Sunday, June 26, 2011

திண்ணைப் பேச்சு - நன்றி ரிஷான் ஷெரீஃப்

நன்றிக் குறிப்பு

# தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரும், தேர்ந்த விமர்சகரும், தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையான திண்ணை இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான  திரு.கோபால் ராஜாராம் அவர்களால் எழுதப்பட்ட, எனது மொழிபெயர்ப்புக்கள் குறித்த விமர்சனக் கட்டுரையொன்றை, இவ் வார 'திண்ணை' இதழ் பிரசுரித்திருக்கிறது. இக் கட்டுரையானது, மொழிபெயர்ப்பு உலகில் தொடர்ந்தும் இயங்க என்னைப் பெரிதும் ஊக்குவிக்கின்றது. 

அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அக் கட்டுரையைக் கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
__________________________________________________________________

திண்ணைப் பேச்சு - நன்றி ரிஷான் ஷெரீஃப்

                        சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது, ”தற்கொலை” என்ற கணிப்பு அன்று வெகு தொலைவில் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல உருவாகிவரும் சிதைவில் உண்மையின் வெப்பமும், மக்களை முன்னிறுத்தாத நெகிழ்ச்சியற்ற அரசுச் செயல்பாடுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காந்தியும், மண்டேலாவும் சரி எப்படிப் பட்ட தீர்க்கதரிசிகள் என்பது ஒவ்வொரு விடுதலை இயக்கத்தின் போக்கையும் பார்க்கையில் உறுதிபடுகிறது.

                       சிங்கள அறிவுஜீவிகள் தொடர்ந்து தமிழ் போராட்டங்கள் பற்றியும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருந்த சூழலில் அது அவர்களுடைய உடனடி சமூகத்தில் என்ன பிரசினைகளை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிந்து கொள்வது கடினமில்லை. இருந்தும் கூட சிங்கள அறிவுஜீவிகள் பலரின்  செயல்பாடு தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசின் கொடும்போக்கிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. அவற்றை வெளியிடுவதன் மூலம் சிங்களச் சமூகம் அனைத்தையும் “எதிரி”யாகக் கட்டமைக்க முடியாமல் போகலாம் என்றோ என்னவோ அந்தக் குரல்கள் தமிழ் பத்திரிகைகளில் வெளியாவதில்லை.

                       ஆனால் இன்று நிலைமை வேறு. சிங்கள அரசு போர்க்காலத்தில் புரிந்த அத்துமீறல்களுக்கு, செர்பியாவின் மிலோசெவிச் போன்று சிங்கள அரசின் குற்றவாளிகள் தண்டனை பெற வெண்டுமென்றால் இது வெறும் தமிழர்களின் குரலாகவே நின்று விடக்கூடாது. ஸ்ரீலங்காவின் அனைத்து தரப்பினரின் குரலாகவும் அது ஒலிக்க வேண்டும். அந்தக் குரலை உலகிற்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களிடத்தும் கொண்டு செல்ல வேண்டும்.
திண்ணை தளத்தில் சமீப காலமாக தொடர்ந்து பங்களிப்புச் செய்து வரும் ரிஷான் ஷெரீஃபுக்கு விசேஷமான நன்றிகள். உதுல் பிரேமரத்ன, அஸங்க சாயக்கார, ப்ரியந்த லியனகே, பியன்காரக பந்துல ஜெயவீர, சுனந்த தேசப்ரிய போன்ற ஆகச் சிறந்த சிங்கள அறிவிஜீவிகளின் படைப்புகளை, கவிதைகளை, உரிமைக் குரல்களை தமிழ் மக்கள் முன்னால் வைப்பது என்பது இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்று. ஸ்ரீலங்காவின் நம்பகத் தன்மை உலக நாடுகளின் முன்பு மீண்டும் நிறுவப் படவேண்டுமென்றால், போர்க்குற்றவாளிகள் உலகப் பொது மேடையில் தண்டனை பெற்றாக வேண்டும். தமிழர்களின் இன்றைய அவலனிலை, வெறுமே தமிழர்களின் அவல நிலை அன்று, ஸ்ரீலங்காவின் குடிமக்களின் அவல நிலை என்ற உணர்வு தொடர்ந்து முன்னிறுத்தப் படவேண்டும்.

                      "தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே." என்ற சுனந்த தேசப்ரியவின் குரல் அனைத்து சிங்கள மக்களின் குரலாகவும் மாறவேண்டும் என்றால் அது தமிழ் மக்களிடம் இணக்கக் குரலாக, ஒருங்கிணைவுக் குரலாக கொண்டு செல்லப் படவேண்டும். அந்த முயற்சியின் மிக முக்கியமான பங்களிப்பு ரிஷான் ஷெரிபுடையது. மீண்டும் தனிப்பட்ட முறையிலும், திண்ணை வாசகர்கள் சார்பாகவும் அவருக்கு நம் நன்றிகள்.

- கோபால் ராஜாராம்
திண்ணை இதழ் 26.06.2011

Thursday, June 23, 2011

என்னைக் கைது செய்யப் போகிறார்கள்


    தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்?

    என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து குப்பைக் கூடையாய்ப் பயன்படுத்தலாம். அல்லது உள்ளே மண் நிறைத்து செடிகள் நடலாம். விசைப் பலகையைக் கவிழ்த்தால் சமையலறையில் பாத்திரங்களை வைக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன்படுத்தலாம். போனால் போகிறதென்று மௌஸை மட்டும் சிறு குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம். இன்னும் கணினிகளை வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஏதாவதொரு முடிவை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். நாளை உங்களைக் கைது செய்த பிறகு அவை நிச்சயம் பயன்படும்.

    இவ்வளவு காலமும் கணினியில் தட்டச்சு செய்து, அதனை ஏ4 தாளொன்றில் பிரதி எடுத்துத் தர, ஐம்பது ரூபாய்களை வாங்கிய கடைக்காரர்கள் இனிமேல் இருநூற்றைம்பது ரூபாய்களுக்கும் மேலே அறவிடப் போகிறார்கள். அதுபோல, ஒரு குறுந்தகடைப் பிரதி எடுத்துத் தருவதற்கு ஐநூறு ரூபாய்களுக்கும் மேலே. அது ஒரு பக்கம் இருக்க, கணினியறிவின் ஆரம்பக் கல்வியை (மௌஸைக் கையாள்வது எப்படி எனக் கற்க) மட்டும், ஒரு மாணவருக்கு ஒரு நாள் கட்டணம் ஐயாயிரம் ரூபாய்களுக்கும் மேலே.

    இலங்கையினுள் கணினிகளில் மிக அதிகளவில் பாவிக்கப்படுவது விண்டோஸ் மென்பொருள்தான். இம் மென்பொருளை, கணினி மென்பொருட்களை விற்பதற்காகவே இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் மென்பொருள் விற்பனை நிலையங்களில் மாத்திரமே இனி வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 மென்பொருளானது இலங்கையினுள் விற்கப்படும் விலை 226 அமெரிக்க டொலர்கள். அதாவது கிட்டத்தட்ட 24758/= இலங்கை ரூபாய்கள். அதன் உண்மையான விலை இது இல்லை. இதற்கு இன்னும் 12% வெட் வரியையும் சேர்க்க வேண்டும். இவ் வரிகளையெல்லாம் சேர்த்த பிற்பாடு விண்டோஸ் மென்பொருளின் உண்மையான விலை கிட்டத்தட்ட 28000/= இலங்கை ரூபாய்கள். இலங்கையில் புகைப்படங்களை மெருகேற்றவென அதிகம் பயன்படுத்தப்படும் அடோப் போட்டோஷொப் உள்ளடங்கிய அடோப் க்ரியேட்டிவ் சூட் மென்பொருளின் விலையானது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் இலங்கை ரூபாய்கள். இலங்கையில் பரந்தளவில் பாவிக்கப்படும் இன்னுமொரு மென்பொருளான ஒடோகேட்டின் விலை 3995 அமெரிக்க டொலர்கள். இலங்கை ரூபாய்களில் சொல்வதாயின் கிட்டத்தட்ட நான்கு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்கள்.

    என்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று தலைசுற்றுகிறதா உங்களுக்கு? விடயத்துக்கு வருகிறேன். இலங்கை அரசாங்கமானது, ஒரு சட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சட்டவிரோத மென்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகப் புலமைச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பாவனையிலிருக்கும் கணினிகளில், மென்பொருட்களின் சட்ட ரீதியான பிரதிகளைப் பயன்படுத்தாமல் எவரேனும் போலிப் பிரதிகளைப் பயன்படுத்தினால், அவரைக் கைது செய்து ஐந்து லட்ச ரூபாய்களைத் தண்டப்பணமாக அறவிடவோ அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்குள்ளாக்கவோ அரசு திட்டமிட்டிருக்கிறது.

    இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கூட ஒரு கணினியை வாங்கிவிட முடியுமாக இருப்பதால் அனேகமான மத்திய தர வீடுகளில் கூட ஒரு கணினி இருக்கிறது. ஒரு பாடசாலையில் சொற்ப கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா மாணவர்களுக்கும், அதன் பிரயோகக் கல்வியை பூரணமாகக் கொடுப்பது சாத்தியமற்றது. எனவே கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், எப் பாடுபட்டாவது தம் பிள்ளைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். கணினிக்குத் தேவையான புதிய புதிய மென்பொருள்களையும் அவர்களால் குறைந்த செலவில் இலகுவாக வாங்க முடிந்ததால், இன்று இலங்கையில் பாடசாலை செல்லும் ஒரு மாணவருக்குக் கூட அனேக மென்பொருட்களை வீட்டிலிருந்தே இலகுவாகக் கற்றுக் கொள்ளவும் கையாளவும் முடிந்திருக்கிறது. மென்பொருட்களை எல்லாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இது நாடு முழுவதும் தொடர்வதால்தான் இலங்கையானது, தகவல் தொடர்பாடலில் உச்ச வளர்ச்சி நோக்கிச் சென்றிருக்கிறது.

