Showing posts with label அல்ஹசனாத். Show all posts
Showing posts with label அல்ஹசனாத். Show all posts

Wednesday, November 3, 2010

இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய பாடல்

    பாதாள உலகைச் சேர்ந்த காடையர் குழுவொன்றை காவல்துறை அதிகாரிகள் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு ஒழுங்கைக்குள்ளால் ஓடும் முஸ்லிமற்ற நாயகன், அங்கு துணி கழுவிக் கொண்டிருக்கும் ஒரு இளவயது முஸ்லிம் பெண்ணிடம் அபயம் கேட்கிறான். அவள் துணி மறைப்புக்குள் அவனை ஒளித்துக் காப்பாற்றுகிறாள். அவள் முகத்திரையோடு, முழுமையான இஸ்லாமிய ஆடையணியும் பெண். பள்ளிவாசலில் சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் அவள், பள்ளிவாசலுக்கும், வகுப்புக்களுக்கும் சென்று வருகையில் இடைக்கிடையே அவனைக் கண்டு காதல் மலர்கிறது. காதலின் உச்சகட்டமாக இரவில் அவளது அறைக்கும் திருட்டுத்தனமாக வந்து அவளுடன் தங்கிச் செல்பவனை அவளது தந்தை காண்கிறார். இருவரது கரங்களையும் சேர்த்து வைத்து அவனுடனேயே தனது மகளை அனுப்பி வைக்கிறார் அத் தந்தை. தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்லும் அவளையும் அவனையும் வழிமறிக்கும் இன்னுமொரு எதிரிக் காடையர் குழுவில் ஒருவன், அவ்விருவரையும் சுட்டுக் கொல்கின்றான். அக் கொலைகாரனைச் சுட்டுக் கொல்கிறான் காடையர் குழுவில்  இஸ்லாமிய ஆடையிலிருக்கும் இன்னும் ஓர்  இளைஞன்.

    இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் இராஜின் புதிய பாடலான 'சித்தி மனீலா'வின் காட்சியமைப்பே இது. பாடலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' எனும் அஸானின் ஓசையையும் ஒலிக்கச் செய்கிறார்கள். பாடலில் ஒரு காட்சியை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் படம்பிடித்திருக்கிறார்கள். பாடலின் இடையிடையே சூதாட்டம் ஆடுபவர்களாகவும், காடையனாகவும் இஸ்லாமிய ஆடையோடிருக்கும் முஸ்லிம் இளைஞனொருவனைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடலின் கருப்பொருளாக இஸ்லாமியரை எடுத்துக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

    சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும், வீதியில் செல்லும் போதும் முகத் திரை அணியும் முஸ்லிம் பெண்ணொருத்தி, இரவில் களவாக அந்நியன் ஒருவனைத் தனது அறைக்குள் வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு ஈமானற்றவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதனைப் பார்க்கும் அனைவருக்கும் இராஜ் சொல்ல வரும் சேதியென்ன? 'முஸ்லிம் பெண்கள் தனது வீட்டில் கண்டித்துச் சொல்லப்படுவதால்தான் இவ்வாறான ஆடைகள் அணிகிறார்களென்றும், இஸ்லாமிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களென்றும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை எளிதில் துறந்துவிடலாமென்றும், அவர்களது ஈமான் வெளித்தோற்றத்தோடு மட்டும்தான்...மனதளவில் இல்லை' ஆகிய பொய்யான கருத்துக்களைத்தானே?

'இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்  கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.' (அல்குர்ஆன் 24:31)

'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.' (அல்குர்ஆன் 33:59)

'நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.' (அல்குர்ஆன் 33:32)

    என அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தும் உண்மையான நமது முஸ்லிம் சகோதரியொருவர் ,  நாளை பூரணமான இஸ்லாமிய ஆடையில் வீதியில் செல்லநேரும் போது கூட, இப் பாடலைப் பார்த்திருக்கும் அந்நியர்கள் அவரைச் சுட்டிக் காட்டிக் கதைப்பவை பலவிதமான மோசமான கதைகளாக இருக்கக் கூடும் அல்லவா?

