Thursday, June 23, 2011

என்னைக் கைது செய்யப் போகிறார்கள்


    தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்?

    என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து குப்பைக் கூடையாய்ப் பயன்படுத்தலாம். அல்லது உள்ளே மண் நிறைத்து செடிகள் நடலாம். விசைப் பலகையைக் கவிழ்த்தால் சமையலறையில் பாத்திரங்களை வைக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன்படுத்தலாம். போனால் போகிறதென்று மௌஸை மட்டும் சிறு குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம். இன்னும் கணினிகளை வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஏதாவதொரு முடிவை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். நாளை உங்களைக் கைது செய்த பிறகு அவை நிச்சயம் பயன்படும்.

    இவ்வளவு காலமும் கணினியில் தட்டச்சு செய்து, அதனை ஏ4 தாளொன்றில் பிரதி எடுத்துத் தர, ஐம்பது ரூபாய்களை வாங்கிய கடைக்காரர்கள் இனிமேல் இருநூற்றைம்பது ரூபாய்களுக்கும் மேலே அறவிடப் போகிறார்கள். அதுபோல, ஒரு குறுந்தகடைப் பிரதி எடுத்துத் தருவதற்கு ஐநூறு ரூபாய்களுக்கும் மேலே. அது ஒரு பக்கம் இருக்க, கணினியறிவின் ஆரம்பக் கல்வியை (மௌஸைக் கையாள்வது எப்படி எனக் கற்க) மட்டும், ஒரு மாணவருக்கு ஒரு நாள் கட்டணம் ஐயாயிரம் ரூபாய்களுக்கும் மேலே.

    இலங்கையினுள் கணினிகளில் மிக அதிகளவில் பாவிக்கப்படுவது விண்டோஸ் மென்பொருள்தான். இம் மென்பொருளை, கணினி மென்பொருட்களை விற்பதற்காகவே இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் மென்பொருள் விற்பனை நிலையங்களில் மாத்திரமே இனி வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 மென்பொருளானது இலங்கையினுள் விற்கப்படும் விலை 226 அமெரிக்க டொலர்கள். அதாவது கிட்டத்தட்ட 24758/= இலங்கை ரூபாய்கள். அதன் உண்மையான விலை இது இல்லை. இதற்கு இன்னும் 12% வெட் வரியையும் சேர்க்க வேண்டும். இவ் வரிகளையெல்லாம் சேர்த்த பிற்பாடு விண்டோஸ் மென்பொருளின் உண்மையான விலை கிட்டத்தட்ட 28000/= இலங்கை ரூபாய்கள். இலங்கையில் புகைப்படங்களை மெருகேற்றவென அதிகம் பயன்படுத்தப்படும் அடோப் போட்டோஷொப் உள்ளடங்கிய அடோப் க்ரியேட்டிவ் சூட் மென்பொருளின் விலையானது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் இலங்கை ரூபாய்கள். இலங்கையில் பரந்தளவில் பாவிக்கப்படும் இன்னுமொரு மென்பொருளான ஒடோகேட்டின் விலை 3995 அமெரிக்க டொலர்கள். இலங்கை ரூபாய்களில் சொல்வதாயின் கிட்டத்தட்ட நான்கு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்கள்.

    என்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று தலைசுற்றுகிறதா உங்களுக்கு? விடயத்துக்கு வருகிறேன். இலங்கை அரசாங்கமானது, ஒரு சட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சட்டவிரோத மென்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகப் புலமைச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பாவனையிலிருக்கும் கணினிகளில், மென்பொருட்களின் சட்ட ரீதியான பிரதிகளைப் பயன்படுத்தாமல் எவரேனும் போலிப் பிரதிகளைப் பயன்படுத்தினால், அவரைக் கைது செய்து ஐந்து லட்ச ரூபாய்களைத் தண்டப்பணமாக அறவிடவோ அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்குள்ளாக்கவோ அரசு திட்டமிட்டிருக்கிறது.

    இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கூட ஒரு கணினியை வாங்கிவிட முடியுமாக இருப்பதால் அனேகமான மத்திய தர வீடுகளில் கூட ஒரு கணினி இருக்கிறது. ஒரு பாடசாலையில் சொற்ப கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா மாணவர்களுக்கும், அதன் பிரயோகக் கல்வியை பூரணமாகக் கொடுப்பது சாத்தியமற்றது. எனவே கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், எப் பாடுபட்டாவது தம் பிள்ளைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். கணினிக்குத் தேவையான புதிய புதிய மென்பொருள்களையும் அவர்களால் குறைந்த செலவில் இலகுவாக வாங்க முடிந்ததால், இன்று இலங்கையில் பாடசாலை செல்லும் ஒரு மாணவருக்குக் கூட அனேக மென்பொருட்களை வீட்டிலிருந்தே இலகுவாகக் கற்றுக் கொள்ளவும் கையாளவும் முடிந்திருக்கிறது. மென்பொருட்களை எல்லாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இது நாடு முழுவதும் தொடர்வதால்தான் இலங்கையானது, தகவல் தொடர்பாடலில் உச்ச வளர்ச்சி நோக்கிச் சென்றிருக்கிறது.

    இன்று இலங்கையிலிருக்கும் பொருளாதாரச் சிக்கலில், அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கையில், சட்டரீதியான மென்பொருட்களை மட்டுமே எல்லோருக்கும் பயன்படுத்தச் சொன்னால், அவற்றை வாங்க இலட்சக்கணக்கான பணத்துக்கு எங்கு செல்வது? நாட்டு மக்கள் எல்லோருமே லட்சாதிபதிகளா என்ன? இதனால், கணினியும் மென்பொருட்களும் இனிமேல் மாணவர்களுக்கு நிறைவேறாக் கனவுகளாகவே ஆகிவிடும் அல்லவா? இனி எப்படி இலங்கையில் தகவல் தொடர்பாடல் அதன் வளர்ச்சியைத் தொடரும்?

    சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த நேருவதன் இன்னுமொரு விளைவு, இலங்கையிலுள்ள அனைத்துப் பொருட்களினதும் சேவைகளினதும் விலை உயர்வது. கணினி வகுப்பொன்றுக்கு தனது பிள்ளையை அனுப்பும் பெற்றோருக்கு, பாடக் கட்டணமானது, அவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர சாத்தியமிருக்கிறது. ஏனெனில் வகுப்பில் பயன்படுத்தப்படும் தமது கணினிகளுக்கான மென்பொருட்களை  வாங்குவதற்காக செலவளித்த இலட்சக்கணக்கான பணத்தை, அவ் வகுப்புக்களின் உரிமையாளர்கள் மாணவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளத் தீர்மானிப்பர். இன்னும், கணினி பாவனையிலிருக்கும் எல்லா இடங்களிலும், வாடிக்கையாளர்களிடமிருந்தே அச் செலவைச் சமாளிக்கத் தேவையான பணம் ஏதோ ஒரு விதத்தில் அறவிடப்படும்.

    இதன் அடுத்த விளைவானது பலர் தமது வேலை வாய்ப்புக்களை இழப்பது. சிறிய நிறுவனங்கள் கூட கணினிகளை அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் தட்டச்சுப் பொறிகளுக்கும், கையால் எழுதுவதற்கும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. இணைய விடுதிகள் எல்லாம் மூடப்பட வேண்டி வரும். கணினி பாவனையிலிருக்கும்போதே அரச அலுவலகங்களில் ஏதேனும் காரியம் நிகழ வேண்டுமானால், கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் கணினியும் இல்லையானால், பொதுமக்களின் கதி அதோகதிதான். நேர விரயத்துடன், இலங்கை மக்கள் நவீன யுகத்திலிருந்து பின்னோக்கிச் செலுத்தப்படுவர் என்பது நிதர்சனம்.

    உண்மையில் இம் மென்பொருட்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், வறுமை நிலையிலுள்ள நாடுகளில் அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் அம் மென்பொருட்களைத் தயாரிப்பதில்லை. அந் நிறுவனங்கள் தமது நாடுகளுக்குள்ளும், இன்னும் ஏனைய செல்வந்த நாடுகளிலும் அவற்றை விற்று உடனடியாக இலாபம் சம்பாதித்து விடுகின்றன. இலங்கை அரசாங்கமானது, இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பாவனைக்குக் கொண்டு வர முன்வந்ததன் முக்கிய நோக்கம், அந் நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதல்ல. சட்டரீதியான மென்பொருட்களை விற்கும் அரசுக்கு வேண்டியவர்களுக்கு, இலங்கைக்குள் ஒரு விற்பனைச் சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் அதன் அடிப்படைத் திட்டம். இதனால் பாதிக்கப்படும் பொது மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் அரசு சிந்திக்கவேயில்லை.