    இன்று இலங்கையிலிருக்கும் பொருளாதாரச் சிக்கலில், அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கையில், சட்டரீதியான மென்பொருட்களை மட்டுமே எல்லோருக்கும் பயன்படுத்தச் சொன்னால், அவற்றை வாங்க இலட்சக்கணக்கான பணத்துக்கு எங்கு செல்வது? நாட்டு மக்கள் எல்லோருமே லட்சாதிபதிகளா என்ன? இதனால், கணினியும் மென்பொருட்களும் இனிமேல் மாணவர்களுக்கு நிறைவேறாக் கனவுகளாகவே ஆகிவிடும் அல்லவா? இனி எப்படி இலங்கையில் தகவல் தொடர்பாடல் அதன் வளர்ச்சியைத் தொடரும்?

    சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த நேருவதன் இன்னுமொரு விளைவு, இலங்கையிலுள்ள அனைத்துப் பொருட்களினதும் சேவைகளினதும் விலை உயர்வது. கணினி வகுப்பொன்றுக்கு தனது பிள்ளையை அனுப்பும் பெற்றோருக்கு, பாடக் கட்டணமானது, அவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர சாத்தியமிருக்கிறது. ஏனெனில் வகுப்பில் பயன்படுத்தப்படும் தமது கணினிகளுக்கான மென்பொருட்களை  வாங்குவதற்காக செலவளித்த இலட்சக்கணக்கான பணத்தை, அவ் வகுப்புக்களின் உரிமையாளர்கள் மாணவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளத் தீர்மானிப்பர். இன்னும், கணினி பாவனையிலிருக்கும் எல்லா இடங்களிலும், வாடிக்கையாளர்களிடமிருந்தே அச் செலவைச் சமாளிக்கத் தேவையான பணம் ஏதோ ஒரு விதத்தில் அறவிடப்படும்.

    இதன் அடுத்த விளைவானது பலர் தமது வேலை வாய்ப்புக்களை இழப்பது. சிறிய நிறுவனங்கள் கூட கணினிகளை அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் தட்டச்சுப் பொறிகளுக்கும், கையால் எழுதுவதற்கும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. இணைய விடுதிகள் எல்லாம் மூடப்பட வேண்டி வரும். கணினி பாவனையிலிருக்கும்போதே அரச அலுவலகங்களில் ஏதேனும் காரியம் நிகழ வேண்டுமானால், கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் கணினியும் இல்லையானால், பொதுமக்களின் கதி அதோகதிதான். நேர விரயத்துடன், இலங்கை மக்கள் நவீன யுகத்திலிருந்து பின்னோக்கிச் செலுத்தப்படுவர் என்பது நிதர்சனம்.

    உண்மையில் இம் மென்பொருட்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், வறுமை நிலையிலுள்ள நாடுகளில் அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் அம் மென்பொருட்களைத் தயாரிப்பதில்லை. அந் நிறுவனங்கள் தமது நாடுகளுக்குள்ளும், இன்னும் ஏனைய செல்வந்த நாடுகளிலும் அவற்றை விற்று உடனடியாக இலாபம் சம்பாதித்து விடுகின்றன. இலங்கை அரசாங்கமானது, இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பாவனைக்குக் கொண்டு வர முன்வந்ததன் முக்கிய நோக்கம், அந் நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதல்ல. சட்டரீதியான மென்பொருட்களை விற்கும் அரசுக்கு வேண்டியவர்களுக்கு, இலங்கைக்குள் ஒரு விற்பனைச் சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் அதன் அடிப்படைத் திட்டம். இதனால் பாதிக்கப்படும் பொது மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் அரசு சிந்திக்கவேயில்லை.

    அத்தோடு அரசாங்கமானது, போலி மென்பொருட்களைக் கைப்பற்றும் பொறுப்பை காவல்துறையிடம் ஒப்படைப்பதால் என்ன நடக்கும்? காவல்துறையானது, இம் மென்பொருட்களை வைத்திருப்பவர்களை மிரட்டுவதாலும், அச்சுருத்துவதாலும் தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்ளும் சாத்தியம்தான் அதிகரிக்கும். இதனால் இச் சட்டமானது, அதிகாரத்திலிருக்கும் எவரெவருக்கோ, எவற்றுக்கெல்லாமோ பயன்படுவதன்றி, பொதுமக்களுக்கு சிறிதளவும் பயனளிக்காது.

    உலக நாடுகளில் நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்களையும் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த விரும்புவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப் போகும் பாதிப்புக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும்தான். ஆனால், அதற்குச் சமமான மாற்றுப் பரிகாரத்தை ஏற்படுத்தி விட்டு, போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும். அரசாங்கமானது எதற்கெல்லாமோ கலந்தாலோசிக்கிறது, அறிக்கைகளை விடுகிறது. இத் தடை மூலம் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய பாதிப்புக்களுக்கெதிராக அரசாங்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது எனப் பார்த்தால் எதுவுமேயில்லை. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் இத் தடையைக் கொண்டு வரச் சொல்லிக் கோரியிருந்தால் கூட, அந் நிறுவனங்களிடம் இதனால் இலங்கையில் ஏற்படப் போகும் சிக்கல்கள் குறித்து எடுத்துச் சொல்ல அதிகாரத் தரப்பில் எவருமில்லை.

    இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருளை மட்டுமே பயன்படுத்தக் கோரும் இச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் கருத்தைப் பார்ப்போம். எமது நாட்டுக்குள் தயாரிக்கப்படும் மென்பொருட்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கும், அவற்றுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இச் சட்டமானது பெரிதும் உதவக் கூடுமென இவர்கள் எண்ணுகிறார்கள். எனினும் இம் மென்பொருள் தயாரிப்பைக் கற்றுக் கொள்வதற்கும் இவர்களுக்கு விலை குறைந்த போலி மென்பொருள்கள்தானே தேவைப்படுகிறது. எனின், 'எவ்வளவு சுயநலமான சிந்தனை இது?' எனச் சொல்லலாம்தானே.

    அண்மையில், இலங்கையில் தகவல்தொடர்பாடலானது 30% சதவீத வளர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதென சமீபத்திய கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன. அதன் பிரகாரம், இவ் வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்கது. இந் நாடானது இந்தளவு வளர்ச்சியை இக் குறுகிய காலத்துக்குள் பெற்றுக் கொள்ள முடிந்ததன் முக்கிய  காரணமானது, கணினிகளுக்கு அவசியமான மென்பொருட்களையெல்லாம் ஐம்பது ரூபாய்களுக்குக் கூட இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமைதான். 'எமது நாட்டை தகவல் தொடர்பாடல்களின் மையமாக்குவோம்' என ஒருபுறம் சூளுரைத்துவிட்டு, மறுபுறம் மென்பொருட்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் நடைமுறையைத் தடுக்க அரசு முன்வருவதன் மூலம், இத் தகவல் தொடர்பாடல் வளர்ச்சியானது எமது கண் முன்னாலேயே வீழ்ந்தழிந்து போவதுதான் நடக்கும். அத்தோடு தகவல் தொடர்பாடலும், கணினிப் பாவனையும் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயென மட்டுப்படுத்தப்படும்.

    இச் சட்டத்தின் பிரகாரம், இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும், வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட அரசின் பார்வையில் குற்றவாளிகள்தான். எனவே நாளை நாமும் கைது செய்யப்படலாம். நம் கணினிகள், நமது வீடுகளின் கண்டுகொள்ளப்படாத மூலைகளில் கிடத்தப்படலாம். பூந் தொட்டிகளாகவோ, சமையலறைப் பாவனைப் பொருட்களாவோ பயன்படுத்தப்படலாம். அன்றேல் 'ஒரு காலத்தில் எனது வீட்டிலும் கணினி இருந்தது' என விருந்தினருக்கும் வருங்கால சந்ததிக்கும் காட்டுவதற்காக, பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# விடிவெள்ளி 23.06.2011
# உயிர்மை
# திண்ணை

Monday, June 20, 2011

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது 'பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு'க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த 'அதிர்ஷ்டம்' இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த 'புதையல்' அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு 'வெறுமனே' பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

ஆகவே இந்த 'இரண்டு வருடக் கொண்டாட்டம்' ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

- உதுல் ப்ரேமரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# இனியொரு
# திண்ணை

Monday, June 13, 2011

அரச மாளிகை ஊக்க மருத்துவர்

    ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில குளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது விரட்டியடிப்பீர்களா? இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.

