Monday, August 4, 2014

'இலங்கை - கறுப்பு ஜூன் 2014' முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !

இலங்கை - கறுப்பு ஜூன் 2014
முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே காலச்சுவடு ( இதழ் - 159, பக்கம் - 26) இதழில் 'எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்' எனும் தலைப்பிலும், உயிர்மையின் உயிரோசை (இதழ் - 156, ஆகஸ்ட் 2011) இதழில் ' 'கிறீஸ்' மனிதர்களின் மர்ம உலா - இலங்கையில் என்ன நடக்கிறது?' எனும் தலைப்பிலும் விரிவாகத் தந்திருந்தேன். எனவே இக் கட்டுரையில் நான் பழையவற்றை விடுத்து கடந்த ஜூன் 2014 இல் இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவர வன்முறை குறித்த உண்மைச் சம்பவங்களையும் அண்மைய நிலவரங்களையும் முழுமையாகத் தருகிறேன்.

            கடந்த ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட
இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்கு திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின்  யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித் திட்டமாகும்.

          பேரினவாத வன்முறையாளர்களின் 'பொதுபலசேனா' எனும் இயக்கமானது, ஊர் ஊராக கூட்டங்கள் நிகழ்த்தி 'இலங்கையானது புத்தரின் தேசம், இந் நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது' என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளை பல விதமாக துவேசத்தோடு பரப்பியது. எவ்வாறெனில், 'ஒரு பௌத்தனை வளர்த்தெடுப்பதே உங்கள் கடமையாகும். எனவே தமிழ், முஸ்லிம் இனத்தவர்களது வர்த்தக நிறுவனங்களுக்குச் செல்லாதீர். அவர்களது வாகனங்களில் பயணம் செய்யாதீர். அவர்களது பொருட்களை வாங்காதீர்' என்பது போன்ற மோசமான விடயங்களைப் பரப்பியது.

          புனித பௌர்ணமி தினங்களில் பௌத்த விகாரைகளில் பௌத்த போதனைகளோடு சொல்லப்படும், பௌத்த பிக்கு ஞானசார தேரவின் வசீகரிக்கும் துவேஷப் பேச்சால் மயங்கியவர்கள் அவரைப் பின்பற்றி அவரின் பின்னால் செல்லத் தொடங்கினர். அவரைப் பின்பற்றும் கூட்டம் இலங்கை முழுவதும் படிப்படியாக அதிகரித்தது. இந் நிலையில் பொதுபலசேனா இயக்கத்துக்கான உத்தியோகபூர்வமான அலுவலகங்கள், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நாட்டின் பிரதான நகரங்களில் திறந்து வைக்கப்பட்டன. இது, பொதுபலசேனா எனும் பேரினவாத இயக்கத்துக்கு இலங்கை அரசு அங்கீகாரம் வழங்கியமையையே பறை சாற்றுகிறது.

            இந் நிலையில் இலங்கையில், 2009 ஆம் ஆண்டின் யுத்த முடிவுக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும், முஸ்லிம் மக்களும், முஸ்லிம் பெண்களும் பேரினவாதிகளால் இன்னல்களுக்குள்ளாகிய சம்பவங்களும் பதிவாகிக் கொண்டேயிருந்தன. ஹலால் உணவுகள் தொடர்பான சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. பேரினவாதிகள் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். பொய்யான வழக்குகளில் சிக்க வைத்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை எரித்தனர். பௌத்த பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களை இயங்க அனுமதிக்காது மூடச் செய்தது. ஏனைய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகைக்காக ஒலிபெருக்கிகளில் அதான் ஒலிப்பதற்குத் தடை விதித்தது.

          இவ்வாறான நிலையில் பௌத்த தேசத்தில் எங்கு போனாலும் முஸ்லிம் மக்களுக்கு நீதி கிட்டவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் சச்சரவுகள் என வரும்போது பொறுமை காக்கவும், ஒதுங்கிச் செல்லவும், நிதானமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்தச் சச்சரவுகளுக்கும் வழியில்லாத நிலையில் ஏதேனும் சிறு பொறியாவது கிட்டாதா என பொதுபலசேனா இயக்கம் காத்திருந்தது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் வந்தது.

ஜூன் 12, 2014 - வியாழக்கிழமை - கலவரத்தின் அத்திவாரம்


          தர்கா நகர், அளுத்கம, பேருவளை ஆகியன முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் ஆகும். இவை இலங்கையின் மேல்மாகாணத்தில், களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையோர பிரதேசங்கள் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களின் பிரதான தொழிலாக வியாபாரத்தைச் சொல்லலாம். இரத்தினக்கல் வியாபாரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். சர்வதேச அறபிக் கல்லூரியான ஜாமிய்யா நளீமிய்யா கல்லூரி இங்கிருக்கிறது. புராதன பெருமை வாய்ந்த பல பள்ளிவாசல்கள் இங்கிருக்கின்றன. இப் பிரதேசங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டவை. ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், தப்பிச் செல்ல ஒரு தரை வழி மாத்திரமே உள்ள பிரதேசங்கள் என்பதால் இங்கு வாழும் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது எளிது.

          எனவே பொதுபலசேனா இயக்கம் இந்த ஊர்களைக் குறி வைத்ததில் ஆச்சரியமில்லை. இந்தக் கலவரம் ஆரம்பிக்கும் முன்னரே பொதுபலசேனா இயக்கமானது, அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை எரித்தும், சேதப்படுத்தியும், வீண் வம்புக்கிழுத்தும் பிரச்சினைக்குள்ளாக்க முயற்சித்தது. எனினும் முஸ்லிம்களின் பொறுமை காரணமாக பேரினவாதிகளின் முயற்சிகள்  சாத்தியப்பட்டிருக்கவில்லை.

