தனித்து ஏதும் செய்யவியலா இயலாமையோடும் வருத்தத்தோடும் இதனை எழுதுகிறேன்.
இலங்கையைச் சேர்ந்த எமது சக பதிவரும், தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான திரு.ஏ.ஆர்.வி.லோஷன் சனிக்கிழமை (15-11-2008) அதிகாலை 12.50 மணியளவில் இலங்கை, வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெற்றி எப்.எம். வானொலி சேவையின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஆர். வாமலோஷனை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்செய்ய வேண்டும். அல்லது விடுவிக்க வேண்டும் என்று ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் தொழில்படும் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர்களின் வர்த்தக சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய 5 அமைப்புக்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன. இது குறித்து 5 ஊடக அமைப்புக்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"வெற்றி எப்.எம். வானொலி சேவையின் முகாமையாளரான ஏ.ஆர். வாமலோஷன் நவம்பர் 14ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வெற்றி எப்.எம். வானொலிச் சேவையில் முகாமையாளராக 2008இல் இணைவதற்கு முன்னர், பத்து வருட காலமாக இவர் வானொலி ஊடகவியலாளராகக் கடமையாற்றி வந்துள்ளார்.
நள்ளிரவு தம்மை பொலிஸ் அதிகாரிகளாக இனங்காட்டிக் கொண்ட 13 பேர் வீட்டுக்கு வந்து வாமலோஷனை அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் ஐந்து ஊடக அமைப்புக்களிடம் தெரிவித்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வாமலோஷன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் அதிகாரிகள் ரசீது ஒன்றை வழங்கியுள்ளனர்.
இவர் கொழும்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படியோ அல்லது விடுதலை செய்யும்படியோ நாம் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படியும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஊடக சுதந்திரத்தை அழிதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றும் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்".
இவ்வாறு ஐந்து ஊடக அமைப்புக்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
லோஷன் தனது பதிவுகளில் அரசியல், விளையாட்டு, சினிமா, நகைச்சுவை,சமகால நிகழ்வுகள் என அனைத்தும் எழுதிவருகிறார். இவர் இறுதியாக எழுதிய அரசியல் பதிவான இலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி எனும் பதிவுதான் இவரது கைதுக்கு காரணமாக இருக்குமெனில், இலங்கையில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் குறித்து ஆராய வேண்டியிருப்பதோடு இவரது விடுதலைக்காக நாம் எல்லோரும் (சக பதிவர்கள், தமிழ்மணம்) ஏதேனும் செய்யவேண்டுமல்லவா? எவ்வகையில் அவரது விடுதலைக்கு உதவலாம் நண்பர்களே ?