எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் ‘கிளம்புதலும் திரும்புதலும்’ மற்றும் ‘கிளம்புதல் - ஒரு கடிதம்’ ஆகிய கடிதங்களை வாசித்தேன். ‘வீட்டை விட்டுப் போய்விடுதல்’ அல்லது ‘விட்டுப் போய் விடுதல்’
என்பது எவ்வளவு சுதந்திரத்தை அளிக்கிறதோ அந்தளவு துயரத்தையும் அகத்தே கொண்டிருக்கிறது
என்பதைத்தான் மறைவாகக் குறிப்பிடுகின்றன அவை.
‘கிளம்புதல்’ கடிதம் தந்த அதிர்ச்சியிலிருந்து
மீள சில கணங்களாயிற்று. தனது பட்டமளிப்பு விழாவுக்கு அப்பாவை வர வேண்டாமெனச் சொல்லி
சண்டை போட்ட மகனின் சூழ்நிலை தெரியவில்லை. ஆனால் அந்தத் தடை அப்பாவின் மனதை எவ்வளவு
தூரம் பாதித்திருக்கும்? அதிர்ச்சியும், அவமானமும், துயரமும், சுய பச்சாதாபமும் அன்று
அவரை எந்தளவு தாக்கியிருக்கும் என்பதை இன்னுமொரு தகப்பனாலேயே புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
தினந்தோறும் புதுப்புது அறிமுகங்களும், விடயங்களும் கையருகே வந்து கொண்டேயிருக்கையில்
பதின்ம வயது இளைஞர்கள் பொதுவாகவே பெற்றோரை சற்று தள்ளி வைக்கவே விரும்புகிறார்கள் போலும்.
நிஜத்தில் பெற்றோரின் அருமையை அவர்களை இழந்து நிற்பவர்களால்தான் பூரணமாக புரிந்து கொள்ள
இயலுமாக இருக்கும்.
‘கிளம்புதலும் திரும்புதலும்’ கடிதத்தில் “தம்பி
அன்னைக்கு எங்கடா போன?”
என்ற ஒரு கேள்வி அம்மாவிடமிருந்து வந்திருப்பதை வாசித்தேன். இலகுவாகத் தாண்டிச் செல்லக்
கூடிய கேள்வியல்ல அது. அவ்வாறான ஒரு கேள்வியை எவ்வாறு புறக்கணித்துக் கடந்து செல்ல
முடியும்? அதற்கான பதிலில்தான் பிள்ளைக்கு அம்மாவின் அவசியமும், அவர் மீது வைத்துள்ள
பாசமும், விட்டுச் செல்லும் அளவிற்கு அம்மாவை விடவும் முக்கியமான எது புறத்தே இருக்கிறது
என்பதுவும் புலப்படும் இல்லையா?
இலக்கியத்துக்கான நோபல் பரிசும், புலிட்ஸர் விருதும்
வென்ற பெண் எழுத்தாளர்
Pearl Sydenstricker Buck (Pearl S.Buck) எழுதிய ‘Letter from Peking’ நாவலை தமிழில் மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன். ‘கிளம்புதலும் திரும்புதலும்’ மற்றும் ‘கிளம்புதல்’ ஆகிய கடிதங்களைப்
போல இதுவும் ஒரு கடிதம்தான். ஆனால் மிக நீண்ட ஒரு கடிதம். ஒற்றையில் வசிக்கும் அம்மாவைப்
புறக்கணித்து வீட்டை விட்டுச் செல்லும் மகன் குறித்த அம்மாவின் உணர்வுகள் பற்றி எழுதப்பட்டிருக்கும்
நாவல் இது. நமது இலங்கை, இந்தியத் தாய்மார்களோ, தந்தையர்களோ தமது பிள்ளைகளைக் குறித்து
வெளிப்படையாகச் சொல்லாத உணர்வுகளை ஒரு தாயின் பார்வையில் இந்த நாவல் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியை இங்கு தர விரும்புகிறேன்.
******
மகன் ரெனீ வீட்டுக்கு வந்துவிட்டான். நான் தேடியலையாத
போது, எனது இதயம் அமைதியாக இருக்கும்போது, நான் பொறுமையில் மூழ்கியிருக்கும்போது, தொடர்ந்தும்
வேண்டுதல்களை விடுக்காதவிடத்து, இறுதியாக இப் பிரபஞ்சத்தின் தேவ பிடிவாதம் எனக்கு உபகாரம்
செய்திருக்கிறது. அவன் முன் தினமிரவு வந்திருந்தான். நான் உறக்கத்திலிருந்த போதும்,
வீட்டில் எழும் சிறிய சப்தத்துக்குக் கூட விழித்து விடுவேன். கதவு, அதாவது சமையலறைக்
கதவு திறக்கப்படும் சப்தம் எனக்குக் கேட்டது. நான், தனியாக இருப்பதனால் வழமை போலவே
அதற்கு பூட்டு போட்டிருந்தேன். ரெனீயிடம் அல்லாது வேறு எவரிடமும் அதற்கான சாவி இல்லை.
