Wednesday, September 28, 2011

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

    திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி  இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு துரதிஷ்டமான சிறிய சிறைக் கைதியொருத்தியை உலகுக்குப் பிரசவித்ததன் மூலம் திருமகள் சிறைச்சாலையில் வைத்தே தனது வயிற்றுச் சுமையைக் குறைத்துக் கொண்டார்.

    இது 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை. அன்று அவர்கள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாக அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டனர். நீதியை நிலைநாட்டுவதற்காக எனக் கூறப்படும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்களை தூக்கிலிடத் தேவையான குற்றச்சாட்டுக்களை வரிசைப்படுத்துவது தொடங்கியது. எதுவுமே அறியாத திருமகளின் மகளும் தாயின் மார்பிலேயே பாலருந்தியவாறு சிறைச்சாலைக்குள்ளேயே உறங்கியது.

    அன்று அவ்வாறு எழுத ஆரம்பிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கைச் சரிதம் இன்று எந்த நிலையில் உள்ளது?

    எனக்கு திருமகளை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் வைத்து சந்திக்க நேர்ந்தது. சற்றுக் குள்ளமாக, நிறைந்த முகத்துடனிருந்த அவர் கைது செய்யப்பட்ட தினத்தைச் சொன்ன போது நான் அதிர்ந்து போன விதம் குறித்து அவர் பிறகொரு சந்தர்ப்பத்திலும் நினைவூட்டினார்.

    பதினைந்து வருடங்களென்பது ஒருபோதும் சிறியதொரு காலமல்ல. இதிலுள்ள பாரதூரமான அநீதி அதுவல்ல. இப் பதினைந்து வருடங்களாக அவர்கள் சந்தேகநபர்களாக மட்டுமே இருந்தமை. சந்தேக நபர்கள் மாத்திரமே என்றாலும் அவர்கள் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிலவேளை அது தவறுக்காகக் கொடுக்கப்படும் தண்டனையை விடவும் அதிகமானதாக இருக்கக் கூடும். அது மட்டுமல்லாது இப் பதினைந்து வருடங்களாக அவர்கள் 429 தடவைகள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.

    அவ்வாறாயின் 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. 15 வருடங்கள். அவ்வளவு முயற்சித்தும் முடியாதென்றால் அவர்களது சந்தேக நபர்கள் என்ற நிலையில் சந்தேகம் தோன்றாதா என்ன?

    கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது வழக்காடு மன்றத்தில் விசாரணை செய்யப்படும் இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் ஐவர். சரவணமுத்து லோகநாதன், சின்னப்பு செல்வராஜ், சுப்பையா ஸ்ரீதரன், ரொபர்ட் மெக்ஸலன் மற்றும் திருமகள் ஆகியோரே அவர்கள். இங்கு குற்றச் சாட்டுக்களை சுமத்துபவர்களாகத் திகழ்வது சட்டமா அதிபர் திணைக்களம். நாங்கள் அவர்களிடம் எழுப்பும் கேள்வி இதுதான். இன்னும் எவ்வளவு காலத்துக்கு, இன்னும் எத்தனை தடவை அவர்கள் தங்களுக்கான தீர்ப்பு அளிக்கப்படும் வரை சிறைச்சாலையில் இருக்க வேண்டும்? கைதிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்? 15 வருடங்களாக முடியாமல் போனது இன்னும் ஐந்து வருடங்களானாலும் முடியுமா? பத்து வருடங்களில் முடியுமா? 429 தடவைகள் முடியாமல் போனது இன்னும் 429 தடவைகளிலேனும் முடியுமா? இதன் முடிவு என்ன?

    திருமகள்கள் மட்டுமல்லாது , இதே போன்ற நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் சிறைக் கைதிகள் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்பதை நாங்கள் அறிய மாட்டோம். அவர்கள் குண்டுகளைக் கொண்டு சென்றவர்களா, ஒத்துப் பார்த்தவர்களா இல்லையா என்பதுவும் எமக்குத் தெரியாது. எனினும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதென்றால் குறைந்தபட்சம் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட வேண்டும். எனினும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகாமல் அவர்களுக்கு தண்டனை வழங்குதல் நடைபெற்றிருக்கிறது.

