Friday, December 14, 2007
வங்கியில் வைப்பிலிடப்போகிறீர்களா? கவனம் தேவை.
நீங்கள் கஷ்டப்பட்டுப் பல வருடங்களாய் உழைத்த பணம்.
வீட்டில் வைத்தால் சேமிப்புக் கரையுமென வங்கியிலிடச் செல்கிறீர்கள்.
வங்கியின் வாசலிலேயே பட்டப்பகலில் காவலாளியின் கண்ணெதிரில்,துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
அதுவும் நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பின்...?
இந்த வீடியோவைப் பாருங்கள்.
இது கடந்த நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையின் 2ம் தலைநகரம் எனப்படும் கண்டியின் ஒரு பிரதான தெருவில்,ஜனத்திரள் நிறைந்த ஒரு வங்கியில் நடந்த துணிகரக் கொள்ளைச்சம்பவம்.
கண்முன்னே தான் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம் பறிபோகும் நிலையில் அந்த அபலைப்பெண்ணின் துடிப்பும்,
பலகோடிகளை உள்வாங்கியிருக்கும் வங்கி நியமித்திருக்கும் காவலாளியின் நடவடிக்கையையும் பார்த்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்நிகழ்வை இங்கு பதியும் கணம் வரைக்கும் கொள்ளைக்காரன் கைது செய்யப்படவில்லையெனக் கேள்விப்படுகிறேன்.
Sunday, November 25, 2007
சிவப்புவிளக்குச் சமிக்ஞைகளை நம்பலாமா?
இந்த வீடியோவைப் பாருங்கள்.என்ன நடக்கிறது என உங்களுக்கே புரியும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும் நபர் மேல் எந்தத் தவறும் இல்லை.பச்சை விளக்கு அவர் செல்வதற்கான அனுமதியைக் காட்டுகிறது. எனினும் காரை ஓட்டி வரும் சாரதிக்கு சிவப்பு விளக்கு ஒளிர்ந்து அவர் தொடர்ந்து செல்வதற்கான தடையைக் காட்டுகிறது.இருப்பினும் கார் சாரதியின் அலட்சியத்தாலோ,கவனக் குறைபாட்டினாலோ இவ் விபத்து நடந்துள்ளது. இருந்தபோதிலும் மோட்டார் சைக்கிள் நபரோ,கார் சாரதியோ சில விநாடிகள் பொறுத்திருந்தாலும் ஒரு விபத்தைத் தவிர்த்திருக்கலாமல்லவா?இனிமேல் வீதி விளக்குச் சமிக்ஞைகளைத் தாண்டிச்செல்ல நேரிடுகையில் மிகக் கவனமாக இருங்கள்.
Monday, November 5, 2007
வறுமையில் வாடும் சுல்தானும்,செல்வத்தில் திளைக்கும் வறியதேசத்து மக்களும்...!
உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது.
பெரும் பணக்காரர் என்றால் பெரிய மாளிகைக்குச் சொந்தக்காரராக இருப்பார்.ஆடம்பர வாகனங்கள் வைத்திருப்பார்.விலை உயர்ந்த பொருட்களைக் குவித்து வைத்திருப்பார் என்பது தெரியும்.ஆனால் அதையும் தாண்டி படு ஆடம்பரக்காரராகத் திகழ்கிறார் புருனை சுல்தான் ஹாஜி ஹஸன் அல் போல்கியா.
61 வயதாகும் சுல்தானுக்கும்,அவரது தம்பியான இளவரசர் ஜெfப்ரிக்கும் இடையே சொத்துத்தகராறு ஏற்பட்டு அது நீதிமன்றத்துக்குப் போக,வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் தற்போதைய உலக பணக்காரர்களும் யோசிக்க முடியாதது என்றால் மிகையாகாது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் "பாராட்டி" மனம் குளிர நனைத்து அனுப்புவது சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பணக்காரரின் செலவு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு 5- 6 மாளிகைகள், 2- 3 தோட்டங்கள், ஒரு அதி ஆடம்பர கார் ஓரிரு கப்பல் அல்லது விமானம் இவ்வளவே...