    அத்தோடு அரசாங்கமானது, போலி மென்பொருட்களைக் கைப்பற்றும் பொறுப்பை காவல்துறையிடம் ஒப்படைப்பதால் என்ன நடக்கும்? காவல்துறையானது, இம் மென்பொருட்களை வைத்திருப்பவர்களை மிரட்டுவதாலும், அச்சுருத்துவதாலும் தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்ளும் சாத்தியம்தான் அதிகரிக்கும். இதனால் இச் சட்டமானது, அதிகாரத்திலிருக்கும் எவரெவருக்கோ, எவற்றுக்கெல்லாமோ பயன்படுவதன்றி, பொதுமக்களுக்கு சிறிதளவும் பயனளிக்காது.

    உலக நாடுகளில் நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்களையும் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த விரும்புவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப் போகும் பாதிப்புக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும்தான். ஆனால், அதற்குச் சமமான மாற்றுப் பரிகாரத்தை ஏற்படுத்தி விட்டு, போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும். அரசாங்கமானது எதற்கெல்லாமோ கலந்தாலோசிக்கிறது, அறிக்கைகளை விடுகிறது. இத் தடை மூலம் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய பாதிப்புக்களுக்கெதிராக அரசாங்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது எனப் பார்த்தால் எதுவுமேயில்லை. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் இத் தடையைக் கொண்டு வரச் சொல்லிக் கோரியிருந்தால் கூட, அந் நிறுவனங்களிடம் இதனால் இலங்கையில் ஏற்படப் போகும் சிக்கல்கள் குறித்து எடுத்துச் சொல்ல அதிகாரத் தரப்பில் எவருமில்லை.

    இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருளை மட்டுமே பயன்படுத்தக் கோரும் இச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் கருத்தைப் பார்ப்போம். எமது நாட்டுக்குள் தயாரிக்கப்படும் மென்பொருட்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கும், அவற்றுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இச் சட்டமானது பெரிதும் உதவக் கூடுமென இவர்கள் எண்ணுகிறார்கள். எனினும் இம் மென்பொருள் தயாரிப்பைக் கற்றுக் கொள்வதற்கும் இவர்களுக்கு விலை குறைந்த போலி மென்பொருள்கள்தானே தேவைப்படுகிறது. எனின், 'எவ்வளவு சுயநலமான சிந்தனை இது?' எனச் சொல்லலாம்தானே.

    அண்மையில், இலங்கையில் தகவல்தொடர்பாடலானது 30% சதவீத வளர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதென சமீபத்திய கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன. அதன் பிரகாரம், இவ் வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்கது. இந் நாடானது இந்தளவு வளர்ச்சியை இக் குறுகிய காலத்துக்குள் பெற்றுக் கொள்ள முடிந்ததன் முக்கிய  காரணமானது, கணினிகளுக்கு அவசியமான மென்பொருட்களையெல்லாம் ஐம்பது ரூபாய்களுக்குக் கூட இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமைதான். 'எமது நாட்டை தகவல் தொடர்பாடல்களின் மையமாக்குவோம்' என ஒருபுறம் சூளுரைத்துவிட்டு, மறுபுறம் மென்பொருட்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் நடைமுறையைத் தடுக்க அரசு முன்வருவதன் மூலம், இத் தகவல் தொடர்பாடல் வளர்ச்சியானது எமது கண் முன்னாலேயே வீழ்ந்தழிந்து போவதுதான் நடக்கும். அத்தோடு தகவல் தொடர்பாடலும், கணினிப் பாவனையும் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயென மட்டுப்படுத்தப்படும்.

