இலங்கையில் அத்தியாவசிய
உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், சீமெந்து உட்பட கட்டுமானப் பொருட்கள்,
புகையிரத, பேரூந்துக் கட்டணங்கள் என அனைத்தினதும் விலைகளை நாளாந்தம் ஏற்றி பல
சுமைகளை இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் மீது திணித்து வருகிறது. தற்போது பிரித்தானியா,
ஆஸ்திரேலியா, கனடா
போன்ற நாடுகளும்
இலங்கைக்கு சுற்றுலாப்
பயணம் செல்வதைத்
தவிர்த்துக் கொள்ளுமாறு தமது தேசத்தவர்களுக்கு எச்சரிக்கை
விடுத்துள்ளன. காகிதத்
தட்டுப்பாடும் உச்ச
அளவில் காணப்படுவதால்
இலங்கை அரச
பாடசாலைகளில் பயிலும்
மில்லியன் கணக்கான
மாணவர்களின் பரீட்சைகள்
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமது குழந்தைகளுக்கு உணவளிக்க
இயலாமல் போன
கவலையிலும், பட்டினியாலும்
தற்கொலை செய்து
கொண்ட பெற்றோர்கள்
மற்றும் உணவுப்
பொருட்களையும், மண்ணெண்ணெய்யையும் பெற்றுக் கொள்ள மணித்தியாலக்
கணக்கில் பல
கிலோமீற்றர்கள் நீளமான
வரிசைகளில் பட்டினியோடு
காத்துக் கொண்டிருந்தவர்கள் மயங்கி வீழ்ந்து மரணித்த
செய்திகள் போன்றவற்றை
இலங்கை ஊடகங்களில்
தினமும் காணக்
கூடியதாக இருக்கிறது.
இலங்கை நாட்டில் இவ்வாறான
பொருளாதார நெருக்கடியும்,
பஞ்சமும் ஏற்பட்டுள்ள
இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும்,
அமைச்சருமான நாமல்
ராஜபக்ஷ மாலைதீவில் கேளிக்கை
விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளமை
நாட்டு மக்களிடையே
பெரும் அதிருப்திக்கும்,
கண்டனத்துக்கும் காரணமாகியிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக, கடந்த
வாரம் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள்
விடுதலை முன்னணி ஆகியவை பல்லாயிரக்
கணக்கான பொதுமக்கள் ஒன்று சேர கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப்
பேரணிகளை நடத்தியதில் கொழும்பு
நகரின் பல
பகுதிகள் முடங்கிப்
போயிருந்தன. மீண்டும்
உடனடியாக ஜனாதிபதித்
தேர்தலை நடத்த
வேண்டும் என்பதுதான்
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக
இருந்தது.
தனக்கெதிராகக் கிளம்பியுள்ள இந்த
அரசியல் நெருக்கடிகளைக்
கண்ணுற்ற ஜனாதிபதி
கோத்தாபய ராஜபக்ஷ உடனடியாக
கடந்த 16 ஆம்
திகதி தொலைக்காட்சி
வழியாக நாட்டு
மக்களுக்கு உரையாற்றினார்.
அதில் நாட்டில்
ஏற்பட்டிருக்கும் நெருக்கடி
நிலைமையைத் தான்
அறிவேன் என்றும்
இந்த நெருக்கடிக்குக் காரணம் தானல்ல என்றும்
தெரிவித்ததோடு சர்வதேச
நாணய நிதியத்துடன்
இணைந்து செயற்பட
தான் முடிவெடுத்துள்ளதாகவும் அவர்
கூறினார்.
ஒரு நாட்டில் வாழும் மக்கள் மீது தனக்குள்ள பொறுப்பை இவ்வளவு எளிதாகக் கடந்து
செல்ல அந்த நாட்டின் அரசாங்கத்தால் முடியாது.
தனது தேசத்தவர்கள்
நாட்டில் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழும் சூழலை
ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான
வசதிகளை வழங்குதல் போன்றவை ஒரு அரசாங்கத்தின் கட்டாயக் கடமைகளாகும். என்றாலும், இப்போது இலங்கையிலுள்ள அரசாங்கம் அந்தக் கடமைகளை சரி வரச் செய்கிறதா
என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக
மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
காரணம் இல்லாமல் எதுவும் நிகழாது.
அதற்கிணங்க இன்று நாட்டில்
ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலைமையானது ஏதோவோரு காரணத்தினால்தான் இவ்வாறு
தோன்றியுள்ளது. ஆகவே அந்தக் காரணத்தைக்
கண்டறிவதைத்தான் முதலில் செய்ய வேண்டும்.
‘நான்
செய்வதுதான் சரியானதும், முழுமையானதும் ஆகும்’ என்று
நாட்டின் ஜனாதிபதி
மார்தட்டிக் கொள்வதை நிறுத்தி விட்டு ஏனையவர்களினது கருத்துக்களைக் கேட்டு செயலாற்ற வேண்டும். அவ்வாறே இந்த நெருக்கடி நிலைமையை மாற்ற அனைவரினது உதவிகளையும்
பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தகுந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற நாட்டிலிருக்கும் அனைத்து கட்சிகளையும்
ஒன்று கூடச் செய்ய வேண்டும். அதல பாதாளத்தில்
வீழ்ந்திருக்கும் நாட்டை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் மீட்டெடுக்க வேண்டும்
என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு ஒருமித்த மனதோடு
இந்தச் சந்தர்ப்பத்தில் தமது ஒத்துழைப்பை நேர்மையான மனதோடு வழங்க வேண்டும்.
சில பிரச்சினைகளுக்கு காலம் தீர்வளிக்கும்.
என்றாலும், அவ்வாறான ஒன்றை எதிர்பார்த்து வெறுமனே காலம் தாழ்த்துவது
இருக்கும் பிரச்சினைகளை மேலும் மேலும் உக்கிரமாக்கி, சிக்கல்களுக்குள்ளாக்கும்.
அதல பாதாளத்தில்
வீழ்ந்திருக்கும் நாட்டை மேலே தூக்கி விட உடனடி நடவடிக்கை அவசியமாகும். தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக்
காண்பதற்குக் காலம் தாழ்த்துவது என்பது பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கவே செய்யும்.
தமக்குத் தேவையானவற்றை வாங்க
வரிசைகளில் காத்திருக்கும்
மக்கள் செய்திக் காணொலிகளில்
தெரிவிக்கும் கருத்துகள்
மூலம் பொதுமக்களை வருத்தும் நெருக்கடிகள் எவையென்பதை அரசியல்வாதிகள் எளிதில் அறிந்து
கொள்ளலாம். அந்த நெருக்கடிகள் நாட்டு
மக்கள் அனைவருக்குமுரியவை. கடக்கும் ஒவ்வொரு
மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் அந்த
நெருக்கடிகளை மேலும் மேலும் தீவிரமாக்குவதையே செய்து வருகின்றன. அவற்றுக்கான அரசாங்கத்தின் தீர்வு அருகில் இல்லை
என்பது பொதுமக்களை மேலும்
அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதோடு மக்களது சந்தோஷத்தையும், நிம்மதியையும் இழப்பதற்குக் காரணமாகவும் உள்ளது. தமது வாழ்க்கையில் இவை
இரண்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டி நேர்ந்திருப்பது எந்தளவு
மோசமானதும், துயர் நிறைந்ததுமான நிலைமை
என்பதை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இலங்கையர்கள் அனைவரும் இன்று தமது
அனுபவத்தில் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பாரிய பொருளாதார
நெருக்கடியிலிருந்து இலங்கையை
மீட்க அரசாங்கமானது,
பல்வேறு நாடுகளிடம்
உதவி கோரிய
போதிலும் இந்தியா
மாத்திரமே தனது
ஒத்துழைப்புகளைத் தொடர்ந்தும்
இலங்கைக்கு வழங்கி
வருகிறது. தற்போதைய
நிலையில் இலங்கை
அரசாங்கத்தின் ஒரே
நம்பிக்கையாக இந்தியா
இருக்கிறது. ஆகவே
கடந்த 16 ஆம்
திகதி இலங்கையின்
நிதியமைச்சர் பசில்
ராஜபக்ஷ இந்தியப் பிரதமர்
நரேந்திர சிங்
மோடியைச் சந்தித்து
நிதியுதவியைக் கோரியதோடு
ஒரு பில்லியன்
அமெரிக்க டாலர்கள்
நிபந்தனையற்ற கடனை இந்தியா
வழங்கியது. கடந்த டிசம்பர்
மாதமும் பசில்
ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார
அமைச்சர் சுப்ரமணியம்
ஜயசங்கரையும், நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமனையும்
சந்தித்துக் கலந்துரையாடியதில் ஒரு தொகை டாலர்கள்
நிதியுதவி கிடைத்தது
குறிப்பிடத்தக்கது.
இலங்கை
நாடு சவால்களை
வாய்ப்புகளாகக் கருதி, பல வெற்றிகளைக் கண்ட நாடு. இப்போதும் ஒன்றின் பிறகு ஒன்றென வந்து கொண்டேயிருக்கும்
நெருக்கடிகளை எதிர்த்து வெல்ல
நாட்டு மக்களால்
முடியும். அதற்கு, நாட்டு மக்கள்
அனைவருக்கும் அந்த ஒரே குறிக்கோள்தான் இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு சரியான
செயற்திட்டமும் இருக்க வேண்டும். கட்சிகளும், தலைவர்களும்,
மக்களும் என அனைவரும்
ஒன்று சேர்ந்தால் அந்த செயற்திட்டத்தை உருவாக்குவது சிரமமில்லை.
mrishansh@gmail.com
நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 21.03.2022