Thursday, October 21, 2010

புனித ஹஜ் - பல தடவைகள் செய்யப்பட வேண்டிய கடமையா?

    புனிதமான துல்-கஃதா மாதத்தில் நாம் இருக்கிறோம். இப்பொழுது, நம்மில் பலரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லத் தயாரானவர்களாக இருப்போம். நம்மைச் சார்ந்தவர்கள், உறவினர்கள், அயலில் உள்ளவர்கள், ஊர்வாசிகள் என புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லக் கூடியவர்களை வழியனுப்பி வைக்கக் கூடியவர்களாகவும் இருப்போம். அறிந்தோ, அறியாமலோ தாம் பிறருக்கு இழைத்திருக்கும் குற்றங்களுக்காக, ஏழையோ, தம்மை விடவும் வசதி குறைந்தவர்களோ, தமக்குக் கீழே பணி புரியும் ஊழியர்களோ அவர்களுடனான கோபதாபங்களை மறந்து, அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்து, அவர்களிடம் தாம் செய்த குற்றங்களை மன்னித்துக் கொள்ளக் கேட்டு, இன்முகத்தோடு விடைபெறச் செய்து மனிதர்களிடையே ஒற்றுமையையும், உறவினையும் பலப்படுத்தும் புனித மாதமிது.

    இம் மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஹஜ் கடமையானது பர்ழான ஹஜ், சுன்னத்தான ஹஜ் என இரு வகைப்படுகிறது. உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். ஒன்றுக்கு மேலதிகமாகச் செய்யும் ஹஜ் எல்லாம் சுன்னத்தான ஹஜ்ஜுக்குள் வகைப்படுத்தப்படும். இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி - 1819, 1820)


    ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பை வலியுருத்திக் கூறுகின்றன. எனவே இக் காலகட்டத்தில் முன்பை விடவும் அதிகமான அளவு மக்கள் ஹஜ் கடமைக்காக ஒன்று கூடுகிறார்கள். ஹஜ்ஜுக்காக மட்டுமல்லாது உம்ராவை நிறைவேற்றுவதற்காகவும் அதிகளவான மக்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். 'ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடும் மக்களில், சரி பாதியிலும் குறைந்த சதவீத அளவு மக்களே தமது முதல் ஹஜ்ஜை நிறைவேற்ற வருபவர்கள்; ஏனையோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்ற வருகை தருபவர்கள்' என ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

    இது பிழையென்றோ தவறான செயலென்றோ கூற வரவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜைச் செய்யவெனச் செல்கிறவர் மஹ்ரமாக (ஒரு பெண்ணுக்கு வழித் துணையாக), வழிகாட்டியாக, மருத்துவராக இப்படியான அவசியத் தேவையின் காரணமாகச் செல்லலாம். ஆனால் 'நான் ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கிறேன்..நான் பத்துத் தடவை ஹஜ் செய்திருக்கிறேன்' என்று பெருமை பேசிக் கொள்பவர்களும், அதற்காகவே பல இலட்சங்களைச் செலவழித்து ஹஜ்ஜைப் பல தடவைகள் நிறைவேற்றுபவர்களும் கூட நம் சமூகத்தில் இருக்கிறார்கள் இல்லையா?

    நமது நாட்டிலிருந்தும், ஊரிலிருந்தும் கூட இவ்வாறு பல தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்றப் புறப்பட்டுச் செல்வோர் அனேகர் நம்மில் இருக்கிறோம். நாம் வசிப்பது செல்வந்த நாடொன்றல்ல. நம்மைச் சூழ்ந்திருக்கும் நமது சகோதரர்கள் எல்லோருமே அவர்களது ஹலாலான எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட சௌபாக்கியங்கள் நிறைந்தவர்களல்லர். நாட்டில் அகதிகளாக்கப்பட்ட, அனாதைகளாக்கப்பட்ட, இடம்பெயர்ந்த அநேக மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களது நிறைவேற்றப்படாத பல தேவைகள் இன்னும் இருக்கின்றன. நம் தேசமானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயத்தாலும், மண் சரிவுகளாலும், காற்றினாலும், கோடையினாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டே வருகிறது. நமது மக்கள் இவற்றால் பெரும் துயரடைகிறார்கள். அவர்களது துயரங்களுக்கு மத்தியிலிருந்து நாம் ஸுன்னத்தான ஹஜ் கடமையைச் செய்யச் செல்கிறோம்.