    இச் சட்டத்தின் பிரகாரம், இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும், வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட அரசின் பார்வையில் குற்றவாளிகள்தான். எனவே நாளை நாமும் கைது செய்யப்படலாம். நம் கணினிகள், நமது வீடுகளின் கண்டுகொள்ளப்படாத மூலைகளில் கிடத்தப்படலாம். பூந் தொட்டிகளாகவோ, சமையலறைப் பாவனைப் பொருட்களாவோ பயன்படுத்தப்படலாம். அன்றேல் 'ஒரு காலத்தில் எனது வீட்டிலும் கணினி இருந்தது' என விருந்தினருக்கும் வருங்கால சந்ததிக்கும் காட்டுவதற்காக, பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# விடிவெள்ளி 23.06.2011
# உயிர்மை
# திண்ணை

31 comments:

துளசி கோபால் said...

நெசமாவா சொல்றீங்க?

விடுமுறைக்குத்தானே போயிருக்கீங்க.....:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடுத்த பொருளாதார கொடுமை, அறிவு வளர்ச்சி பின்னடைவு னு ஆரம்பிச்சுட்டான்களா.?..

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடுத்த ஆட்சி அப்படியாவது வரட்டும்..

திவாகர் said...

அன்பின் ரிஷான்,

இலங்கை போன்ற போலி சர்வாதிகார நாடுகளில் இவை போன்ற சட்டங்கள், குரங்கு கையில்
பூமாலை போல மிகவும் சகஜம். இதைப் போன்று தமிழகத்திலும் ஆந்திரத்திலும் சினிமா
சி.டி விஷயம் சட்ட பூர்வமாக அதிகாரத்தில் உள்ளன. அதாவது கள்ளத்தனமாக சினிமா
சி.டி.கள் யார் வீட்டில் கைபற்றினாலும் அல்லது கை பற்றப்பட்டாலும் அவர்களை
குண்டர் தடுப்புச் சட்டம் மூலமாக விசாரணையே இல்லாமல் ஒரு வருடம் உள்ளே
தள்ளிவிடலாம். ஆனால் இப்படி இந்த சட்டத்தைப் போலீஸ் கையாண்டால் தமிழகமே உள்ளே
போகவேண்டியதுதான்.

இருந்தாலும் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும்
எழுத்தாளர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம்.

அன்புடன்
திவாகர்

சீதாலக்ஷ்மி சுப்ரமணியன் said...

அன்பு மகனே உன்னை நினைத்து எனக்கு கவலையாக இருக்கு.நான் ஒரு அம்மா.
எல்லாத்தையும்விட மகன் உயிருடன் இருக்கணும்.
அம்மா

coral shree said...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
பின் தர்மமே வெல்லும்!

வருந்தாதீர்கள். நல்லதே நடக்கும் ஐயா

கீதா சாம்பசிவம் said...

எது நேர்ந்தாலும் தைரியமாய் இருக்கவும். பிரார்த்தனைகள் செய்கிறோம்.

Sivasubramanian Renganathan said...

This is atrocious

வெங்கட் சுவாமிநாதன் said...

கைது செய்யப் போகிறார்களோ இல்லை தப்பித்துக் கொள்கிறீர்களோ, ஆனால் ஒவ்வொரு
நிமிஷமும் இந்த அரசு என்னைக் கண்காணிக்கிறது, நான் கைதாகக் கூடும், இன்று
இல்லையெனில் நாளை, இல்லை அடுத்த வாரத்துக்குள், எப்போது அவர்கள் மனதில்
தோன்றுகிறதோ அப்போது செய்துவிடுவ...ார்கள் என்ற மன நிலையிலேயே ஆயுளைக் கடத்துவது,
நான் மட்டுமில்லை, நானும், என் குடும்பமும், குழந்தகளும், என்ற நிலை மிக
கொடுமையானது. நான் என்ன சமாதானம் சொல்லக் கூடும். புரிந்து கொள்கிறேன். எங்கள்
அரசு எதுவும் செய்யாது. எங்கள் தலைவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். உங்கள்
மந்திரியே ஒருத்தர் இருக்கிறாரே, டக்ள்ஸ் தேவானந்தா, அவர் தான் என்ன செய்துவிட
முடியும்> அவர் உயிரைக் காப்பாத்திக்கொள்ள என்ன வெல்லாம் செய்ய
வேண்டியிருக்கிறது. தெய்வம் என்ன சித்தம் கொண்டுள்ளதோ, அது நடக்கும்.
தெய்வத்தைப் பிரார்த்தியுங்கள். மன அமைதி கிட்டும். கைது ஆகிறீர்களோ இல்லை
தப்பித்து விடுகிறீர்களோ, அது வரை மன அமைதியோடு இருக்க முடியுமானால், அது வே
போதும்.

