பணமும்,
புகழும் தரக் கூடிய போதை ஒருவரை முழுமையாக மாற்றிவிடும். ஒருவர் கொண்டிருக்கும்
திறமையை அவை மழுங்கடித்துவிடும். ரஜினிகாந்த் எனும் நடிகரை எனக்குப் பிடிக்கும். அவரது
'அபூர்வ ராகங்கள்', 'முள்ளும் மலரும்',
'அவள் அப்படித்தான்' போன்ற திரைப்படங்கள் வெளிவந்த
காலகட்டத்தில், அவரது நடிப்பின் மீது ஈர்ப்பைத் தரக் கூடியவராக
அவர் இருந்தார். பின் வந்த நாட்களில் எல்லாமும் மாறிவிட்டது. அவரும் மாறிப் போயிருக்கிறார்.
சமீப காலங்களில்
யதார்த்தத்தை மீறிய சினிமாக்களாக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம்.
பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அவரது திரைப்படத்தில் இடம்பெறக்
கூடிய திரைக்கதை, காட்சித் திருட்டுக்களால் அவரது பெயரும் கெட்டுப்
போவதை அவரும், அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நேற்று
'லிங்கா' பார்த்தேன். அதே பழைய கதை. பலத்த தியாகியாக
ரஜினி. காட்சிகளெல்லாமே அவரது முந்தைய படங்களின் பிரதிபண்ணல். சில காட்சிகள் மட்டும்
புதிதாக இருக்கிறதே என வியந்தால் அவையும் பிற நாட்டுப் படங்களின் காட்சிகளை அப்படியே
பிரதியெடுத்தவை.
இங்கு நான் தந்திருக்கும் காட்சி ஒரு உதாரணம்தான். இயக்குனர் William Wyler இயக்கத்தில் Audrey Hepburn, Peter O'Toole ஆகியோரின் நடிப்பில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த 'How to Steal a Million' எனும் பிற தேசத்து ஆங்கில மொழித் திரைப்படத்தின் காட்சியை உருவி, நாயகனையும், நாயகியையும் அப்படியே நடிக்க வைத்து 'லிங்கா' எனும் படத்தின் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
இங்கு நடிகர்களைக்
குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு இக் காட்சி ஏற்கனவே வெளிவந்தது என்ற விபரம் தெரிந்திருக்காது
எனக் கருதலாம். ஆனால் இயக்குனர் இப்படியான திருட்டுக் காட்சியைத் தனது திரைப்படத்தில்
புகுத்தியிருப்பதானது, அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.
அவரது ஏனைய வெற்றித் திரைப்படங்களும் இப்படித்தான் திருட்டுக் காட்சிகளால் பூர்த்தியானவையோ
என எண்ண வைக்கிறது.
ஒரு திரைப்பட
இயக்குனர் நேர்மையானவராக இருக்கும்பட்சத்தில் தனது திரைப்படங்களுக்காக, தான் பிரதிபண்ணிய அல்லது தன்னைத் தூண்டிய திரைப்படங்களுக்குரிய இயக்குனர்களின்
பெயர்களை நன்றிக் குறிப்பில் திரைப்படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட வேண்டும். இக்
காலத் தமிழ் சினிமாவில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அண்மையில் வெளிவந்த பாதிக்கும்
மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாறான பிற தேசத்து திரைப்படக் காட்சிகளையும்,
திரைக்கதையையும் திருட்டுத்தனமாகப் பிரதிபண்ணியவை.
இந்த நிலைமையில்,
இவ்வாறான திருட்டுத் திரைப்படங்களை ஊடகங்களும், ரசிகர்களும் கொண்டாடுவதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலூற்றுவதும்,
நடிகைகளுக்கு சிலை வைப்பதுவும் இந்தியாவில் மாத்திரமல்ல. இன்றைய யாழ்ப்பாணத்திலும்
இந் நிலைமைதான். ஒரு புறம், ஒருவேளை உணவின்றி அல்லற்படும் உயிர்கள்
முகாம்களில் வாடிக் கொண்டிருக்க, மறுபுறம் இலட்சக்கணக்கான ரூபாய்களைச்
செலவழித்து ரஜினிக்காக, அவர் பெயர் பொறித்த பெரிய கேக்குகளை வெட்டி
அவரது பிறந்தநாளை அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஈழ ரசிகர்கள் சிலர்.
முறையான வழிகாட்டல்
இல்லாமல், இன்றைய ஈழத்தில் வளர்ந்துவரும் வருங்காலத் தலைமுறை
இப்படித்தான் இருக்கிறது. முன்பு கல்விமான்களும், கற்றறிந்தோரும்,
உழைப்பாளிகளும் மிகைத்திருந்த பூமி என இலங்கை முழுவதும் பிரசித்தம் பெற்றிருந்தது
யாழ்ப்பாணம். இந்தியத் தமிழ் சினிமாக்களையொத்து இன்று வாள் வெட்டுக்களும், அடிதடியும், போதையும், விலைமாதுக்களும்,
பாலியல் வன்முறைகளும், கொள்ளையும், இந்திய நடிகர்களின் தீவிர ரசிகர்களும் என எல்லோரும், எல்லாமும் விரவிக் கிடக்கும் நிலமாக மாறியிருக்கிறது.
கண்மூடித்தனமாக,
கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்காக,
சொந்தப் பணத்தினை வாரியிறைத்துச் செலவழித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு
சொல்ல விரும்புவது ஒன்றுதான். ஒழுங்கான பள்ளிக்கூடங்கள் இல்லாமல்
அல்லற்படும் மாணவ மாணவிகளும், பென்சில் வாங்க வசதியின்றி படிப்பை
நிறுத்திய சிறுவர் சிறுமிகளும், யுத்தத்தில் அங்கவீனமானவர்களும்,
ஆதரவிழந்தவர்களும், இருக்க இடமின்றி அவதிப்படுவோரும்
இன்னும் உங்கள் ஊரில்தான் இருக்கிறார்கள். உங்கள் இஷ்ட நடிகருக்காக
நீங்கள் செலவழிக்கும் இலட்சக்கணக்கான பணத்தை ஒன்று சேர்த்தாலே பெருமளவில் இவ்வாறான
அபலைகளுக்கு உதவிட முடியும். முயற்சியுங்கள். பழைய யாழ்ப்பாணமாக, கற்றறிந்த பூமியாக உங்கள் பூமியை
மாற்றியமையுங்கள். திரை நடிகர்களைப் போல வெளிச்சத்தில் மாத்திரம்
மின்னுபவர்களல்ல; நீங்கள் நல்லவர்கள். உங்களால்
முடியும். சிந்தியுங்கள்.
- எம்.ரிஷான் ஷெரீப்
14.12.14
நன்றி - இனியொரு இதழ்
No comments:
Post a Comment