            இந் நிலையில் 12 ஆம் திகதி வியாழக்கிழமை, பௌத்தர்களின் புனித தினமான பொஸொன் பௌர்ணமி தினம் வந்தது. தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரர் பகல் நேரம், மோட்டார் வாகனமொன்றில் தனது சாரதியுடன் ஒரு தெருவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். குறுகலான தெரு. எதிரே முஸ்லிம் இளைஞர்கள் இருவர் வீதியில் நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர். வண்டியின் சாரதியான சிங்களவர், அந்த இளைஞர்களை தூஷண மொழியில் மோசமாகத் திட்டுகிறார். பதிலுக்கு முஸ்லிம் இளைஞர்களும் கோபமாகத் திட்ட சத்தம் கேட்டு மேலும் முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்து சாரதியை சமாதானப்படுத்தி, சாரதியையும் பிக்குவையும் பத்திரமாக அங்கிருந்து  அனுப்பி வைக்கின்றனர்.

            அங்கிருந்து சென்ற சாரதி, மாலை நேரம் பேச்சுவாக்கில் பொதுபலசேனா உறுப்பினர் ஒருவரிடம் பகல் நடந்த நிகழ்வை விவரிக்கின்றார். முஸ்லிம்களுடனான பிரச்சினையொன்று எப்பொழுது வரும் எனக் காத்துக் கொண்டிருந்த பொதுபலசேனா இயக்கத்துக்கு அது போதுமானதாக இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவைக் கூட்டிக் கொண்டு போய் அரச வைத்தியசாலையில் அனுமதித்தது. காவல்நிலையம் சென்று முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் சேர்ந்து ஒரு பௌத்த பிக்குவை மோசமாகத் தாக்கினர் என்று முறைப்பாடு செய்தது. சிங்கள ஊடகங்களுக்கு இவ் விடயத்தைத் தெரிவித்தது. அவையும் இச் செய்திக்கு முன்னுரிமை வழங்கி, பிக்கு வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருக்கும் காட்சியையும் காட்டி, முழு இலங்கைக்கும் விடயத்தைத் தெரிவுபடுத்தியது. நாடு முழுவதிலுமுள்ள பேரினவாத இயக்க உறுப்பினர்களை ஒன்று சேர்க்க அச் செய்தி போதுமாக இருந்தது.
    
     தவறேதுமில்லாமல் வீணாக தம் மீது பழி சுமத்தப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக காவல்நிலையம் சென்று உண்மை நிலையை எடுத்துரைத்தனர். என்றபோதிலும் போலிஸ் அவர்களைக் கைது செய்து கூண்டிலடைத்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தியறிவிக்கவே பொதுபலசேனா இயக்க உறுப்பினர்களும், இன்னுமொரு இனவாத இயக்கமான இராவண பலய இயக்க உறுப்பினர்களும் சேர்ந்து அளுத்கம காவல்நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். அந்த நான்கு இளைஞர்களையும் உடனடியாகத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர்.

            ஆர்ப்பாட்டம் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்று இறுதியில் கொழும்பு - காலி பிரதான வீதியின் போக்குவரத்து நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்தது. பதற்றமான சூழல் எங்கும் நிலவியது. நிலைமை தமது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை அறிந்த அரசு, சில அமைச்சர்களை அனுப்பி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள், அமைச்சர்களின் வாகனங்களுக்கும் தாக்குதல்கள் நடத்தவே, உடனடியாக இலங்கை போலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு விஜயம் செய்தார். கண்ணீர்க்குண்டுப் பிரயோகத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு காவல்துறையைப் பணித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்க் குண்டுப் பிரயோகம் நடத்தப்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடினர்.

            ஆவேசம் கொண்டு கலைந்துசென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தர்கா நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை இலக்காகக் கொண்டு கற்களை வீசி சேதப்படுத்திவிட்டே சென்றுள்ளனர். முஸ்லிம் மக்கள் கலகத்துக்குச் செல்லாது பொறுமை காக்கவே, நிலைமை இரவு 10.30 மணியளவில் முற்றாக சீரடைந்ததாகவும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலிஸால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 13, 2014 - வெள்ளிக்கிழமை

            கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். அவர்களை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளையிடுகிறார். இளைஞர்களின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், இளைஞர்கள் சிறையில் வைத்து காவல்துறையினரால் தாக்குதல்களுக்குள்ளாகியதை சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நீதவான், அவர்களை தனித் தனிக் கூண்டிலடைக்குமாறு கட்டளையிடுகின்றார்.

ஜூன் 14, 2014 - சனிக்கிழமை

            முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு வித பதற்ற நிலைமை பரவியிருக்கிறது. முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. முஸ்லிம் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்லாமல் வீடுகளுக்குள் அச்சத்தோடு முடங்கிக் கிடக்கின்றனர். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கடமையாற்றுபவர்களும் விடுமுறை தினம் காரணமாக தமது ஊர்களுக்கு வந்து தங்கியிருக்கின்றனர்.

