்கினோம் ரிஷான்...எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால், உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள். உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.
சரியே.. அவர்கள் திருப்பி அனுப்ப கூடாதுதான்...//


ஆனாலும், அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் சகோதரி :(

கருத்துக்கு நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பூங்குழலி,

//

அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.

மனதை பிழிந்து முள் சாட்டையால் அடித்தது போலே இருக்கிறது ரிஷான் .....
எவரையும் திரும்ப அனுப்பக் கூடாது என்ற உங்கள் எண்ணம் சரியே ...என்னவென்று எதற்கென்று திருப்பி அனுப்ப ....(இந்த எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் நீங்கள் அன்புடனில் முதலில் இட்ட கவிதை என்று நினைக்கிறேன் ) //


ஆமாம் சகோதரி. :)
இங்கு இட்டு இரண்டு வருடத்துக்கும் மேலாகிறது. எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்களென ஆச்சரியமாக இருக்கிறது சகோதரி.

நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் முஹம்மத் இஸ்மாயில் புஹாரி,

//நெஞ்சை உலுக்கும் எழுத்துக்கள்......

வருத்தமாய் இருக்கிறது...//


:((
நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வேணு,

//உரைநடையில் எழுதுகிறபோதும் கவிதையின் மூலாம் பூசியிருப்பது போல வார்த்தைகளில் ஒரு மெல்லிய ஜொலிப்பு தென்படுகிறது. மொட்டைமாடியில் உறங்கி விழித்து வானம் பார்த்தபடி நினைவுகளைப் பின்னோக்கி ஓட விடுகிற இயல்பான செயலில், பல காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்கிறபோது, சற்றே விக்கித்துப்போகிறது மனம். கவிதை படிக்கிறபோது வெறுமையும் வேதனையும் வந்து ஆட்கொள்ளுகிறது. //

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் விஜி,


// நட்பின் ரிஷானுக்கு,

ஒவ்வொரு பத்திக்குமான என் உணர்வுகளைக்கொட்டிவிடத்தான் தீர்மானித்திருந்தேன். உங்கள் எழுத்தின் கனம் என்னைச் சிதற வைத்துவிட்டது. "கிளிகள்" வளர்ப்பதில் அம்மா உடன்பட்டதில்லை. அவைகளின் 'சுதந்திரம் பறிக்காதே என்பார். பெரும்பாலும் நாயைக்கூட நாங்கள் கட்டி வைத்ததில்லை. 'சுதந்திரம் என்பது எத்தனை இனிமையானது என்பதை சிறகு விரித்துப்பறக்கும் அந்த பறவைகள் மட்டுமே அறியுமோ?

மனிதன் ஏதாவது ஒருவிதத்தில் ஒன்றுக்கு அடிமையாகித்தான் கிடக்கின்றான் அவன் விரும்பியோ விரும்பாமலோ..
தனிமனித சுதந்திரத்தை அனுபவிப்போர் வெகுசிலரே..
பறவைகளோடு தொடங்கி அதன் சிறகுகள் எப்படி சின்னாபின்னாமாய் சிறைக்குள் அகப்படுகிறது என்பதை எங்களின் இன்றைய நீரோட்டத்தோடு பொருத்தி கண்களில் நீர் கசிய வைத்துவிட்டீர்கள் ரிஷான்.
பெரிய பதிவு ஆறுதலாகப்படிக்க வேண்டும் என்றிருந்தேன். பெரிய பாதிப்பையே உண்டு பண்ணிவிட்டன உங்கள் எழுத்துக்கள். கைதேர்ந்த எழுத்தாளர்களின் நேர்த்தியான எழுத்தை உங்கள் படைப்பில் காண்கின்றேன். மிக விரைவில் அந்ததளத்தில் நீங்கள் பயணிக்கப்போகின்றீர்கள் என்பது புரிகின்றது.
ஆழமான எங்கள் உணர்வுகளை உங்கள் எழுத்தாற்றல் மூலம் கிளறி பழைய இன்ப நினைவுகளோடு புலம்பெயர்ந்து வாழும் எங்கள் அவலங்களையும் கோடிட்டு காட்டி மறக்கமுடியாத ஒரு பதிவை மனசில் பதிந்துவிட்டீர்கள் ரிஷான்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை ரிஷான்,
கனக்கும் மனத்தோடும் கண்ணீர் விழிகளோடும்.................தங்களின் படைப்பில் இது ஒரு மைல்கல்"//


உங்கள் விரிவான, தெளிவான கருத்து மனதை மகிழச் செய்கிறது.
எனினும் நம் மக்கள் படும் துயரங்களை ஒவ்வொன்றாக எழுதப் போனால் இந்தப் பத்தி போதாது. இன்னும் உலகுக்குச் சொல்ல வெளிப்படுத்த நிறைய இருக்கின்றன. :(

எழுதுவோம் !

கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி தோழி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஆயிஷா,

//றிஷான் உங்க பதிவுகள் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும். இதுவும் நல்ல ரசனையோடு தந்துள்ளீர்கள்.

சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.

நல்ல கருத்து. உள்வாங்கிக் கொண்டேன்.//

கருத்துக்கு நன்றி அன்புச் சகோதரி !