Wednesday, February 19, 2014

சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது

ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி' எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன்.

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு  இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட 'வேசி - விபச்சாரி' எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
19.02.2014

Wednesday, February 12, 2014

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

 
இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.

தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.

கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் - மரண வாக்குமூலம்

"2014 -02-05

"அப்பாவுக்கு..

இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் குற்றமெதுவும் செய்யாமல் எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க வைக்க என்னால் முடியாது. தவறு என்று நான் செய்ததென்றால் 7 ஆம் ஆண்டில் ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த அந்தத் தவறை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB யில் இட்டவரையும், அந்த ஃபோட்டோவை எனக்கு டேக் செய்தவரையும் விட்டுவிட்டு ஏன் என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்? இன்று நான் என்னுடைய ஒன்றுமறியாத அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப் பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய அப்பா அவ்வாறான ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக் கூடாது. எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில் வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில் யாருக்குமே புரிவதில்லை. அதற்கிடையில் எங்கேயோ போகும் ஒன்றுக்காக எனது அப்பாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர். அவர் எதுவுமே தெரியாமல் என்னை நோக்கி மாத்திரம் விரலை நீட்டுவது ஏன் என எனக்குத் தெரியவில்லை. 5000 பிள்ளைகள் முன்பு, கூட்டத்தில் வைத்து மேடைக்கு அழைத்துத் திட்டினார். ஒரு பையனோடு படம் பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார். நான் போகவில்லை என்பதை எனது தங்கையும், அக்காவும் அறிவார்கள். இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த போதும் கூட நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். இனிமேலும் என்னால் இயலாது. 

எனது வகுப்பாசிரியர் பண்டார, வகுப்பைப் பொறுப்பேற்கும் அன்று எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன். அப்படியெல்லாம் செய்த என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இந்தப் பாடசாலைக்காக பாடுபடுவதுதான் எனது மிகப் பெரும் தவறு. பாடசாலையில் ஏதேனும் போட்டிகள், விழாக்களின் போது நான் நடனமாடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர ஆசிரியை, ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும். எனது அப்பாவுக்கும், பண்டார ஆசிரியருக்கும் இனியும் கவலைகள் தர என்னால் முடியாது. நான் இன்று செய்யப் போகும் காரியத்தால் ஏனைய பிள்ளைகளுக்கு இம் மாதிரியான கீழ்த்தரமான வேலைகள் நடக்காமலிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.

சில ஆசிரியர்கள் பிரச்சினையொன்று வரும்போது எனது குடும்பத்தை இழுக்கிறார்கள். நான் இங்கு சொல்வது யார் குறித்து என்பது என் அப்பாவுக்குத் தெரியும். நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் 'வேசி' எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப் பிள்ளைகள் சிறியதொரு தவறைச் செய்தால் அப் பிள்ளைகளை 'வேசி' எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள். பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள் வரும்போது யார் சரி, யார் தவறு என்பதைத் தேடிப் பாருங்கள். எல்லா அவப் பெயர்களையும் எனக்கும், என் தங்கைக்குமே கூறுகிறார்கள். எனது பாடசாலையில் 50%மானவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் அதிபருக்குத் தெரியாது. நாங்கள் சொல்வதும் இல்லை. அதனால்தான் எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள். 

நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று 'எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே செய்தபோதும், போட்டிகளிலெல்லாம் வென்றபோதும் எமக்கு நற்பெயரெதுவும் சூடவில்லை. ஆனால் தவறொன்று செய்தவிடத்து முழுப் பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம் சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும். பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம் ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால் பாடசாலைக்குப் போக முடியாது. கமகே ஆசிரியரும் கூட நான் நடத்தை கெட்ட பிள்ளை எனக் கூறினார். நான் அப்பொழுதெல்லாம் கூட எனது O/L பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல நடத்தையை அவர்களுக்குக் காட்டத் தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும் இப்பொழுது அதிகம் தாமதமாகி விட்டது. இனி செய்ய ஏதுமில்லை.

பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள் இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர் மாத்திரமே இந்தப் பாடசாலையில் எனது திறமைகளைப் பற்றிக் கூறிப் பாராட்டியவர்கள். பிரபா ஆசிரியையிடம் சென்று எனது பிரச்சினைகளைக் கூறி ஆறுதல் தேடியபோது, நான் நன்றாக பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் என் கனவுகள் எல்லாம் அழிந்து போயின. என்னால் இப்பொழுது O/L பரீட்சை தவிர்த்து அடுத்த ஜென்மத்தில் எந்த இடம் கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.


