Monday, June 13, 2011

அரச மாளிகை ஊக்க மருத்துவர்

    ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில குளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது விரட்டியடிப்பீர்களா? இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.

விடயத்துக்கு வருவோம். எமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களது பணத்தைக் கொண்டு 'விளையாட்டு மருத்துவப் பிரிவு' ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் விளையாட்டுக்களின் பிரகாரம் உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் அளிப்பதுதான் அதன் பொறுப்பு. அதற்காக பொதுமக்கள் கட்டும் வரிகளிலிருந்து ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவப் பிரிவின் பிரதான மருத்துவருக்கு, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டு வீரர்களினதும் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த பாரிய பொறுப்பு இருக்கிறது. அதன்படி வீரர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டாலோ, ஊக்கமருந்துகள் பாவித்தாலோ அது குறித்து பதில் கூறவேண்டிய முழுமையான பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இப் பாரிய பொறுப்பிலிருக்கும் பிரதான மருத்துவத் தலைவரான வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் செய்யும் ஒரே வேலையானது, விளையாட்டு வீரர்களை ஒரு போலி மருத்துவரான ஈலியந்த வைட்டிடம் அனுப்புவதுதான். இத் தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் பற்றுக் கொண்ட அனைவருக்கும் பாரதூரமான பிரச்சினையொன்றாக இது இன்று மாறியிருக்கிறது.

    இந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் கூட மருத்துவம் பார்த்த, சச்சின் டெண்டுல்கராலும் 'அதிசயக்கத்தக்க மருத்துவர்' எனப் புகழப்பட்ட இந்த ஈலியந்த வைட் யார் எனப் பார்ப்போம். ஈலியந்த லிண்ட்ஸே வைட் என முழுப் பெயர் கொண்ட இவர் முன்பு கொழும்பு, பலாமரத்தடிச் சந்தியில் மறைவாக ஜாக்பொட் சூதாட்ட உபகரணங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, விளையாட விட்டும், அவற்றை வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்தவர். அத் தொழிலானது சிக்கலுக்குள்ளானதும், தெல்கந்த பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப் பாக வியாபாரத்தை ஆரம்பித்தார். அவ்வியாபாரமும் படுத்துக் கொண்ட பிற்பாடு, சில வருடங்கள் காணாமல் போயிருந்தவர், பிறகு மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியானதும் அவரது தனிப்பட்ட மருத்துவராக வந்து இணைந்து கொண்டார். அதுவும் சாதாரண மருத்துவராக அல்லாமல் அண்ட சராசரங்களினதும் சக்தி பெற்றவொரு மருத்துவராக ! 

    தான் அண்ட சராசரங்களின் சக்தியைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதாகவும், 2018ம் ஆண்டு வரை தன்னிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளவென பெரியதொரு பட்டியலே இருக்கிறது எனவும் இவர் ஊடகங்களில் சொல்லி வருகிறார். புற்றுநோய், தலசீமியா, மூட்டு,முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட வியாதிகள், தீராத வயிற்றுவலி, தலைவலி என்பவற்றோடு எய்ட்ஸையும் முழுமையாகத் தன்னால் குணப்படுத்த முடியுமென இவர் சொல்கிறார்.


       ஒருவர் தனது முன்னால் நிற்கையில், வெல்டிங் செய்யும்போது ஏற்படும் வெளிச்சம் போல ஒன்று தனக்குத் தென்படுவதாகவும், அதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் முழுமையான உடல்நிலையைக் கண்டறிந்து, தான் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் இவர் கூறுகிறார். இது ஒழுங்கான வைத்திய சிகிச்சை முறையல்ல. இதன் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் சாதாரண நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கு வைத்தியம் செய்யக் கூட இந்த ஈலியந்த வைட் தகுதியானவரல்ல என்பதுதான்.

    இவரது சிகிச்சையால் சிக்கலுக்குள்ளான சில பிரபலங்களைப் பாருங்கள். இலங்கை கிரிக்கட் விளையாட்டு வீரரான உபுல் தரங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிக்கட் கவுன்சிலில் நடைபெற்ற பரிசோதனையின் போது ஊக்கமருந்து பாவித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. உபுல் தரங்கவுக்கு அம் மருந்தைக் கொடுத்தவர் இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவரான ஈலியந்த வைட்.

