Monday, August 14, 2017

இஸ்லாமிய மையித்துக்கள் குறித்து முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் ! - எம்.ரிஷான் ஷெரீப்





   அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள சில பிரதேசங்களில் வசித்த இஸ்லாமியர்களின் மையித்துக்கள், அவை அடக்கப்பட்டதன் பிறகு அரசாங்க உத்தரவின் பேரில் திரும்பத் தோண்ட வைக்கப்பட்ட தகவல்களை அதிகமாகக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நவீன வசதிகளுடன் கூடிய இக்காலத்தில் ஜனாஸாக்கள் தொடர்பான அறிவித்தல்கள் உடனுக்குடன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிவிக்கப்பட்டு, தொலைவில் இருப்பவர்களும் கூட அவசரமாக இறுதிச் சடங்குகளுக்கு வந்து விடும் நிலைமை எங்கும்  காணப்படுகிறது. என்றபோதிலும் மையித்தின் குடும்பத்தவர்களும், வீட்டினரும் விடும் சிறு தவறுகளாலும், கவனயீனங்களாலும் அடக்கப்பட்ட ஜனாஸாக்கள் திரும்பத் தோண்டப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதை காணக் கூடியதாக இருக்கிறது.
 
     இலங்கையிலுள்ள இஸ்லாமியப் பிரதேசங்களில் வசித்து மரணத்துக்குள்ளாகும் நபர்களின் மையித்துக்களை விடவும், வேற்று மத சமூக மக்களுடன் கலந்து வாழும் பிரதேசங்களிலுள்ள இஸ்லாமியர்களின் மரணங்களே இவ்வாறாக அதிகம் கேள்விக்குள்ளாகின்றன. முஸ்லிம்களில் ஒருவர் மரணித்ததும்  இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் அம் மையித்தினது இறுதிச் சடங்குகள் பூர்த்தியாவதை பிற சமூகத்தினர் வியப்பாகப் பார்க்கும் அதே வேளை, அவர்களுள் மரணத்தைக் குறித்து சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

     மரணித்தவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களோடு  நட்பாகப் பழகிவிட்டு, மரணத்தின் காரணமாக இவ்வாறாக திடீரென பிரிய நேர்ந்ததன் துக்கம் சார்ந்த வெளிப்பாடாகக் கொள்ளத்தக்க அவ்வாறானவர்களின் கேள்விகள் சில சமயங்களில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. அதன் பிறகு காவல்துறையும் இவ் விடயத்தில் தலையிட்டு, ஜனாஸாவை மீளவும் தோண்டியெடுக்க உத்தரவிடுகின்றன.

     இந்த விடயத்தை மிகவும் எளிதாகத் தவிர்க்கக் கூடிய விதமாக மையித்துக்கள் சம்பந்தமாகவும், மையித்தைச் சார்ந்தவர்கள் மரணம் நிகழ்ந்ததும் உடனடியாக எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.


     இலங்கையில் எப் பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருப்பினும், தமது வீட்டில் ஒரு மரணம் நிகழுமிடத்து, அது அன்றுதான் பிறந்த கைக்குழந்தையாக இருப்பினும் கூட உடனடியாக அப் பிரதேசத்துக்குரிய கிராம சேவை அலுவலகரிடம் அறியக் கொடுங்கள். அரசாங்கமானது, ஒவ்வொரு பிரதேசத்துக்குமென நியமித்திருக்கும் கிராம சேவகர், மரணித்தவர் சார்பான மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும், மரணம் தொடர்பாக பின்னர் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமிடத்து காவல்துறையோடு தொடர்புகொள்ளவும் உதவுவார். மையித்தை வீட்டில் வைத்துக் கொண்டு இக்கட்டான தருணத்தில் இருக்கும் குடும்பத்தினரால் இவ்விதமாக தகவல் தெரிவிக்க இயலாமல் போகும் வாய்ப்பு அதிகம். அதனால் அயல்வீட்டினரும், ஊரவர்களும், அப் பிரதேச பள்ளிவாயல் நிர்வாக சபைகளும் இவ் விடயத்தில் உடனடியாக உதவி செய்ய வேண்டும்.


     வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானவரின் மையித்து சம்பந்தமான விபரங்களைக் குறித்து வைத்திய அதிகாரிகள் அறியத் தருவார்கள். ஆனால் வீட்டிலிருக்கும் ஒருவர் இயற்கையாக மரணித்திருப்பினும், அகால மரணமடைந்திருப்பினும் உடனடியாக கிராம சேவகருக்கு அறியத் தருவது முக்கியமானது. அவ்வாறே மையித்துக்கான மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுமெனில், அருகிலிருக்கும் வைத்தியருக்கும் மரணம் குறித்து அறியத் தருவது நல்லது. மரணித்தவர் நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தால் அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த வைத்தியருக்கு மரணம் சம்பந்தமாக உடனடியாக அறியத் தர வேண்டும். அவர் மரணித்தவருக்கான மருத்துவச் சான்றிதழைப் பெற்றுத் தர உதவுவார்.


     தாம் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் மரணித்து விட்டால், அவரது ஜனாஸாவைப் பார்வையிட சமூகமளிப்பது, வைத்திய சட்ட விதிமுறைகளின் பிரகாரம், ஒரு வைத்தியரது கடமையாகும். சட்ட ரீதியாக மரணம் சம்பந்தமான விசாரணைகள் ஏதேனும் நடைபெறுமாயின் அந் நேரத்தில் நோய் சம்பந்தமான தகுந்த ஆதாரங்களை அவ் வைத்தியர் முன்வைக்க வேண்டும். மரணித்தவருக்கான மருத்துவ சான்றிதழை மிகுந்த கவனத்தோடும், தெளிவாகவும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.


     மருத்துவ பரிசோதனைக்காக ஜனாஸாவின் உடலை வெட்டிப் பார்ப்பார்களோ என்ற அச்சத்தில் வைத்திய அதிகாரிகளுக்கு மரண அறிவித்தலைத் தெரிவிக்காமல் மறைத்து வைக்கும் பழக்கம் நம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, இயற்கையாக மரணித்தவருக்கான மருத்துவச் சான்றிதழ் என்பது மரணத்துக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தும் மருத்துவச் சான்றிதழ் ஆகும். இது பிரேத பரிசோதனை அறிக்கை அல்ல. எனவே மையித்தை வெட்டிப் பார்ப்பது இங்கு அவசியப்படாது.


     இயற்கை மரணங்களின் போது, இச் சான்றிதழை ஜனாஸாவின் உடலை வெட்டாது சான்றிதழாகக் கொடுக்க வைத்தியர்களுக்கு அனுமதியுண்டு. அதற்கு மரணத்திற்கான காரணம் தெளிவானதாக இருக்க வேண்டும். மரணம் இயற்கை மரணமாக இருக்க வேண்டும். வைத்தியர் நேரடியாக மையித்தைப் பார்வையிடுபவராக இருக்க வேண்டும். மரணமானவர் முன்னர் பெற்றுக் கொண்ட சிகிச்சைகளை சம்பந்தப்பட்ட வைத்தியர் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு மரணித்தவருக்கு முன்னர் சிகிச்சை அளித்திருப்பவராக இருப்பது சிறந்தது.


     ஒருவர் மரணித்த பிறகு அவரது ‘மரணத்துக்கான மருத்துவச் சான்றிதழ்’ ஏன் அவசியமாகிறது என்ற கேள்வி இங்கு எழக் கூடும். ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் மரணத்துக்கான மருத்துவச் சான்றிதழானது, இரு வகைகளில் பயன்படுகின்றன. முதலாவது, அது மரணித்தவரது மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ். அந்தச் சான்றிதழானது, அவரது குடும்பத்தவர்களுக்கு, பிற்காலத்தில் அந் நபரது காப்புறுதித் தொகையையோ, இழப்பீட்டுப் பணத்தையோ, ஏனைய அரச கொடுப்பனவுகளையோ, சேமிப்புத் தொகையையோ, வேலைவாய்ப்பையோ பெற்றுக் கொடுக்கவும், திருமணம் மற்றும் சொத்து பரிமாற்றங்களின் போதும் முன்வைக்கப்பட வேண்டிய மிகவும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். இரண்டாவது, அந்தச் சான்றிதழானது அரசாங்க புள்ளிவிபரங்களுக்கும், மருத்துவ ஆய்வுகளுக்கும், சுகாதார நலத் திட்டங்களுக்கும் வெகுவாகப் பயன்படுகின்றது.


