Tuesday, January 5, 2010

புத்தாண்டுக் கனவு (கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்)




நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்

நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்

ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்

*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்

புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?

பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?

மூலம் - மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


*நீலமும், சிவப்பும் - இலங்கையில் எதிர்க்கட்சிகளாக இருந்து ஒன்றாகிய தற்போதைய ஆளுங்கட்சியின் நிறங்கள்
** பச்சை - இலங்கையில் எதிர்க்கட்சியின் நிறம்.


நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்

9 comments:

அப்துல் ஜப்பார் said...

இது எனக்கு கவிதையாகத் தோன்றவில்லை.

முடிந்தால் கருணாரத்ன அபயசேகர, ‘நமோ.. நமோ’ வை யாத்த ஆனந்த
வீரக்கோன் ஆகியோரின் கவிதைகளை தேடிக் கண்டு பிடித்து மொழி பெயர்த்துப் போடுங்கள். மனித நேயத்தை வலியுறுத்தும் பல கவிதைகள் சிங்களத்தில் உள்ளன. இப்போது மறந்து போய் விட்டன..

இனிமையான - எளிமையான சிங்களவர்கள் எப்படி இப்படி போர் வெறியர்
களாக - இனத் துவேஷிகளாக மாறினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத
புதிர்.. ஒருவேளை அரசியல் வாதிகள் தான் இப்படியோ மக்கள் நல்லவர்கள்
தானோ..?

சிங்களவர்கள் நல்லவர்கள் அல்ல என்று தமிழர்கள் மட்டுமல்ல, சில கசப்பான
சம்பவங்கள் காரணமாக உங்கள் மாவநெல்லைக் காரர்களும் சொல்லமாட்டார்
கள் என்பது தெரியும். தெரிந்தும் இந்தக் கேள்வியை முன் வைத்துள்ளேன்.

M.Rishan Shareef said...

அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,

//இது எனக்கு கவிதையாகத் தோன்றவில்லை.

முடிந்தால் கருணாரத்ன அபயசேகர, ‘நமோ.. நமோ’ வை யாத்த ஆனந்த
வீரக்கோன் ஆகியோரின் கவிதைகளை தேடிக் கண்டு பிடித்து மொழி பெயர்த்துப் போடுங்கள். மனித நேயத்தை வலியுறுத்தும் பல கவிதைகள் சிங்களத்தில் உள்ளன. இப்போது மறந்து போய் விட்டன..//


கருத்துக்கு நன்றி ஐயா.

முதலில் இக் கவிதையின் ஆசிரியர் குறித்து,

# மஞ்சுள வெடிவர்த்தன : இவர் கவிஞர், ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடகாசிரியர், ஊடகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணம் கொண்டவர். இவருடைய சிறுகதைத் தொகுதி ஒன்று அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. தமிழ் மக்களுடைய பிரச்சினையைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் பெரும் பணியாற்றுபவர். இலங்கையில் வெளியாகும் 'ராவய' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த இவர் தற்பொழுது, தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இவரது பல கவிதைகளில் இன ஒற்றுமையையும், மனித நேயத்தையும் வலியுருத்துவதைக் காணலாம். நான் மொழிபெயர்த்த இவரது வேறு கவிதைகளை இம் மாத 'உன்னதம்', 'உயிர்நிழல்' இதழ்களில் நீங்கள் பார்க்கலாம்.

இக் கவிதையில் 'ஹிட்லர்' என மறைமுகமாகச் சாடப்படுவது தற்போதைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷசவை.

இவரைப் போல யுத்தத்தை வெறுக்கும், வெறுத்த, அதற்காகக் குரல் கொடுத்த, கொடுக்கும் பல சிங்களக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.. ஒவ்வொன்றாக மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன்.


