Wednesday, August 31, 2011

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.

எங்களை ஓரளவு மிகவும் குரூரமான அனுபவங்களுக்கு ஆளாக்கியது அஸவேதுவாவின் வெள்ளைக்கார ஆளுனர்கள். அவர்கள் இங்கு செய்த குரூரமான குற்றங்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஊவா வெல்லஸ்ஸயில் கலவரத்தை முன்னெடுத்த ப்றவுன்ரிக் ஆளுனர் எமது மக்களை மிகவும் கொடுமையாக நடத்தியமையை அவரிட்ட சட்டங்களே தெளிவுபடுத்துகிறது. அச் சட்டங்களுக்கேற்ப மனிதர்கள் மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நிழல் வழங்கும் மரஞ்செடி கொடிகள் கூட அழிக்கப்படக் கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும் அவை அவ்வாறே செயல்படவில்லையென 'டேவ்' சொல்கிறது. இராஜசிங்க அரசன், எஹெலபொல இளவரசியிடம் அவளது குழந்தைகளை அவளைக் கொண்டே உரலிலிட்டு இடித்ததாகச் சொல்லப்படும் கதையும் கூட ஆங்கிலேயர்களால் அரசனை அவமானப்படுத்த பரப்பப்பட்ட வதந்தி என்று இன்று கருதப்படுகிறது.

எமது நாட்டில் முதன்முதலாக இனக் கலவரம் உருவானது 1956க்குப் பிறகே. வேறு மொழியொன்றைப் பேசுவதனாலேயே நாம் அதுவரையில் எம்முடனேயே ஒன்றாக இருந்த நேச ஜனங்களை பரம எதிரியாக நோக்கினோம். நிராயுதபாணிகளாக இருந்த அவர்களை நாம் முடிந்தளவு வதைக்குள்ளாக்கி வேதனைப் படுத்தினோம். நாம் எல்லோருமே இப்படிச் செய்யவில்லை என்பது உண்மைதான். எனினும் எங்களில் அனேகர் வெறுமனே பார்த்திருந்தோம்.

மக்களின் வாக்குகளால் பதவியேற்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டம் தெற்கில் 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் வடக்கில் போராளிகள் சிலரால் எமது இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டதும் நாங்கள் மீண்டும் அப் பழைய இனவாத ஆவேசத்தை தலைகளில் ஏற்றிக் கொண்டோம். எங்களில் சிலர் அவர்களுடனிருந்த, வடக்கிலிருந்து வந்திருந்த நண்பர்களைக் கூட குடும்பத்தோடு உயிருடன் வாகனங்களிலேற்றி எரித்தோம். அதையும் எங்களில் அனேகர் பார்த்திருந்தோம். அரசு உறக்கத்திலிருந்தது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தை மகாராணி நியமித்த ஒலிவர் குணதிலக நிறுத்தினார். எனினும் 1983இல் எங்களுக்கிருந்தது மக்கள் நியமித்த ஜே.ஆர். ஜெயவர்தன. அவர் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இடம்கொடுத்து வெறுமனே பார்த்திருந்தார். துரதிஷ்டவசமாக முழு உலகத்தினரும் இதனைக் கண்டார்கள். தெற்கில் எங்களுடன் ஒன்றாக இருந்த தமிழர்கள், வீடு வாசல்களைக் கை விட்டுவிட்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். ஒரு கணத்துக்கேனும் நிராயுதபாணிகளாக இருந்த அவர்களது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொடுக்க தெற்கிலிருந்த எங்களுக்கும், அதே போல அரசாங்கத்துக்கும் முடியாமல் போனது. ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஒரு மக்கள் குழுவினரது வாழும் உரிமையை காப்பாற்றிக் கொடுக்காதிருக்கையில், அதைக் காப்பாற்றும் வேறொரு அரசாங்கம் குறித்த கனவுகளைக் காண்பது என்பது மிகவும் இயல்பானது.

அதன்பிறகு 1989 இல் தெற்கில் மீண்டும் மிகப் பெரிய கலவரமொன்று தோன்றியது. ஐயோ..அவ்வாறானதொரு கொடுமை. அப்பாவிகளைக் கொன்றது மாத்திரமல்லாது பிணங்கள் கூட அவமானப்படுத்தப்பட்டன. வீதிகள் தோறும் பிணங்கள்..டயர் சுடலைகள். ஒழுங்கமைக்கப்பட்ட குரூரமொன்றை நாங்கள் இங்கு காட்டினோம். மோதிய இரு புறமும் போட்டிக்கு குரூரமாகின. யார் செய்திருந்தாலும் விஜேசுந்தர, ரிச்சர்ட் சொய்ஸா போன்றவர்களின் படுகொலையானது மிகக் குரூரமான செயல். இக் குரூரமானது நாடு முழுவதிலும் பரவியது. வடக்கிலும் பரவியது. வடக்கில் மரணத்தை வாழ்க்கையாகக் கொண்டு வரும் மனித வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டன. ஊர் முழுவதுமான, பேரூந்துகள் முழுவதுமான மக்கள் மாண்டனர். ஜனத்திரள் நிறைந்த வீதிகளில் பாரிய குண்டுகள் வெடித்தன. அதுவும் மிகப் பயங்கரமான யுகமொன்று. நாங்கள் தவறுதலாகவோ மிலேச்சத்தனத்தை வீரமாகப் பார்க்கப் பழகினோம். அவ்வாறு இல்லையேல் யாரேனும் எங்களை அப்படிப் பார்க்கும் நிலைக்குத் தள்ளினார்கள்.

இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இளவரசர்கள் கூட யுத்த களத்துக்கு அனுப்பப்படும் கட்டாய இராணுவ சேவையொன்று இங்கில்லை. எனவே எங்களில் அனேகர் வாழ்வதற்கு வேறு வழியேதுமின்றியே யுத்த களத்துக்குச் சென்றார்கள். வடக்கிலும் வசதியிருந்தவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு யுத்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளே. இரு புறத்திலுமே யுத்தத்துக்காக இணைக்கப்பட்டவர்கள் ஒருபொழுதேனும் யுத்தத்துக்குச் சென்றிராதவர்கள். ஆரம்ப காலத்திலென்றால் மனிதத்தன்மை நிறைந்த கொப்பேகடுவ போன்ற படையினர் இருந்தனர். இறுதிக் காலத்திலிருந்த பெரும்படையினர் இப்பொழுது எங்களையே சிறையிட்டு விலங்கிடுகிறார்கள். எனவே இங்கு நடந்த யுத்தம் குறித்து பிற மக்கள் ஒவ்வொரு விதத்தில் தீர்மானிக்கிறார்கள். சிலர் நாங்கள் மிகக் குரூரமானவர்கள் எனச் சொல்கிறார்கள்.

குடிக்கத் தண்ணீர், வயிற்றுக்கு உணவு, மருந்தேதும் இல்லாமல் மாதக் கணக்கில் சிறிய பாலைவனமொன்றில் அடைக்கப்பட்டுள்ளவர்களது அச்சம், துயரம், வலியை அறிந்தவர்கள் அவ்வாறு சிறைப்பட்டவர்கள் மாத்திரமே. அவ்வாறு சிறைப்பட்டவர்கள் இங்குமிருந்தார்கள் என்பதை அக் காலத்தில் நாம் சற்று மறந்திருந்தோம். நாங்கள் 70,000 பேருக்கு உண்ணக் குடிக்க அனுப்பி வைத்தோம். பார்க்கும்போது அங்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறான இடத்தில் மரணத்தை எதிர்நோக்கியவாறிருந்த சமூக சேவையாளர்களும் அகன்றிருந்தால்  அம் மக்களுக்கு என்ன நடந்ததென்று உலகுக்குச் சொல்லத் தெரிந்த பிற மனிதனொருவன் இல்லை. எனினும் வானத்திலிருக்கும் செய்மதி இங்கு நடந்த எல்லாவற்றையும், இரவு பகல் பாராது பார்த்திருந்திருக்கிறது. பார்த்திருந்தவற்றை அறிவித்திருக்கிறது.