     அகால மரணங்களின் போது, பரிசோதிக்கும் வைத்தியரின் கூற்றுப் படியும், சட்ட அலுவலர்களின் கட்டளைப் பிரகாரமும், நீதிமன்ற உத்தரவுப்படியும், விசாரணை நடவடிக்கைகளுக்காகவும் மையித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை அவசியமாகின்றது. மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய நடத்தப்படும் பிரேத பரிசோதனை தேவைப்படும் அகால மரணங்களுள் கீழுள்ளவை பிரதானமாகக் கொள்ளப்படுகின்றன.


  • ·         தற்கொலை

  • ·         விலங்குகள் தாக்கியோ, தீண்டியோ மரணமாதல்

  • ·         இயந்திரங்களில் சிக்கி மரணமாதல்

  • ·         விபத்துக்களில் சிக்கி மரணமாதல்

  • ·         திடீர் மரணம்

  • ·         காவல்நிலையத்திலோ, சிறைச்சாலையிலோ, மனநல விடுதியிலோ, தொழுநோய் மருத்துவமனையிலோ நிகழும் மரணம்

  • ·         வன்முறைகளில் சிக்கி மரணமாதல்

  • ·         சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமாதல்

  • ·         மரணமான நிலையில் கண்டெடுக்கப்படும் சடலங்கள்

  • ·         வேறு நபரொருவரது நடவடிக்கையால் மரணமாதல்

  • ·         கொலை


    
     மேலுள்ளவாறான அகால மரணங்கள் ஒரு பிரதேசத்தில் நிகழ்ந்தவுடனேயே அண்மையிலிருக்கும் காவல் நிலையத்துக்கும், கிராம சேவகருக்கும் அத் தகவலைத் தெரிவிக்காதிருப்பது தவறாகும். அவ்வாறு அறிவித்தும் உடனடியாக வருகை தராத கிராம சேவகர்கள் இருப்பின், வர முடியாததற்கான தகுந்த காரணத்தை அவர்கள் தெரிவிக்காதிருப்பின் அது குறித்தும் காவல்துறையிடம் முறைப்பாடுகள் செய்யலாம். தகவல் அறியக் கிடைத்ததும் கிராம சேவகர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு உடனடியாக வருகை தந்து அடுத்து செய்ய வேண்டிய கருமங்கள் என்ன என்பதைத் தெரிவிப்பார். அதன் பிரகாரம் நடந்து கொள்ளும்பட்சத்தில் தொடர்ந்து வரும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடாது.


     நமது சமூகத்தில் மக்கள் இந்த இடத்திலேயே தவறிழைக்கிறார்கள். கிராம சேவகர், முக்கியமாக அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருப்பின், அவருக்கெல்லாம் ஜனாஸா  சம்பந்தமான தகவல்களை ஏன் தெரிவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கோடு அநேகமானோர் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். இதனால் இறுதிச் சடங்குகள் முடிந்ததன் பின்னர் மையித்து தொடர்பான தகவல்களை அவரோ, காவல்துறையோ தெரிந்துகொண்டு தகுந்த காரணங்களுக்காக மையித்தைத் தோண்டியெடுத்துக் காட்டும்படி உத்தரவிடும்போது அவர்களைக் குற்றம் கூற முடியாது. இன்றுவரை இலங்கையில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்று விட்டன.


     எனவே இலங்கையிலிருக்கும் எமது சமூகத்து மக்கள் ஒவ்வொருவரும் இவ்விடயத்தில் மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இக் கட்டுரையை வாசிப்பவர்கள், உங்கள் நண்பர்களுக்கும் இத் தகவலை விபரமாக எடுத்துக் கூறுங்கள். பள்ளிவாசல்கள், பிரசங்கங்களின் மூலமாக ஊர் மக்கள் அனைவரிடத்திலும் இந்த விடயத்தை எத்தி வைக்கலாம். மரணம் எவருக்கும் எந்த நேரத்திலும் நிகழலாம். அது நிகழ்ந்ததன் பிறகு இறுதிச் சடங்குகள் கூட ஜனாஸாவுக்கு உபத்திரவமில்லாது கண்ணியமானதாக நிகழ்வதே சிறப்பானதாகும்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - விடிவெள்ளி வார இதழ், கல்குடா நேசன், Madawala News