Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, May 16, 2017

உலக சினிமா களஞ்சியம்

 
            உலக சினிமா ஆர்வலர்கள் ஒன்றைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இணையமும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் வீட்டிற்கே வந்து விட்ட பிறகு, நல்ல தரமான உலகத் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள். நானும் விதிவிலக்கல்ல. எங்கெல்லாம் நல்ல திரைப்படங்களைப் பற்றிய குறிப்புக்களை வாசிக்க நேர்கிறதோ, எனது அலைவரிசைக்கு ஒத்துவரக் கூடிய திரைப்படமாகக் காண்கிறேனோ, உடனடியாக அதைத் தேடிப் பிடித்துப் பார்த்து விடுகிறேன்.

             தமிழ் ஊடகங்களில் அநேகமானவை வெறுமனே தமிழ்த் திரைப்பட விமர்சனங்களையும், அவற்றுக்கான புள்ளிகளையும் இட்டு பெருமைப்பட்டுக் கொள்வதோடு நின்று விடுபவை. தமக்குப் பிடித்த நடிகர்கள், இயக்குனர்கள் மீதான ஆராதனைகளோடு, தமக்கு ஒரு சதம் கூடப் பயனற்ற வசூல் சாதனை விபரங்களை பெருமையோடு பகிர்ந்து கொள்ளும் மூளையும், புத்தியும் மழுங்கிய வெறி கொண்ட ரசிகர்கள்தான் முகநூலிலும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டு பல்லிளிக்கிறார்கள் அல்லது முறைக்கிறார்கள். யதார்த்தத்தில் அவர்களிலிருந்து தப்புவதுதான் பெரும்பாடாக இருக்கிறது.

            இப்படியான இன்னல்களிலிருந்தும், தொந்தரவுகளிலிருந்தும் தப்பி, உலகில் வெளிவரும் நல்ல திரைப்படங்களைப் பார்க்க நிறையத் தேட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் அதற்கென்றே அநேகமான நேரம் செலவாகும். அண்மையில் சிவசங்கர் எனும் நண்பர் ஒருவர், என்னை ஒரு முகநூல் குழுமத்தில் இணைத்து விட்டிருந்தார். 'World Movies Museum' எனும் அக் குழுமத்தையும் வழமையாகக் காணும் சாதாரணமான ஒரு குழுமமாகக் கருதி, உள்ளே சென்று பார்த்தால், எனது கருதுகோளை அப்படியே சிதறடிக்கச் செய்துவிட்டது குழுமத்தின் நேர்த்தியும், படைப்புக்களும்.

            தாம் பார்த்த, உலகம் முழுவதிலிருந்தும் வெளிவரும் நல்ல திரைப்படங்களைக் குறித்து குழும நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆரோக்கியமான விவாதங்களாக அவை இருக்கின்றன. இக் குழுமத்தில் நல்ல பதிவுகளை மாத்திரம் பதிவிடுவதால் நம்பகத்தன்மையோடு அனைத்து நண்பர்களுக்கும் பரிந்துரைக்க முடிகிறது. உலக சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் இணைந்து கொள்ளலாம். இந்தக் குழுமம் ஏமாற்றவில்லை. நேரத்தை வீணடிக்கவில்லை. புதிய பதிவுகளை தினந்தோறும் தந்துகொண்டே இருக்கிறது.

           இனியும் இவ்வாறே தொடரட்டும் என்ற வாழ்த்துக்களோடும், அன்போடும்...

எம்.ரிஷான் ஷெரீப்
16.05.2017
mrishanshareef@gmail.com

Thursday, June 11, 2015

Breaking News Live - சௌம்யா, வித்யா மரணம்

இந்த வீடியோக் காட்சி ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ‘Breaking News Live’ எனும் மலையாளத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. ஆனால் காட்சியில் இடம்பெறும் சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்த ஒன்று.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, 23 வயதான இளம்பெண் சௌம்யா, வேலை முடிந்து ரயிலில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, 33 வயதான கோவிந்தசாமி என்பவரால் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பின்னர் படுகாயத்துக்குள்ளான நிலையிலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் மரணமடைந்தார். கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு உச்சபட்ச தண்டனையாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


உண்மையான நிகழ்வுகளைத் திரைப்படமாக்கி, மக்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் கேரள மாநிலத்தில் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
தமிழ்த் திரைப்படங்களில் இன்னும் நாம் காதலையும், பேய் பிசாசுகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கதாநாயகர்களின் உருவப்படங்களுக்கு பாலூற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்?!

தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் வரும், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் / வர்ணிக்கும் காட்சிகளைப் பார்த்துப் பார்த்தே நமது சமூகம் வளர்ந்து வருகிறது. அவ்வாறான காட்சிகளைப் பார்த்தே வன்முறைகளைச் செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சமூகத்தில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்களில் வித்யா முதன்மையானவரல்ல. ஆனால் இறுதியானவராக இருக்க வேண்டும் என்பதே எமது அவா.

- எம்.ரிஷான் ஷெரீப்
11.06.2015

Tuesday, June 16, 2009

நான் - 32 கேள்விகளுக்குள் !

சமீபத்தில் 'குழலி' எனும் அழகிய பெண் குழந்தைக்குத் தந்தையாகித் தன் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும் , என்னை இப்பதிவு எழுத அழைத்த விழியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும், எனது நன்றியும் !

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

பிறந்தவுடன் பெற்றோர் வைத்தது. எனது வீட்டுக்கருகில் மட்டும் இந்தப்பெயரில் குறைந்தது பத்துப் பேராவது இருக்கிறார்கள். ஊருக்குள் எப்படியும் முப்பது பேராவது இருப்பார்கள். எனவே 'ஷெரீப்' எனும் எனது தந்தையின் பெயரை என் பெயரோடு இணைத்துக்கொண்டேன். இணையத்தில் உலாவரத் தொடங்கியபிறகு புனைப்பெயர்களுக்கு அவசியங்களின்றி இப்பெயரில் நான் மட்டுமே எழுதவெனக் கிளம்பியிருப்பது புரிந்தது. ஆகவே பிடித்திருக்கிறது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, இணையம் வந்து பார்த்தபொழுது, எனது எழுத்துக்களை மட்டுமே பார்த்து நேசித்த, பல நூறு அன்பு உள்ளங்கள் என்னைத் தேடியிருப்பது கண்டு ஆனந்தத்திலும், எல்லோரையும் கவலைக்குள்ளாக்கி விட்டோமே என்ற ஆதங்கத்திலும் அழுகை வந்தது. பாலை நிலமொன்றில் பல காலங்களாகத் தனித்து, தாகித்துக் கிடப்பவனுக்கு எப்பொழுதும் வற்றாத, இனிமையான, தெள்ளிய நீரோடையொன்று சொந்தமானதைப் போல உணர்ந்தேன்.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

ஒரு காலத்தில் அழகிய கையெழுத்து என் வசமிருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்தில் அகில இலங்கை ரீதியாக அழகிய கையெழுத்துக்கான பரிசும் சான்றிதழும் வாங்கியிருக்கிறேன். இப்பொழுது இரு வருடங்களாக கையெழுத்து போடுவதற்குத் தவிர, பேனையைத் தொடவில்லை. தட்டச்சு பழகிவிட்டது. இன்று எழுதிப் பார்த்தேன். ஆங்கில மருத்துவரின் மருந்துச் சீட்டுக் கையெழுத்துப் போல எழுத்துக்கள் கோணல்மாணலாக இருக்கின்றன. எனினும் பிடித்திருக்கிறது. எனது கையெழுத்து என்பதற்காக மட்டும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டுச் சமையல் எதுவானாலும். நான் சைவப்பிரியன்.