ஜூன் 15, 2014 - ஞாயிற்றுக்கிழமை - இனக் கலவரத்தின் முதல் நாள்

            புனித பொஸொன் பௌர்ணமி தினத்தன்று பௌத்த பிக்கு தாக்குதலுக்குள்ளானதைக் கண்டித்து, பொதுபலசேன இயக்கமானது, அன்றைய தினம் அளுத்கம பிரதேசத்தில் ஒரு மாநாடும், பேரணியும் நடத்தவிருப்பதான தகவல் கசிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் அச்ச சூழ்நிலை பரவுகிறது. உடனே செயற்படும் முஸ்லிம் தலைமைகள் 'பொதுபலசேனா உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும், தற்போதைய சூழ்நிலையில் இப் பிரதேசத்தில் கூட்டங்களையும், பேரணியையும் நடத்துமானால், அது ஆபத்தினை ஏற்படுத்தும்' எனத் தெளிவுபடுத்தி, இக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி போலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் மகஜரொன்றைக் கையளிக்கின்றனர்.

          இக் கடிதத்தில் முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் என பல அமைப்புக்கள் கையெழுத்திட்டிருந்தன. என்றபோதும் அன்று அக் கூட்டத்துக்கோ, பேரணிக்கோ தடைவிதிக்கப்படவில்லை. அன்றே அவற்றுக்குத் தடை விதித்திருந்தால் பல அழிவுகளையும், சேதங்களையும் தவிர்த்திருக்கலாம் என போலிஸ் மா அதிபர் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

            கொடுத்த கடிதத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள 22 காவல்நிலையங்களிலிருந்து போலிஸார் வரவழைக்கப்பட்டு தர்காநகரில் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்தோடு கலகத் தடுப்புப் போலிஸாரும் கவச வாகனங்களோடு தயாராக இருக்கின்றனர்.

            ஏற்கெனவே திட்டமிட்டதன்படி இராவண பலய, புத்த சாசன கமிட்டி மற்றும் பொதுபலசேனா இயக்கம் ஆகியவை ஒன்று சேர்ந்து  கூட்டத்தை நடத்துகிறது. நாடுமுழுவதிலிருந்தும் திரண்டு வந்திருந்த மேற்படி இயக்க உறுப்பினர்களின் முன்னிலையில் பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளரான கலகொட அத்தே ஞானசேர தேரர் இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாக மிகக் கொச்சையான மொழியில் உரையாற்றுகிறார். (வீடியோ  ) அந்த உரை கூட்டத்தை உசுப்பேற்றுகிறது.

            கூட்ட முடிவில், முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் சித்தரித்த புத்த பிக்கு தங்கியிருக்கும் விகாரைக்கு, முஸ்லிம் பிரதேசங்களினூடாக பேரினவாத உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்கின்றனர். ஊர்வலம் செல்லும் வீதியோரமாக அமைந்திருக்கும் பள்ளிவாசல் மீதும், அங்கு தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் மீதும் ஊர்வலத்தில் வந்த பேரினவாதிகள் குழு தூஷண வார்த்தைகளால் திட்டிக் கொண்டே கற்களாலும், தடிகளாலும் தாக்கத் தொடங்குகிறது. (ஆதார வீடியோ)

   
       அதிர்ச்சியுற்ற முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல் சேதமுறாத வண்ணம், தாக்குதலைச் சமாளிக்க அரணாக நின்று காயமடைகின்றனர். அதற்கு மேலும் பொறுமை காக்க இயலாத முஸ்லிம் இளைஞர்கள் பதிலுக்கு ஆயுதங்களேதும் இல்லாத நிலையில் கற்களைக் கொண்டு திருப்பித் தாக்குகின்றனர். இதனால் வெருண்டோடும்  பேரினவாத பௌத்த இளைஞர்கள் நகரிலிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொள்கின்றனர். கடைகளை உடைத்து பெறுமதியானவற்றை எடுத்துக் கொண்டு, மீதமானவற்றை சேதப்படுத்தி கடைகளை முற்றுமுழுதாக எரித்து விடுகின்றனர். நிலைமையின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போகவே அப் பிரதேசத்தில் மாலை 6.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

            ஊரடங்குச் சட்டம் வன்முறையாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. பள்ளிவாசல் தாக்கப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டதுமே ஊரிலிருந்த அனைத்து முஸ்லிம் ஆண்களும் பள்ளிவாசலில் ஒன்று சேர்ந்திருந்தனர். இந் நிலையில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டதும் அவர்களால் தம் வீடுகளுக்கு உடனே செல்ல முடியவில்லை. முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் மாத்திரம் தமது வீடுகளில் தனித்து விடப்பட்டனர்.

  
        எனவே எதிர்க்க யாருமற்ற வன்முறையாளர்கள் சுதந்திரமாக தமது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர். பகிரங்கமாக கைகளில் ஆயுதங்களோடு பேருவளை நகரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். செல்லும் வழியில் காண நேரும் பள்ளிவாசல், முஸ்லிம் வீடுகள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி தீயிட்டு ரசித்தனர். இவ்வாறு சென்று அடுத்த முஸ்லிம் பிரதேசமான பேருவளை நகரத்திலும் தமது அட்டகாசங்களைத் தீவிரப்படுத்தவே அங்கும் இரவு 8 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
     
       முஸ்லிம் பிரதேசங்களான அளுத்கம, பேருவளை, மருதானை, வெலிப்பிட்டிய, அம்பேபிட்டிய ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த போதிலும் கூட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. முஸ்லிம் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. தமது பிரதேசங்களிலிருக்கும் பள்ளிவாசல்களும் எரிக்கப்படவே, கலவரக்காரர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிய முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் தப்பித்து வந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்தனர். பள்ளிவாசலுக்கு வெளியே முஸ்லிம் ஆண்கள் காவலுக்கு நின்றனர்.