விடயத்துக்கு வருவோம். எமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களது பணத்தைக் கொண்டு 'விளையாட்டு மருத்துவப் பிரிவு' ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் விளையாட்டுக்களின் பிரகாரம் உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் அளிப்பதுதான் அதன் பொறுப்பு. அதற்காக பொதுமக்கள் கட்டும் வரிகளிலிருந்து ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவப் பிரிவின் பிரதான மருத்துவருக்கு, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டு வீரர்களினதும் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த பாரிய பொறுப்பு இருக்கிறது. அதன்படி வீரர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டாலோ, ஊக்கமருந்துகள் பாவித்தாலோ அது குறித்து பதில் கூறவேண்டிய முழுமையான பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இப் பாரிய பொறுப்பிலிருக்கும் பிரதான மருத்துவத் தலைவரான வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் செய்யும் ஒரே வேலையானது, விளையாட்டு வீரர்களை ஒரு போலி மருத்துவரான ஈலியந்த வைட்டிடம் அனுப்புவதுதான். இத் தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் பற்றுக் கொண்ட அனைவருக்கும் பாரதூரமான பிரச்சினையொன்றாக இது இன்று மாறியிருக்கிறது.

    இந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் கூட மருத்துவம் பார்த்த, சச்சின் டெண்டுல்கராலும் 'அதிசயக்கத்தக்க மருத்துவர்' எனப் புகழப்பட்ட இந்த ஈலியந்த வைட் யார் எனப் பார்ப்போம். ஈலியந்த லிண்ட்ஸே வைட் என முழுப் பெயர் கொண்ட இவர் முன்பு கொழும்பு, பலாமரத்தடிச் சந்தியில் மறைவாக ஜாக்பொட் சூதாட்ட உபகரணங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, விளையாட விட்டும், அவற்றை வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்தவர். அத் தொழிலானது சிக்கலுக்குள்ளானதும், தெல்கந்த பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப் பாக வியாபாரத்தை ஆரம்பித்தார். அவ்வியாபாரமும் படுத்துக் கொண்ட பிற்பாடு, சில வருடங்கள் காணாமல் போயிருந்தவர், பிறகு மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியானதும் அவரது தனிப்பட்ட மருத்துவராக வந்து இணைந்து கொண்டார். அதுவும் சாதாரண மருத்துவராக அல்லாமல் அண்ட சராசரங்களினதும் சக்தி பெற்றவொரு மருத்துவராக ! 

    தான் அண்ட சராசரங்களின் சக்தியைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதாகவும், 2018ம் ஆண்டு வரை தன்னிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளவென பெரியதொரு பட்டியலே இருக்கிறது எனவும் இவர் ஊடகங்களில் சொல்லி வருகிறார். புற்றுநோய், தலசீமியா, மூட்டு,முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட வியாதிகள், தீராத வயிற்றுவலி, தலைவலி என்பவற்றோடு எய்ட்ஸையும் முழுமையாகத் தன்னால் குணப்படுத்த முடியுமென இவர் சொல்கிறார்.


       ஒருவர் தனது முன்னால் நிற்கையில், வெல்டிங் செய்யும்போது ஏற்படும் வெளிச்சம் போல ஒன்று தனக்குத் தென்படுவதாகவும், அதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் முழுமையான உடல்நிலையைக் கண்டறிந்து, தான் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் இவர் கூறுகிறார். இது ஒழுங்கான வைத்திய சிகிச்சை முறையல்ல. இதன் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் சாதாரண நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கு வைத்தியம் செய்யக் கூட இந்த ஈலியந்த வைட் தகுதியானவரல்ல என்பதுதான்.

    இவரது சிகிச்சையால் சிக்கலுக்குள்ளான சில பிரபலங்களைப் பாருங்கள். இலங்கை கிரிக்கட் விளையாட்டு வீரரான உபுல் தரங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிக்கட் கவுன்சிலில் நடைபெற்ற பரிசோதனையின் போது ஊக்கமருந்து பாவித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. உபுல் தரங்கவுக்கு அம் மருந்தைக் கொடுத்தவர் இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவரான ஈலியந்த வைட்.

    தனது உடல் வலிமையை முழு உலகுக்கும் காட்டிய, இலங்கையின் பளுதூக்கும் வீரர்களில் ஒருவரான சிந்தன விதானகே, ஒரு சைவ உணவுப் பிரியர். மருந்துக்குக் கூட மாமிச உணவுகள் பக்கம் செல்லாதவர். சுய திறமையாலும், விடாமுயற்சியாலும் தேசத்துக்கு புகழைத் தேடிக் கொடுத்த சிந்தன விதானகேயின் விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கிய காரணி அவர் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு. சிந்தனவுக்கு அம் மருந்தைக் கொடுத்தவர், ஈலியந்த வைட்.

    ஈலியந்த வைட்டினது ஊக்க மருந்தின் காரணமாக தமது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு மிக அண்மையில் ஆளாகியிருப்பவர்கள், இலங்கை ரகர் விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த ஸாலிய குமார, கேன் குருசிங்க, எரங்க சுவர்ணதிலக ஆகிய விளையாட்டு வீரர்கள். இலங்கையை மையமாகக் கொண்டு நடைபெற்ற Five Nations போட்டியின்போது இடம்பெற்ற சிறுநீர்ப் பரிசோதனையில் இம் மூவரும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பாவித்திருப்பது ஊர்ஜிதமானது. இவர்களும் ஈலியந்த வைட்டிடம் சிகிச்சை பெற்று, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டதன் காரணத்தால் இத் துரதிர்ஷ்டமான நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

    கிரிக்கட் விளையாட்டு வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், 100 மீற்றர் ஓட்டப்பந்தய வீரரான ஷெஹான் அம்பேபிடிய, 1500 மீற்றர் ஓட்டப்போட்டியை முன்னெடுத்த சமிந்த விஜேகோன் போன்ற இலங்கை வீரர்களுக்கும் கூட ஈலியந்த வைட், ஊக்க மருந்தினைக் கொடுத்துள்ள போதிலும், அவற்றைப் பாவித்த உடனேயே அவர்களின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட காரணத்தினால் நல்லவேளை, சிறுநீர்ப் பரிசோதனையிலிருந்து விலக்கப்பட்டார்கள். இல்லாவிட்டால் அவர்களது விளையாட்டு வாழ்க்கைகளுக்கும் அதோ கதிதான்.

    ஈலியந்த வைட், இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியர். ஆகவே அவரது செயல்கள் அனைத்தையும் குறித்து ஜனாதிபதியும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒருவரை அரச மாளிகைக்குள் அழைத்து வந்து வைத்திருப்பது, சுயசிந்தனையுள்ள எவருமே செய்யும் காரியமல்ல. அவர் இந் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு மாத்திரமல்லாது, வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்குக் கூட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிகிச்சையளிப்பதை முழு தேசமே பார்த்திருந்தது. இந்திய கிரிக்கட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கௌதம் காம்பீர், அஷிஷ் நெஹ்ரா போன்றோரும் இவரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வைத்து, காவல்துறையின் தாக்குதலில் மிகவும் மோசமாகக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைப் பார்த்துவரவென ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவும், ஈலியந்த  வைட்டும் ஜனாதிபதியால் அனுப்பப்பட்டிருந்தனர். அங்கும் சென்று நோயாளிகளுக்கு மோசமான சிகிச்சையளித்திருக்கிறார் ஈலியந்த வைட்.

    இத் தேசத்துக்குப் புகழைச் சேர்க்கும் விளையாட்டு வீரர்களை நசுக்கும் இந்த ஊக்க மருத்துவர் குறித்து உலகம் அறிய வேண்டும். விளையாட்டு வீரர்கள் அல்லாமல், சாதாரண நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியராவது கூட எளிதான காரியமல்ல. அதற்கு பல வருடங்கள் தம்மை அர்ப்பணித்து மருத்துவத்தைக் கற்க வேண்டும். அவ்வாறு முழுமையான வைத்தியக் கல்வியைக் கற்காத இவர், விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு எவ்விதத்திலும் பொறுத்தமானவரே அல்ல.

    எமது தேசத்தைப் பெருமைப்படுத்தும் விளையாட்டு வீரர்களைப் பீடித்திருக்கும் பிரதான தொற்றுநோயான இப் போலி மருத்துவருக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது அவசியம் அல்லவா? ஆனால் அது நடக்காது. ஏனெனில் இவர் இலங்கை அரச மாளிகை மருத்துவர்.அரசருக்கு வேண்டியவர்கள் குற்றங்கள் செய்துவிட்டு இலகுவாகத் தண்டனையின்றித் தப்பி விடும் இலங்கையில், அரச மாளிகைக்குள் நுழைந்து, அரசரின் மிகுந்த அன்புக்குள்ளாகியிருக்கும் இவருக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை முன்வைப்பது கூட சாத்தியமற்றது.

    எனினும் இவரை மருத்துவ உலகிலிருந்து அப்புறப்படுத்தாமல், எமது விளையாட்டு வீரர்கள், விளையாட்டை விட்டு விலகிச் செல்வதையும், ஊக்க மருந்துக் குற்றச் சாட்டுக்களில் சிக்கி, விளையாட்டிலிருந்து விலக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை

இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?

    தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் அளவுக்கு தம்பி சித்தியடைந்தது சில நாட்களுக்கு முன்புதான். இப்பொழுது தம்பி ஒரு இராணுவ முகாமில் இருக்கிறான். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அன்பாகக் கற்றுத் தரும் இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவே அவன் சென்றிருக்கிறான். இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச் சென்றிருக்கும் பையனின் முகத்தைச் சற்று தொலைக்காட்சியில் பார்த்திடவே பாட்டி காத்திருக்கிறார்.

    'பாட்டி, இப்பவே பார்த்துக்குங்க..நல்லாப் பார்த்துக்குங்க..ஏன்னா திரும்பி வரும்போது வரப் போறது அவனில்ல.'

