10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.
தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.
கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் - மரண வாக்குமூலம்
"2014 -02-05
"அப்பாவுக்கு..
இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் குற்றமெதுவும் செய்யாமல் எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க வைக்க என்னால் முடியாது. தவறு என்று நான் செய்ததென்றால் 7 ஆம் ஆண்டில் ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த அந்தத் தவறை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB யில் இட்டவரையும், அந்த ஃபோட்டோவை எனக்கு டேக் செய்தவரையும் விட்டுவிட்டு ஏன் என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்? இன்று நான் என்னுடைய ஒன்றுமறியாத அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப் பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய அப்பா அவ்வாறான ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக் கூடாது. எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில் வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில் யாருக்குமே புரிவதில்லை. அதற்கிடையில் எங்கேயோ போகும் ஒன்றுக்காக எனது அப்பாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர். அவர் எதுவுமே தெரியாமல் என்னை நோக்கி மாத்திரம் விரலை நீட்டுவது ஏன் என எனக்குத் தெரியவில்லை. 5000 பிள்ளைகள் முன்பு, கூட்டத்தில் வைத்து மேடைக்கு அழைத்துத் திட்டினார். ஒரு பையனோடு படம் பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார். நான் போகவில்லை என்பதை எனது தங்கையும், அக்காவும் அறிவார்கள். இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த போதும் கூட நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். இனிமேலும் என்னால் இயலாது.
எனது வகுப்பாசிரியர் பண்டார, வகுப்பைப் பொறுப்பேற்கும் அன்று எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன். அப்படியெல்லாம் செய்த என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இந்தப் பாடசாலைக்காக பாடுபடுவதுதான் எனது மிகப் பெரும் தவறு. பாடசாலையில் ஏதேனும் போட்டிகள், விழாக்களின் போது நான் நடனமாடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர ஆசிரியை, ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும். எனது அப்பாவுக்கும், பண்டார ஆசிரியருக்கும் இனியும் கவலைகள் தர என்னால் முடியாது. நான் இன்று செய்யப் போகும் காரியத்தால் ஏனைய பிள்ளைகளுக்கு இம் மாதிரியான கீழ்த்தரமான வேலைகள் நடக்காமலிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.
சில ஆசிரியர்கள் பிரச்சினையொன்று வரும்போது எனது குடும்பத்தை இழுக்கிறார்கள். நான் இங்கு சொல்வது யார் குறித்து என்பது என் அப்பாவுக்குத் தெரியும். நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் 'வேசி' எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப் பிள்ளைகள் சிறியதொரு தவறைச் செய்தால் அப் பிள்ளைகளை 'வேசி' எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள். பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள் வரும்போது யார் சரி, யார் தவறு என்பதைத் தேடிப் பாருங்கள். எல்லா அவப் பெயர்களையும் எனக்கும், என் தங்கைக்குமே கூறுகிறார்கள். எனது பாடசாலையில் 50%மானவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் அதிபருக்குத் தெரியாது. நாங்கள் சொல்வதும் இல்லை. அதனால்தான் எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள்.
நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று 'எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே செய்தபோதும், போட்டிகளிலெல்லாம் வென்றபோதும் எமக்கு நற்பெயரெதுவும் சூடவில்லை. ஆனால் தவறொன்று செய்தவிடத்து முழுப் பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம் சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும். பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம் ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால் பாடசாலைக்குப் போக முடியாது. கமகே ஆசிரியரும் கூட நான் நடத்தை கெட்ட பிள்ளை எனக் கூறினார். நான் அப்பொழுதெல்லாம் கூட எனது O/L பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல நடத்தையை அவர்களுக்குக் காட்டத் தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும் இப்பொழுது அதிகம் தாமதமாகி விட்டது. இனி செய்ய ஏதுமில்லை.
பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள் இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர் மாத்திரமே இந்தப் பாடசாலையில் எனது திறமைகளைப் பற்றிக் கூறிப் பாராட்டியவர்கள். பிரபா ஆசிரியையிடம் சென்று எனது பிரச்சினைகளைக் கூறி ஆறுதல் தேடியபோது, நான் நன்றாக பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் என் கனவுகள் எல்லாம் அழிந்து போயின. என்னால் இப்பொழுது O/L பரீட்சை தவிர்த்து அடுத்த ஜென்மத்தில் எந்த இடம் கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.