    நம்மைச் சுற்றிலும் அன்றாட சீவனத்துக்கே வழியற்றுப் போன வறியவர்கள் இருக்கிறார்கள். சொந்த வீடுகளின்றி வாடகை வீடுகளில் வசித்து, வாடகை கொடுக்க இயலாது கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள். ஹலாலான தேவைக்காகக் கடன் வாங்கி, அதை மீளச் செலுத்திக் கொள்ள வழியற்றவர்கள் இருக்கிறார்கள். தமது பிள்ளைகளின் திருமண வயது தாண்டியும் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல திறமையிருந்தும், நன்றாகக் கற்கும் ஆர்வமிருந்தும் உதவி செய்ய ஒருவருமின்றி சிறு வயதிலேயே சிறு சிறு கூலிவேலைகளில் இறங்கிவிடும் சிறுவர்களும், இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். மருத்துவ வசதியற்ற நோயாளிகள், இன்னும் அநாதைகள் இருக்கிறார்கள். நம்மை அண்டிப் பிழைக்கும் எளிய ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களது பெருமூச்சுகளுக்கு மத்தியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டேயிருக்கிறோம்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜினை நிறைவேற்ற, ஒருவர் தயாராகிச் செல்லும் வரையிலும், சென்று திரும்பும் வரையிலும் எத்தனை இலட்சங்கள் பணம் செலவு செய்யப்படுகிறது? இந்த வருடமும் ஹஜ் செய்யத் தீர்மானித்ததன் பின்னர் வீட்டுக்கு வந்துசெல்லும் உறவுகளுக்கான விருந்துபசாரங்களாகட்டும், ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பி வருகையில் குடும்பத்தினர், நண்பர்களுக்காக வாங்கி வரப்படும் அன்பளிப்புப் பொருள்களாகட்டும், கணக்கற்ற பணம் செலவழிக்கப்படுகிறது அல்லவா?

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்" எனக் கூறினார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி 1421)


    மேலுள்ள ஹதீஸைப் பாருங்கள். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் தஆலா நமக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து நாம் செய்யும் தர்மமானது இன்னுமொரு மனிதனின் நிலையை மாற்றக் கூடியது. அவனைத் துன்பத்திலிருந்தும் விடுவிக்கக் கூடியது. சுன்னத்தான ஹஜ்ஜுக்களுக்காக செலவாகும் இலட்சக்கணக்கிலான பணத்தினைக் கொண்டு எவ்வளவெல்லாம் செய்யலாம் பாருங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் பர்ழான ஹஜ்ஜைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடும் நிய்யத்தோடும் செல்ல வழியற்ற நம் உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவலாம். ஹலாலான தேவைகளுக்காகக் கடன்பட்டு அதை மீளச் செலுத்திக் கொள்ளவியலாமல் தவிப்பவர்களை அதனிலின்றும் மீட்டு விடலாம். திருமணம் செய்ய வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வசதியின்றி, கல்வியைப் பாதியில் விட்டவர்களுக்கு அவர்களுக்கான எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம். நம்மை நம்பி நம்முடன், நமக்காக உழைக்கும் ஊழியர்களின் ஊதியத்தைச் சிறிதளவாவது அதிகரித்து விடலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுபவர்களின் குடும்பத்துக்கு, அவர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலொன்றைச் செய்யவோ, வேறு தொழிலுக்கோ பணத்தைக் கொடுத்துதவலாம்.

    கட்டாயக் கடமையான ஸகாத்தை ஒழுங்காகக் கணக்கிட்டுக் கொடுக்காது, சுன்னத்தான ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. இஸ்லாமானது கட்டாயக் கடமைகளை உதாசீனம் செய்துவிட்டு, சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வரவேற்கவில்லை. நமக்குக் கடமையான முதலாவது ஹஜ்ஜை ஒழுங்காக நிறைவேற்றிவிட்டோம். அதற்குப் பிறகும் அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லவும் ஆசை வருகிறது எனில், ஹஜ்ஜுக்குச் செல்லாமல் அதற்குச் செலவாகப் போகும் பணத்தில் தன்னைச் சூழவுள்ள இயலாதவர்களுக்கு உதவுவேன் என மேலதிக ஹஜ் செய்யப் போகும் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதனைச் செயற்படுத்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் எளியவர்களிடத்தில் எவ்வளவு நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும், சிந்தித்துப் பாருங்கள்.

நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ' மனிதன் மரணமடைந்து விட்டால் அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
1.எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா)
2.பிரயோசனமளிக்கும் கல்வி
3. நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்


    ஒரு மனிதன் மரணித்து விடும்போது அவரது செயல்களின் இயக்கமும் நின்று போய்விடுகிறது. அவரால் தொடர்ந்தும் நற்செயல்கள் செய்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர் கப்றாளியாக ஆன பின்பும் அவரது நன்மைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கும்படியான நற்செயல்கள்தான் மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸில் உள்ளவை. பல தடவை ஹஜ் செய்யும் வசதி படைத்தவர்களின் பணத்தில் இவ்வாறாகக் கப்றிலும்  நிரந்தரமாக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய எத்தனை எத்தனை நல்ல விடயங்களைச் செய்துவிடலாம்? செய்ய முயற்சிப்போம், சிந்திப்போம் சகோதரர்களே !

- எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

நன்றி

# விடிவெள்ளி வார இதழ் - 51 (21.10.2010)

Friday, October 15, 2010

கண்ணியம் காக்கப்பட வேண்டிய பள்ளிவாயில்கள்

    நீங்கள் ஒரு அரசனின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் வீட்டிலிருந்த அமைப்பிலேயே சென்று விடுவீர்களா? அந்த அரசனின் மனம் கவரும் வண்ணம்  தூய்மையாக, இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து, மணம் பூசிச் செல்வீர்கள். அங்கு சென்று அரசனின் வருகைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்த அரண்மனையில் தடுக்கப்பட்டுள்ள அரட்டையை, கூட இருப்பவர்களோடும் கைத்தொலைபேசியிலும் சத்தமாக நிகழ்த்திக் கொண்டிருப்பீர்களா? அரண்மனைப் பாவனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை உங்கள் தேவைக்காக, நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்துவீர்களா? எதையும் செய்யமாட்டீர்கள். ஏனெனில், அரண்மனைக்குள் தடுக்கப்பட்டிருக்கும் இவை போன்றவற்றையெல்லாம் செய்தால் கிடைக்கும் அரசனின் கோபத்துக்கும் தண்டனைக்கும் பயந்து, மிகவும் அமைதியாகவும், அரசன் உங்களைக் காண்கையில் உங்களை அவன் நல்லவிதமாக எண்ணவேண்டுமெனவும் கண்ணியமாக நடந்துகொள்வீர்கள் அல்லவா?

    ஆனால், தற்காலத்தில் சர்வ வல்லமை மிக்க முழுப் பிரபஞ்சத்துக்கும் அரசனான, எல்லாப் புகழுக்குமுரிய எமது இறைவனான அல்லாஹ் தஆலாவின் மாளிகைக்கு அழைக்கப்படும் போது செல்லும் நாம், இறைவன் மீது எந்தவித அச்சமுமற்றவர்களாகவே அங்கு கால் பதிக்கிறோம். வுழூ செய்வதற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை நமது தேவை முடிந்தும் வீணடிப்பதோடு, தண்ணீர்க் குழாய்களையும் இஷ்டத்துக்குத் திறந்து வுழூச் செய்துவிட்டு அவற்றை ஒழுங்காக மூடாமலே சென்று விடுகிறோம். இகாமத் சொல்லப்படக் காத்திருக்கும் நேரம் வரை அம் மாளிகைக்குள் வீணான அரட்டையிலும், சிரிப்பிலுமே நேரத்தைக் கடத்துகிறோம். எமக்கு விரும்பிய விதத்தில் மின்சாரக் குமிழ்களை, மின்விசிறிகளை இயக்கிக் கொள்கிறோம். பின்னர் அவற்றை அணைக்க மறந்து அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகிறோம். இன்னும் தொழுகைக்காகக் கூட வராத சிலர், தமது அவசரத் தேவைக்காக கழிப்பறையை மட்டும் நாடி பள்ளிவாயிலுக்கு வந்து செல்வதைக் கண்டும் காணாதவர்களாக இருந்தும் விடுகிறோம். பிரயாணத்தினிடையில் அவ்வாறு வந்துசெல்லும் வெளியூராட்களை விட்டு விடலாம். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் பள்ளிவாயிலை நாடி வரும் உள்ளூர் ஆட்களைத் தொழுகைக்காகத் தூண்டுவதுவும் நமது கடமையல்லவா?

    அண்மைக்காலங்களில் நிக்காஹ் பதிவுகள், இஃப்தார் நிகழ்வுகள் போன்றன பள்ளிவாயில்களில்தான் அனேகம் நடைபெறுகின்றன. மிகவும் நல்ல, நன்மையான விடயம் இது. ஆனால், இவ் வைபவங்கள் முடிந்த பின்னர் பார்த்தால், உணவுப் பரிமாற்றத்தின் போது எல்லோருக்கும் பகிரப்பட்ட சிற்றுண்டி மீதிகள், பேரீத்தம்பழ விதைகள், குடிபானத் துளிகள் போன்றன பள்ளிவாயிலின் தரையெங்கிலும் மற்றும் நில விரிப்பிலும் சிதறி இருக்கும். பள்ளிவாயில் சுத்திகரிப்பாளர் வந்து துப்புரவு செய்யும் வரைக்கும் பாதங்களில் ஒட்டியபடி எல்லா இடங்களுக்கும் பரவி, அவை ஈக்கள், பூச்சிகள் மொய்த்தபடியும் வாடையடித்தபடியும் அப்படியே கிடக்கும். நமது வீட்டிலென்றால் இப்படி அலட்சியமாக விட்டுவைப்போமா? உடனே அதைச் சுத்தம் செய்துவிட மாட்டோமா? ஆனால் பள்ளிவாசல் எனும்போது மட்டும் நமக்கு ஒரு அலட்சியமும் சோம்பலும் வந்துவிடுகிறது. நிகழ்வு முடிந்ததுமே சாப்பிட்டோம், குடித்தோமென அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். ஒவ்வொருவரும் தமது உணவின் மீதிகளை, வாழைப்பழத் தோல்களை, பேரீச்சம்பழ விதைகளைத் தாமே அகற்றிவிட்டால், அதற்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைக் கூடைகளிலிட்டுவிட்டால், நமது இறைவனின் இல்லம் ஒரு சில நிமிடங்களிலேயே சுத்தமாகிவிடுமல்லவா? உணவு நிகழ்வுகளை பள்ளிவாயில்களில் ஏற்பாடு செய்பவர்களும் கூட, அந் நிகழ்வின் பின்னர் பள்ளிவாயிலை உடனே சுத்தம் செய்யும் நடவடிக்கை குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

    நம்மைக் கடந்துபோன இந்த வருட ரமழானின், இறுதிப் பத்து நாட்களின் பின்னிரவுகளில் அனேகமான பள்ளிவாயில்களில் நடக்கும் ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்துகொள்ளவே வேண்டும். ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதுவும், கியாமுல்லைல் தொழுகையும் பெரும் நன்மையைத் தேடித் தரும் விடயம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமழான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.
(ஸஹீஹ் புகாரி - 2010)

    இவ்வாறு இஃதிகாப் இருந்தும், கியாமுல்லைல் தொழுதும் நன்மையைத் தேடிக் கொள்வதற்காக முன்வந்து ஊர் இளைஞர்கள் ரமழானின் இரவுகளில் பள்ளிவாயில்களில் ஒன்றுகூடுவது எவ்வளவு நல்ல விடயம்? ஆனால் இஃதிகாப் இருப்பதற்காகப் பள்ளிவாயிலுக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிக் கொண்டு வரும் இளைஞர்களில் பலர், பள்ளிவாயில்களை படுத்திருப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுத்திருந்ததையும் கடந்த ரமழானில் காண முடிந்தது. கியாமுல்லைல் தொழுகை நடந்து கொண்டிருக்கும்வேளை உறங்காது வெறுமனே படுத்திருக்கும் சில இளைஞர்கள் சத்தமாகச் சிரித்துக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும் தமது கைத்தொலைபேசிகளில் விளையாடிக் கொண்டிருப்பதையும், இன்னும் சில இளைஞர்கள் பள்ளிவாயிலுக்குள்ளேயே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்று, தொழுகைக்காக வந்திருந்த பெரியவர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிக்காட்டினர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி - 1423)

    நன்மை தேடுவதற்காகப் பள்ளிவாயில்களில் ஒன்று கூடும் நமது இளைஞர்கள் பலர், ஏன் தமது பொன்னான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்து, தொழுதுகொண்டிருக்கும்  மற்றவர்களுக்கும் இடையூறாக இருந்து, பெரியவர்களின் சாபங்களை அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமாக வாங்கிச் செல்கின்றனர்?

    அடுத்ததாக நிக்காஹ், இஃப்தார் போன்ற நிகழ்வுகளின் போதும், தொழுகை இடைவேளைகளிலும் ஒன்று சேரும் நமது மக்கள் எழுப்பும் இரைச்சலை கண் மூடிக் கேட்டுப் பாருங்கள். ஒரு சந்தையிலோ, ஒரு பேரூந்திலோ இருப்பதைப் போல நம்மை அந்த இரைச்சல் உணரச் செய்யும். பள்ளிவாயில் நிர்வாக சபைக் கூட்டங்களின் போதும், விசாரணைக் கூட்டங்களின் போதும் இன்னும் பல ஒன்றுகூடல்களின் போதும் பள்ளிவாயில் இறைவனின் இல்லம் என்பதை மறந்து அங்கு ஒருவரையொருவர் சத்தமாக ஏசிக் கொள்வதுவும், அடித்துக் கொள்வதுவும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

