Tuesday, February 9, 2010

நன்றி மாதவராஜ், கலைமகள் ஷைலஜா, கலைமகன் பைரூஸ், யாழ்தேவி மற்றும் தினக்குரல்

* பிரபல எழுத்தாளரும் சக பதிவருமான திரு.மாதவராஜ், திரு.பவா செல்லத்துரையுடன் இணைந்து  பதிவுலகத்திலிருந்து தொகுத்து, கடந்த வருடத்தின் இறுதி வாரத்தில் (30.12.2009) வம்சி பதிப்பகம் மூலம் வெளியிட்ட 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு), மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய   இரண்டு தொகுப்புக்களிலும் எனது கவிதை (அவகாசம்), சிறுகதை (முற்றுப்புள்ளி) ஆகியவற்றை இணைத்துத் தொகுத்திருந்தார். தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் காத்திரமாக மேலும் தொடர்ந்து எழுதச் செய்யக் கூடியதாகவுமான இம் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

நண்பர் திரு.மாதவராஜ், திரு.பவா செல்லத்துரை, வம்சி பதிப்பகம் மற்றும் இத் தொகுப்புக்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* தமிழ்ப்பதிவுகளின் பிரபல திரட்டியான யாழ்தேவி புதிய வருடத்தின் ஜனவரி முதல் வார நட்சத்திரப் பதிவராக என்னை அறிவித்திருந்தது. இதனால் ஜனவரி, 2010 புதுவருடமே மகிழ்ச்சிக்குரியதாகவும் ஊக்குவிப்பதாகவும் என்னை விடாமல் இயங்க உற்சாகமளிப்பதாகவும் அமைந்துவிட்டது. அத்தோடு பல புதிய வலைப்பதிவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத்தந்தது.

அதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு இதழ் (17.01.2010) என்னைப் பற்றிய குறிப்புக்களோடு எனது கட்டுரையொன்றையும் பிரசுரித்திருந்தது. இலங்கை தமிழ்ப் பத்திரிகையுலக எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரது தனிப்பட்ட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அறிமுகங்களும் இதனால் கிடைத்தது. இக்கணத்தில் 'யாழ்தேவி' திரட்டிக்கும் அதன் உரிமையாள நண்பர்களுக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

* இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலைமகன் பைரூஸ் அவரது வலைத்தளத்தில் என்னைப் பற்றி எழுதியிருந்தார். எனது ஒவ்வொரு பதிவுகளின் போதும் தனிப்பட்ட மின்னஞ்சல்களிலும், கருத்துக்களிலும் எனது ஆக்கங்களைப் பற்றி எழுதும் இவரது விமர்சனங்களும், கருத்துக்களும் என்னை மேலும் எழுத ஊக்குவிப்பன. நண்பர் திரு.பைரூஸுக்கு எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

* இம் மாதம் (பெப்ரவரி 2010), இந்தியாவிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் 'கலைமகள்' இலக்கியக் குடும்ப மாத இதழில் 'இணையத்தில் எழுதுகிறார்கள்; இதயத்தில் நுழைகிறார்கள்' எனும் தலைப்பில் எழுதும் எழுத்தாளர் சகோதரி ஷைலஜா, சக பதிவர்கள் திரு.SP.VR.சுப்பையா, அம்பி (ரங்கராமன்), திருமதி துளசி கோபால் ஆகியோருடன் எனது கவிதையொன்றோடு என்னையும் அறிமுகப்படுத்தியிருந்தார். பல இந்திய எழுத்தாளர்களையும், நண்பர்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சக பதிவர்களுக்கு வாழ்த்துக்களோடு இக் கட்டுரைக்கு என்னைத் தேர்ந்தெடுத்தற்காக  இப் பதிவின் மூலமாக சகோதரி ஷைலஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு நான் மறக்க முடியாதவர்கள் இன்னுமிருக்கிறார்கள். இலங்கையில் எனக்குக் கிடைக்காத இந்திய வார, மாத இதழ்களை எனக்காக வாங்கிச் சேகரித்து வைத்திருக்கும் எழுத்தாளர் தோழி உமா சக்தி, எழுத்தாளர் நண்பர் பி.ஏ.ஷேக் தாவூத் மற்றும் வெளிவரும் எனது ஆக்கங்களின் பக்கங்களை உடனுக்குடன் (ஸ்கேன் Scan) செய்து அனுப்பிவைக்கும் அன்புச் சகோதரி ராமலக்ஷ்மி. இக் கணத்தில் இவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