அப்பா, நீங்கள் என்னுடைய பேரில் இருக்கும் காணியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நானில்லாமல் போனால் உங்களைக் கவனித்துக் கொள்ள ஆளிருந்தால் அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம் இருப்பதால்தான் உங்களுடன் இருப்பவர்களெல்லாம் கூட இருக்கிறார்கள். பணம் இல்லாமல் போன நாளில் உங்களுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது. இறுதியான, இறுதியான இந்தக் கணத்திலும் கூட எனக்குத் தென்படுவதெல்லாம் எனது அப்பாவின் கண்களிரண்டும் மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப் போவது மிகுந்த கவலையைத் தருகிறது. முடியுமென்றால் தங்கையையும் அந்தப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த அதிபர் இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம் காட்டுவார்.
அம்மா, நான் உங்களையும் மிகவும் நேசிக்கிறேன். அம்மா என்னுடன் இன்று இன்னும் கதைக்காததற்குப் பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அக்காவைத்தான் இந்த இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்களும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார்.
நானில்லாமல் போனால் உங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள் அப்பா? எழுத எழுத எனக்கு எனது இதயத்தில் கவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த ஜென்மத்திலும் கூட ஆறுதல் கிடைக்காமல் போகும்.
என்னைப் போல தவறிழைக்காத பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள். அவர்களையும் பாடசாலையிலிருந்து விலக்கி விடப் பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான் இத் தீர்மானத்தை எடுத்தேன்.
I love my family
நான் எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.
இங்கு என்னைப் பார்த்தவுடன், பண்டார ஆசிரியருக்கு முதலில் தெரிவியுங்கள்."
தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் 'அதிபர்' என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.
# உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.
# எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.
# 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.
# பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.
சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.
"எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது"
இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்? அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவும், சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டு, தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமே பொதுமக்களின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இலங்கையில் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு இம் மரணம் ஒரு ஆதாயமாக அமைந்துவிட்டது. எனவே அரச தரப்பு அமைச்சர்கள் சிலரும், இலங்கைக் காவல்துறையும் அதிபரின் சார்பாக இருப்பதனால் அதிபர் இன்றுவரை விசாரணைகளுக்குக் கூட ஆளாகாமல் தனது பதவியில் தொடர்ந்தும் இயங்கி வருகிறார். அரசை எதிர்க்கப் பயந்து சிறுவர் அமைப்புக்களும், பெண்ணிய ஆதரவாளர்களும் கூட மௌனமாக இருப்பதனால் பொதுமக்கள் கொந்தளித்து அதிபருக்கு ஏதும் தீங்கிழைத்து விடக் கூடாதென்று, காவல்துறையினர் அதிபருக்கு தினமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் இன்னும் சொற்ப நாட்களில் பொருட்களின் விலையேற்றத் தகவல்களினாலும், மாகாண சபைத் தேர்தல் செய்திகளாலும் மறக்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஆனால் பேரிழப்பென்பது, பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மாத்திரமே.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
Photos - Gossiplankanews
15 comments:
மிகச் சாதாரண விடயத்தை கையாள தெரியாத பள்ளி முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது. அப்படி அச் சிறுமியை தண்டிக்க நினைத்திருந்தால் தனியே அழைத்து விசாரித்து இருக்கலாம். இந்த சிறுமியும் அவசரப்பட்டு விட்டாள், தந்தையிடம் எடுத்துக் கூறி முறைப்படி சட்டப்படி பள்ளி முதல்வரை எதிர்கொண்டு இருக்கலாம், அறிவுத்திறன் இருக்கும் அளவிற்கு இக்கால பிள்ளைகளுக்கு மனோ தைரியமில்லை. தோழரே! அந்தச் சிறுமியின் புகைப்படங்களை இவ்வாறு அனுமதியின்றி பொது தளத்தில் போடுவது நாகரிகமாக படவில்லை, அவர் இறந்த பின்னரும் அவரது தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால் தான் தில்லி மாணவி பலாத்காரம் உட்பட பல உணர்வுப்பூர்வமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை. நன்றிகள்.