ஆனால் புருனே சுல்தான் ஹாஜி ஹஸன் அல் போல்கியா இதனையெல்லாம் விஞ்சிவிட்டார். செலவு செய்வதில் பணக்காரர்களையே பொறாமைப்பட வைத்துவிட்டார் என்றால் மிகையாகாது.
*சுல்தான் தனது பேட்மின்டன் பயிற்சியாளருக்கு 1.26 மில்லியன் பவுண்டுகளை சம்பளமாக கொடுத்துள்ளார். தனது அக்குபங்க்சர் மற்றும் உடல் மசாஜிற்கு 1.25 மில்லியன் பவுண்டுகள்.
அரிய பறவைகளை விலைக்கு வாங்குவதை பொழுதுபோக்காக கொண்ட சுல்தான் அதனை பாதுகாத்து பராமரித்து வரும் காவலர்களுக்கு மட்டும் 50,000 பவுண்டுகள் செலவு செய்துள்ளார்.
அவருடைய பொது உறவுகளை கவனித்து வரும் குழுவிற்கு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள், வீட்டு நிர்வாகத்தை கவனித்து வரும் பணியாளர்கள் இருவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள்.
நாட்டின் கஜானாவிலிருந்து கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் சுல்தானின் ஆடம்பர செலவுகளுக்காக அவரது சொந்த கணக்கில் சென்றுள்ள அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை மட்டும் 5000. 115 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு தனி போயிங் விமானமும் உள்ளதாம்.
1788 ஆடம்பர அறைகள் கொண்ட மிகப்பெரிய மாளிகை தவிர, இவரது குடும்பத்தினர்கள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் பாரீஸ் நகரங்களில் பல மாளிகளைகளை வைத்திருக்கின்றனராம்.
புருனேயை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த இவருக்கும், இவரது சகோதரருக்குமான குடும்ப சொத்து வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்களுக்கான தொகை மட்டும் 200 மில்லியன் பவுண்டுகளாம்.
1984ஆம் ஆண்டு புருனே விடுதலை அடைவதற்கு முன் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இன்னமும் லண்டனில் உள்ள பிரவி கவுன்சில்தான் அதற்கு உச்ச நீதிமன்றம்.
புருனே சுல்தானின் சொத்து மற்றும் செலவு விவரம்:
1. 1788 அறையுடன் மாளிகை, 6- நட்சத்திர விடுதி, ஒரு கேளிக்கை பூங்கா, 5000 கார்கள் மற்றும் விமானங்களை நிறுத்த மிகப்பெரிய ஆடம்பரக் கொட்டகை.
2. உடம்பைத் தேய்த்து விடும் மசாஜ் அழகிகள் மற்றும் அக்குபங்க்ச்சர் மருத்துவர்களுக்காக 1.25 மில்லியன் பவுண்டுகள்.
3. வீட்டு பரமரிப்பு பணியாளர்களுக்கு 13.9 மில்லியன் பவுண்டுகள்.
4. 1.26 மில்லியன் பவுண்டுகள் பேட்மின்டன் பயிற்சிக்கு.
5. பி.ஆர் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் 5.86 மில்லியன் பவுண்டுகள்.
6. தனது அரிய பறவைகளை பராமரித்து பாதுகாக்கும் காவலருக்கு 48,859 பவுண்டுகள்.
LUXURY CARS
531 Mercedes
367 Ferraris
362 Bentleys
185 BMWs
177 Jaguars
160 Porsches
130 Rolls-Royces
20 Lamborghinis OTHER TRANSPORT
Two Boeings, including a 747-400 jumbo jet, one Airbus, six smaller planes, two helicopters
சரி...சில விநாடிகள் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள்.இனி சற்றுச் சிந்திப்போமா?
ஒரு சுகபோக நாடு இவ்வளவு செல்வத்தில் திளைக்கும்போது உலகில் எத்தனையோ வறியதேசத்து மக்கள் ஒவ்வொரு கணமும் பட்டினியாலும்,போஷாக்குக் குறைவாலும்,சமூக விழிப்புணர்வு இன்மையினாலும்,வன்முறைகளாலும் இறந்து கொண்டிருப்பதை இவர் கேள்விப்படுவதேயில்லையா?
இவர் நினைத்தால் இருக்கும் பணத்தை வைத்து அனைத்து வறிய மக்களுக்கும் உதவமுடியுமே?
