Sunday, April 12, 2009

பாழ்மனது - ஒரு சுயகுறிப்பு


வாழ்க்கை, மிகுந்த ஒரு அலுப்பைத் தந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்தபடி இருக்கிறது. ஒரே பாதையில், சாளரங்களூடாக எந்த விசித்திரமும் அற்று ஒரே காற்று முகத்திலறைய மிக வேகமான பயணம். எல்லா நிறுத்தங்களிலும் ஏதாவதொரு சுவாரஸ்யத்தைத் தேடுகிறது மனது. சுவாரஸ்யங்களற்ற வெளி, அலுப்பை மேலும் அகலமாக்கியபடி பரந்து கிடக்கிறது.

                           உடுத்திருக்கும் ஆடையில் ஏதாவதொரு குறை சொல்ல, சிறு கீறல் குருதிக் கசிவுக்குக் கூட உடல் பதறி ஒத்தடம் கொடுக்க, சாப்பிட்டாயா? கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன? என உண்மையான ஆதரவுடன் கேட்கவென ஓர் அன்பான நெருங்கிய துணையைத் தேடுகிறது யாருமற்ற இவ்வெளியில் பாழ்பட்டுக்கிடக்கும் இம்மனது.

                            காட்சிகளோடும் வர்ணத் திரையை எவ்வளவு நேரம்தான் அலுப்பில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க இயலும் ? அரிதாரம் பூசிய மனிதர்களை யாராரோ ஆட்டுவித்தபடி இருக்க முகங்களில் உணர்ச்சிகளை வலிந்து ஒட்டுவித்தபடி அசைந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஒலி அலைவரிசைகள் மட்டும் என்னவாம்? இதயத்திற்கு நெருக்கமான தாய்மொழிப்பாடல்களைக் கேட்கவிரும்பி காதுகளை அதன் திசையில் திருப்பினால் ஆங்கிலக்கலப்பின்றிய வரிகளையும், தெளிவான உச்சரிப்பையும் வேண்டிச் சோர்கிறது மனது.

தனிமையின் கோரக்கரங்கள் மிகக் கொடியவை. கூர்நகங்களை அவை தம் விரல்களில் பொறுத்திவைத்திருக்கின்றன. அடர்ந்த இருளில் நித்திரையின்றித் தவிக்கும் பொழுதுகளில் அவை இரத்தம் கசியக் கசியக் கீறுகின்றன. தூக்கமின்மை ஒரு பிசாசின் உருவம் பொதித்து வந்து தம் விரல்களை, கூர்நகங்களைக் காட்டி அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதன் அகலத்திறந்த வாய்க்குள் பழைய கசடு நினைவுகளின் துணுக்குகள் இன்னும் எஞ்சியிருக்கிறது.

                              தனக்கு மட்டுமேயான உணவைத் தானே அரைகுறையாகச் சமைத்து, பகிர்ந்து கொள்ள யாருமற்ற இடத்தில் விழுங்கிச் செரிப்பது துக்ககரமான நிகழ்வன்றி வேறென்ன ? அந்தி நேர வானின் சிவப்பை, கடலின் மீது குதித்துப்பாயுமொரு மீனின் துள்ளலை, ஆதரவாய் வளர்த்த செடியின் முதல் மஞ்சள் மொட்டைக் கைநீட்டிக் காட்ட அருகினில் யாருமற்ற பொழுதின் வெறுமையை என்னவென்று சொல்ல?

                                சிகை திருத்துபவன் ஒன்றிரண்டு இளநரையைக் கண்டு ஆதூரமாக விசாரித்தால் கூட அதில் சுயநலம் இருக்குமோ என ஆராய்ந்து பார்க்கிறது மனது. செருப்புத் தைப்பவன் கரங்கள் ஊசியை சவர்க்காரத்தில் தோய்த்து இலாவகமாக இறப்பர், தோலுக்குள் செலுத்தி இழுப்பதைப் போல வாழ்க்கையும் தனிமையும் மனதின் முனைகளை வலிக்க வலிக்க இழுத்தபடியிருக்கிறது.

                                 வலுத்த காற்றடிக்கும் போது அந்தரத்தில் ஆடும் சிறு பஞ்சுத் துணுக்குக்கும், ஒரு பாரிய பட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது ? இரண்டுமே காற்றின் வழி மிதந்தபடி இருக்கின்றன. தூரத்தே நோக்கும்போது இரண்டும் சிறுத்தேதான் தெரிகின்றன. என்ன ஒரு வித்தியாசம், பஞ்சு சுயமாய் மேலெழுந்து, தன்பாட்டில் பறக்கிறது. பட்டத்துக்கு மட்டும் அதன் திசையைத் தீர்மானிக்கவென ஒரு கரமும், எல்லையை விட்டு நீங்காதிருக்க நூலொன்றும் தேவையாக இருக்கிறது. இதேதானே ஒரு மாநகரப் பெரும்பணி வெள்ளத்தில் மூழ்கிய ஒரு தனித்த மானிடனுக்கும் ஒரு சிறைக்கைதிக்கும் உள்ள வித்தியாசம் ? பூசைகளுக்காகவே வளர்க்கப்படும் கோயில் பூக்களுக்கும், தானாகப் பூத்துதிரும் காட்டுப்பூக்களுக்கும் உள்ள வேறுபாடு?

                                  கடலலைகளுக்கும் , அதன் சிறு நுரைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கப்போகிறது ? காற்றின் கரங்களோடு அள்ளிச் சுமந்துவந்ததை முற்றிலும் சம்பந்தமற்ற மணல்பரப்பில் விட்டுச் சென்று, வெடித்துச்சிதற வைப்பதை சமுத்திரப்பெருவெளி அறிந்தேதான் செய்கிறதா ? அவ்வாறெனின் அந்நியநாடுகளில் துயருரும் அத்தனை எளிய நெஞ்சங்களும் தம்மைக் காற்றின் கரங்களோடு சுமந்துவந்த விமானத்தைத் தானே சாடவேண்டும் ?

அப்படி எதையும், எவரிடமும் சாடக்கூட முடியாத வெறுமையும், தனிமையும், மன உளைச்சல்களும் பலரைத் தன்னையே கொன்றுவிட ஒரு நினைப்பை உந்திவிடுகின்றன. வாழ்க்கையின் அத்தனை அழகியலையும், சுவாரஸ்யங்களையும், பழஞ்சேலையால் போர்த்தி அரவணைத்துக் கொண்ட தாய்மை மிகுந்த அன்பினையும் கனவுகளையும் இழந்துவிட்டதான எண்ணம் மிகைத்தபொழுதில் தான் தற்கொலைகள் சாத்தியப்படுகின்றனவாக இருக்கும்.

                                   காலம் காலமாக வரண்ட நிலங்கள் எப்பொழுதும் கொடியவை. யுகங்களாகத் தாகித்ததை எப்பொழுதேனும் தீர்க்கவெனப் பெய்யும் மழைத்துளிகளை கிஞ்சித்தும் வெட்கமேயற்று முழுதாக உறிஞ்சிக் குடித்துவிடுகின்றன. பின்னரான தாகத்துக்குத் தண்ணீர் தேடித் திரும்பவும் காலம்காலமாகக் காத்துக் கிடக்கும் பூமியை ஒத்தது இந்தப் பாழ்மனது. அன்பினை எவரேனும் வார்த்துவிட்டு நகரும்போது ஆசையாசையாய் முழுக்கக் குடித்துவிட்டுத் திரும்பவும் அன்பிற்காகக் காத்துக்கிடக்கிறது.

                                   வனமொன்றுக்குள் தன் பாட்டில் அழகாக வளர்ந்திருந்த விருட்சமொன்றைத் தரித்து வீழ்த்தி அதன் உயிரகற்றி இலைகளகற்றிச் சருகுகளகற்றிச் சாயமிட்டுப் பொலிவாக்கிக் கூடத்தில் வைத்திருந்து பின் குப்பைமேட்டுக்கு வீசியெறிவது போல அல்லது பறத்தல் இயலுமான சிறு பட்சியின் சூழல் பிரித்து, இறக்கைகள் தரித்து, கூண்டுக்குள் வைத்துக் கொஞ்சச் சொல்வது போலத்தானே இந்த புலம்பெயர் அந்நியநாட்டு வாழ்க்கை ?

