Thursday, June 11, 2015

Breaking News Live - சௌம்யா, வித்யா மரணம்

இந்த வீடியோக் காட்சி ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ‘Breaking News Live’ எனும் மலையாளத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. ஆனால் காட்சியில் இடம்பெறும் சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்த ஒன்று.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, 23 வயதான இளம்பெண் சௌம்யா, வேலை முடிந்து ரயிலில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, 33 வயதான கோவிந்தசாமி என்பவரால் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பின்னர் படுகாயத்துக்குள்ளான நிலையிலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் மரணமடைந்தார். கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு உச்சபட்ச தண்டனையாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


உண்மையான நிகழ்வுகளைத் திரைப்படமாக்கி, மக்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் கேரள மாநிலத்தில் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
தமிழ்த் திரைப்படங்களில் இன்னும் நாம் காதலையும், பேய் பிசாசுகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கதாநாயகர்களின் உருவப்படங்களுக்கு பாலூற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்?!

தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் வரும், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் / வர்ணிக்கும் காட்சிகளைப் பார்த்துப் பார்த்தே நமது சமூகம் வளர்ந்து வருகிறது. அவ்வாறான காட்சிகளைப் பார்த்தே வன்முறைகளைச் செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சமூகத்தில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்களில் வித்யா முதன்மையானவரல்ல. ஆனால் இறுதியானவராக இருக்க வேண்டும் என்பதே எமது அவா.

- எம்.ரிஷான் ஷெரீப்
11.06.2015

Thursday, June 4, 2015

பட்டினி போடப்பட்டதால் மரணமடைந்த இளைஞன்

21 நாட்கள் பட்டினி போடப்பட்டதால் இளைஞனொருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று எனது ஊரில் நிகழ்ந்தது.

16 வயது மாந்திரீகரின் பேச்சை நம்பி, இச் சாகசத்தை நிகழ்த்தியது, மரணமடைந்த இளைஞன் பிரசன்னா ப்ரியலாலின் பெற்றோர் என்பது இன்னுமொரு பரிதாபத்துக்குரிய விடயம்.

செய்த குற்றம் தமது மதத்தில் தடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாட்டிறைச்சியை பிரசன்னா தவறுதலாக உட்கொண்டமையாகும். இதற்குப் பரிகாரமாக, அந்தத் தீட்டு கழிய வேண்டுமெனில் உட்கொண்டவர் 28 நாட்கள் பட்டினி போடப்பட வேண்டுமென மாந்திரீகர் கூறியிருக்கிறார்.


ஏற்கெனவே இருதய நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்த இளைஞர், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் மருந்து, ஆகாரமேதுமின்றி தனியறையில் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போடப்பட்டிருக்கிறார். பிரசன்னாவுக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் இருந்தபோதும் பெற்றோரின் பிடிவாதத்துக்கு மத்தியில் அவரைக் காப்பாற்ற எவருமே முன்வரவில்லை.

இக் காலப்பகுதியில் ஊராட்களையோ, உறவினரையோ தமது வீட்டுக்கு அண்டவிடாமல் சுற்றி வர வேலிகளையடைத்து பெற்றோரும் மாந்திரீகரும் மறைத்திருக்கின்றனர். இளைஞனின் முனகல்கள் அயல்வீடுகளுக்குக் கேட்ட போதும், எவரும் காவல்துறை உதவியை நாடவில்லை.

காரணம் ஆழமான மூட நம்பிக்கை. போலிஸ் உதவியோடு இளைஞனைக் காப்பாற்றப் போனால் இறைவனின் கோபமும், தீட்டும் தம் மீது படிந்து விடுமோ என்ற அச்சம்.

பிரசன்னாவின் மரணத்தோடு இன்று விடிந்திருக்கிறது இப் பிரதேசத்தின்
மூட நம்பிக்கைக்கான விடிவு காலம். இளைஞனின் வீட்டைச் சூழ்ந்த ஊராட்களும், உறவினரும் அவர்களது கரங்களாலேயே பூஜைப் பொருட்களையும், வேலிகளையும் முற்றாக அழித்து நொருக்கியிருக்கின்றனர்.

நவீன நூற்றாண்டு என்கிறோம். எல்லாமும் நாகரீகமடைந்து விட்டன என்கிறோம். ஆனால் இன்னும் கூட கிராமங்களில் போல, நகரங்களிலும் மூட நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவராவது திருந்த இவ்வாறான அசம்பாவிதங்கள்தான் வழிகாட்டும் போலிருக்கிறது.