    இஸ்லாமிய ஆடையிலிருக்கும் முஸ்லிம் பெண்கள் குறித்த, நிறையக் கேள்விகள் அந்நியர்கள் எல்லோரினதும் மனங்களிலே இருக்கின்றன. அவர்கள் ஏன் இவ்வாறு உடலை மூடி ஆடையணிகிறார்கள்? எது அவ்வாறு நிர்ப்பந்திக்கிறது? ஏன் அவர்கள் தங்கள் அழகினை அந்நியர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை? அவர்களை அரைகுறையாடைகளில் பார்ப்பது எப்படி? ஆகிய கேள்விகள் அவர்களைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. ஆகவேதான் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆடைகளுடனிருக்கும் முஸ்லிம் பெண்கள் கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அப் பெண்கள் உடுத்துக் கொண்டிருக்கும் ஆடைகள், அந்நியர்களுக்கு அரிப்பை ஏற்படுத்துவது போல பாடசாலைகளில், கல்லூரிகளில், வைத்தியசாலைகளில் ஏன் நீதிமன்றங்களில் கூட முக்காட்டை உருவி விடுகிறார்கள். அவர்களை இவ்வாறு செய்யச் செய்வது எது? அழகை மறைப்பதையும், மறைப்பதால் ஏற்படும் அழகையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

    இலங்கையில் இவ்வாறாக முஸ்லிம் பெண்களைக் கேவலப்படுத்தும் பாடலான இது முதலாவதில்லை. இரண்டோ, மூன்றோ இருக்கின்றன. எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள்தான் அந்நிய ஆண்களிடம் மையலுறுகிறார்கள். தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்கிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல. இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இதே கதைதான். மெல்லத் திறந்தது கதவு, பம்பாய், பொக்கிஷம்... எனப் பல திரைப்படங்களில் கதையின் நாயகி முஸ்லிம் பெண். அந்நிய மதத்திலொருவனைக் காதலித்து, அவனுடன் இணைவதற்காக குர்ஆனையும், இஸ்லாமிய ஆடையையும் துறந்து செல்வாள். இது இன்றோடு முடியும் ஒன்றில்லை. இனி வரும் காதல் கதைகளிலும், பாடல்களிலும் இதுவேதான் தொடரும். தப்பித் தவறியேனும் முஸ்லிம் இளைஞனொருவன் தங்கள் மதத்துப் பெண்ணொருத்தியைக் காதலிப்பதாகக் காட்டமாட்டார்கள். அவ்வாறு காட்டினால் தங்கள் மதத்துப் பெண், எளிதில் அந்நிய ஆண்களிடம் வசப்பட்டு விடக் கூடியவள் என்றும் காதலுக்காக அவ்வளவு காலமும் அன்பாக வளர்த்த குடும்பத்தை விட்டும் ஓடி விடுபவள் என்றும், ஒழுக்கமற்றவள் என்றும் அர்த்தமாகிவிடும் அல்லவா? அதன்பிறகு அப்படத்தின், பாடலின் இயக்குனரை அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு, இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.

    ஆனால் இலங்கையில் கதாநாயகியை சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியப் பெண்ணாகக் காட்டினால் யாரால் என்ன செய்ய முடியுமென்ற தைரியம் இந்தப் பெரும்பான்மை இயக்குனர்களை, பாடகர்களைத் தொடர்ந்தும் இயங்கச் செய்கிறது. மிகத் துணிச்சலாக காட்சிகளைப் படம்பிடித்து எளிதாக ஒளிபரப்பிவிட முடிகிறது. இதுவே ஒரு பௌத்தப் பெண்ணை, வேறு மதத்தவனொருவன் இழுத்துக் கொண்டு ஓடுவதாகக் காட்டினால் அடுத்தநாள் கல்லெறிக்குள்ளாவோமென அவர்களுக்குத் தெரியும். பௌத்த மதத்தை அவமதித்த ஒரே காரணத்துக்காக, சமீபத்தில் இலங்கை வரவிருந்த அமெரிக்கப் பொப்பிசைப் பாடகரான அகோனுக்கு இலங்கை அரசு விசாவை மறுத்ததையும் இப் பாடலை ஒளிபரப்பிய சிரச மற்றும் எம்.டீ.வி நிறுவனங்கள் கல்லெறிதலுக்குள்ளானதையும் அண்மையில் அறிந்திருப்பீர்கள்.