    அது ஒரு விடயம். இன்னொரு விடயமானது அவர்கள் அன்று உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டிய காரணி எது என்பது. போரிடக் கூடிய, ஆயுதந் தாங்கிய குழுவொன்று உருவாவதென்பது ஓரிருவரது பிடிவாதம் குறித்த பிரச்சினையல்ல. அது அரசியல் பிரச்சினை. அப் பிரச்சினைக்கான தீர்வைத் தேட வேண்டியதுவும் அரசியல் ஊடாகத்தானே தவிர வேறு வழியிலல்ல. உலகில் எங்கும் இளைஞர்கள் அநீதிக்கு எதிராக எழுந்திருக்கிறார்கள். இலங்கையிலும் அவ்வாறுதான். ஒரு முறை தெற்கின் மூலையிலும் இன்னொரு முறை வடக்கின் மூலையிலும் அதுதான் நடந்திருக்கிறது.

    அவ்வாறு இளைஞர்களை போராட்டத்துக்கு அழைப்பது இந்த அநீதமான ஆட்சி முறைதான். கொள்ளையடிப்பதை சட்டபூர்வமானதாக ஆக்கி, அநீதியை மதமாக்கியிருக்கும் சமூக வழிமுறை. எங்கள் தேசத்தில் தொழிலாளிகள், விவசாயிகள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகம் இப்பொழுது இப் பிரச்சினை குறித்து மிகவும் விரிந்த அரசியல் பார்வையோடு பார்த்தல் வேண்டும். அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் புலிகள் என பொதுவாக நோக்குவதை மாற்றுதல் வேண்டும்.

    இது பாரதூரமானதொரு உரையாடல். விரிவாகவும், நீண்டதாகவும் உரையாடப்பட வேண்டியதொரு தலையங்கம்.  தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியாக இருக்கும்படி அரசாங்கம் எங்களை இன்னும் வற்புருத்துகிறது. தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டியது கட்டாயம். எனினும் உண்மையாகவே அதனைச் செய்ய முடியுமாவது தீவிரவாதத்துக்குக் காரணமான வேர்களை அழிப்பதன் மூலமாக மட்டுமே. வேர்களினுள் அடங்கியிருப்பவை அநீதிகள், தேசியத் துயரங்கள், வறுமை போன்ற சிக்கல்கள். அவற்றை முழுமையாக அகற்றாமல் இளைஞர்கள் எழுந்து நிற்பதைத் தடுக்க முடியாது. சமூகத்தில் முக்கியமானவர்கள் என எமது தோள்கள் மீது பொறுப்பு சுமத்தப்படுவது இவ்விடத்தில்தான்.

    இப்பொழுது திருமகள்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாங்கள் அச்சமேதுமற்று உரைப்போம். அது பாரதூரமான, விவாதத்துக்குரிய விடயமொன்று என்பதையும் அறிவோம். சமூகத்தில் அனேக பொது மக்கள் இன்னும் இவ் எண்ணத்துக்கு இணங்க மாட்டார்கள் என்பதையும் அறிவோம். எனினும் சமூகத்தின் நகர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அவ்வாறான முன்னடைவுக்கும் போராட்டத்துக்குமான அனுமதியைத் தவிர்த்து முன்னே செல்ல முடியாது. ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இன்று மக்களை வசீகரிப்பதற்கு, தாக்குவதற்கான பொது எதிரி எவருமில்லை. பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகையில் முன்வைப்பதற்கான காரணங்கள் இல்லை. அதன் காரணத்தால் மாண்டு போன பின்னரும் அரசாங்கம் இன்னும் பிரபாகரனைத் தேடுகிறது. இதனால், கடந்த போராட்டத்தை மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்துச் சுவைக்கிறது. நீர் விளையாட்டுக்கள், வருடப் பூர்த்தி விழாக்கள், இலங்கை யுத்தத்தின் ஞாபகங்கள் குறித்த வலைத்தளங்கள் என நாடகங்கள் நீள்வது இதனால்தான்.

