Showing posts with label ஆபிரிக்கா. Show all posts
Showing posts with label ஆபிரிக்கா. Show all posts

Wednesday, March 30, 2022

தெற்காசியாவின் வறிய நாடாக மாறி வரும் இலங்கை - எம். ரிஷான் ஷெரீப்

        இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக் கொண்டே வருகையில் ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. அதனால் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்குமிடையே உள்ள பாரிய வேறுபாட்டையும் முக்கிய காரணமாகக் குறிப்பிடலாம். இதனால் 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.


      இவ்வளவு சரிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போதிலும், கடந்த மாதம் வரைக்கும் இலங்கை மத்திய வங்கியானது ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை 202 ஆகவே தொடர்ந்து பேணுவதாகவும், எந்தக் காரணத்துக்காகவும் அதை மாற்றப் போவதில்லை என்றும் அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 202 ஆக இருந்த போது கறுப்புச் சந்தையில் ஒரு டாலருக்கு 240 ரூபாய்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்களும் தம்மிடமிருக்கும் டாலர்களை மாற்ற கறுப்புச் சந்தையை நாடத் தொடங்கியதைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியில் டாலரின் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. மத்திய வங்கியானது சந்தை போக்குகளைக் கண்டறிந்து அதற்கேற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அப்போதே அனுமதித்திருந்தால் ரூபாயின் பெறுமதி இந்தளவு வீழ்ச்சியடைந்திருக்காது. இலங்கை மத்திய வங்கிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.


        இன்று ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி முந்நூறைக் கடந்துள்ளது. ஆகவே, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் படுவேகமாக பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வாறே, இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களின் ரூபாய்ப் பெறுமதியும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான அதிகரிப்புகள் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சுமைகள் அனைத்தையும், தொலைநோக்குப் பார்வையற்ற அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகக் குறைபாட்டின் பிரதிபலனையும் பொதுமக்கள்தான் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

        தற்போதைய அரசாங்கம் 2019 இல் ஆட்சிக்கு வந்த போதே பொருளாதார ஸ்திரமின்மைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. அப்போதே அரசாங்கம் தீர்க்கமானதும், சரியானதுமான முடிவுகளை எடுத்திருந்தால் இந்தளவு பாரிய பொருளாதார நெருக்கடியை இப்போது இலங்கை சந்தித்திருக்காது. தற்போது அரசாங்கம் தனது கையிருப்பில் உள்ளதாகக் காண்பிக்கும் டாலர்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்தொகைகளாகவே இருக்கின்றன எனும்போது இதன் பாரதூரம் உங்களுக்கு விளங்கும்.

        தெற்காசியாவில் இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரே நாடு தற்போதைக்கு இலங்கைதான். ஏனைய நாடுகள் இந்தக் கால கட்டத்தில் தமது டாலர் கையிருப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றன. அந்த நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிப்பதால்தான் இந்தளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

        இலங்கை அரசாங்கம் தற்போதும் தொடர்ந்தும் ரூபாய்களை அச்சிட்டு வருகிறது. இதனால் பண வீக்கம் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்துக்குள் மட்டும் அனைத்து உணவுப் பொருட்களினதும் விலை ஆகக் குறைந்தது 25% ஆல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ரூபாய் அச்சிடப்படுவதும் இவ்வாறான விலை அதிகரிப்புக்கு ஒரு காரணம் ஆகும். கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 3000 பில்லியன் ரூபாய்த் தாள்களை அச்சிட்டுள்ளது. இவ்வாறாக பண விநியோகம் அதிகரிக்கும்போது பண வீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த வருடம் ஜூலை மாதத்துக்குள் அரசாங்கம் கொடுத்துத் தீர்க்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் பல உள்ளன. அத்தியாவசியமான பொருட்களை வாங்க இலங்கை, இந்தியாவிடமிருந்து தொடர்ந்து கடன் வாங்கி வருகின்ற போதும், அதைத் தொடர்ந்தும் செய்வது மேலும் பொருளாதாரச் சீர்குலைவுக்கே வழியமைக்கும்.

        இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத் திறனிலுள்ள குறைபாடுகளால்தான் தற்போதைய நெருக்கடி நிலைமை வந்திருக்கிறது என்பதை இப்போதாவது அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமை ஏற்படும் என்று அப்போதே எச்சரித்த சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களின் எச்சரிக்கையை 'அவை மேற்கத்தேய சதி' என்று எளிதாகக் கூறி அப்போது புறக்கணித்தது இலங்கை அரசாங்கம். அன்று அந்த எச்சரிக்கைகளைப் புறந் தள்ளியதால் இன்று ஒவ்வொரு வெளிநாடாகக் கையேந்திப் பெறும் கடன் தொகையில் தமது அன்றாடத் தேவைகளுக்காக எரிபொருட்களையும், மருந்துகளையும், உணவுப் பொருட்களையும் அரசாங்கம் தரும்வரை நாட்டிலுள்ள மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.



        நாடு முழுவதும் மின்சாரத் தடை காரணமாக இருளுக்குள் மூழ்கிப் போயுள்ளது. குடிநீர் விநியோகமும் தடைப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள், மருந்துகள், பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் மக்கள் இரவு பகலாகக் காத்திருக்கிறார்கள். பலர் வரிசையிலேயே நின்று மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்கள். உயிர் பிழைக்க வேண்டி பலரும் இந்தியாவுக்கு படகில் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் நாடு பற்றியெரிந்து கொண்டிருக்கையில் ஜனாதிபதி தொலைக்காட்சியில் தோன்றி இந்த நெருக்கடிக்குக் காரணம் தானோ, தனது அரசாங்கமோ அல்ல என்று உரையாற்றி விட்டு மறு தினமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான விலையையும், நீர், மின்சார, தொலைபேசிக் கட்டணங்களையும், பேரூந்து மற்றும் புகையிரதக் கட்டணங்களையும் அதிகரிக்கிறார். பொதுமக்கள் இந்தளவு கஷ்டப்படும்போது ஜனாதிபதியின் குடும்பமும், அமைச்சர்களும் அரசாங்கத்தின் சகலவிதமான வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

        அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற தன்மையால் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது விரைவில் மிக உக்கிரமான சமூக நெருக்கடியாக மாறுவது உறுதி. இப்போதே பல தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பலரும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளார்கள். செல்வந்தர், ஏழை என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரது வீடுகளிலும் வறுமையும், பட்டினியும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இந்த சமூக நெருக்கடி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். ஆபிரிக்க வறிய நாடுகளில் உணவுக்காக அடித்துக் கொள்வது, திருடுவது, கொள்ளையடிப்பது போன்ற மோதல்களும், குற்றச் செயல்களும் இலங்கையிலும் ஏற்படக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.

        ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதுதான் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும். சர்வதேச நாணய நிதியம் ஆனது அரசாங்கச் செலவுகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கடன் மேலாண்மையையும், நிதி நிர்வாகத்தையும் ஒழுங்காகச் செய்யும். இலங்கை மக்கள் தற்போதைய ஒரே நம்பிக்கையாக அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 28.03.2022

புகைப்படங்கள் - REUTERS 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க







Wednesday, January 10, 2018

'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' - எம்.ரிஷான் ஷெரீப்



அன்பின் நண்பர்களுக்கு,

      இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

      என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

      எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட,  உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், பாதித்தவையுமே என்னால் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கத்தேய ஊடகங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், மனிதாபிமானமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படும் ஆபிரிக்கர்களையே நாம் பெரும்பாலும் கண்டிருக்கிறோம்.

      ஆனால் அவர்கள் உண்மையில் அவ்வாறானவர்கள் அல்ல. நேர்மையும், மனிதாபிமானமும் மிக்க அம் மக்களது நிஜ சொரூபத்தையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன. இந்த உண்மையானது, தமிழ் வாசகர்களிடத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இச் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

      'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' எனும் எனது இந்தப் புதிய தொகுப்பையும், இதற்கு முன்பு வெளிவந்திருக்கும் எனது ஏனைய புத்தகங்களையும் இன்று முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பக அரங்குகள் 475, 476 மற்றும் காலச்சுவடு, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்குகளில் விலைக் கழிவுகளோடு பெற்றுக் கொள்ளலாம்.
            இத் தொகுப்பில் சிறுகதைகளை எழுதியுள்ள பலரும் தற்போது மரணித்து விட்டார்கள். எனினும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் கட்டுப்பட்டிருக்கும் ஆபிரிக்கர்கள், காலகாலமாக வாழும் தமது கலை, இலக்கியப் படைப்புக்கள் மூலம் தமது தேசத்தை மீளப் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
10.01.2018