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். எல்லோரிடமும் பேசுவேன். பழகுவேன். அதற்கு எனக்கு ஒரு புன்னகை போதுமானதாக இருக்கிறது. இதுவரையில் எதிரிகள் என்று யாருமில்லை. எல்லோருமே நண்பர்கள்தான். நல்லவர்கள்தான்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

எப்பொழுதாவது கடலில் குளிக்கப்பிடிக்கும். ஊரில் பெரிய ஆறு ஓடுகிறது. சிறு வயது முதல் குளித்தல், நீச்சல், தண்ணீர் விளையாட்டுக்கள், தூண்டிலிட்டு மீன் பிடித்தலென எனது பல சுவாரஸ்யமான காலங்களை அழகிய அந் நதி பார்த்திருக்கிறது. அருவிக் குளியல் எப்பொழுதாவதுதான் வாய்த்திருக்கிறது. அதுவும் பிடிக்கும். அதை விடக் கிணற்றுக்குளியல் மிகப்பிடிக்கும். எனது வீட்டுக்கருகில் ஒரு கிணறு இருக்கிறது. எப்பொழுதும் நீர் மிதந்து ஓடுமது குளிர் காலங்களில் உஷ்ணத்தோடான வெதுவெதுப்போடும், கோடை காலங்களில் குளிரானதுமான நீரைக் கொண்டிருக்கும். அதில் குளிப்பது மிகப் பெரிய ஆனந்தம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?

பிடித்தவிடயம் - எதுவும் முடியுமென்ற தன்னம்பிக்கை, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையுடனும், நேர்த்தியுடனும், தூய்மையாகவும் இருக்க முயல்வது.

பிடிக்காதது - மேற்சொன்னவற்றை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது, குழந்தைகளை அழ வைப்பது.

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

இதுவரை அப்படி யாரும் இல்லை.

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

தாய் மற்றும் அன்பானவர்கள் எல்லோரும்.

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

கருநீல ஜீன்ஸ், ஆகாயநீல குர்தா.

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

முத்துநகையே..முழுநிலவே..குத்துவிளக்கே..கொடிமலரே..(பாடகி எஸ்.ஜானகியின் குரல் உள்ளமள்ளிப் போகிறது )

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

ஆகாய நீலம்.

14. பிடித்த மணம்?

குறிப்பிட்டுச் சொல்லத்தெரியவில்லை. குழந்தைகளிடமிருந்து வரும் வாசனையும், சந்தன மணமும் பிடிக்கும். மனம் மயக்கும் எல்லா நறுமணங்களும் பிடிக்கும்.

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

தாயுமானவன் வெங்கட் - கவிஞர், ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர் எனப் பல துறைகளிலும் திறமை படைத்தவர். எனது அன்புக்குரிய நண்பர். நான் சோர்ந்துவிடும் போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர். இவரது அன்புக்கு நான் அடிமை.

ஒளியவன் பாஸ்கர் - கவிதை, சிறுகதை எனத் தொடர்ந்து எழுதிவரும் நண்பர். நல்ல எழுத்துத் திறமையை வெளிக்காட்டும் இவரின் பால்ய காலத்தில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றிய குறிப்புக்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. வெளிப்படையானவர்.

ஃபஹீமா ஜஹான் - கவிதைகள். எனது பாடசாலை நாட்களில் இவரின் கவிதைகள் வாரம்தோறும் இலங்கையின் பிரபலப் பத்திரிகையில் வரும். எனக்குத் தெரிந்த பல மாணவர்கள் அக் கவிதைகளை வெட்டி எடுத்துவந்து, பாடசாலைப் புத்தகங்களுக்குள் வைத்து வாசித்து ரசிப்பதைக் கண்டிருக்கிறேன். அக் கவிதைகளின் அறிமுகம் அப்படித்தான் ஆயிற்று எனக்கும். என்னாலும் எழுத முடியுமெனும் தன்னம்பிக்கையை ஊட்டியவர். எந்த ஊடக வலைக்குள்ளும், வெளிச்ச வலைக்குள்ளும் சிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி ஓடுமிவரை நான் அழைத்தால் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையோடு அழைக்கிறேன்.

கே. பாலமுருகன் - கவிதை, சிறுகதை, கட்டுரை, பேச்சு என எல்லாத் துறையிலும் திறமை படைத்த இவர் மலேசியாவைச் சேர்ந்தவர். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றலுக்கு ஏற்ற நண்பர். எழுத்துக்களில் நவீன யுத்தியைப் பரிசீலித்து வெற்றி காணும் இவரது மொழி நடை பிடித்தமானது.

பூங்குழலி - மருத்துவப் பதிவர். கவிதை, மொழிபெயர்ப்பு, அனுபவக் குறிப்புக்கள், விமர்சனங்கள் என எல்லாம் எழுதும் திறமை வாய்ந்தவர். எனது எழுத்துக்களுக்கு வெளிப்படையான, விரிவான கருத்துக்களைச் சொல்லும் அன்புச் சகோதரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஒளி ஓவியங்கள். அற்புதமாக இவர் எடுக்கும் அழகிய புகைப்படங்கள். அண்மைய லண்டன் புகைப்படங்களில் பல இடங்களை அறிய முடிந்தது. மழை நாளொன்று பற்றி இவர் எப்பொழுதோ எடுத்திருந்த புகைப்படமொன்று இன்னும் நினைவினை நனைக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

மைதானத்தில் என்றால் உதைப்பந்தாட்டம்
தனித்து சோம்பலாக உணரும் தருணங்களில் சுடோகு, குறுக்கெழுத்து.

18. கண்ணாடி அணிபவரா?

வெயிலில் செல்லவேண்டி நேரும்போது மட்டும்.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அதீத புனைவுகளற்ற, யதார்த்தமான, இயற்கையான படங்கள். ஒரு படத்தைப் பார்த்துமுடிந்த பின்பும் மனதுக்குள் அதன் கரு அடிக்கடி வந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்படியான படங்கள் மிகப்பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

'பசங்க' - நடிப்பென்றே சொல்லமுடியாதவண்ணம் இயல்பாகத் திரையில் தோன்றிய எல்லோரினதும் நடிப்பு பிடித்திருந்தது. ஜீவாவாக நடித்திருந்த பையனின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. குரலும் அவருடன் சேர்ந்து ஒத்துழைத்திருப்பது சிறப்பு. அன்புவின் அப்பாவாக நடித்திருக்கும் நண்பர் சிவகுமாரை இப்பதிவு மூலம் பாராட்ட விரும்புகிறேன். அவரது மனைவியாக நடித்தவரும், ஜீவாவின் பெற்றோராக நடித்தவர்களும், நாயகனும் நாயகியும் கூட மிக நன்றாகத் தங்களுக்குத் தரப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்துசெய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

21. பிடித்த பருவகாலம் எது?

மழைக்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

சா.கந்தசாமியின் 'சாயாவனம்' மற்றும் காலித் ஹுசைனியின் 'A Thousand Splendid Suns'

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

மாற்றுவதில்லை.

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடிக்காதவை: குழந்தையின் அழுகை மற்றும் அமைதியாக இருக்கவிரும்பும் சந்தர்ப்பங்களில் அதைக் குலைக்கும் எதுவும்.

பிடித்தவை : மேற்சொன்ன இரண்டும் தவிர்ந்த மற்ற எல்லாமும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

கத்தார்

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

எழுத்து மற்றும் ஓவியம் - இருப்பதாக நம்புகிறேன்.

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

பொய்யும் நம்பிக்கைத் துரோகமும்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

உறக்கம், சில சமயம் சோம்பல்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

உலகின் காடுகள், அந்தி மஞ்சள் மாலைநேரத்தில் அழகிய கடற்கரைகள், நதிக்கரைகள் எல்லாமும்.

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

அன்பானவனாக, எல்லோருக்கும் ஏதாவதொரு விதத்திலாவது உதவிக்கொண்டே இருக்கவேண்டும்..எப்பொழுதும்.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

வந்த பிறகு சொல்கிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நாடக மேடை. நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். விரும்பியோ விரும்பாமலோ நம் கதாபாத்திரத்தை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்.