    ஒரு சிறு காட்சியினால் தமது மதத்துக்கு ஏற்படும் கலாசாரச் சீரழிவினை அவர்கள் அறிந்திருப்பதனால்தான் இவ்வாறான எதிர்வினையைக் காட்டிவிட முடிகிறது. ஆனால் நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். இவ்வாறான பாடல்களை அனுமதிப்பதன் மூலம் நாம் வாழும் சமூகத்தில் எவ்வாறான தீமைகள் நிகழக் கூடுமென்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

    சமீபத்தில், இந்தியா, தமிழ்நாட்டில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். "ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, இந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு"  என அந்த அறிவிப்பு சொல்கிறது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் ஒழுக்கத்தையும் மார்க்கத்தையும் சூறையாடுவது என்ற பயிற்சியும் அவ்வியக்கத்திலிருக்கும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக என்றுமில்லாதவகையில் முஸ்லிம் இளம்பெண்கள் அந்நிய மதத்தவரோடு காதலுறுவதும், ஓடிப் போவதுவும் தமிழகத்தில் அதிகளவாக நிகழ்ந்து வருகிறது. இந்து அமைப்புக்களின் உதவியோடு கன்னியாகுமரி எனும் மாவட்டத்திலிருந்து மட்டும் அதிகளவான முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பணத்திற்காக இதனைச் செய்யும் இளைஞர்கள் பணம் கிடைத்ததும் கூட வந்த பெண்ணை நடுத்தெருவில் தள்ளி விடுகின்றனர். இதற்கு அந்த இயக்கங்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுமையாகக் கவனிக்கத் தவறுவது, பணத்தையும், பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய நவீன தொடர்பு சாதனங்களையும் கட்டுப்பாடின்றி பிள்ளைகளைப் பாவிக்க விடுவது போன்ற இன்றைய எமது சமூகத்திலிருக்கும் ஓட்டைகளும் இதற்குக் காரணம் அல்லவா?

    இப் பாடலை இணையத்திலும் ( http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related ) ஒளிபரப்பச் செய்திருப்பதன் மூலம் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் இதை இப்பொழுது பார்க்க முடியும். எளிதாக ஆண்களிடம் மையலுற்றுவிடக் கூடியதாக, இலங்கை முஸ்லிம் பெண்கள் குறித்த கேவலமான சித்திரமொன்றைப் பார்வையாளர்களின் மனதில் இலகுவாகத் தீட்டி விட முடியும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்தும், அந்நிய மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கம் குறித்துக் கேள்வியெழுப்பியும் இப் பாடலின் மூலம் கிடைக்கக் கூடிய பிரபலம், இராஜை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கவேண்டும். புகழல்ல. பிரபலம். புகழுக்கும் பிரபலத்துக்கும் பாரிய அளவு வித்தியாசமிருக்கின்றது. ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டும் உடனடியாகப் பிரபலமடைந்துவிடலாம். ஆனால் மனிதர்கள் மத்தியில் நற்புகழைப் பெற நீண்ட காலம் உழைக்கவேண்டும். இலகுவாகப் பிரபலமடைந்துவிடலாம். புகழ் பெற்றுவிடுவது கடினம். இங்கு இசைக் கலைஞர் இராஜ் மற்றவர்களின் மனதைக் கொன்று இலகுவாகப் பிரபலமடையும் வழிமுறையை நன்கு அறிந்திருக்கிறார். இலங்கையில் மற்றும் உலகம் முழுதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு மதத்தினரைத் தனது பாடலில் வக்கிரமாகக் காட்சிப்படுத்துவதன் மூலம் எழும் பரபரப்பைக் கொண்டு, இப் பாடலைப் பிரபலப்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கலாம்.