    தனது உடல் வலிமையை முழு உலகுக்கும் காட்டிய, இலங்கையின் பளுதூக்கும் வீரர்களில் ஒருவரான சிந்தன விதானகே, ஒரு சைவ உணவுப் பிரியர். மருந்துக்குக் கூட மாமிச உணவுகள் பக்கம் செல்லாதவர். சுய திறமையாலும், விடாமுயற்சியாலும் தேசத்துக்கு புகழைத் தேடிக் கொடுத்த சிந்தன விதானகேயின் விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கிய காரணி அவர் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு. சிந்தனவுக்கு அம் மருந்தைக் கொடுத்தவர், ஈலியந்த வைட்.

    ஈலியந்த வைட்டினது ஊக்க மருந்தின் காரணமாக தமது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு மிக அண்மையில் ஆளாகியிருப்பவர்கள், இலங்கை ரகர் விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த ஸாலிய குமார, கேன் குருசிங்க, எரங்க சுவர்ணதிலக ஆகிய விளையாட்டு வீரர்கள். இலங்கையை மையமாகக் கொண்டு நடைபெற்ற Five Nations போட்டியின்போது இடம்பெற்ற சிறுநீர்ப் பரிசோதனையில் இம் மூவரும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பாவித்திருப்பது ஊர்ஜிதமானது. இவர்களும் ஈலியந்த வைட்டிடம் சிகிச்சை பெற்று, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டதன் காரணத்தால் இத் துரதிர்ஷ்டமான நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

    கிரிக்கட் விளையாட்டு வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், 100 மீற்றர் ஓட்டப்பந்தய வீரரான ஷெஹான் அம்பேபிடிய, 1500 மீற்றர் ஓட்டப்போட்டியை முன்னெடுத்த சமிந்த விஜேகோன் போன்ற இலங்கை வீரர்களுக்கும் கூட ஈலியந்த வைட், ஊக்க மருந்தினைக் கொடுத்துள்ள போதிலும், அவற்றைப் பாவித்த உடனேயே அவர்களின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட காரணத்தினால் நல்லவேளை, சிறுநீர்ப் பரிசோதனையிலிருந்து விலக்கப்பட்டார்கள். இல்லாவிட்டால் அவர்களது விளையாட்டு வாழ்க்கைகளுக்கும் அதோ கதிதான்.

    ஈலியந்த வைட், இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியர். ஆகவே அவரது செயல்கள் அனைத்தையும் குறித்து ஜனாதிபதியும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒருவரை அரச மாளிகைக்குள் அழைத்து வந்து வைத்திருப்பது, சுயசிந்தனையுள்ள எவருமே செய்யும் காரியமல்ல. அவர் இந் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு மாத்திரமல்லாது, வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்குக் கூட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிகிச்சையளிப்பதை முழு தேசமே பார்த்திருந்தது. இந்திய கிரிக்கட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கௌதம் காம்பீர், அஷிஷ் நெஹ்ரா போன்றோரும் இவரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வைத்து, காவல்துறையின் தாக்குதலில் மிகவும் மோசமாகக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைப் பார்த்துவரவென ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவும், ஈலியந்த  வைட்டும் ஜனாதிபதியால் அனுப்பப்பட்டிருந்தனர். அங்கும் சென்று நோயாளிகளுக்கு மோசமான சிகிச்சையளித்திருக்கிறார் ஈலியந்த வைட்.

    இத் தேசத்துக்குப் புகழைச் சேர்க்கும் விளையாட்டு வீரர்களை நசுக்கும் இந்த ஊக்க மருத்துவர் குறித்து உலகம் அறிய வேண்டும். விளையாட்டு வீரர்கள் அல்லாமல், சாதாரண நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியராவது கூட எளிதான காரியமல்ல. அதற்கு பல வருடங்கள் தம்மை அர்ப்பணித்து மருத்துவத்தைக் கற்க வேண்டும். அவ்வாறு முழுமையான வைத்தியக் கல்வியைக் கற்காத இவர், விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு எவ்விதத்திலும் பொறுத்தமானவரே அல்ல.

    எமது தேசத்தைப் பெருமைப்படுத்தும் விளையாட்டு வீரர்களைப் பீடித்திருக்கும் பிரதான தொற்றுநோயான இப் போலி மருத்துவருக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது அவசியம் அல்லவா? ஆனால் அது நடக்காது. ஏனெனில் இவர் இலங்கை அரச மாளிகை மருத்துவர்.அரசருக்கு வேண்டியவர்கள் குற்றங்கள் செய்துவிட்டு இலகுவாகத் தண்டனையின்றித் தப்பி விடும் இலங்கையில், அரச மாளிகைக்குள் நுழைந்து, அரசரின் மிகுந்த அன்புக்குள்ளாகியிருக்கும் இவருக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை முன்வைப்பது கூட சாத்தியமற்றது.

    எனினும் இவரை மருத்துவ உலகிலிருந்து அப்புறப்படுத்தாமல், எமது விளையாட்டு வீரர்கள், விளையாட்டை விட்டு விலகிச் செல்வதையும், ஊக்க மருந்துக் குற்றச் சாட்டுக்களில் சிக்கி, விளையாட்டிலிருந்து விலக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை

16 comments:

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

பெருமூச்சு விடுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தகவல்களை சேகரித்து தெளிவாக உண்மையை அமபலாமாக்கியமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ரிஷான் .

துளசி கோபால் said...

அட ராமா..............:(

நட்புடன் ஜமால் said...

பல வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கின்றார்கள், அந்த சக்தியிருக்கு இந்த சக்தியிருக்குன்னு

இப்ப மருத்துவத்திலுமா :(

த. எலிஸபெத் said...

கலப்படம் இல்லாத துறை இலங்கையில் இல்லைபோலும்....என்ன கொடுமையடா இது? வைத்தியர்கள் கடவுள் போல மதிக்கப்படுபவர்கள், இப்போது யமனாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது?????

Ravee said...

ரிஷான் உங்களிடம் இருந்து பல வேறு பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் வருவதை வரவேற்கிறேன்.

அட ராஜபச்சே அவர்களுக்கு சனி திசை நடக்கிறது என்று நினைக்கிறேன் ... எனவேதான் பூனையை மடியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்.
நாம் எல்லோரும் விரும்பும் ஒன்றை இந்த மருத்துவர் ராஜபக்சேவுக்கு செய்தால் நன்று தானே ....

Mohamed Faaique said...

இன்னும் என்ன என்ன அசிங்கங்கள் மேடையேறப் போகிரதோ!!!

நிகழ்வுகள் said...

இப்படியெல்லாம் இருக்கிறார்களா,, அதுக்கும் ஜனாதிபதிக்கு அருகில் ...!!!

Rock N Rolla said...

//இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.//

wow!

Mohamed Hassaan said...

paambu paramasivan kaluthula illa irukku...yaru eanna seyya..

ARV Loshan said...

சரியான ஆதாரத் திரட்டல்களுடன் ஆணித்தரமாக சொல்லியுள்ளீர்கள் ரிஷான்.
காத்திரமான தேவையான பதிவு.

அத்துடன் ஏற்கெனவே உங்களிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டபடி, இந்தப் பதிவை இன்றைய எமது இரவு விளையாட்டு சஞ்சிகை நிகழ்ச்சியில் (V for வெற்றி V for விளையாட்டு)
வெற்றி FM வானொலியில் சேர்த்துக் கொள்கிறேன்.. :) நன்றி.



A.R.V.லோஷன்

ஷஹன்ஷா said...

தேவையான ஆதாரங்களை முன்வைத்து ஒரு காத்திரமான பதிவு..

ஒரு போலிக்கு இவ்வளவு ஆதரவு என்றால் இனி இலங்கை நல்லா இருந்த மாதிரித்தான்..
ஆமாம் கலப்படமற்ற துறை ஏதாவது இலங்கையில் இருந்தால் அது பற்றி பாராட்டு பதிவு போடப்போகின்றேன்..!


வெற்றியில் தங்கள் பதிவு கேட்க ஆவலுடன் உள்ளேன்..வாழ்த்துகள்

வடலியூரான் said...

//இதன் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் சாதாரண நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கு வைத்தியம் செய்யக் கூட இந்த ஈலியந்த வைட் தகுதியானவரல்ல என்பதுதான்.

:)

Bavan said...

அட கிராதகா..:-o

விளக்கமான பதிவுக்கு நன்றி ரிஷான்..:-)

digital india said...

ivanunga iruntha enna setha enna?
muthalla ethavathu oru marunthu koduthu antha rajapaksheva saga adikka sollunga!!!

சி.பி.செந்தில்குமார் said...

detailed post

எஸ் சக்திவேல் said...

வெளிநாடுகளில் இருப்பதுமாதிரிக் பகிரங்கமாக யாரும் கேள்விகள் கேட்கக்கூடிய நிலைமை (உயிர்ப்பயம் இல்லாமல்) வராமல், இந்தமாதிரிப் பேர்வழிகள் தலையெடுப்பதைத் தடுக்கமுடியாது.

ஜெயிலில் இருக்க வேண்டிய பேர்வழி, "ராஜ" மரியாதையோடு வெளியில்!