அதனால், கதவைத் திறந்தது ரெனீதான் என்பதை அறிந்து கொண்டேன். குளிர்சாதனப் பெட்டியைத்
திறந்து மூடும் சப்தம் அதனைத் தொடர்ந்து எழுந்தது. அந்த ஓசையும் எனக்குக் கேட்டது.
நான் என்ன செய்ய வேண்டும்? கட்டிலிலிருந்து எழுந்து, கீழ்த் தளத்துக்கு ஓடிச் சென்று
அவனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டுமென எனக்குத் தோன்றியது. எனினும் எனது தனிமைக்குள்ளிருந்த
எனது எச்சரிக்கையுணர்வு விழித்துக் கொண்டது.
அவன் ஒரு தடவை வீட்டை விட்டுச் சென்று விட்டான்.
மீண்டுமொரு தடவை வீட்டை விட்டுச் சென்று விடுவது அவனுக்கு இப்போது இலகு. அவன் நானில்லாது
வாழக் கற்றுக் கொண்டு விட்டான். வீட்டைத் தாண்டி வெளியே ஜீவிக்கக் கற்று விட்டான்.
நான் கீழ்த் தளத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. நான் உறக்கத்திலிருப்பேன் என எண்ணிக்
கொள்ள அவனுக்கு இடமளிக்க வேண்டும். காலையில்
அவனால் எனக்கு வியப்பூட்ட முடியும். நானும் வியப்படைந்ததாகக் காட்டிக் கொள்வேன். இவ்வாறாக
பால்ய வயதுப் பிணைப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
நான் அசையாது, சலனங்களை ஏற்படுத்தாதிருந்தேன்.
தரையில் கால் வைக்கவில்லை. படுக்கையிலேயே சாய்ந்து படுத்திருந்தேன். மெல்லிய நிலா வெளிச்சம்
போர்வையின் மீது வீழ்ந்திருந்தது. நான் செவிமடுத்துக் கொண்டேயிருந்தேன். அவன் உள்ளறை
மேசையருகில் அமர்ந்து உணவருந்தினான். எனக்கு பீங்கான் உரசும் ஒலியும், இழுக்கப்படும்
கதிரையின் ஓசையும் கேட்டது. அரை மணித்தியாலம் அல்லது அதை விட சற்று கூடுதலான நேரமெடுத்து
அவன் சாப்பிட்டான். தொடர்ந்து எனக்கு குளியல் தொட்டியில் தண்ணீர் விழும் ஓசை கேட்டது.
நான் எழுந்து விடுவேன் என எண்ணி அவன் அறைக் கதவை பாதி மாத்திரமே திறந்திருந்தான். எனில்,
அவனுக்கு என்னை எழுப்புவது அவசியமில்லை. நான் புத்திசாலித்தனமாகவே முடிவெடுத்திருக்கிறேன்.
நான் அவனது அறைக்குச் செல்லத் தேவையில்லை. அவன் உறக்கத்திலிருக்கிறானா எனப் பார்க்க,
எட்டிப் பார்க்க வேண்டியதுமில்லை. எனினும் ஓஹ்! அவன் மீண்டும் வீடு திரும்பி விட்டதற்காக
எந்தளவு நன்றி செலுத்த வேண்டும்? எனது இதயம் எனது நெஞ்சுக் கூட்டிலிருந்து வெளியே வந்து
நன்றி கூறுவதற்காக சுவனத்துக்குச் செல்வதைப் போல உணர்ந்தேன். இறைவனுக்கு நன்றி! இறைவனுக்கு
நன்றி!