    இலங்கையில் சியத தொலைக்காட்சியின் 'ஹட்ச் டொப் டென்' எனும் நிகழ்ச்சியில் இப்பொழுதும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இப் பாடல் குறித்து, நியாயமான கேள்விகள் சிலதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார் ஒரு இஸ்லாமியச் சகோதரர்.

1. பள்ளிவாசல் வட்டாரத்துக்குள் இப் பாடலைப் படம் பிடிக்க ஏன் அனுமதித்தார்கள்?

2. அஸானின் வரிகளை இந்த பாடலில் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது?

3. ஜம்மியத்துல் உலமாவுக்கு யாராவது இப் பாடல் குறித்து அறிவித்தார்களா? அறிவித்தார்களெனில், இப் பாடல் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?

4. அந்நியப் பெண்ணொருவர் (முகத்திரையுடன் கூடிய ஹிஜாப், ஹபாயாவுடன்) இஸ்லாமிய ஆடையணிந்து, இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

    அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் இதை வாசிக்கும் அநேக இஸ்லாமியர்களது மனங்களிலெழும் கேள்விகள்தான். இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரமானது, இவ்வாறாக ஒரு இனத்தை மாத்திரம் கேவலப்படுத்தும் அளவுக்கு வருமிடத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இலங்கை முஸ்லிம்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இவை போன்ற ஒளிப்பதிவுகள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியவை. இதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

"உங்களில் எவரேனும் தீயசெயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து (ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.


    நாம் என்ன செய்யப் போகிறோம்? இப் பாடலை ஒளிபரப்பக் கூடாதென எல்லா முஸ்லிம்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதால், இப் பாடல் இன்னும் பிரபலம் அடைவதோடு பாடலின் வெற்றிக்கும் அது வழிவகுக்கும். பாடலைப் பார்த்திராதவர்களுக்கும்  பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிடும். அத்தோடு இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களை 'கலகம் செய்பவர்கள்' என்ற போர்வைக்குள் தள்ளிவிடும். ஆகவே முஸ்லிம்களாகிய நாம் எமது ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு இது பற்றி அறிவித்து, அவர்கள் முஸ்லிம் கலாசார அமைச்சைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக இப் பாடலை எங்கும் ஒளிபரப்பவிடாதபடி தடை செய்யச் சொல்லத் தூண்ட வேண்டும். அத்தோடு இப் பாடல்காட்சியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் பொது மன்னிப்புக் கேட்க வைத்தால்தான் இலங்கையில் மீண்டுமொருமுறை இவை போன்ற ஒளிப்பதிவுகள் வெளிவராது. விட்டுவிடுவோமேயானால் இப் பாடலின் பிரபலத்தோடும் வெற்றியோடும் தொடர்ந்து வரக் கூடிய இது போன்ற பாடல்களையும், விளம்பரங்களையும், திரைப்படங்களையும் எதுவும் செய்ய இயலாமல் போய்விடும். விஷச் செடியொன்றை நிலத்திலிருந்து முளைத்தவுடனேயே விரல்களால் நசுக்கிவிடுவது இலகு. வேர் பிடித்து, கிளை விரித்து நன்றாக வளர்ந்த பின்னர் வெட்ட முயற்சித்தால் நிலத்துக்கும் சேதம். சுற்றியிருக்கும் எல்லாவற்றுக்கும் சேதம். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# அல்ஹசனாத் இதழ், நவம்பர் 2010
# விடிவெள்ளி இதழ் ( புகைப்படங்கள்)