    பாட்டியைச் சற்றுக் கோபமடையச் செய்து பார்க்கவே நான் அப்படிச் சொன்னேன்.

    'உனக்கு பொறாமை. நீ கெம்பஸ் போன காலத்துல இதெல்லாம் இல்லல்ல. பார்த்துட்டிரு மகன். தம்பி டை, கோட் உடுத்துத்தான் வீட்டுக்கு வருவான். அவன் வீட்டுக்கு வந்தப்புறம் சாப்பிடப் போறது கரண்டியாலையும், முள்கரண்டியாலையும்தான். இங்கிலிஸ்லதான் கதைப்பான்.'

    பாட்டி, இராணுவ முகாம் பயிற்சியின் பின்னர் வீடு திரும்பப் போகும் தம்பி பற்றி இன்னும் பல விடயங்களைச் சொல்லத் தொடங்கினார். பாட்டியுடன் சேர்ந்து தாத்தாவும் மேலும் பல சிறப்புக்களைக் கூறத் தொடங்கினார்.

    இம் மூத்தவர்களின் கதைகளைக் கேட்டு அலுத்துப் போன காரணத்தினால் நான் தம்பி குறித்தும், தம்பிகளுக்கு இராணுவ முகாமில்  கொடுக்கப்படும் பயிற்சி குறித்தும் ஆராயத் தீர்மானித்தேன். அவ்வாறு ஆராய்ந்து பார்க்கையில் எனது பாட்டி குறித்து எனக்குப் பாவமாகத் தோன்றியது. பாட்டி குறித்து பரிதாப எண்ணம் எழுகையில், எனக்கு இன்னும் பலரது தாய்மார்கள் நினைவில் தோன்றினர். தம்பி மீது பல எதிர்பார்ப்புக்கள் வைத்து இராணுவ முகாமுக்கு அனுப்பிய எனது தாய், முகாம்களில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தம்பிகள், தங்கைகளின் தாய்மார்கள் மற்றும் அமைச்சர்களின் தாய்மார்கள் அவர்களிலிருந்தனர். பாட்டி வயதானவர். பலவீனமானவர். குழியிலொரு பாதம், கரையில் சில விரல்களென இருப்பவர். அதனால் இராணுவ முகாம் பயிற்சியின் உண்மை நிலவரங்களை அவரிடம் சொல்ல மனம் இடம்கொடுக்கவில்லை. எனினும் அவற்றை மூடிமறைக்கவும் முடியாது.

    அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க உயர்கல்விப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பிற்பாடுதான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாமில் பயிற்சி கொடுப்பது பற்றி முதலில் பேச்சு அடிபடத் தொடங்கியது. பல்கலைக்கழக மாணவர்களது ஒழுங்கு நடவடிக்கைகள்  தொடர்ந்தும் பலவீனமாகப் போய்க் கொண்டிருப்பதாக திடீரெனக் கண்ட அமைச்சர் மாணவ, மாணவிகளது ஒழுக்கத்தை எண்ணி இந் நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் பிரகாரம், 2011.05.12 எனத் திகதியிட்டு எழுதப்பட்ட கடிதமொன்று உயர் கல்வி அமைச்சினால் எனது தம்பி உட்பட இம் முறை உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்கக் கூடுமென எண்ணியிருக்கும் மாணவர்கள் 10000 பேருக்கு அனுப்பப்பட்டன.

    அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்ததன் நிலைப்பாடானது இக் கடிதத்திலேயே முழுமையாகத் தெளிவாகிறது. கொழும்பு நகரில் வசிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாமாக பூஸா முகாம் அறிவிக்கப்பட்டிருந்தது. இரத்தினபுரியில் வசிக்கும் சில மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாமாக திருகோணமலை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சிலருக்கு இன்னும் சில முகாம்கள்.

    இராணுவ முகாம் பயிற்சி குறித்து இன்னும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அக் கடிதத்தின் ஒரு பக்கத்தில் பயிற்சிக்காக கட்டாயம் எடுத்துவர வேண்டிய பொருட்களின் பட்டியல் தரப்பட்டிருந்தது.  தேசிய அடையாள அட்டையில் ஆரம்பித்து காபன் பேனைகளிரண்டில் முடிவுற்ற அப் பட்டியலில் கேன்வஸ் சப்பாத்துக்கள், வெள்ளைக் காலுறைகள், அரைக் கை டீ ஷேர்ட், முழுக் கை ஷேர்ட், நீல நிற குறுங் காற்சட்டை, கறுப்பு நிற நீண்ட காற்சட்டை, சேலை, ட்ரக் பொட்டம், கறுப்பு நிறச் சப்பாத்துக்கள், புடவைத் தொப்பி, வெள்ளை நிற படுக்கை விரிப்பு, வெள்ளை நிற தலையணை உறைகள், பூட்டு போடக் கூடிய சூட்கேஸொன்று என இன்னும் பல பொருட்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

    எனது அம்மா, செய்ய வேறு வழியற்று ஐயாயிரம் ரூபாயளவில் செலவளித்து இப் பட்டியலிலிருந்த பொருட்களைத் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தார். பாட்டியெனில் 'பையன் நாளை டை, கோட் உடுத்து வரவிருப்பதனால் இன்று செலவளித்ததற்குப் பரவாயில்லை' எனச் சொன்னார்.

    இவ்வாறு எனது தம்பியை உள்ளடக்கிய 10000 மாணவர்கள், ஆளுக்கு ஐயாயிரம் ரூபாயளவில் செலவளித்து வாங்கிய பொருட்களையும் சுமந்துகொண்டு நாடு முழுவதிலுமிருந்த 28 இராணுவ முகாம்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.

    மே மாதம் 22ம் திகதி காலை 10.30க்கு முன்பு அந்தந்த முகாம் பொறுப்பதிகாரிகளின் முன்னிலையில் வந்து நின்ற மாணவர்களுக்கு அப்பொழுதிலிருந்து அசௌகரியமான விடயங்களையே அனுபவிக்க நேர்ந்தது. இக் கட்டுரையை எழுதும் இக் கணத்தில் இராணுவப் பயிற்சி ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இம் மூன்று தினங்களில் மட்டும் இராணுவ முகாம்கள் சிலவற்றில் நடந்திருக்கும் சம்பவங்கள் சிலவற்றை உங்கள் முன்வைக்கிறேன். மற்றவற்றின் தரங்களை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

    காலி, பூஸா இராணுவ முகாமுக்குச் சென்ற மாணவர்களுக்கு புதுமையானதொரு அனுபவம் கிடைத்தது. முகாமினுள் நுழைந்த பிற்பாடு சிறைக் கைதிகளைப் போல கையில் தட்டுடனும், கோப்பையுடனும் அவர்கள் பகலுணவுக்காக வரிசையில் அழைத்துச் செல்லப்பட்டனர். பெற்றோர்கள் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாணவ மாணவிகள் சிறைக்கைதிகளைப் போல பகலுணவைச் சாப்பிடத் தயாராகினர். அன்றிரவு பத்து மணியாகியும் கூட மாணவ மாணவிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கவில்லை. எனவே வெள்ளைப் படுக்கை விரிப்புக்களையும், வெள்ளைத் தலையணை உறைகளையும் எடுத்துச் சென்றிருந்த மாணவர்களுக்கு நள்ளிரவுக்குப் பிற்பாடுதான் அவற்றை விரித்துப் படுக்கக் கிடைத்தது.

    22ம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு உறங்கச் சென்ற மாணவர்களுக்கு அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எழும்பும்படி கட்டளையிடப்பட்டது. அத்தோடு விழித்தெழுந்த மாணவர்கள் அவசர அவசரமாகத் தயாராகி, அலரி மாளிகைக்குச் செல்வதற்காகக் காத்திருந்த பேரூந்தில் ஏறுவதற்கு முண்டியடித்தனர். விடிகாலை 4 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்ட பேரூந்து பூஸாவிலிருந்து வெளிக் கிளம்பியது. விடிகாலையில் பயணத்தை ஆரம்பித்த நேரம் தொடக்கம் அலரி மாளிகையைச் சென்றடையும்வரை மாணவர்களுக்கு தண்ணீர்ச் சொட்டொன்று கூடக் கொடுக்கப்படவில்லை. அலரி மாளிகையில் பகலுணவுக்காக ஒரு சோற்றுப் பார்சல் கிடைத்த போதிலும் அதை உடனே சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. அலரி மாளிகையில் ஜனாதிபதியும் உயர் கல்வி அமைச்சரும்  கலந்துகொண்ட நிகழ்ச்சி நிறைவுற்று மாணவர்கள் மீண்டும் பூஸா நோக்கிப் பயணிக்க ஆரம்பித்ததோடு,  களுத்துறையில் வைத்துத்தான் அவர்களுக்கு பகலுணவைச் சாப்பிட அனுமதி கிடைத்தது. காலையிலிருந்து பசியிலிருந்த அவர்கள் அலரி மாளிகையில் கிடைத்த சோற்றுப் பார்சல்களைத் திறந்து பார்க்கையில் அவை மிகவும் கெட்டுப் போயிருந்தன.

    தாங்க முடியாப் பசி காரணமாக சில மாணவர்கள் அக் கெட்டுப் போன சோற்றைச் சாப்பிட்டனர். இன்னும் சிலர் பசியிலேயே இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகே அடுத்த வேளை உணவு கிடைத்தது.

