'காலச்சுவடு' அக்டோபர் 2010 இதழில் சகோதரர் கே.எஸ். முகம்மத் ஷுஐப்பின் கடிதத்தைக் கண்டேன். அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், காவல்துறையினரின் அநீதங்களுக்கு எதிராகவும் எழுதப்படுபவற்றை தைரியமாக வெளியிடும் தமிழக நாளிதழ்கள் குறித்து அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவ்வாறானதொரு சுமுகமான நிலை இலங்கையில் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைப் பிரசுரித்திருந்த ஆனந்தவிகடன் இதழ்களை இலங்கையில் விற்ற ஒரே காரணத்துக்காக ஆனந்தவிகடன் இலங்கையில் தடைசெய்யப்பட்டதையும், விற்பனையாளர் கைது செய்யப்பட்டதையும் அறிந்திருப்பீர்களென்றே நினைக்கிறேன். அரசுக்கெதிராகவோ, ஆளுங்கட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, காவல்துறைக்கெதிராகவோ ஊடகங்களுக்கு ஏதாவது தெரிவித்தால், எழுதினால் அல்லது எழுதத் தலைப்பட்டாலே ஒருவர் கடத்தப்படுவதற்கும், கூண்டுக்குள் தள்ளப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் அதனைக் காரணமாகச் சொல்லலாம்.
இதே அக்டோபர் இதழில், என்னால் மொழிபெயர்க்கப்பட்ட சிங்களக் கவிதைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் கவிஞர்களில், இலங்கையில் யுத்தத்தால் நடைபெற்ற இனப்படுகொலையைக் குறித்தும் இராணுவத்தினருக்கு எதிராகவும் தனது படைப்புக்கள் மூலமாக பலமான எதிர்ப்பைத் தெரிவிக்கும் கவிஞர் மஹேஷ் முணசிங்க, தான் யாரென வெளிக்காட்டாமலேயே இணையத் தளங்களில் எழுதி வருபவர். எங்கிருந்து எழுதுகிறார்? என்ன செய்கிறார்? என யாருக்கும் தெரியவில்லை. அதனால் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார். பெண் கவிஞர் மாலதீ கல்பனா எம்ப்ரோஸ், ஒரு சமூக ஆய்வாளரும், சமூக சேவகியும் கூட. இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறித்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகள் செய்து, அங்கு நடைபெறும் அநீதங்கள் குறித்து வெளிப்படையாக கவிதைகள், கட்டுரைகள் என இலங்கையின் பிரபல சஞ்சிகைகளில் அச்சமின்றி எழுதி வருபவர். இவர் அண்மையில் எழுதியுள்ள 'யாழ்ப்பாணத்திலிருந்து எழுதுகிறேன்' கவிதையானது பல எதிர்வினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 'சுதந்திரம்' பற்றி கவிதை எழுதி விட்டுக் காணாமல் போயிருக்கும் ப்ரகீத் எக்னெலிகொட பற்றிச் சொல்லவேண்டும். பிரகீத் எக்னெலிகொட பற்றித் தெரிந்துகொண்டீர்களானால் அவரது கடத்தலுக்கான காரணம் என்னவென உங்களுக்கு நான் சொல்லாமலேயே இலகுவாகப் புரியும். ஏற்கெனவே தர்மரத்தினம் சிவராம், லசந்த விக்ரமதுங்க மற்றும் பல ஊடகவியலாளர்களது விதி தீர்மானிக்கப்பட்டது எதனாலென நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையில், ஊடகத்துறையில் நேர்மையாகப் பணியாற்றுபவர்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. பேனாவையோ, கேமராக்களையோ, விரல்களையோ அநீதிகளுக்கெதிராக உயர்த்தும்வேளை அவர்களது தலைவிதிகளும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கடத்தப்படுவதும், காணாமல் போவதும், வதைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதுமென பல இம்சைகள் இவர்களைத் தொடர்வதால், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்பவர்களைப் போல உயிருக்கு உத்தரவாதமின்றித்தான் இவர்கள் நடமாட வேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்களை நண்பர்களாகக் கொள்ளவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

இலங்கை ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாகக் கருதப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அண்மைய நடவடிக்கைகளிலொன்று, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் மரத்தில் கட்டிவைத்தது. காரணம் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் அவர் கலந்துகொள்ளாதது. இத்தனைக்கும் அவர் தனது குழந்தைக்குச் சுகவீனமென்பதால் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டி அலுவலகத்துக்கு விடுமுறையை அறிவித்துவிட்டுத்தான் அன்றைய தினம் விடுமுறை எடுத்திருக்கிறார். அமைச்சரால் கோபத்தோடு மரத்தில் கட்டிவைக்கப்படுவதையும், அதற்கு தைரியமாக எதிர்ப்புத் தெரிவித்த பெண்ணொருவரை அமைச்சர் மிரட்டுவதையும் பதிவு செய்த காட்சியை நீங்கள் யூ ட்யூப் இணையத்தளத்தில் இப்பொழுதும் பார்க்கலாம். இதற்கு அரசின் நடவடிக்கை என்னவாக இருந்தது? அமைச்சரைக் கைது செய்தார்களா? இல்லை. பிற்பாடு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி அரசுக்குக் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரை அப்பதவியிலிருந்து நீக்கினார். பிறகு வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அதில் அமைச்சர் குற்றமற்றவரென (மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கப்பட்டது ஒரு நாடகமாகவும், பாதிக்கப்பட்டவரின் அனுமதியோடேதான் அமைச்சர் அவ்வாறு நடித்ததாகவும்) தீர்ப்பைச் சொல்லி அமைச்சருக்குத் திரும்பவும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எல்லாம் அரசு நடத்தும் கண்துடைப்பு நாடகம்.