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

‘உண்மையைச் சொல்பவர்களைக் கைது செய்தால்

அந்த நாட்டு அரசாங்கம் யோசிக்கத் தவறுகிறது என்று பொருள் ”


என்று பல பேரறிஞர்கள் சொல்வார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

M.Rishan Shareef said...

அன்பின் டீச்சர்,

//நெசமாவா சொல்றீங்க?

விடுமுறைக்குத்தானே போயிருக்கீங்க.....:(//

விடுமுறையில் வந்தேன்.. சிலவேளை இங்கேயே 'தங்கி' விடும் வாய்ப்புக்களும் உள்ளது. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர்.

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,

//அடுத்த பொருளாதார கொடுமை, அறிவு வளர்ச்சி பின்னடைவு னு ஆரம்பிச்சுட்டான்களா.?//

//அடுத்த ஆட்சி அப்படியாவது வரட்டும்.//

அடுத்த ஆட்சி இப்போதே இல்லை சகோதரி. பதவிக்கு வந்தவுடனேயே ஆட்சிக் காலத்தையும் நீடித்தாயிற்று :-(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் திவாகர்,

//அன்பின் ரிஷான்,

இலங்கை போன்ற போலி சர்வாதிகார நாடுகளில் இவை போன்ற சட்டங்கள், குரங்கு கையில்
பூமாலை போல மிகவும் சகஜம். இதைப் போன்று தமிழகத்திலும் ஆந்திரத்திலும் சினிமா
சி.டி விஷயம் சட்ட பூர்வமாக அதிகாரத்தில் உள்ளன. அதாவது கள்ளத்தனமாக சினிமா
சி.டி.கள் யார் வீட்டில் கைபற்றினாலும் அல்லது கை பற்றப்பட்டாலும் அவர்களை
குண்டர் தடுப்புச் சட்டம் மூலமாக விசாரணையே இல்லாமல் ஒரு வருடம் உள்ளே
தள்ளிவிடலாம். ஆனால் இப்படி இந்த சட்டத்தைப் போலீஸ் கையாண்டால் தமிழகமே உள்ளே
போகவேண்டியதுதான்.

இருந்தாலும் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும்
எழுத்தாளர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம்.

அன்புடன்
திவாகர்//

வரவேற்கத்தக்க கருத்து நண்பரே. வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் எல்லா சட்டங்களையும் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளில் பின்பற்றச் செய்ய முடியாது. நீங்கள் சொல்வதுபோல் திருட்டு டிவிடி, சீடியும் அதில் உள்ளடக்கம். இங்கு அதிகாரமும் அநீதியும் ஒன்றாகத் தலைவிரித்தாடுகையில் பொதுமக்களால் என்ன செய்யவியலும்?

கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,

//அன்பு மகனே உன்னை நினைத்து எனக்கு கவலையாக இருக்கு.நான் ஒரு அம்மா.
எல்லாத்தையும்விட மகன் உயிருடன் இருக்கணும்.//

வருத்தப்பட வேண்டாம் அம்மா. உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் எப்பொழுதும் என்னுடனேயே வருகையில் எனக்கெதுவும் நேராது. நன்றி அன்பு அம்மா.

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி பவள சங்கரி,

//தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
பின் தர்மமே வெல்லும்!

வருந்தாதீர்கள். நல்லதே நடக்கும் ஐயா //

நன்றி அன்புச் சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி கீதா சாம்பசிவம்,

//எது நேர்ந்தாலும் தைரியமாய் இருக்கவும். பிரார்த்தனைகள் செய்கிறோம்.//

நிச்சயமாக சகோதரி.. நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வெங்கட் சுவாமிநாதன் ,