    'நாங்கள் பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு கரண்டியாலும், முட்கரண்டியாலும் சாப்பிடக் கற்றுக் கொடுப்போம்' என பெருமைக் கதைகள் பேசிய அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க பூஸா மாணவர்களுக்கு கெட்டுப் போன உணவை உண்ணக் கொடுத்து அந் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தது அவ்வாறுதான்.

    பூஸா இராணுவ முகாம் மாணவர்கள் அவ்வாறு 'ஒழுங்கு'படுத்தப்படுகையில் திருகோணமலை க்ளீஃபன்பர்க் இராணுவ முகாமுக்குச் சென்ற மாணவர்களுக்கு அதற்குச் சற்றும் குறைவில்லாத அனுபவமொன்று கிடைத்தது. இம் முகாமில் இராணுவப் பயிற்சி பெற அழைக்கப்பட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1200க்கும் அதிகமாக இருந்தது. அவ்வளவு பேரும் பாவிப்பதற்காக முகாம் எல்லையில்  இருந்த கழிப்பறைகளின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. மாணவர்களின் எண்ணிக்கையை கழிப்பறைகளின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்த்தால் வியப்பைத் தரும் ஒரு விடை கிடைக்கிறது. அதாவது முந்நூறு மாணவர்கள் ஒரு கழிப்பறையைப் பாவிக்க வேண்டும். ஒரு மாணவர் 5 நிமிடங்கள் ஒரு கழிப்பறையைப் பாவிப்பாரானால் கூட முந்நூறு பேருக்கும் அச் செயலைச் செய்ய 1500 நிமிடங்கள் எடுக்கும். 1500 நிமிடங்கள் எனப்படுவது 25 மணித்தியாலங்கள். அதாவது ஒரு நாளும் இன்னுமொரு மணித்தியாலமும்.

    25 மணித்தியாலங்கள் வரிசையிலிருந்து கழிப்பறை செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கும் எவருக்கும் இரவு நேரங்களில் கழிப்பறை செல்ல முடியாது. ஏனெனில் இக் கழிப்பறைகள் நான்கும் அவர்கள் தங்குமிடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. அதன் பிரகாரம் திருகோணமலை இராணுவ முகாமுக்கு பயிற்சிக்காகச் சென்ற மாணவர்களுக்கு இப் பயிற்சிக் காலத்தில் கழிப்பறை செல்வதைத் தவிர வேறெதுவும் செய்ய நேரம் மிச்சமிருக்காது. 25 மணித்தியாலங்கள் வரிசையிலிருந்து கழிப்பறை செல்லும் மாணவர்களுக்கு முகம், கை,கால் கழுவவென 3 தண்ணீர்த் தாங்கிகள் மாத்திரமே இருக்கின்றன. அதன்படி ஒரு தண்ணீர்த் தாங்கியிலிருந்து 400 மாணவர்கள் முகம், கை,கால் கழுவிக் கொள்ளவேண்டும்.

    அமைச்சர் கூறிய படி மாணவர்களுக்கு கழிப்பறை செல்லும் ஒழுங்கைக் கற்றுக் கொடுப்பது இவ்வாறுதான். இராணுவ முகாம் பயிற்சியைப் பெறப் போயிருக்கும் எனது தம்பி 'வெளிக்குச் செல்ல' இவ்வளவு துயருருவதை எனது பாட்டி அறிவாரானால் அவர் அக்கணமே நெஞ்சடைத்து மரணித்துப் போகக் கூடும். எனவே இவ் விடயங்களை அவர் அறியாமலே இருக்கட்டும்.

    திருகோணமலை மாணவர்களுக்கு கழிப்பறை செல்லும் ஒழுங்கை அவ்வாறு கற்றுக் கொடுக்கையில், அம்பாறை இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியெடுக்கும் மாணவர்கள் வேறொரு விதத்தில் 'ஒழுங்கி'னைக் கற்றுக் கொண்டனர். 24ம் திகதி இராணுவப் பயிற்சியின் போது அவ்விடத்துக்கு காட்டு யானைகள் வரத் தொடங்கின. யானைகள் வருவதைக் கண்டு மாணவர்கள் அஞ்சினர். அப்பொழுது பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரி உடனே கட்டளையிட்டார்.

    'ஓடுங்கள்'

    இராணுவ அதிகாரியின் கட்டளையின் பின்னர் மாணவர்கள் யானைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடினர். வேலிகளிலிருந்த முட்கம்பிகளும் குத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடம் தேடி மரண பயத்தோடு ஓடினர். அதன் இறுதிப் பெறுபேறானது இருபதுக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தவர்களாக மாறியமையே.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சியின் மூன்றாம் நாள் முடிவில் இன்னும் மாணவ மாணவிகள் அனேகர் நோயாளிகளாக மாறியிருக்கின்றனர். உடற்பயிற்சியின் போது மயக்கமுற்று வீழ்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. மின்னேரியா இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர் ஒருவரைப் பாம்பு தீண்டியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இராணுவ முகாம்கள் இரண்டு, மூன்றுக்குள் 3 நாட்களுக்குள் நடைபெற்ற, நானறிந்த சம்பவங்கள் சிலவற்றையே நான் இங்கு எழுதியிருக்கிறேன். 28 முகாம்களுக்குள் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பல இன்னும் இருக்கின்றன. 3 வாரங்கள் முடிவுறுகையில் இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்? டை, கோட் உடுத்து, முட்கரண்டியால் சாப்பிட்டு, ஆங்கிலத்தில் கதைக்கும் தம்பியைக் காணக் காத்திருக்கும் பாட்டியிடம் நான் இதையெல்லாம் எப்படிச் சொல்வது?

    இராணுவ முகாமுக்குள் என்னென்ன நடைபெற்றாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஊருக்கு வரும் தம்பிக்கு நாளை பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்பதுவும் கேள்விக்குறியே. பாட்டியென்றால், தம்பி இராணுவப் பயிற்சிக்குப் பிற்பாடு பட்டமொன்றோடுதான் வீட்டுக்கு வருவார் என எண்ணியிருக்கிறார். எனினும் இப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை அல்லாமல், உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லத் தகுதியானவர்கள் எனக் கருதப்படக் கூடிய மாணவர்கள் மட்டுமே. நாளைய தினம் Z வெட்டுப் புள்ளி கிடைத்த பிற்பாடு, இவ்வாறு இராணுவப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட அனேக மாணவர்களுக்கு நிச்சயமாக பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காமலிருக்கும். எனது தம்பியும் கூட அக் கூட்டத்தில் இருக்கக் கூடும். அவ்வாறெனில் பாட்டியின் நிலை என்னவாகும்?

    இவையெல்லாவற்றையும் சிந்தித்தபடி நான் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். நான் வீட்டுக்கு வருகையில் பாட்டி மிகப் பாடுபட்டு வெள்ளைக் கேன்வஸ் சப்பாத்துக்களிரண்டைக் கழுவிக் காய வைத்தபடியிருந்தார்.

    ' யாருக்கு இந்தச் சப்பாத்து பாட்டி?'

    'உன்னோட தாத்தாவுக்குத்தான்.'

    'ஏன் தாத்தாவும் இராணுவப் பயிற்சிக்குப் போகப் போறாரோ?'

    அப்பொழுது தாத்தா முற்றத்துக்கு வந்தார்.

    'ஆமாம் மகனே. இப்ப தம்பிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்த பிறகு அதிபர்களுக்கு இராணுவப்பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். அதுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கு.. அதுக்குப் பிறகு பள்ளிப் பிள்ளைகளுக்கு.. அதுக்குப் பிறகு பெற்றோருக்கு..அதுக்குப் பிறகு எங்களுக்குத்தானே.. இப்பவே தேவைப்படுறதையெல்லாம் ஒழுங்குபடுத்திக் கொண்டா பிறகு தொந்தரவில்லைதானே?'

- அஸங்க சாயக்கார
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# திண்ணை

Tuesday, June 7, 2011

கட்டுநாயக்க - கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை

    அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். இச் சந்தர்ப்பத்தில் நம்மால் அக் குழுவை மீறி அவளுக்கு உதவ முடியாவிடில், உடனே யாரை அழைக்கத் தோன்றும்? காவல்துறையைத் தானே?! காவல்துறையே இப் பாதகத்தைச் செய்தால்? அதுவும் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில்? கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலயத்தில் அதுதான் நடந்தது.

    ஒன்றல்ல. இதுபோல பல சம்பவங்கள். காவல்துறையிடம் அடிவாங்கி பாதி உயிராகப் பிழைத்திருக்கும் யுவதியான மல்லிகா சொல்வதைக் கேளுங்கள்.