Friday, October 15, 2010

கண்ணியம் காக்கப்பட வேண்டிய பள்ளிவாயில்கள்

    நீங்கள் ஒரு அரசனின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் வீட்டிலிருந்த அமைப்பிலேயே சென்று விடுவீர்களா? அந்த அரசனின் மனம் கவரும் வண்ணம்  தூய்மையாக, இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து, மணம் பூசிச் செல்வீர்கள். அங்கு சென்று அரசனின் வருகைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்த அரண்மனையில் தடுக்கப்பட்டுள்ள அரட்டையை, கூட இருப்பவர்களோடும் கைத்தொலைபேசியிலும் சத்தமாக நிகழ்த்திக் கொண்டிருப்பீர்களா? அரண்மனைப் பாவனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை உங்கள் தேவைக்காக, நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்துவீர்களா? எதையும் செய்யமாட்டீர்கள். ஏனெனில், அரண்மனைக்குள் தடுக்கப்பட்டிருக்கும் இவை போன்றவற்றையெல்லாம் செய்தால் கிடைக்கும் அரசனின் கோபத்துக்கும் தண்டனைக்கும் பயந்து, மிகவும் அமைதியாகவும், அரசன் உங்களைக் காண்கையில் உங்களை அவன் நல்லவிதமாக எண்ணவேண்டுமெனவும் கண்ணியமாக நடந்துகொள்வீர்கள் அல்லவா?

    ஆனால், தற்காலத்தில் சர்வ வல்லமை மிக்க முழுப் பிரபஞ்சத்துக்கும் அரசனான, எல்லாப் புகழுக்குமுரிய எமது இறைவனான அல்லாஹ் தஆலாவின் மாளிகைக்கு அழைக்கப்படும் போது செல்லும் நாம், இறைவன் மீது எந்தவித அச்சமுமற்றவர்களாகவே அங்கு கால் பதிக்கிறோம். வுழூ செய்வதற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை நமது தேவை முடிந்தும் வீணடிப்பதோடு, தண்ணீர்க் குழாய்களையும் இஷ்டத்துக்குத் திறந்து வுழூச் செய்துவிட்டு அவற்றை ஒழுங்காக மூடாமலே சென்று விடுகிறோம். இகாமத் சொல்லப்படக் காத்திருக்கும் நேரம் வரை அம் மாளிகைக்குள் வீணான அரட்டையிலும், சிரிப்பிலுமே நேரத்தைக் கடத்துகிறோம். எமக்கு விரும்பிய விதத்தில் மின்சாரக் குமிழ்களை, மின்விசிறிகளை இயக்கிக் கொள்கிறோம். பின்னர் அவற்றை அணைக்க மறந்து அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகிறோம். இன்னும் தொழுகைக்காகக் கூட வராத சிலர், தமது அவசரத் தேவைக்காக கழிப்பறையை மட்டும் நாடி பள்ளிவாயிலுக்கு வந்து செல்வதைக் கண்டும் காணாதவர்களாக இருந்தும் விடுகிறோம். பிரயாணத்தினிடையில் அவ்வாறு வந்துசெல்லும் வெளியூராட்களை விட்டு விடலாம். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் பள்ளிவாயிலை நாடி வரும் உள்ளூர் ஆட்களைத் தொழுகைக்காகத் தூண்டுவதுவும் நமது கடமையல்லவா?