அன்பின் விவரணன் நீலவண்ணன்,
//அந்தச் சிறுமியின் புகைப்படங்களை இவ்வாறு அனுமதியின்றி பொது தளத்தில் போடுவது நாகரிகமாக படவில்லை, அவர் இறந்த பின்னரும் அவரது தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால் தான் தில்லி மாணவி பலாத்காரம் உட்பட பல உணர்வுப்பூர்வமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை. நன்றிகள்.//
சிறுமி தூயவள். அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டியே அவரது புகைப்படங்களை இட்டிருக்கின்றேன். இலங்கையில் நீதி கிடைப்பதென்பது இலகுவில் சாத்தியமில்லை. சம்பவம் மறைக்கப்பட்டு விடும். மறக்கப்பட்டு விடும். ஆனால் சிறுமி எம் கண்ணுக்குள்ளேயே இருப்பாள். அவளது பெற்றோரது அனுமதியோடே புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !
வாசிக்கும் போது கண்ணீர் மட்டும் .....மிஞ்சுகிறது. .
என்ன குற்றம் அறியும் பிள்ளை ?....
மிருகங்கள் எப்படி சிட்டுக் குருவிகளை விட்டு வைக்கும்.
எத்தனையோ குழந்தைகளை கொத்துக் கொத்தாக தின்ற மிருகங்களுக்கு ...ஒரு
சிறு பூவின் வாசம் எப்படி புரியும். ?.
அப்பா அப்பா என்று அவள் குழந்தை மனம் அவள் அப்பாவின் பாசத்தை வெளிக்காட்டும் விதம் நெஞ்சம் கனக்கிறது .
இறையருள் நிறைந்து அவள் ஆத்மா சாந்தி அடையட்டும் .
வாசிக்கும் போது கண்ணீர் மட்டும் .....மிஞ்சுகிறது. .
என்ன குற்றம் அறியும் பிள்ளை ?....
மிருகங்கள் எப்படி சிட்டுக் குருவிகளை விட்டு வைக்கும்.
எத்தனையோ குழந்தைகளை கொத்துக் கொத்தாக தின்ற மிருகங்களுக்கு ...ஒரு
சிறு பூவின் வாசம் எப்படி புரியும். ?.
அப்பா அப்பா என்று அவள் குழந்தை மனம் அவள் அப்பாவின் பாசத்தை வெளிக்காட்டும் விதம் நெஞ்சம் கனக்கிறது .
இறையருள் நிறைந்து அவள் ஆத்மா சாந்தி அடையட்டும் .
மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வது ஆசான் இறைவனுக்கு நிகரானவன் என்பதால். அப்படிப்பட்டவர் சிந்திக்காமல் கொட்டிய தீஞ்சொற்கள் ஒரு மொட்டை மலராமலேயே கருக்கிவிட்டன.அந்தச்சிறுமியின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.மேலும்,சமூகவலைத்தளங்களை எல்லாக் குற்றங்களுக்கும் காரணமாக்குவது அறியாமையின் வெளிப்பாடு. எவ்வளவோ பயனுள்ள தகவல்கள் பறிமாறப்படுகின்றன என்பது பயனாளர்களுக்குத் தெரியும்.
பாலசாலை அதிபரின் ஆழும்திறைமை சரியாக இலங்கையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகிந்த சிந்தனையில் அதிபர் மட்டுமல்ல பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப் படுகிறது.நிச்சயமாக அந்தப் பயிற்சியின் எதிரொலி மட்டுமல்ல மாணவர்களை அவர்களின் திறைமைக்கு ஏற்ப வழர்த்துவிடத் தெரியாத தலைமைத்துவப் பண்பு கொண்ட வழிகாட்டியாகவே இந்தப் பாடசாலை நிருவாகம் இருப்பதாக எனக்கு தெரிகிறது. எனவே இழந்ததுஒரு உயிராக இருந்தாலும் அப்பாவி மாணவிக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறுவதாக இருந்தால் உடனடியாக அந்தப் படசாலை சமூகம்,பாடசாலை பெற்றார் நலன்விரும்பிகள், அபிவிருத்திக்குழுக்கள் என்பன இது சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும்.அது மட்டுமன்றி நாட்டின் கட்டமைப்பை சிலருடைய உயிர்களை பலியெடுத்த இராணுவ கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பரந்த அளவிலான எதிர்ப்புகளை முன்னெடுக்க வரவேண்டும்.