ஜூன் 16, 2014 - திங்கட்கிழமை - இனக் கலவரத்தின் இரண்டாம் நாள்

            ஞாயிறு நள்ளிரவு 12.30 ஐத் தாண்டியபோது வன்முறையாளர்கள் குழு வெலிப்பிட்டிய பள்ளிவாசலுக்கு வந்து தம் தாக்குதலை ஆரம்பிக்கிறது. பள்ளிவாசலையும், தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டி அரணாக முஸ்லிம் ஆண்கள் எல்லோரும் பள்ளிவாசலுக்கு வெளியே கைகோர்த்து நிற்கின்றனர். அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காவலுக்கு இருந்த ஆண்கள் எவரும் பின்வாங்கி ஓடவில்லை. இதனால் இளைஞர்கள் சிலர் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

            விடிந்ததும் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் 2500 பேர் மீதமிருந்த ஆண்களால், பேருவளை ஜாமியா நளீமியா கல்லூரியில் கொண்டு வந்து விடப்படுகின்றனர். அங்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்பட்டதால், நண்பகலாகும் போது பேருவளை ஹுமைஸரா கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தர்கா நகர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் பள்ளிவாசல்களிலும், பாடசாலைகளிலும் தங்க வைக்கப்படுகின்றனர்.


            விடிவதற்குள்ளாக கடந்த ஒரு இரவில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பதுக்கும் அதிகமான வீடுகளும், இருபதுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களும், எண்ணிக்கையிலடங்காத வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களும், ஆட்டோக்களும் சேதப்படுத்தப்பட்டும் எரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இங்கு போலிஸ் மற்றும் விஷேட காவற்படையின் முன்னிலையிலேயே கலவரக்காரர்கள் வந்து வன்முறைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

          அன்றைய தினம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கிறது. பட்டினியோடும், காயமடைந்தும் இருக்கும் மக்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து உலர் உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும், ஆடைகளும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. என்றபோதும் அவை எவையும் பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச் சேரவில்லை. வன்முறையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் கலவரக்காரர்களால் இடைமறிக்கப்பட்டு கலவரக்காரர்களால் பொருட்கள் பறிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அமுலிலிருக்கிறது. வன்முறையாளர்கள் ஆயுதங்களோடு சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தனர்.

            அதே தினம் பகலில், வெலிப்பன்ன எனும் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பலபிடிய பிரதேசத்தில் பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதான நகர்களோடு, அப் பிரதேசங்களைச் சுற்றியுள்ள சிறிய முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் அன்றைய தினம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகிக் கொண்டேயிருந்ததோடு பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

            தர்கா நகரில் இடம்பெறும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இராணுவமே செயற்பட்டு வருவதை எல்லோரும் கண்டுகொண்ட  வேளையில் நகரின் நிலை குறித்து கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவித்து, பள்ளிவாசல் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சுடன் பேசியபோது, 'வீதிக்கு வீதி இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு தருகிறோம்' என்று பாதுகாப்பு அமைச்சு பதில் அளித்தது.

ஜூன் 17, 2014 - செவ்வாய்க்கிழமை - இனக் கலவரத்தின் மூன்றாம் நாள்

            திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து பதற்றமான சூழ்நிலையே  தொடர்ந்தும் நிலவியது. மக்கள் தாம் தஞ்சம் புகுந்திருந்த இடங்களிலேயே அச்சத்தோடும், பட்டினியோடும் பொழுதைக் கழித்தனர். நள்ளிரவு தாண்டியதும் மீண்டும் வெலிப்பன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது.

            அரசாங்கம் பாதுகாப்புக்காக அனுப்பியிருந்த நான்கு போலிஸாரும் தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையுள்ளதாகக் கூறி கை விரித்துவிட்ட நிலையில் வெலிப்பன்ன பிரதேசத்தின் இன்னுமிரு பகுதிகளான முஸ்லிம் கொலனி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை இரண்டிலும் நூறுக்கும் அதிகமான காடையர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினர். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையொன்றுக்குள் பிரவேசித்து  காவலாளியாக நின்ற தமிழ் இன முதியவரைக் கொன்றுவிட்டு பண்ணையை எரித்தனர்.


      மேலும் வெலிப்பன்ன பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதோடு, முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும் எரியூட்டப்பட்டன. இதனால் பதற்ற சூழல் மென்மேலும் அதிகரித்தது. விடிந்ததும் அங்கு விஷேட அதிரடிப்படை வந்து சேர, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

            எனவே, காலை எட்டு மணி முதல் பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்தன. ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகுதான் தர்கா நகர் பிரதேசத்துக்குச் சென்ற சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவின் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. அப் பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

            இந் நிலையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகரத்திலும் பொதுபலசேனா இயக்கமானது, அன்று மாலை ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை நிகழ்த்துவதற்காக தனது துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து ஆட்களைத் திரட்டியது. உடனே செயற்பட்ட மாவனல்லை வாழ் முஸ்லிம் பிரதானிகள், மாவனல்லை நீதிமன்றத்தை அணுகி அப் பேரணிக்கு தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டது. என்றபோதிலும் பேரினவாத இயக்க உறுப்பினர்களின் வருகை தொடர்ந்தும் மாவனல்லையில் அதிகரித்த வண்ணம் இருந்தது. கலகத் தடுப்புப் போலிஸாரும், விஷேட அதிரடிப்படையும் மாவனல்லையில் அன்றிரவு முழுவதும் காவலிருந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் மாவனல்லை நகரம் பாதுகாக்கப்பட்டது. கடந்த மே மாதம் இங்கும் கலவரத்தை ஏற்படுத்தும் முகமாக முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் பேரினவாதிகளால் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் 18, 2014 - புதன்கிழமை - தொடர்ந்தும் பதற்ற சூழ்நிலை

            அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் இன்னுமொரு முஸ்லிம் பிரதேசமான கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நள்ளிரவு சேதமாக்கப்பட்டிருந்ததோடு, இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுதாரித்துக் கொண்ட அப் பிரதேச முஸ்லிம் பிரதானிகள், சிங்கள மதத் தலைவர்களோடு கலந்துரையாடி எவ்வித அசம்பாவிதமும் நேராமல் பார்த்துக் கொண்டனர்.

            வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பேருவளை, அல் ஹுமைஸரா கல்லூரியில் எங்கும் செல்ல வழியற்று தஞ்சமடைந்திருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி, அங்கு வந்த அரச உயரதிகாரிகள் கட்டளையிட்டார்கள். ஒன்றும் செய்ய வழியற்ற மக்கள் செல்ல மறுக்கவே அங்கு சலசலப்பு உண்டானது. சிறிது பதற்றமான சூழ்நிலை உருவானதும், உடனே அரச உயரதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

            அதனைத் தொடர்ந்து, அன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சர்கள் சிலரோடு பேருவளைக்கு விஜயம் செய்தார். இஸ்லாமிய மற்றும் பௌத்த மதத் தலைவர்களையும் பிரமுகர்கள் சிலரையும் வரவழைத்து வழமை போலவே 'விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படும்' என்ற பதிலை அளித்துவிட்டு தனது இருப்பிடத்துக்குத் திரும்பி விட்டார். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்க்கவுமில்லை.

அழிவின் விபரங்கள்

            இக் கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரையில், நடைபெற்ற வன்முறைகளின் போது நிகழ்ந்த உயிர் அழிவு மற்றும் சேத விபரங்களின் முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. சம்பவ இடத்தில் நான்கு பேர் மரணமாகியுள்ளபோதும், இன்னும் பலர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைப்பாடு எவ்வாறும் அமையலாம். அத்தோடு நூற்றுக்கும் அதிகமான காயமுற்ற மக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் கல்லூரியிலேயே தங்கியிருக்கின்றனர். மொத்தமாக சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் எண்ணிலடங்காதவை.

பாரிய இனக் கலவரத்துக்குப் பின்னரான அசம்பாவித சம்பவங்கள்

            இக் காலப்பகுதியில் நாடு முழுவதும் முஸ்லிம் பிரதேசங்களில் பல அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அளுத்கம, தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மருந்தகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதே போல பதுளை, கஹட்டோவிட்ட , குருந்துவத்த, வரக்காபொல, பாணந்துறை நகரங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

            பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்த காரணத்தால், மாவனல்லை நீதிமன்ற வளாகத்தில், காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள் மீது ஆசிட் தாக்குதல் இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்பட்டது. படுகாயப்பட்ட நிலையில் போலிஸார் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
      
      அதே நாளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும், ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் எனும் பிக்கு, கடத்தப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்டு, கொண்டு வந்து வீசியெறியப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து நிர்வாணமாக மீட்கப்பட்டார். அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால் தாக்கியவர்கள், அவருக்கு கத்னா (சுன்னத்) செய்ய முயற்சித்துள்ளமை வைத்திய பரிசோதனைகளை வைத்தும், காயங்களை வைத்தும் தெளிவானது. அதற்கு முன்னரும் கூட பொதுபலசேனா இயக்கத்தினால் பல தடவைகள் இவர் அச்சுருத்தலுக்கும், கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தார். காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்து வந்ததால் வைத்தியசாலையிலும் இவருக்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டது.


       அவ்வாறே பொதுபலசேனா இயக்கத்தால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வந்த 'NO LIMIT - நோ லிமிட்' எனும் பெரிய ஆடை விற்பனை நிலையமானது, 21.06.2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந் தெரியாதோரால் தீ மூட்டி முற்றுமுழுதாக எரிக்கப்பட்டது. முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT , வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றாகும். இந் நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பிரதான நகரங்கள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளன. தீயணைப்பு வண்டிகள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், காலை 6 மணியாகும்போது முற்றிலுமாக எரிந்து முடிந்தது. தீயானது, கட்டிடம் முழுவதும் பரவியிருந்ததாகவும், அணைக்கப் போதுமான தண்ணீர் தம்மிடம் இருக்கவில்லையெனவும் தீயணைக்கும் பிரிவு தெரிவித்தது.

            இவ்வாறாக நாடு முழுவதும், பள்ளிவாசல்கள், முஸ்லிம்கள், முஸ்லிம்களின் வீடுகள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்களும், கழிவு எண்ணெய் வீச்சுத் தாக்குதல்களும் தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டேயிருக்கின்றன.

கலவர காலத்தில் இலங்கையின் முக்கிய தலைமைகளின் கருத்துக்கள்

            இவ்வாறாக கலவரம் தோன்றி, நாட்டில் அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களும் அண்மைய வன்முறை நிகழ்வுகளின் காரணமாக  மனச்சோர்வுக்காளான நிலையிலும், கொந்தளித்த நிலையிலும் காணப்பட்ட போது இலங்கையின் முக்கிய தலைமைகள் கூறிய கருத்துக்கள், மக்களை மென்மேலும் அசௌகரியத்துக்கும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் ஆளாக்கின.