அனைத்துமே அமைதியாகி விடும்போது என்னால் உறங்கி
விட முடியும். அவன் எப்படியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முன்பு, எனக்கு எப்படி
உறக்கம் வரும் என என்னை நானே கேட்டுக் கொண்டேன். எனினும் நான் அவனைப் பார்க்கச் செல்ல
மாட்டேன். அவன் தனது படுக்கையில் படுத்திருந்த போதிலும், எனது அறைக்குப் பக்கத்து அறையில்தான்
அவனிருந்த போதிலும், இக் கணத்தில் அவன் என்னை விட்டும் தூரமாகவே இருக்கிறான். எனது
மகனுக்கும் எனக்குமிடையே ஒரு சுவர் உருவாகியிருக்கிறது. அவன் வளர்ந்த மனிதனாக ஆகி விட்டான்
என்பதை நான் அறிந்திருந்தேன். இனி அவனுக்கு நான் யாராக இருப்பது அவசியம் என அவன் என்னிடம்
கூறும்வரை நான் பார்த்திருக்க வேண்டும்.
சிலவேளை அவனுக்கு தாயின் அவசியமிருக்காது, சிலவேளை
அவனுக்கு சிநேகிதம் மாத்திரமே தேவையானதாக இருக்கும். வயதான தோழி. ஒரு காலத்தில் அவனுக்குத்
தாயாக இருந்தவளிடமிருந்து அவன் எதிர்பார்ப்பது அதுவாக இருக்கக் கூடும்.
ஒரு மணித்தியாலம் மெதுவாக நகர்ந்து செல்லும்வரை
நான் காத்திருந்தேன். பல மணித்தியாலங்கள் கழிந்திருக்கும் என கட்டிலின் அருகிலிருந்த
மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தை நான் பார்க்கும்வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு மணித்தியாலமும், பத்து நிமிடங்களும் மாத்திரமே கழிந்திருந்தது. தொடர்ந்து கதவின்
பிடியை மெதுவாகச் சுழற்றும் சப்தம் கேட்டது. நான் அசையாது படுத்திருந்தேன். விளக்கையும்
ஏற்றவில்லை. அவனது பழைய சிவப்பு நிற குளியல் ஆடையை அணிந்து, வாசலருகில் அவன் நின்று
கொண்டிருந்ததை நான் கண்ட போது, அவன் ஒருபோதும் வீட்டை விட்டுச் செல்லாததைப் போல இயல்பாக
நான் கதைத்தேன்.
'இது நீயா ரெனீ?'
அல்லாது வேறு யாராக இருக்க முடியும்? அவன் இலகுவாக
பதிலளித்தான்.
'எவ்வாறிருக்கிறீர்கள் அம்மா?'
'நன்றாக இருக்கிறேன். நீ இப்போதுதான் வந்தாயா?'
'நான் கீழ்த் தளத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.'
அவன் கட்டிலருகே வந்து கட்டிலின் ஒரு மூலையில்
அமர்ந்தான். நிலவொளியில் நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
'மின்விளக்கை ஏற்றட்டுமா?' எனக் கேட்டேன்.
'வேண்டாம். உங்களுக்கு உறங்கத் தேவையில்லையென்றால்
நாங்கள் இவ்வாறே அமர்ந்திருப்போம். நான் உங்களை எழுப்பி விட்டேனா?' என்றான்.
தூக்க மயக்கம் போலக் காட்ட முற்பட்டவாறு,
'ஆமாம். அதற்குப் பரவாயில்லை. நான் முன்பு பழகியிருந்ததைப்
போல, இப்போது விடிகாலையில் எழுந்து விடுவதில்லை. பணியாள் மெட் பால் கறந்து தருவான்'
என்றேன்.
'அனைத்தும் ஒழுங்காக நடைபெறுகிறதா?' எனக் கேட்டான்.
நான் வேறொன்றைப் பற்றிக் கூறினேன்.
'நான் கறுப்பு ஆடுகள் இரண்டினையும், வெள்ளை ஆட்டுக்
குட்டிகள் இரண்டையும் வாங்கினேன். ஆகவே எனக்கு தோட்டத்தில் புல் வெட்ட வேண்டிய தேவையில்லை.'
'நிலவு வெளிச்சத்தில் நான் அவற்றைக் கண்டேன்.'
பிறகு எமக்கிடையில் இன்னும் கதைக்கத் தேவையான
எதுவுமில்லையெனத் தோன்றியது. எனது இதயக் கூட்டிலிருந்து எந்தக் கேள்வியும் வெளியே பாய
நான் இடம் கொடுக்கவில்லை. அவன் என்னிடம் எதைக் கூறத் தயாரானாலும், பதிலாக நான் அதை
ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அடுத்ததாக என்ன சொல்லக் கூடுமென நான் அறியேன்.
'நான் எங்கிருந்தேன் என அம்மா என்னிடம் கேட்கவே
இல்லையே அம்மா?'