    இங்கு அந்நிய மதத்தவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைக் கொஞ்சம் பார்ப்போம். ஒரு விகாரைக்கோ, கோயிலுக்கோ அவர்கள் செல்லும்போது வெண்ணிற ஆடைகளை அல்லது இருப்பதிலேயே தூய்மையான, ஒழுங்கான ஆடைகளைத்தான் அணிந்து செல்கிறார்கள். அவர்களது அப் புனித இடத்தின் எல்லைக்குள் பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் அவர்கள், வீண் அரட்டையிலோ, அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதை நாம் கண்டதில்லை. தனது ஆலயமொன்றைப் பேரூந்தில் கடந்து செல்லும்போதும் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பல சக மதத்தவர்களை நான் கண்டிருக்கிறேன். எமது பள்ளிவாயில்களை அவர்கள் நடந்து, கடந்து செல்ல நேரிட்டால் கூட,  கண்ணியமாகவும் அமைதியாகவும் அவ்விடத்தைக் கடந்து செல்கின்றனர்.

    சக மதத்தவர்கள் அவர்களது ஆலயங்களுக்கும் எமது பள்ளிவாயில்களுக்கும் வழங்கும் கௌரவத்தை, நாம் நமது பள்ளிவாயில்களுக்கு வழங்குகிறோமா? இஸ்லாமியனான ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹ் தஆலாவின் இறை இல்லத்திற்குரிய கண்ணியத்தை உணர்ந்து, அதற்கு மதிப்பளித்தால் மட்டுமே பள்ளிவாயிலுக்குரிய அமைதியையும் ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேண முடியும். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# அல்ஹசனாத் மாத இதழ், ஒக்டோபர் 2010

Friday, October 1, 2010

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும்  காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாட்டை விசாரிக்கும் காவல்துறை, சம்பந்தப்பட்டவர்களை கூண்டிலேற்றி நீதத்தை நிலைநாட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு.

    ஆனால் இலங்கையின் காவல்துறைக்கும் இந்தக் கடமைகளுக்கும் சம்பந்தமேயில்லை. இலங்கை காவல்துறையின் அநீதங்கள் பற்றிப் பேசிப் பேசியும், எழுதி எழுதியும் சலித்துப் போய்விட்டது. இந் நாட்டில் ஊழல் அதிகம் நிகழுமிடங்களில் காவல்துறை இரண்டாமிடத்திலிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி அமைச்சரொருவரும் வெளிப்படையாக உரையாற்றியிருக்கிறார். இலங்கையின் காவல்துறையினர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். கதிர்காமத்தில், மாணிக்க கங்கையில் புனித நீராடும் தமிழ் மக்களை தடியால் அடித்து விரட்டும்போதும், பம்பலப்பிட்டி கடற்கரையில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை தடியால் அடித்துக் கொல்லும்போதும் ஒரே சுபாவத்தோடுதான் நடந்துகொள்கின்றனர். அங்குலான பொலிஸ்நிலையத்துக்குள் கொலை நிகழ்ந்தபோதும், கொட்டாவ பொலிஸ்நிலையத்துக்குள் கொலை நிகழ்ந்தபோதும் கொலைப்பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள காவல்துறை சொல்லும் கதை ஒன்றேதான். கைது செய்யப்பட்டபின்பு சந்தேகநபரொருவர் கொல்லப்படாத பொலிஸ்நிலையமொன்று இலங்கையிலிருக்குமென்பது ஊருக்குள் மரணமே நிகழாத வீடொன்றைக் கண்டுபிடிப்பதுபோல நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.

    அண்மையில் நிகழ்ந்த இரு சம்பவங்களைப் பார்ப்போம். இவற்றுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சம்பவங்களிலுமே யார் குற்றவாளியென்பது வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கான தண்டனை வழங்கப்படவில்லை. நிரபராதிகள் வீணே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    லாலக பீரிஸ், 34 வயதான இவர் இரு குழந்தைகளின் தந்தை. வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப் பற்றி காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் படி, அந்த அங்கலட்சணத்துடன், கைவசம் தேசிய அடையாள அட்டை இல்லாமலிருந்த இவரையும் இவரது நண்பரையும் தெருவில் வைத்து கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை. ஒருவரைக் கைது செய்த பின்பு அவரை என்ன குற்றவாளியாக்குவதெனும் கலையில் திறமை வாய்ந்த காவல்துறை, இவரைக் கொள்ளைக்காரனாக்கியது.