            இலங்கையின் நிலவரத்தில் உடனடியாகப் பங்குகொண்டு அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபலசேனா இயக்கமும், அதன் செயலாளருமான ஞானசார தேரோதான் குற்றவாளி என பகிரங்கமாகத் தெரிந்த பிறகும் கூட "இந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்ட குற்றவாளியை இனங் கண்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்" எனக் கூறியிருப்பதுவும், இலங்கையில் பொதுபலசேனா இயக்கத்தைத் தடை செய்யக் கோரி பலரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில், தடை செய்ய மறுத்து அதில் உறுதியாக நிற்பதுவும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் அவர் இருப்பாரோ என அவர் மீது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த ஏதுவாகியிருக்கிறது.
  
          அதே வேளை, முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான ஏ.எச்.எம். அஸ்வர் "அளுத்கம கலவரம் துரதிர்ஷ்டமானது. இந்நிலையில் வன்முறைகளை சமூக வலைத்தள குறுந் தகவல்கள் ஊடாக சர்வதேச மயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு உள்ளுர் தீய சக்திகள் முயற்சிக்கிறார்கள். எனவே, இந்த நிலையில் ஜனாதிபதியைப் பாதுகாக்க வேண்டும்.” ( செய்தி மூலம் தினக்குரல் 17-06-2014, பக்கம் 02) என அறிவித்ததும் முஸ்லிம் மக்கள் தம் தலைமைகள் மீதும் நம்பிக்கை இழந்தனர்.


       கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டிருக்கும் பொது சன உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா "ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து தந்தால் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நான் தயார்." எனப் பகிரங்கமாக மேடைகளில் முழங்கினார்.

            பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தர்கா நகர், பேருவளை பிரதேசங்களுக்குப் பொறுப்பான ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், தனக்குப் பொறுப்பான பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் அப் பிரதேசங்களுக்குச் செல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தார். காரணம் கேட்டபோது "முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேலைகள் காரணமாக என்னால் ஊர் செல்லமுடியவில்லை. இனிமேல்தான் செல்லவேண்டும்" (செய்தி மூலம் விடியல் 17-06-2014 17:58 ) என்றார்.
    
        இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், உடனே எந்த முயற்சி எடுத்தேனும் அதைத் தடுக்கவேண்டியவரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இந்த வன்முறைகளின் முன்னிலையில் மௌனம் சாதித்தார். வன்முறைகள் நடைபெற்ற பிரதேசங்களுக்கு உடனடியாக இவர் சமூகமளிக்கவில்லை. இதனால் நாட்டின் முஸ்லிம் சமூகம், அவரை தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வற்புருத்தியது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் 'இக்கட்டான சமயத்தில் காப்பாற்றாத, எந்த விதமான உதவியும் செய்ய முயற்சிக்காத ஒரு தலைவர் நமக்குத் தேவையில்லை' எனக் கூறி அவரை பதவியை விட்டு விலகும்படி கோரிக்கை விடுத்தனர். இந் நிலையில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் தற்சமயத்தில் முஸ்லிம்கள் பிரச்சினை பற்றிப் பேசி அவருக்கு மேலும் அழுத்தத்தைக்  கொடுக்க விரும்பவில்லை' என்றும் 'முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்கினால், தான் தன் பதவியை இராஜினாமா செய்யத் தயார்' எனவும் கூறி, தனது பதவியை பாதுகாத்துக் கொண்டார்.

            அரசு ஒருபோதும் சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியதும் இல்லை. வழங்கப் போவதும் இல்லை என்பது உறுதியாக அவருக்குத் தெரிந்திருக்கிறது. இவ்வாறாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தை, அவர்கள் நம்பியிருந்த எல்லாத் தலைவர்களும் கூட இறுதியில் கை விட்டனர்.

இனக் கலவர நாட்களில் இலங்கை ஊடகங்களின் அமைதி

            வன்முறை நிகழ்ந்த நாட்களில் இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே கலவரம் தொடர்பான உண்மையான செய்திகளை வெளியிட மறுத்தன. அதற்கு முன்பு சிறு சிறு விபத்துச் செய்திகளைக் கூட Flash News, Breaking News என முந்திக் கொண்டு தரும் செய்திச் சேவைகள் எவையும், வன்முறை குறித்த எந்தத் தகவல்களையும் இலங்கை மக்களுக்கு வழங்காமல் மூடி மறைத்தன.

            இந் நிலையில் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் வன்முறை குறித்தான தகவல்களையும், சம்பவங்களையும் உடனடியாகப்  பகிர்ந்து கொண்டதால் பல சேதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிந்ததோடு, இலங்கையைத் தாண்டி சர்வதேச ரீதியிலும் கூட இந்த அநீதியை உடனடியாகத் தெரியப்படுத்த முடிந்தது.

சர்வதேச அழுத்தமும், ஆர்ப்பாட்டங்களும், ஹர்த்தாலும்

    
        சமூக வலைத்தளங்களின் ஊடாக வன்முறை நிகழ்வுகள் உலகம் முழுவதும் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்ட நிலையில் இந்தியா, லண்டன், குவைத், பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் இன வன்முறைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் மறுநாளே பதிவு செய்யப்பட்டன. சர்வதேசம் முழுவதும் இலங்கையின் தற்போதைய இனக் கலவர வன்முறைச் செய்திகள் பரவியதும், வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. இதனால், பல இஸ்லாமிய நாடுகள் 'உடனடியாக வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லையானால், இலங்கையருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர நேரிடும்' என அரசை அச்சுறுத்தின.

            அத்தோடு பங்களாதேஷ், ஈரான், ஈராக், எகிப்து, இந்தோனேஷியா, மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பாகிஸ்தான், பாலஸ்தீன், துருக்கி, துபாய், சவூதி அரேபியா, கத்தார், குவைத் ஆகிய நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்தும்படி பலமாகக் கோரிக்கை விடுத்தன. கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், தம் நாடுகளில் பணி புரியும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களை தம் நாடுகளிலிருந்து திருப்பியனுப்புவதாக அச்சுறுத்தின. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நாட்டின் அந்நிய செலாவணி வருமானம் பாதிக்கப்படும் என அரசாங்கம் பயந்தது. பாரியளவிலான வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
 
            இலங்கையிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என எல்லா இனத்தவரும் இணைந்து கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். அத்தோடு 19 ஆம் திகதி வியாழக்கிழமை, நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலும், கடையடைப்பும், ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

            இன்னும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், அமெரிக்கத் தூதரகம், .நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அல் ஜஸீரா, பீபீஸி போன்ற சர்வதேச ஊடகங்கள் மற்றும் இந்தியா, தமிழகத்தின் பல தலைவர்கள் எனப் பலரும் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, உடனடியாக வன்முறைக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கை அரசாங்கத்தைக் கோரினர்.

வன்முறைகளுக்கும், அசம்பாவித சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் யார்?

            இப்பொழுது உலகம் முழுவதிலிருந்தும் இலங்கையை நோக்கிக் கேட்கப்படும் கேள்வியானது 'வன்முறைகளுக்கும், அசம்பாவித சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் யார்?' என்பதாகும். இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, அரசின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் பொதுபலசேனா இயக்கம், இராவண பலய இயக்கம் மற்றும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் உறுப்பினர்களேயன்றி நாட்டின் ஒட்டுமொத்த சிங்களவர்களுமல்ல.
  
          ஏனெனில் வன்முறையின் போது முஸ்லிம்களைக் காப்பாற்ற முயற்சித்த எத்தனையோ சிங்கள இன மக்களும் கூட பேரினவாதிகளால் படுமோசமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களைத் தனது வாகனத்திலேற்றி வந்து காப்பாற்றிய, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவர். முஸ்லிம்களைக் காப்பாற்றப் போய் இவரும், இவரது வாகனமும் கூட பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். நடந்த அசம்பாவித நிகழ்வுக்கு மிகவும் மனம் வருந்திய பல சிங்களவர்கள் பொதுபலசேனா அமைப்பை இலங்கையில் தடை செய்யும்படியே கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

            சிங்கள இனத்தவர்கள் பலராலும், பௌத்தத்தைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு பௌத்த கொள்கைகளை சீரழிக்கவென உருவாகியுள்ள பொதுபலசேனா இயக்கமும், அதன் செயலாளரான ஞானசார தேரோவும் தொடர்ந்தும் தூஷிக்கப்படும் நிலையில், தன் மீது இவ்வாறாக தொடர்ந்தும் அழுத்தம் விடுக்கப்படுமானால் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கையின் பேரினவாதிகள் எல்லோருமே ஞானசார தேரோவின் அபிமானிகளாக இருப்பதால், அவரின் இந்த அறிக்கைக்குப் பயந்தோ என்னமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பொதுபலசேனா இயக்கத்தைத் தடை செய்யவோ, ஞானசார தேரோவை கைது செய்யவோ முடியாதென்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சதி

            கிட்டத்தட்ட 20 மில்லியன்கள் அளவான மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 10% அளவேயாகும். இந் நிலையில் யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் மக்கள் மீது பேரினவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கம் திணிக்கும் அழுத்தம் சொல்லி மாளாது.

            இஸ்லாமியப் பெயர்களில் இருக்கும் வீதிகளின் பெயர்ப் பலகைகளை, படையோடு சென்று அழித்து சிங்களப் பெயர்களுக்கு மாற்றுவது, முஸ்லிம்களுக்கு சொந்தமான உடைமைகளை சேதப்படுத்துவது, பள்ளிவாயில்களுக்குள் அசுத்தங்களை எறிவது, பயணங்களை மேற்கொள்ளும் முஸ்லிம்களைத் தாக்குவது, ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை எனப் பலவற்றையும் எந்தத் தயக்கமுமின்றி முஸ்லிம்கள் மீது பிரயோகித்துக் கொண்டேயிருந்தது.

           இந் நிலையில் கடந்த மே மாதம் முஸ்லிம்களின் கைத்தொலைபேசிக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அது ஒரு எச்சரிக்கைச் செய்தி. 'மே மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் முஸ்லிம் பெண்களைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவனமாக இருந்துகொள்ளுங்கள்' என அக் குறுஞ்செய்தி சொன்னது. யாரால் அனுப்பப்பட்டது எனத் தெரியாத போதும், இச் செய்தி நாடெங்கிலும் முஸ்லிம்களிடத்தில் ஒரு வித பதற்றத்தைத் தோற்றுவித்தது. இரகசியத் தகவல் வெளியானதை அறிந்த பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அக் குறுஞ்செய்தி ஒரு வதந்தி என அறிவித்தது. (ஆதாரம் - விடிவெள்ளி வாரப் பத்திரிகை, 2014.05.22, பக்கம் - 08)

            தமது திட்டம் குறித்த தகவல்கள் கசிந்து விட்டமையால் அப்போது பொதுபலசேனா அமைப்பு எவ்வித செயற்பாட்டிலும் இறங்காமல் அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு சரியாக ஒரு மாதம் கழித்து, குறுந்தகவலில் சொன்னது போலவே ஜனாதிபதியும், அவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தாபய ராஜபக்‌ஷவும் நாட்டில் இல்லாத நேரத்தில் தனது இன அழிப்பு வேலையை வெற்றிகரமாக மேற்கொண்டது பொதுபலசேனா இயக்கம். அப்பொழுதே குறுந் தகவலைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருந்திருந்தால் பல அழிவுகளைத் தடுத்திருக்கலாம் என்பது பலரதும் கருத்தாக அமைந்திருக்கிறது .

            கலவர தினம் அமைதிப் பேரணிக்கும், மாநாட்டுக்கும் நாடு முழுவதிலுமிருந்தும் வந்து கலந்துகொண்ட பேரினவாதிகள் தம்மோடு கற்களையும், தடிகளையும், பெற்றோல் குண்டுகளையும் எடுத்து வந்து தாக்கியமையானது, அவர்கள் இந்த வன்முறையை நிகழ்த்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைத் தெளிவுபடுத்துகிறது.


இலங்கை ஜனாதிபதியின் அறிக்கை

            இந் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 21.06.2014 அன்று முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்தபின் , ஊடகங்கள் ஊடாகவும், தனது TWITTER வழியாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். இன,மத ரீதியாக தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவார்களானால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி பொலிசாருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

            அத்தோடு சில வெளிநாட்டுச் சக்திகள் தமது நலனுக்காக இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்த முனைகின்றன. சட்டம் ஒழுங்கை யாரும் தமது கையில் எடுத்து செயல்பட முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இறுதியாக...

            ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேற்சொல்லியிருக்கும் அறிக்கைகள் எல்லாம் சிறுபான்மை இனத்தவர் மீது மாத்திரமே செல்லுபடியாகும். சிறுபான்மை இனத்தவர் மீதே பிரயோகிக்கப்படும். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே தண்டனைக்குள்ளாவர். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவர். கடத்தப்படுவர். கைது செய்யப்படுவர். காணாமல் போவர்.

            முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அடித்துப் போட்டால் கூட கேட்பதற்கு ஆளில்லை என்ற கருத்தும், நிலைப்பாடும் பேரினவாத தலைமைகளிடம் இருந்தது. இதனால் எல்லாக் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் அவர்களை ஆளாக்கினர். ஆனால், அண்மைய வன்முறைகளின் போது, தான் தனது நாட்டு  ஊடகங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் கூட, சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைச் செய்திகள் உலகம் முழுவதும் பரவி, சர்வதேச அழுத்தங்கள் கிளம்பி, ஜனாதிபதியைக் கலவரத்துக்குள்ளாக்கியுள்ளது.

            இலங்கை யுத்தத்தை வென்ற இறுமாப்பில், வெற்றிக் களிப்போடு எல்லா நாடுகளாலும் நோக்கப்படும் ஜனாதிபதி மீதும், இலங்கை மீதும் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் இக் கலவரங்கள் மூலமாக மீண்டும் திரும்பியுள்ளன.

            இந் நிலையில் உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று, அந் நாட்டுத் தலைவர்களை சந்தித்து, ஞாபகார்த்த மரங்களை நட்டு, கௌரவங்களைப் பெற்று வரும் ஜனாதிபதியை, அந் நாட்டுத் தலைமைகள் அழைத்து வன்முறைகள் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கும்போது என்றுமில்லாதவாறு வெட்கத்துக்குள்ளாகிறார். தனது குட்டுக்கள் வெளிப்பட்டுவிட்டனவே என சங்கடத்துக்குள்ளாகிறார். அவர் எவ்வாறும் போகட்டும்.

            கலவரத்தில் மாண்ட உயிர்கள் மீண்டு வராது. திரும்ப மீளக் கட்டியெழுப்ப முடியாத சேதங்கள். சூன்யமாகிப் போன வாழ்க்கைகள். எல்லோரையுமே அச்சத்தோடும், சந்தேகத்தோடும் பார்க்கப் போகும் பார்வைகள். ஒரு ஜனநாயக நாட்டில், இனியும் சிறுபான்மை இன மக்கள் இப்படித்தான் துயரத்தோடு வாழப் போகிறார்கள். வாழ்க்கையும், இருப்பிடங்களும், தமக்குரிய மத வழிபாட்டுத் தலங்களும் என எதுவுமே நிரந்தரமற்று, அவர்களை அல்லலுறச் செய்யப் போகிறது.


           இலங்கை நிலவரம் இவ்வாறிருக்கையில், 16.06.2014 கலவர தினமன்று ஜனாதிபதியை பொலிவியா நாட்டுக்கு அழைத்து, இராணுவ மரியாதையோடு ஒரு விருதையும் வழங்கியிருக்கிறார்கள். அது 'இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் பொலிவிய நாட்டின் அதியுயர் கௌரவ விருது !'

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com

நன்றி
# காலச்சுவடு இதழ் - 175, ஜூலை 2014
# இனியொரு இதழ்
# இணையம் (புகைப்படங்கள், வீடியோ)