******
வீட்டை விட்டு ஓடி விடுபவர்களால் பாரம்பரிய வீடுகளையும்
இலகுவாக நேசித்து விட முடிவதில்லை. வீடுகளின்
ஓரோர் அணுக்களும் வசித்தவர்களினதும், வந்து சென்றவர்களினதும் கதைகளைச் சுமந்த வண்ணம்
அசையாது வீற்றிருக்கின்றன. அவற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாதவர்கள் அவற்றைத் தாண்டி
எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள முற்படுகிறார்கள். அதை இலகுவாகத் தாண்டிச் செல்ல முடிந்தவர்களால்
ஒருபோதும் நிம்மதியாக இருந்து விட முடியுமெனத் தோன்றவில்லை. கடலூர் சீனுவினதும், சுரேஷ்
பிரதீப்பினதும் கடிதங்கள் இதைத்தான் குறிப்பிடுகின்றன.
என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள மொழி
பெண் கவிஞர் தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் கீழுள்ள கவிதையைப் பாருங்கள். பெற்றோரை இழந்த
தன்னை வளர்த்த பாட்டியையும், தான் வாழ்ந்த பாரம்பரிய வீட்டையும் விட்டுப் போன இளம்பெண்ணின்
ஏக்கத்தை கவிதையில் நிரப்புகிறார். அந்த வீட்டில் பாட்டியுடன் வாழ்ந்த காலங்களை மீண்டும்
யாசிக்கிறார்.
மெல்லிய விடிகாலைப் பனி
பாரம்பரிய வீட்டில் தனித்து மீதமான
ஒற்றைப் பாட்டியின் மடியலமர்ந்து
நாட்டார் கதைகளை காது நிறையக் கேட்டிருக்க,
தென்னை ஈர்க்கில் குச்சிகள் கொண்டு
கூட்டிப் பெருக்கிய பெருவீட்டு முற்றத்தினோரம்
வெண்ணிறப் பூக்கள் நிரம்பிய மரத்தின் கீழமர்ந்து
உதிர்ந்த பூக்களைச் சேகரித்துச் சேகரித்து
மாலை கோர்க்க,
பாட்டியின் வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த
சீத்தைத் துணியைப் போர்த்தி
மழை பெய்யும்போது வானம் பார்த்தவாறு
சாலையில் அமர்ந்திருக்க
எவ்வளவு விரும்புவேன் நானென
யாரும் அறிய மாட்டார்கள்
பாட்டியைத் தவிர.
இரு கைகள் கோர்த்தும் அணைத்திட முடியா
பெருந் தூண்கள் இருக்கும்,
பாட்டி எப்போதும் தனித்தே பெருக்கித் துடைக்கும்
பாற்தூய்மை வெள்ளையென வெளுத்த
பரிசுத்தமான பாரம்பரிய வீட்டுக்கு
வேறு யாரோ வருகிறார்களாம் குடியிருக்க
இன்று, நாளைக்குள்.
எனக்கு என்னைத் தெரிந்த அளவிற்கு என்னை அறிந்த,
யாராலும் புரிந்து கொள்ள முடியாத என்னை உணர்ந்த
பாட்டியின் தனிமைக்கு
என்னை விடப் பெறுமதியான யாரேனும் உண்டோ
வருபவர்கள் என்னளவிற்கு விரும்புவரோ பாட்டியின்
வெண்ணிறப் பூக்களை ஒத்த
பேரழகான
நரைத்த கூந்தல்கற்றைகளை
மெல்லிய அதிகாலைப் பனியை எனக்களித்த மேகமே
வேண்டாம் எனைக் கரைத்து மழையாய்ப் பெய்ய
******
பெற்றோரையும், வீட்டையும் புறக்கணிப்பவர்களுக்கு
இவ்வாறான ஏக்கங்களும், இவை தரும் வலியும் வாழ்நாள்
முழுவதும் சுமையாக அழுத்திக் கொண்டேயிருக்கும் அல்லவா? இருக்கும் ஒற்றை ஜீவிதத்தில்
நமக்குப் பிடித்ததை மாத்திரமே செய்து விடாது, கூட இருந்து நம்மை நேசிக்கும் சக ஜீவன்கள்
குறித்தும் ஒரு கணமேனும் சிந்தித்தால் ஒவ்வொரு நாளும் இனிமையானதாக மாறும். புறக்கணிப்புக்கள்
தூர்ந்து விடும். விட்டு விலகி ஓடுதல் என்பதற்கான வாய்ப்புக்களே இல்லாமலாகும். அதுதான்
ஜீவிதம். அவ்வாறு வாழ்வதுதான் வாழ்க்கை.
-
எம்.ரிஷான் ஷெரீப்