    'பொலிஸ் உள்ளுக்கு வந்தது. நான் தோழிகளுடன் ஓடிப் போய் படிக்கட்டொன்றின் கீழ் ஒளித்துக் கொண்டேன். அங்கே வந்த பொலிஸ் ஒருவர் எங்களை வெளியே இழுத்தெடுத்து முழந்தாளிடச் சொன்னார். பிறகு பெண் பொலிஸாரை அழைத்து எங்களுக்கு அடிக்கும்படி சொன்னார். கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்வரை அவர்கள் எங்களை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஓட முற்பட்ட பெண்பிள்ளையொருத்தியின் பாவாடையும், மேற்சட்டையும் கிழிக்கப்பட்டது. எவரியவத்தை சந்தையிலிருந்த ஒருவரின் சாரனையும், FDK ஃபெக்டரியின் துணித் துண்டொன்றையும் கொண்டு உடலை மறைத்தபடிதான் நாம் பொலிஸுக்குச் சென்றோம். அவ்வாறு எங்களைக் கொண்டு செல்கையில், எவரிவத்தை சந்தைக்கு வந்திருந்தவர்களும், ஆட்டோக்காரர்களும் பொலிஸார் மீது கல் எறிந்தார்கள். அவ்வாறு அவர்கள் கல்லால் எறிந்ததற்காக, பொலிஸார் எமக்கு மீண்டும் மீண்டும் அங்கு வைத்தே அடித்தார்கள். பொலிஸினுள்ளே பெண்பிள்ளைகள் இருபத்தைந்து பேரளவில் இருந்தோம். ஆண்கள் நூற்றைம்பது பேரளவில் இருந்தார்கள். பொலிஸ் நிலையத்தினுள் வைத்து எங்களைக் கூட்டுக்குள் தள்ள முன்பு திரும்பவும் அடித்தார்கள். ஒரு கூட்டுக்குள் நூற்றுக்கும் அதிகமானவர்களைத் தள்ளிப் பூட்டினார்கள். நெருங்கி நெருங்கி நின்றுகொண்டே இருந்தோம். டொய்லட் வாளியிலிருந்த தண்ணீரில் கைக்குட்டையை நனைத்து அதனை காயங்களில் ஒற்றிய படி இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தோம். திரும்ப எங்களை வெளியே எடுத்து அடித்தார்கள். காயமாகி இரத்தம் வடிந்துகொண்டிருந்தவர்களை வேறாக்கி, தண்ணீரால் முழுமையாக நனைத்தார்கள். பிறகு எங்களை பொலிஸ் பஸ்ஸில் ஏற்றி நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பினும், அதற்காக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றால் ரிமாண்ட் செய்வதாக அச்சுறுத்தப்பட்டதால் எல்லோரும் போல ஊருக்குப் போய் ஏதாவது வைத்தியரிடம் காட்டிக் கொள்ளலாம் என ஆஸ்பத்திரியிலிருந்து வந்தோம்.'

    மிகவும் கீழ்த்தரமாகவும், மோசமாகவும் இவர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் என்ன? திருடர்களா, கொலைகாரர்களா அல்லது பாரதூரமான குற்றங்களைச் செய்த தண்டனைக்குரியவர்களா இவர்கள்? ஊழியர்களாக, அடிமைகளாக, முதலாளித்துவத்துக்கு அடிபணிந்தபடி, காலந்தோறும் கஷ்டப்பட்டு, இலங்கை நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்திற்காக இரவு பகல் பாராது உழைத்துப் பாடுபட்ட இம் மக்கள் செய்த குற்றம்தானென்ன?

    அவர்கள் செய்தது ஒன்றே. அது, முதன்முறையாக தமது உரிமைக்காக குரல் எழுப்பியது, அதிகாரத்தைக் கேள்வி கேட்டது, அதற்காகப் போராடத் துணிந்தது. ஒரு ஏகாதிபத்திய அரசாங்கத்தில் இது தண்டனைக்குரிய குற்றம்தானே?

    இலங்கை அரசாங்கமானது, தொழிற்சாலை ஊழியர்களுக்காக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டது. ஒரு தொழிற்சாலை ஊழியரின் சம்பளப் பணத்திலிருந்து மாதாமாதம் 2% ஓய்வூதியத் திட்டத்துக்காக அரசால் எடுத்துக் கொள்ளப்படும். அந்த ஊழியருக்கு 55 வயது பூர்த்தியானதும், அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து ஓய்வூதியத்தை அவர் மாதாமாதம் பெற்றுக் கொள்ளலாம். இத் திட்டத்தில் தற்பொழுது 55 வயதுக்குக் கீழே உள்ள அனைத்து ஊழியர்களும் இணைந்து கொள்வது கட்டாயமானது. இதுவே அரசாங்கத்தின் உத்தரவாக இருந்தது. இதனை தொழிற்சாலை ஊழியர்களிடத்தில் கொண்டு செல்வதற்காக, கடந்த மே மாதம், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்கு வந்து ஒரு ஆடைத் தொழிற்சாலையிலிருந்து ஐவர் வீதம் 90 தொழிற்சாலைகளிலிருந்து ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, ஒன்றிணைத்து ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினார்.  ஓய்வூதியத் திட்டம் குறித்து அமைச்சரும் வந்திருந்த பிரமுகர்களும் விளக்கமளித்த போது, ஆடைத் தொழிற்சாலைப் பிள்ளைகள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அமைச்சரால் பதிலளிக்க முடியாமல் போனது. அப்படி என்ன கேட்டார்கள் அவர்கள்?

    'ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்கென வரும் பெண் பிள்ளைகள் 20 - 23 வயதாகும்போது வேலையில் சேர்ந்து, கூடியது பத்து வருடம்தான் வேலை செய்வார்கள். தமது திருமணத்துக்காக நகையும், பணமும் சேர்க்கவே அவர்கள் வேலைக்கு வருகிறார்கள். திருமணம் முடித்ததும் விலகிவிடுவார்கள். அப்படி விலகும்போது, ஓய்வூதியத்திற்காக அவர்களிடமிருந்து மாதாமாதம் அரசாங்கம் எடுத்துக் கொண்ட 2% பணத்துக்கும் என்ன நடக்கும்?'

    'அமைச்சரே, பட்டதாரிப் பெண்கள் நாங்கள், அரசாங்கத்தினால் வேலையொன்றைப் பெற்றுத் தர முடியாததன் காரணத்தால் ஆடைத் தொழிற்சாலை வேலைக்கு வந்திருக்கிறோம். நீங்கள் இந்த ஓய்வூதியத் திட்டம் குறித்து ஒரு பத்திரிகைக்கு ஒன்றைச் சொல்கிறீர்கள். இன்னொரு பத்திரிகைக்கு இன்னுமொன்றைச் சொல்கிறீர்கள். மின் ஊடகங்களுக்கு வேறொன்றைச் சொல்கிறீர்கள். இவற்றில் உண்மையான உங்கள் கருத்து எது?'

    அப் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சராலோ, வந்திருந்த பிரமுகர்களாலோ பதிலளிக்க முடியாமல் போனது. கலந்துரையாடலின் பிற்பாடு, 'இந்த ஓய்வூதியத் திட்டம் எமக்கு வேண்டாம்' என்பதே தொழிற்சாலை ஊழியர்களது ஏகோபித்த முடிவாக இருந்தது. ஆனால் தமது ஓய்வூதியத் திட்டத்தை அந்த ஊழியர்கள் மேல் வலியத் திணிப்பதற்கு அரசு காத்திருந்தது. தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு வழியற்ற ஊழியர்கள் வரிசையாகத் தெருவிலிறங்கி அமைதியான ஊர்வலமொன்றை முன்னெடுக்க முற்பட்டனர். அவர்களைத் தடுப்பதற்காக கிட்டத்தட்ட 300 காவல்துறையினர் ஒன்றாகத் திரண்டனர். நிகழ்வின் கோரம் இதன்பிறகுதான் ஆரம்பித்தது.

    ஊர்வலத்தைத் தடுப்பதற்காக, ஊர்வலத்தில் முன்வரிசையில் நின்ற பெண்ணொருவரின் ஆடையானது காவல்துறையினரால் கழற்றப்பட்டது. அத்தோடு தமது கைகளிலிருந்த லத்திக் கம்புகளால் கூட்டத்தைத் தாக்கத் தொடங்கியது காவல்துறை. கண்ணீர்க் குண்டுகளை அக் கூட்டத்தின் மீது பிரயோகித்ததோடு, இறப்பர் குண்டுகளைத் துப்பாக்கிகளிலிட்டு கூட்டத்தை நோக்கி சுடவும் தொடங்கியது. இனி ஊர்வலம் அடங்கிவிடும் என எண்ணியிருந்த காவல்துறைக்கு அதன் பிறகுதான் தலைவலி ஆரம்பித்தது. நடந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த ஊழியர்கள் கற்களைக் கொண்டு காவல்துறையைத் தாக்கத் தொடங்கினர். 

    அத்தோடு வீதியோரத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதியின் பாரிய உருவப்படத்தின் மீது இரு இளைஞர்கள் ஏறி நின்று அதனைத் துண்டு துண்டாகக் கிழித்தமையை அதிர்ச்சி மேலுறப் பார்த்திருந்தது  காவல்துறை. இதனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வழமையாக தாம் சிறிது முறைத்துப் பார்த்தாலே அமைதியாக அடங்கிவிடும் பொதுமக்கள், இன்று தமக்கே கல்லெறிவதை உயர் காவல்துறை அதிகாரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிஜக் குண்டுகள் அடைக்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கிச் சுடுகிறார். கூட்டத்திலிருந்த 22 வயது இளைஞன் ரொஷேன் ஷானகவுடன் எட்டுப் பேர் படுகாயமடைகின்றனர். நிஜத் துப்பாக்கித் தாக்குதலில் கலவரமுற்ற ஊழியர்கள், தமது தொழிற்சாலைகளுக்குள் ஓடுகின்றனர். அதன் பிறகுதான் நான் முதல் வரிகளில் சொன்ன அநீதங்கள் நடந்திருக்கின்றன.

    இலங்கையில் சர்வசாதாரணமாக நடைபெற்றிருக்கும் ஒரு பாரிய வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் இவை. எந்த நீதமான அரசாங்கத்தினாலும் நியாயப்படுத்த முடியாத செயல்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான காவல்துறையால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஊழியர் போராட்டத்தை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அது நடந்து கொண்ட முறையே இங்கு கேள்விக் குறியாகியிருக்கிறது. ஊழியர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாது, அவர்கள் பணி புரிந்த தொழிற்சாலைகளுக்குள் பலவந்தமாகப் புகுந்து, ஊழியர்களது முந்நூறுக்கும் அதிகமான சைக்கிள்களை எரித்ததோடு, அங்கிருந்த இயந்திரங்கள், கணினிகள், வாகனங்கள்  போன்றவற்றையும் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். காவல்துறையினரது தாக்குதல்களில் பாரதூரமாகக் காயமடைந்த முந்நூறுக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர் எனினும் நிஜத் துப்பாக்கிக் குண்டால் காயமுற்றிருந்த இளைஞன் ரொஷேன் ஷானக, வைத்தியசாலையில் சடலமாகக் கிடத்தப்பட்டிருந்தார்.

    இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயம் இருக்கிறது. தாக்குதலுக்குள்ளான சில ஆடைத் தொழிற்சாலைகள், வெளிநாடுகளுக்குச் சொந்தமானவை. உலக அளவில் தற்பொழுது நெருக்கடியிலிருக்கும் இலங்கைக்கு, தனது வருமானத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வேண்டி அந்நியச் செலாவணியும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அத்தியாவசியம். அவ்வாறிருக்க இவ்வாறான சம்பவங்களின் மூலம் நிகழ்வது, இங்கிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமது பங்களிப்பை கைவிட்டு விட்டுச் செல்வதன்றி வேறேது? இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதங்கள் குறித்தான குற்றச்சாட்டுக்களின் மூலம், இலங்கையானது உலகத்தின் அனைத்து நாடுகளினதும் கவனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று. அதன் மீது நிகழும் இவ்வாறான சம்பவங்கள் மென்மேலும் அதன் நாமத்தைச் சிதைப்பதையே செய்யும். அத்தோடு அதன் பலத்தையும் சிதைக்கும். யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள அரசாங்கத்தின் மீது, இம் மாதிரியான சம்பவங்கள் மென்மேலும் அவமானத்தையே போர்த்தும்.

    இவற்றையெல்லாம் குறித்து சிந்தித்த அரசாங்கமானது அச்சமுற்றது. அது அச்சமுற இன்னுமொரு காரணம் இருக்கிறது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமை புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் இலங்கையின் வெவ்வேறு கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் வாக்குகள் இக் கட்சியை ஆட்சியில் அமர்த்த உதவியது. எனவே இக்கட்டான இந் நேரத்தில் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் அடுத்த தேர்தலின் போது  அவ் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். எனவே அரசாங்கமானது நடந்த செயல்களின் பேரில் தம் மீது குற்றமில்லையெனக் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது.

    பாடுபட்டு உழைக்கும் மக்களது ஊதியத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிப் பெற்று, தமது பொருளாதாரத் திட்டங்களுக்குச் செலவிடத்  திட்டமிட்டிருந்தது தொழில் உறவுகள் அமைச்சர் மாத்திரமல்ல. ஜனாதிபதியுடன் சேர்ந்த முழு அரசாங்கமுமேதான். எனவே, கொல்லப்பட்ட ஊழியரது மரணத்திற்கும் நிராயுதபாணி ஊழியர்களைத் தாக்கி, அவர்களை அங்கவீனமானவர்களாகவும் நோயாளிகளாகவும் ஆக்கியதற்காகவும் முழு அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டியிருக்கிறது.

     எவ்வாறாயினும் ஊழியர்கள், தமது மாதாந்த சம்பளத்தை அதிகரிக்கச் செய்யும்படி கோரியபோது கண்டுகொள்ளாமல் விட்ட அரசாங்கமானது, ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மாத்திரம் அவர்கள் மேல் வலியத் திணிக்க முற்படுவதானது, ஊழியர்களிடத்திலே ஒரு ஐயத்தையேனும் உண்டாக்காது என எண்ணியிருந்த அரசாங்கமானது, ஊழியர்கள் கிளர்ந்தெழுந்த இப் போராட்டத்தின் மூலம் பாரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. அத்தோடு, இலங்கை அரசாங்கமானது, இந்த ஓய்வூதியத் திட்டம் சார்பாகக் குதித்த களத்தில் பலத்த தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பது தெளிவானது.

    சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், ஜனாதிபதியின் உருவப்படத்தைப் பகிரங்கமாகக் கிழித்ததோடு, அமைச்சையும், காவல்துறையையும் எதிர்த்து நின்றது அரச பலத்தை அதிரச் செய்திருக்கிறது. தனது பலத்தை நிரூபிப்பதன் மூலம் எல்லா வெற்றிகளையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியுமென எண்ணியிருந்த அரசாங்கத்தின் எண்ணத்தில் பாரிய அடி விழுந்திருக்கிறது. இவ்வாறாக, ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, அரசாங்கத்துக்கு எப்பொழுதுமே நினைவிலிருக்கும்படி ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இப் பாடமானது, இலங்கையினதும் ஊழியர்களினதும் வரலாற்றில் அழிக்கப்பட முடியாதவொரு குறிப்பாகப் பதியப்பட்டாயிற்று. இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள, போரிடுவதைத் தவிர வேறு வழியில்லையென பொதுமக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# உயிர்மை 
# எங்கள் தேசம், இதழ் 199 - ஜூன் 15, 2011
# வீரகேசரி (கனடா இதழ்), 11.06.2011
# பெண்ணியம்
# ஊடறு

Thursday, June 2, 2011

ரஜினி, கனிமொழி மற்றும் சின்னக் குத்தூசி

             கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும் மிக முக்கியமான இரு நபர்கள் குறித்த உரையாடல்களைத்தான் காணக் கிடைக்கின்றன. தினம் தினம் விதம் விதமாகக் காணக் கிடைத்ததால் ஒரு கட்டத்தில் அச் செய்திகள் அலுத்து விட்டன. அண்ணாச்சி, ஜீவஜோதி, நித்யானந்தா, ரஞ்சிதா போல அண்மைய காலத்தில் உலகத் தமிழர் உரையாடல்களை ஆக்கிரமித்துக் கொண்ட இரு இந்திய ஜோடிகள் ரஜினிகாந்த் மற்றும் கனிமொழி.

                 இருவருமே பிரபலங்கள். இருவர் குறித்தும் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவர் மருத்துவமனையிலும் மற்றவர் திஹார் சிறைச்சாலையிலும் சிறைப்பட்டிருக்கிறார்கள். இருவர் குறித்தும் உரையாட, சமூகத்தில் பல விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் ஊடகங்களும் கலந்துரையாடல்களும் அவர்களது மர்மப் பக்கங்களையே திறக்கப் பார்க்கின்றன. ரஜினியைப் பற்றிப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரது உடல் நலப் பிரார்த்தனைகளே அதிகமதிகம் சமூக இணையத் தளங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் கனிமொழி பற்றிய உரையாடல்களும், விவாதங்களும், 'அவர் ஒரு பெண்' என்ற அர்த்தமும், அடிப்படைக் காழ்ப்புணர்ச்சியும் மிகைத்த கருத்துப் பரிமாற்றங்களாகவே இருக்கின்றன.

           ஜெயலலிதாவின் வெற்றியை இலங்கை அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே இலங்கைத் தமிழ் மக்களின் இன்னல்களைத் தீர்ப்பேன் எனவும், கச்சதீவினை எப்பாடு பட்டேனும் பெற்றுத் தருவேன் எனவும் ஜெயலலிதா வழங்கிய வாக்குறுதிகளோடு தொடர்ந்த ஜெயலலிதாவின் வெற்றியானது இலங்கை அரசினைப் பெரிதும் அச்சுறுத்தியபடியே இருக்கிறது. முகத்துக்கு நேராகப் புன்னகைத்தபடியே தான் செய்துவரும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் படைத்தவராக, ஓர் நாள் முன்னே வந்து நிற்பார் என ஜெயலலிதா குறித்து, மஹிந்த ஒரு போதும் எண்ணியிருந்திருக்க மாட்டார் எனத் தெரிகிறது.

              யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இந்திய அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் அவசியமாக இருந்ததெனவும், பொது மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய அரசாங்கம் நன்கு அறிந்திருந்ததென்றும் தான் நம்புவதாக ஐ.நா.சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் திரு. கோர்டன் வைஸ் இப்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லவேளை, அக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலில்லை. அதுவே ஈழ யுத்தம் குறித்து கருணாநிதி ஆட்சியின் மீது ஜெயலலிதா பல குற்றச் சாட்டுக்களை தைரியமாக முன்வைக்கக் காரணம் எனவும் கூறலாம். அக் குற்றச் சாட்டுக்களும், அதற்கான தீர்வுகளென்ற சூளுரைகளும், பெண்களுக்கான தங்கப் புதையல் மற்றும் இன்ன  பிற வாக்குறுதிகளும்தான் அவரை வெற்றியின் பக்கம் இழுத்துச் செல்லக் காரணங்களாக இருக்கக் கூடும். எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, எத்தனை வாக்குறுதிகள் மறக்கடிக்கப்படுகின்றன என இனி பொறுத்திருந்து பார்க்கலாம்.

                ஜெயலலிதாவின் வெற்றியோடு எழுந்திருக்கிறது கனிமொழியின் தோல்வி. அவருடனேயே போய் சிறைக்குள்ளும் எட்டிப் பார்க்கின்றன ஊடகங்கள். அவரது சிறையறை எப்படியிருக்கும் என்ற ஊகத்தோடு, நேரடியாகப் பார்த்த அறிவிப்புக்களும் தவறாது இடம்பெறுகின்றன. பதினைந்துக்குப் பத்து அடி அளவேயான அறையானது மூன்று பக்கங்கள் சுவராலும் ஒரு பக்கம் கம்பிகளாலும் ஆனதென பிரபலமான ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. எழுதியவரை அழைத்து 'ராசா அப்படியிருந்தால்தான் அது சிறை' எனத் தெளிவுபடுத்த வேண்டும் போலிருக்கிறது. பழங்கால வடிவத்துக் கழிப்பறையும் அதே அறையில் அமைந்திருந்ததாக அதே ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 'அவ்வாறான கழிப்பறைகளைத் தன் வாழ்நாளில் பயன்படுத்தியிருப்பாரா கனிமொழி?' என்ற 'முக்கியமான' விவாதம் சமூக இணையத்தளங்களில் இடம்பெறுகின்றன. குற்றம் புரிந்திருப்பினும், அவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர் என்ற உண்மையை எளிதாக மறந்துவிடுகின்றனர் வாதங்களில் பங்கெடுப்பவர்கள்.

பெண்கள், அதிலும் பிரபலமான பெண்கள் பொது வாழ்க்கையில் ஏதேனுமொன்றைச் செய்துவிடுகையில் அவர்கள் குறித்த, மட்டமான கருத்துக்கள் பரவுவது இன்று, நேற்று நிகழ்ந்ததில்லை. அக் காலத்திலும் நடந்தவைதான். ஆனால் நாம் இன்னும் அக் காலத்தில்தான் இருக்கிறோமா? திரைப்படங்களில் நடிக்கும் பெண்கள் திரையில் அழும்போது சேர்ந்து துடிக்கும் சமூகத்திடம், பொதுவெளியில் அவர்கள் குறித்தான பார்வை இன்னும் ஒரு நிலையைத் தாண்டி உயரவில்லை. பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கப் பழக்கப்படுத்தும் விளம்பரங்கள் சாலை முனைகளிலும், வீட்டுக் கூடங்களிலும், வெள்ளித் திரைகளிலும், ஊடகங்களிலும் இப்பொழுதும் கூட அதிகளவு மின்னிக் கொண்டிருக்கையில் இளஞ் சமுதாயத்தினரிடம் பெண்கள் குறித்தான பார்வை உயர்ந்திருக்குமென எண்ணுவது கூடப் பிழையானது. சிறையில் கனிமொழிக்கு மூக்குத்தி மறுக்கப்படுதலும், முப்பது அடி உயரத்தில் மின்விசிறி பொருத்தப்பட்டிருப்பதுவும் கூட கிண்டல் உரையாடல்களுக்கான கருப்பொருள்களாக இணையத்தளங்களில் வலம் வருகின்றன.

                இச் சிறை வாழ்க்கை, ஒரு வகையில் கனிமொழிக்குக் கிடைத்த ஓய்வு எனச் சொல்லலாம். தேர்தல் காலங்களில் அலைய நேர்ந்த உடல் மற்றும் மன உளைச்சலைக் குணப்படுத்தும் ஒரு ஓய்வாக இதை அவர் ஏற்றுக் கொள்ளலாம். புத்தகங்கள் வாசிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. 'கண்காணாத தீவொன்றுக்கு சிறை செல்ல நேரிட்டால் என்ன புத்தகங்களைக் கொண்டு செல்வீர்?' என உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான அமினாட்டா ஃபோர்னாவிடம் கேட்டபோது, அவர் 'அகராதியைக் கொண்டு செல்வேன்' எனச் சொன்னது போல (நன்றி - 'வியத்தலும் இலமே' அ.முத்துலிங்கம்) கனிமொழியிடம் விசாரித்திருக்கிறார்கள். அவரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இருந்ததாகப் பட்டியலிடுகின்றன ஊடகங்கள்.

            இந்த வகையில் ரஜினிக்கு எந்தத் தொந்தரவுமில்லை. மருத்துவமனை எல்லா வசதிகளோடும் அவரை கணம் கணமாகக் கவனித்துச் சிகிச்சையளிக்கிறது. வைத்தியர்கள் பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள். ரசிகர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். நடிகர் தனுஷ், தனது மனைவியோடு மாமனார் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் சற்று ஆறுதலடைகின்றனர். 'ரஜினி நலம்' என்ற செய்தியோடு அப் புகைப்படம் உலகெங்கும் அனுப்பப்படுகிறது. அடுத்த நாள் செய்திப் பத்திரிகைகளுக்கு முன்பக்கத்தில் வெளியிட புகைப்படத்தோடு ஒரு செய்தி கிடைத்தாயிற்று. பத்திரிகைகள் விற்பனையோடு எல்லாம் நலம். இதே செய்தி சமூக இணையத்தளங்களில் மாற்றி மாற்றிப் பகிரப்படும்போதுதான் பெரும் அலுப்பு தோன்றுகிறது. இதற்காகவே ரஜினி சீக்கிரமே முழுமையாகக் குணமாகி வீடு போனால் நல்லது என்ற எண்ணம் எழுகிறது.

                 இப் பிரபலங்கள் குறித்து இங்கு கவனிக்கவும், விவாதிக்கவும் வேண்டிய விடயமே வேறு. ஒருவர், எங்கோ ஒரு கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்து, இந்திய நட்சத்திரமாக உயர்ந்து, மிகுந்த புகழுக்குரியவராகி, இன்னும் மக்களின் வேண்டுதலில் இருப்பவர். மற்றவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, புகழுக்குரியவராகி, தான் இருந்த உயரத்தினின்றும் வீழ்ந்து இன்று மக்களின் தூற்றுதல்களுக்கு ஆளாகி இருப்பவர். இதற்கான காரணங்களும், திறமைகளும், வெற்றி பெற்றவரின் முயற்சிகளும்தான் விவாதிக்கப்படுகையில் நல்ல கருத்துக்களை எழுப்பக் கூடியன. அதைத் தவிர்த்து கிளம்பும் விவாதங்கள் எதுவும் நல்ல விளைவைப் பெற்றுத் தருதல் சாத்தியமேயில்லை.

                இவ்விருவர் குறித்த செய்திகளால் நிறைந்த இணையத் தளங்களும் வலைப்பூக்களும் பெரிதாகச் சொல்ல மறந்த மறைவுச் செய்தியொன்றும் இருக்கிறது. அது எழுத்தாளர் சின்னக்குத்தூசியின் மறைவு. சின்னக்குத்தூசி, கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட இவரின் சொந்தப் பெயர் இரா.தியாகராஜன். எனினும் வாசகர்களால் 'சின்னக்குத்தூசி' என்றே பெரிதும் அறியப்பட்டவர். ஒரு பிரபலமான அரசியல் எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.

               உண்மையைச் சொல்லப் போனால் சின்னக்குத்தூசியின் எந்தவொரு எழுத்தையுமே நான் வாசித்ததில்லை. நான் வாசித்திருப்பதெல்லாம் ஒரு நேர்காணல். எழுத்தாளர்கள் கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரால் நேர்காணப்பட்டு, காலச்சுவடு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்ட 'உண்மை சார்ந்த உரையாடல்கள்' தொகுப்பிலிருக்கும் சின்னக்குத்தூசியின் நீண்ட நேர்காணல். நேர்த்தியானதும் நேர்மையானதுமான பதில்களால் தன் வசம் ஈர்க்கிறார் சின்னக்குத்தூசி. இதுவே அவர் மீதான அபிமானம் எழக் காரணமாயிற்று. சமூகம், சாதி நிலவரம், மதக் கலவரங்கள், அரசியல், கட்சி நிலைப்பாடுகள், பெருந் தலைவர்களுடன் தனக்கிருந்த உறவு முறை எனப் பலவற்றை வெளிப்படையாக உரையாடியிருக்கிறார் சின்னக்குத்தூசி. இவ்வாறான ஒரு அரசியல் எழுத்தாளரை இழந்தமை தொடர்பில் எவ்விதமான துயரோ, கருத்துப் பகிர்வுகளோ சமூக வலைத்தளங்களில் இல்லை. எல்லாவற்றிலும் நான் மேற்சொன்ன இரு பிரபலங்களும் மட்டும்தான் நிறைந்திருக்கிறார்கள்.

                    ஊடகங்கள் இப்பொழுதும் கனிமொழியின் சிறையருகேயும், ரஜினியின் மருத்துவமனை அறை வாயிலிலும் காத்துக் கொண்டிருக்கக் கூடும். கனிமொழி விடும் சிறு தும்மல் கூட உடனடியாக பெரிய செய்தியாக்கப்பட்டு, இணையத் தளங்களில் பகிரப்பட்டு, அடுத்த கலந்துரையாடலுக்கான தலைப்பாகக் கூடும். நடிகர் தனுஷ் தனது மாமனாரின் புதிய புகைப்படங்களைத் தொடர்ந்தும் ட்விட்டரில் வெளியிடக் கூடும். இவற்றோடு விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு, வேலையின்மை எல்லாவற்றையும் மறந்த சனங்கள் இப் பிரபலங்கள் குறித்த புதிய செய்திகளுக்காக தினந்தோறும் காத்துக் கொண்டிருப்பதுவும் தொடரும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை