Tuesday, September 18, 2007

பயணிகள் கவனத்திற்கு !



நாமெல்லோரும் பயணிகளே.ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு விதத்தில் நமது பயணத்தை நாம் மேற்கொண்டே இருக்கின்றோம்.
கார், வேன்,மோட்டார் பைக், சைக்கிள் போன்ற சொந்த வாகனங்களிலாகட்டும், பஸ்,இரயில்,விமானம், கப்பல் போன்ற பொது வாகனங்களிலாகட்டும்,பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.ஒவ்வொரு மனிதனதும் இறுதிப்பயணமானது கல்லறையில் முடியும் வரை அவனது பயணங்கள் முடிவதேயில்லை.
நம்மில் அநேகமானோர் பஸ், இரயில் போன்ற பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.இடையிடையே பஸ்,இரயில் வண்டிகளில் வெடித்த வெடிகுண்டுகளால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறி போன செய்திகளையும்,அங்கவீனமான,அநாதையான உயிர்களின் கதைகளையும் கேட்டுக் கவலைப்படுகிறோம்.உலகெங்கும் அன்றாடம் நடக்கும் இச் சங்கதிகள்,எமது நாட்டிலும் எந்த இடத்திலும்,எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.இது போன்ற விபத்துகளிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாமனைவரும் இருக்கிறோம்.
எனவே,இவ்வாறான அனர்த்தங்களை எம்மால் முடிந்தளவு எப்படித் தடுக்கலாம் எனப் பார்ப்போமா?

* பஸ் நிறுத்துமிடத்திலோ,இரயில் நிறுத்துமிடத்திலோ ஏறுபவர்கள் முதலில் தமக்கான இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டுமல்லாது, அவ் இருக்கைக்குக் கீழே அல்லது மேலே ஏதாவது தமதல்லாத அந்நியப் பொருட்கள் தென்படுகின்றதா எனக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
* அப்படி ஏதாவது சந்தேகப்படும் விதமாக தென்பட்டால் உடனடியாக சாரதி,கண்டக்டருக்கு தெரிவிப்பதுடன்,மற்றவர்கள் அதனைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நீங்கள் இருப்பது இரயில் வண்டியெனில் உடனடியாக அந்த இரயில் நிலையப் பொறுப்பதிகாரியிடமோ,அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகளிடமோ தெரியப்படுத்தலாம்.
* அல்லது உடனடியாக அவசரகாலத் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிப்பதன் மூலமும் பாரிய விபத்துக்களையும் உயிர் அனர்த்தங்களையும் தவிர்க்கலாம்.

வாகனம் சென்று கொண்டிருக்கும் பொழுது நடுவழியில் ஏறுபவர்கள் கூட்டத்தில் இதைக் கவனிக்க இடம் இருக்காது.அலுவலக நேரங்களில் கீழே குனியக்கூட இடம் இல்லை.
எனவே, முதலில் ஏறுபவர்களும்,இறுதியாக இறங்குபவர்களும் இதற்காக ஒரு நிமிடம் செலவழித்துக் கவனித்தால் பெரிய அனர்த்தங்களை இல்லாமல் செய்யலாம்.
அத்துடன் கூட்டம் இல்லாத நேரத்திலும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் இருபத்து நான்கு மணி நேரமும் செல்லும் ஒவ்வொரு பஸ்ஸையும் , அனைத்து இரயில்களையும் காவல்துறையினரால் மட்டுமே கவனிக்க இயலாது என்பதையும்,நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.

Monday, September 10, 2007

சுயநலம் வேண்டாமே...!



இருபத்தோராம் நூற்றாண்டில் தற்பொழுது நாமெல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கால கட்டத்தில் நாம் எத்தனையோ முன்னேறியிருக்கிறோம். என்றாலும், சில விஷயங்களில் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.
சுற்றுப்புறச் சூழல்,சுத்தம் பற்றி இப்போதெல்லாம் நிறைய பேசப்படுகிறது.ஒவ்வொருவரும் தங்கள் சுற்றுப்புற சூழலை நன்கு பராமரித்து வந்தாலே போதும்,நம் நாடு முழுவதும் நலம் பெரும் என்கிறார்கள்.
ஆனால்,சுற்றுப்புறத்தில் இன்னும் சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதில்...

* ஒரு நல்ல குடிமகனாக...
* ஒரு சுயநலமற்ற நல்ல நண்பனாக...
* ஒரு நேசமுள்ள அயலவராக...
* ஒரு ஆதரவான உறவினராக...
* ஒரு பாசமுள்ள குடும்பத்தினராக...

இருப்பதும் அடங்கும்.
நாமெல்லோரும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் உழல்வதால் பலவித அனுபவங்களையும்,கடமைகளையும்,நம்மைச்சுற்றி வெள்ளமாய்ப் பெருகும் அன்பையும் புறக்கணித்துவிட்டு மனதளவில் இன்னும் ஏழைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சுயநலமற்ற,உண்மையான நண்பராக இல்லாத நாம், நம் குடும்பத்தினருக்காக மட்டும் பாடுபட்டு விட்டு,எத்தனையோ அருமையான மகிழ்ச்சித் தருணங்களை கோட்டை விடுகிறோம்.
நம்மால் ஒன்றாகக் கூடி நம் சுற்றுப்புறத்தை தோழமை,நட்பு,பாசம், கஸ்டத்திற்கு உதவுதல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களினால் எத்தனை அற்புதமான சூழலாக மாற்ற முடியும்? ஒவ்வொரு குடியிருப்பும் பாசம்,அன்பு மற்றும் கவனிப்பினால் பிணைக்கப்பட்டால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ளவர்கள்,ஒன்றாக வேலை செய்பவர்கள்,ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரே குடும்பமாக இயங்கினால் பல பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடலாம். திருமண வைபவங்கள்,விசேஷ தினங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும்.குழந்தைகளும் பாதுகாப்பு,பரந்த குணங்களோடு வளர்வார்கள்.இதற்குத் தேவை நம் கண்களை மறைக்கும் சுயநலம் என்னும் முகத்திரையைக் கிழித்தெறிவதுதான்.
அன்பு கொடுக்கக்கொடுக்க அட்சயபாத்திரமெனப் பெருகும்.அன்பைப் பெறுபவர்களும்,அன்பைப் பொழிகிறவர்களும் சந்தோஷத்தில் திளைப்பது நிச்சயம்.

Sunday, September 9, 2007

தண்ணீரும் மென்பானங்களும்...!


மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. உலகில் பாதிப்பேருக்கு நிரந்தரமாக தண்ணீர்ச் சத்து குறைந்து விடுகிறது. அந்த நிலையில் 3% போல சமிபாட்டுச்சக்தியும் பாதிக்கப் படுகிறது.ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நிறைய நீர் குடித்து வந்தால் முதுகுவலி,மூட்டுவலி இவைகள் நன்றாகக் குறையும்.
நமது உடலில் உள்ள தண்ணீர் அளவு 2% குறைந்தாலும் ஞாபக சக்தி குறைந்துவிடும். கணக்குப் போட,கணனி பார்த்து வேலை செய்யத் தளர்ச்சியாகி விடுகிறது. 5 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் கொலோன் புற்று நோய் 45% குறைகிறது. மார்பகப்புற்று நோய் 79% வீதமும் , சிறுநீரகப் புற்று நோய் 50% வீதமும் குறைக்கிறது என நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இனிப்பான பிரபலமான மென்பானங்கள் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றால் தீமைகள் நிறைய உண்டு. கீழ்க்காணும் ஆராய்ச்சிகளை வீட்டினிலேயே செய்து பார்க்கலாம்.


1) வட அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் ஏற்படும் கார் விபத்துக்களில் இரத்தக் கறையைப் போக்க போலீஸ்காரர்கள் 2 கலன் கோக் அவர்களுடைய காரில் வைத்துக்கொண்டு செல்கின்றனர்.

2) ஒரு எலும்புத்துண்டை கொக்கோகோலாவில் போட்டு வைத்தால் கோக்கிலுள்ள ஸிட்ரிக் அமிலத்தினால் அது கரைந்து விடும்.

3) மலசல கூடத்திலுள்ள கறைகளையும் கோக் போக்கி விடுவதோடு,பளிச்சென்று ஆக்கிவிடும். துருப் பிடித்த கறைகளையும் போக்கிவிடும்.

4) கோக் மற்றும் மற்றைய குளிர்பானங்கள் பொஸ்பொறிக் அமிலத்தில் தயாரிக்கப்படுவதால் அதிலுள்ள அமிலம் ஒரு ஆணியைக்கூட நான்கு நாட்களில் கரைத்து விடுமாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது அமிலங்கள் கலக்கப்பட்டுள்ள இனிப்பான மென்பானங்களை நிறைய அருந்தினால்,நமக்கு உடல் நலம் கெட்டு நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே உங்களுக்குத் தேவை ஒரு கிளாஸ் தண்ணீரா அல்லது இவ்வகையான மென்பானங்களா?
நீங்களே முடிவிற்கு வாருங்கள்.