அப்பா, நீங்கள் என்னுடைய பேரில் இருக்கும் காணியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நானில்லாமல் போனால் உங்களைக் கவனித்துக் கொள்ள ஆளிருந்தால் அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம் இருப்பதால்தான் உங்களுடன் இருப்பவர்களெல்லாம் கூட இருக்கிறார்கள். பணம் இல்லாமல் போன நாளில் உங்களுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது. இறுதியான, இறுதியான இந்தக் கணத்திலும் கூட எனக்குத் தென்படுவதெல்லாம் எனது அப்பாவின் கண்களிரண்டும் மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப் போவது மிகுந்த கவலையைத் தருகிறது. முடியுமென்றால் தங்கையையும் அந்தப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த அதிபர் இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம் காட்டுவார். 

அம்மா, நான் உங்களையும் மிகவும் நேசிக்கிறேன். அம்மா என்னுடன் இன்று இன்னும் கதைக்காததற்குப் பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அக்காவைத்தான் இந்த இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்களும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார். 

நானில்லாமல் போனால் உங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள் அப்பா? எழுத எழுத எனக்கு எனது இதயத்தில் கவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த ஜென்மத்திலும் கூட ஆறுதல் கிடைக்காமல் போகும்.
என்னைப் போல தவறிழைக்காத பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள். அவர்களையும் பாடசாலையிலிருந்து விலக்கி விடப் பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான் இத் தீர்மானத்தை எடுத்தேன். 

I love my family

நான் எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.

இங்கு என்னைப் பார்த்தவுடன், பண்டார ஆசிரியருக்கு முதலில் தெரிவியுங்கள்."

தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் 'அதிபர்' என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.

# உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.
# எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.
# 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.
# பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.

சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.
"எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது"


இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்? அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவும், சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டு, தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமே பொதுமக்களின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இலங்கையில் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு இம் மரணம் ஒரு ஆதாயமாக அமைந்துவிட்டது. எனவே அரச தரப்பு அமைச்சர்கள் சிலரும், இலங்கைக் காவல்துறையும் அதிபரின் சார்பாக இருப்பதனால் அதிபர் இன்றுவரை விசாரணைகளுக்குக் கூட ஆளாகாமல் தனது பதவியில் தொடர்ந்தும் இயங்கி வருகிறார். அரசை எதிர்க்கப் பயந்து சிறுவர் அமைப்புக்களும், பெண்ணிய ஆதரவாளர்களும் கூட மௌனமாக இருப்பதனால் பொதுமக்கள் கொந்தளித்து அதிபருக்கு ஏதும் தீங்கிழைத்து விடக் கூடாதென்று, காவல்துறையினர் அதிபருக்கு தினமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இன்னும் சொற்ப நாட்களில் பொருட்களின் விலையேற்றத் தகவல்களினாலும், மாகாண சபைத் தேர்தல் செய்திகளாலும் மறக்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஆனால் பேரிழப்பென்பது, பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மாத்திரமே.

- எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை
Photos - Gossiplankanews

Monday, February 3, 2014

வெள்ளை வேன் கொண்டு சென்ற, ப்ரியாவின் எதிர்பார்ப்பு

            அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். 'தாய்' எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் அந் நேரம் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டிருந்தனர். அதிலிருந்துதான் துயரம் ஆரம்பித்தது.

            தலைக்கு மேலால் கஃபீர் பறக்கையில், ஷெல் குண்டுகள் பொழிகையில், கர்ப்பிணியான ப்ரியாவைக் காப்பாற்ற உதயகுமார் எடுக்காத முயற்சிகள் இல்லை. ப்ரியாவும் எல்லா இடர்களையும் சிரமத்தோடு பொறுத்துக் கொண்டார். தனது கணவருக்காக, வயிற்றிலிருக்கும் குழந்தை இவ்வுலகுக்கு வரவே வேண்டும். குழந்தை, இவ்வுலகைக் காண வேண்டுமாயின், அதன் தாய் உயிர் வாழ வேண்டும். எப்படியாவது கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக அவர் வளர்ந்துவரும் வயிற்றோடு, வீங்கிய கால்களையும் மிகச் சிரமத்தோடு பராமரித்தார். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு முறை அவர் தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணினார். எனினும், குழந்தையையும், தன் மீது மிகுந்த பாசம் செலுத்தும் கணவரையும் எண்ணி எல்லாத் துயரங்களையும் அவர் மிகுந்த கஷ்டத்தோடு பொறுத்துக் கொண்டார். இளம் விஞ்ஞானப் பாட ஆசிரியர், நிழலைப் போல எப்பொழுதும் மனைவியின் அருகிலேயே இருந்தார். எல்லா அசௌகரியங்களையும் பொறுமையாகச் சகித்தபடி ப்ரியாவுக்கு ஊன்றுகோலாக அவரது கணவரே இருந்தார். தனது கதையை இனி ப்ரியாவே சொல்கிறார்.