ராணுவா பயிற்சி இதுதான் ஆனால் இக்கடிதம் மரண வாக்கு மூலமாக ஏற்க முடியாது இப்படியான கேவலத்திற்கு ஆளான பிள்ளை இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் வராமல் தற்கொலை செய்து கொண்டது ஏன இந்த கடிதம் கூட மற்ற பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு தன்னை மாய்துகொல்கின்றேன் என்று கூறியுள்ளது இது அப்பட்டமாக எடுக்கப்பட்ட தன்னிச்சை முடிவு இது தற்கொலை ஆகையால் அதிபர் எந்த விதத்திலும் கைது செய்ய முடியாது இந்த வயதில் இப்படி கடிதம் எழுதும் அளவிற்கு ஆற்றல் உண்டா என பரிசொதிக்கனும் அவ்வகையில் இக்கடிதம் கூட அந்த பிள்ளையால் எழுதப்படவில்லை என்பதாக கருதப்படும்
குழந்தையின் மனதை புண்படுத்தி அழித்து விட்டார்கள். இங்கு அதிபர் தான் கொலையாளி. தெரியப்படுத்திய ரிஷான் இற்கு நன்றி. மனதை வருடுகிறது.
/அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவுமி சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டுஇ தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும்/
அதிக பட்ச தண்டனையாக அதிபருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.பேஸ் புக் கத்தியைப்போன்றது அதனை சமையலறையிலும் பாவிக்கலாம் ஒருவரை சரிக்கட்டவும் பாவிக்கலாம் அவரவர் பாவிப்பதைப் பொறுத்தது.வெனுஷா இமந்தியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங் கள்.
குறித்த மாணவியின் மரணம் மிகவும் வேதனை அளிக்கின்ற ஒரு விடயமாக உள்ளது. இவ்விடயமானது குறித்த மாணவி தனது இன் உயிரை அர்பணித்து கல்விச் சமூகத்திற்கு ஒரு செய்மதியினை வழங்கிச் சென்றுள்ளார். இதனை அவர் தனது வாக்கு மூலத்தினூடாவே வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய தகவல் தொழில்நுட்பயுகம் கட்டிளைமைப்பருவத்தினரிடையே இரண்டறக் கலந்துள்ளது. தெனைவிட இன்னைய கல்விமுறையும் தகவல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றது. இது அயற்கையானதும் சாதாரணதுமான செயற்பாடு. அதாவது காலமாற்றத்தின் தேவை. இன்று கல்விப்புலமானது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் பிள்ளைநேய அணுகுமுறையினைக் கைக் கொள்ளுதல் மிகவும் முக்கியமானதாகும். இன்று இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டே பாடசாலைகள் தேறும் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுகள் அரம்பிக்கப்பட்டு அதற்கொன பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசரைகளில் இடம்பெறுகின்ற எந்தவொரு பிரச்சினையும் இவ் ஆலோசனை வழிகாட்டல் பிரிவிற்குப் பெறுப்பானவர்களினாலேயே கையாளப்பட வேண்டியது கட்டாயமானதாகும். இங்கு எந்தவொரு மாணவர் தொடர்பான பிரச்சினையின் இரகசியம் பேணப்பட்டு அதற்கான தீர்வு உரிய மாணவருக்கு வழங்கப்பட வேண்டியதாகும். அதாவது சில பிரச்சினைகள் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த முடியதவையாகவும் இருக்கும். இவ்வாறான நிலை பாடசாலைகளில் காணப்படும் போது சில ஆசிரியர்கள் தாங்கள் பெரிய துப்பறிவாளர்கள் போல் தாங்கள் அதிபரின் மதிப்பினைப் பெறவேண்டும் என்பதற்காக பாடசாலையில் காணப்படும் ஆலோசனை வழிகாட்டல் பிரிவினை கருத்தில் கொள்ளாது அதிபரின் சலுகையினைப் பெற்றுக் கொள்வதற்காக போட்டுக் கொடுக்கும் வழக்கத்தினைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனடிப்படையில் இங்கு குறித்த மாணவியின் இழப்பும் இவ்வாறானதொரு நிலையில் ஏற்பட்டதொன்றாகும். என்னைப் பொறுத்தவரை குறித்த மாணவியின் இழப்புக்கு மூலகர்த்தா குறித்த பிரச்சினையை அதிபரிடம் முதலில் கொண்டு சென்ற அந்த ஆசிரியர்தான். எனெனில் 2001/16 ஆம் இலக்க சுற்று நிருபமானது 300 மாணவர்களுக்கு கூடியபாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றி முழுநேர ஆலோசனை வழகாட்டல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றபோது