அண்மையில் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இந்தியரான வைத்தியக் கலாநிதி திரு.முரளி கிருஷ்ணனிடம் உரையாடிக்கொண்டிருந்த போது உலகின் பல வறியநாடுகளுக்கு கடமை நிமித்தம் சென்றபோது நிறையதேசங்களில் மக்கள் ஒருவேளை உணவோடும்,ஒரே ஒரு ஆடையுடனும் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலும்,நோய்களின் மத்தியிலும் வாழ்ந்து வருவதைக் கண்ணுற்றதாகக் கூறினார்.
சுல்தான் தனது பொழுதுபோக்குக்காக கூண்டிலடைத்து வளர்த்துவரும் பறவைகளுக்கும் அவற்றைப் பராமரிப்பவர்களுக்கும் ஆண்டொன்றுக்கு செலவளிக்கும் பணத்தை மட்டுமாவது இவ்வாறான வறியமக்களுக்குப் பகிர்ந்தளிப்பின் அவர்களும் பசி நீங்கித் துயரற்று வாழ்வார்களே...!
யாராவது இதனை சுல்தானுக்கு எடுத்துச் சொல்(வீர்)வார்களா?
Thursday, November 1, 2007
உங்கள் கவனத்திற்கு...!
அன்பின் நண்பருக்கு,
இணையத்தளம் பரிச்சயமானதால்தானே எனது வலைத்தளம் வந்திருக்கிறீர்கள்.நன்றிகள்.இணையத்தளம் பற்றி உங்களுக்கு எந்தளவிற்குத் தெரியும்?அது ஒரு பெருஞ்சமுத்திரம் போன்றது.முழுமையாக நீந்திக்கடந்தவர் யாருமில்லை என்கிறீர்களா?சரிதான்.அதே போல அதிலிருக்கும் ஆபத்துக்களை அறீவீர்களா?இங்கு பொருளாதார ரீதியான மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கான் ஆபத்துக்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்களில் பெரும்பாலானோருக்கு மின்னஞ்சல் முகவரிகள் இருக்கக்கூடும்.அவற்றுக்கு அன்றாடம் பலவிதமான மின்னஞ்சல்கள் வரும். நீங்கள் பயன்படுத்துவது ஜிமெயில்,யாஹூ,ஹொட்மெயில் எதுவானாலும் தெரியாதவர்கள்,பரிச்சயமில்லாத பெயருடையவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைத் திறந்து பார்ப்பது பெரும் ஆபத்து.அதிலும் குறிப்பாக அவர்கள் இணைத்திருக்கும் இணைப்புகளை பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்யவேண்டாம்.தயங்காமல் அழித்து விடுங்கள்.
இணைப்புகளைத் திறக்க வைப்பதற்காக நண்பரிடமிருந்து வாழ்த்து அட்டை,அயல் வீட்டாரிடமிருந்து அழைப்பிதழ் என விதம் விதமாக வரக்கூடும்.
சிக்கி விடாதீர்கள்.இவற்றை நீங்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்துவிடின் எது பதிவிறக்கம் செய்யப் படுகிறதோ அதனுடனே கணணிகளைத்தாக்குவதற்கான வைரஸும் உங்கள் கணணியில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.அவை உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும்,உங்கள் முக்கியமான கோப்புக்களையும் அனுப்பியவருக்கு பெறச்செய்யும்.உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் முக்கியமான தரவுகள் அந்த அந்நிய நபருக்குப் போய்விடும்.
உங்கள் பாஸ்வேர்டைத் தெரிந்து கொள்வதால் அவர்களுக்கு என்ன லாபம் என எண்ணுகிறீர்களா? நிறைய இருக்கிறது.
நீங்கள் ஒரு பெரும் புள்ளியாக இருக்கும் பட்சத்தில் அது இன்னும் பெரிய ஆபத்து.
உங்கள் கோப்புக்கள்,தரவுகளின் மூலம் உங்கள் இரகசியங்களை வெளிக்கொணரும் வாய்ப்போடு,
அவை மிகவும் அத்தியாவசியமானவையாக இருக்கும் பட்சத்தில் உங்களைத் தொடர்பு கொண்டு கோப்புக்களையும்,தரவுகளையும் திரும்பத் தர வேண்டும் எனில் இவ்வளவு பணம் வேண்டும் என உங்களை அச்சுறுத்தும் வாய்ப்புகளும் இருக்கிறது.