//கைது செய்யப் போகிறார்களோ இல்லை தப்பித்துக் கொள்கிறீர்களோ, ஆனால் ஒவ்வொரு
நிமிஷமும் இந்த அரசு என்னைக் கண்காணிக்கிறது, நான் கைதாகக் கூடும், இன்று
இல்லையெனில் நாளை, இல்லை அடுத்த வாரத்துக்குள், எப்போது அவர்கள் மனதில்
தோன்றுகிறதோ அப்போது செய்துவிடுவ...ார்கள் என்ற மன நிலையிலேயே ஆயுளைக் கடத்துவது,
நான் மட்டுமில்லை, நானும், என் குடும்பமும், குழந்தகளும், என்ற நிலை மிக
கொடுமையானது. நான் என்ன சமாதானம் சொல்லக் கூடும். புரிந்து கொள்கிறேன். எங்கள்
அரசு எதுவும் செய்யாது. எங்கள் தலைவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். உங்கள்
மந்திரியே ஒருத்தர் இருக்கிறாரே, டக்ள்ஸ் தேவானந்தா, அவர் தான் என்ன செய்துவிட
முடியும்> அவர் உயிரைக் காப்பாத்திக்கொள்ள என்ன வெல்லாம் செய்ய
வேண்டியிருக்கிறது. தெய்வம் என்ன சித்தம் கொண்டுள்ளதோ, அது நடக்கும்.
தெய்வத்தைப் பிரார்த்தியுங்கள். மன அமைதி கிட்டும். கைது ஆகிறீர்களோ இல்லை
தப்பித்து விடுகிறீர்களோ, அது வரை மன அமைதியோடு இருக்க முடியுமானால், அது வே
போதும்//

மிகச் சரியான கருத்து.. உங்களது கருத்தை வரவேற்கிறேன். நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

//This is atrocious//

ஆமாம் நண்பா :-(

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் தமிழ்த்தேனீ,

//‘உண்மையைச் சொல்பவர்களைக் கைது செய்தால்

அந்த நாட்டு அரசாங்கம் யோசிக்கத் தவறுகிறது என்று பொருள் ”

என்று பல பேரறிஞர்கள் சொல்வார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ//

மிகச் சரி நண்பரே.

அரசாங்கம் பொதுமக்களைக் குறித்து யோசிக்கத் தவறுவதாலேயே இங்கு அனேகமான பிரச்சினைகள் அரங்கேறுகின்றன. :-(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

ராஜபக்சே said...

எலே இந்த போஸ்ட்டை ஸ்ரீலங்கன் அம்பாசிட்டர்க்கு அனுப்பியிருக்கேன் , ஏனோ என்னால முடிஞ்சது,

உனக்கு மட்டும் இஸ்பெசல் பர்மிஷன்ல டுபாக்கூர் விண்டோஸ் பாவனை செய்ய ஆவண செய்வார்.

அன்புரசிகன் said...

இவ்வாறு நீங்கள் கூறுவது தவறு. ஆனாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வேறு வழி இல்லை. தனி குடிமகனின் வருமானம் இவற்றை அனுபவிக்க போதுமானதாக இல்லை. இதுவே மேலைநாடுகளில் ஒரு பிரச்சனை இல்லை.

கட்டட நிர்மாணத்துறையில் வேலைசெய்யும் நிறுவனங்கள் அனைத்து மென்பொருளும் சட்டபூர்வமானதையே வைத்திருந்தனர். Autocad நிறுவனத்தினர் வந்து சோதனை செய்வதை கண்டிருக்கிறேன்.

வரி செலுத்தாமல் கண்ணாமூச்சி ஆடும் நிறுவனங்களுக்குத்தான் பாரிய இடி. இல்லாவிட்டால் நட்டக்கணக்கு காட்டவேண்டியது தானே...

பாதிக்கப்படப்போவது தனிநபர் பாவனை தான். அந்தவகையில் நீங்கள் அரசுக்கு கண்ணாமூச்சி ஆடவேண்டும் என்றாலும் இயலும். கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் போதும். அது இல்லாதவர்கள் அப்படியான மென்பொருட்களை பாவிக்க மாட்டார்களே... :D

praveen said...

நண்பரே உங்கள் கூற்று முற்றிலும் தவறு.

நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ/வசிக்கிறோமோ/பிறந்தோமோ அந்த நாட்டு சட்டத்தின்படி நடக்க வேண்டியது அவசியம், அதனை மீறவோ, ஏமாற்றவோ கூடாது, கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை உண்டு.