    அரசாங்கம் இவ்வாறு காய் நகர்த்துவது தமிழர்களின் வாழ்வோடுதான். அவர்களை இன்னுமின்னும் துயரத்துக்குள்ளாக்கும் தீவிரவாதத்தைத் தடுக்கும் சட்டங்கள், உடனடிச் சட்டங்கள் போன்ற தடுப்புச் சட்டங்களைப் பிரயோகிப்பதன் மூலமும், இன்னுமின்னும் அவர்களது பிள்ளைகளை சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைப்பதன் மூலமும் தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது எண்ணங்களுக்குள் நுழைவிப்பதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் இன்னுமின்னும் பரப்புவதன் மூலம் அரசாங்கம் தனது பலத்தைக் காத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

    நாம் அச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேவைப்படுவது தேசிய ஒற்றுமையே. ஒற்றுமை வசனங்களால் உருவாகாது. அதற்கு அரசியல் ரீதியான வேலைத் திட்டமொன்று தேவைப்படுகிறது. பாரபட்சம் எண்ணங்களால் அழியாது. அதற்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகிறது.

    சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசிய ஒற்றுமைக்காக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்துக்கு முன் நிற்போம்.

- உதுல் பிரேமரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
# திண்ணை

Thursday, September 15, 2011

யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்


            இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு முடியாமல் போனமையால், அதற்குப் பதிலாக பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த இலங்கைக்கு நேர்ந்தது. அதே போல விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நீதமான பார்வை இல்லாத காரணத்தால் அதற்காக இந்தியாவுக்கும் பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த நேர்ந்தது.

            விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செய்யப்பட்ட யுத்தத்தின் போது, அதைத் தடுக்கவென இந்தியாவிடமிருந்து எந்தவொரு உறுதியான தலையீடும் இருக்கவில்லை. தமிழ்நாட்டுச் சக்திகளே இந்தியாவை ஆண்டன என்றும்,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருந்த அரசியல் ரீதியான உறவு முறைகள் யுத்தகாலத்திலும் கூட சிறந்த முறையில் பேணப்பட்டதென்றும் கூட சொல்லலாம்.

            விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த போதிலும் கூட, யுத்தத்தின் பின்னர் உருவாகக் கூடியதும், முகம்கொடுக்கவும் வேண்டி வரும் சிக்கல்களுக்கு, யுத்தத்தின் போது காட்டிய அதே தீவிரத்தோடு தீர்வு காண இலங்கையால் முடியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவிய வெளிநாட்டு சக்திகளை முழுவதுமாக மிச்சம் வைத்துவிட்டுத்தான் இலங்கையானது, விடுதலைப் புலிகளை போரில் வென்றிருக்கிறது. எனவே எஞ்சியுள்ள அச் சக்திகளின் ஆயுத வியாபாரங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த யுத்த முடிவானது, அச் சக்திகளுக்கு கோபத்தை ஏற்படுத்தவும், இலங்கையைப் பலிவாங்கவென தமது பலத்தை மிக அழுத்தமாகப் பயன்படுத்தும் நிலைக்கு அவைகளைத் தள்ளவும் போதுமானது. சர்வதேச மட்டத்தில் இப்பொழுதும் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கென பாரிய அளவிலான சக்தியும், வரவேற்பும் இருக்கின்றது. அவர்களது பிரச்சினைகளை அனுதாபத்தோடு பார்க்கும் மக்களும் சர்வதேச அளவில் இருக்கின்றனர்.

            எனினும் யுத்தம் முடிவடைந்ததன் பிறகு, யுத்தத்தினால் இன்னல்களுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையை மீளவும் சிறந்த முறையில் கொண்டு செல்லவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அனைவரும் மதிக்கக் கூடியதும், அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டக் கூடியதுமான நல்லதொரு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் என இலங்கை அரசாங்கமானது சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்திருக்குமேயானால், தற்போதைய சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படாமல் இருந்திருக்கக் கூடும். இன்னல்களுக்குள்ளாகிய மக்களின் வாழ்வாதாரத்தை திரும்பவும் பழைய நிலைமைக்குக் கொண்டு செல்லவென அரசாங்கமானது, தற்போது அனேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது உண்மைதான். என்றபோதிலும் அந் நடவடிக்கைகள் அப் பிரதேசங்களில் வாழும் துயருறும் மக்களை மேலும் மேலும் துயரத்துக்குள்ளாகுபவையாகவே அமைந்துள்ளன எனில் அந் நடவடிக்கைகளினால் என்ன பயன் இருக்கப் போகிறது?

            தமிழ் பிரதேசங்களில், நகர சபைத் தேர்தலை நடத்தியது அரசின் மிகவும் நல்லதொரு நடவடிக்கை எனச் சொல்லலாம். எனினும் அதனை யுத்தத்துக்குப் பிறகான நகர சபைத் தேர்தல் எனக் கருதி, அரசாங்கமானது தனது ஆளுமையை அதிக அளவில் அத் தமிழ் மக்களிடம் செலுத்தாதிருந்திருக்கலாம். அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு, அவர்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முழுமையாக வழங்கியிருந்தால், அத் தேர்தலில் யார் வென்றிருந்தாலும், தேர்தல் நேர்மை குறித்த கௌரவமானது  இறுதியில் அரசாங்கத்துக்கே கிடைத்திருக்கும்.

            எனினும் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த தலையீடுகளின் காரணமாக, தமிழ் மக்களால் அரசாங்கமானது தோற்கடிக்கப்பட்டமையே தற்பொழுது நடந்திருக்கிறது. அதாவது அரசாங்கமானது தான் தோற்கும் வாய்ப்புக்களை, தனது அதிகபட்ச தலையீடுகளின் காரணமாக தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாகப் பார்க்கையில், வடக்கில் நடைபெற்ற தேர்தலில், கள்ள வாக்குப் பிரச்சினைகள் ஏற்படாத போதிலும், அத் தேர்தலின் மீதான ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்ட பல சம்பவங்கள் அங்கு நடந்தேறியிருக்கின்றன என்பதே நிதர்சனம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வை வழங்கும் வரையிலாவது, இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற இடம்கொடுக்காமல், சுதந்திரமாகவும், தங்கள் பாட்டில் வாழவும் அம் மக்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

            உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதான தாக்குதலானது, மீண்டும் வடக்கின் நிலைமைகள் குறித்த மோசமான சித்திரத்தையே வரைந்து சென்றிருக்கிறது. அத் தாக்குதலை யார் மேற்கொண்டிருப்பினும், அத் தாக்குதலுக்கான கெட்ட பெயரானது அரசாங்கத்தின் மீதே சுமத்தப்படும். வடக்கில் ஆயுதந் தாங்கியிருக்கும் அனைத்து அரசியல் குழுக்களையும் நிராயுதபாணிகளாக்குவதுவும் இராணுவப் படைகளை அங்கிருந்து அகற்றி, காவல்துறையின் கடமைகளை காவல்துறைக்கே செய்யவிடுவதுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்வதைத் தடுக்க, எடுக்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் ஆகும்.

            இன்னும், வடக்கில் நகர மற்றும் பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கு, சுதந்திரமாக அவர்களது கடமைகளை மேற்கொள்ளும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுவும் அரசின் கடமையாகும். அப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகளை கட்சி பேதமற்று வழங்குவதுவும், அங்கு நடைபெறும் பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக் கொள்வதுவும், அவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதுவும் என அரசாங்கமானது தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி, தமிழ் மக்களை மேலதிக இன்னல்களிலிருந்து பாதுகாக்குமேயானால், அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களும் குறையக் கூடும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# திண்ணை