    அண்மைக்காலங்களில் நிக்காஹ் பதிவுகள், இஃப்தார் நிகழ்வுகள் போன்றன பள்ளிவாயில்களில்தான் அனேகம் நடைபெறுகின்றன. மிகவும் நல்ல, நன்மையான விடயம் இது. ஆனால், இவ் வைபவங்கள் முடிந்த பின்னர் பார்த்தால், உணவுப் பரிமாற்றத்தின் போது எல்லோருக்கும் பகிரப்பட்ட சிற்றுண்டி மீதிகள், பேரீத்தம்பழ விதைகள், குடிபானத் துளிகள் போன்றன பள்ளிவாயிலின் தரையெங்கிலும் மற்றும் நில விரிப்பிலும் சிதறி இருக்கும். பள்ளிவாயில் சுத்திகரிப்பாளர் வந்து துப்புரவு செய்யும் வரைக்கும் பாதங்களில் ஒட்டியபடி எல்லா இடங்களுக்கும் பரவி, அவை ஈக்கள், பூச்சிகள் மொய்த்தபடியும் வாடையடித்தபடியும் அப்படியே கிடக்கும். நமது வீட்டிலென்றால் இப்படி அலட்சியமாக விட்டுவைப்போமா? உடனே அதைச் சுத்தம் செய்துவிட மாட்டோமா? ஆனால் பள்ளிவாசல் எனும்போது மட்டும் நமக்கு ஒரு அலட்சியமும் சோம்பலும் வந்துவிடுகிறது. நிகழ்வு முடிந்ததுமே சாப்பிட்டோம், குடித்தோமென அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். ஒவ்வொருவரும் தமது உணவின் மீதிகளை, வாழைப்பழத் தோல்களை, பேரீச்சம்பழ விதைகளைத் தாமே அகற்றிவிட்டால், அதற்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைக் கூடைகளிலிட்டுவிட்டால், நமது இறைவனின் இல்லம் ஒரு சில நிமிடங்களிலேயே சுத்தமாகிவிடுமல்லவா? உணவு நிகழ்வுகளை பள்ளிவாயில்களில் ஏற்பாடு செய்பவர்களும் கூட, அந் நிகழ்வின் பின்னர் பள்ளிவாயிலை உடனே சுத்தம் செய்யும் நடவடிக்கை குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

    நம்மைக் கடந்துபோன இந்த வருட ரமழானின், இறுதிப் பத்து நாட்களின் பின்னிரவுகளில் அனேகமான பள்ளிவாயில்களில் நடக்கும் ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்துகொள்ளவே வேண்டும். ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதுவும், கியாமுல்லைல் தொழுகையும் பெரும் நன்மையைத் தேடித் தரும் விடயம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமழான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.
(ஸஹீஹ் புகாரி - 2010)

    இவ்வாறு இஃதிகாப் இருந்தும், கியாமுல்லைல் தொழுதும் நன்மையைத் தேடிக் கொள்வதற்காக முன்வந்து ஊர் இளைஞர்கள் ரமழானின் இரவுகளில் பள்ளிவாயில்களில் ஒன்றுகூடுவது எவ்வளவு நல்ல விடயம்? ஆனால் இஃதிகாப் இருப்பதற்காகப் பள்ளிவாயிலுக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிக் கொண்டு வரும் இளைஞர்களில் பலர், பள்ளிவாயில்களை படுத்திருப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுத்திருந்ததையும் கடந்த ரமழானில் காண முடிந்தது. கியாமுல்லைல் தொழுகை நடந்து கொண்டிருக்கும்வேளை உறங்காது வெறுமனே படுத்திருக்கும் சில இளைஞர்கள் சத்தமாகச் சிரித்துக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும் தமது கைத்தொலைபேசிகளில் விளையாடிக் கொண்டிருப்பதையும், இன்னும் சில இளைஞர்கள் பள்ளிவாயிலுக்குள்ளேயே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்று, தொழுகைக்காக வந்திருந்த பெரியவர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிக்காட்டினர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி - 1423)

    நன்மை தேடுவதற்காகப் பள்ளிவாயில்களில் ஒன்று கூடும் நமது இளைஞர்கள் பலர், ஏன் தமது பொன்னான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்து, தொழுதுகொண்டிருக்கும்  மற்றவர்களுக்கும் இடையூறாக இருந்து, பெரியவர்களின் சாபங்களை அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமாக வாங்கிச் செல்கின்றனர்?