உங்கள் கிரெடிட் கார்ட் நம்பர்,மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்கள் என முக்கியமானவை அனைத்தும் திருடு போக வாய்ப்புகள் இருக்கிறது.இவற்றை அறிந்துகொள்வது மட்டுமே அந்தக் கில்லாடிகளுக்குப் போதுமானது.இதன் மூலம் உங்கள் எதிர்காலத்துடன் விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு இலகுவாகிறது.
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அடிக்கடி கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மாற்றுவது தான்.
நிறையப் பேர் கடவுச்சொல் தமக்கே மறந்து விடக்கூடும் என்ற ஐயத்தில் 123456,பிறந்தநாள்,தமது பெயர் என இடுகின்றனர்.இது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடக்கூடும்.அத்துடன் உங்களுக்கான கடவுச்சொல் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.நீங்கள் பொதுக்கணணியைப் பயன்படுத்துபவராக இருப்பின் எவ்விதத்திலும் உங்கள் கடவுச்சொல்லை அவற்றிடம் நினைவில் வைத்திருக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்.
எனவே இதனைப் படித்த பிற்பாடு உடனே உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள்.
அது உங்களுக்குப் பிடித்த ஏதேனுமொரு பெயராகவோ,மொழியாகவோ ஏன் உங்கள் பால்யகால சிநேகிதியின் செல்லப்பெயராகவோ,உங்களுக்குப்பிடித்த பறவையின் பெயராகவோ இருக்கட்டும்.அத்தோடு !@#$%^&*()_+\123456789 இதில் சிலதாவது கலந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வண்டியைச் செலுத்தும் சாட்டை உங்களிடமே இருக்கட்டும்.தவறவிட்டு பின் கைசேதப்பட வேண்டாம்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்.
Monday, October 1, 2007
கொஞ்சம் சிந்திப்போமா சகோதரிகளே...?
சமீபத்தில் நண்பரொருவர் புதிதாக ஆரம்பித்த (Fancy Store)கடைக்குச் சென்றிருந்தேன்.நண்பர் சில சாமான்களை அடுக்கிக் கொண்டிருக்க,நானும் உதவலாமே என்ற எண்ணத்தில் சாமான்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.அவை முகப்பூச்சு அழகுக் க்றீம்கள்.
சில க்றீம்கள் அடங்கியிருக்கும் பெட்டிகளின் பின்பக்கத்தைப் பார்க்க,சின்ன எழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி கண்ணில் பட்டது.
"Not tested on animals" (விலங்குகளின் மேல் இச்சாதனம் உபயோகிக்கப் படவில்லை).
வேறு சில நிறுவனங்களின் க்றீமில் அவ்வரி காணப்படவில்லை.அன்று முழுவதும் அவ்வரியே என் மனதில் வந்து போக,அது என்ன "Not tested on animals" என ஆராய்ச்சி செய்ய களத்தில் குதித்தேன்.இதற்காக எனக்கு இணையத்தளங்கள் பெரிதும் உதவின.
எவ்வளவு கொடூரமான உண்மைகள்...?
மனிதர்களது முகப்பூச்சுக்காக என்னென்ன கொடுமைகளை ஒன்றும் அறியா விலங்குகள் அனுபவிக்க
நேரிடுகின்றன?அந்த வேதனைகளை நீங்களும் சற்றுப் படித்துப் பாருங்கள்.
விலங்குகளின் மீது திணிக்கப்படும் அமிலக் கொடுமைகள் :
மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் பலவித அழகுசாதனங்களிலும் அமிலப் பொருட்கள் கலந்துள்ளன என்று தெரியும்.ஆனால் ஒவ்வொரு அழகுப்பொருளிலும் 50,000 இலிருந்து 60,000 வரை அமிலக்கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன தெரியுமா...?
ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த அபாயகரமான அமிலக்கூட்டுக் கலவைகள் ஆயிரமாயிரம் முயல்கள்,குரங்குகள்,எலிகள்,அணில்கள்,பன்றிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் பரிசோதிக்கப்படுகின்றன.பரிசோதனைகளின் போது அவற்றின் கண்கள் குருடாக்கப் படுகின்றன.உறுப்புக்களை எரித்து,அரித்து விடும் அமிலங்கள் வாய்க்குள் ஊற்றப்படுகின்றன.