விண்டோஸ் 7 பதிப்பின் விலை என நீங்கள் குறிப்பிட்டது அல்டிமேட் அல்லது புரபெசனல் என்று நினைக்கிறேன். ஹொம் பேசிக், ஸ்டார்டர் எடிசன் விலை மிகவும் குறைவு (இந்திய ரூபாயில் 1800-2500). இது அடிப்படை கம்ப்யுட்டர் தேவைக்கு உகந்தது. அதே போல ஆபிஸ் ஸ்டார்டர் எடிசன் 3 கம்ப்யூட்டருக்கு சேர்த்து இந்திய ரூபாயில் 1500க்கும் குறைவே.

அனைத்து மென்பொருளிலும் இலவச(ப்ரிவேர்)மென்பொருள் உள்ளது அதனை தேடிப்பயன்படுத்தினால் வீணாக பயம் கொள்ளத்தேவையில்லை. லினக்ஸ் உபயோகப்படுத்துவதில் என்ன சிக்கல். பரிட்சயமில்லை என்பது,அதனை பதிந்து பழகிப்பார்த்தால் மறைந்து விடும்.

ஆட்டோகேடும், அடோப் மென்பொருட்களும் உபயோகிப்பவர்கள் யார்?. வியாபார நிமித்தம் வேலை செய்பவர்களே, அவர்கள் இனி தங்கள் சேவை/விற்பனையில் சிறிது மென்பொருள் விலையை சேர்த்து வாங்கட்டுமே.

தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வனிகரீதியில்லாத உபயோகத்திற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் வராது. அதே போல புழக்கத்தில் இல்லாத அபாண்டன்வேர் எனப்படும் காலாவதியான மென்பொருட்களை பயன்படுத்தினாலும் யாரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. (உதாரணம், விண்டோஸ் 98, 2000, ஆட்டோகேடில் ரிலிஸ்14 அடோப்-ல் போட்டோஷாப்7 இப்படி...)

புத்தம் புது மென்பொருளைத்தான் சட்டவிரோதமாக/இலவசமாக உபயோகப்படுத்துவேன் ஆனால் யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்.

praveen said...

நண்பரே உங்கள் கூற்று முற்றிலும் தவறு.

நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ/வசிக்கிறோமோ/பிறந்தோமோ அந்த நாட்டு சட்டத்தின்படி நடக்க வேண்டியது அவசியம், அதனை மீறவோ, ஏமாற்றவோ கூடாது, கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை உண்டு.

விண்டோஸ் 7 பதிப்பின் விலை என நீங்கள் குறிப்பிட்டது அல்டிமேட் அல்லது புரபெசனல் என்று நினைக்கிறேன். ஹொம் பேசிக், ஸ்டார்டர் எடிசன் விலை மிகவும் குறைவு (இந்திய ரூபாயில் 1800-2500). இது அடிப்படை கம்ப்யுட்டர் தேவைக்கு உகந்தது. அதே போல ஆபிஸ் ஸ்டார்டர் எடிசன் 3 கம்ப்யூட்டருக்கு சேர்த்து இந்திய ரூபாயில் 1500க்கும் குறைவே.

அனைத்து மென்பொருளிலும் இலவச(ப்ரிவேர்)மென்பொருள் உள்ளது அதனை தேடிப்பயன்படுத்தினால் வீணாக பயம் கொள்ளத்தேவையில்லை. லினக்ஸ் உபயோகப்படுத்துவதில் என்ன சிக்கல். பரிட்சயமில்லை என்பது,அதனை பதிந்து பழகிப்பார்த்தால் மறைந்து விடும்.

ஆட்டோகேடும், அடோப் மென்பொருட்களும் உபயோகிப்பவர்கள் யார்?. வியாபார நிமித்தம் வேலை செய்பவர்களே, அவர்கள் இனி தங்கள் சேவை/விற்பனையில் சிறிது மென்பொருள் விலையை சேர்த்து வாங்கட்டுமே.

தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வனிகரீதியில்லாத உபயோகத்திற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் வராது. அதே போல புழக்கத்தில் இல்லாத அபாண்டன்வேர் எனப்படும் காலாவதியான மென்பொருட்களை பயன்படுத்தினாலும் யாரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. (உதாரணம், விண்டோஸ் 98, 2000, ஆட்டோகேடில் ரிலிஸ்14 அடோப்-ல் போட்டோஷாப்7 இப்படி...)