மிலேச்சத்தனத்துக்கு மிலேச்சத்தனத்தாலேயே முகம்கொடுக்க வேண்டும் என்பது கடினமான அனுபவப் பழமொழி. பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற சொற்தொடருக்கு அது சமனாகிறது. எனினும் பின்பொரு காலத்தில் நேசத்துக்குரியவர்களின் மிலேச்சத்தனமானது ஓரளவு பலவீனமடைந்த பிற்பாடு நாங்களும் மிலேச்சத்தனம் எனும் ஆயுதத்தைக் கை விட்டிருக்க வேண்டும். எனினும் நாங்களும் இயலாதபட்சத்தில் மிலேச்சத்தனத்தை மிலேச்சத்தனத்தால் வெற்றி பெற்றோம் எனக் கொள்வோம். எங்களால் உலகுக்கு சமாதானம், சந்தோஷம், அமைதி போன்றவற்றைக் காட்டிக் கொள்ள முடியும்.எனினும் நாங்கள் இன்னும் எங்களது மிலேச்சத்தனத்தின் நிர்வாணத்தையே காட்ட முயற்சிக்கிறோம். அந் நிர்வாணத்தை நாங்கள் மூட முயற்சிப்பது அதற்கு சற்றும் சளைக்காத கட்டளைகளால். ஆகவே மூட மூட நிர்வாணம் இன்னுமின்னும் தென்படுகிறது.

எங்களது நாடு புத்தரின் தேசமென இப்பொழுது சிலர் சொல்கிறார்கள். புத்த புத்திரர்கள் ராஜ சபைகளில் உட்காந்திருப்பதுவும் இப்படியாக மட்டுமே. அவர்கள், உலகுக்கு அமைதியை வழிகாட்டுமொன்றை உருவாக்கப் பாடுபடுவதைத்தான் காண முடியவில்லை. இன்னும் சிலர், நாடு முழுதும் கோபத்தினதும் குரோதத்தினதும் நினைவுத்தூபிகளைக் கட்ட முயற்சிக்கிறார்கள். இவ்வாறு செல்கையில் இன்னுமொரு மஹிந்த (புத்தரைக் குறிக்கிறது. புத்தரின் நாமம் மஹிந்த) இந்தியாவிலிருந்து இங்கு வரக் கூடும். எனினும் இன்று அங்கு அசோக மன்னர்கள் இல்லை. நாங்கள் எங்களது கௌரவத்தைக் காத்துக் கொள்ள வேண்டியிருப்பது சிங்கங்கள், புலிகளாக எங்களை நாங்களே அடித்துக் கொன்று கொண்டு நாங்கள் அதில் வீரர்கள் என்று உலகுக்குக் காட்டுவதன் மூலமல்ல. எங்கள் எல்லோராலுமே மனிதர்களாக சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக ஒன்றாக இருக்க முடியுமென உலகுக்குக் காட்டுவதன் மூலம்தான். இப் புத்தர் பிறந்தநாளில் நாட்டுக்கு எவ்வாறாயினும் உலகுக்குக் கொடுக்கக் கூடிய தகவல் அதுதான்.

- A.P.G சரத்சந்திர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி 
# இனியொரு 
# உயிர்மை 
# திண்ணை

Monday, August 22, 2011

'கிறீஸ்' மனிதர்களின் மர்ம உலா - இலங்கையில் என்ன நடக்கிறது?


            அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் கண்டு பயந்த காரணத்தினாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் இன்னும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது அவற்றில் ஏதோ விடயம் இருக்கின்றதென்றே எண்ணத் தோன்றுகிறது. இதனை வதந்தி என்று சொல்லி முழுவதுமாக அப்புறப்படுத்தி விடவும் முடியாது. ஒரு சிறு வதந்தியானது, இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதியெங்கிலும் ஒரே நேரத்தில் ஒரே அச்சத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பில்லை அல்லவா?

      அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் கலவரத்தின் பின்னணியிலும் இதுவே இருந்தது. தற்போதைய கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் அமைதியற்ற சூழலுக்கும் இதுவே காரணமாகியிருக்கிறது. அத்தோடு மர்ம மனிதர்கள் ஒளிந்திருந்த பாழடைந்த வீட்டுக்குள்ளிருந்து காவல்துறை சீருடைகள், ஹெல்மட்டுக்கள், இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனில் இவ் வதந்தியின் பின்னணியில் நாம் இன்னும் அறிந்து கொள்ளாத ஏதோ ஒரு சக்தியும், செய்தியும் இருக்கத்தானே செய்கிறது? அது என்னவென்று கண்டுபிடிக்க இந்த வதந்தியை ஆராயத்தானே வேண்டும்?

      இவற்றை ஆராய்ந்து சொல்லும் என முழுவதுமாக இனி அரசை நம்பிப் பயனில்லை. அது தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எனினும் இதற்காக சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்வதானது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். அத்தோடு அகப்படும் ஒருவரைப் பிடித்து, ஊர்மக்கள் நூறு பேர் சேர்ந்து தாக்குவது என்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதால்தான் காவல்துறையிடம் கொண்டு போய் ஒப்படைக்கின்றனர். ஒப்படைக்கப்படும் நபர்களை விடுதலை செய்துவிட்டு, சந்தேக நபர்களைக் கொண்டு வந்தவர்களைத் தாக்கும் நடவடிக்கையை காவல்துறை இலகுவாகச் செய்து வருகிறது. இதுவரைக்கும் இவ்வாறான சந்தேக நபர்கள் 40 பேரளவில் ஒவ்வொரு ஊர் பொதுமக்களிடமும் அகப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் அனேகமானோர் காவல்படையைச் சேர்ந்தவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

      இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போதும், அரசாங்கமானது இவையெல்லாவற்றையும் வதந்தி எனச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கும் போதும், மறைவாக ஏதோ உள்ளே இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அது என்ன என்பதற்கான தேடல்தான் எத்தரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை. காரணம், அவ்வாறு ஆரம்பிக்கப்படுவதன் முதல் எதிரி அரசாங்கமாக இருப்பதுதான். எனவே ஒட்டுமொத்தமாக மக்களின் சந்தேகமானது அரசாங்கத்தின் மீதே எழுந்திருக்கிறது என்பது வெளிப்படையானது.

      அரசாங்கத்தின் மீதான இது போன்ற நியாயமான சந்தேகங்கள் எழக் காரணங்களும் இல்லாமல் இல்லை. ஊர்மக்கள் இரவுகளில் விழித்திருந்து பிடித்துக் கொடுத்த சந்தேக நபர்களை காவல்துறையானது எந்த நடவடிக்கையும் எடுக்காது, விடுதலை செய்திருக்கிறது. சாதாரண ஒரு முறைப்பாட்டுக்கே சந்தேக நபர்களை அடித்து உதைத்து விசாரிக்கும் இலங்கைக் காவல்துறையானது, ஒரு ஊரே சேர்ந்து கொடுத்த முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் சந்தேக நபர்களை விடுவித்ததெனில், பொதுமக்களுக்கு சந்தேகம் யார் மேல் எழும்? அதுவும் எல்லா ஊர்களிலும் இதே நடைமுறை எனும்போது இவ்வாறான சந்தேகம் எழுவது நியாயம்தானே?

      இந்த மர்ம மனிதர்கள் குறித்து பலவிதமான எண்ணக் கருக்கள் மக்கள் மத்தியில் உள்ளன. அவற்றில் பிரதானமாகவும் நியாயமானதாகவும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு எண்ணக் கருவை முதலில் பார்ப்போம்.

      யுத்த காலத்தில் களத்துக்கு அனுப்ப வேண்டி, இலங்கை இராணுவத்துக்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். அதற்காக கிராமங்கள் தோறும், உடனடியாகவும் அவசரமாகவும் இளைஞர்களைத் திரட்டி எடுத்தனர். அவசர காலத்தில் இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பெரிதாக கல்வியறிவு இருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சம்பளமும் அதிகம். கிராமங்களில் அந் நேரம் இராணுவத்தினர் மிகவும் கௌரவத்துக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். எனவே வேலையற்ற கிராமத்து இளைஞர்கள் அனேகம்பேர் உடனடியாக இராணுவத்தில் இணைந்தனர். அக் கிராமத்து இளைஞர்களிடம் இராணுவத்துக்குத் தேவையற்றதும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதுமான 'மனிதாபிமானம்' நிறைந்திருந்தது. அவர்களை மூளைச் சலவை செய்யாமல் களத்துக்கு அனுப்பினால் எதிராளியைக் கொல்லத் தயங்குவர் என்பதை உணர்ந்த இராணுவம், அவர்களை மூளைச் சலவை செய்தது. போர்ப் பிரதேச மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனநிலையை அவர்களுக்குள் தோற்றுவித்தது.

      மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞர்களால் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் நிறைவுற்றது. பல ஆண்டுகளாக நீடித்த போரில் அரசாங்கம் வென்று மார்தட்டிக் கொண்டது. இராணுவத்தினர் கொண்டாடப்பட்டனர். காலங்கள் சென்றன. இராணுவத்தில் தேவைக்கும் அதிகமாக இராணுவ வீரர்கள் செறிந்திருந்தனர். பிரதான வீதிகளிலிருந்த இராணுவக் காவலரண்களும் அகற்றப்பட்டதன் பின்னர், அவர்களுக்குச் செய்யவென எந்த வேலையும் இல்லை. அவர்களை மக்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காய்கறிகள், தேங்காய்களை விற்கவும், வீதிச் செப்பனிடல் பணிகளிலும், மைதானத் திருத்த வேலைகளிலும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். இந் நிலையில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் தப்பிச் சென்றனர். அரசாங்கம் அதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. வெறுமனே சம்பளம் கொடுத்து வைத்திருப்பதை விடவும் தப்பிச் சென்றது நல்லதென அரசாங்கம் கருதியிருக்கக் கூடும்.

      தப்பிச் சென்றவர்களுக்கு பகிரங்கமாக வேறு தொழில் தேட முடியாது. அரசாங்கம் வழங்கிய ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு, செழிப்பானதொரு வாழ்க்கைக்குப் பழகியிருந்த அவர்களுக்கு வீட்டின் தற்போதைய வறுமை நிலை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே அவர்களால் செய்ய முடியுமான இலகுவான வேலையாக திருட்டையும், பணத்துக்காக எதையும் செய்வதையும் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்? அதுவும் மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்களிடம் மனிதாபிமானமும் இருக்காது. அவ்வாறானவர்கள்தான் இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரவு நேரங்களில் உலவுகின்றனர் என மக்கள் கருதுகின்றனர்.

      அத்தோடு இன்னுமொரு எண்ணம், படித்தவர்கள் மத்தியில் உலவுகிறது. யுத்தம் நிறைவுற்றதற்குப் பிறகு அவசர காலச் சட்டத்தை விலக்கக் கோரி பல மனுக்கள் அரசை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அச் சட்டத்தை நீக்கினால் பல நஷ்டங்களைச் சந்திக்க நேருமென்ற அச்சம் அரசாங்கத்திடம் உள்ளது. எனவே ஊர்கள் தோறும் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தினால் அச் சட்டத்தை நீக்க வேண்டிய தேவையிருக்காது என அரசாங்கம் எண்ணியிருக்கலாம் எனவும் பலர் கருதுகின்றனர்.

      அதே போல அண்மைக்காலமாக அரசுக்குப் பல நெருக்கடிகள் பொதுமக்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியுள்ளன. கட்டுநாயக்கவில் அரசாங்கத்தை எதிர்த்து நின்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டம், சேனல் 4 கிளப்பிய சிக்கல்கள், கலப்படப் பெற்றோல் இறக்குமதியால் எழுந்த பிரச்சினைகள், தற்போதைய கலப்பட சீமெந்தால் எழுந்துள்ள பிரச்சினைகள், விலைவாசி அதிகரிப்பால் எழுந்துள்ள கொந்தளிப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை நிலை எனப் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் உள்ளது. இப் பிரச்சினைகளின் உண்மை நிலையை அறியவென மக்கள் கிளம்பினால், தற்போதைய ஆட்சிக்கு அது பங்கம் விளைவிக்கும். எனவே இவற்றின் மீதுள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டியும், இவ்வாறான மர்ம நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதுவும் அரசியலில் ஈடுபாடு கொண்ட பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

      'எல்லாள மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு மன்னனுக்குச் சொந்தமான போர்வாளைக் கண்டுபிடித்துத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசனின் ஆட்சி நீடிக்கும்' என்ற ஆதி நம்பிக்கைக்கிணங்கி, ஜனாதிபதி ஒவ்வொரு ஊருக்கும் இராணுவத்தினரை இரவில் அனுப்பி அவ் வாளைத் தேடுகிறார் என்பது பாமர மக்களின் கருத்து. எவ்வாறாயினும் எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது. அவ்வாறில்லையெனில் அதனை நிரூபிக்க வேண்டியதுவும், சம்பந்தப்பட்ட மர்ம மனிதர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுவும் அரசின் அத்தியாவசியமான கடமையாக உள்ளது. அதைத் தவிர்த்துவிட்டு மக்களின் தோழனாக இருக்கவேண்டிய அரசாங்கமானது, குற்றவாளிகளின் தோழனாக மாறிவிடுமெனில் பயமும், பதற்றமும் சூழ்ந்த வாழ்வின் பின்னணியே நாட்டு மக்களுக்கு வசப்படும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# திண்ணை

Monday, August 15, 2011

தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. 'நல்லரத்தினம் சிங்கராசா'வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார்.

அவரது ஊர் மட்டக்களப்பின் நாவற்காடு. ஒளிந்திருப்பது இரு குழுக்களின் மீதுள்ள அச்சத்தால். ஒரு குழு இலங்கை அரசின் இராணுவப் படை. மற்றைய குழு விடுதலைப் புலிகள் இயக்கம். இது பயனற்ற கதையொன்றென எவருக்கும் தோன்றக் கூடும். விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அரசாங்கம் இரண்டுமே எதிரிகள். ஒருவர் இவ்விரண்டு குழுக்களிலும் ஒரு குழுவைச் சார்ந்தவரெனில், மற்றக் குழுவைக் குறித்து அவர் அச்சமுறுவது சாதாரணமானது. எனினும், சிங்கராசா இந்த இரண்டு குழுக்களுக்குமே பயந்து ஒளிந்திருக்கிறார்.

அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும்படி இந் நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய சொற்ப அளவேயான மக்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், 'சிறையிலிருப்பது பேரூந்துகளில் குண்டு வைத்த புலிகள்' என மிகவும் இலகுவாக கருத்துரைத்துக் கொண்டிருக்கும்  ஐயாக்களிடம், நாம் இங்கு சொல்லப் போகும் கசப்பான செய்திகளை நிதானமாக ஒரு கணம் செவிமடுக்கும்படி வேண்டுகிறோம்.

இன்று அந்த மக்களை 'அவர்கள் புலிகள்' என எலும்பில்லாத நாவினால் தயங்காது சொல்பவர்களுக்கு, இத் தமிழ் இளைஞனின் உண்மைக் கதையானது நிச்சயமாக உள்ளத்தை உருக்கக் கூடியது.

'சிங்கராசா'வை கருணா அம்மானின் படைப்பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த 'இனிய பாரதி'யின் குழுவினர் வந்து பலாத்காரமாகக் கொண்டு சென்றபோது அவருக்கு வயது 15. (இன்று, இனிய பாரதி இலங்கை சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்.)

பயிற்சியிலும் செயற்பாடுகளிலுமிருந்த சிரமங்களின் காரணமாக சிங்கராஜா அக் குழுவிலிருந்து தப்பி வந்தார். எனினும் அதனால் நடந்தது சிங்கராசாவின் வாழ்க்கை இன்னும் சிரமங்களுக்குள்ளானது மட்டும்தான். அன்றிலிருந்து இராணுவம், விடுதலைப் புலிகள் ஆகிய இரு படையினருமே அவரது எதிரிகளாயினர். அந்த இரு படைகளிலுமேயுள்ள வேட்டைக்காரர்களிடமிருந்து இந்த 'இளம் மான்' ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. அவர் நாட்கணக்காக உயிரச்சத்தில் தவித்தபடி பரணில் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது இதனாலேயே. எனினும் துரதிஷ்டம் அவரை விட்டும் போயிருக்கவில்லை.

அரசின் இராணுவப் படை,  பல மடங்குச் சோதனைகளைப் பிரயோகித்து சிங்கராசாவின் கிராமத்தைச் சுற்றிவளைத்து இம் மாபெரும் 'தீவிரவாதத் தலைவரை'க் கைது செய்தது. இரு கரங்களுக்கும், இரு பாதங்களுக்கும் விலங்கிட்டு இராணுவப் படை ஜீப் வண்டிகள் பலவற்றின் மத்தியில் சிங்கராசாவை முட்டிக்காலிடச் செய்து, கொண்டு சென்றது. தாயினதும் குடும்பத்தினரதும் ஒப்பாரி ஓசைகளுக்கு மத்தியில் சிங்கராசாவுக்கு நினைவில் வந்தது ஒன்றே ஒன்றுதான். அது இரண்டு வருடங்களுக்கு முன்பு கருணா அம்மானின் குழு வந்து தன்னைக் கொண்டு சென்ற விதம்.

அன்றும் அவர் இன்று போலவே ஒளிந்துகொண்டிருந்தார். அன்றும் ஆயுதப் படை வீட்டின் மூலையொன்றில் இருந்த அவரை கழுத்தைப் பிடித்து வெளியே கொண்டு வந்தது. அன்றும் ஆயுதங்கள் தாங்கிய போர்ப் பட்டாளமொன்று நள்ளிரவு நேரத்தில் ஊர் மத்தியில் வைத்து அவரைக் கொண்டு சென்றது. அன்றும் கூட அவரது தாயாரின் வாயிலிருந்து இதே போன்ற மரண ஒப்பாரி எழுந்தது.