- எம்.ரிஷான் ஷெரீப்
04.06.2015

Wednesday, June 3, 2015

விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள்

கைது செய்யப்பட்டிருந்த கொலையாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் அண்மைக்காலமாக நீதிமன்றத்தால் உடனுக்குடனே விடுதலை செய்யப்படுவது சம்பந்தமாகவே ஊடகங்களின் அண்மைய கேலிச் சித்திரங்கள் அமைந்திருக்கின்றன.

அரசியல் தலையீடுகளின் காரணங்களால் விடுதலை செய்யப்படும் இக் குற்றவாளிகள் சார்பாக நீதிமன்றம் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான். அது 'தகுந்த சாட்சிகள் இல்லாததன் காரணமாக விடுதலை செய்யப்படுகின்றனர்.'
உணர்ச்சி வேகத்தில் கொலை செய்பவர்களைத் தவிர, ஏனைய எந்தக் குற்றவாளியும், 'சாட்சி'களை வைத்துக் கொண்டு குற்றத்தைச் செய்வதில்லை. 'சாட்சி'கள் இல்லையென்பதற்காக குற்றவாளிகள் நிரபராதிகளாகி விட முடியாது.

ஆனால் இன்றைய நீதி தேவதைக்கு 'சாட்சி'கள் அவசியமாக இருக்கிறது. குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் சட்டத்தரணிகளுக்கு பணம் ஒன்றே பெரிதாக இருக்கிறது.


- எம்.ரிஷான் ஷெரீப்

Monday, June 1, 2015

கடத்தப்படும் சிறுமிகள்

இன்று கடத்திச் செல்லப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுமியை ஒரு ஊரே திரண்டு காப்பாற்றியிருப்பதானது மகிழ்ச்சியைத் தருகிறது. மூவின மக்களுமாக சுமார் 2000 பேர் இணைந்து, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் பாடுபட்டு சிறுமிக்கு எதுவும் அசம்பாவிதம் நிகழாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை வரவேற்க வேண்டும்.


ஆனால் கடந்த சில மாதங்களாக எத்தனை எத்தனை பாலியல் வன்முறைச் சம்பவங்களும் கடத்தல்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன? இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றம் வழியாக தண்டனைகள் ஏதுமற்று விடுதலை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.

ஒரு வன்முறையாளனுக்காவது பகிரங்கமாகத் தண்டனை கொடுத்தால்தான் இச் சம்பவங்கள் மட்டுப்படுத்தப்படுமெனத் தோன்றுகிறது.

- எம்.ரிஷான் ஷெரீப்
01.06.2015Saturday, May 23, 2015

'கறுப்பு ஜூன் 2014' - எனது நூலை இலவசமாகப் பெற்றுக் கொள்ள !


அன்பின் நண்பர்களுக்கு,

எனது 'கறுப்பு ஜூன் 2014'  - இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் ! எனும் முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பை நீங்கள் இப்பொழுது மின்னூல் வடிவில் இலவசமாக இங்கு வாசிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்

இன வன்முறைகள் குறித்த இக் கட்டுரைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், மனிதாபிமானிகள், வருங்கால சந்ததிகள் என அனைவருக்கும் உதவக் கூடும் என்ற வகையில் இந் நூலை இலவசமாகத் தர விரும்புகிறேன்

நூலில் எந்தவொரு மாறுதலையும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையோடு இந்த நூல் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை இலவசமாக வினியோகிக்கவும், அச்சிட்டு வெளியிடுபவர்கள் அதற்குரிய செலவினை ஈடுகட்டும் விதத்தில், தகுந்த விலையை நிர்ணயித்து விற்பனை செய்து கொள்ளவும் முழு உரிமை வழங்கப்படுகிறது.


நூலை வாசிக்க


இந் நூலை FTE (Free Tamil Ebooks) இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
அட்டைப்படத்தை வடிவமைத்த திரு.மனோஜ்குமார், திரு.GNUஅன்வர் மற்றும் திரு. ஶ்ரீனிவாசனுக்கு எனது அன்பும், நன்றியும் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
22.05.2015 Thursday, April 2, 2015

அபலைப் பெண்ணுக்கு விடுதலை !

இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அப் பெண்ணை விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.


தற்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விரைவில் விடுதலையாகப் போகும் அவருக்காகப் பாடுபட்ட, எனது பதிவினைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும், இணையத் தளங்கள் எல்லாவற்றுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- எம்.ரிஷான் ஷெரீப்

Saturday, March 7, 2015

இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்?          இலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.

          வறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் 'நன்றி உதயா' எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

          உலக வரலாற்றுச் சின்னங்களிலொன்றான சீகிரிய குகையோவியங்கள் இலங்கை தொல்பொருளியலாளர்களால் பாதுகாக்கப்படுபவை. அவற்றினை திட்டமிட்டோ, வேண்டுமென்றோ சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்தான். ஆனால் பாரிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு, அவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவது அவர்களைத் திருத்துவதற்காகவும், அவர்களை மீள்புனரமைப்பதற்காகவும் எனில் ஒரு ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை எதற்காக? தான் செய்த தவறினை ஒப்புக் கொண்டு விட்டார். இனி ஒரு போதும் அவ்வாறு செய்யவும் மாட்டார். இந் நிலையில் இவ்வாறான தண்டனை அதிகபட்சமானது இல்லையா?

          எனில் வாக்குவேட்டைகளுக்காக மட்டும் நம் வீடுகளுக்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளோ, ஊடகவியலாளர்களோ, எழுத்தாளர்களோ, கவிஞர்களோ, அநாதரவான பெண்களுக்காகக் குரல் கொடுப்பவர்களோ, பெண்ணியவாதிகளோ, வலைப்பதிவர்களோ, தமிழ் இணையத்தளங்களோ யாரும் ஏன் இந்த அபலைப் பெண்ணுக்காகக் குரல் எழுப்பவில்லை? இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறதென நீதி கேட்டு ஏன் ஒரு ஆழமான பதிவு கூட இல்லை? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 'தமிழனுக்கு ஒரு இன்னலென்றால் உயிரைக் கொடுப்பேன்' என வீறு கொண்டு பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த ஏழைத் தமிழச்சியை தண்டனையிலிருந்து மீட்க மறந்துபோனதேன்? 
 
          இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்கள் ஏழைகள் மற்றும் இயலாதோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. அச் சட்டங்கள் தவறுகளையும் குற்றங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் திட்டமிட்டுச் செய்யும் குற்றங்கள் கூட பண பலம் மற்றும் அதிகாரத்தின் மூலம் 'தவறு'களாகக் கருதப்பட்டு தண்டனைகளிலிருந்து தப்பி விடுகின்றன. ஆனால் ஏழைகள் செய்யும் சிறு தவறுகள் கூட பாரிய குற்றங்களாகக் கருதப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

          இந்த ஏழைப்பெண் அறியாமையால் செய்த தவறுக்கு இவ்வளவு பாரிய தண்டனையெனில், கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொலைகாரர்கள், பாலியல்குற்றவாளிகள், ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரும் சட்டத்தின் தண்டனையிலிருந்து ஓரிரு நாட்களில் வெளிவருவது எவ்வாறு?

    
      சீகிரிய குகையோவியங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள ஊழியர்கள், இந்தப் பெண் பத்து எழுத்துக்களைக் கிறுக்கும்வரையில் எங்கே போயிருந்தனர்? அவர்கள் தம் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் பெண் இவ்வாறு கிறுக்கியிருக்கச் சந்தர்ப்பம் வாய்த்திருக்காதே? ஏன் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை ஏதுமில்லை?

          இந்த அபலைப் பெண்ணுக்குரிய இந்தத் தண்டனை அநீதமானது. இரண்டு வருடங்கள் சிறையில் சித்திரவதைகளோடு  கழித்துவிட்டு வரப் போகும் உதேனி சின்னத்தம்பி எனும் இளம்பெண்ணின் எதிர்காலம் முழுவதும் இனிமேல் இருளன்றி வேறென்ன?

          இனியும் தாமதமில்லை. தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் நீங்கள் நினைத்தால் இவரின் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனையை மீள்பரிசீலனை செய்ய உத்தரவிட்டு இவரைக் காப்பாற்றலாம். இவரை இப்போதே காப்பாற்றப் போகின்றவர் யார்?

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - இந்தக் கட்டுரையைப் பதிவிட்ட அனைத்து இதழ்களுக்கும்,இணையத் தளங்களுக்கும்!