            "எனது கணவரின் பெயர் பூபாலசிங்கம் உதயகுமார். நானும், அவர் இன்னும் முகம் பார்த்திராத இக் குழந்தையும்தான் அவரது வாழ்க்கையாக இருந்தோம். அடுத்ததாக அவரது உலகமாக இருந்தது அவரது பாடசாலை. அவர் ஒரு விஞ்ஞானப் பாட ஆசிரியர். மாங்குளம், ஓலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் கற்பித்தார். 1998 லிருந்து 2003 வரை பகுதிநேர ஆசிரியராக வேலை செய்தார். 2003 மே மாதத்தில் அதே பாடசாலையில் நிரந்தர ஆசிரியராக வேலை நியமனம் கிடைத்தது. அவர் பத்து வருடங்கள் அரச பாடசாலைப் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் கற்பித்தார். பிறக்கவிருந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி எப்படியாவது விஞ்ஞானப் பாட ஆசிரியையாக்க வேண்டுமென்றே அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு வீட்டையும், பாடசாலையையும் விட்டால் வேறொரு வாழ்க்கை இருக்கவில்லை. பிள்ளைகளிடம் நிறைய அன்பு வைத்திருந்தார். எனினும் அவருக்கு அவரது குழந்தையைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை."

            இதயத்தில் முட்டிமோதிக் கொண்டிருக்கும் துயரமானது இரு விழிகளிலிருந்தும் துளிகளாக வழிந்ததால், 29 வயதான அத் தாயின் வார்த்தைகள் தடுமாறின. அவர் குழந்தையை அணைத்தபடி விம்முகையில் குழந்தை மதுஷிகா தனது அம்மம்மாவை அழைத்து 'அடிங்க...அடிங்க' என்று சொன்னது. தனது அம்மாவை அழ வைத்து, அப்பாவைக் கொண்டு சென்றவர்களுக்கு அடிக்கும்படி குழந்தை சொன்னது. சிறிது நேரத்தில் கவலையை உள்ளடக்கிக் கொண்ட ப்ரியா தனது கதையின் மீதியைச் சொல்லத் தொடங்கினார்.  

            "யுத்தத்தின் காரணமாக எங்களால் மாங்குளத்தில் இருக்க முடியாமல் போனது. நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். கிளிநொச்சியிலும் இருக்க முடியாமல் போனபோது விஸ்வமடுவுக்குப் போனோம். விஸ்வமடுவில் மூன்று நாட்களே இருக்க முடிந்தது. அதன்பிறகு ஸ்கந்தபுரத்தில் இரண்டு மாதங்கள் இருந்தோம். நாம் இருந்த இடங்களின் மீது ஆட்டிலெறிகளும் ஷெல்லும் தொடர்ந்தும் விழுந்தமையால் நாங்கள் தேவபுரத்துக்குச் சென்றோம். அங்கு எட்டு நாட்களே இருக்க முடிந்தது. பிறகு இறப்பாலைக்குச் சென்றோம். அங்கும் எட்டு நாட்கள். மரணத்திலிருந்து தப்ப வேண்டியிருந்ததனால் நாங்கள் விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரில் பைத்தியக்காரர்கள் போல ஒவ்வொரு இடமாக ஓடினோம். குழந்தையொன்றையும் வயிற்றில் சுமந்தபடி ஒவ்வோரிடமாக ஓடுவது எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. உதய் நிழல் போல என்னுடனேயே இருந்தார். குழந்தையும், அவரும் இல்லையென்றால், நான் செத்திருந்தால் கூட ஓர் அடியாவது அங்கிருந்து நகர்ந்திருக்க மாட்டேன். கணவருக்காகவும், குழந்தைக்காகவும் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதனால்தான் நான் அங்கிருந்தும் நகர்ந்தேன். இறப்பாலையிலிருந்து பொக்கனைக்குச் சென்றோம். பொக்கனையில் ஒன்றரை நாட்கள் இருக்க முடிந்தது. அதன் பிறகு எங்களை இராணுவம் பிடித்துக் கொண்டது. அங்கிருந்து ராமநாதபுரம் IDP முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கும் எனது கணவர் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தார். நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்.

            'பயப்பட வேண்டாம். இனி எங்களுக்குப் பிரச்சினை இருக்காது' என்று கணவர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். முகாமில் வைத்து எனக்கு பிரசவ வலி எடுத்ததால், என்னை செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். கணவர் இராணுவ முகாமுக்குச் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு வருகையில் என்னை வவுனியாவுக்கு மாற்றியிருந்தார்கள். வவுனியாவுக்கு வரும்போது மாலையாகி விட்டதனால் கணவரால் அன்று என்னைப் பார்க்க முடியவில்லை. பிறகு அவர் கரப்பன்காட்டிலுள்ள அவரது உறவினர் ஒருவரது வீட்டில் அன்றிரவு தங்கிவிட்டு காலையிலேயே என்னைப் பார்க்க வவுனியா வைத்தியசாலைக்கு வந்தார். 'எனது கைகளாலேயே சமைத்து எடுத்துக் கொண்டு, பகலைக்கு உன்னைப் பார்க்க வருவேன்' என்று என்னிடம் சொல்லிவிட்டு அவர் உறவினர் வீட்டுக்குச் சென்றார். அதுதான் நான் எனது கணவரைக் கண்ட இறுதித் தினம். அது 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி. பகல், அவர் வரும்வரை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எனினும் அவர் வரவில்லை. பகல் என்னைப் பார்க்க வந்த அம்மாவிடம் நான், கணவர் எங்கே எனக் கேட்டேன். எனினும் அம்மாவுக்கு அப்பொழுது அவரைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. பிறகு தேடிப் பார்த்தபோது, கரப்பன்காட்டு உறவினர் வீட்டிலிருந்து அவர் என்னைப் பார்க்க வர வெளியே வரும்போது இரண்டு பேர் வந்து அவரைப் பிடித்துக் கொண்டு சென்றதாகக் கேள்விப்பட்டோம். 'விசாரித்து விட்டு அனுப்புகிறோம்' என்று சொல்லியே அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கொஞ்ச தூரம் நடக்க வைத்துக் கூட்டிச் சென்று, பிறகு வெள்ளை வேனொன்றுக்குள் தள்ளிக் கொண்டு சென்றதை சனங்கள் கண்டிருக்கிறார்கள். இப்பொழுது மகளுக்கு இரண்டு வயது. அவள் இன்னும் தனது தந்தையைக் கண்டதில்லை. யுத்தம் முடிந்திருந்ததனால் இனியாவது எங்களால் நிம்மதியாக இருக்க முடியுமென நாங்கள் எண்ணியிருந்தோம். எனது கணவர் எந்தக் குற்றமும் செய்தவரல்ல. அவர் முகாமில் கூட பிள்ளைகளுக்கு கற்பித்தபடியே இருந்தார். என்னைப் பார்த்து விட்டு முகாமுக்குத்தான் கணவர் செல்வார். ஏதாவது விசாரிக்க வேண்டியிருந்திருந்தால் கூட ஏன் அங்கு வைத்து விசாரிக்க முடியாமல் போனது? ஏன் எங்களது வாழ்க்கையை இப்படி பலி வாங்குகிறார்கள்? என்னுடைய வயதான பெற்றோருக்கு, என்னையும் குழந்தையையும் பராமரிக்க எப்படி முடியும்?"

            ப்ரியா அழுது புலம்பியபடி எம்மிடம் கேட்கும் எந்தக் கேள்விக்கும் இக் கணத்தில் எம்மிடம் எந்தப் பதிலுமில்லை. நாம் அறியாத போதும், இந்த வெள்ளை வேன்காரர்கள் யாரென்பது இராணுவத்தினருக்கோ காவல்துறையினருக்கோ ஒரு இரகசியமாக இருக்காது. அந்த இரகசியத்தை அறிந்த காவல்துறை மற்றும் இராணுவம் குறித்து பொறுப்புக் கூற வேண்டியது அரசாங்கமே. யுத்தத்தின் பிறகு இவ்வாறு காணாமல் போயுள்ள உதயகுமார் உட்பட அனைத்து மனிதர்களையும் கண்டுபிடிப்பதுவும், குறைந்த பட்சம் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதற்கான பதிலையாவது கூற வேண்டியதுவும் அரசாங்கமே. அடுத்ததாக, இங்கு காணாமல் போயிருக்கும் பூபாலசிங்கம் உதயகுமார் ஒரு சாதாரண மனிதனல்ல. அரச பாடசாலையொன்றின் ஆசிரியர். அதனால் இந்த ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்க முன்னிற்க வேண்டியது கல்விப் பொறுப்பதிகாரிகளின் கடமை.

            குறைந்தபட்சம் உதயகுமாரின் உதவியற்றுப் போன குடும்பத்துக்கு ஒரு ஆதாரம் வேண்டும். உதயகுமார் உயிரோடு இல்லாதபட்சத்தில் அதற்காக ஓர் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் அல்லவா? அது அவ்வாறில்லையெனில், இன்று வெதுவெதுப்பாகப் பெருக்கெடுத்தோடும் இந்தக் கண்ணீர், நாளை எல்லாவற்றையும் பொசுக்கிச் சாம்பலாக்கும் எரிமலை கங்கையாக மாறக் கூடும்.

- ப்ரியந்த லியனகே
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி 
# இனியொரு