    லாலகவின் தங்கை வீட்டில், உடைந்திருந்த சலவை இயந்திரத்தை திருத்திக் கொடுப்பதற்காக அன்றைய பகல்பொழுது முழுவதையும் செலவளித்திருந்த லாலக, வீட்டுக்கு வந்த பின்னர் வீட்டுத் தண்ணீர்க் குழாய் உடைந்ததன் காரணமாக, அதில் பொருத்துவதற்கு பிளாஸ்டிக் குழாயொன்றை வாங்கிவரவென்று மே மாதம் 23ம் திகதி மாலை 6 மணிக்கு கொட்டாவ நகரத்துக்குச் சென்றதாக அவரது மனைவி அனுஷா தில்ருக்ஷி சொல்கிறார். அவர் நகரத்துக்குப் போனபின்னர், அவரையும் இன்னுமொருவரையும் காவல்துறை கைதுசெய்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து உடனேயே கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு அவரது மனைவியும், தங்கையும் சென்று அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லையென அங்கு அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே அயல் பொலிஸ்நிலையமான ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோதும் அதே பதில்தான் அவர்களுக்குக் கிடைத்தது.

    பொலிஸ்நிலையத்துக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது அவரது வீட்டினர், உறவினரின் மனதில் எவ்வாறான வேதனையெழும்பும்? அதுவும் இந் நாட்டு காவல்துறையினரின் நடத்தைகளை அறிந்தவர்களது மனது என்ன பாடுபடும்? எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காதவிடத்து, மீண்டும் இரவாகி அவரது மனைவியும், தங்கையும் பொலிஸ்நிலையம் வந்தனர். முன்னைய பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், லாலகவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நபர் அங்கு கூண்டுக்குள்ளிருப்பதை அவர்கள் கண்டனர்.

'நாங்கள் உன்னுடன் சேர்த்து வேறு யாரையும் இங்கு கொண்டுவரவில்லைதானே?' பொலிஸார், அவர்கள் முன்பே அந் நபரிடம் வினவினர். அவரும் இல்லையென்று தலையசைத்தார். கொடுக்கப்பட்டிருந்த அடி காயங்கள் அவரை அவ்வாறு சொல்லவைத்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்கள் இருவரையும் நகரில் வைத்து பொலிஸ் தங்கள் ஜீப்பில் ஏற்றியதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருந்தனர். அப் பெண்கள் பெருந் துயரத்தோடு வீட்டுக்கு வந்தனர்.

    அடுத்தநாள் விடிகாலை 6.30 மணியளவில் திரும்பவும் லாலகவின் தங்கை பொலிஸ்நிலையம் வந்து விசாரித்துள்ளார். முந்தைய நாள் அவருக்குக் கிடைத்த அதே பதில்தான் மீண்டும் கிடைத்தது. அவர் வீட்டுக்கு வந்தார். காலை 9 மணிக்கு காவல்துறையிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

'அண்ணனுக்கு ஏதேனும் சுகவீனம் இருந்ததா? உனது அண்ணன் நேற்று செத்துப் போய்விட்டார். உடனே பொலிஸுக்கு வா.'

    உடனே அவர், லாலகவின் மனைவியையும், இன்னுமொரு சகோதரனையும் அழைத்துக் கொண்டு பொலிஸ்நிலையம் வந்துள்ளார். அங்கு பொலிஸ் மேசைக் காலொன்றில் கட்டப்பட்டு, இறந்துபோயிருந்த லாலகவைக் கண்டனர். கைகளிரண்டிலும் விலங்கிடப்பட்டு, காது அருகில் காயத்தோடும், உடல் முழுவதும் சப்பாத்து அடையாளங்களோடும், வாயிலிருந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்த அண்ணனின் சடலத்தைக் கண்ணுற்றதாக அவரது சகோதரன் கூறுகிறார். 23ம் திகதி, தங்களால் கைது செய்யப்படவில்லையெனச் சொல்லப்பட்ட ஒருவர், 24ம் திகதி பொலிஸ்நிலையத்துக்குள்ளேயே இறந்துபோயிருந்தது எப்படி? இப்பொழுது லாலகவைக் கைது செய்யவே இல்லையெனச் சொல்லப் போவது யார்? பொலிஸாருக்கு கைதிகளை அடிப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும், கொலை செய்வதற்கும், அவர்கள் மேல் பொய்யான குற்றங்களைச் சோடிப்பதற்கும் இன்னும் பொய் சொல்வதற்கும் கூட இங்கு அனுமதி இருக்கிறது.

    பொலிஸாரின் கைதுக்குப் பின்னர் நிகழ்ந்த இப் படுகொலைக்குப் பிற்பாடு செய்யப்பட வேண்டிய அனைத்தும் வழமை போலவே நிகழ்ந்துமுடிந்தாயிற்று. அதாவது கொட்டாவ பொலிஸார் மூவருக்கு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இப் படுகொலை சம்பந்தமாக பூரண விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். இது நடக்குமா? இது போன்ற அறிக்கைகளை எத்தனை முறை கேட்டிருப்போம். ஆனால் எந்தச் சிறைச்சாலைப் படுகொலைக் குற்றத்திலும் பொலிஸுக்குத் தண்டனை கிடைத்ததாகத் தகவல்கள் இல்லை. இந்தச் சமூகத்தில் எவர்க்கும் யாரினதும் உயிரைப் பறிக்க உரிமையில்லை. பொலிஸுக்கு மட்டும் அந்த உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. குற்றவாளியென இனங்காணப்படும் வரை கைது செய்யப்படும் அனைவருமே சந்தேக நபர்கள் மாத்திரம்தான். அவர்கள் குற்றமிழைத்தவர்களா, நிரபராதிகளா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இங்கு சந்தேகநபருக்கு, எந்த நீதியுமின்றி தண்டனை வழங்கியாயிற்று.

    இது இவ்வாறெனில், தனக்கு நீதி வழங்குவார்களென அப்பாவித்தனமாக நம்பி, பொலிஸை நாடிய ஒருவரையே பொலிஸ் தண்டித்த இன்னுமொரு கதையும் இங்கு நிகழ்ந்துள்ளது. இது நடந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் நீதி கிடைக்கப்பெறவில்லை. கதையின் நாயகனின் பெயர் சரத் சந்திரசிறி. 43 வயதில் மெலிந்து, உயர்ந்த, ஏழ்மையான தோற்றம் கொண்ட நபர். தனது தந்தையின் மரண வீட்டுக்குப் புறப்பட்டவருக்கு நடந்ததைப் பார்ப்போம்.

    கடந்த பெப்ரவரி 21ம் திகதி தனது தந்தையின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததுமே, அவர் வாழ்ந்த நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தார் சந்திரசிறி. அப்பொழுது நேரம் விடிகாலை 2 மணி. நகரத்திலிருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு எடுத்து அவர் மரண வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தார். அதன்படியே சென்ற அவர், முச்சக்கர வண்டியை மரண வீட்டுக்கருகிலேயே கொண்டு செல்ல முடியாத காரணத்தால் மரண வீடு தென்படும் தூரத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கி, வாடகை எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். நூறு ரூபாய் கேட்ட சாரதியிடம் தன்னிடமிருந்த ஒரேயொரு ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுத்திருக்கிறார். வண்டிச் சாரதி தன்னிடம் மாற்றித்தர காசு இல்லை எனச் சொன்னதும் இவர் மரண வீட்டில் யாரிடமாவது வாங்கிவந்து தருவதாகச் சொல்லும்போதே சாரதி ஆயிரம் ரூபாய்த் தாளோடு வண்டியைச் செலுத்திச் சென்றுவிட்டார். இனி அவரே சொல்கிறார் கேளுங்கள்.

" அப்பொழுது விடிகாலை 3 மணியிருக்கும். நான் ஆட்டோவைத் துரத்திக் கொண்டு சந்திவரை ஓடினேன். அவர் எந்நாளும் ஆட்டோவை நிறுத்திவைக்கும் இடத்திலேயே தனது ஆட்டோவுடன் இருந்தார். 'தம்பி, நான் கொடுத்த ஆயிரம் ரூபாயோட மீதியத் தாங்கோ' என்று அவரிடம் போய்க் கேட்டேன். 'உனக்கென்ன பைத்தியமா ஓய்? நீ எனக்கு நூறு ரூபா மட்டும்தான் கொடுத்தாய்.' என்று அவர் மிரட்டினார். நான் ஏதும் செய்ய வழியற்று நின்றிருந்தேன். அப்பாவுடைய மரண வீட்டுக்குப் போகவும் கையில் காசில்லை. அப்பொழுது வீதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த இரண்டு பொலிஸாரைக் கண்டேன். நான் அவர்களிடம் போய் விடயத்தைக் கூறினேன். அவர்களால் எதுவும் செய்யமுடியாதென்றும் வேண்டுமென்றால் போய் பொலிஸ்நிலையத்தில் ஒரு முறைப்பாடு கொடு என்றும் அவர்கள் கூறினார்கள். நான் அப்பொழுதே நடந்து பொலிஸ்நிலையம் புறப்பட்டேன். நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது சம்பந்தப்பட்ட ஆட்டோ சாரதியும், பொலிஸ் சார்ஜனும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சார்ஜன் என்னைக் கண்டதும் எனதருகில் வந்தார். செருப்பைக் கழற்றச் சொன்னார். நான் கழற்றியதும் என்னை இழுத்துக் கொண்டுபோய் சிறைக் கூண்டுக்குள் தள்ளினார். நான் ஏனெனக் கேட்டேன். அதற்கு, 'வாயை மூடிக் கொண்டிரு..ரொம்பப் பேசினா வாயிலிருக்கும் பல்லெல்லாத்தையும் வயித்துக்குள்ள அனுப்பிடுவேன்' என்று மிரட்டினார்."