    அடுத்ததாக நிக்காஹ், இஃப்தார் போன்ற நிகழ்வுகளின் போதும், தொழுகை இடைவேளைகளிலும் ஒன்று சேரும் நமது மக்கள் எழுப்பும் இரைச்சலை கண் மூடிக் கேட்டுப் பாருங்கள். ஒரு சந்தையிலோ, ஒரு பேரூந்திலோ இருப்பதைப் போல நம்மை அந்த இரைச்சல் உணரச் செய்யும். பள்ளிவாயில் நிர்வாக சபைக் கூட்டங்களின் போதும், விசாரணைக் கூட்டங்களின் போதும் இன்னும் பல ஒன்றுகூடல்களின் போதும் பள்ளிவாயில் இறைவனின் இல்லம் என்பதை மறந்து அங்கு ஒருவரையொருவர் சத்தமாக ஏசிக் கொள்வதுவும், அடித்துக் கொள்வதுவும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

    இங்கு அந்நிய மதத்தவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைக் கொஞ்சம் பார்ப்போம். ஒரு விகாரைக்கோ, கோயிலுக்கோ அவர்கள் செல்லும்போது வெண்ணிற ஆடைகளை அல்லது இருப்பதிலேயே தூய்மையான, ஒழுங்கான ஆடைகளைத்தான் அணிந்து செல்கிறார்கள். அவர்களது அப் புனித இடத்தின் எல்லைக்குள் பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் அவர்கள், வீண் அரட்டையிலோ, அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதை நாம் கண்டதில்லை. தனது ஆலயமொன்றைப் பேரூந்தில் கடந்து செல்லும்போதும் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பல சக மதத்தவர்களை நான் கண்டிருக்கிறேன். எமது பள்ளிவாயில்களை அவர்கள் நடந்து, கடந்து செல்ல நேரிட்டால் கூட,  கண்ணியமாகவும் அமைதியாகவும் அவ்விடத்தைக் கடந்து செல்கின்றனர்.

    சக மதத்தவர்கள் அவர்களது ஆலயங்களுக்கும் எமது பள்ளிவாயில்களுக்கும் வழங்கும் கௌரவத்தை, நாம் நமது பள்ளிவாயில்களுக்கு வழங்குகிறோமா? இஸ்லாமியனான ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹ் தஆலாவின் இறை இல்லத்திற்குரிய கண்ணியத்தை உணர்ந்து, அதற்கு மதிப்பளித்தால் மட்டுமே பள்ளிவாயிலுக்குரிய அமைதியையும் ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேண முடியும். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# அல்ஹசனாத் மாத இதழ், ஒக்டோபர் 2010

Tuesday, September 7, 2010

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் !

    நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம். 'எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது' என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல்தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.

    ரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். "நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது. புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை". இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது.

    உண்மைதான். இக் காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும்தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள், நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெறுமதியானதாகவும் வாங்கி உடுத்து, அவற்றின் பெருமையைப் பீற்றிக் கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும், பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டுவிடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.

    'பெறுமதியானதை வாங்கிவிட்டேன்.ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது.' என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்? நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை..ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை..அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலுமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன? உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா?

    நமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும், தோட்டவேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக் காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை. ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.

    மறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.

    முதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்துவிடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்கப்படவேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்துவிடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கிவிடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும், கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரீகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.

    ஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் காலநிலைக்கும் அவை ஒத்துவருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள். பிரமாண்டமான கடைகளிலுள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே  நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.

    இன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களை படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துகொள்ளுங்கள்.

    வளர்ந்துவரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துக்களை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவிலுள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

    இவ்வாறாக பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றை பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு? அவற்றைக் கழுவி, அலுமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா? எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக் கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவுபெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும்? தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்?

    ரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலுமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும். ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டனவென்று மூலையில் போட்டுவைத்திருக்கும் சப்பாத்துக்கள், கல்லும், முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்கு கொடுத்துதவுவது உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
"ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!" என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி - 1897)


    ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகமதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவமன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

    இது ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்துவையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும்போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப் படுத்துங்கள். குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந் நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகிவிடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும். சிந்திப்போம் சகோதரர்களே!

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

# அல்ஹசனாத் மாத இதழ் - செப்டம்பர், 2010
# வல்லமை இதழ்