இலங்கை ஜனாதிபதி கோத்தாபயவுடன், ஜனாதிபதி முறையும் ‘Go Home’
- காமினி வியங்கொட
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
இந்தத் தலைப்பில் பெரியதொரு பரிகாசம் இருக்கிறது. கோத்தாபயவுக்கு வீட்டுக்குச் செல்லுமாறு கோரி இப்போது தெருவிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, அவர் தனது வீடிருக்கும் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தும் அதனூடு வெளிப்படுகிறது. இதற்கிடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் அமெரிக்காவில்தான் பிறந்தது. கோத்தாபயவுடன் அந்த ஜனாதிபதி முறைமையும் தமது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறும்போது இருவரும் ஒரே நாட்டுக்குச் செல்லவிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
இலங்கையில் தற்போது நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள் பரவியுள்ளன. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு, நகரங்களில் குறிப்பாக மத்திய தர வகுப்பினரிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான போராட்டங்கள் மிரிஹானை பிரதேசத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையருகே புதியதொரு பாதையில் பிரவேசித்தது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த அலுப்பைத் தீர்த்துக் கொள்வது போல அன்று அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தொகையான பொதுமக்கள் பேரோசையையும், வித்தியாசமான நடைமுறையொன்றையும் அதில் கலந்தார்கள். அந்தப் புள்ளியிலிருந்து, இனியும் அது நகரத்துக்கோ, மத்திய தர வகுப்பினருக்கோ மாத்திரம் வரையறுக்கப்பட்ட போராட்டமாக இல்லை. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாகத் திரண்டெழுந்துள்ள ஒரு போராட்டக் களமாக இலங்கை தற்போது மாறியுள்ளது. இன்று அந்தப் போராட்டத்தின் பிரதான பங்குதாரர்களாக நாட்டிலுள்ள இளைய தலைமுறையினர் உள்ளார்கள். அது காலங்காலமாக பல்கலைக்கழக மாணவர் சமுதாயத்துக்குரிய இளைஞர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து முற்றுமுழுதாக மாறுபட்ட இளைஞர் பங்களிப்புகளால் நிறைந்திருக்கிறது. பல்கலைக்கழக இளைஞர் தலைமுறை போராட்டங்கள் கட்சிகளாலும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களாலும்தான் இயக்கப்பட்டு வந்தன. இப்போதும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று தெருவில் இறங்கியிருக்கும் இளைஞர் தலைமுறையானது அந்தக் கட்சிகளையும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் புறந்தள்ளி விட்டு அவற்றுக்கு மேலாக எழுந்து வந்து ஒரு பரந்த வெகுஜன இயக்கமாக உருமாறியிருக்கிறார்கள்.
கோத்தாபய தனித்துவமானவர்
கோத்தாபய ராஜபக்ஷ ‘தோல்வி’யடையாத ஒரே விடயம் இதுவாகும். இலங்கை சுதந்திரமடைந்ததன் பிறகு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையை ஆட்சி செய்த எந்தவொரு அரசியல்வாதியாலோ அல்லது அரசியல் கட்சியாலோ வெற்றி பெற முடியாத ஒரு முக்கிய விடயம் இருந்தது. அதாவது, அவர்கள் முயற்சித்த எதையும் ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய அவர்களால் முடியாமலிருந்தது. உதாரணமாக, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும்போது நாட்டில் ஒரு தரப்பினர் அதை எதிர்த்தார்கள். 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்த போது, நாட்டில் மற்றுமொரு தரப்பினர் அதை எதிர்த்தார்கள். 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த போது அதை எதிர்க்கவும் நாட்டில் ஆட்கள் இருந்தார்கள். ஆனால் இன்றோ, ஜனாதிபதியையும், அவரது குடும்பத்தையும், அவர்களது கொள்கைகளையும் ஒன்றாக எதிர்க்கும் ஒட்டுமொத்த நாட்டையும், நாட்டு மக்கள் அனைவரையும் மிகக் குறுகிய காலத்துக்குள் தீவிரமாகக் கட்டியெழுப்ப கோத்தாபய ராஜபக்ஷ எனும் தலைவரால் முடிந்திருக்கிறது. இந்த பொதுமக்கள் போராட்டத்தில் கட்சி வேறுபாடுகள் இல்லை. வகுப்பு வேறுபாடுகள் இல்லை. இனவாதங்கள் இல்லை. மத பாகுபாடுகள் இல்லை. பாலின வேறுபாடுகள் இல்லை. அனைவரும் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள், ஒன்று திரண்டிருக்கிறார்கள். அது ‘Gota Go Home’ (கோத்தா நீ வீட்டுக்குப் போ) என்பது. வேறு விதமாகக் கூறினால் கோத்தாபயவின் இந்தத் ‘தோல்வி’யானது முன்னொருபோதும் இல்லாத அளவில் சமூக உணர்வை உருவாக்கி, அந்த சமூக உணர்வை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது, உடனடித் தீர்வைக் கோரும் தருணமாக உருவெடுத்திருக்கிறது. நாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவரும் தெருவிலிறங்கிப் போராடுவது ஏன் என்ற கேள்வியைப் புரிந்து கொள்தல் அந்தச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வினை வழங்குவது குறித்த ஒரு எண்ணக் கருவை உருவாக்க உதவக் கூடும். அந்தச் சிக்கல்களை இவ்வாறு வகை பிரிக்கலாம்.
1. சமையல் எரிவாயு இல்லாமை.
2. பெற்றோல் – டீசல் இல்லாமை.
3. மின்சாரம் இல்லாமை.
4. இவற்றோடு ஏனைய அனைத்தும் ஒன்றுதிரண்டு, பெரும் பண வீக்கம் உருவெடுத்திருக்கின்றமை.
இவையனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவை. அதாவது மக்களின் வயிற்றோடு சம்பந்தப்பட்டவை. ஆனால், ‘Gota Go Home’ எனும் கோரிக்கை அரசியல் ரீதியானது. கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் மேற்கூறிய பொருளாதாரக் காரணிகளுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளதால், பொதுமக்கள் அறிவுபூர்வமாக ‘Gota Go Home’ எனும் அரசியல் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். வேறு விதமாகப் பார்த்தால் இது தொடர்ச்சியானதும் தவறானதுமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி. ஆகவே (பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய) இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும்.
எதிர்வரும் வாரங்களில் முதற்கூறப்பட்ட மூன்று விடயங்களுக்குமான தீர்வை ஓரளவு பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் 4-5 பில்லியன் டாலர்கள் அளவு கடன்கள் (பல்வேறு வடிவங்களில்) பெற்றுக் கொள்ளப்படவிருப்பதால் அந்தப் பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்படக் கூடும். பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல், மின்சாரம் போன்றவற்றை வழங்குவதை மிகக் குறுகிய காலத்துக்கு அந்தப் பணத்தைக் கொண்டு செய்யலாம். ஆனால் அந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் கூட நான்காவது சிக்கலைத் தீர்க்க முடியாமலே இருக்கும். அதாவது விண்ணைத் தொட்டிருக்கும் பொருட்களினதும், சேவைகளினதும் விலைவாசிகளை மீண்டும் தரையிறங்கச் செய்ய முடியாது. இன்று, நாட்டின் பண வீக்க விகிதமானது 59% என சுயாதீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்திலும் மக்களுக்கு மீண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷதான் நினைவுக்கு வருகிறார். அவரது இந்தக் குறுகிய ஆட்சிக் காலத்துக்குள் புதிதாக அச்சடித்துள்ள ட்ரில்லியனுக்கும் (1000,000,000,000) அதிகமான ரூபாய்களுக்குச் சமமாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்பதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லப் பாடுபடும் இந்தப் போராட்டம் இன்னும் மோசமான திசைக்குத் திரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் அர்த்தம், சமையல் எரிவாயு வரிசை, பெற்றோல் வரிசை மற்றும் மின்சாரப் பிரச்சினை தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டாலும் கூட பிரச்சினைகள் தீர்ந்து விடாது என்பதுதான்.
நெருக்கடியின் அரசியல்
தற்போதைய மக்கள் போராட்டத்தின் அரசியல் வீச்சு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. முதல் பார்வையில், அது நெருக்கடியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றலாம் என்றாலும் உண்மையில், தற்போதைய நெருக்கடிக்கான தீர்வானது, கட்சி - அரசியலின் திசையில் நகர்வது போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த படத்தைப் புரிந்து கொள்ள அவற்றில் சிலவற்றை மிக சுருக்கமாகக் கருத்தில் கொள்வது அவசியம்.
அவற்றுள் முதலாவது இந்த நெருக்கடியானது 74 வருட சாபம் என்பது குறித்த கோஷம். அதன் அர்த்தம், இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு 74 வருட காலமும் நாட்டை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் இந்த நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டு குறித்து எவரும் மறுக்க முடியாது. என்றாலும், அந்த விடயம் குறித்து மேலும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. வாகன ஓட்டுநர்களால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். ஒருபோதும் வாகனமொன்றை ஓட்டியே பார்த்திராத ஒருவரால் வாகன விபத்துகள் ஏற்படுவதில்லை. ஆனால் அனைத்து விபத்துகளுமே வாகன ஓட்டுநர்களின் தவறுகளால் மாத்திரம் நிகழ்வதில்லை என்பதை நாம் அறிவோம். வாகனத்தைச் செலுத்தும் பாதையின் இயல்பு, அந்தப் பாதையில் நடமாடும் ஏனையவர்களின் நடவடிக்கைகள், திடீரென்று (மாடுகள், நாய்கள் போன்ற) விலங்குகள் குறுக்கே பாய்தல் மற்றும் மழைவீழ்ச்சி போன்ற வாகன ஓட்டி மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாத பல்வேறு விடயங்கள் வாகன விபத்துகளுக்குக் காரணமாகின்றன. இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு வாகனத்தைச் செலுத்துமாறு வாகன ஓட்டுநருக்கு அறிவுறுத்துவது கட்டாயமாகும். அவ்வாறு அறிவுறுத்துவதால் மாத்திரம் ஏனைய காரணிகளைப் புறக்கணித்து விட முடியாது. அந்த வகையில் பார்க்கும்போது இவ்வளவு காலமும் நாட்டை ஆட்சி செய்தவர்கள் (வாகன ஓட்டுநர்கள்) மாத்திரமல்லாமல், அந்த ஆட்சியாளர்களை (ஓட்டுநர்களை) அதிகாரத்தில் ஏற்றி வைத்தவர்களும், உரிய சமயத்தில் அதிகாரத்திலிருந்து பதவியிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்காதவர்களும் என அனைத்தும் இந்த 74 ஆண்டு கால சாபத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
உதாரணத்துக்கு, ராஜபச்ஷேக்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்று இப்போது நாங்கள் கூறிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ராஜபக்ஷேக்கள் உருவான 2005 ஆம் ஆண்டை எடுத்துக் கொள்வோம். தனியொரு நபரால் அனைத்தும் ஆளப்படும் மற்றும் தனியொரு குடும்பத்தால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும், கொள்ளையடிக்கப்படும் இன்றைய காலகட்டத்தை உருவாக்க 2005 ஆண்டில் ராஜபக்ஷேக்கு தோள்கொடுத்து உதவிய ஒரு கட்சி ‘மக்கள் விடுதலை முன்னணி’ கட்சி. மற்றுமொரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். இந்த நாட்டில் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பது தடைப்பட்டதில் அரசை உருவாக்கியவர்களது பங்கு மாத்திரமல்லாமல் (‘தேசிய சிந்தனை’ போன்ற) அரசுக்கு வெளியேயிருந்தவர்களது பங்களிப்பும் இருந்தது. இன்னுமொரு உதாரணத்தை முன்வைக்கிறேன். இந்த நாட்டில் இளைஞர் கிளர்ச்சிகளும், வன்முறைகளும் இரண்டு தடவைகள் (1971 மற்றும் 1987 – 1989) தெற்கிலும், மூன்று தசாப்தங்கள் வடக்கிலும் உருவாகியிருந்தன. இன்று எம் முன்னால் எழுந்திருக்கும் அதி நவீன ஆயுதம் தரித்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்பியதன் பெரும் பொறுப்பு அந்தத் தோல்வியடைந்த கிளர்ச்சிகளுக்கும் உரியது. இதே விடயத்தை வேறொரு விதத்தில் கூறுவதானால், வடக்கின் கிளர்ச்சியாளர்கள் தென்னிலங்கையால் உருவாக்கப்பட்டது போலவே, தெற்கின் படையினர் வடக்கின் தோல்வியுற்ற கிளர்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளமை, மீளப் பார்க்கும்போது எமக்குத் தெளிவாகும்.
அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளமை
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. இந்த நீண்ட வரலாற்றின் குற்றவாளியைக் கண்டறியும்போது (உண்மையிலேயே அவ்வாறான ஒன்று தேவைப்படுமாயின்) அதன் பொறுப்பைச் சுமத்த ஒரு தரப்பை மாத்திரம் தனியாக ஒதுக்கி வைப்பது சாத்தியமில்லை என்பதையே நான் சுட்டிக் காட்ட முயல்கிறேன். கட்சித் தேவைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் இவ்வாறான கவர்ச்சிரமான கோஷங்கள், அநாமதேய மற்றும் முறையாக ஒருங்கமைக்கப்படாத மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் அதை விடவும் விசாலமாகவும், போலியாகவும் உள்வாங்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு, 74 ஆண்டு கால சாபத்தின் வரலாறு தற்போது 225 அமைச்சர்களுமே நமக்கு வேண்டாம் எனும் கோஷம் வரை நீண்டிருக்கிறது. அதாவது, அந்த வேண்டுகோளுக்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் இக் கணத்தில் இரையாகியிருக்கிறது. இந்தக் கற்பனாவாத கோரிக்கையானது, தெரு முழக்கங்களுக்கு நன்றாக இருந்த போதிலும், நாட்டுக்குப் பயனுள்ளதாகவோ, நடைமுறைக்குச் சாத்தியமானதாகவோ இல்லை. தெரு என்பது அநீதிக்கு எதிரான சகிப்புத்தன்மை எல்லை கடந்ததும் மக்கள் ஒன்றுசேரும் ஒரு திறந்த காட்சியரங்கு. அது கண்களுக்குப் புலப்படும் பகுத்தறிவுக்குள் கண்களுக்குப் புலப்படாத முரண்பாடுகளும் இருக்கக் கூடுமான ஒரு மேடை.
அங்கு பாதுகாப்பு போலவே பாதுகாப்பின்மையும் உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவன் எனும் வகையில் இந்த இரண்டு நிலைமைகளையும் நான் அனுபவத்தில் கண்டேன். இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களை ஏந்தியவாறு கறுப்பு உடையணிந்திருந்த அதிரடிப் படையினரை போராளிகளான பொதுமக்கள் நடுவே அதிகாரிகள் அனுப்பி வைத்தமையையும், சட்டத்தையும், அமைதியையும் காப்பதற்குப் பொறுப்பான போலிஸாரால் அந்த ஆயுததாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதற்காக, சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இராணுவப் படைப் பிரிவால் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையானது ஒரு இருண்ட சித்திரத்தையே எடுத்துக் காட்டுகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்புள்ள ஜனநாயக தேர்வு
தற்போது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று ஜனநாயகம். தனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்கிய 69 இலட்சம் மக்கள் குறித்துப் பேச தற்போது அவரால் முடியாது. ஜனாதிபதி அவரது ஊடகப் பிரிவிடம் கூறினால், அவருக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த அரச அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருமே தற்போது வரிசையாக வந்து பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கும் காணொலிகளை அவரால் பார்க்க முடியும். ‘நாட்டைக் காக்கும் வீரன்’ என அவரின் புகழ் பாடி பாடல் எழுதிய பாடலாசிரியனின் வாக்குமூலத்தையும் அவர் அவற்றுள் காணலாம். அப்போது வாக்களித்த அந்த 69 இலட்ச மக்களின் தற்போதைய கோஷத்தையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கிளர்ச்சியிலும், தெருவிலும் கண்டுணர அவர் விரும்பவில்லையானால், பாராளுமன்றத்திலிருந்த அவரது ஆதரவு வட்டத்திலும் கூட அவர் கண்டறியலாம். அந்த 69 இலட்ச மக்களிடையே நிதியமைச்சர் பதவியைப் பொறுப்பேற்கத் தயாரான ஒருவரைக் கூட இந்தக் கணம் வரைக்கும் அவரால் தேடிக் கண்டறிய முடியாதுள்ளது. அவர் உத்தரவிட்ட அவசர கால சட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியாமல் தோற்றுப் போய் தானாகவே அதை நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். (இருப்பினும் இதைக் கொண்டு பாராளுமன்றத்தை நாட்டின் நிலைமைகளைத் தெளிவாகவும், துல்லியமாகவும் காட்டும் ஒரு கருவியாகக் கருதாதீர்கள். அங்கு நாளையே நாட்டின் உண்மையான பிரதிபலிப்புகளுக்குப் பதிலாக, வேறு சில குறுகிய நலன்களின் விம்பங்களைக் காணக் கூடியதாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.)
இந்தப் பிரச்சினைக்கான உகந்த ஜனநாயகத் தீர்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பதவி விலகலோடு ஆரம்பிக்கப்பட வேண்டும். அடுத்ததாக ஓரிரு ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்துடன் சிறிய அமைச்சரவையுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அந்த இடைக்கால அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதோடு, இந்தியா மற்றும் சீனாவுக்கு மாத்திரமல்லாமல் முழு உலகுக்கும் நட்பாக இருக்க வேண்டும். அத்தோடு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக சட்டபூர்வமான தன்மையை சர்வதேசத்தின் முன்னிலையில் உறுதிப்படுத்த வேண்டும். இன்று நாட்டு மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருக்கும் (சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல், பால் மா, மின்சாரம், இன்ன பிற) அவசர அன்றாட பொருளாதாரத் தேவைகளை இந்த இடைக்கால அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். அதேவேளை, இந்த பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் ஸ்திரத்தன்மையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அது தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கூற்று மிக முக்கியமானது. தக்க சமயத்துக்கானது. அந்தக் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு பொருளாதாரத்துக்கு அடுத்ததாக, தற்போது நாட்டின் முக்கியமான தேசிய மற்றும் அரசியல் தேவையாக அதைக் கருதி அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
ஜனாதிபதி பதவி விலக மறுத்தால், அதன் பிறகும் அவருக்காகத் திறந்திருக்கும் மற்றுமொரு ஜனநாயக வாய்ப்பு உள்ளது. அதாவது, அவர் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே, இருபதாவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது, பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பது, இருபத்தோராவது திருத்தச் சட்டத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளச் செய்வது ஆகியவற்றை மேற்கொண்டு மேலே குறிப்பிட்ட சர்வ கட்சியினரின் இடைக்கால அரசாங்கத்தை நிறுவலாம். இது சர்வ கட்சியினரது இடைக்கால அரசாங்கமாக ஏன் இருக்க வேண்டும் என்றால், தற்போதைய தேசிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பையும், பொறுப்புணர்வையும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால்தான். அத்தோடு இருபதாவது திருத்தச் சட்டத்தை ஏன் மாற்றியமைக்க வேண்டும் என்றால் இடைக்கால ஆட்சியானது, அதிகப்படியான நிர்வாகத்திலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த இரண்டரை வருட காலத்துக்குள் தனது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளை, இடைக்கால ஆட்சியின் போதும் மேற்கொள்வதற்கு, இயலுமான அனைத்து வழிமுறைகளிலும் ஜனாதிபதி முயல்வார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்புள்ள ஜனநாயகமற்ற தேர்வு
இறுதியாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்பாக ஜனநாயகமற்ற தேர்வொன்றும் இருக்கிறது. அது, தான் பதவி விலக மறுப்பதோடு மாத்திரம் நின்று விடாமல், அரசியலமைப்புத் திருத்தத்துடன் இடைக்கால அரசாங்கத்தை நாடாமல், பொதுமக்கள் போராட்ட களம் மேலும் மேலும் விசாலமடைய, வேண்டுமென்றே இடமளித்தல். அவ்வாறான தீர்மானத்தின் பின்னணியில் இராணுவ ‘தீர்வுகளே’ இருக்கலாம். இரத்தக் களறியும், அடக்குமுறையும்தான் அதன் பாதை. கடந்த காலங்களில், குடிநீர் கேட்டுப் போராடிய ரதுபஸ்வல பிரதேச மக்களைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள, மண்ணெண்ணெய் கேட்டுப் போராடிய ஹலாவத பிரதேச மக்களைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள, கட்டுநாயக்க பிரதேச ஊழியர்கள் தமது சேமலாப நிதியைக் காக்கப் போராடிய போது அவர்களைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள, நிராயுதபாணிகளான சிறைக் கைதிகளைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி விலகலை இன்னுமின்னும் தாமதப்படுத்தியவாறு, அவசர சீர்திருத்தங்களுக்கு இடமளிக்காமல் காலம் கடத்தும் ஓரோர் தினமும் திட்டமிட்டுக் கொண்டிருப்பது இவ்வாறான பயங்கரமான ஒரு நடவடிக்கையாக இருக்கலாமே தவிர வெகுளித்தனமானதாக இருக்கப் போவதில்லை.
இங்குதான் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமது கவலைகளையும், துயரங்களையும் தெருக்களில் பலத்த குரலில் எழுப்பிக் கொண்டிருப்பது போலவே, தனக்குள்ளேயும், வெளியேயும் மேற்கூறிய ஆபத்துகளுக்கு இரையாக வாய்ப்பளிக்காமல் இருப்பதற்கு ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையோடு இருப்பதில் இந்தப் போராளி பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் எழக் கூடிய ஆபத்துகள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக அனைவருமே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக பொதுமக்கள் போராடிக் கொண்டிருப்பதால் தனித்தனியாகத்தான் இந்தப் பொறுப்பை மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுப்பைச் சுமப்பது சிரமம்தான் என்றாலும், சுமக்க முடியாத ஒன்றல்ல.
_____________________________________
காமினி வியங்கொட
சிறுபான்மையினருக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான திரு. காமினி வியங்கொட சமூக, அரசியல் விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வருகிறார். பிரபலமான இலக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டுள்ள இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்புமனுவை சட்ட ரீதியாக சவால் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - காலச்சுவடு மே, 2022 இதழ்