உலகின் ஒரு மூலையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இவை அனைத்துமே எனது எழுத்துக்களுக்கான வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, நல்ல விமர்சனக் கருத்துக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. எனது எழுத்துக்களை மேம்படுத்த தொடர்ந்தும் உங்கள் அனைவரதும் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் நிச்சயம் உதவும். அன்பான சக பதிவர்களும், வாசகர்களும் இல்லாவிடில் இன்று நானில்லை.

நன்றி அன்பு நண்பர்களே !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Tuesday, February 2, 2010

கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்!

சம்பவம் ஒன்று

காலம் - நவம்பர், 2009.

இடம் - இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய.

    கடற்கரையோரமாக அமைந்திருக்கும் புகையிரத நிலையம். அதனருகே அமர்ந்திருந்த பாலவர்ணன் சிவகுமார் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், இரயிலுக்கு சிறு கற்களால் எறிகிறார். காவல்துறை வாகனத்திலிருந்து இதனைக் கண்ட நான்கு காவல்துறையினர்கள் உடனே வெளியே குதிக்கின்றனர். அந்த இளைஞனை விரட்டியடித்து, கடலுக்குள் தள்ளி, தொடர்ந்தும் விரட்டிச் சென்று, அந்த இளைஞன் கை கூப்பி மன்றாடிக் கேட்டும் அடித்து, நீருக்குள் மூழ்கச் செய்கின்றனர். மூழ்கியவர், சடலமாக மிதக்கிறார்.

சம்பவம் இரண்டு

காலம் - ஜனவரி, 2010

இடம் - இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், ஆம்பூர்

    மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்துத் தப்பியோடுகிறது. வீதியில் விழுந்து, இரத்தச் சகதியில் துடிதுடிக்கும் அவரை வேடிக்கை பார்க்கின்றனர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் மற்றும் சக காவல்துறையும் சில பொதுமக்களும். தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கையேந்துபவர் உயிர்ப் போராட்டத்தில் துடிக்கப் பார்த்திருக்கின்றனர் எல்லோரும். இருபது நிமிடங்கள் கழித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக வெளியிலிறக்கப்படுகிறார்.


    இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு தேசங்களில் நிகழ்ந்தவை எனினும், இரண்டுக்கும் பொதுவானதாக பல விடயங்கள் இருக்கின்றன. இரண்டு மரணங்களையும் நேரில் கண்டவர்கள், அவர்களைக் காப்பாற்றத் துணியவே இல்லை. ஒரு திரைக்காட்சியை வேடிக்கை பார்ப்பதைப் போல, வெறுமனே பார்த்திருக்கின்றனரே ஒழிய எவரும் அவர்களைக் காப்பாற்றவென முன்வரவில்லை. முதல் சம்பவத்தில் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரைப் பகிரங்கமாகக் கொலை செய்கிறது. அடுத்ததில் மரணப் போராட்டத்தில் ஒருவர் தவிக்க சுகாதாரத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் ஆம்புலன்ஸ்க்கு அறிவித்ததோடு தன் கடமை சரி என்பதுபோல பார்த்திருக்கின்றனர். காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், யாருமறியாத சாதாரண பொதுமகனின் கதி?

    தேர்தல் சமயம், ஒவ்வொரு பொதுமகனிடமும் வாக்குக் கேட்கச் செல்கையில் மட்டும் நான்காக மடியும் அமைச்சர்கள், வென்ற பிறகு அதே பொதுமகனின் துயரமான வேளையில் குனியக் கூட மாட்டேனென்பது, காயப்பட்டவருக்கு தண்ணீரை எட்ட நின்று ஊற்றியதைக் காணும்போது தெளிவாகிறது. ஏதேனும் செய்யப் போய், காவல்துறை விசாரணைகளில் சிக்கிக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம் பொதுமக்களை, உதவத் தடுப்பது இயற்கைதான். ஆனால்,அமைச்சர்களுக்குமா அந்த அச்சம் தோன்றும்? அதுவும் சாட்சிகளாக அவ்வளவு பேர் பார்த்திருக்க?

    இக் கால கட்டத்தில், கைத்தொலைபேசி கேமராக்கள் வைத்திருப்பவர்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள்.  பெருநகரங்களில் தெருவில் செல்லும் நூறு பேரில் எண்பது அல்லது அதற்கும் அதிகமான நபர்களிடம் இக் கேமராக்கள் இருக்கின்றன. ஏதேனுமொரு அசம்பாவிதமான நிகழ்வுகளின் போது உடனடியாகக் காட்சிப்படுத்தவும், செய்தியாக்கவும் அவற்றால் முடிகிறது.

    இதே ஆண்டு, இதே ஜனவரியில், இந்தியா, அஸாம் மாநிலத்தில் ஒரு கடையில் ஆடைகள் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இராணுவத்தினரை அவள், செங்கற்களால் விரட்டி விரட்டி அடிக்கிறாள். அடி வாங்கிய அவர்கள் தங்கள் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடுகிறார்கள். வழமை போலவே பொதுமக்கள் வேடிக்கை பார்க்க,இதை ஒரு கைத் தொலைபேசி கேமரா பதிவு செய்கிறது. தொலைக்காட்சி செய்திச் சேவைக்குக் கொடுக்கப்படுகிறது. உலகம் முழுக்க அச் செயல் காட்சிப்படுத்தப்படுகிறது. தவறு செய்த அந்த இராணுவத்தினருக்கான தண்டனையும், அப் பெண்ணுக்கான பாதுகாப்பும் இதனால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. இதைப் போலத்தான் சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலின் போதும், அதன் காட்சிப் பதிவுகள் பெரும் சாட்சிகளாக அமைந்தன.

    கேமராக்களால் கோரமான இக் காட்சிகள் பதிவு பண்ணப்பட்டிருப்பதால், பார்ப்பவர்கள் அனைவருக்கும் அதன் வலியை உணரமுடிகிறது. பதிவு பண்ணப்படாதவை இன்னும் எத்தனையிருக்கும்? மனிதநேயம் என்பது உலகிலின்று அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. சாலை விபத்துக்களில், இன்னும் பல மரணப்போராட்டங்களில் துடித்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றத் துணியாமல் வேடிக்கை பார்க்கும் எத்தனையோ செய்திகளை, கதைகளைக் கேட்டு பரிதாபத்தோடு அத் தருணத்தைக் கடந்துபோகிறவர்களாக நாம் இருக்கிறோம்.

    காவல்துறை விசாரணைகள், வழக்குகள், அலைச்சல்கள் பற்றி அக் கணத்தில் எதுவும் சுயநலமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளின் போது முன்னின்று உதவக் கூடியவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்களை விடவும், பாமரர்களை உதவுவதில் முன்னிற்பவர்களாகவும், இளகிய மனமுடையவர்களாகவும் காண முடிகிறது.
   
    பொதுவாக எனது சமூகத்தில் நாய்களை யாரும் கையால் தொட மாட்டார்கள். எனது தெருவிலிருந்த ஒரு மூதாட்டியை எனக்குத் தெரியும். ஒரு விடிகாலையில் தெருவோரமாக விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியை அவர் தூக்கிவந்து மருந்திட்டார். போய்ப் பார்த்துக் கேட்டேன்.

'நாயைக் கையால புடிச்சிருக்கீங்களே ஆச்சி?'

'கையைக் கழுவிக்கலாம். வாழ வேண்டிய உசுரு..அதோட உசுரு போனாத் திரும்பக் கொடுக்க முடியுமா புள்ள?'

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# திண்ணை
# புகலி