//இனிமையான - எளிமையான சிங்களவர்கள் எப்படி இப்படி போர் வெறியர்
களாக - இனத் துவேஷிகளாக மாறினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத
புதிர்.. ஒருவேளை அரசியல் வாதிகள் தான் இப்படியோ மக்கள் நல்லவர்கள்
தானோ..?//


நிச்சயமாகப் பொதுமக்கள் நல்லவர்கள்.
அரசியல்வாதிகள் (இதில் இந்திய அரசியல்வாதிகளும் அடக்கம்) துவேஷ மனப்பான்மையைத் தூண்டி அரசியல் நடத்துகிறார்கள்.


//சிங்களவர்கள் நல்லவர்கள் அல்ல என்று தமிழர்கள் மட்டுமல்ல, சில கசப்பான
சம்பவங்கள் காரணமாக உங்கள் மாவநெல்லைக் காரர்களும் சொல்லமாட்டார்
கள் என்பது தெரியும். தெரிந்தும் இந்தக் கேள்வியை முன் வைத்துள்ளேன்.//


இல்லை ஐயா.
சிங்களவர்கள் நல்லவர்கள்தான்.
தமிழர்களிடத்திலும், முஸ்லிம்களிடத்திலும், சிங்களவர்களிடத்திலும் இனத் துவேஷத்தை ஏற்படுத்தி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள்தான் தீயவர்கள்.

பனித்துளி சங்கர் said...

Really super

கமலேஷ் said...

கவிதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை உங்களின் பல பதிவுகளிலும் , கவிதைகளும் உணர்த்தி கொண்டே இருக்கின்றன...வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

கவிதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை உங்களின் பல பதிவுகளிலும் , கவிதைகளும் உணர்த்தி கொண்டே இருக்கின்றன...வாழ்த்துக்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் சங்கர்,

//Really super//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கமலேஷ்,

//கவிதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை உங்களின் பல பதிவுகளிலும் , கவிதைகளும் உணர்த்தி கொண்டே இருக்கின்றன...வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

jayashankar said...

*இனப்படுகொலைக்கு வித்திட்ட ஹிட்லரை மையப்படுத்தி இலங்கையின் இனப் படுகொலையை ஆட்சியாளர்களின் நிறத்தைக் கொண்டே வெளிப்படுத்திய விதம் அருமை.

ஆம். இந்த நிறங்களின் உண்மையை கூறியிருக்காவிட்டால் இது ஒரு ஹிட்லரைச் சாடும் சாதாரணக் கவிதையாகியிருக்கும்.

அதனை நிறத்தின் வேறுபாட்டை உணர்த்தி சமீப இனப்படுகொலையின் தாக்கத்தை நம் மனதில் ஒரு வடுவாக உணர்த்தியுள்ள கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தனவுக்கும், அதனை அருமையாக மொழொ பெயர்த்துத் தந்த ரிஷான் அவர்களுக்கும் நன்றிகள் பல...*

M.Rishan Shareef said...

அன்பின் ஜெயஷங்கர்,

//இனப்படுகொலைக்கு வித்திட்ட ஹிட்லரை மையப்படுத்தி இலங்கையின் இனப் படுகொலையை ஆட்சியாளர்களின் நிறத்தைக் கொண்டே வெளிப்படுத்திய விதம் அருமை.

ஆம். இந்த நிறங்களின் உண்மையை கூறியிருக்காவிட்டால் இது ஒரு ஹிட்லரைச் சாடும் சாதாரணக் கவிதையாகியிருக்கும்.

அதனை நிறத்தின் வேறுபாட்டை உணர்த்தி சமீப இனப்படுகொலையின் தாக்கத்தை நம் மனதில் ஒரு வடுவாக உணர்த்தியுள்ள கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தனவுக்கும், அதனை அருமையாக மொழொ பெயர்த்துத் தந்த ரிஷான் அவர்களுக்கும் நன்றிகள் பல...//

கவிதையை மிகச் சரியாகப் பொருளுணர்ந்திருக்கிறீர்கள்.
ஹிட்லர் இழைத்த அநீதிகளுக்குக் குறையாத அநீதிகள் ஈழத்திலும் இழைக்கப்பட்டன.

கருத்துக்கு நன்றி நண்பரே!