Monday, April 5, 2010

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

    நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப் பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பின், உங்களுக்குப் பிடித்த இடத்தைச் சொல்லி அங்கு உங்களால் மாறிக் கொள்ளலாம். அல்லது வேறு இடத்துக்கு மாறிக் கொள்வதற்காக வேண்டியே கூட ஆள் கொலை செய்யலாம்.

    இலங்கை, இக்கினியாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவல பிரதேசத்தில் வசித்துவந்த ஏழை இளைஞன் ஏ.ஆர்.சமன் திலகசிறி செய்த குற்றமென்ன என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. எனினும் கடந்த பெப்ரவரி 21ம் திகதி ஞாயிறு இரவு ஒன்பது மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் மூவர் அவரைத் தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். அவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வந்தவுடனே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரும்படி அவரது மனைவியை மிரட்டிச் சென்ற பொலிஸார் இடைவழியில் அவரது நண்பரது வீட்டுக்குள் நுழைந்தனர். சமன் அங்கிருந்தார்.

    "கொல்லப்பட்ட சமனும், நானும், இன்னுமொரு நண்பர் சந்தனவும் எனது வீட்டில் இருந்தோம். அப்பொழுது இரவு நேரம் ஒன்பது மணியிருக்கும். மோட்டார் சைக்கிளில் மூவர் வந்து சமனை அழைத்தனர். சமன் எழுந்து முன்னால் வந்தான். 'உடனே வா, உன்னிடம் வாக்குமூலமொன்று எடுக்கவேண்டும்..பொலிஸுக்குப் போகலாம்' என்று அவர்கள் கூறினர். 'நான்தான் குற்றமெதுவும் செய்யவில்லையே. சரி நான் இவர்களுடன் போய்வருகிறேன்' என்று சொல்லி அவன் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களுடன் ஏறிக் கொண்டான். அவர்கள் சென்ற உடனேயே நாங்களும் பொலிஸ் நிலையம் போனோம். செல்லும் வழியில் இக்கினியாகலை நீர்த் தேக்கத்துக்கருகில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் யாரும் இருக்கவில்லை. நாங்கள் இருளில் தேடமுடியாமல் நேராக பொலிஸ் நிலையம் சென்றோம். அங்கு போய் சமனைப் பற்றி விசாரித்ததும் எந்தப் பதிலுமில்லை. நிலையத்துக்குள் குழப்பமான ஒரு சூழ்நிலை. சமன் இருக்கவில்லை. காலையில் சமனின் உடல் நீரில் மிதந்தது." இது சமனின் தோழன் எல்.டீ.சந்திரசேனவின் வாக்குமூலம்.

    காவல்துறையினர், சமனை எந்தக் குற்றத்துக்காக அழைத்துச் சென்றார்கள் என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லையெனினும், அவரது உயிரைப் பறித்தெடுக்கவே அழைத்துப் போயிருப்பது மட்டும் நிதர்சனம். அவரைக் கொல்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்திருப்பது, பொலிஸ் நிலையத்துக்குக் கூட அவரைக் கொண்டுசெல்லாமல் இடைவழியில் கொன்றுபோட்டிருப்பதன் மூலம் தெளிவாகிறது. இதன் மூலம் தெளிவாகும் இன்னுமொரு விடயம், பொதுமக்களை அடிக்க, வதைக்க, கொலைசெய்து குவிக்க காவல்துறைக்கு 'லைசன்ஸ்' இருக்கிறது என்பதுதான்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மரணமான பின்பு, வழமையாக நடப்பது போலவே இங்கும் நடந்திருக்கிறது. அதாவது இக்கினியாகலை பொலிஸ் நிலைய உயரதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட மூன்று காவல்துறையினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை அதிகாரி அனில் ஆரியவங்ஸ, 'இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனச் சொல்லியிருக்கிறார்.

    காவல்துறையினரின் இதுபோன்ற பதில்களைக் கேட்டு பொதுமக்கள் உடலின் எப்பாகத்தால் நகைப்பதெனப் புரியாமலிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் காவல்துறைக்கு புதிதில்லை. அத்தோடு இது போன்ற மழுப்பலான பதில்களைச் சொல்லித் தப்பித்துக் கொள்வதுவும் இது முதன்முறையில்லை. இலங்கை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் இயக்குனரின் மகன், தனது பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட காவல் அதிகாரிகளின் குழுவோடு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, நிபுண ராமநாயக்க எனும் மாணவனைக் கடத்திச் சென்று மிகக் குரூரமான முறையில் சித்திரவதைப்படுத்தியதுவும், பல நூறு மக்கள் பார்த்திருக்க பம்பலப்பிட்டிய கடற்கரையில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை அடித்துக் கொன்றதுவும் சமீப கால முறைப்பாடுகளாகக் கிடைத்தபோதிலும் எந்தவொரு நியாயமான தீர்ப்பும் இன்னும் வழங்கப்படவில்லை.