இது சிங்கராசாவின் கதை மட்டுமல்லாது இன்னும் அனேக 'புலிகளின்' கதை. பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 'ராசையா துவாரகா'வின் கதை கூட இது போன்றதுதான். அவரும் இதே விதத்தில்தான் அவரது ஊரான கிளிநொச்சியில் வைத்து விடுதலைப் புலிகளாலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வைத்து அரச இராணுவப் படையினராலும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

மட்டக்களப்பின் முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரனும் அவ்வாறான ஒரு இளைஞர்தான். விடுதலைப் புலிகள் இயக்கம் அவரைக் கொண்டு சென்றது அவரது 14 வயதில். கைது செய்யப்படும்போது அவரது வயது 15. அது 1993இல். இங்குள்ள மிக மோசமான விடயம் இதுவல்ல. இன்று அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் அல்லாதுவிடின் விதிக்கச் செய்யப்பட்டிருக்கும் தீர்ப்பு. இன்றுவரைக்கும் , இந்தக் கணம் வரைக்கும் இந்த இளைஞர், யுவதிகள் இருப்பது சிறையில். விடுதலைப் புலிகளால் 'புலியொன்றாக்குவதற்கு' மகேந்திரனைக் கொண்டு சென்றது அவரது 14 வயதில். ஒரு வருட காலத்துக்கு இயக்கம் அவருக்கு பயிற்சியளித்திருக்கிறது. அதன்பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம் அவரது கைக்கு T56 ரக துப்பாக்கியொன்றைக் கொடுத்து யுத்த களத்துக்கு அனுப்பியிருக்கிறது. அங்குவைத்தே அவர் இராணுவத்தால் கைது செய்யப் பட்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 15. இன்று வரைக்கும் அவர் அரசாங்கச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இன்று அவருக்கு வயது 33.

பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களே, இது நியாயமானதா எனச் சொல்லுங்களம்மா ! 14 வயதேயான சிறுவனொருவனைக் கொண்டு பலவந்தமாகச் செய்யப்பட்ட குற்றமொன்றுக்கு, அவர் 33 வயதாகும்வரை சிறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதை யாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

விடுதலைப் புலிகளால் முதன்முறையும், அரசால் இரண்டாம் முறையும் 'வன்முறைக்காளாக்கப்பட்டிருப்பது' வானமும் பூமியும் கூடப் பொறுக்காத குற்றமொன்று அல்லவா? இரு படையினராலுமே அப்பாவிப் பிள்ளைகளின், இளைஞர்களின் வாழ்க்கை நாசப்படுத்தப்பட்டிருக்கிறது. வியப்புக்குரியது அது மாத்திரமல்ல. தீவிரவாதம் எனச் சொல்லப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் அவரது வாழ்க்கை சிதைக்கப்பட்ட காலம் ஒரு வருடம்தான். ஜனநாயகம் என அழைக்கப்படும் அரசாங்கத்தால் அவரது வாழ்க்கை நாசப்படுத்தப்பட்டிருக்கும் காலம் 18 வருடங்கள்.

இன்று இதுபோல தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கானோர் இலங்கை ஜனநாயக சமூகவாத மக்களுக்கான அரசாங்கத்தின் சிறைச்சாலைகளுக்குள் தமது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாமுமே ஒரு வசனம் கூடக் கற்பனையற்ற உண்மைச் சம்பவங்கள். இவற்றை சிங்கள பௌத்தர் என பிறப்புச் சான்றிதழில் பதியப்பட்டிருக்கும் எனது கையினால் எழுதத் தூண்டிய அண்மைய காரணமானது, ஜனநாயக ஆட்சியெனச் சொல்லப்படும் அரசாங்கத்தினாலேயே எனக்கு வாய்ப்பளிக்கப்பட்ட 'அரியதொரு சந்தர்ப்பத்தினால்' ஆகும். அந்தச் சந்தர்ப்பங்கள் மும் முறை கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவையாகும். அதனால் நான் இந்த இளைஞர்களோடு ஒன்றாக உண்று குடித்து ஒரே சிறையில் பல மாதங்களைக் கழித்திருக்கிறேன். ஒரே பாயில் ஒன்றாக உறங்கியிருக்கிறேன். அவர்களது வாழ்க்கை வரலாறுகளை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை சாவதானமாகக் கேட்டிருக்கிறேன். அண்மைய காரணம் அதுதானெனினும், பிரதானமான காரணம் அதுவல்ல. பிரதான காரணமானது, இக் கணத்தில் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியம்தான்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டது அவர்கள் முகம்கொடுக்க நேர்ந்த அநியாயங்களின் காரணமாகவேதான். எனினும் அவர்கள் அவ் அசாதாரணத்துக்குக் காரணமான உண்மையான எதிரியையோ உண்மையான தீர்வொன்றையோ தெளிவாகக் கண்டுகொள்ளவில்லை. பேரரசுகளின் தலையீடு, இந்தியாவின் காரணமாக எங்கள் தேசத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்களின் தவறுகளுக்கு தர்க்கரீதியான பதிலானது, பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனும் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞனும் ஒன்றிணைந்து, பிழையான சமூக நடைமுறைகளுக்கு எதிராக செய்ய வேண்டியிருந்த போராட்டங்களை, ஒருவருக்கொருவர் எதிராக நின்று செய்யப்பட்ட போராட்டமொன்றாக மாற்றியமைத்ததுதான்.

இப் பாரதூரமான தவறுக்காக, ஒரு சில சமாதானத் தூதுவர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறுபட்ட கருதுகோள்களும் இனங்களுக்கிடையிலான சுய முடிவுகளை எடுக்கும் உரிமை குறித்த தலைமயிர் நரைக்கும் தர்க்கங்களாகவே அமைந்தன. அநீதி தொடர்பான பிரச்சினையானது, பாதிக்கப்பட்ட இனம் முகம்கொடுக்கும் சிக்கலொன்றெனவோ அல்லது அதற்கான தீர்வாக அமைவது  ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் ஒத்துழைப்புடன் கூடிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் செய்யப்படும் போராட்டமேயன்றி பிரிவினைவாதப் போராட்டமொன்றல்ல எனச் சொன்னவர்கள் சொற்பமானவர்கள்தான். அச் சொற்பமானவர்களும் அனேகமாக இப் பிரச்சினையைத் தீர்ப்பது 'எங்களது எதிர்கால ஜனநாயக அரசாங்கத்தில் மட்டுமே' என மிக இலகுவாக திரும்பத் திரும்பத் தெரிவித்துக் கொண்டிருந்ததோடு, அதன் சமூக மாற்றத்தின் போது அத்தியாவசியப்படும் வகுப்புவாதப் போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்களை ஒன்றுபடுத்துவது குறித்த நம்பிக்கையானது பாரதூரமான முறையில் நழுவிச் செல்வதற்கும் வழிவகுத்தனர். அதேபோல வகுப்பினரின் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான வகுப்புவாதக்கிளர்ச்சியை தமிழ், சிங்கள, முஸ்லிம் எனப் பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, நாட்டைப் பாதுகாப்பதெனச் சொல்லிக் கொண்டு தேசப்பற்று, இனப்பற்று போன்ற தேசிய போக்குகளிடம் அடிமைப்படுவது தொடர்பான துயரமான நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய புதிய லிபரல் பொருளாதார முறைமை முன்னெப்போதையும் விட மிக வேகமாக செயற்பட்டுக் கொண்டிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது போரிடக்கூடிய, புத்திசாலித்தனமான தமிழ் இளைஞனையும், சிங்கள இளைஞனையும் ஒரே சிறையிலடைத்து பாதிக்கப்பட்ட இனத்தை ஒற்றுமைப்படுத்தும் செயலை மிகவும் நல்ல முறையில் செய்திருக்கிறது. இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைத் தவிர்த்திருப்பதற்கு நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.

இன்று இந் நாட்டின் எல்லாவிதமான மக்களும், இந்த பிழையான சமூக, பொருளாதார முறையிலிருக்கும் சிக்கல்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். கல்வி சார்ந்த பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள், விலைவாசி, வேலை வாய்ப்பு மட்டுமல்லாது இயற்கை அபாயங்கள் குறித்த பிரச்சினைகளும் மீண்டும் மீண்டும் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருப்பது, நடைமுறையிலுள்ள சிக்கல்களைத்தான். 30 வருடங்களாக, தெரிந்த எல்லா விளையாட்டுக்களையும் ஆடினாலும், இருப்பவைகளுக்கும் இல்லாதவைகளுக்குமான இடைவெளி அதிகரித்து கல்வி, சுகாதார உரிமைகளை இழந்து, கடன் தொல்லை, துயரங்களில் துன்பப்பட்டு வந்திருக்கும் பயணம் தெளிவானது. எவ்வளவுதான் தெளிவானதாக இருந்த போதிலும், எங்கள் தேசத்தில் இன்னல்படும் மக்களிடம் 'மஹிந்த ஐயாவுக்கு உங்கள் வாக்கினைச் செலுத்துவீர்களா?' என யாரேனும் வினவக் கூடும். எனினும் தமிழ் இளைஞர்களுடனும் சாதாரண மக்களுடனும் பழகிய அனுபவங்களின் மூலம் தெளிவான விடயம் என்னவெனில், அவர்கள் தமது பிரச்சினைகளுக்காக எந்தத் தயக்கமுமில்லாது போராடுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்பதுதான். துன்பங்களின் எதிரில் முதலில் தந்திரோபாயம் என எண்ணுமளவிற்கு அமைதியாக இருப்பினும், ஒரு எல்லையைக் கடந்த பின்னர் எண்ணிப் பார்க்க முடியாதளவுக்கு போராட்டக்காரக்களாகின்றனர். இதனால் இன்று தேவையாக இருப்பது சரியானதொரு தலைவரின் வழிகாட்டுதலின் மூலம் அமைக்கப்பட்டிருக்கும் தலைமைத்துவமே. சிங்களம், தமிழ், முஸ்லிம் எல்லோருக்குமே இன்று இருக்கும் சிக்கலானது தெளிவானது. கல்விக்காக பணம் அறவிட அரசாங்கம் தயாராகிறது. கல்விக்காக பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதைப் போலவே இன்று பெற்றோர்களால் பணம் கொடுக்கவும் இயலாது. அது தமிழ்ப் பெற்றோருக்கும், சிங்களப் பெற்றோருக்கும் பொதுவானதொரு யதார்த்தம்.

வடக்கு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் இன்னும் வடபகுதி பாடசாலைகளில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள். தெற்கில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் தென்பகுதி பாடசாலைகளில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள். வடக்கில் தேங்காயொன்றின் விலை ரூபாய் 60. தெற்கிலும் தேங்காயொன்றின் விலை ரூபாய் 60. அரசாங்கம், தன்னை விமர்சிக்கும் வடக்கினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு தாக்குதல் நடத்துகிறது. கைது செய்கிறது. கொன்று போடுகிறது. அரசாங்கம், தன்னைக் கேள்வி கேட்கும் தெற்கினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் நோக்கி தாக்குதல் நடத்துகிறது. தீ வைக்கிறது. கொன்று போடுகிறது.

வடக்கில் யுத்தம் செய்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் சிறைச்சாலையில் புல் வெட்டுகிறான், வடிகால்களைச் சுத்தம் செய்கிறான், சமையலறையில் காய்கறிகளை வெட்டுகிறான். தெற்கிலிருந்து சென்று யுத்தம் செய்த இராணுவப்படையைச் சேர்ந்த சிங்கள இளைஞனும் பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் புல் வெட்டுகிறான், வடிகால்களைச் சுத்தம் செய்கிறான், சந்தைகளில் காய்கறி விற்கிறான் !

இறந்துபோன தமிழ்த் தாய்மார்களின் கல்லறைகள் மீது அனுமதி பெறப்பட்ட துப்பாக்கிகளின் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டுச் சென்று தேசிய ஒருமைப்பாட்டைத் தோற்றுவிக்க முடியாது. அவசர காலச் சட்டம், தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அழிவுச் சட்டங்களை இன்னும் நடைமுறைப் படுத்துவதன் மூலம் , தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது. சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் போன்ற இனவாதத் தீர்மானங்களை இன்னுமின்னும் எடுப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பிள்ளைகள், தமிழ்ப் பெண்களின் கணவர்கள், தமிழ்க் குழந்தைகளின் தந்தைகள் என  16000 பேரை இனியும் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டையோ அமைதியையோ ஏற்படுத்த முடியாது.

அதனால் அரசியல் சிறைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசாங்கத்தின் அமைச்சர்களின் கருத்தாவது 'அரசியல் சிறைக்கைதிகள் கொலைகாரர்கள்' என்பதுதான். அவர்கள் இந்த உணர்வு பூர்வமான விடயத்தைப் பார்ப்பது அவ்வாறுதான்.

மகேந்திரன்களுக்கு, துவாரகாக்களுக்கு பலவந்தமாக போர்ப் பயிற்சியை அளித்தது கருணா அம்மான்கள். பயிற்சியின் முடிவில் யுத்த களத்துக்குத் தள்ளிவிடப்படும்போது கொடுக்கப்படும் T56 துப்பாக்கியை சர்வதேச ஆயுத வலையமைப்புக்குக் கொண்டு சென்றது கே.பிக்கள். எனினும் கருணா அம்மான்களும் கே.பிக்களும் யுத்தத்தில் காட்டிக் கொடுத்ததன் காரணத்தாலும், அரசாங்கத்தின் முன்னிலையில் முழங்காலில் நின்றதாலும், இன்று 'அரச மாளிகை'யில் இருக்கிறார்கள். அவர்களது பலாத்காரத்துக்கும் தலைமைத்துவத்துக்கும் கீழ் நின்று போரிட்ட தமிழ் இளைஞன் 'சிறைச்சாலை'யில் இருக்கிறான்.

தேசிய ஒருமைப்பாட்டை மதிக்கும் சகலரையும் இந் நிலைமைக்கு எதிராக நிற்க முன்வருமாறு நாங்கள் வேண்டி நிற்கிறோம்.

- உதுல் ப்ரேமரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
நன்றி
 # இனியொரு
# உயிர்மை
# திண்ணை


Tuesday, August 9, 2011

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?

அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகங்கொடுத்த விஜிதா நால்வர் அடங்கிய குடும்பத்தின் மூன்றாமவள். அப்பொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லத் தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக அவள் அவசர அவசரமாக தனது தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.

 தப்பிச் செல்வது ஷெல் குண்டுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் கட்டளையை செயற்படுத்தாது விடின் வரும் ரீ56 குண்டுகளிலிருந்தும் காத்துக் கொள்ளத்தான். அதனால் பின்தொடரும் விடுதலைப் புலிகளின் மனிதப் பலிகடாக்கள் ஆகத்தான் விஜிதாவும் அவளது பெற்றோரும் கோண்டாவில் பிரதேசத்திலிருந்து விஷ்வமடு, முல்லைத் தீவு ஊடாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்தார்கள்.

விஜிதாவும் குடும்பத்தாரும் முள்ளிவாய்க்காலில் ஒரு மாதம் போலக் கழித்தார்கள். அதற்கிடையில் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகத் தோல்வியுற்றிருந்தது. அரசாங்கத்தின் இராணுவம் முழு வடக்கு பிரதேசத்திலுமே தனது பலத்தை நிரூபித்திருந்தது. அகப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அகதிமுகாம்களுக்கு அனுப்பப்படுவது ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு வரும் பயணத்தின் போது முக்கியமானதொரு நிகழ்வு நடந்தேறியது. அங்கு வந்த இராணுவம், இடம்பெயர்ந்த மக்களை ஒன்று சேர்த்து ஒரு நாளேனும் விடுதலைப் புலிகளோடு சம்பந்தம் வைத்திருந்தவர்கள் ஒரு புறம் நிற்கும்படியும் மற்றவர்கள் மற்றப்புறம் செல்லும்படியும் கட்டளையிட்டது. அங்கு, முக்கியமாக பெற்றோரிடம் பயப்பட ஏதுமில்லை எனவும் விசாரணைகளின் இடையில் பிள்ளைகள் நிரபராதிகள் எனில் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதாக தாம் உறுதி கூறுவதாக இராணுவத்தால் சொல்லப்பட்டது.

 அச் சந்தர்ப்பத்தில் தாய்மார்களாலேயே தங்கள் பிள்ளைகளுக்கு சரணடையுமாறு சொல்லப்பட்டது. அது அவர்கள் இராணுவம் சொன்னதில் நம்பிக்கை வைத்ததை விடவும், வேறு செய்ய வழியேதுமற்ற காரணத்தினால் செய்யப்பட்டதொன்றாக இருக்கக் கூடும். அத்தோடு 30 வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அப் பிரதேசம் இருந்தமையால் எல்லோருக்குமே விடுதலைப் புலிகளுடன் ஏதேனுமொரு சம்பந்தம் இருக்கத்தான் செய்தது. விஷேடமாக இங்கு, அனேக இளைஞர் யுவதிகளின் வயதை விடவும் அதிகமான காலங்கள் அவர்களது ஊர்ப் பிரதேசங்கள் விடுதலைப் புலிகளாலேயே ஆளப்பட்டிருந்தது. கருணா அம்மான்கள் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரேனும் இயக்கத்தில் சேர வேண்டியிருந்தது. அந்த யதார்த்தத்துக்கு ஏற்ப ஓர் தினமேனும் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருந்திருப்பது என்பது சாத்தியமே.

எவ்வாறாயினும் இன்று வரையில், அவ்வாறாக இராணுவத்தில் சரணடைந்தவர்கள் எவருமே திரும்பி வரவில்லை. அது பலரோ அல்லது சிலரோ எனச் சொல்வதற்கு அவசரமில்லையெனினும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும். இதுவரை தேடிப் பார்த்ததற்கு ஏற்ப கிளிநொச்சி கோண்டாவில் கிராமத்தில் மட்டும் பல இளைஞர் யுவதிகள் அவ்வாறு சரணடைந்த பிற்பாடு இன்னும் திரும்ப வரவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

 இது பாரதூரமான அநீதி எனச் சொல்லாதிருக்க முடியாது. யுத்தத்தின் போது காயமடைதல், மரணமடைதல் பொதுவானது என ஒருவரால் சொல்லலாம். எனினும் யுத்தத்தின் பிறகு பெற்றோரால் சட்ட ரீதியாக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞனொருவன் காணாமல் போவதென்பதை எவராலுமே ஏற்றுக் கொள்ளமுடியுமென நாம் எண்ணவில்லை. மேலே குறிப்பிட்ட விஜிதாவின் குடும்பத்தில் அவளை விடவும் மூத்த அண்ணனொருவரும் அக்கா ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் முடித்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாயுடனும் தந்தையுடனும் வீட்டிலிருந்தது விஜிதா மட்டுமே. வீட்டில் இளையவளான விஜிதாவுக்கு என்ன நடந்ததெனத் தெரியாமல் இன்று அவளது தாய் வீட்டின் முன்னிருந்து ஓலமிடுகிறாள். அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்காலிலிருந்து வந்த அவர்கள் இழந்திருந்தது தமது மகளை மாத்திரமல்ல. அகதி முகாமில் பல துயரங்களை அனுபவித்துவிட்டு வந்த அவர்களது வீடு கூட யாராலோ எரியூட்டப்பட்டிருந்தது. அப் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆட்சி நிறைவுற்ற பிற்பாடே அது எரியூட்டப்பட்டிருக்கிறது.

 வடக்கின் பிரதேசங்கள் பலவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கம் வேறொரு ஆட்சி முறையை நடத்திச் சென்றது வரலாற்றில் திடீரென நடந்த ஒன்றல்ல. அது ஒழுங்கற்ற அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றின் தர்க்க ரீதியான பெறுபேறு. இன்று இது குறித்து நாங்கள் செவியுறுவது என்னவெனில் பிரபாகரன் எனும் அதிபயங்கரமான கலகக்காரரொருவரின் வீரமானது அரசன் ஒருவனால் அடக்கப்பட்ட விதம் குறித்த கதைகளையே. எனினும் வடக்கின் தமிழ்மக்கள் பானையிலிருந்து அடுப்புக்கு இழுத்துப் போடப்பட்டிருப்பதைக் காண்பதற்கு அங்கு செல்ல வேண்டும். தேசியத் தொலைக்காட்சியைப் பார்த்து அதனை அறிந்துகொள்ள முடியாது. எனவே சில கிழமைகளுக்கொரு முறை இக் குறிப்புக்களை எழுதுவது அப் பிரதேசங்களுக்குச் சென்று, அவர்களுடன் வசித்து, அவர்களது பிரச்சினைகளை எங்களது பிரச்சினைகளாக மாற்றிய பிற்பாடுதான் என்பதைக் கூறவே வேண்டும்.

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் தம் பிள்ளைகள் குறித்த துயரங்கள் குறித்தோ, பிள்ளைகளை இழந்த காரணத்தால் அவர்கள் அழுது ஓலமிடும் விதங்கள் குறித்தோ நான் இங்கு எழுதவில்லை. அது ஏனெனில் அதைவிடவும் முக்கியமான விடயமொன்று இந் நிலைப்பாட்டில் இருப்பதன் காரணத்தால் ஆகும். அது என்னவெனில் இதற்குள் இருக்கும் பாரதூரமான அரசியல் தவறு. தமிழ் இளைஞர்கள் ஒருமுறை ஆயுதம் எடுத்தது அந்த அரசியல் தவற்றின் காரணமாகத்தான். மென்மேலும் அத் தவறானது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால் அதன் அடுத்த பெறுபேறு தெளிவானது. அத் தவறு என்னவெனில் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் துயரம். அன்று அத் துயரமானது இனவாதச் சட்டங்களைப் பிரயோகிப்பதன் மூலமும் அநீதமான மற்றும் சமமற்ற வாய்ப்புக்களும் உரிமைகளும் மூலமாக அவர்கள் மீது செயற்படுத்தப்பட்டிருந்தது. இன்று அதற்கும் மேலதிகமாக அவர்களது பிள்ளைகளை காணாமல் போகச் செய்வதன் மூலமும் வெறுமனே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் மூலமும் தொடரச் செய்யப்பட்டிருக்கிறது.

 ஆகவே அரசாங்கமானது உடனடியாக காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கும் அத் தமிழ் அன்னையர்களின் பிள்ளைகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனின் போராட்டம் தவறான அத்திவாரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த காரணத்தால், தமிழ் இனவாதத் தலைவர்களாலும் சர்வதேச சக்திகளாலும் அதனை பிரிவினை வாதத் தேவைகளுக்காக பாவிக்கப்பட்டதனால் தேசம் பிளவுபடுவதைத் தடுக்க வேண்டியிருந்தமை உண்மைதான். எனினும் அத் தவறை சீராக்குகையில் குருட்டுத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதற்கும், தமிழ் மக்களை தகர்த்து நசுக்கி விடுவதற்கும் அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது.

 - உதுல் ப்ரேமரத்ன 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
 இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
# திண்ணை