கொடூரமான சில பரிசோதனைகள் :
அழகு சாதனங்களின் முடிசூடா மன்னியான உதட்டுச் சாயம் எல்.டி 50 முறையில் அதாவது Lethal dose என்ற முறையில் 1927ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த லிதல்டோஸ் முறையில்,ஆசனிக் என்ற தீங்கு விளைவிக்கும் அமிலத்தை முயல் போன்ற பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் விலங்குகளின் வாயில் ஒரு குழாயை நுழைத்து அதில் ஊற்றி பரிசோதனை செய்யப்படுகின்றது.இதனால்,அவ்விலங்குகளின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து விடுகின்றன.அல்லது வாழ்நாள் முழுவதும் பக்கவாத நோய் தாக்கி அவதிப்பட்டு இறந்து விடுகின்றன.
நாம் தலைக்குத் தேய்த்து தலைமுடியை பளபளவென்று வைத்துக்கொள்ள உதவும் ஷாம்புக்கள்,கண்களை அழகுபடுத்தும் மஸ்கராக்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?இந்த வகை பரிசோதனைகளை குருட்டுப்பரிசோதனைகள் என்கிறார்கள்.
இதில் கருணை,இரக்கம்,அன்பு சிறிதளவேனும் இன்றி விலங்குகளின் கண் இமைகளை கத்தரித்து எடுத்து விடுகிறார்கள்.பின் கண்களைப் பெரிதாக்குவதற்காக,அவைகள் கண்களை மூடாமல் இருக்க அவற்றின் கண்மேல் பகுதியை கிளிப் போட்டு நெற்றிப் பகுதியோடு இணைத்து விடுகிறார்கள்.தலையைத் திருப்பாமல் இருக்க சுவரோடு ஒரு உலோக பெல்ட் போட்டு விடுகிறார்கள்.
அதன் பின் ஆரம்பிக்கும் கொடுமைகள்.விதவிதமான அமிலக்கலவைகள் கண்களில் ஊற்றும் போது கதறித் துடிக்கும் இம் மிருகங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் இரத்தத்தை பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அழகுசாதனங்களில் அவற்றை உபயோகப்படுத்துவதால் மனிதர்களுக்குத் தீங்கு விளையுமா,விளையாதா எனக்கண்டுபிடிக்கப் படுகின்றன.ஆனால் அவ்விலங்குகளோ மருத்துவ உதவி ஏதுமின்றி,இரத்தம் கக்கி மடிகின்றன.
இதற்கான தீர்வு என்ன ?
PETA (People for Ethnic Treatment of Animals) போன்ற விலங்குகளின் பாதுகாவலர்களின் எதிர்ப்புக்குரலால் சிந்திக்கத் தொடங்கியவர்களின் சட்டம் ஒன்று அமுல்படுத்தப் பட்டிருக்கின்றது.அதாவது எல்லா அழகு சாதனங்களிலும் ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்.
"இச்சாதனம் விலங்குகளின் மேல் பரிசோதிக்கப்பட்டதல்ல"
எனவே சகோதரிகளே !அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மேக்-அப் பொருட்கள் வாங்கும் முன் அந்தப் பொருளில் "விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவும்.இல்லையென்றால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள் வாங்கவும்.இதனால் அவற்றை உபயோகிக்கும் போது பரிதாபமாக வலியினால் கதறும் விலங்குகளின் குரல் உங்களை உலுக்காதல்லவா..?!
Tuesday, September 18, 2007
பயணிகள் கவனத்திற்கு !
நாமெல்லோரும் பயணிகளே.ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு விதத்தில் நமது பயணத்தை நாம் மேற்கொண்டே இருக்கின்றோம்.
கார், வேன்,மோட்டார் பைக், சைக்கிள் போன்ற சொந்த வாகனங்களிலாகட்டும், பஸ்,இரயில்,விமானம், கப்பல் போன்ற பொது வாகனங்களிலாகட்டும்,பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.ஒவ்வொரு மனிதனதும் இறுதிப்பயணமானது கல்லறையில் முடியும் வரை அவனது பயணங்கள் முடிவதேயில்லை.