அண்மையில் நடந்த இன்னுமொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகலாம். இலங்கை அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் சிலர், மாலை ஆறு மணிக்குப் பிற்பாடும் பல்கலைக்கழக வளாகத்தில் கதைத்துக் கொண்டிருந்த காரணத்தால், அங்கிருந்த மாணவிகளை, பல்கலைக்கழக ஆம்புலன்ஸில் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி, அவர்களது கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொன்னார் அப் பல்கலைக்கழக முதல்வர். அத்தோடு நிற்காமல் அவர்களது பெற்றோர்களிடம், அம் மாணவர்கள் குறித்து மிகக் கேவலமாகச் சொல்லியிருக்கிறார். பல்கலைக்கழக வளாகத்தில் நிழல் மரங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த சீமெந்து ஆசனங்களை உடைத்திருக்கிறார். கேட்டால், மாணவர்கள் காதலிப்பது தவறென்கிறார். அம் மாணவிகளின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் அப் பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துவிட்டார்களெனினும், இலங்கை முழுதும் அம் மாணவிகள் குறித்த தவறான விம்பத்தைத் தீட்டியாயிற்று. வறுமைக்கும், ஆயிரம் பிரச்சினைகளுக்கும், கடினமான தேர்வுகளுக்கும் முகம் கொடுத்து பல்கலைக்கழக அனுமதி பெற்று, கல்வி கற்க வரும் அவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எவ்வளவு அவமானம் ஏற்பட்டிருக்கும்? வேறு நாடுகளிலென்றால், மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்திருப்பார்கள் இல்லையா? ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. அம் முதல்வர், இன்னும் அப் பதவியிலேயே நிலைத்திருக்கிறார்.
இலங்கையில் இவ்வாறுதான். அநீதங்கள் பகிரங்கமாக நடைபெறும். யாரும் எழுதத் தயங்குகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் நேர்மையான ஒரு ஊடகவியலாளர் உயிருடன் இருக்கவேண்டுமானால், அந்த மூன்று குரங்குகளைப் போல அநீதிகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்காமல் காதைப் பொத்திக் கொண்டு, அநீதிகளையும், மக்களது பிரச்சினைகளையும் பற்றிப் பேசாமல் (எழுதாமல்) வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருப்பதே உசிதம். எனினும் புதிது புதிதாக லசந்தகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் எழுத்திலும், இறப்பிலும் ஒன்றுபோலவே !
'காலச்சுவடு' பிரசுரிக்கும் இலங்கை சம்பந்தமான எனது கட்டுரைகளை இலங்கையிலிருந்து வெளியாகும் எந்த இதழும் பிரசுரிக்கத் தயங்குமென உறுதியாகவே கூறலாம். எனில், இலங்கையில் நடைபெறும் அநீதங்களை யார்தான் எப்பொழுது வெளிப்படுத்துவது? "ரிஷான் ஷெரீபுக்குத் தமிழக நாளிதழ்களை அனுப்பிவைத்தால், தாம் எழுதிய இலங்கைச் சம்பவம் ஒன்றுமே இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வார். " எனச் சொல்லியிருக்கிறீர்கள். தப்பில்லை. தமிழக இதழ்களில், உங்கள் தேசத்தில் நடைபெறும் எல்லா அநீதங்கள் குறித்தும் பகிரங்கமாக வெளிவருவதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கும். ஆகவே உங்கள் பார்வைக்கு இலங்கை, காவல்துறை அநீதங்கள் ஒன்றுமே இல்லாதவையாகத் தோன்றினாலும், நடைபெறும் அநீதங்களை காலச்சுவடு போன்ற தைரியமான இதழ்களிலும், எனது வலைத்தளங்களிலும் நான் பதிந்து வைக்கவே விரும்புகிறேன். ஏனெனில் என்றாவது நீதமான நல்ல தீர்ப்பு கிடைக்கக் கூடும் அல்லவா? நான் புனைப்பெயர் எதனையும் கூடப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு எழுதுவதால் நான் அக் கட்டுரையில் சொன்னது போல அரசின், காவல்துறையின் அடுத்த பலி நானாகவும் இருக்கலாம். அஞ்சேன் !
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# காலச்சுவடு இதழ் 131, நவம்பர் 2010