இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, 'நாம் நோயாளிகள்', 'நாம் பலவீனமானவர்கள்' என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.
இதற்கு நீங்களும் உதவுவதை வரவேற்கிறேன். உதவ விரும்பும் அனைவரும் தங்களிடம் மேலதிகமாக இருக்கும் அல்லது அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் புத்தகங்களை அனுப்பி வைத்து உதவலாம். ஒரு புத்தகமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. சிறுவர் நூல்கள், சிறுகதை, கவிதை, நாவல்கள், தன்னம்பிக்கை தொகுப்புகள் என எந்த நல்ல தொகுப்பாக இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும், அனுப்பலாம்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தாம் வெளியிட்டுள்ள தொகுப்புக்களில் ஒன்றை அனுப்பி வைத்தால் கூட பேருதவியாக இருக்கும். புதியதே வேண்டுமென்றில்லை. இன்னும் வாசிக்கக் கூடிய நிலைமையில் இருக்கும் எந்தத் தொகுப்பாக இருந்தாலும் சரி.
புத்தகங்களை அனுப்ப விரும்புபவர்கள் கீழுள்ள முகவரிக்கு, பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வையுங்கள்.
To:
Nurse In charge,
DHDU,
District General hospital,
Negombo,
Srilanka
நன்றி !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்