    இலங்கையில் யாருக்கு எந்த சட்டம் செல்லுபடியாகினும், காவல்துறைக்கு மட்டும் எந்த சட்டமும் இல்லை. சுருக்கமாக காவல்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் சந்தேகநபரொருவர் இறந்துபோய்விட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுதலென்பது, சாதாரணப் பொதுமகனொருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போலவன்று. பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து மற்றும் பொலிஸாரால் நிகழும் கொலை, வன்முறைகள் சம்பந்தமாக ஒரு காவல்துறை அதிகாரியேனும் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இதுவரை கைதாகியதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டதுமில்லை. சமனின் மரணத்தில் கூட சம்பந்தப்பட்டவர்களது பணிநிறுத்தம் செய்யப்படும். அவ்வளவே.

    சாதாரணமாக ஒரு கொலை நிகழ்ந்தவிடத்து உடனே செயல்படும் காவல்துறை, சந்தேகத்துக்குரியவர்கள் அனைவரையும் கைது செய்யும். வாக்குமூலம் பெற்று அதைக் குறித்துக் கொண்டு கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும். நீதிமன்றம் அவர்களை குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் சிறையிலடைக்கும். இதையெல்லாம் செய்யும் காவல்துறையே ஒரு கொலை செய்யுமிடத்து மேற்குறிப்பிட்ட எதுவும் நடைபெறாது.

    உண்மையில் சமனுக்கு என்ன நடந்ததென்று அறிந்தவர்கள் அவரைக் கொண்டுசென்ற மூவரும்தான். அவர்கள் பொலிஸ்காரர்கள். இப்பொழுதிருக்கும் வேறு சாட்சிகளெனில் சமனுடன் இருந்த மற்ற நண்பர்கள் இருவர். அவர்களுக்குக் கூட, வரும் நாட்களில் சாட்சி சொல்லவேண்டியிருப்பது காவல்துறையினருக்கு எதிராகத்தான். அது இலங்கையைப் பொருத்தவரையில் எளிதான விடயமில்லை. ஆகவே இவர்கள் கூட எதிர்காலத்தில் ஏதாவதொரு காரணத்துக்காக கைது செய்யப்பட இடமிருக்கிறது.

    எப்பொழுதும் காவல்துறையினரது கைதுக்குப் பிற்பாடு மரணித்த பலரதும் விபரங்கள் வெளிவருவதை விடவும், வராமலிருப்பது பொதுவானதுதான். இக்கினியாகலை சமனினது கொலை விபரங்களும், இது கால வரையில் நிகழ்ந்த காவல்துறை படுகொலைகளைப் போலவே காலத்தோடு அழிந்துபோகும். ஆனால் வாழ்நாள் முழுவதற்குமாக துயரப்பட வேண்டியிருப்பது சமனையே நம்பியிருந்த அவரது குடும்பமும், அப்பாவி மனைவியும், சிறு குழந்தையும்தான். அந்தத் துயரத்திலும் சிறிதளவாவது அமைதி கிடைப்பது கொலைகாரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்போதுதான். அது சாத்தியமற்றுப் போகும்போது நாட்டின் ஒவ்வொரு மனிதனினதும் ஐக்கியத்துக்காகவும், நிம்மதியான வாழ்வுக்காகவும் பாடுபடுவதாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் அரசும் இதற்குத் துணை போவதாகத்தான் கொள்ள வேண்டும்.

    காவல்துறைப்படுகொலைகள் உலகளாவிய ரீதியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைது செய்யப்படும் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் குறித்து எழுதப்போனால் இந்தக் கட்டுரை போதாது. இது போன்ற நாடுகளாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என சொல்லிக் கொண்டே போகலாம். உலகின் அநேக நாடுகளில் காவல்துறையினர் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். முரட்டு சீருடை. முரட்டு நடை. முரட்டு நடவடிக்கை. முரட்டு இதயங்கள். இந்த நிலையில் 'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் வாசகங்கள் பாடப்புத்தகங்களிலும் சில முட்டுச் சுவர்களிலும் மட்டுமே தெளிவாக எழுதப்பட்டிருக்கிறதே தவிர பொதுமக்களது மனங்களிலல்ல.

பின்குறிப்பு - 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த கொலை சந்தேகநபர்கள் இன்னும் கைதுசெய்யப்படாதது குறித்த முன்னைய கட்டுரைக்குப் பின்னர், உடனடியாக துப்பறியும் துறை, விசாரணைகளை நடத்திவருவதோடு, ஒரு ஆட்டோ சாரதி உட்பட 15 இராணுவக் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து விசாரித்துவருகிறது. அத்தோடு விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கல்கிசை பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ஷ சேதுங்க குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
05.03.2010



நன்றி
# உயிர்மை