                                    இருப்பிடத்தின், பணியிடத்தின் நாற்திசைகளிலும் மனது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அலைந்தபடியே இருக்கும். அன்பாய்த் தலை கலைக்க, தோள்தடவ, புன்னகைத்து நேசம் சொல்ல, நெற்றியின் உச்சியில் முத்தமிட்டு நகர என எவரொருவராவது வருவதின் நிகழ்தகவுகள் பூச்சியமாக இருப்பினும் எல்லாவற்றையும் எதிர்பார்த்த மனது அலைந்தபடியே இருக்கும்.

                                      இப்பொழுதில் புத்தகங்களும், சில வலைத்தள எழுத்துக்களும் நேரத்தை விழுங்குவதில் பெரும்பங்கு வகித்திடினும் ஏதேனும் ஒரு அனுபவத்தை, ஒரு சிறு மகிழ்வை மனதில் மீளெழுதிச் செல்கின்றன. இறுதிக்காலம் வரையில் எழுத்தின் வரிகளில் பாதங்களை நட்டுவித்தபடி பயணத்தைத் தொடர விரும்பும் என் சுமையைத் தாங்கிட எத்தனை காலத்துக்கு எழுத்துக்கும் இயலுமோ தெரியவில்லை. வாழ்வின் பாரத்தைத் தவிர்க்கப் பணம் கேட்டுத்தகவல் வரும் பொழுது கவிதைகளையா கொடுத்துக் களைப்பாற்ற முடியும் ?

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - 'புகலி' இணைய இதழ்

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்

கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்

பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.நன்றி - நவீன விருட்சம் காலாண்டிதழ்

Saturday, April 11, 2009

வெற்றி மனப்பான்மை

           வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.

        இவ் வெற்றி குறித்தான எண்ணம் மனதில் தோன்றும்போதே நாம் இன்னொன்றையும் மனதின் மூலையில் இருத்த வேண்டும். அதாவது இவ் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே எந்தத் தடங்கலுமின்றி நாம் நினைத்தவாறே இலகுவாக ஈடேறாமலிருக்கவும் வாய்ப்புக்களிருக்கின்றன என்பதனையும் மனதில் இருத்த வேண்டும். நமது வாழ்வின் எந்தவொரு போட்டியிலும், முயற்சிகளிலும் முதலாவது, இரண்டாவது என வகைப்படுத்தப்படும் போது எல்லாவற்றிலுமே முதலாவதாக வரும் சாத்தியங்கள் குறைவு. இவ்வாறாகச் சில தோல்விகளைத் தழுவ நேரிடுவதை நமது எதிர்பார்ப்புக்கள் ஈடேறவில்லை எனவும் கொள்ளலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவதற்கு போட்டிகள் மட்டுமே அவசியமென்றும் சொல்லமுடியாது. யாருடனும், எந்தப் போட்டியும் இல்லாதவிடத்தும், தனது மனதில் வேர்விட்ட எதிர்பார்ப்பொன்று ஈடேறாவிட்டால் அவர் மனதளவில் கோழையானவனாக மாறி உயிரற்ற மனநிலைக்கு மாறிவிடக் கூடும்.

        ஆகவே போட்டி என்ற ஒன்று இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தனது எதிர்பார்ப்புக்கள் ஈடேறா விட்டால் அல்லது, தமது இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் பலர் நிராசையோடு மனதளவில் உடைந்துபோகின்றனர். தொலைக்காட்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதிக்கும் அதே வேளை தோல்வியை அறிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தாங்கமுடியாமல் அழுகின்றனர். சிலர் கோபப்பட்டு நடுவர் குழுவினை அநீதம் விளைவித்ததாகத் திட்டுகின்றனர். இப்படியாக மனதில் ஆசையோடு எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனால் அதற்கான நமது வெளிப்பாடுகள்தான் நமது மன உறுதியினைப் பற்றி வெளியே சொல்கின்றன.

        உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?  போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா? சாதாரண மனிதர்களான எமக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான் எனினும் நமது மனதின் மகிழ்ச்சியை நாமே கொன்று விடுவதைப் போன்ற இவ் உணர்வுகள் மிகத் தீங்கானவை. மிகவும் கோழைத்தனமானவை. 'வெற்றி' என்றால் என்னவென்று அறிந்த மனங்கள் இதுபோல தோல்விகளில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில்லை. உடைந்து போவதுமில்லை.

        ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனதென்பது தோல்விக்கான முழு அர்த்தமல்ல என்பதனை மனதிலிருத்துங்கள். வெற்றி மனப்பான்மையோடு, ஒரு எதிர்பார்ப்போடு தைரியமாக அப் போட்டியில் கலந்து கொண்டீர்களே, அதுதான் வெற்றி. உங்களிடம் இருக்கும் திறமை மற்றும் மற்றப் போட்டியாளர்களின் திறமை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன எனக் கொண்டாலும் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையே உங்கள் உண்மையான திறமையை வெளிக்காட்டுகிறது. வெற்றியில் பெரிதாக ஆர்ப்பரிக்காமலும், தோல்வியில் முழுதாக உடைந்து போகாமலும் இரண்டையும் அமைதியாக, சமமாக எதிர்கொள்வதே  உண்மையான வெற்றியெனப்படுகிறது.

        ஆனால் நாம் காணும் இன்றைய சமூகத்தில் அநேகமான போட்டிகளில் அடுத்தவர்களைத் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைக் கீழே அல்லது பின்னால் தள்ளிவிட்டு தான் மட்டும் எல்லா விதத்திலும் எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற மனப்பான்மையே மிகைத்திருக்கிறது.  அதுவல்ல வெற்றி. அதுவல்ல உண்மையான முன்னேற்றம்.  ஒருவர் வெற்றியாளராக, இன்னொருவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான வெற்றியாளரெனப்படுபவர் இன்னொருவரைத் தோல்விக்குள்ளாக்கி, முதலாவதாக வருபவர் அல்லர். தான் பெற்ற வெற்றி, தனது திறமையை உணர்ந்து அவற்றை இன்னும் வளரச் செய்தபடி எந்தவொரு தேவையற்ற வீணான எதிர்பார்ப்புக்களுமின்றி மன உறுதியோடு , தன்னம்பிக்கையோடு, இலட்சியத்தோடு முன்னே செல்லும் மனிதனே உண்மையான வெற்றியாளர் எனப்படுகிறார்.

        உலகின் எல்லா மனிதர்களுக்கும் தமக்கென்று ஏதாவதொரு தனித் திறமையாவது இருக்கும். அத் திறமையை மேலும் மேலும் கூர் தீட்டி வளர்த்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை எனப்படுகிறது. அதுவல்லாமல் தன்னுடன் போட்டியிட்டுத் தோற்ற ஒருவரிடம் 'எனது திறமை, உனது திறமையை விடவும் அதிகமாக உள்ளது' எனச் சொல்லிக் காட்டுவது அல்ல. அடுத்த போட்டியின் போது இக்கருத்து மாறுபடக் கூடும். இன்றைய வாழ்வில் பலர் போட்டிகளில் வெற்றிபெறக் கூடும். தமது இலட்சியங்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடும். தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் பெரும்பாலாக இவ் வெற்றிகளைப் பெறுபவர்கள்  தமது திறமையைக் குறித்தல்லாமல் அடுத்தவரைத் தோற்கடித்தது குறித்தே மகிழ்ச்சியடைகின்றனர். இது உண்மையில் தோல்வி மனப்பான்மையே தவிர வெற்றிமனப்பான்மை அல்ல.

        ஆகவே ஒரு சந்தர்ப்பத்துப் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே வாழ்வின் இலக்கெனக் கொள்ளாமல் முழு வாழ்வையும் தமது திறமைகளால் வெற்றிகொள்வதே வாழ்வின் உண்மையான வெற்றியெனக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவ நேரும் பட்சத்தில் அதற்காக மனமுடைந்து சோர்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு ஈடேறவில்லையென துயரப்பட்டு மனமுடைந்து போகக்கூடாது.

        எல்லோருக்குமே அவ்வப்போது சில எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவது இயற்கை. ஆனால் அதற்காக நகரும் வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறாக எதிர்பார்ப்பு ஈடேறாச் சமயங்களில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வாழ்த்தொன்று உங்களை வந்தடைந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். 'அன்று நான் தோற்றுப்போனது நல்லதுதான்' எனப் பின் வரும் காலங்களில் நீங்களே சொல்லக் கூடுமான அளவுக்கு வெற்றியை அவ் வாழ்த்துக்கள் சுமந்து வந்திருக்கும்.

        எனவே 'தோல்வியடைந்து விட்டோம்' என்ற சோர்வு மனநிலையை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி, தொடர்ந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்காது ' என்னைத் தோற்கடிக்க நான் விடமாட்டேன்' என்ற தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உங்கள் பாதங்களை முன்வையுங்கள். அடுத்தவரை விழச் செய்வதல்ல, தான் விழாமல் முன்னேறுவதே உண்மையான வெற்றி என உணருங்கள்.அவ் உணர்விருக்கும் நீங்களே வெற்றிமனப்பான்மை கொண்ட உண்மையான வெற்றியாளர்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - விகடன்

Friday, April 10, 2009

உலகிலேயே பெரும் செல்வந்த நாடாக இந்தியா

நன்றி - 22.03.2009 இலங்கையிலிருந்து வெளியாகும் ஞாயிறு வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. உங்களுடன் பகிர்ந்துகொள்ளவென இங்கு இட்டிருக்கிறேன்.

                   இந்தியாவின் ஒரு சில மோசடி அரசியல்வாதிகளும் இலஞ்ச ஊழல்களில் ஈடுபடும் ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளும் சட்ட விரோதமான வகையில் தனிப்பட்ட கணக்குகளில் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

                   இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ள தொகை சுமார் 1500 பில்லியன் டொலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது அயலார் சொத்தை தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் செயலாகும்.

                    இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொகையைவிட இது 13 மடங்கு மேலானதாகக் கருதப்படுகிறது. 45 கோடி மக்களுக்கும் இப்பணத்தைப் பங்கிட்டால் ஆளுக்கு 100,000 ரூபா கிடைக்கும். பெருமளவான இந்தத் தொகைப் பணம் இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து சுயநலத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகும். இந்தக் கறுப்புப் பணமும் சொத்தும் இந்தியாவிற்கு மீள வருமானால் வெளிநாட்டுக் கடன் பேரில் செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையையும் 24 மணி நேரத்தில் செலுத்தி விடலாம். அவ்வாறு கடனை செலுத்திய பின்னரும் கடன் தொகையைவிட மேலதிகமாக 12 மடங்குப் பணம் மீதமாகும்.

                     மீதமாகும் இப்பணத்தை வருமானம் தரும் முதலீட்டுக்குப் பயன்படுத்தினால் மத்திய அரசாங்கத்திற்கு வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகமான வட்டி வரவுண்டாகும். சகல வட்டி வீதங்களையும் இரத்துச் செய்தாலும்கூட நாட்டை சுமுகமாக வழிநடத்த மத்திய அரசுக்கு இயலக்கூடியதாகவிருக்கும்.

                      இந்தியா ஒரு வறிய நாடு என்று கூறப்பட்டு வருகிறது. இந்தக் கறுப்புப் பண வைப்பை ஒரு போட்டியாக ஒலிம்பிக்கில் வைத்தால் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏனெனில் வங்கிக் கணக்கு வைப்பு அடிப்படையில் இனங் காணப்பட்ட முதல் ஐந்து நாடுகளில் முதலிடம் பெறுவது இந்தியாவாகும். அடுத்து இடம்பெறுவது முறையே ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், உக்ரெய்ன், சீனா என்பன.

                       இந்தியா1456 பில்லியன் டொலர்கள், ரஷ்யா  470 பில்லியன் டொலர்கள், ஐக்கிய இராச்சியம் 390 பில்லியன் டொலர்கள், உக்ரெய்ன்100 பில்லியன் டொலர்கள், சீனா 96 பில்லியன் டொலர்கள் என்ற ரீதியில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் சுவிஸ் வங்கிக் கழகத்தின் 2000 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

                        அண்மையில் சர்வதேச அழுத்தத்தின் பேரில், சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் முறைப்படி கேட்டால் வங்கிக் கணக்கைக் காட்டுவதாக சுவிஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இந்தியா விபரங்களைத் தருமாறு கோரவில்லை. எனவே இலஞ்சமும் ஊழலும் மலிந்துள்ளது என்று அர்த்தமாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

                         இந்தியா வறிய நாடா என்று கேட்கப்படும் கேள்விக்கு சுவிஸ் வங்கி பதில் சொல்லும். வெளிநாட்டு வங்கிகளின் தனிப்பட்டோர் கணக்குகளில் 1500 பில்லியன் டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளபோதும் இந்தியா ஒரு வறிய நாடா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

                           சுமார் 80,000 பேர் ஆண்டுதோறும் சுவிற்சர்லாந்துக்கு பயணிக்கின்றார்கள். அவர்களில் 25,000 பேர் அடிக்கடி செல்கிறார்கள் "வெளிப்படையாக இவர்கள் உல்லாசப் பயணிகள் அல்லர். வேறு காரணங்களுக்காகச் செல்பவர்கள்'' என்று சட்டவிரோத பணம் தொடர்பில் கண்டறியும் அதிகாரி ஒருவர் நம்புகிறார்.

                           நேர்மையற்ற வகையில் பணம் திரட்டுவோர்களாகக் கருதப்படுபவர்கள். மோசடிகள் செய்யும் அரசியல்வாதிகள், இலஞ்ச அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள், சட்டவிரோத பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் வன பரிபாலன இயக்குநர்கள் இத்தகையோர் நாட்டின் சொத்துக்களையும் சுபீட்சத்தையும் உறிஞ்சுகிறார்கள்.

                             இது சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றியது மட்டுமேயாகும்.மற்ற சர்வதேச வங்கிகளின் கணக்குகள் குறித்த விபரமல்ல.

                             உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வேறு எந்த நாட்டினதும் வைப்பு இந்தியாவைவிட மிஞ்சவில்லை. சுவிஸ் வங்கியில் எந்த ஒரு உலக நாடும் 1456 பில்லியன் டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட வில்லை.

                              இப்போது இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்தியா ஒரு வறிய நாடா? என்று கேட்பதைவிட இந்தியாவைக் காப்பாற்ற எவருமுண்டா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.

Thursday, April 9, 2009

ஃபஹீமா ஜஹானின் ' ஒரு கடல் நீரூற்றி' !

ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.

ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.
பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '


எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...'  கவிதைத் தொகுப்பு.

தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..'
ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!


சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!


இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!


காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!


படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!


பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்


அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?


தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!


என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில்  புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!


ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்

உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!

எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!

அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!


இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம்  புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!

அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.

எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.


யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின


தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது  பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன

நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்


இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின்  உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?


வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....


'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும்  ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.


'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?


'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.


என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?


'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!


நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை


'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?


போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!

எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?


ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்


என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக


இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்


என்பதோடு முற்றுப்பெருகிறது.

இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு  இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக்கேட்டுக் கொள்கிறேன்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி - 'புகலி' இணைய இதழ்

Wednesday, April 8, 2009

நிழற்படங்கள்

 
(ஓவியம் - நண்பர் திரு.முல்லை ராஜன்)
          
              நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.

            சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.

            அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. 'ஏதாவது சாப்பிடுறீங்களா?' எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.

            கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.

            இவர் வருவதைப் பற்றி கணவர் முன்னரே சொல்லியிருந்தார். எனக்கும் அவருக்கும் திருமணமாகி இன்னும் முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை. ஒரு பெரிய வீட்டுக்குள் நாமிருவரும் மட்டுமென்பதால் தினம் எம்மிருவருக்கும் பேசப் பல விடயங்கள் இருந்தன. நேற்றைய இரவு இவர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும். அவரது இதுவரையான நடவடிக்கை, நடத்தைகள் அலசப்பட்டு அங்கிருக்கும் நீதிபதிகளால் அவர் குறித்து தீர்ப்பெழுதப்படும். அதுதான் நேற்றைய இரவு எனக்கும் கணவருக்குமிடையில் நடந்தது.

            வரப்போகும் நண்பர் குறித்து சும்மாதான் இவரிடம் கேட்டுவைத்தேன். அவருக்குப் பெண் பார்க்கப் புகைப்படம் கொடுக்கும் தேவையற்று அவராகவே அனாதை விடுதியொன்றிலிருந்து தனது மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நேற்றே தெரியும். ஆனாலும் இக் கேள்வி வெளிக்கிளம்பிய சமயத்தில் அது என் நினைவில் இருக்கவில்லை. எல்லோருடைய எல்லா நிகழ்வுகளையும் கொண்ட நினைவுகளைக் காவித்திரியும்படியான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நிச்சயமாக எனக்கு அது இல்லை.

            நான் மிகவும் மறதியானவளென அம்மா கூடச் சொல்வாள். எனது தந்தைவழி, தாய்வழி தூரத்து உறவுகளை நெடுநாட்களின் பின்னர் சந்திக்கையில் நான் பல தடவைகள் அவர்களின் பெயர்களையும் அவர்களோடு எனக்கிருக்கும் உறவுமுறைகளையும் மறந்துவிடுவேன். பிறகு வந்து அம்மாவிடம் கேட்கும்பொழுதில் அம்மா இதனைச் சொல்வாள். அப்படியே என்னிடம் தனதும் அப்பாவினதும், அவர்கள் இருபுறத்தினதும் முந்தைய உறவுமுறைகள் குறித்தும் மிகவும் பொறுமையாக விலாவாரியாக சொல்லத் தொடங்குவாள். அம்மாக்கள் எப்பொழுதுமே பழைய ஞாபகங்களின் ஊற்றுக்கள். அவ்வூற்றுக்களைக் கிளறி பழங்கதைகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

            நேற்றிரவு கணவர் இந் நண்பரது காதல் குறித்துச் சொன்னபோதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாமா மகள் மேல் அறிந்தவயது முதல் காதல். இரு வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லையாம். இவரும் இவரால் இயன்றவிதமெல்லாம் அந்த வீட்டுக்கு உதவியிருக்கிறார். அந்தப் பெண் நல்ல அழகியாம். அழகான பெண்களெல்லாம் ஊரின் நிலாக்களென நினைக்கிறேன். எந்தத் தெருவில், எந்தப் பெண் அழகாக இருக்கிறாளென ஊரின் இளைஞர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களிடமும் ஆண்கள் குறித்து இது மாதிரியான பட்டியல்கள் இருக்கின்றன.

            சொல்லவந்த விடயத்தை விட்டு வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். ஏனோ எனக்கு எல்லாவற்றையும் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல ஏதேனும் சொல்ல வந்து வேறொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பேன். சிறுவயது முதலே இப்படித்தான். பாலர் வகுப்பில் எனது பென்சில் திருடிக்கொண்டு போனவனை எனக்குத் தெரியும். ஆனாலும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அவர் அங்க அடையாளங்கள் கேட்டபோது வெள்ளைச் சட்டை, நீலக் களிசானென பள்ளிச் சீருடை குறித்துச் சொன்னேன். கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சட்டெனச் சிரித்துவிட்டார். வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன.

            அந்தப் பெண் மிகவும் அழகானவளென்பதோடு இவரை உயிருக்குயிராகக் காதலித்தாளாம். ஒரு சமயத்தில் இவருக்கு வியாபாரம் நொடித்து வெளிநாடு வர நேர்ந்ததும் இரு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் நிச்சயம் செய்துவிட்டு இவரை வெளிநாடு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப் பெண்ணை எங்கோ கண்ட, இவரை விடவும் சொத்துக்கள் நிறைந்தவனாக இருக்கக் கூடுமானவொரு செல்வந்த இளைஞன், அவளை மணமுடிக்கவென ஆசைப்பட்டு இவரது மாமாவிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் இவரது மாமா முந்தைய நிச்சயத்தை முறித்து அவளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து விட்டாராம். பணத்துக்கு எல்லாச் சக்தியுமுண்டென பலரும் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும். அல்லது அதனை எல்லோரும் போல நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது. பணமும், அது சார்ந்த நம்பிக்கையும் தான் பலரது வாழ்க்கையை வழிநடத்துகிறது, சீரழிக்கிறது.

            அவளுக்குத் திருமணமானதை அறிந்து இவர் மிகவும் உடைந்துபோனார். நீண்ட காலக் காதலைத் தன் நெஞ்சிலே கொண்டிருந்த அந்தப் பெண்ணும் மிகவும் மனவேதனைப் பட்டிருக்கக் கூடும். அழுதிருக்கக் கூடும். திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேனென அடம்பிடித்திருக்கக் கூடும். பெண்ணை ஒரு விடயத்திற்கென வலியுறுத்துவது ஆணுக்கு மிக இலகுவான விடயமோ எனத் தோன்றுகிறது. அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்.

            இப்படித்தான் எனது பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அவளது காதலனை மறந்துவிடும்படி சொல்லி அவளது பெற்றோர் முதலில் நன்றாகத் திட்டிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் விஷக் குப்பியைக் கையில் வைத்தபடி அவனை மறக்காவிட்டால் தாங்கள் செத்துப் போவதாகச் சொல்லி அழுதார்கள். அதுவரை அழுது பார்த்திராத அவளது அப்பாவின் கண்ணீர் அவளை அசைத்தது. ஆண்களின் கண்ணீருக்கு இளகிவிடும் தன்மை பெண்களிடம் இருக்கிறது போலும். அடிக்கு மிரளாதவள் அன்புக்கு அடங்கிப் போனாள். பிறகு இரவு தோறும் காதல் நினைவுகள் வாட்ட, தலையணையால் கண்ணீர் துடைத்தபடிக் கிடந்தவள் அடுத்தநாள் காலையில் அதே விஷத்தைக் குடித்துச் செத்துப்போயிருந்தாள். இப்படித் தாங்களே மகளைச் சாகடித்ததற்கு அவனுடனே சேர்த்து வைத்திருக்கலாமேயென அப்பாவும் அம்மாவும் பிணத்தினைப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.

            பக்கத்துவீட்டுப் பெண்ணெதற்கு? எனக்கே ஒரு காதலிருந்தது. ராகுலன் என்றொருவன். நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இணையத்தில் அறிமுகம். சில நாட்கள் தொடர்ந்து பேசியதில் காதல் வந்தது. பெண்கள் தங்கள் பார்வையாலே ஆண்களைக் கவர்ந்து விடுவதைப்போல ஆண்களால் முடிவதில்லை. ஆண்களின் பார்வைக்குப் பெண்களிடம் அதிகளவான ஈர்ப்பில்லை. ஒரு பெண் நடந்துபோனால் திரும்பிப் பார்க்கும் பல ஆண்களுள் தனக்கான ஆணை மட்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமென அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் பேசவேண்டும். மிக அழகான வார்த்தைகள் கூட வேண்டாம். அவனது அன்பு சொரியும் இலட்சியங்களை அவளறிய வைத்தால் போதும்.

            ராகுலன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவனது இலட்சியமே ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதுதானென முதலில் சொல்ல ஆரம்பித்தபோது மிகவும் மகிழ்ச்சியாகிப் போய்விட்டது எனக்கு. புகைக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ தனக்கு கிஞ்சித்தேனும் இல்லை என்றான். பிற பெண்களிடம் வீணாகப் பேசுவது கூட இல்லையென்றான். எனது புகைப்படம் கேட்டான். அனுப்பி வைத்தேன். அதைப்பார்த்த கணத்திலிருந்து என்னைக் காதலிப்பதாக அழகிய வார்த்தைகளில் சொன்னான். இலட்சியம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை. அவனனுப்பியிருந்த புகைப்படத்தில் நெற்றியில் திருநீரெல்லாம் இட்டு ஒரு அப்பாவித்தனமான களையை முகத்தில் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சாந்தசொரூபியெனக் கண்ட நான் காதலில் விழுந்தேன். தொடர்ந்தும் புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டோம். காதலை தினம் தினம் உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும்  சொல்லிக்கொண்டோம்.

            பின்பொருநாள் தற்செயலாக கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதை வெறுத்த முற்போக்குவாதித் தோழியிடம் அவளது காதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவள் அவளது காதலனென்று சொல்லி ராகுலனின் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தாள். அதில் ராகுலன் அரை நிர்வாணமாக, கையில் மதுப்புட்டியுடன், இரு பக்கமும் இரு பெண்களை அணைத்தபடி லேசாக ஆடிக்கொண்டிருந்தான். இது போலப் பல புகைப்படங்களைக் காட்டினாள். கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முற்போக்கு இலட்சியம் அவனிடமும் இருப்பதாகச் சொன்னதால்தான் தான் அவனைக் காதலிப்பதாகத் தோழி சொன்னாள். அவனுக்கு அவளிடம் வேறு பெயர். வேறு முகமூடி.

            நல்லவேளை எனது பெற்றோருக்கு என்னைத் திட்டவோ, அடிக்கவோ, மிரட்டவோ வைக்காமல் நானாகவே அவனை விட்டும் நீங்கிக் கொண்டேன்.  ஒரு நம்பிக்கைத் துரோகியுடனான, ஒரு பெண்பித்தனுடனான காதலை அன்றொழித்தது தான். அதற்குப் பிறகு எப்பொழுதாவது அவனைப்பற்றி ஏதாவது செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னை இரண்டு கிலோ தங்கத்துக்கும் ஒரு வாகனத்துக்கும் விற்று ஒரு பணக்காரப்பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. அந்த மணப்பெண் மேல் மிகுந்த அனுதாபம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவனோடு இன்னும் எத்தனை பொய்களை அவள் எதிர்கொள்ள வேண்டுமோ?

            உண்மைக்காதல்கள் மட்டும் தான் எப்பொழுதும் துயரங்களைக் கொண்டிருக்கும். கசப்பு மருந்தின் வெளிப்புற இனிப்புப் பூச்சைப் போல துயரங்களுக்கு மேல்தான் உண்மைக்காதல் தடவப்பட்டிருக்கும். சிறிதாவது அதன் மேற்பகுதி உராய்ந்துவிடும் போது துயரச் சுவையை வெளிக்காட்டும். எனக்கும் இதே கதைதான். நான் ராகுலனை உண்மையாகவே நேசித்திருந்ததை அவனை விட்டகன்று விட்ட பின்னர்தான் உணர்ந்தேன். என் முதல் காதல் தந்த துயரை, வாட்டத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். நீண்ட நாள் உண்ணப்பிடிக்காமல், இணையம் வரப்பிடிக்காமல் பசியிலிருந்திருக்கிறேன். தாகித்திருந்திருக்கிறேன். அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிரிந்த வருத்தம் அந்த நயவஞ்சகனுக்கு, ஏமாற்றுக்காரனுக்குக் கொஞ்சமேனும் இருந்திருக்காது. அவனுக்கென்ன ? கடலில் ஒரே ஒரு அப்பாவி மீனா இருக்கிறது? தொடர்ந்தும் வலைவீசுவான். சிக்குவதையெல்லாம் சீரழித்துக் கொல்வான்.

            இந்த நண்பர் பிறகு பல வருடங்களை மிகவும் கவலையோடு வெளிநாட்டிலேயே கழித்தார். முதலில் இழந்த காதலியை நினைத்து நினைத்தே தான் திருமணம் செய்ய மறுத்தவர் பிறகு நாட்டுக்குப் போய் வீட்டாரின் வேண்டுகோளுக்காகச் சம்மதித்து, தானே ஒரு அநாதை விடுதியிலிருந்து விபத்தில் சிக்கி முகத்தில் பல தழும்புகளைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளை நல்ல வசதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் கூட உண்டு. இவர் மணமுடிக்க இருந்த மாமா பெண்ணின் வாழ்க்கை சில வருடங்களில் துன்பத்துக்குள் ஆழ்ந்தது. அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறான். முன்பு போலவே அவள் தையல்வேலை செய்துதான் குடும்பம் நடக்கிறதாம்.

            இவர் பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ காதலித்ததை இன்னுமா நினைவில் வைத்திருக்கிறாரென எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவர்  தோலுரித்து, தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். 'அவள் ரொம்பக் கஷ்டப்படுறா' எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன. அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி - நவீன விருட்சம் காலாண்டு இதழ்

Tuesday, April 7, 2009

எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நான் மற்றும் விகடன்

2009, மார்ச் மாத குமுதம் தீராநதியில் எனது மதிப்பிற்குரிய நண்பரும் எழுத்தாளருமான திரு.அ.முத்துலிங்கம் என்னைக் குறித்து தனது சிறப்புக்கட்டுரையில் எழுதியிருப்பதாக நண்பரும் பதிவருமான செல்வேந்திரன் எனது கவிதைக்கான பின்னூட்டமொன்றில் முதன்முதலில் அறியத்தந்தார். இன்ப அதிர்ச்சி என்பார்களே. அதனை அன்று உணர்ந்தேன். நன்றி செல்வேந்திரன் !

திரு.அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தமானவை. அறை முழுதும் என்னுடன் இருக்கும் தனிமை தரும் சோர்வை, மிகக் கொடியதாக நான் உணரும் தருணங்களில் இவரது எழுத்துக்களைத்தான் துணைக்கெடுத்துக் கொள்வேன். அற்புதமாக, காயங்களுக்கு மயிலிறகுத் தடவலையொத்த, இலாவகமான வரிகளில் கண்கள் அலுப்பின்றி மேய்ந்துகொண்டே இருக்கும். என் வாழ்வினைக் கோர்த்திருக்கும் சம்பவங்களோடு இவரது கதைகள் நிகழும் களம், அதன் கதாபாத்திரங்கள், அதன் சூழல்..இப்படி ஏதேனுமொன்றாவது ஒத்துப் போகும். அல்லது அவற்றுடன் பொருத்திப் பார்த்துக் கதை மானிடராக என்னை உணரும்படி செய்யும்.

கதை சொல்லிகள் எப்பொழுதும் மனதுக்கு நெருக்கமாகி விடுகின்றார்கள். நமது தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள் இன்றும் நம் மனதிற்கு  நெருக்கமாக இருப்பதற்கு அல்லது இருப்பதாகத் தோன்றுவதற்கு எம் சிறுவயதில் அவர்கள் நமக்குச் சொன்ன கதைகள்தான் காரணமாக இருக்கலாம். இவ்வளவு வளர்ந்தும் இன்னும் எல்லோரிடமும் கதைகள் கேட்கும் ஆவல் மனதின் மூலைகளில் அணையாத தணலினைப் போல சாம்பல் மூடி மௌனமாய்க் கிடக்கிறது. கதையொன்றின் சிறு காற்றுப் பட்டால் போதும். தீச் சிரிப்பைக் காட்டியபடி எழுந்து கதையினை விழுங்கிக் கொள்ளத்தொடங்கும். இப்படியாக பல நிகழ்வுகளை எனக்குள் விழுங்கிக்கொள்ளவென்றும் என் பசியாற்றிக் கொள்ளவென்றும் ஒருவரது தலைதடவி இயல்பாக, அன்பாகச் சொல்லும் வரிகளில் அமைந்த இவரது 'அங்கே இப்ப என்ன நேரம்? ' தொகுப்பு பல தடவை என்னை மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தது. அது போலவே 'அக்கா', வம்சவிருத்தி', 'மகாராஜாவின் இரயில் வண்டி' ,' திகடசக்கரம்' மற்றும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். இவையெல்லாம் என்னில் எழுதும் ஆர்வத்தையும் நானாகக் கதை சொல்லிப் பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டின. திரு.அ.முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றி !

புகழ்பெற்ற எழுத்தாளரொருவரது பத்தியில் பெயர் குறிப்பிடப்படுவது சாதாரணமான ஒன்றல்ல என்பதனை அன்று நான் அறிந்துகொண்டேன். நண்பர்கள், பதிவர்கள் மற்றும் நான் அறியாதவர்களெல்லோரும் கூட தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கும் அந் நிகழ்வினைப் பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டார்கள். முதலில் தீராநதியில் எனக்கு அக்கட்டுரையைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மிகைத்திருந்தது. நான் வசிக்கும் கத்தாரில் தீராநதி கிடைப்பதில்லை. எனது சொற்களில் வழிந்த ஆர்வம் கண்ட நண்பர்கள் மீறான் அன்வர், கார்த்திக் ஆகியோர் உடனே அப்பக்கங்களை கணினியிலேற்றி எனக்கு அனுப்பியிருந்தார்கள். நன்றி நண்பர்களே !

அந் நிகழ்வு பற்றி விரிவாகக் கேட்ட எல்லோருடனும் அதனைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை எனக்குத் தராதவண்ணம் கடந்த மாதம் இணைய இணைப்பு சிக்கலாகி விட்டிருந்தது. அதனால் கேட்ட எல்லோருக்குமாக அந் நிகழ்வை இங்கேயே எழுதிவிடுகிறேன்.

அது 2005 ம் வருடம். கொழும்பில் தங்கியிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எமது வகுப்பு வியாழக்கிழமை மட்டும் பாதிநாள் நடக்கும். வகுப்பு முடிந்ததும் மொறட்டுவை, கடுபெத்த நகர் சந்திக்கு வந்து கொழும்பு நோக்கிவரும் பஸ் எடுத்துப் பயணித்து இடையில் உள்ள வெள்ளவத்தையில் இறங்குவேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தது.

வெள்ளவத்தையில் இறங்க மிக முக்கியமான காரணமொன்று இருந்தது. அங்கு எனது அபிமான பழைய புத்தகக் கடையொன்றுள்ளது. இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளவத்தையில் குண்டு வெடித்ததாகப் பத்திரிகையில் புகைப்படம் பார்த்தபோது அதன் மூலையில் இக் கடையையும் கண்டதாக ஞாபகம். ரொக்ஸி சினிமா தியேட்டருக்கும் ஆர்பிகோ ஷோரூமுக்குமிடையில் இக்கடை அமைந்திருந்ததென நினைக்கிறேன். வெற்றிலை சாப்பிட்டு உதடெல்லாம் சிவந்த ஒரு அண்ணா (வயது 40 இருக்கும் ) உரிமையாளராக அதில் இருந்தார். சற்றுப்பெரிய கடைதான்.ஆங்கிலம், சிங்களம், தமிழென பல கிடைப்பதற்கரிய பழைய புத்தகங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்டு அங்கு நிறைந்திருந்தன.

சிறுவயதிலிருந்தே புத்தகங்களும், அதன் வாசனையும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மதியம் ஒரு மணிக்கு அந்தப் புத்தகக் கடைக்குப் போனால் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிவர எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும். ஒவ்வொரு கிழமையும் இப்படியாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக உருட்டிப் பிரட்டிப் புத்தங்களை அள்ளுவதால் அந்த அண்ணாவுக்கும் நான் நல்ல அறிமுகம் ஆகிவிட்டேன். இடையிடையே என்னைக் கடையில் விட்டுவிட்டு சாப்பிடவும், தேனீர் குடிக்கவும், வெற்றிலை வாங்கவுமென அவர் வெளியே போய்விடுவார்.

நான் வாசித்திராத பழைய மல்லிகை, மூன்றாவது மனிதன், யாத்ரா, ஆனந்தவிகடன் இதழ்கள், அம்மா, சகோதரிக்கு அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்கள், Readers digest, இன்னும் நல்ல பழைய தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் என எப்படியும் கிழமைக்கு 20,25 புத்தகங்கள் வாங்கிவிடுவேன். புது ஆனந்த விகடன் ஐம்பது ரூபாய் என்றால் இரு வாரங்களுக்கு முந்தி வந்த விகடன் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும். அந்த அண்ணா எனக்காகவென்றே எப்படியும் சமீபத்திய இதழ்களை எடுத்துவைத்திருப்பார்.

இப்படியாக ஒருநாள் ஏறத்தாழ 4 மணித்தியாலங்கள் தேடி , பொக்கிஷங்களெனக் கண்ட, சொல்லிவைத்து நீண்ட காலத் தேடலின் பின் கிடைத்த (கல்கியின் படைப்புகள், ஆயிரத்தொரு இரவு கதைகள், பழைய ஆனந்தவிகடன், மங்கையர் மலர்கள், Readers digest, இன்னும் சில ) புத்தகங்களை பெரியதொரு கறுப்புப் பையில் கஷ்டப்பட்டு அடுக்கி நிரப்பி எடுத்து, கடையை விட்டு வெளியே வர மாலை 5 மணிக்கும் மேலாகிவிட்டது. நடந்து தூக்கிவருகையில் நிலத்தில் இழுபடுமளவுக்கு பெரிய பை. அவ்வளவு கனம்.

இப்பொழுது வெள்ளவத்தையிலிருந்து எனது அறையிருந்த மருதானை எனும் இடத்துக்குப் போக வேண்டும். உட்கார்ந்து போகலாமெனக் காத்திருந்து சனம் குறைந்துவந்த 100 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி அமர்ந்து நீண்ட நாள் வேண்டுதலின் பின்னர் கிடைத்த குழந்தையைத் தாய் மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்துவது போல பையையும் அணைத்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன்.

காலி முகத்திடலெனத் தமிழில் அழைக்கப்படும் Galle face எனும் கடற்கரைப் பிரதேசம் தாண்டும்போது கொழும்பு நோக்கி வரும் எல்லா பஸ்களையும் படையினர் சோதனையிடுவது தெரிந்தது. ஏதோ ஓர் திடீர் சோதனை. நீண்ட துவக்குகளை நீட்டிவந்தவர்கள் நான் வந்த பஸ்ஸையும் நிறுத்தி எல்லோரிடமும் அடையாள அட்டையைக் கேட்டுவாங்கிச் சோதனையிட்டார்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டை இருந்தும் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனப் பலரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தார்கள். நிறுத்தப்பட்டவர்கள் ஒருவித உதறலுடனும் பதற்றத்துடனும் அச்சத்துடனிருப்பதைக் கண்டேன். எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்.

பரிசோதித்துக் கொண்டிருந்தவர்கள் எனதும் அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் என்னை நிறுத்தி எனது கையிலிருந்த, பையின் வாய்ப் பகுதியால் தன்னொரு மூலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தார்கள். தமிழ் மொழியிலான புத்தகங்கள் அவர்கள் தோண்டத் தோண்ட அப் பையிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அவர்களுக்குச் சந்தேகம் முளைத்திற்று.

என்னைப் பார்த்தார்கள். ஏதோ ஒரு விசித்திரத்தைத் தேடுவது போல என் முகத்தை உற்றுப்பார்த்தார்கள். புத்தகப்பையைப் பார்த்தார்கள்..அடையாள அட்டையை மீண்டும் மீண்டும் வாங்கிப் பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். இப்படியே நிமிடங்கள் கரைந்தன.

அடுத்தது விசாரணை. எனக்குச் சிங்கள மொழி தெரியும்.

எங்கிருந்து வருகிறாய்? கொழும்பில் என்ன செய்கிறாய்? உனக்கெதற்கு இவ்வளவு புத்தகங்கள் ? அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் ? எங்கே வாங்கினாய்? யாருடன் நீ தங்கியிருக்கிறாய்? யாருக்காக இந்தப் புத்தகங்கள் ? இந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன? இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறாய் ?

ஒரு குறிப்பிட்ட மொழியினைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வாசிப்பதற்கெனக் காவிச் செல்லப்பட்ட புத்தகங்கள் பொறுமையைச் சோதிக்கும் படியாக இப்படிப் பல கேள்விகளை அன்று கண்டன. பல்கலைக்கழ்கத்திலிருந்து வருவதாகவும், இவற்றையெல்லாம் வாசிக்க மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், பல்கலைக்கழக அடையாள அட்டை காட்டிப் பலமுறை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவர்களது சந்தேகம் மட்டும் தீரவில்லை என்பது அவர்களது முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

என்னை நிறுத்திவைப்பதா? அனுப்பிவிடுவதா? புத்தகங்களையும் என்னையும் என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் நன்றாக இருட்டிவிட்டது. அழகான சமுத்திரவெளி சூரியனைத் தின்றுவிட்டிருந்தது.

வீணாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம், வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் எனப் பல இருந்த நாட்களவை. எதுவும் செய்ய முடியாமல் எனது புத்தகங்களைத் திரும்பத் தரவும் முடியாமல் அந்தப் படைவீரர்கள் தானாக வலையில் சிக்கிய அபூர்வமான விலங்கொன்றை மீண்டும் வனாந்தரத்தில் விட்டுவிடுவது எப்படியென்பதைப் போலத் தவித்தார்கள். தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னுமொரு உயரதிகாரிக்குத் தகவலனுப்பி அவரை வரவழைத்தார்கள். அதே கேள்விகளை அவரும் கேட்டார். ஏதேனும் ஆயுதங்களை அல்லது புத்தகங்களை நான் ஒளித்துவைத்திருக்கிறேனா என என் உடல் முழுதும் தடவிப்பார்த்தார். எனது கைபேசியை வாங்கி அதிலுள்ளவற்றைச் சோதனையிட்டார்.

இப்பொழுது சோதனையிடப்பட்டு சந்தேகங்களில் சிக்காத பயணிகள் பஸ்ஸினுள் அமர்ந்து எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வெக்கையான காலநிலை கிளப்பிய வியர்வையாலோ, பசியாலோ உள்ளிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்த இருளோடு அலைந்தன. பஸ் சாரதியும், கண்டக்டரும் பஸ் வாயிலருகில் நின்றவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

அதிகாரிகளது அடுத்த கேள்விகள் கண்டக்டரை அழைத்து அவரை நோக்கி ஏவப்பட்டன. நான் எங்கிருந்து ஏறினேன்? என்னை அவருக்கு முன்பே தெரியுமா? போன்ற இன்னும் பல கேள்விகள். அவன் சொன்ன பதில்களும் எனது பதில்களும் ஒன்றுக்கொன்று சரியாகிப் போனதில் சிறு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஐ.டி. கார்ட் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்கள்.

"மகே பொத் டிக - எனது புத்தகங்கள்?" எனக் கேட்டபடி நான் அங்கேயே நின்றிருந்தேன். எனது புத்தகப்பை அவர்களது காவலரணில் ஒரு அமைதியான செல்லப்பிராணியைப் போல அல்லது இரை விழுங்கிய மலைப்பாம்பினைப் போல மூலையில் கிடந்தது.

"அவற்றை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்."

 "ஐயோ அவங்க சொல்றப்பவே வாங்க..புத்தகங்கள பிறகு பார்த்துக்கொள்ளலாம்.."-  கண்டக்டர் எனது கைப்பிடித்து இழுத்தபடி கெஞ்சிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இறுதியில் பொக்கிஷங்களென அதிக நாட்கள் பட்டியலிட்டுக் காத்திருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய எல்லாப் புத்தகங்களும் அக் கடற்கரைத் தடுப்புச்சாவடியோடு என்னிடமிருந்து விடைபெற்றன. இப்படியாக அந்த அதிகாரிகளுக்கு பல விதப் பதற்றங்களை ஏற்படுத்திய ஆனந்த விகடன்களும், ஆயிரத்தொரு இரவுகளும், அக் கறுப்புப்பையை நிரப்பிய மற்ற புத்தகங்களும்  இன்று வரை எனக்கு வந்துசேரவில்லை. கடலின் ஆழத்துக்குள் அழிந்தோ, எரிந்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பற்றியெரிந்தோ அல்லது தாண்டி வந்திருக்கும் ஆயிரத்தொரு இரவுகளுக்கும் மேற்பட்ட இரவுகளில் தினமொரு கதையெனப் பேசியபடி அதிகாரக் கட்டிடங்களின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கின்றனவோ...

தெரியவில்லை !

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?

விகடனில் பிரசுரமான இக்கட்டுரை 'தமிழ்மணம்' அகில உலக தமிழ் வலைப்பதிவுகளுக்கிடையே நடத்திய போட்டியில், 2008 ஆம் ஆண்டிற்கான 'அறிவியல், தொழில்நுட்பம்,பொருளாதாரம்' பிரிவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுத்தந்தது.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது?

பொதுவாகவே நாம் ஏதாவதொன்றைத் திட்டமிடும் போது,அத் திட்டம் நிறைவேறும் நாளொன்று,நேரமொன்று இருக்கும். உதாரணமாக நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதவேண்டுமெனத் திட்டமிட்டுப் படிப்பீர்களாயின் பரீட்சையோடு அத்திட்டமிடல் நிறைவேறிவிடும். ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்களெனில் அப்பயணம் நிறைவேறிய பின்னர் அத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு விடும்.

அது போல திருமணம் செய்ய, வீடு கட்ட, வாகனம் வாங்க, மேற்படிப்பு படிக்க என எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தானே செய்கிறோம். ஆகவே நமது வாழ்க்கையானது இதுபோன்ற சின்னச் சின்ன, பெரிய திட்டங்கள், இலக்குகள் கொண்டே அடுக்கடுக்காகக் கட்டப்படுகிறது எனச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் தானே..?

அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமான திட்டங்கள், இலக்குகள் வித்தியாசப்பட்ட போதும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒத்த இலக்கு, இலட்சியம் என்பது 'வாழ்க்கையை வெற்றி கொள்வது' . நாமனைவரும் அதனை நோக்கியே கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இலக்குகளை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால்,நம்மனைவருக்கும் வாழ்க்கையை வென்றெடுக்கவேண்டுமென்பதே இலட்சியமாக இருப்பினும் வென்றெடுக்கும் நாளெது? அதற்கான நேரமெது ? என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறோம். உண்மைதானே ?

வாழ்க்கையை வெற்றிகொள்ளவேண்டுமென நாம் பலவிதங்களில் முயற்சிக்கிறோம்.போராடுகிறோம்.ஆனால் எமதான வாழ்க்கையை எப்பொழுது வென்றெடுக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு எம்மிடம் பதிலிருப்பதில்லை அல்லது பதிலளிக்க முடிவதில்லை.

இதுவரை நீங்கள் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்து அல்லது எதிர்காலத்தில் பயணிக்க எண்ணியிருக்கும் திசையை நோக்கிச் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?

நாம் இறக்கும்வரைக்கும் இலட்சியங்களிலான, சிக்கலான வலைகளால் நம்மை நாமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு சிக்கலாய் விடுவித்துக்கொண்டு, இலட்சியங்களை ஈடேற்றிக்கொண்டு வருகையில் நாம் இறந்துவிடுவோமென வைத்துக்கொள்வோம். நாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா? இதற்கான பதிலைச் சொல்லப்போவது யார்? நாமா? நாம்தான் மரணித்துவிட்டோமே..?
நம் இறப்பின் பிற்பாடு நம்மைச் சூழ இருப்பவர்கள்தான் நாம் வாழ்க்கையை வென்றோமா ? அல்லது தோற்றோமா? எனச் சொல்லப்போகிறார்கள். நம் இறப்பின் பின்னர் அவர்களது பாராட்டுக்களால் அல்லது வசைபாடல்களால் நமக்கு என்ன பயன்?

ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலன்கள் பற்றி நாம் வாழும்போதே உணர்ந்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் வாழ்க்கையை வென்றோமா என்ற கேள்விக்கான பதில் பயனளிப்பது நமக்கேயன்றி பிறர்க்கல்ல. எப்படி நமக்கு மற்றவர்கள் வாழ்க்கையை வென்றார்களா இல்லையா என்பதற்கான விடை தேவையாக இல்லையோ அதுபோலவே அவர்களுக்கும் நமது வாழ்க்கை பற்றிய கேள்விக்கான விடை தேவையற்றதாக இருக்கும். (சிலர் நமக்குத் தோல்வி ஏற்படும்வரை,நாம் தவறிழைக்கும் வரை சிரிக்கப் பார்த்துக்கொண்டிருப்பர் என முணுமுணுப்பீர்கள் இக்கணத்தில். உண்மைதான். அது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாமே ! )

ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாட்களுக்குள் தான் தனது வாழ்க்கையை வெற்றிகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாள் எப்பொழுது? எந்தப் பராயத்தில் ?

*பால்யத்தில் ?
*இளமைக்காலத்தில் ?
*நடுத்தர வயதில் ?
*வயோதிபத்தில் ?

நம்மில் அனேகம்பேர் தமது வாழ்க்கையை வெல்வதற்காக அவர்களது சிறுவயதில் ஆரம்பித்த போராட்டம் அவர்களது முதுமை வரை தொடர்ந்து செல்கையில் தாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா, இல்லையா எனத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமிருக்காது. அவர்கள் அறியாமலேயே முதுமை வந்துவிடும். ஒரு கட்டத்தில் வயதாகிவிட்டது எனச் சோர்ந்துவிடுவார்கள். இளமைக் காலத்தை வீணாக்கிவிட்டோமே என வருந்துவார்கள்.

ஆகவே 'வாழ்க்கையை வெற்றி கொள்வது என்றால் என்ன?' என்பதற்கான விடையை உங்களை நீங்களே கேட்டுப்பார்த்து அதற்கான விடையைத் தெரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கையை வென்றெடுக்கும் நாளெது பற்றிய கேள்வி எழாது.

உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்,ஒவ்வொரு பகுதியிலும் நம்மால் செய்யப்பட வேண்டிய அத்தனை செயல்களையும், எதிர்பார்ப்புக்களையும் திட்டமிட்டு நிறைவேற்றுவதுதான் வெற்றியின் முதல்படி. ஆகவேதான் வெற்றியின் ஏனைய படிகள் நமது வாழ்க்கையின் நாட்களையும்,நேரங்களையும் சார்ந்து இருக்கின்றன. எனவே வெற்றி நமக்கான காலங்களில், வருடங்களில், மாதங்களில், வாரங்களில், நாட்களில், மணித்தியாலங்களில், நிமிடங்களில், வினாடிகளில் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே.

இப்பொழுது இப்படிப் பார்ப்போம். நாங்கள் சுவாசித்துக்கொண்டிருக்கும், நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியை, இந்த நிமிடத்தை மிகவும் நிம்மதியான முறையில், பயனுள்ள வழியில் செலவழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நமது ஒவ்வொரு வினாடிகளும் வீணடிக்கப்படாமல், பயனுள்ள வகையில் நாம் அன்றைய தினம் போட்டுவைத்திருக்கும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும். இப்படிப் பயனுள்ள விநாடிகள் கொண்டு உருவாக்கப்படும் நிமிடங்கள், மணித்தியாலங்கள், நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள், காலங்கள் உங்களது வெற்றியை நீங்கள் வாழும்போதே கூறுபவைதானே.

வேறுவகையில் சொல்வதானால் நீங்கள் வாழ்க்கையை வெற்றிகொள்ளும் நாள் இன்று தான். வெற்றியை நோக்கி நகரும் வினாடி இதுதான். இந்தக்கணம் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம். இதனை நீங்கள் வீணாகப் பயனற்ற முறையில் கழிப்பீர்களானால் நீங்கள் தோல்வியை நோக்கி பாதங்களை எடுத்துவைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம். இந்த நிமிடத்தை நீங்கள் விரோதம், கோபம், பொறாமை, வஞ்சகம், சுயநலம் கொண்டு பூரணப்படுத்துவீர்களாயின் வாழ்க்கையில் தோற்றவர்கள் பட்டியலுக்கு நம்மை நாமே விண்ணப்பிப்பவர்கள் ஆகிறோம் அல்லவா?

பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைவது, உயர்ந்த தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வது, நல்லதொரு குடும்ப வாழ்க்கையைக் கொண்டுசெல்வது, வசதியாக, நிம்மதியாக வாழ்வது என அவரவர்க்கு வெவ்வேறான இலட்சியங்கள் இருக்கும். அவற்றை நோக்கிச் செல்லும்போது பலவிதமான தடங்கல்கள், தடைகள் வரத்தான் செய்யும். அவை பொருளாதார ரீதியாகவோ, பிறராலோ, பிறகாரணங்களாலோ இருக்கலாமே தவிர நமது சோம்பேறித்தனத்தால் இருக்கக்கூடாது. வெற்றி மனப்பான்மையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பவர் எவரோ அவரே வாழ்க்கையை வென்றவராகிறார்.

அந்த வகையில் நாம் எந்த வயதில் இருந்தாலும், எத் தொழிலைச் செய்தாலும் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெற்றிமனப்பாங்கோடு கழிப்போமாயின் அதுவே வெற்றிகரமான வாழ்க்கை.

வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்காலத்தின் ஏதோ ஒருநாள் வரும்வரை பார்த்திருக்கவேண்டாம். இன்று செய்ய வேண்டியவற்றை தன்னம்பிக்கையுடனும், முழுமையாகவும், மகிழ்வோடும் செய்யுங்கள். இந்தக் கணத்தை வெற்றியின் நேரமாகக் கொண்டு செயல்படுங்கள். அப்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கையை நீங்கள் வென்றவர் ஆகிறீர்கள்.

இப்பொழுது சொல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

Monday, April 6, 2009

கண்ணீர்ப் பிரவாகம்

ஒரு சமுத்திர உடலின் மேல்
பனிமுகில் போர்வை விழுந்தது
எதன் ஈரத்தை
எது வாங்கிக் கொண்டதென்ற
கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று
எல்லாத் திசைகளிலும்
துளிகளாய்ப் படிந்தது

அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது
ஒரு பெரும் விஷப்பறவை
கூடுகளைக் கிளைகளை
அடைந்திருக்கும் சிறுகுருவிகள்
அச்சத்தில் நடுங்கிடத் தன்
சொண்டூறி வழியும் எச்சிலில்
நகங்களைக் கூர்படுத்துகிறது மாமிசப்பட்சி
உன்னைப் போல

நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்
உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்
எனதுள்ளிருக்கும்
கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன
இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி - 'வடக்குவாசல்' பெப்ரவரி 2009 இதழ்

Sunday, April 5, 2009

ஒரு பூவெழுதும் கவிதை

"மனிதா எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது; உடனடியாக நீர் பாய்ச்சு "

இப்படி தாவரங்கள் தமக்கு நீர் போதவில்லை என எழுத்து வடிவ  செய்தியொன்றின் மூலம் மனிதர்களைக் கோரினால் எப்படியிருக்கும் ?

இந்த கற்பனைக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.

இந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நவீன உணர் கருவியானது தாவரம் போதிய நீரின்றி வாடுவதை துல்லியமாகக் கணக்கிட்டு, அது தொடர்பான சமிக்ஞைகளை தாவரத்தை பராமரிப்பவரின் கையடக்க தொலைபேசிக்கோ அன்றி கணினிக்கோ எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பி வைக்கும்.

இந்த உணர்கருவிகள், தாவரங்களுக்கு தேவைக்கு அதிகமான நீர் வழங்கப்படுவதை தவிர்க்கவும் உதவுகின்றன.

மேற்படி உணர்கருவிகளை பயன்படுத்துவதால் பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத்தை பயனுறுதிப்பாடுள்ள வகையில் முகாமை செய்து, அதனூடாக 50 சதவீதத்துக்கும் அதிகமான நீரைச் சேமிக்க முடியும் என இந்த உணர் கருவியை உருவாக்கிய விஞ்ஞானிகளான கலாநிதி எரான் ராவெக் மற்றும் கலாநிதி அறி நட்லர் ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் 7 வருட கால தீவிர ஆராய்ச்சியின் பின்னரே இந்த உணர் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த உணர்கருவியானது "வோக்கி டோக்கி" உபகரண தொழில்நுட்ப அடிப்படையில் செயற்படுவதாகவும் தாவரத்தின் தண்டுக்குள் செலுத்தப்பட்ட உலோக நுண்கருவிகள் மூலம் இந்த உணர்கருவிகள் தாவரத்திற்குத் தேவையான நீரை மதிப்பிடுவதாகவும் மேற்படி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

250 அமெரிக்க டொலர் செலவில் 5,000 ஓர்கிட் தாவரங்களுக்கு இந்த உணர்கருவிகளை பொருத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

தகவல் உதவி - வீரகேசரி