Monday, August 8, 2011

புனித ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம்


     ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (அல்பகரா 2: 185).
     புனித ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம். ரமழான் வரும்போது இரவுகள் அமல்களால் விழிப்படைகின்றன. இருள் அகற்றப்பட்டு குர்ஆன் திலாவத்துக்களாலும், தொழுகைகளாலும், இஃதிகாப்களாலும்  நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகிறது. ரமழான் மாதம் வருகையில் நிறைய நன்மைகளை நாம் தேடிக் கொள்ளலாம் என மகிழும் அனேக இஸ்லாமியர்களைப் போலவே ரமழானின் இரவுகளை வீண் விளையாட்டுக்களிலும் வியாபாரங்களிலும் கழித்துவிடலாம் என எண்ணித் திளைப்பவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் அனேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை விளையாட்டிலேயே கழித்துக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.
     'எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
     அவரது  கூற்றினை உண்மையாக்குவது போலவே நடந்துகொள்ளும் அனேகரை நாம் ரமழானில் காணலாம். தொழுகையிலும், திக்ரிலும், இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமழானின் இரவுகள், தெருக்கள் தோறும் கும்மாளமிட்டுத் திரியும் சில இளைய சமுதாயத்தினரால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெறுகின்றன. ஏனைய மாதங்களில் இரவுவேளைகளில் இளைஞர்களை வெளியே இறங்கி நடமாட விடாத பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் பள்ளிவாசலுக்குச் செல்வதாகப் பொய் சொல்லி வீட்டில் அனுமதி பெறும் இந்த இளைஞர்கள் செல்வது அல்லாஹ்வின் மாளிகைக்கல்ல. அதற்கு மாற்றமாக இளம்பெண்கள் தொழுகைக்காகச் செல்லும் இடங்களையும், துணிக்கடைகள், உணவுக் கடைகள் போன்ற இடங்களையுமே இவர்களது பாதங்கள் சுற்றி வருகின்றன.
     ரமழானின் புனித இரவுகளை இவ்வாறாக வீணாகக் கழிப்பவர்கள், உறக்கம் மிகுதியால் ஸஹருக்குப் பிறகு பர்ழான தொழுகையான சுபஹைக் கூடத் தொழாது தூங்கிவிடுகின்றனர். அஸர் நெருங்கும் வேளையில் விழித்தெழும் இவர்கள் நோன்பின் மாண்பையும், பசியையும் பெரிதாக உணர்வதே இல்லை. சிலருக்கு ஸஹர் கூட இல்லை. நோன்பும் பிடிப்பதில்லை. இஸ்லாம் எனும் உண்மையானதும் உன்னதமானதுமான மார்க்கம் நமக்குத் தந்திருக்கும் அருட்கொடைகளின் அற்புதமான மாதம், இவ்வாறாக வீணாகக் கழிவதை இவர்கள் உணர்வதுமில்லை. இவர்களுக்கு இதில் சிறிதும் வருத்தமும் இல்லை.
     இது போல நோன்பின் பகல்பொழுதைக் கழிக்கவென வீண்விளையாட்டுக்களிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும், இசையிலும் சரணடையும் அனேக இஸ்லாமியர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்.
     விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
     (இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)
     "பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
     பெருநாள் செலவுக்கென சூதாட்டங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களும், பெருநாளுக்கென ஆடைகளும் உணவுப் பொருட்களும் அதிகமாக விற்பனையாவதால் அவற்றில் பொய் கூறி ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களும் நம் மத்தியில் இருக்கின்றனர். கருணை மிக்க அல்லாஹ் தஆலா, நோன்பாளிகளுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கியிருக்கிறான். அவற்றைப் புறக்கணித்து நோன்பை வீணாகக் கழிப்பவர்கள் எவ்வளவு பெரும் பாவத்தைச் சுமப்பார்கள்? இவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்யும் தவறுகளைத் தாமே உணர்ந்து திருந்தாமல் இருப்பின், இவர்களது வாழ்நாளில் எத்தனை ரமழான்கள் வந்து போனாலும் இவர்களது நடவடிக்கைகளில் மாற்றமேதுமிருக்காது.
     ரமழானில் நோன்பை முறித்துவிடக் கூடிய காரியங்களை சர்வசாதாரணமாகச் செய்துவிடும் அனேகர், நோன்பு முறிந்துவிடும் என்ற அச்சத்தில் நோன்பை முறித்துவிடாத ஹலாலான நிறைய காரியங்களை செய்யாதிருந்து விடுவதை நாம் நிறையக் காணலாம். உதாரணமாக 'நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடையானது அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என்ற ஹதீஸை தவறாகப் புரிந்துகொண்டு, நோன்பு நோற்றிருக்கும் நேரம் முழுதும் பல்துலக்காது இருந்து விடும் நோன்பாளிகள் பலர் உள்ளனர். இதனால் நோன்பு நோற்றிருக்கையில் பல் துலக்காதிருக்கும் இந் நோன்பாளிகளுடன் கதைக்க நேரும் ஏனைய வேற்று மதத்தவர்கள் நோன்பைப் பற்றியும் இஸ்லாமியரைப் பற்றியும் தவறாகப் புரிந்துகொள்வதுதானே நடக்கும்? இவ்வாறு நிறைய ஹதீஸ்களையும் நோன்பு குறித்த எண்ணக் கருவையும் பிழையாகப் புரிந்துகொண்ட காரணத்தால் தவறிழைப்பவர்கள் அனேகர்.
     இஸ்லாமிய வரையறைக்குள் அடங்காத ஆடைகளை அணியும் நாகரிகக் கலாசாரம் வெகுவேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் அதையே பின்பற்றத் துடிக்கும் அனேக முஸ்லிம்களை இக் காலத்தில் மிக அதிகமாகக் காணக் கிடைக்கிறது. இவ்வாறே பெருநாள் நெருங்குகையில் கடைத் தெருக்களில் இரவு பகல் பாராது எப்பொழுதும் நம்மவர்கள் ஆண் பெண் பேதமற்று சுற்றித் திரிவதையும் காணலாம். நோன்பின் இறுதிப் பத்தில் ஆடை கொள்வனவுகளில் மிக மும்முரமாக ஈடுபட நேர்வதால் புனித  லைலதுல் கத்ர் இரவினைக் கூட கடைத்தெருக்களில் வீணாகக் கழிக்கிறார்கள் நம்மவர்கள்.
     'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
     சாதாரண நாட்களை விடவும் ரமழானுடைய தினங்களில் கொடைகள் வாரி வழங்கப்படுகின்றன. பணத்தாலோ, தானியங்களாலோ தங்களால் இயன்ற அளவு வழங்குவதன் மூலம் நன்மைகளைக் கொள்ளையடித்துக் கொள்ளும் நிறையப் பேருக்கு மத்தியில் எதையுமே கொடுக்காமல் பதுக்கி வைத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். கொடுத்தால் குறைந்துவிடும் என்ற அச்சம் மிகைத்துச் செய்யும் அவர்களது இந் நடவடிக்கைகள் தவறானது என எடுத்துச் சொல்பவர்கள் யார்?
     இவ்வாறு இஸ்லாத்தை நன்கு புரிந்தும் இறையச்சம் இல்லாததன் காரணத்தால் பாவம் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதன் காரணமாக தவறிழைப்பவர்களுக்கும், மூட நம்பிக்கைகளின் காரணத்தால் பிழை செய்பவர்களுக்கும் உண்மையை எடுத்துரைப்பதுவும் நன்மையின் பக்கம் அவர்களை ஈர்ப்பதுவும் அவர்களதும் எமதும் நல்வழிக்காகப் பிரார்த்திப்பதுவும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இன்ஷா அல்லாஹ், இப் புனித ரமழானில் நாம் அதைச் செய்ய எல்லாம் வல்ல நாயன் அருள் புரியட்டும் !
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
நன்றி
# விடிவெள்ளி 04.08.2011

Monday, August 1, 2011

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த 'யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்' மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.

நான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பின்னணிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் கதைத்தேன். புதுவருடத்தில் அவர்களது எதிர்பார்ப்புக்கள், அச்சங்கள் மற்றும் இலட்சியங்கள் குறித்த கருத்துக்களை அந்த உரையாடலினூடு பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.

"யுத்தம் முடிவுற்ற பிற்பாடு நான் எந்தவித கொண்டாட்டங்களிலும் பங்குபற்றவில்லை. வன்னியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலும் இளைஞர்கள் இன்னும் துயருற்றுக் கொண்டிருக்கையில் நான் எப்படிக் கொண்டாடுவது? நிறையப் பேருக்கு கல்வி கற்க வாய்ப்பு இல்லை. சிலருக்கு சாப்பிடக் கூட ஒழுங்காக ஏதுமில்லை. எனது வயதிலுள்ள ஏனையவர்களும் இதே துயரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உள்ளுக்குள்ளேயே அனுபவிக்கும் வேதனைகளை நான் அறிந்த காரணத்தால் விழாக்களை நடத்த என்னால் முடியவில்லை.  அரசாங்கமானது வடக்கு மக்களின் வாழ்க்கையினை இதனை விடவும் முன்னேற்றுமென்றால் எங்களுக்கு உண்மையாகவே விழாக்களை நடத்துவதற்கான காரணமொன்று இருக்கும். அரசு தான் நினைக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்." இவ்வாறு என்னிடம் சொன்னார் 24 வயதேயான பல்கலைக்கழக மாணவரொருவர்.

"வடக்கையும் தெற்கையும் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் தெற்கு மக்கள் தங்களது சுதந்திரத்தை பரிபூரணமாக அனுபவிப்பது விளங்கும்.  இன்னும் எங்களை செக் பொயிண்டுகளில் நிறுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். இங்கு எங்களுக்கு சுதந்திரமில்லை. எவ்வாறு நாங்கள் விழாக்களை நடத்துவது? இன்று, நாளை, நாளை மறுநாள் என எந் நாளுமே இவ்வாறுதான். புத்தாண்டு என்பதுவும் இன்னுமோர் தினம் மாத்திரமே. இத் தினத்தில் தமிழர்களுக்கு சமாதானமும் சம உரிமையும் பெற்றுக் கொடு என கடவுளிடம் வேண்டுவதை மட்டுமே எம்மால் செய்ய இயலும்." அவர் மேலும் கருத்துரைத்தார்.

27 வயதான கோசலை கூறியவை கீழே தரப்பட்டிருக்கிறது.

"எனக்கும் கொண்டாட்டங்களுக்குச் செல்ல மனமில்லை. எவ்வாறாயினும் நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதுமில்லை. நாங்கள் விழாக்களைக் கொண்டாடுவது எங்களது கலாச்சார முறைப்படிதான். எனினும் எனக்கு இந் நாட்களில் எந்த விஷேடமும் தென்படுவதில்லை. பல தசாப்தங்களாக இது பற்றிக் கதைத்தும் பயனேதுமில்லை. அதனால் எதுவுமே இதை விடவும் முன்னேற்றம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. உரிமை மற்றும் விடுதலைக்காக நாங்கள் செல்லவேண்டிய நெடும் பயணமொன்று இருக்கிறது. அதுதான் நாங்கள் முகங்கொடுக்கும் பெரிய சவால். நான் நினைக்கும் விதத்தில், எமது வேண்டுகோள்கள் குறித்து எங்களுக்கு இருக்கும் தெளிவான பார்வை, போதியளவு கலந்துரையாடும் திறமை, மனிதர்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதன் அவசியம் போன்றவைகளால்தான் எங்களது நிலைமை உயரக் கூடும்."

இன்னுமொரு பல்கலைக்கழக மாணவர் தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார். அவரது வயது 24.

"என்னைப் பொறுத்தவரையில் போன வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் எதுவுமே மாற்றமடையவில்லை. எனினும் எனக்கு அது குறித்து இருப்பது ஒரு கலவையான உணர்வே. ஏனெனில் நான் இங்கு வந்தது அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத மற்றும் அரசைக் கேள்வி கேட்கும் மக்களை அழிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவ்வாறில்லை. அரசாங்கம் யாழ்ப்பாண மக்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறது. அது போலவே விதம் விதமாக விழாக்களைக் காட்டி அவர்களது பாதையை மாற்றவும் முயற்சிக்கிறது. எனினும் நிறைய மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நேர்மையான முயற்சியொன்றை எடுப்பதைத்தான் காண முடியவில்லை." என அவர் விளக்கமளித்தார்.

"தமிழர்கள் ஒன்றிணைந்து நியாயமானதொரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென நான் வெளிப்படையாகவே எதிர்பார்க்கிறேன்.அதற்கு அவர்கள் மத்தியில் ஓர் மனதுடனான ஒற்றுமையொன்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பிறக்கும் புதுவருடத்திலேனும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

"எனது எதிர்பார்ப்பானது எங்களது எல்லா நடவடிக்கைகளும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடைபெற வேண்டும் என்பதுதான். நாங்கள் எமது கலாச்சாரத்தின் அங்கமொன்றாக புத்தாண்டினைக் கொண்டாடுகிறோம். பொங்கல் செய்கிறோம். மூத்தவர்கள் கை விஷேசமாக பணம் தருகிறார்கள். எங்களுக்கு மூத்தவர்களிடமிருந்து பணம் கிடைத்தால் அதனை அதிர்ஷ்டம் எனக் கருதுகிறோம். நல்ல விடயங்கள் மேலும் தொடரட்டும், கெட்ட விடயங்கள் அழிந்து போகட்டும் என்றே நான் எப்பொழுதும் எண்ணுகிறேன். வழமையாக நாங்கள் புத்தாண்டு தினத்தில் பாட்டி வீட்டில் ஒன்றுகூடுவோம். எனினும் கடந்த வருடம் அவர் மரணித்த காரணத்தால் இந்த வருடம் எங்களுக்கு புத்தாண்டு இல்லை" என 30 வயதான தாணு கூறினார்.

"நாங்கள் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம். நாங்கள் நிழலேதுமற்ற மனிதர்கள். நான் நினைக்கும் விதத்தில் எம் மக்கள் தன்னம்பிக்கை மிகுந்த அமைதியானவர்கள். விஷேடமாக கடந்த வருடங்களில் அது புலப்பட்டது. நாங்கள் ஒன்றாக இணைந்தால் எங்களது சக்தியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனினும் நாங்கள் முகங்கொடுக்க நேர்ந்திருக்கும் முடிவேயில்லாத இடையூறுகளின் காரணத்தால் அது யதார்த்தத்தில் சாத்தியப்படாது. சிறிய உதாரணமொன்றைக் கூறின், மிக அண்மையில் தமிழ் மக்களின் துயரங்கள் குறித்து பிரசித்தமாக கூட்டமொன்றில் பேசிய புகழ்பெற்ற மதகுருவொருவருக்கு அதன் பிறகு இனந்தெரியாத நபர்கள் மூவரின் எச்சரிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மதகுரு ஒருவருக்குக் கூட தனது மக்களுக்காக கதைக்க முடியாது எனின் எங்களால் செய்ய முடியுமான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்புக்கள் என்ன?" என இன்னுமொரு 27 வயதேயான பல்கலைக் கழக மாணவரொருவர் கூறினார். "நான் பொதுவாகவே மத ரீதியான, கலாச்சார ரீதியான விழாக்களைக் கொண்டாடுவதில்லை எனது குடும்பத்தவர்கள் செய்தபோதும். எங்களது இனம் நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம். இன்றும் எங்களால் சுதந்திரமாகக் கதைக்கவோ அங்கிங்கு செல்லவோ முடியாதுள்ளது. இனி நாங்கள் எதனைக் கொண்டாடுவது?" என்று அவர் மேலும் கூறினார்.

"கடந்த தினமொன்றில் இராணுவத் தளபதி, இராணுவத்தால் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ள சொத்துக்களை படிப்படியாக விடுவிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனினும் பார்க்கும் எல்லா இடங்களிலும் புதிய பெயர்ப் பலகைகளைக் காண முடிகிறது. 'இந்திந்த ப்ரிகேடியர் உங்களை அன்புடன் வரவேற்கிறார்' என்றே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் வாழ்வது ஜனநாயக சமூகமொன்றிலா அல்லது இராணுவ சமூகமொன்றிலா என்பது பற்றிய சந்தேகத்தை அது எழுப்புகிறது. இதற்கிடையில் யுத்த நிலத்தினை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. அது அவ்வாறெனில் வடக்கில் சேவை செய்ய எதிர்பார்க்கும் ஒருவருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதிகாரத்துவ எதிர்ப்பும் தாமதமும் ஏற்படுவதற்கு இடமளித்திருப்பது ஏன்? இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிப்பதற்காகக் கைது செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறான பிண்ணனியில் எங்களுக்கிருக்கும் பாதுகாப்பு என்ன? நாங்கள் எந்தக் கணத்தில் கைது செய்யப்படுவோமோ, இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவோமோ தெரியாது. இளைஞர்கள் பலம் பெறுதலும், அவர்களது பங்களிப்பானது முன்னேற்றத்துக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும் ஒன்று சேர்க்கப்படுவது, மாற்றமொன்றுக்காக அத்தியாவசியமானது. எனினும் அரசாங்கம் இன்னும் அது குறித்து முயற்சிக்கவில்லை." என அவர் மேலும் தெரிவித்தார்.

"நான் விருப்பத்துடனேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதாக நான் நினைக்கவில்லை. இது எனது வாழ்வில் இன்னுமொரு நாளைப் போன்றது. புத்தாண்டு எனப்படுவது வாழ்க்கையில் புதிய பகுதியொன்றில் பாதம் பதிக்க உருவாக்கப்பட்ட இலகு வழி என்பதாகவே நான் நினைக்கிறேன். தம்மைச் சுற்றிலும், நிழலொன்றற்ற மனிதர்கள் அனேகர் இருக்கையில் எவர்க்கும் புத்தாண்டைக் கொண்டாட முடியுமாக இருக்குமென நான் நினைக்கவில்லை. அதுபோலவே அவர்களிடையே சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தாண்டு எங்கிருந்து? அதுதான் என்னைத் துயருக்குள்ளாக்கும் கேள்வி." என 26 வயதான திரு சொல்கிறார்.

"நான் சிறுவனாக இருந்த காலத்தில் யுத்தம் இருந்த போதும் புத்தாண்டு வந்தது. நான் தந்தையின் சைக்கிளை மிதித்தபடி அக்காவோடு பாட்டி வீட்டுக்குச் சென்றேன். புத்தாடைகள் அணிந்தேன். எனினும் பட்டாசுகள் இருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பார்ப்பின்மைக்கிடையிலிருந்து புத்தாண்டையும் எதிர்பார்க்கிறார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சமாதானம் இன்னும் எங்கள் வாசல்களுக்கு வரவில்லை. அச்சமற்று மனிதர்களுடன் கதைக்க முடியுமான நாளொன்றை நான் எதிர்பார்த்திருக்கிறேன். வெவ்வேறு விதமாக ஒரு புறமாகத் தள்ளப்பட்டிருக்கும் இலங்கையின் எல்லா மனிதர்களோடும், மாற்றமொன்றை எதிர்பார்க்கும் மனிதர்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்கால வேலைத் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டுமென எனக்குத் தோன்றுகிறது" என அவர் எதிர்பார்ப்புடனேயே கூறினார்.

இங்கு எந்த இளைஞர் யுவதியும் கூட தங்களது பெயர்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையென்பது தெளிவாகியிருக்கும். யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் கழிந்த பிற்பாடும் வடக்கு மக்கள் தற்காலிக சமாதானமொன்றை இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு ஈடேறிய பிற்பாடுதான் புத்தாண்டை உண்மையாகவே கொண்டாட முடியுமாக இருக்கும்.

- மரீஸா த சில்வா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை