Friday, January 8, 2010

ஈழம் மற்றும் அரசியல்



ஈழம்

ஒவ்வொரு துகளும்
செஞ்சாயம் பூசிக்கொள்ளக்
கடுங்குருதி நில மணலில் ஊர்ந்துறைகிறது

இடையறாப் பேரதிர்வு
நிசப்தங்கள் விழுங்கிடப்
பேச்சற்று மூச்சற்று
நாவுகள் அடங்குகையில்
விழித்தெழாப் பாடலொன்றைக்
கண்டங்கள் தோறும் இசைத்தபடி
அநீதங்கள் நிறைந்த
வாழ்வின் கொடிபிடித்துப்
பேய்கள் உலாவருகின்றன

இருக்கட்டும்
புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ
வெண்ணலறிப் பூக்களொடி

*
அரசியல்

வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்

காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று
அது பற்றி உனக்கென்ன கவலை?
வா

வண்ணத்துப்பூச்சி வேண்டாம்
தும்பிக்கு நான்கு சிறகுகளாம்

அதன்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும்
மற்ற இரண்டில்
எதிர்த்துக் கேள்விகளெதுவும் கேட்கவிழையாத
மேலுமிரு அப்பாவிக் குடிமகன்களையுமேற்றி
என் புகழ் பாடியபடி
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# உன்னதம் இதழ் - டிசம்பர், 2009
# உயிர்மை


8 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

//காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று //

நான் வியந்த வரிகள்

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்ரீசரண்,

உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

////காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று //

நான் வியந்த வரிகள்//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

பிச்சுமணி said...

ஈழம் கவிதை அருமை. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஈழ தமிழ் மக்களுக்கும்
சரியான புரிதல் இல்லை என்கிறார்களே அது எந்த அளவு உண்மை

கிரகம் said...

வலி நிறைந்த வரிகள்

சக்தி சக்திதாசன் said...

அன்பின் நண்பரே ரிஷான்,

கனத்த பொருள் பதிந்த அற்புதமான கவிதை.

அன்பான வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி சக்திதாசன்,

//அன்பின் நண்பரே ரிஷான்,

கனத்த பொருள் பதிந்த அற்புதமான கவிதை.

அன்பான வாழ்த்துக்கள்//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,

//ஈழம் கவிதை அருமை. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஈழ தமிழ் மக்களுக்கும்
சரியான புரிதல் இல்லை என்கிறார்களே அது எந்த அளவு உண்மை//

சிலரின் அராஜகத்தால் புரிதலற்றுப் போனதும், மக்கள் அகதிகளாக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால் தற்போதைய சூழல் பல நல்ல புரிதல்களைக் கொண்டுவந்து விட்டது.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கிரகம்,

//வலி நிறைந்த வரிகள்//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !