Thursday, January 1, 2015

இந்திய நடிகர்களுடன் இணையும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ !



            இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரியென உலகம் முழுவதும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. என்றாலும், அவரே அச்சப்படும் ஒருவர் இருக்கிறார் எனில் அது, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன ஆவார்

            தன் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கும் நம்பிக்கையும் சரிந்துகொண்டு வருகிறது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, மீண்டும் இலங்கை ஜனாதிபதியாகும் வாய்ப்பைத் தனக்குத் தரக் கூடிய வாக்குகள் கவிழ்ந்து விடும் என்ற அச்சத்திலும், தான் அனுபவித்து வரும் அனைத்து செல்வங்களையும் திடீரென இழந்துவிட வேண்டி வரும் என்ற பரிதவிப்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களும் அவருக்கெதிராகவே திரும்பி விடுவது வேடிக்கையாக இருக்கிறது.
         
   ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே மஹிந்த ராஜபக்ஷ செய்த முதல் வேலை, நாடு முழுவதுமுள்ள தெருக்களெங்கிலும் மீற்றர் கணக்கு இடைவெளியில் அவரை விடவும் பல மடங்கு உயர்ந்த அவரது கட் அவுட்களை நிறுவியதுதான். பத்திரிகைகள், ஊடகங்கள் எல்லாவற்றிலும் அவரது புகைப்படம் தாங்கிய முழுப்பக்க விளம்பரங்களை அச்சிடவும் காட்சிப்படுத்தவும் உத்தரவிட்டிருக்கிறார். நாடு முழுவதிலும் அவரது சுவரொட்டிகளை ஒட்ட ஏற்பாடு செய்திருக்கிறார். பேரூந்து, ரயில்களிலும் இன்னும் திரும்பிய பக்கமெல்லாம் அவரது புகைப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.  

            உண்மையில் அவருக்கு விளம்பரமே தேவையில்லை. மஹிந்த என்றால் சிறு குழந்தை கூட அறியும். ஆனாலும் அவர் தனது தோல்வியின் மீது அச்சமுற்றிருக்கிறார். உண்மையில் அவருக்கெதிராகப் போட்டியிடும் மைத்திரிபால தான் விளம்பரங்களை நாட வேண்டும். அவரைத்தான் நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஆனாலும் அவர் 'நான் விளம்பரங்களை நாடாமலே வென்று காட்டுவேன்' என தைரியமாக அறிக்கை விடுத்திருப்பதானது மக்களை அவர்பால் ஈர்க்கச் செய்திருக்கிறது
     
       இவ்வளவு விளம்பரப்படுத்தியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டங்களுக்கு, ஆளுக்கு ஐயாயிரம் ரூபாயும், பிரியாணி பார்சலும் கொடுத்து வெளியிடங்களிலிருந்து ஆட்களை அழைத்து வரும் நிலைமை உருவாகியிருக்கிறது. எனினும் விளம்பரங்களேயில்லாமல் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டங்களில் மக்கள் அலைமோதுகிறார்கள்

            யதார்த்தத்தில் மஹிந்தவின் குடும்ப அரசியலானது, பொதுமக்களை மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறது. நாட்டின் எல்லா இன மக்களும், இந்த ஆட்சியில் சொல்லொணாத் துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்கள். ஜனாதிபதியும் அவரது குடும்பமும், சகாக்களும் அனைத்து சுபீட்சங்களையும் அனுபவித்து சுகபோகமாக வாழ்கையில், விலைவாசி உயர்வுகளாலும், வரிகளாலும், அநீதமான ஆட்சி நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்காளாகி அவற்றிலிருந்து மீண்டு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

            இந் நிலையில்தான் தேர்தல் வந்திருக்கிறது. தனக்கு எதிராகப் போட்டியிட யாருமில்லை என்ற தைரியத்தில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை அறிவிக்க, அலாவுதீனின் பூதம் போல அவரது கட்சியிலிருந்தே பொதுச் செயலாளர் மைத்திரிபால, மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக கிளர்ந்தெழுந்தார். அரசியலில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு இது ஒரு வரமென ஆகியிருக்கிறது. மஹிந்தவின் கட்சியிலிருந்து வெளியேறி, எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்து, அவருக்கெதிராகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல்களையும், கேடித்தனங்களையும், சர்வாதிகார நடவடிக்கைகளையும் மேடைகள் தோறும் எடுத்துரைக்கிறார். ஜனாதிபதியுடனேயே இவ்வளவு காலமும் ஒன்றாக இருந்ததால் எல்லாமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது

            இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த பதற்றத்துக்குள்ளாகி இருக்கிறார். தனது வெற்றிக்காக வேண்டி திருப்பதி கோயிலுக்குச் செல்கிறார். இலங்கையிலுள்ள அனைத்து புனித ஸ்தலங்களுக்கும் சென்று யாகங்களும் பூஜை வழிபாடுகளும் நடத்துகிறார். இவ்வாறாக மந்திரித்த தைலத்தைத் தடவிக் கொண்டு, ஒரு சிறு மாந்திரீகப் பொருளை எப்பொழுதும் கைக்குள் வைத்துக் கொண்டு மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும் மக்களை ஈர்க்கவெனக் கிளம்பியிருக்கிறார்கள்
            அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பிரச்சாரக் கூட்டங்களுக்கு இந்திய நடிகர்களின் உதவியை நாடியிருக்கிறார். ஏற்கெனவே அமிதாப் பச்சன், அனுபம்கேர், விவேக் ஓப்ராய், சல்மான்கான், அனில் கபூர், சுனில் செட்டி, ரித்தேஷ் தேஷ்முக், லாரா தத்தா, பிபாஷா பாஷு, அசின், சமீரா ரெட்டி எனப் பல பிரபல நடிக நடிகைகள் இலங்கைக்கு வந்து தமது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாகவே அளித்திருக்கும் நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கும் வருகை தந்து, தனது மேடைகளில் நின்று கூட்டத்துக்கு ஆள் சேர்க்க உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்
  
          இலங்கையின் பிரபல நடிகர், நடிகைகளும் கலைஞர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்ப்பந்தத்தினாலும், பண பலத்தினாலும், அச்சுறுத்தலினாலும் தாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக தொலைக்காட்சியிலும் நேரடியாக கூட்டங்களிலும் தோன்றி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்று இலங்கையில் பெருமளவு ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை பூஜா உமாஷங்கர் தற்போது இலங்கையில் வசித்துவரும் நிலையில் அவரையும் தனக்கு ஆதரவு வழங்குமாறும், தனது பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை தந்து கூட்டம் சேர்க்க உதவுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது புதல்வர்களும் வற்புறுத்தியும், அச்சுறுத்தியும் கேட்டுக் கொள்ள, அவற்றை நிராகரிப்பது தனக்கு ஆபத்தைத் தேடித் தரும் என்ற போதும், அவர் அந்த வேண்டுகோள்களை முற்றுமுழுதாக மறுத்திருப்பதானது, அவரது தைரியத்தைப் பறைசாற்றுகிறது.  

            ஆனால் இவ்வளவு நெருக்கடிகளுக்குள்ளும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  அருந் தவப் புதல்வர்களது நடவடிக்கைகளும் கூட அவரது வாக்குகளை இழக்கச் செய்யும் விதத்தில் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இந்திய நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் மூத்த மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அப் படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். அதற்குப் போட்டியாக, மஹிந்தவின் ஏனைய புதல்வர்களும், நாட்டின் அழகிய சுற்றுலாப் பிரதேசங்களுக்கு தமது காதலிகளோடு விமானத்தில் சென்று நெருக்கமாக இருந்து புகைப்படங்களெடுத்துப் பதிவிட்டு மக்களை வெறுப்புக்குள்ளாக்கி வருகிறார்கள்.

            இலங்கையில் விலைவாசி உயர்வினாலும், அதீத வரிகளாலும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இந் நேரத்தில், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தினைக் கொண்டு மஹிந்தவின் புத்திரர்கள் போடும் கும்மாளமும், மஹிந்த இந்திய நடிக நடிகைகளுக்குச் செலவிடும் பணமும், தனது விளம்பரங்களுக்காக செலவிடும் தொகையும் நிச்சயமாக மஹிந்தவின் வாக்குகளைத்தான் இழக்கச் செய்யும். அத்தோடு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டங்களுக்கு இடைஞ்சல் செய்வது, மேடைகளை எரியூட்டுவது, மின்சாரத்தைத் துண்டிப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான ஈனச் செயல்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மேற்கொள்வதானது அவருக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளை மேலும் இழக்கச் செய்யும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் சகாக்களும் இவற்றை உணர்கிறார்களில்லை
    
        இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. இந் நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த மைதானத்தினை நோக்கி பிக்குகளின் தலைமையில் ஒரு அமைதிப் பேரணி ஊர்வலமாக நடந்து வருகிறது. அவர்களை உள்ளே வர அனுமதிக்க வேண்டாமென ஜனாதிபதி தரப்பிலிருந்து உத்தரவு வருகிறது. எனவே காவல்துறை, அவர்களை வாயிலில் வைத்து மறிக்கிறது. ஜனாதிபதியிடம் கையளிக்க விரும்பும் மனுக்களை தம்மிடம் தருமாறு கோரி நிர்ப்பந்தப்படுத்தி மனுக்களை வாங்கிக் கொள்கிறது. பின்னர் ஆண்களும், பெண்களும், சிறுகுழந்தைகளுமாக இருந்த அவர்களை நடுத்தெருவில் வைத்து நிர்வாணமாக்கித் தாக்குதல் நடத்துகிறது காவல்துறை

            சர்வாதிகார ஜனாதிபதி எல்லாவற்றையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்த காவல்வீரர்களது மனித வேட்டையில் பலத்த காயங்களுக்குள்ளான பொதுமக்கள் மயக்கமுற்று விழ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுள் நிறைமாதக் கர்ப்பிணிகளும் உள்ளடங்குகின்றனர். யார் இவர்கள்? இவ்வாறான நடைப் பேரணிக்குக் காரணமென்ன? அவர்களது மனுக்களில் அப்படி என்னதான் இருக்கிறது?


            இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினத்தவர்கள் மாத்திரமல்ல. யுத்தப் பிரதேசங்களிலும், அவற்றை அண்டிய எல்லைக் கிராமங்களிலும் வசித்த பெரும்பான்மையின சிங்கள மக்களும் பலத்த அழிவுகளைச் சந்தித்தனர். அப் பிரதேசங்களில் வசித்த காரணத்தால் உயிரோடு, வீடு வாசல்களையும், விவசாய நிலங்களையும் பறிகொடுத்தவர்கள் அநேகம். உயிர் பிழைத்து எஞ்சியவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். அவர்களதும் நிலம் பறிபோயிற்று. அகதிகளாக சொந்தங்களிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இதுவரை மீள் குடியேற்றப்படவேயில்லை. அவர்களது நில உரிமை குறித்த பத்திரங்களும் யுத்தத்தில் அழிந்துபோனதால் அந்த ஊர் மக்களின் வாக்குரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிபோயிற்று

            எனவேதான் அப் பிரதேசத்து மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஊருக்கு வரும்போது, தமக்கு வாக்குரிமை வேண்டி மனுக் கொடுக்க வேண்டுமென ஊர்வலமாக வந்திருந்தனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி தமக்கு இப்படிச் செய்வாரென அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனது இன உறவுகளுக்கே அவர் இப்படிச் செய்கிறார் எனில், தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் என சிங்கள மக்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர்.  இவ்வாறாக ஜனாதிபதியின் இந்தச் செயலும் கூட வரும் தேர்தலில் அவரது வாக்குகளை இழக்கச் செய்யுமென அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

            ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி இவற்றின் மூலம் நிச்சயமாகத் தெரிகிறது. என்றாலும், அவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெல்வாரெனில், அது பணத்தினைக் கொண்டும், வன்முறைகளைக் கொண்டும், அநீதியான தேர்தல் மூலமுமே வென்றிருப்பார் என்பதில் சந்தேகமிருக்காது எவர்க்கும்.
- எம்.ரிஷான் ஷெரீப்
21.12.2014
mrishanshareef@gmail.com

நன்றி
# இனியொரு இதழ்