‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).
புனித ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம். ரமழான் வரும்போது இரவுகள் அமல்களால் விழிப்படைகின்றன. இருள் அகற்றப்பட்டு குர்ஆன் திலாவத்துக்களாலும், தொழுகைகளாலும், இஃதிகாப்களாலும் நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகிறது. ரமழான் மாதம் வருகையில் நிறைய நன்மைகளை நாம் தேடிக் கொள்ளலாம் என மகிழும் அனேக இஸ்லாமியர்களைப் போலவே ரமழானின் இரவுகளை வீண் விளையாட்டுக்களிலும் வியாபாரங்களிலும் கழித்துவிடலாம் என எண்ணித் திளைப்பவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் அனேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை விளையாட்டிலேயே கழித்துக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.
'எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
அவரது கூற்றினை உண்மையாக்குவது போலவே நடந்துகொள்ளும் அனேகரை நாம் ரமழானில் காணலாம். தொழுகையிலும், திக்ரிலும், இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமழானின் இரவுகள், தெருக்கள் தோறும் கும்மாளமிட்டுத் திரியும் சில இளைய சமுதாயத்தினரால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெறுகின்றன. ஏனைய மாதங்களில் இரவுவேளைகளில் இளைஞர்களை வெளியே இறங்கி நடமாட விடாத பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் பள்ளிவாசலுக்குச் செல்வதாகப் பொய் சொல்லி வீட்டில் அனுமதி பெறும் இந்த இளைஞர்கள் செல்வது அல்லாஹ்வின் மாளிகைக்கல்ல. அதற்கு மாற்றமாக இளம்பெண்கள் தொழுகைக்காகச் செல்லும் இடங்களையும், துணிக்கடைகள், உணவுக் கடைகள் போன்ற இடங்களையுமே இவர்களது பாதங்கள் சுற்றி வருகின்றன.
ரமழானின் புனித இரவுகளை இவ்வாறாக வீணாகக் கழிப்பவர்கள், உறக்கம் மிகுதியால் ஸஹருக்குப் பிறகு பர்ழான தொழுகையான சுபஹைக் கூடத் தொழாது தூங்கிவிடுகின்றனர். அஸர் நெருங்கும் வேளையில் விழித்தெழும் இவர்கள் நோன்பின் மாண்பையும், பசியையும் பெரிதாக உணர்வதே இல்லை. சிலருக்கு ஸஹர் கூட இல்லை. நோன்பும் பிடிப்பதில்லை. இஸ்லாம் எனும் உண்மையானதும் உன்னதமானதுமான மார்க்கம் நமக்குத் தந்திருக்கும் அருட்கொடைகளின் அற்புதமான மாதம், இவ்வாறாக வீணாகக் கழிவதை இவர்கள் உணர்வதுமில்லை. இவர்களுக்கு இதில் சிறிதும் வருத்தமும் இல்லை.
இது போல நோன்பின் பகல்பொழுதைக் கழிக்கவென வீண்விளையாட்டுக்களிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும், இசையிலும் சரணடையும் அனேக இஸ்லாமியர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்.
விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)
"பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
பெருநாள் செலவுக்கென சூதாட்டங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களும், பெருநாளுக்கென ஆடைகளும் உணவுப் பொருட்களும் அதிகமாக விற்பனையாவதால் அவற்றில் பொய் கூறி ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களும் நம் மத்தியில் இருக்கின்றனர். கருணை மிக்க அல்லாஹ் தஆலா, நோன்பாளிகளுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கியிருக்கிறான். அவற்றைப் புறக்கணித்து நோன்பை வீணாகக் கழிப்பவர்கள் எவ்வளவு பெரும் பாவத்தைச் சுமப்பார்கள்? இவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்யும் தவறுகளைத் தாமே உணர்ந்து திருந்தாமல் இருப்பின், இவர்களது வாழ்நாளில் எத்தனை ரமழான்கள் வந்து போனாலும் இவர்களது நடவடிக்கைகளில் மாற்றமேதுமிருக்காது.
ரமழானில் நோன்பை முறித்துவிடக் கூடிய காரியங்களை சர்வசாதாரணமாகச் செய்துவிடும் அனேகர், நோன்பு முறிந்துவிடும் என்ற அச்சத்தில் நோன்பை முறித்துவிடாத ஹலாலான நிறைய காரியங்களை செய்யாதிருந்து விடுவதை நாம் நிறையக் காணலாம். உதாரணமாக 'நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடையானது அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என்ற ஹதீஸை தவறாகப் புரிந்துகொண்டு, நோன்பு நோற்றிருக்கும் நேரம் முழுதும் பல்துலக்காது இருந்து விடும் நோன்பாளிகள் பலர் உள்ளனர். இதனால் நோன்பு நோற்றிருக்கையில் பல் துலக்காதிருக்கும் இந் நோன்பாளிகளுடன் கதைக்க நேரும் ஏனைய வேற்று மதத்தவர்கள் நோன்பைப் பற்றியும் இஸ்லாமியரைப் பற்றியும் தவறாகப் புரிந்துகொள்வதுதானே நடக்கும்? இவ்வாறு நிறைய ஹதீஸ்களையும் நோன்பு குறித்த எண்ணக் கருவையும் பிழையாகப் புரிந்துகொண்ட காரணத்தால் தவறிழைப்பவர்கள் அனேகர்.
இஸ்லாமிய வரையறைக்குள் அடங்காத ஆடைகளை அணியும் நாகரிகக் கலாசாரம் வெகுவேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் அதையே பின்பற்றத் துடிக்கும் அனேக முஸ்லிம்களை இக் காலத்தில் மிக அதிகமாகக் காணக் கிடைக்கிறது. இவ்வாறே பெருநாள் நெருங்குகையில் கடைத் தெருக்களில் இரவு பகல் பாராது எப்பொழுதும் நம்மவர்கள் ஆண் பெண் பேதமற்று சுற்றித் திரிவதையும் காணலாம். நோன்பின் இறுதிப் பத்தில் ஆடை கொள்வனவுகளில் மிக மும்முரமாக ஈடுபட நேர்வதால் புனித லைலதுல் கத்ர் இரவினைக் கூட கடைத்தெருக்களில் வீணாகக் கழிக்கிறார்கள் நம்மவர்கள்.
'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சாதாரண நாட்களை விடவும் ரமழானுடைய தினங்களில் கொடைகள் வாரி வழங்கப்படுகின்றன. பணத்தாலோ, தானியங்களாலோ தங்களால் இயன்ற அளவு வழங்குவதன் மூலம் நன்மைகளைக் கொள்ளையடித்துக் கொள்ளும் நிறையப் பேருக்கு மத்தியில் எதையுமே கொடுக்காமல் பதுக்கி வைத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். கொடுத்தால் குறைந்துவிடும் என்ற அச்சம் மிகைத்துச் செய்யும் அவர்களது இந் நடவடிக்கைகள் தவறானது என எடுத்துச் சொல்பவர்கள் யார்?
இவ்வாறு இஸ்லாத்தை நன்கு புரிந்தும் இறையச்சம் இல்லாததன் காரணத்தால் பாவம் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதன் காரணமாக தவறிழைப்பவர்களுக்கும், மூட நம்பிக்கைகளின் காரணத்தால் பிழை செய்பவர்களுக்கும் உண்மையை எடுத்துரைப்பதுவும் நன்மையின் பக்கம் அவர்களை ஈர்ப்பதுவும் அவர்களதும் எமதும் நல்வழிக்காகப் பிரார்த்திப்பதுவும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இன்ஷா அல்லாஹ், இப் புனித ரமழானில் நாம் அதைச் செய்ய எல்லாம் வல்ல நாயன் அருள் புரியட்டும் !
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
நன்றி
# விடிவெள்ளி 04.08.2011
# விடிவெள்ளி 04.08.2011
3 comments:
அல்ஹம்த்துலில்லாஹ் சிறப்பாக இருந்தது
அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அணைவருக்கும் நேர்வழியய் காட்டுவானாக
மாஷா அல்லாஹ். அனைத்திலும் ஆழமான அறிவினைப் பெற்ற தாங்கள் இஸ்லாத்திலும் நல்ல பிடிப்புடன் இருப்பது மிகவும் மகிழ்வாக உள்ளது .அல்லாஹ் அனைத்தும் கொடுத்து இருலோக வாழ்விலும் மேன்மை படுத்த துவா செய்கின்றேன், ஆமீன். இந்த நல்ல நாட்களில் நீங்களும் எங்களுக்கு அல்லாஹ்விடம் துவா செய்ய வேண்டுகின்றேன்.
கொடுத்தால் குறைந்துவிடும் என்ற அச்சம். கொடுக்க கொடுக்க குறையாது. பெருகும் .
Post a Comment