    22ம் திகதிதான் அவர் விடுவிக்கப்பட்டார். எந்தக் குற்றமும் செய்யாத ஒருவரை, நீதி கேட்டு வந்த ஒருவரை தண்டித்தனுப்புவது எந்த விதத்தில் நியாயமானது? அந்த அப்பாவி மனிதன், தனி மனிதனாக இதற்கு நீதி கேட்டுப் போராடத் தொடங்கியுள்ளார். பொலிஸ் மட்டத்தில் ஒவ்வொரு உயரதிகாரிகளாகச் சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விளக்கமளித்திருக்கிறார். எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. தான் இறுதியாகச் சந்தித்த பொலிஸ் உயரதிகாரியிடம் விடயத்தைக் கூறியதும் 'கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்க்காகவா இவ்வளவு அலையுற?' எனக் கேட்டிருக்கிறார். அந்த ஆயிரம் ரூபாய் கூட தனக்குப் பெறுமதியானது எனக் கூறும் சந்திரசிறி, தன்னை அநியாயமாக சிறையில் வைத்திருந்தமைக்கு நீதி கேட்டே நான் இப்பொழுது போராடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்தும் துரத்தப்பட்ட அவர், பல தொலைக்காட்சி ஊடகங்களைச் சந்தித்து விடயத்தைக் கூறியிருக்கிறார். எங்கும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

"நான் ஒரு விவசாயி. அப்பாவுடைய மரண வீட்டுக்குச் செல்வதற்காகவே பாடுபட்டு ஆயிரம் ரூபாய் தேடிக் கொண்டேன். இன்று வரை ஒவ்வொருவரும் சொல்லுமிடங்களுக்கு நீதி கேட்டு அலைந்து பத்தாயிரம் ரூபா போல செலவாகிவிட்டது. ஆனாலும் நான் ஓய மாட்டேன். எனது பணத்தைத் திருடிய திருடனே பொலிஸுடன் சேர்ந்து என்னை அச்சுறுத்தினான். அவர்கள் என்னை வீணாகக் கூண்டுக்குள் தள்ளினர். இதற்கு எனக்கு நீதி தேவை. "  அவர் குறிப்பிடும் முச்சக்கர வண்டியின் இலக்கம் 7644. சாரதியின் பெயர் 'சுபுன்'. சந்திரசிறியைப் பார்க்கும்போதே பாமரனெனத் தெரிகிறது. ஆனாலும் அவரினுள்ளே பெரும் தைரியமொன்று இருக்கிறது. அவ்வாறில்லையெனில் தனக்கு நிகழ்ந்த அநீதியொன்றுக்கு நீதி வேண்டி இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வாறு எல்லோராலும் இயலுமா என்பதே கேள்வி.

    காலத்தோடு இந்த அசம்பாவிதங்கள் மறக்கடிக்கப்படலாம். ஆனால் அநீதமாக துயரிழைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இதனை எவ்வாறு இலகுவில் மறந்துவிட இயலும்? இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசு உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்காது விடின், பொலிஸுக்குச் செல்வதென்பது தனது கல்லறைக்குத் தானே நடந்து செல்வதற்கு ஒப்பாகும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் பொதுமக்களிடம் தொடரும்.

    இலங்கையில் காவல்துறை எனப்படுவது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு இடமாகவும், அங்கு நீதியைக் காப்பதற்குப் பதிலாக, மரணத்தைத் தேடித் தருமிடமாகவும் மக்கள் மனதில் ஆழப் பதிந்தாயிற்று. லத்திக் கம்போடு மட்டும் நின்று விட்டிருந்த பொலிஸ், ஈழக் கலவரத்துக்குப் பிறகு துப்பாக்கியாலும் தண்டனை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். பொலிஸுக்கு எதிராக யாரும் விரல்நீட்டத் தயங்குவதாலேயே கைது செய்து அழைத்துச் செல்லப்படும் சந்தேகநபர்கள் எல்லோருக்கும் சித்திரவதையும், அடி, உதையும் தாராளமாகக் கிடைக்கிறது. கைது செய்யப்படும் நபருக்கு அடிப்பதென்பது நீதிக்கு மாற்றமானதென வாதம் புரிவது இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் நகைச்சுவையாக உருமாறியுள்ளது. பொலிஸ் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகள் கொல்லப்படுவதென்பது திகைப்பளிக்கக் கூடிய  ஒன்றாகவும் இங்கு இல்லை. சிக்கல் என்னவெனில், காவல்துறையின் நாளைய பலி நீங்களா, நானா என்பது மட்டுமே.

(தகவல் உதவி - டிரன்குமார பங்ககம ஆரச்சி)

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
21.06.2010



நன்றி
# காலச்சுவடு இதழ் 129, செப்டம்பர் 2010 
# KKY NEWS