நம்மில் அநேகமானோர் பஸ், இரயில் போன்ற பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.இடையிடையே பஸ்,இரயில் வண்டிகளில் வெடித்த வெடிகுண்டுகளால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறி போன செய்திகளையும்,அங்கவீனமான,அநாதையான உயிர்களின் கதைகளையும் கேட்டுக் கவலைப்படுகிறோம்.உலகெங்கும் அன்றாடம் நடக்கும் இச் சங்கதிகள்,எமது நாட்டிலும் எந்த இடத்திலும்,எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.இது போன்ற விபத்துகளிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாமனைவரும் இருக்கிறோம்.
எனவே,இவ்வாறான அனர்த்தங்களை எம்மால் முடிந்தளவு எப்படித் தடுக்கலாம் எனப் பார்ப்போமா?
* பஸ் நிறுத்துமிடத்திலோ,இரயில் நிறுத்துமிடத்திலோ ஏறுபவர்கள் முதலில் தமக்கான இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டுமல்லாது, அவ் இருக்கைக்குக் கீழே அல்லது மேலே ஏதாவது தமதல்லாத அந்நியப் பொருட்கள் தென்படுகின்றதா எனக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
* அப்படி ஏதாவது சந்தேகப்படும் விதமாக தென்பட்டால் உடனடியாக சாரதி,கண்டக்டருக்கு தெரிவிப்பதுடன்,மற்றவர்கள் அதனைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நீங்கள் இருப்பது இரயில் வண்டியெனில் உடனடியாக அந்த இரயில் நிலையப் பொறுப்பதிகாரியிடமோ,அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகளிடமோ தெரியப்படுத்தலாம்.
* அல்லது உடனடியாக அவசரகாலத் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிப்பதன் மூலமும் பாரிய விபத்துக்களையும் உயிர் அனர்த்தங்களையும் தவிர்க்கலாம்.
வாகனம் சென்று கொண்டிருக்கும் பொழுது நடுவழியில் ஏறுபவர்கள் கூட்டத்தில் இதைக் கவனிக்க இடம் இருக்காது.அலுவலக நேரங்களில் கீழே குனியக்கூட இடம் இல்லை.
எனவே, முதலில் ஏறுபவர்களும்,இறுதியாக இறங்குபவர்களும் இதற்காக ஒரு நிமிடம் செலவழித்துக் கவனித்தால் பெரிய அனர்த்தங்களை இல்லாமல் செய்யலாம்.
அத்துடன் கூட்டம் இல்லாத நேரத்திலும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் இருபத்து நான்கு மணி நேரமும் செல்லும் ஒவ்வொரு பஸ்ஸையும் , அனைத்து இரயில்களையும் காவல்துறையினரால் மட்டுமே கவனிக்க இயலாது என்பதையும்,நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.
Monday, September 10, 2007
சுயநலம் வேண்டாமே...!
இருபத்தோராம் நூற்றாண்டில் தற்பொழுது நாமெல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கால கட்டத்தில் நாம் எத்தனையோ முன்னேறியிருக்கிறோம். என்றாலும், சில விஷயங்களில் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.
சுற்றுப்புறச் சூழல்,சுத்தம் பற்றி இப்போதெல்லாம் நிறைய பேசப்படுகிறது.ஒவ்வொருவரும் தங்கள் சுற்றுப்புற சூழலை நன்கு பராமரித்து வந்தாலே போதும்,நம் நாடு முழுவதும் நலம் பெரும் என்கிறார்கள்.
ஆனால்,சுற்றுப்புறத்தில் இன்னும் சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதில்...
* ஒரு நல்ல குடிமகனாக...
* ஒரு சுயநலமற்ற நல்ல நண்பனாக...
* ஒரு நேசமுள்ள அயலவராக...
* ஒரு ஆதரவான உறவினராக...
* ஒரு பாசமுள்ள குடும்பத்தினராக...
இருப்பதும் அடங்கும்.