புத்தம் புது மென்பொருளைத்தான் சட்டவிரோதமாக/இலவசமாக உபயோகப்படுத்துவேன் ஆனால் யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்.

தாமரை said...

கவலைப்படாதீர்கள். இந்தப் பதிவையே ஆதாரமாகக் காட்டி உங்களைச் சிறைதண்டனையில் இருந்து தப்புவிக்க வல்ல வழக்கறிஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். :-))))

அன்புரசிகன் said...

//நண்பரே உங்கள் கூற்று முற்றிலும் தவறு.

நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ/வசிக்கிறோமோ/பிறந்தோமோ அந்த நாட்டு சட்டத்தின்படி நடக்க வேண்டியது அவசியம், அதனை மீறவோ, ஏமாற்றவோ கூடாது, கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை உண்டு.

விண்டோஸ் 7 பதிப்பின் விலை என நீங்கள் குறிப்பிட்டது அல்டிமேட் அல்லது புரபெசனல் என்று நினைக்கிறேன். ஹொம் பேசிக், ஸ்டார்டர் எடிசன் விலை மிகவும் குறைவு (இந்திய ரூபாயில் 1800-2500). இது அடிப்படை கம்ப்யுட்டர் தேவைக்கு உகந்தது. அதே போல ஆபிஸ் ஸ்டார்டர் எடிசன் 3 கம்ப்யூட்டருக்கு சேர்த்து இந்திய ரூபாயில் 1500க்கும் குறைவே.//

தனிநபர்களுக்குத்தான் பிரச்சனை. நான் நினைக்கவில்லை இலங்கையில் 8000 ரூபாய்க்கு Windows 7 Home Premium உள்ளது என்று. ஏறத்தாள 30,000.00 இலங்கை ரூபாய்... சாதாரணமாக 20,000 - 30,000 ற்கு சம்பளம் பெறுபவர்களால் நிச்சயம் நினைத்துப்பார்க்க இயலாது.

அதற்காக அரசை குறைகூறமுடியாது... ஏற்கனவே கூறியது போல் புத்தம் புதிதாக பாவிக்க விரும்புபவர்கள் கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் இலகுவாக தப்பித்திடலாம். :-)

நாகராசன் said...

உலகமயமாதலின் கோரமுகம் காட்டும் செயல். எல்லா வளர்ந்துவரும் நாடுகளும் அன்றாடம்
இணைய வெளியில் மென்பொருள் வணிகத்தில் சந்தித்து வந்தாலும் இலங்கையில் நடக்கும்
எதேச்சிகார நிகழ்வுகள் உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. இவங்கையில் அறிவுசார்
கணினி வளங்களைப் பொதுமைப் படுத்தவும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்
படுத்தவும் சில குழுக்கள் செயல் புரிந்து வருகின்றன. குறிப்பாக இலங்கையின்
திறந்த நிலைப் பல்கலையும் மலாசியாவில் இருந்து செயல்படும் Access to
Knowledge-ன் இலங்கைக் கிளையும் உங்களுக்கு உதவலாம். நீங்கள் அவர்களுடன்
இணைந்து செயல்படலாம்


http://www.concurringopinions.com/archives/2011/02/diverse-challenges-to-a2k-a-southern-perspective.html

hathafy said...

World going foreword but Sri Lanka is going back (Weththa- Weedarhal) period i don't know y?

Amazing Only said...

Please use Open source freeware tools Like Ubuntu.

What else you need?

dsfs said...

good post. you can use opensource alternatives is the best one

mohamedali jinnah said...

நீங்கள் செய்ய வேண்டிய கடமை நிறைய உள்ளன . பக்குவமாக எழுதுங்கள், உங்களையும் பார்துக் கொள்ளுங்கள்.விவேகத்துடன் வாழ்வது காலத்தின் கட்டாயம். நேசத்தின் வெளிப்பாட்டுடன் சொல்ல வேண்டிய கடமை உள்ளதால் தெரிவிக்கின்றேன்

Anonymous said...

ungal vimarsanangal yathartthamanavai.sinthikkathakkavai. innum eluthuka. vazhka! valarka