இங்கு 5000 மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகக் காணப்படும் இங்கு குறித்த வழிகாட்டல் ஆலோசனை பிரிவு தனது செயற்பாட்டை இழந்து விட்டதா என்பதும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. அதாவது பதின்ம வயது பிள்ளைகளது விடயங்களில் பகிரங்க இடத்தில் வெளிப்படுத்துவது என்பது ஆதிபராயினும் சரி ஆசிரியர்களாயினும்சரி எற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும். ஆசிரியா; என்ற வகிபங்குடன் ஒருவர் கல்விக்கூடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும்போது அவர் உளவியல் அறிவு பொருந்தியவராக இருப்பது கட்டயமானதாகும். எனெனில் அவர்கள் பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கும் கட்டிளைமைப் பருவத்தினரை எவ்வாறு கையாள்வது என்பதும் மிகவும் முக்கியமானதாகும். இம் மாணவி தனது தனத உயிரை மாய்த்ததன் மூலம் முழுக் கல்விச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார். அதாவது மாணவப்பருவமானது கட்டிளைமைப் பருவத்தினை அமையும் போது நன்மை தீமையினை பகுத்தறிய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் அவர்களைத் தள்ளிவிடுகின்றது. இந்நிலையினைக் கருத்திற் கொண்டு இதற்கென தேர்ச்சி பெற்றவர்களினூடாக இரசியத்தைப்பாதுகாத் உண்மைத்தன்மையினை உறுதிப்படுத்துங்கள் அதன்பின்பும் உண்மையிருப்பின் ஆற்றுப்படுத்துங்கள். இமந்தியைப்போல் இன்னும்பல பிள்ளைகளின் அநியாய இழப்பினைத் தவிர்க்கலாம் அல்லவா. பெண்பிள்ளைகளிடம் அப்பாக்களிற்கு இருக்கும் பாசம் அளவிட முடியாதவை இவர்களின் பெறுப்பற்ற செயலால் இன்று ஓர் அப்பா அநாதையாகிவிட்டார். இனியும் அப்பாக்கள் தங்கள் செல்வங்களை இழக்க வேண்டாம். சிந்திப்போம் ஆற்றுப்படுத்துவோம். இமந்தியின் இழப்பே இறுதியாகட்டும் இதுவே இவரின் எணணமும்.
இங்கு கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. இதனைப் பார்க்கவும்.
http://rishanshareef.blogspot.com/2014/02/blog-post_19.html
//இந்த வயதில் இப்படி கடிதம் எழுதும் அளவிற்கு ஆற்றல் உண்டா என பரிசொதிக்கனும் அவ்வகையில் இக்கடிதம் கூட அந்த பிள்ளையால் எழுதப்படவில்லை என்பதாக கருதப்படும் //
தங்கம் பாரத், இது வரையில் இந்த எழுத்தைப் பரிசோதனை செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா?
இன்றைய குழந்தைகளில் அதீத சிந்தனையுள்ள பல குழந்தைகளில் இவர் ஒருவராக இருப்பார் என நான் நம்புகிறேன். அதனால் இது இப்பெண் எழுதிய கடிதமே!
மொட்டொன்றை மலரவிடத் தவறி விட்டது, நமது கல்வி அமைப்பு.
அந்த அப்பாவுக்கு வாழும் வரை வேதனையே!
dear.
first kill the teacher who spread this matter with out any enquary.
kill him and it will be the first solution to this, u can’t touch who is in political power with armed persons around him. you can easily touch the teacher who made wrong, he is not to be forgive, he must be die.
அந்த அதிபர் சாதரன ஒரு சின்ன விசயதை பெரிசாகி ஒரு சிருமியின் உயிரை பரிது விட்டார்.அவரை ஏன் தன்டிக்க வில்லை .அலகாக விசாரிகலம்.அதை விட்டு 5000 பெர் முன் அவமானம் படுதியது மிக தவரு.
Even if she meet somebody in the Facebook and fell in love with them, it is not the business of the teacher or father. She can choose what ever she want and embrace it. The problem with the head teacher is he married somebody and trapped into the viscous circle and I don't think he love his wife or his children. Simply he is a pervert who doesn't young people happy. they don't want the young people to create their own life. Which make them jealous and he is also a male chauvinist Pig.
Post a Comment