நாமெல்லோரும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் உழல்வதால் பலவித அனுபவங்களையும்,கடமைகளையும்,நம்மைச்சுற்றி வெள்ளமாய்ப் பெருகும் அன்பையும் புறக்கணித்துவிட்டு மனதளவில் இன்னும் ஏழைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சுயநலமற்ற,உண்மையான நண்பராக இல்லாத நாம், நம் குடும்பத்தினருக்காக மட்டும் பாடுபட்டு விட்டு,எத்தனையோ அருமையான மகிழ்ச்சித் தருணங்களை கோட்டை விடுகிறோம்.
நம்மால் ஒன்றாகக் கூடி நம் சுற்றுப்புறத்தை தோழமை,நட்பு,பாசம், கஸ்டத்திற்கு உதவுதல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களினால் எத்தனை அற்புதமான சூழலாக மாற்ற முடியும்? ஒவ்வொரு குடியிருப்பும் பாசம்,அன்பு மற்றும் கவனிப்பினால் பிணைக்கப்பட்டால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ளவர்கள்,ஒன்றாக வேலை செய்பவர்கள்,ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரே குடும்பமாக இயங்கினால் பல பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடலாம். திருமண வைபவங்கள்,விசேஷ தினங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும்.குழந்தைகளும் பாதுகாப்பு,பரந்த குணங்களோடு வளர்வார்கள்.இதற்குத் தேவை நம் கண்களை மறைக்கும் சுயநலம் என்னும் முகத்திரையைக் கிழித்தெறிவதுதான்.
அன்பு கொடுக்கக்கொடுக்க அட்சயபாத்திரமெனப் பெருகும்.அன்பைப் பெறுபவர்களும்,அன்பைப் பொழிகிறவர்களும் சந்தோஷத்தில் திளைப்பது நிச்சயம்.
Sunday, September 9, 2007
தண்ணீரும் மென்பானங்களும்...!
மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. உலகில் பாதிப்பேருக்கு நிரந்தரமாக தண்ணீர்ச் சத்து குறைந்து விடுகிறது. அந்த நிலையில் 3% போல சமிபாட்டுச்சக்தியும் பாதிக்கப் படுகிறது.ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நிறைய நீர் குடித்து வந்தால் முதுகுவலி,மூட்டுவலி இவைகள் நன்றாகக் குறையும்.
நமது உடலில் உள்ள தண்ணீர் அளவு 2% குறைந்தாலும் ஞாபக சக்தி குறைந்துவிடும். கணக்குப் போட,கணனி பார்த்து வேலை செய்யத் தளர்ச்சியாகி விடுகிறது. 5 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் கொலோன் புற்று நோய் 45% குறைகிறது. மார்பகப்புற்று நோய் 79% வீதமும் , சிறுநீரகப் புற்று நோய் 50% வீதமும் குறைக்கிறது என நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இனிப்பான பிரபலமான மென்பானங்கள் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றால் தீமைகள் நிறைய உண்டு. கீழ்க்காணும் ஆராய்ச்சிகளை வீட்டினிலேயே செய்து பார்க்கலாம்.
1) வட அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் ஏற்படும் கார் விபத்துக்களில் இரத்தக் கறையைப் போக்க போலீஸ்காரர்கள் 2 கலன் கோக் அவர்களுடைய காரில் வைத்துக்கொண்டு செல்கின்றனர்.
2) ஒரு எலும்புத்துண்டை கொக்கோகோலாவில் போட்டு வைத்தால் கோக்கிலுள்ள ஸிட்ரிக் அமிலத்தினால் அது கரைந்து விடும்.
3) மலசல கூடத்திலுள்ள கறைகளையும் கோக் போக்கி விடுவதோடு,பளிச்சென்று ஆக்கிவிடும். துருப் பிடித்த கறைகளையும் போக்கிவிடும்.
4) கோக் மற்றும் மற்றைய குளிர்பானங்கள் பொஸ்பொறிக் அமிலத்தில் தயாரிக்கப்படுவதால் அதிலுள்ள அமிலம் ஒரு ஆணியைக்கூட நான்கு நாட்களில் கரைத்து விடுமாம்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது அமிலங்கள் கலக்கப்பட்டுள்ள இனிப்பான மென்பானங்களை நிறைய அருந்தினால்,நமக்கு உடல் நலம் கெட்டு நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே உங்களுக்குத் தேவை ஒரு கிளாஸ் தண்ணீரா அல்லது இவ்வகையான மென்பானங்களா?
நீங்களே முடிவிற்கு வாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)